மொரிசீயஸ் நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு – வந்தவாசியில் வரவேற்பு விழா –

0

வந்தவாசி. ஜூலை.24. மொரீசியஸ் நாட்டின் மோக்கா நகரிலுள்ள
மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில்
சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
56752fc1-7c49-432f-9064-7f1103e30c27
இவ்விழாவிற்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி
முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன்
அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் அன் கோ உரிமையாளர்
இரா.சிவக்குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன்,
நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

66944f5e-2d84-4ce3-a96e-881c255b794c

தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் சார்பில் 2000 கிலோ எடையில்,
4 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட
திருவள்ளுவர் சிலை கடந்த ஜூலை 17-ஆம் தேதி கன்னியாகுமாரி
கடற்கரையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தமிழகத்தின் முக்கிய
மாவட்டங்கள் வழியாக, தலைநகர் சென்னைக்கு வரவிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு வருகை தந்த
திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்
சங்கத் தலைவர் அ.மு.உசேன் மலர்த்தூவி வரவேற்றார். வந்தவாசி பழைய
பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகேயிருந்த திருவள்ளுவர் சிலைக்கு
பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவர்கள் மலர்த்தூவி வரவேற்றனர்.

தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உடையார்கோயில்
குணா, மேனாள் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி,
துணைத் தலைவர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்ச் சங்க ஆலோசகரும் கவிஞருமான மு.முருகேஷ் ‘பொய்யாப்புலவர் வள்ளுவரின் புகழாரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
தமிழின் சங்க இலக்கியப் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களையும் கல்வெட்டாய் பொதிந்து நிற்கும் பெருமை நம் திருக்குறளுக்கு உண்டு. எந்த சாதி, மத அடையாளத்தையும் சுமந்து நிற்காமல், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாய் பார்க்கும் சமத்துவத்தை தனக்குள் உள்ளடக்கியதாய் திருக்குறள் இருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் திருக்குறளை படிக்கும் பிற மொழி அறிஞர்கள், திருக்குறளின் மொழி வளத்தையும், எக்காலத்திற்கும் ஏற்ற அதன் சிறப்பான கருத்தினையும் பாராட்டுகிறார்கள். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று பல்லாண்டுகளாக தமிழ் அறிஞர்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை, மத்தியில் ஆட்சி செய்யும் எந்த அரசும் செவிமடுக்காமலேயே உள்ளது. திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்ப்பதற்கான முன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய்யின் முயற்சியில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை, சிலரின் தவறான தூண்டுதலால் அகற்றப்பட்டிருப்பதை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் கண்டித்துள்ளனர். தமிழ் அமைப்புகள் உத்தராகண்ட் மாநில முதல்வரை நேரில் சந்தித்து, அவரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் சிலை அரித்துவாரில் கங்கை நதியோரமாய் உள்ள மேளா பவனில் நிறுவப்படுமென்று முதல்வர் கரீஷ் ராவத் உறுதியளித்துள்ளார்.
1330 குறள்களிலும் ஒரு இடத்தில்கூட தமிழ் என்கிற வார்த்தையே கிடையாது. ஆனபோதிலும், திருக்குறள் உலக்குக்கே தமிழர்களின் வாழ்வியல் தொன்மங்களை எடுத்துச் சொல்லும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழர்களின் அடையாளமாய் இருக்கும் திருக்குறள் தமிழர்களின் வீடுகள் தோறும் இருக்க வேண்டியது அவசியம். நம் வீட்டுப் பிள்ளைகள் திருக்குறளைப் படித்திட வேண்டும். அதன்படி நடந்திட நாம் வலியுறுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக, சங்கப் பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.
இணைப்பு; நிகழ்வின் படங்கள்:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *