சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே! –பகுதி-3 (நிறைவுப் பகுதி)

பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

 பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை3

சீவன் சிவமாதல்

எங்கும் நிற்றல் அல்லது எங்கும் கலந்திருத்தாலே ((வியாபிக்குந் தன்மை-வடசொல்) ‘மெய்’மை எனப்படும் தன்மை. இத்தன்மை உடைய ‘உயிர்’ அறியாமை என்னும் ஆணவத்தின் இயல்பான கலப்பினால், கட்டுண்டு கிடப்பதைக் கண்டு, கருணையால் அவ்வுயிரை இறைவன் மாயையினால் கட்டி உருவாக்கப்பட்ட ஊனுடம்பில் செலுத்தி அறிவு பெரும் பயணத்தைத் துவக்கி வைக்கின்றான். அப்பயண முடிவில், ஆணவம் என்னும் அறியாமைக் கட்டிலிருந்து விடுபடும் உயிர் மாயக்கட்டினாலாகிய உடலினின்றும் விடுதலை பெற்று எங்கும் கலந்திருக்கும் இறைவனுடன் கலந்து தானும் எங்கும் கலந்திருத்தல் தன்மையைப் பெறும். இதுவே, “சீவன் சிவமாதல்” எனப்படும்.

ஆண்டவன்உயிர்களின் சலைவைத் தொழிலாளி

இது, உடையின் சேர்ந்த அழுக்கை நீக்க, உவர்மண் என்னும் வேறொரு அழுக்கை அத்துணியுடன் சேர்த்துத் துவைப்பதற்கு இணையானது. இங்கு, ‘ஆணவம்’ என்னும் அழுக்கை ‘உயிர்’ என்னும் துணியிலிருந்து நீக்கவே, ‘ஊனுடம்பு’ என்னும் உவர்மண்ணாலாகிய அழுக்கை உயிருடன் கலந்து ‘இறைவன்’ என்னும் சலைவைத் தொழிலாளி ‘வாழ்வு’ என்னும் காலநதியில் துவைத்துத் தூய்மை என்னும் ‘மெய்’த் தன்மையை உயிருக்குத் தருகின்றான்.

உயிரின் இயல்பு சார்ந்தவண்ணம் ஆதல்

இப்பண்பிற்கு மாறானவகையில், உயிர் தன் இயல்பான “சார்ந்தவண்ணம் ஆதல்” தன்மையால் பொய்யுடலையே என்றும் நிலையானது என்று மயங்கும். அத்தகைய இயல்படைந்தவர்களை “பொய்யர்” என்கின்ற வரையறை திருவாசகத்தால் தரப்படுகின்றது.

எங்கும் கலந்து நிற்கும் மாறாத வானம்

 திண்திறல் தீயில் வெம்மை செய்தோன்பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் திருவண்டப்பகுதி:22

இங்கு என்பது மாயைக்கு அப்பாற்பட்ட, நிலைப்பேறு பெற்றமையால் ‘பொய்தீர் வான்” என்னும் அடைமொழியை “வான்” பெறுகின்றது. எனவே, எப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும் தன்மையே ‘பொய்’ என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டிருக்கிறது. அத்தகைய, மாறாத ஆகாயத்தில்(பொய்தீர் வானில்) எங்கும் கலந்து நிற்கும் தன்மையை (வியாபிக்குந் தன்மை அல்லது வியாபகம் என்பது வடசொல்) வைத்தவன் இறைவன் என்கின்றார் பெருமான்.

 

உயிர்களின் SUPERSTAR இறைவன்தான்!

இறைவன் நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்கு கெட்டவன்! ஒளியும் அவன்தான்! இருளும் அவன்தான்! மெய்ம்மையும் அவன்தான்! பொய்மையும் அவன்தான்! (இது ‘கபாலி’யின் பஞ்ச் டயலாக்! –அவன் கபாலீஸ்வரன் அல்லவா?) என்கின்றார் மணிவாசகப் பெருமான். இறைவனை ‘ஒளி’ என்பது சரி! இறைவன் எப்படி ‘இருள்’ ஆவான்? இறைவனே ‘பொய்மை’ ஆனால், நாம எப்படி இருந்தா என்ன? குழப்பமாக இருக்கிறதா? அது என்ன என்று பார்க்கலாம்.

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் பொற்சுண்ணம்:12

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் பொற்சுண்ணம்:20

 

இங்கு, மேலே குறிப்பிட்டவாறு, பொய்யுடலையே என்றும் நிலையானது என்று மயங்கும் இயல்படைந்த “பொய்யர்”களுக்கு, இறைவன் மாயையில் கலந்திருக்கும் காரணத்தால், அவன் பொய்யனாகவே காட்சி அளிப்பான். எனவே, “பொய்யர் தம் பொய்யனை” என்றார் பெருமான். அந்நிலை மாறிய மெய்யன்பர்களுக்கு அவன் “மெய்யனாய்”த் தன்னை வெளிக்காட்டித் தோன்றுவான். எனவே, “மெய்யர் மெய்யை” என்றார் பெருமான். உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்ப, இறைவன் ஒருவனே “மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆகி” உயிர்களைக் கடைத்தேற்றுவான் என்கிறார் பெருமான். இதையே,

 சோதியனே, துன்னிருளே, தோன்றாப் பெருமையனே!” –சிவபுராணம்

 என்று முன்னர் சிவ புராணத்திலும் கூறினார் பெருமான். ஒளி வடிவான சோதியனும் அவனே, திணிந்த இருளாம் துன்னிருளும் அவனே. உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவன் கருணை பல்வேறு நிலைகளில் வெளிப்படுகின்றது.

 ‘கெட்டவனுக்கு கெட்டவன்னா வேண்டுதல்-வேண்டாமை இலான்னு திருவள்ளுவர் ஏன் சொல்கிறார்?

 முரண்பாடு ஒன்றுமில்லை! இதையே திருநாவுக்கரசர் பெருமானும் பின்வருமாறு சொல்கிறார்:

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லால்

நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்

குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர்

நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

 

வேண்டுதல் -வேண்டாமை இல்லாது (சலமிலன் சங்கரன்) எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தன் திருவடிப் பேறாகிய உயர்நலன் நல்கான். ஏனெனில், அடியவர்கள் இறைவனையே பற்றுக்கோடாகக் கொள்வதால், வினைப் பயன்களிலிருந்தும், உலகியல் பொய்யடிமைகளிலிருந்தும் விடுபட்டு, இறைவனின் திருவடிப்பேறு பெறும் உயர்நிலையை அடைகின்றார்கள். ஏனையோர், இறைவழிபாடு செய்யினும் கூட, இறைவனைப் பற்றாது, பொய்யின்பங்களாகிய உலக நலன்களையே விரும்பிப் பெற்று, வினைகளை மேலும் மேலும் தேடிக்கொள்வர். பழவினை காரணமாய்ப் பிறவிபெற்றோர், மேல்வினைகளையும் தேடிக்கொள்வதால், அவரவர்களுடைய வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான் இறைவன். அடியவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர் அல்லராயினும், இறைவனையே பற்றுக்கோடாகக் கொள்வாராயின் நற்குலத்துக்குரிய திருவடிப்பேறு நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும் என்கிறார் அப்பர் பெருமான்.

 

பொய்’ – உலகியல் முறை திருவாசக வரையறை4

உண்மை(true)க்கு எதிர்ச்சொல் பொய் என்ற உலகியல் முறையில் பயின்ற திருவாசகப் பாடல்கள் இரண்டை இங்கே காணலாம்.

பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. நீத்தல் விண்ணப்பம்:6

பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்

பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. எண்ணப்பதிகம்:2

 

 ‘பொய்’ என்ற சொல்லை இந்த நான்கு வகைகளில் பொருள் கொண்டு திருவாசகம் பயிலப்பட வேண்டும். இத்துணைத் தெளிவாக, ‘பொய்யடிமை” குறித்த மெய்யியல் விளக்கம் வேறு எந்த திருமுறையிலும் காணப்படாமை ஒன்றே சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டர் தொகையில் “பொய்யடிமையில்லாப் புலவர்” என்ற அடைமொழியோடு மாணிக்கவாசகரைக் குறித்து குறிக்க எதுவாய் இருந்திருக்க வேண்டும்.

‘பொய்’ என்ற சொல் பயின்றுவரும் ஏனைய திருவாசக வரிகள் வாசகர்கள் அறிந்து கொள்ள இங்கு தரப்பட்டிருக்கின்றன.

கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் – திருச்சதகம்:1

 

போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட்கொள்ளும் வள்ளல் திருச்சதகம்:63

 

பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி -திருச்சதகம்:69

 

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்

பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் -திருச்சதகம்:73

 

வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே

ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ திருச்சதகம்:74

 

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் திருச்சதகம்:81

 

சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.  –திருச்சதகம்:85

 

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு திருச்சதகம்:86

 

தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. -திருச்சதகம்:89

 

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால்

வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே திருச்சதகம்:90

 

பொய்யி லங்கு எனைப் புகுதவிட்டு நீ போவதோ

சொலாய் பொருத்தம் ஆவதே. திருச்சதகம்:92

 

பொருத்தம் இன்மையேன் பொய்மை உண்மையேன்

போதஎன்று எனைப் புரிந்து நோக்கவும் -திருச்சதகம்:93

 

கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி

பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி

வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. திருச்சதகம்100

 

பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட 

மெய்யவனே விட்டிடுதி கண்டாய் நீத்தல் விண்ணப்பம்:7

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்

பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் நீத்தல் விண்ணப்பம்:28

 

அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே திருக்கோத்தும்பி:5

 

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்

மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட திருக்கோத்தும்பி:17

 

புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த

மெய்ச்சுடரே கோயில் திருப்பதிகம்:3

 

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் புகுமலர்க்கழலிணையடி

பிரிந்தும் செத்திலாப் பத்து:1

 

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை அதிசயப்பத்து:7

 

தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி – அதிசயப்பத்து: 8

 

அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே  அதிசயப்பத்து:10

 

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் அச்சப்பத்து:1

 

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்குச் பிடித்தபத்து:3

 

புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும் சென்னிப்பத்து: 8

 

போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. யாத்திரைப்பத்து:1

 

கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. யாத்திரைப்பத்து:3

 

போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே யாத்திரைப்பத்து:9

 

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்

பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய  திருவெண்பா:1

 

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே

மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் அச்சோபதிகம்:3

 

அறுபத்துமூவரில் மாணிக்கவாசகர் ஒருவர்

திருவாசகத்தில் ‘பொய்யடிமை’ தீர்க்கமாகக் காணுமளவு வேறு எந்தத் திருமுறையிலும் இல்லை. திருவாசகப் பாடல்கள் 41 ‘பொய்யடிமை’ குறித்துப் பேசுகின்றன. அப்பாடல்களில் 47 முறை இச்சொற்கள் பயின்று வந்துள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளக் கருத்தை சேக்கிழார் பெருமான் ஒருவரே தெளிவாக விரித்துப் பாடியுள்ளார். எனவே, மாணிக்கவாசகரே திருத்தொண்டர் தொகையில்   சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்ட தனியடியார் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று திண்ணமாக நிறுவப்பட்டுள்ளது. அறுபத்துமூவரில் மாணிக்கவாசகர் ஒருவர் என்பதும் மிகத் தெளிவு.

குழப்பங்களுக்குக் காரணம் என்ன?

மனதில் கை வைத்துச் சொல்லுங்கள்! இது ஒன்று மட்டும் காரணமாக இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கிறித்துவ சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்த ஆங்கிலேய அருட்தந்தை ‘G.U. போப்’ அவர்களின் உள்ளத்தை உருக்கிய திருவாசகம், அவர்மூலம் உலகெங்கிலும் உள்ளவர்கள் இதயங்களைச் சென்றடைந்தது.

சைவ உலகம் செய்த தவக்குறைவு

‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று சமயவேறுபாடின்றி அனைவரும் போற்றும் திருவாசகத்தின் உருக்கமான பாடல் தன்மைகள் குறித்து சேக்கிழார் பெருமான் நிச்சயம் அறிந்திருப்பார். சமயாசிரியர் நால்வர் என்று சைவஉலகம் போற்றிப் பரவும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வரில் நாலாவதாகப் போற்றப்படுபவரான மாணிக்கவாசகரைப் பற்றி சேக்கிழார் பெருமான் இரண்டே பாடல்களில்தான் பாடியுள்ளார். திருஞான சம்பந்தப் பெருமான் புராணத்தை 1256 பாடல்களில், அதாவது, பெரியபுராணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாடல்களிலும், திருநாவுக்கரசுப் பெருமான் புராணத்தை 429  பாடல்களிலும், சுந்தரர் பெருமான் புராணத்தை 203 பாடல்களிலும் பாடியுள்ள சேக்கிழார் பெருமான் நாலாமவரான திருவாசகம் உடையாரின் புராணத்தைப் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்ற அளவில் மட்டும் 2 பாடல்களில் பாடிவிட்டு, அவர்தம் புராணத்தை விரித்துப் பாடாதது சைவஉலகம் செய்த தவக்குறைவுதான்.

திருமூலநாயனாரைப் பற்றி திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடவில்லை

காலத்தால் முற்பட்டவரான திருமூல தேவ நாயனாரைப் பற்றிய குறிப்புகள் திருஞானசம்பந்தர், அப்பரடிகள் பாடல்களில் காணப்படவில்லை. அவர்கள் காலத்தில், திருமூலரைச் சைவர்கள் பெருமளவு பின்பற்றவில்லை. திருமூலரின் சிவயோகநெறியைக் காட்டிலும், திருத்தொண்டு சார்ந்த பக்திநெறியே சைவ உலகில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், ஏழாம் நூற்றாண்டில், சிவயோகநெறியைச் சைவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது சுந்தரர் ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று பாடியதில் இருந்து தெளிவு. சுந்தரர் திருமூலரைத் திருத்தொண்டர் தொகையில் பாடியதால், 27 பாடல்களில் திருமூலர் புராணத்தைப் பாடியுள்ளார் சேக்கிழார் பெருமான். அந்த அளவு முக்கியத்துவம் சேக்கிழார் காலத்தில்கூட மாணிக்கவாசகர் சைவ உலகில் பெறவில்லை என்பதையே சேக்கிழார் இரண்டு பாடல்களில் மட்டும் பாடிச் சென்றமையால் அறிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணங்கள் ஆய்வுக்கு உரியது.

சமய மறுமலர்ச்சிக் காலத்தில் யோக நெறியும், ஞான நெறியும் முதலாவதாகக் கொள்ளப்படவில்லை .

கடைச் சங்ககாலச் சமண, புத்த சமயிகள் தமிழர்களாக இருந்தமையால், அவர்கள் தமிழில் சமயப் பரப்புரை செய்து, தமிழைப் போற்றினர். ஆயினும், இறைக்கொள்கை இன்றி ‘நிர்வாணம்’(துறவு) என்னும் விடுதலையை அவர்கள் பெரிதும் பரப்புரை செய்தமையால், காலப்போக்கில், தமிழரல்லாத களப்பிரர்களிடம் அரசு எளிதில் வீழக் காரணமாய் அமைந்தது. களப்பிரர் வசம் தமிழ்மண் வீழ்ந்ததன் பின், தமிழரல்லாத சமண, புத்தக் களப்பிரர்கள் வடமொழிக்கே முதலிடம் கொடுத்தார்கள்; தமிழ் புறந்தள்ளப்பட்டது. தமிழ்ச் சமூக மீட்டெடுப்பு இயக்கமாக பக்தி இயக்கம் எழுச்சிபெற்ற 6வது 7வது நூற்றாண்டுகளில், இல்லறம், பக்தித் தமிழ் என்ற இரண்டையும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இறைவன் அம்மையப்பனாக வழிபடப்பட்டான்.

 

களப்பிரரிடம் தமிழகம் தமிழனின் இருண்ட காலம்

அகவாழ்வு, புறவாழ்வு என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் உயிரின் முழுவிடுதலையாம் ‘முத்தி’ என்னும் துறக்கம் உலக வாழ்வைத் துறந்த துறவியரே பெறத்தக்கது என்ற சமண, சாக்கியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பெருமளவு இல்லறம் துறக்கும் நிலை ஏற்பட்டது. அச்சூழல், தமிழரல்லாத சமண, சாக்கிய களப்பிரர்கள், போர்கள், உயிரிழப்புகள் அதிகமின்றி, தமிழகத்தைக் கைப்பற்ற ஏதுவாயிற்று. தமிழ்மொழி ஆதரிப்போர்இன்றி நிலைகுலைந்ததால், தமிழும் சைவமும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

தமிழகத்தில் சமண, புத்த மதங்களே பெருமளவு வடமொழித் தாக்கத்தைக் கொண்டுவந்தன

களப்பிரர் பிடியிலிருந்து தமிழகம்  நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மீண்டாலும், ஏற்கனவே தமிழகத்தில் வேரூன்றிவிட்ட பாலி, பிராகிருத வடமொழிகளின்  தாக்கத்திலிருந்து மீளவிடாமல் சமண சாக்கிய மதங்களைத் தழுவியிருந்த தமிழ் மன்னர்களைப் பயன்படுத்தி சமயவாதிகள் தடுத்தனர். தமிழ்மொழி வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது.

என்னை நன்றாக இறைவன் செய்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே 

என்று பாடிய திருமூலரின் திருமந்திரம் புதைக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டிய நிலையிலேயே தமிழகம் அன்று இருந்தது. மாணிக்கவாசகரின் காலத்தில் புத்தமதத்தின் தாக்குதல் அதிகம் இருந்ததை அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன.

சொர்க்கம் மண்ணிலே! காதல் செய்வீர்! அப்பரும், சம்பந்தரும் நடத்திய காதல் பாடம்!

ஐந்தாம்,ஆறாம் நூற்றாண்டில் ஓரளவு காலூன்றிய சைவம், தமிழகமெங்கும் ஊர் ஊராகப் பயணித்து, அவ்வவ்வூரிலுள்ள சிவபெருமானைத் தம் தேவாரங்களால் பாடி எழுச்சியூட்டிய  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவரின் இடையறாப் பங்களிப்பாலேயே தமிழகம் சைவத்துக்கு மீண்டது எனலாம்.

ஐந்திணைகளிலும் அகப்பாடல்கள் பாடிக் காதல் வாழ்வு வாழ்ந்து, உலகத்துக்கே அகப்பாட்டு பாடி  வழிகாட்டிய தமிழர்களுக்கே மணவாழ்வின் தேவை குறித்து இவ்விரு சமயாசிரியர்களும் கற்றுக்கொடுக்க வேண்டிய காலமாக ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் இருந்தன என்பது நமக்கெல்லாம் பெருவியப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை என்பதைப் பின்வரும் தேவாரப் பாடல் கூறும்:

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே! – திருஞானசம்பந்தர் தேவாரம்.

இப்பாடலின் பொருள்: சுவர்க்கம் என்பது வானில் பெறும் வாழ்வன்று; இல்லறத்தானாக, மனைவி, குழந்தைகளுடன்  இம்மண்ணிலேயே நாளும் நல்லவண்ணம் வாழ்ந்து, சிவபுண்ணியம் என்னும் நற்கதியாம் சுவர்க்கத்தை நீங்கள் அடையலாம். அதற்கு இம்மண்ணில் யாதொரு குறைவுமில்லை. அதோ, சீர்காழிஎன்னும் கழுமலவளநகரிலே உறையும் நம் ஈசன் சிவபெருமானே பெண்ணின் நல்லாள் உமையோடு இருக்கின்றான். ஆகவே, இல்வாழ்வாம் பெருவாழ்வு வாழுங்கள் என்பது தொக்கிநிற்கும் பொருள்.

இதையே நாவுக்கரசர் சொல்லும் அழகைப் பாருங்கள்:

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.     –திருநாவுக்கரசர் தேவாரம்.

 

காணப்படுவனயாவும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து சிவமும், சக்தியுமாய் காட்சியளிப்பதைக் கண்டு வியந்து பாடுகின்றார். இப்பாடல் பத்துத் திருவையாறு திருத்தாண்டகப் பதிகப் பாடல்களில் முதலாவது பாடல். மாதர் பிறைக் கண்ணியான் சிவனை மலையான் மகளான உமையோடும் பாடி, இறைவனுக்கு நீராட்டு செய்ய அடியவர்களெல்லாம் நீர் சுமந்துகொண்டு திருக்கோயிலுக்குள் செல்கின்றார்கள்; அவர்கள் பின்னால் நானும் அமைதியாக அடியெடுத்துச் சென்று ஐயாறு கோயிலை அடையும்போது, அங்கு, காதல்கொண்ட பெண்யானையுடன் ஆண்யானை வருவதைக் கண்டேன்; அவற்றில் நான் இதுவரைக் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை  கண்டேன் என்கின்றார் அப்பர் பெருமான். எத்துணை அற்புதமாக, நுணுக்கமாகக் ஆணும் பெண்ணுமான காதல் வாழ்க்கைக்கு இறைஒப்புதல் அளிக்கிறார் பாருங்கள்! மற்ற ஒன்பது திருவையாறு பாடல்களிலும் இத்தகைய காட்சிகளைக் காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

இப்போதும், தமிழக சைவப் பெருமக்களின் திருமண அழைப்பிதழ்களில் இவ்விரண்டு பாடல்களையும் அச்சிடுகின்றார்கள். இது, அந்நாளையப் பண்பாட்டுத் தொல்லெச்சங்களாகும்.

திருஞானசம்பந்தரை முதலாவது சைவசமயாசிரியாராகக் கொள்வதின் காரணம்

திருவடிப்பேறு என்னும் முத்தியடைய துறவு ஒன்றே வழியன்று; வாழ்வன்று; இல்லறத்தானாக, மனைவி, குழந்தைகளுடன்  இம்மண்ணிலேயே நாளும் நல்லவண்ணம் வாழ்ந்து, சிவபுண்ணியம் என்னும் நற்கதியாம் முத்தியை நீங்கள் அடையலாம். சிவபெருமானே உமையொரு பாகனாக உங்களுக்கு வழிகாட்டுகிறான் என்று தேவாரங்கள் பாடி சம்பந்தரும், அப்பரும் சைவத்தை நிலைநாட்டித் தமிழரை இல்லற வாழ்வுக்கு மடைமாற்றினர்; சைவமும் தமிழும் தழைக்கச் செய்தனர். திருஞானசம்பந்தப் பெருமான், வேள்வியியற்றும் அந்தணர் குலத்தில் பிறந்திருந்தும், வடமொழியைப் போற்றாது தன்னைத் தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன் பாடல்களில் பதித்துத் தமிழின் புகழ் ஓங்கச்செய்தார். மூவரில், திருஞான சம்பந்தர் ஒருவரே அவர்காலத் தமிழகத்திலுள்ள அனைத்து சிவாலங்களையும் பாடியவர். இந்தப் பங்களிப்பே அவரைத் தமிழர்கள் சமயாசிரியர் நால்வரில் முதலாசிரியராக கொள்ளக் காரணம். அவரின் பங்களிப்புப்பற்றியும், திருஞான சம்பந்தர் ஏன் அத்தகைய சிறப்புக்கு உரியவர் என்பது பற்றியும் ஒரு ஆய்வு நூலே எழுதுமளவுக்கு புதையுண்ட செய்திகள் உள்ளன.

மாணிக்கவாசகர் நாலாவது சைவசமயாசிரியராக பிற்காலத்தில்தான் ஏற்கப்பட்டுள்ளார்

வடமொழி ஆதிக்கத்தை எதிர்கொள்ளல், இல்லறவழியில் தமிழர்களை மடைமாற்றுதல், சமண, சாக்கியர்களை எதிர்கொள்ளல் போன்ற ‘திரோதானம்’ என்னும் ‘உலகியல் வழி சிவனை அடைதல்’ வழி மிகமுக்கியமாகச் சைவத்தில் கொள்ளப்பட்டதால், சிவஞானத்தையே பெரிதும் பாடும் திருவாசகமும், புலனடக்கம், யோகநிலை வலியுறுத்தும் திருமந்திரமும் பாடிய ஆசிரியர்களை அக்காலகட்டத்தில் இவர்களால் வெளிப்படையாகக் பாடப்படப்படவில்லை; திருமூலரை பெயரிட்டும், மாணிக்கவாசகரைப் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்புப் பெயர்கொண்டும் சுந்தரமூர்த்தி நாயனாரே முதன் முதலில் பாடினார். மேலும். சேக்கிழார் காலத்தில், மாணிக்கவாசகரை வீரசைவர்கள் தங்கள் குருவாகக் கொண்டிருந்தமையால், அவரும் வெளிப்படையாக மாணிக்கவாசகரைப் பாடவில்லை என்று கொள்வதில் தவறில்லை. பட்டினத்துஅடிகள்தான் முதன்முதலில் மாணிக்கவாசகரைப் பெயரிட்டுச் சைவத்தில் பதிவு செய்தார். அதன் பின்பே, மாணிக்கவாசகர் நாலாவது சைவசமயாசிரியராக ஏற்றனர் சைவர்கள்.

திருத்தொண்டர் தொகை வரிசைப்படி மாணிக்கவாசகர் திருவுருவம் சிவன் கோவில்களில் அறுபத்துமூவரில் நிறுவப்படவேண்டும்

சைவர்கள் திருவாசக முற்றோதுதலைக் சிவன் கோயில் பிரகாரங்களில் நிகழ்த்தினர்; என்றாலும், அம்மையப்பர் சன்னிதானத்தில் திருவாசகம் இடம்பெற வெகுகாலம் பிடித்தது. சைவசமயாசிரியரில் நாலாவது சைவசமயாசிரியராக மாணிக்கவாசகரை ஏற்றுக்கொண்ட சைவர்கள், அத்தகைய உயர்ந்த இடத்தைப் பெற்றவர் 63 நாயன்மாரிலும் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும்.  தம் தவறுகளைத் திருத்தி, சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில் கூறியவாறும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராண விளக்கத்தின்படியும் மாணிக்கவாசகரை அறுபத்துமூவரில் ஒருவராக வைத்து வணங்கவேண்டும்.

இதே தவறைச் சைவர்கள் இன்று வள்ளலாருக்கும் செய்கின்றனர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ‘திருவருட்பா அன்று; மருட்பா” என்று வெள்ளையர்கள் நீதிமன்றத்தில் வழக்கே தொடுத்தார். சைவம் இன்னும் நிறைய மாற்றங்களைச் சந்திக்கும். திருவருட்பா சைவத்திருமுறைகளுள் முற்றிலும் ஏற்கப்படும் நாள் வெகு அருகில் உள்ளது.

நிறைவாக,

அரசர்கள் ஆதரவு, அரசின் சமயம், கட்டாய மதமாற்றம், பரப்புரை மூலம் சமயமாற்றம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் நுழைந்த, இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றாத, கிறித்துவம், இசுலாம் ஆகிய சமயங்களுக்கு மாறிய தமிழர்கள், அம்மதங்களிலேயே தொடர்ந்து இருந்து வருவதைப் பார்க்கும்போது, சமண, சாக்கிய மதங்களைப் பெருமளவு கைக்கொண்டிருந்த தமிழர்கள் முற்றிலுமாக அவைகளைக் கைவிட்ட காரணங்கள் ஆய்வுக்குரியன. தத்துவ அளவில், இறைக்கொள்கை இல்லாததும், துறவு மட்டுமே முத்தி தரும் என்ற நிலைப்பாடுகளும் தமிழர்களின் இயல்புகளுக்கு மாறானவைகளாலாதால், சமண, சாக்கிய சமயங்களின் முழு வீழ்ச்சிக்கு இவை பெரும்காரணிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். வடமொழி தமிழ் மொழியில் கலக்க சமண, பௌத்த மதங்களின், பிராகிருத, பாலி வடிவங்களே சமஸ்கிருதத்தைக் காட்டிலும் முதற்காரணிகள் என்பதை அறிதல் நலம். சமணத்திலிருந்து மீண்டு, சைவத்துக்குள் வந்த அப்பர் தேவாரப் பாடல்களில் அதிகமாகக் காணப்படும்  வடசொற்களைக் காட்டிலும், அப்பர் காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் வடசொற்கள் மிகப் குறைவு என்ற ஒன்றே இதற்குச் சான்று. தற்காலத் திராவிடச் சிந்தனையாளர்கள் ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற வடஇந்தியத் தத்துவங்களைத் தமிழர்களின் ஆதித் தத்துவங்கள் என்று உண்மைக்குப் புறம்பாக நிலைநாட்ட முயல்கின்றனர்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே! –பகுதி-3 (நிறைவுப் பகுதி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *