கிரேசி மோகன்
————————————

நாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்
தானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி
நாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்
கூடினர் இன்பம் கொழித்து….(158)

ஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து
தேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று
தீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை
சீண்டியதாம் கொம்பால் சொரிந்து….(159)

துதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை
மதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்
சாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை
பாதியாக்கி பத்தினிக்கு பங்கு….(160)

காட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட
வீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய
பூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே
கூர்ச்செறிந்து முத்தமிட்டான் காத்து….(161)

கொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்
முத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்
கரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு
அறமாய் அணைப்பு அளிப்பு….(162)

அங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்
சங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது
தாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்
ஏவும் கணைகள்தான் ஏது….(163)….கிரேசி மோகன்….!

கொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்
விடையன் விரலைவாய் வைத்து -அடையாள
முத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்
நித்திரையை நீக்கும் நினைப்பு….(164)

அசையா மரங்கள் அசலனமாய் வண்டு
பசையிட்ட வாயாய் பறவை -விசையுறா
ஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்
ஓர்வரைவாய் நின்றது ஓய்ந்து….(165)

சுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்
விக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்
புன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்
கண்ணை அனங்கன் கடந்து….(OR)
கண்ணுக்(கு) அனங்கன் குனிந்து….(166)

காலனைக் காணாது காமன் வரிப்புலித்
தோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்
வென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை
சென்று நெருங்கினன் சாவு….(167)

வேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து
நேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா
சனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்
பிணைக்கமடி அல்லிப் பிறப்பு….(168)

நாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட
தாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்
தோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ
மாலையை காதில் முடிந்து….(169)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *