Tag: வசுராஜ்

  • இழப்பு (சிறுகதை)

    இழப்பு (சிறுகதை)

    வசுராஜ்

    நான் தான் ஜானகி. இந்தத்  திண்ணையில் உட்கார்ந்து இரண்டு மாமாங்கம் ஆறது. இது  திருச்சி பக்கத்திலுள்ள அழகான கிராமம்.  கல்யாணமானதிலிருந்து  30  வருஷம் இங்கு தானிருந்தேன். அப்புறம் பிள்ளைகளோடும் பெண்களோடும் இப்ப வரை இருந்துண்டிருக்கேன். ரொம்ப நாட்களுக்கப்புறம் குடும்பத்தோடு  சொந்தக்காரா  கல்யாணத்துக்கு இங்க வந்திருக்கோம். இரட்டை வரிசை வீடுகளும் கம்பீரமான  கோபுரமும் மனதுக்கு இதமாய் இருக்கு. எல்லார் வீட்டு வாசலிலும் பெரிது பெரிதாய்க் கோலம். புள்ளி வைத்த கோலம்,  தாமரை இதழ்கள் விரியும் இழைக் கோலம், மணைக்கோலம் எனப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கு. கண் பார்வை தான் கொஞ்சம் மங்கிண்டு வருது. முன்னாடின்னா கோவில் வாசல்ல யாராவது வந்தால் கூட யாருன்னு கரெக்டாத் தெரியும். இப்ப நாலு ஆத்துக்கு முன்னாடி வந்தாத் தான் யாருன்னு தெரியறது.

    பொண்ணோட பேரன் ஆதர்ஷ் பெங்களூரிலிருந்து வந்திருக்கான்.  குழந்தையோட அம்மா அதான் என் பேத்தி அவனுக்குச் சாப்பாடு ஊட்ட அவன் பின்னாலேயே ஓடிண்டிருக்கா. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதனால் அருமை தெரியலை. குழந்தைக்குன்னு தனியா வாட்டர் பாட்டில் வாங்கறா. அதையும் கொதிக்க வைச்சுக் குடுக்கறா. சாப்பிட புதுசு புதுசா ஏதேதோ குடுக்கறா. ஒரு பெரிய பெட்டி நிறைய குழந்தைக்கு மட்டுமே என்னென்னவோ எடுத்துண்டு வந்திருக்கா. எல்லாரும் ஒண்ணே ஒண்ணு  பெத்துக்கறா. அதைப் பொத்திப் பொத்தி  வளக்கறா. அதுல தப்பில்லையே. எங்க காலம் மாதிரிப் பெத்தது பாதியைப் பறி குடுக்கற நிலை இப்ப இல்லை.

    நானும் 6 பெத்து அதுல இரண்டைப் பறி குடுத்தேன். முதல் பெண் நன்றாய் இருந்தாள். இரண்டாவது புள்ளை பிறக்கும் போதே ரொம்ப நோஞ்சானாகப் பிறந்து ஒரே வாரத்தில் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது. மத்ததெல்லாம் பார்க்க என்னைப் போல் சுமாராய் இருந்தாலும் ஆரோக்கியமாய் இருந்தது. அந்தக் கடைசிப் புள்ளை தாசரதி தான் கொள்ளை அழகு. கிட்டத்தட்ட இந்தக் கொள்ளுப்பேரன் ஆதர்ஷ் மாதிரி இருப்பான். பிறந்த போது கிருஷ்ண  விக்ரகம் மாதிரி இருந்தான். கொழு கொழுன்னு தான் 10 மாசம் வரை இருந்தான். யார் கண் பட்டுதோ திடீர்னு ஒரு காய்ச்சல் வந்தது. பக்கத்து டவுண் திருச்சில உள்ள அரசாங்க  ஆஸ்பத்தரில கொண்டு போய்க் காட்டினோம். அங்க குழந்தையை அட்மிட் பண்ணச் சொல்லிட்டா.  குழந்தை கூட ஒருத்தர் தான் இருக்க முடியும்கறதால நான் மட்டும் இருந்தேன். இவர் ஆத்துக்கும் ஆஸ்புத்தரிக்கும் அலைஞ்சுண்டிருந்தார். மத்த குழந்தைகளை எச்சுமு  அம்மங்கா தான் பாத்துண்டிருந்தா.

    குழந்தைக்குக் காய்ச்சல் முதல்ல அனலா அடிச்சது. அப்புறம் 2 நாள்ல கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது. ரொம்ப பலகீனமாக இருந்ததால டிரிப்ஸ் ஏத்தினா. அரசாங்க ஆஸ்பத்திரி என்பதால டாக்டருக்குப் படிக்கறவா கூட வந்து வந்து பார்ப்பா. எல்லாருக்கும் குழந்தையை ரொம்ப பிடிச்சுப்  போயிட்டதால தினமும் வந்து பார்த்துட்டுப் போவா. குழந்தையைக் கொஞ்சுவா. துவண்டு போன குழந்தை அவாளைப் பார்த்து சிரிச்சான். குழந்தை சிரிக்க ஆரம்பிச்சதும் எங்களுக்கும் நம்பிக்கை வந்துடுத்து. “இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் இதோட நிறுத்திடலாம். இனிமேல் கஞ்சி குடுக்கலாம்”னு  நர்ஸ் சொன்னா. அதை சொல்ல மறந்துட்டேனே,  குழந்தைக்குக் காய்ச்சலோட வயித்துப்போக்கும் இருந்தது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சுண்டு வந்தது. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டா.

    அதுனால இவர் ஆத்துக்குப் போயிட்டுக் காலையில குழந்தைக்கும் எனக்கும் உடுத்திக்கத் துணியும்  பணமும் எடுத்துண்டு வரேன்னு இந்தக் கிராமத்துக்கு வந்தார். இந்தக் கிராமத்துல தான் அப்ப நாங்க  இருந்தோம். நான் மறுநாள் ஊருக்குப் போகப் போறோம்னு பக்கத்து பெட் மாமி கிட்ட சொல்லிண்டிருந்தேன்.  அவா பெண்ணுக்குக் கீழ விழுந்து தலையில அடிபட்டு அவாளும்  10 நாளா ஆஸ்பத்திரில இருந்தா. பாவம் பொண்ணு பொழைச்சதே பெருசு என்றார்கள். அவாத்து மாமா தான் எங்களுக்கு நல்ல உதவியாய் இருந்தார். அந்தக் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகணும்னு வேண்டிண்டேன். அந்த மாமி “நீங்க இருந்தது எனக்கு எங்க அக்கா கூட இருக்கற மாதிரி இருந்தது. நீங்க போயிட்டா எனக்குக் கஷ்டமாய் இருக்கும். உங்க குழந்தைக்கு சரியாகி ஆத்துக்குப் போயிட்டா நல்லது தானே” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, “அய்யோ குழந்தை!” எனக் கத்தினாள். நான் அவா பொண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தால் என் குழந்தைக்குக் கையும் காலும் உதறிக் கொண்டிருந்தது.  ஓடிப் போய் நர்சைக் கூப்பிட்டாள் அந்த மாமி. நான் குழந்தையை அழுத்திப் பிடிச்சுண்டே “தாசரதி தாசரதி” எனக் கூப்பிட்டுப் பார்த்தேன். குழந்தை முழியே வித்தியாசமாய் இருந்தது.

    நர்ஸ் வந்து டிரிப்ஸை நிறுத்தினாள். அப்ப இருந்த டாக்டர் வந்தார். அவரைப் பார்த்தால் படிச்சுண்டிருப்பவர் போல இருந்தது. அவர் நர்ஸ் கிட்ட ஜன்னி வந்திருக்கு என ஏதோ மெதுவாய் சொல்லிண்டிருந்தார். நான் எல்லாத் தெய்வங்களையும் கெஞ்சிண்டிருந்தேன் 10 நிமிஷம் என்னென்னவோ பண்ணிப் பார்த்தார். எந்தத் தெய்வத்துக்கும் நான் கேட்டது காதுல விழலை போல. குழந்தையின் அசைவு கொஞ்சம் கொஞ்சமாய் நின்றுவிட்டது.   டாக்டர் “என்னால எதுவும் பண்ண முடியலை. எனக்கே ரொம்பக் கஷ்டமாயிருக்கு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். நர்ஸ் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். எனக்குக் கொஞ்ச நேரம் உலகமே நின்னுட்ட மாதிரி இருந்தது.

    “கடவுளே! எனக்குத் தைரியத்தைக் கொடு. அவன் உயிரைத்தான் கொடுக்கல” என்று வேண்டிக்கொண்டேன். அடுத்தது என்ன பண்ணணும்னு யோசிச்சேன். எப்படியும் உடனே ஊருக்குப் போயிடணும்னு முடிவு பண்ணினேன். பக்கத்து பெட் மாமாவும் மாமியும் குழந்தையைப் பார்த்து அழுது கொண்டிருந்தார்கள். நான் மாமா கிட்ட “ஒரு டாக்ஸி பிடிச்சுண்டு வர முடியுமா?” ன்னு கேட்டேன். அப்பெல்லாம் இந்த மாதிரி ஆம்புலன்ஸ் வசதி இருந்த மாதிரித் தெரியலை. ஏற்கெனவே இந்த மாதிரி ஒருத்தர் முந்தின நாள் செத்துப் போன போது ஆஸ்பத்திரில எதுவும் ஏற்பாடு பண்ண மாட்டோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவரிடம் டாக்ஸி பத்திக் கேட்டேன் அவர் தயங்கினார். செத்துப் போன குழந்தையை எப்படி டாக்ஸியில் ஏத்துவான்னு யோசிச்சார் போல. நான் சொன்னேன், “குழந்தை உயிரோட இல்லைன்னு டாக்ஸிக்காரர் கிட்ட சொல்லாதீங்கோ. நான் குழந்தை தூங்கற மாதிரி வைச்சுக்கறேன்”னு சொன்னேன். அவர் பிரமித்துப் போய்ப் பார்த்தார். மாமி தான் உடனே சுதாரிச்சுண்டு “டாக்ஸி பிடிச்சுண்டு வந்துட்டு நீங்களும் கூடப் போயிட்டு வாங்கோ”ன்னு சொன்னா. மாமா போய் டாக்ஸி கொண்டு வந்துட்டார். நான் இறுக்கமான முகத்துடன் குழந்தையுடன் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். மாமா முன்னாடி உட்கார்ந்து கொண்டார். டிரைவர் சின்னப் பையனாய்த் தெரிந்தான்.

    “என்னம்மா, குழந்தைக்கு?” ன்னு கேட்டான். மாமா “ஜுரம். இப்ப பரவாயில்லை. மருந்து கொடுத்தது நன்னாத் தூங்கறான்” னு சொன்னார். “தூங்கறான்”னு சொல்லும் போது அவர் குரல் தழுதழுத்தது. குழந்தை மடியில் சில்லென்று இருந்தான். நான் கண்ணை மூடிக்கொண்டு “தெய்வமே! இந்தக் குழந்தையை எனக்குக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்” என்று மருகிக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அழகான குழந்தை, எனக்குக் கொடுத்தது தப்புன்னு நினைச்சயா? மத்த குழந்தைகள் மாதிரி இதுவும் சுமாராய் இருந்தால் என்னிடம் இருந்திருக்குமோ?” என நினைத்துக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டேன். டிரைவர் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். மாமாவும் கேட்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். ½ மணி நேரப் பயணம் மிக நீண்டதாகத்  தெரிந்தது.

    வீட்டு வாசலுக்கு வந்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. குழந்தை கனத்த மாதிரி இருந்தது. மாமா போய்க் கதவைத் தட்டினார். நான் குழந்தையுடன் இறங்கினேன். எங்க ஆத்துக்காரர் வந்து கதவைத் திறந்ததும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது அழுகையாய் வெடித்தது. என்னால் அதற்கு மேல் அடக்கவே முடியவில்லை. கதறிவிட்டேன். என் அழுகைச் சத்தம் கேட்டு எதிர்த்தாத்து மாமி, பக்கத்து ஆத்து பானு எல்லாரும் வந்துட்டா. அழுகையோடே டிரைவருக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன். அம்மங்கா வந்து பார்த்து விட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள். என் ஆத்துக்காரர் பித்துப் பிடிச்சாப்புல நின்னுண்டிருந்தார். அவருக்கு நடப்பதெல்லாம் நிஜமா, கனவான்னு தெரியலை.

    அம்மங்கா வந்து பணம் கொடுத்தாள். டிரைவர் கண் கலங்க நின்றார். கூட வந்த மாமா, என் ஆத்துக்காரரிடம் “மாமா, பகவான் கருணையே இல்லாமல் குழந்தையை எடுத்துண்டுட்டார். மாமி இடிதாங்கி மாதிரி உக்காண்டு வந்தா” என்றார் அழுதுகொண்டே. என் ஆத்துக்காரர் அப்போது தான் உணர்வு வந்தவராய்க் குழந்தையை வாங்கி நெஞ்சோடு சேர்த்துண்டு அழ ஆரம்பிச்சார். டிரைவரிடம் “மன்னிச்சுடுப்பா. எனக்கு வேற வழி தெரியலை” என்றேன் அழுதுண்டே. அவன் சொன்னான் “இந்தக் குழந்தையைப் பார்த்தால் தெய்வக் குழந்தை மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் துக்கத்தை அடக்கிட்டு வந்த உங்களைப் பார்த்தால் தெய்வத்தைப் பார்த்த மாதிரி இருக்கு. உங்க கிட்டக் காசு வாங்கக் கூடாது. பெட்ரோலுக்கு மட்டும் வாங்கிக்கறேன்” என்று சொல்லி மீதியை வைத்துவிட்டுப் போனான்.  மாமாவும் அழுதுகொண்டே கிளம்பினார்.

    அப்புறம் ஊரே வந்து அழுதுவிட்டுப் போனது. அவனைத் தூக்கிண்டு போகும் போது எங்கள் குடும்பத்தின் கதறல் அந்த எமனுக்கே கேட்டிருக்கும். நாளாக ஆக, இந்தக் குழந்தைகளையாவது  ஆயுசோட வைத்திரு என்று பிரார்த்தனை பண்ணினேன். பகவானும் இரக்கப்பட்டு இப்போது வரை என் குழந்தைகள், பேரன், பேத்தி எல்லாரையும் நன்னா வச்சிருக்கான். பேத்தியின் குழந்தை முக ஜாடை என் தாசரதி மாதிரி இருக்கறதால இன்னிக்குப் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து உங்க கிட்ட புலம்பிட்டேன். எல்லாரும் ஷேமமா இருக்கப் பெருமாளைப் பிரார்த்திச்சுக்கறேன்.

    ஆதர்ஷ் ஓடி வந்து மடியில் உட்கார்ந்தான். “தாசரதி” என அணைத்துக்கொண்டேன்.

    Share
  • தெய்வக் குழந்தை (சிறுகதை)

    தெய்வக் குழந்தை (சிறுகதை)

    வசுராஜ்

    பாவனா மிக்சியில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். குக்கரில் இட்லி வெந்து விட்டது போல. தொடர்ந்து வந்த ஆவியுடன் இட்லி வெந்து விட்ட வாசனையும் வந்தது. அடுப்பை சிம் பண்ணின விட்டு அடுத்த அடுப்பில் சட்னிக்குத் தாளித்தாள். ஹாலில் ஊதுபத்தி மணத்துடன் கந்த சஷ்டிக் கவசம் கணீரென ஒலித்தது.

    அது முடிந்ததும் மணிச்சத்தம் கேட்டது. இட்லியை ஹாட் பேக்கில் வைத்து விட்டு அவளும் ஹாலுக்கு வந்து தீபாராதனையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.  கணவனைப் பார்த்தாள்.  காதோரம் நரைக்க ஆரம்பித்திருந்தது. அவன் முகத்திலும் பதட்டம் தெரிந்தது. “கடவுளே! இன்று எல்லாம் நல்லபடியாக  முடியணும்” என வேண்டிக் கொண்டாள்.  அவளறியாமல் கண்ணீர் வழிந்தது. இரண்டு பேர் மனதிலும் பரபரப்பு. ஒருவருக்கொருவர் அதனை முகத்தில் காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிர்ந்தார்கள்.

    அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். எளிய அலங்காரத்துடன் கிளம்பினார்கள். முதலில் மோகன் கிளம்பிக் காரை சரி பார்த்தான். பெட்ரோல் அரை டாங்குக்கு மேல் இருந்தது.  பாவனா புது விருந்தினரை வரவேற்க எல்லாம் சரியாக இருக்கான்னு பார்த்தாள். இன்னிக்கு இவர்களுடன் அவர் வருவது சந்தேகம் தான். ஆனாலும்  எதற்கும் எல்லாம் தயாராக வைத்துக் கொள்வோம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். கடைசியாக எல்லாக் கடவுளையும் பார்த்து அவசரமாகப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

    வீட்டைப் பூட்டி விட்டு வந்து காரில் ஏறிக் கொண்டாள்.  மோகன் காரைக் கிளப்பினான். பாவனா திரும்பிக் கணவனைப் பார்த்தாள். சாந்தமான அவன் முகம் இன்று இன்னும் அழகாய்த் தெரிந்தது. இப்பவே இப்படி இருப்பவன் 10 வருஷத்துக்கு  முன்னால் கல்யாணத்தின் போது அரவிந்த் சாமி (அப்போதுள்ள)  போலிருந்தான். பெண் பார்க்க எல்லாம் வர மாட்டேன் என்று அவன்  சொன்னதால் இரண்டு பெற்றோர்களுடன் இவர்கள் ஒரு ஹோட்டலில் சந்தித்தார்கள். பார்த்தவுடனே அவன் முகம் அவளுக்குள் பதிந்து விட்டது. “ஐயோ! இவன் வேண்டாம்னு சொல்லிக் கூடாதே” எனப் பிள்ளையாருக்கு 100 தோப்புக்கரணம் போடறேன்னு  வேண்டிக் கொண்டாள். அவனுக்கோ  ஜாங்கிரியை ஆசையாய்ச் சாப்பிட்ட அவளே ஜாங்கிரியாய்த் தெரிந்தாள்.  சாதாரண சுடிதாரில் தேவதையாய்த் தெரிந்தாள்  “இந்தப் பெண் என்னை  ஓ.கே சொல்லி விட்டால் எங்க வீட்டிலிருந்து (மாம்பலத்தில் வீடு) வடபழனி வரை  நடந்து வரேன்னு முருகனை வேண்டிக் கொண்டான்.  அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூட்டணி அமைத்து அவர்களது பக்தர்களின் வேண்டுதலை எளிதாக  நிறைவேற்றி வைத்து விட்டார்கள். திருமணம் முடிந்ததும் 2 பேரும் சேர்ந்து வேண்டுதல்களை நிறைவு செய்தார்கள்.

    முதல்  2,3  வருஷங்கள் சந்தோஷமாகத் தான் போச்சு. மோகன் பெற்றோர் கிராமத்திலேயே மூத்த பையன் வீட்டில் இருந்தார்கள். இங்கு வரும் போது பாவனா அவர்களை அருமையாய்ப் பார்த்துக் கொண்டதால் அவர்களுக்கும் திருப்தி  தான். கல்யாணம் ஆகி 3 வருடம் ஆன பின் அவர்களிடம் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் “என்ன உங்க இளைய மருமகள் சும்மாதான்  இருக்காளா?” எனக் கேட்க ஆரம்பித்த பின் அவர்களும் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

    முதலில் இவர்கள் அது பற்றி ஏதும் சட்டை பண்ணவில்லை என்றாலும் நாளாக நாளாகக் சின்னக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் கலங்க ஆரம்பித்தார்கள்.

    ஒருவருக்கொருவர் அடுத்தவர் மனசைக் காயப்படுத்தி விடக் கூடாதே என்பதில் கவனமாய் மனதுக்குள்ளேயே மறுகினார்கள்.  இப்படிப் போராட்டத்திலேயே 2 வருடம் ஓடி  விட்டது. அப்புறம் அவர்களே மனம் விட்டுப் பேசி இதற்கான மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை பண்ணினார்கள். 2 பேரிடமும் குறை இல்லையென்று சொல்லி விட்டார்கள். ஆனால் 5 வருடமாக சிகிச்சை எடுத்து உடலும் மனமும் ரணமானது தான் மிச்சம். இவர்களுக்குப் பணம் ஓரளவு இருப்பதால் அது பற்றிப் பிரச்சனை ஏதும் எழவில்லை.

    இவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டதால்  இவர்களே ஒரு அனாதைக் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என முடிவு பண்ணினார்கள். பெற்றவர்களிடம் சொன்னதுக்கு அவர்களும்  அரைகுறையாகச் சம்மதித்தார்கள்.  “சரி,உங்கள் வாழ்க்கை! நீங்களே முடிவெடுங்கள்!“ என்று இவர்களிடம்  பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். இவர்களும் நன்றாக  யோசித்து நகருக்கு வெளியே உள்ள ஒரு இல்லத்தைத் தொடர்பு கொண்டு தத்தெடுப்பது  குறித்து விவாதித்தார்கள்.  இல்லத்தின் பொறுப்பாளர்  இவர்களை நேரில் வரச் சொல்லி விவரங்கள் எல்லாம் கேட்டார்கள். இவர்களுக்கு 3 முதல் 6 மாதத்திற்குள் உள்ள குழந்தை தான் வேண்டும் என சொல்லி இருந்தார்கள். இன்று இவர்களுக்கு  ஏற்ற குழந்தை இருப்பதாகவும் நேரில் வந்து பார்த்து முடிவெடுக்கச் சொன்னதால் இப்போது கிளம்பி விட்டார்கள்.

    இதெல்லாம் பாவனாவின் மனதில் திரைப்படம் போல் ஓடியது. இவ்வளவு நேரம் பேசாமல் மௌனமாய் இருவரும் இருந்ததே இல்லை.  ஏதாவது வளவளவென்று பேசிக் கொண்டே வருவாள். அந்த ஆசிரமம் வந்து விட்டது. சுற்றிலும்  மரங்களுடன் அந்த எளிமையான கட்டிடம் இவர்களுக்கு ஒரு கோயில் போலத் தோன்றியது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சின்னச் சின்ன தெய்வங்களால்  நிறைந்திருந்ததால் அப்படித் தோன்றியது போல. வெளியே உள்ள தோட்டத்தில் உள்ள விதவிதமான பூக்கள் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடனேயே இரண்டு பேர் முகத்திலும் மலர்ச்சி.

    உள்ளே நுழைந்து  வரவேற்பறையில் உட்கார்ந்தார்கள். களையான முகமுள்ள  ஒடிசலான  ஒரு இளம் பெண் வரவேற்றாள். “வணக்கம்.  உங்கள் பெயர் மோகன், பாவனாவா? நீங்கள் வருவீர்கள் என்று அம்மா சொன்னார்கள்” என்றாள். அவர்களுக்கு அந்தப் பெண் அவர்கள் பெயர் சொல்லி வரவேற்றது மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆசிரமத்தின் மீதிருந்த நம்பிக்கை கூடியது.  இன்று எப்படியும் வந்த வேலை முடிந்து விடும் எனத் தோன்றியது. அப்போது  ஒரு சின்னக் குழந்தையின்  அழுகைச் சத்தம் பக்கத்து அறையிலிருந்து வந்தது . அழக் கூட சக்தியில்லாத மாதிரி தீனமாகக் கேட்டது. அந்த அம்மா பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டார்.  சாந்தமான  முகம், நரைத்த  தலை, மூக்குக் கண்ணாடியுடன் பார்த்தவுடனே எழுந்து வணங்கும்  தோற்றத்துடன் இருந்தார்.

    இவர்கள் எழுந்து வணங்கினார்கள். இதற்குள் முதலில் பார்த்த இளம்பெண் கண்ணாடி டம்ளர்களில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.  குளிர்ச்சியான மோர் இதமாக இருந்தது. குடித்து முடித்தவுடன் அந்த அம்மாள் “உங்களுக்கு இந்தக் குழந்தை கண்டிப்பாகப் பிடிக்கும்.  நீங்க வந்துட்டுப் போனதிலிருந்து இந்த அருமையான ஜோடிக்கு ஏற்ற மாதிரி குழந்தை கிடைக்கணுமேன்னு பிரார்த்தனை பண்ணினேன்.  இந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் இது உங்க குழந்தை மாதிரியே தோணித்து. வந்து பாருங்க” என்று சொல்லிக் கூட்டிப் போனார். இவர்கள் அடுத்த அறையைக் கடக்கும் போது தன்னிச்சையாகச் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சம்  கறுப்பான நோஞ்சான் குழந்தை படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டிர்ந்தது. அந்த இளம்பெண் ஒரு பொம்மையைக் காட்டி அந்தக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். குழந்தையின் கண்கள் நட்சத்திரம் மாதிரி ஜொலித்தது.  அதன் உயிரே அந்தக் கண்களில் தான் இருப்பது போலத் தோன்றியது.

    அந்த அறையைக் கடந்து விட்டார்கள். மூன்றாவது அறைக்குள் அந்த அம்மா நுழைந்தார். இவர்களும் பின்னால் போனார்கள். அங்கே தொட்டிலில் கிடந்த குழந்தை கொள்ளை அழகுடன் பூக்குவியலைத் தொட்டிலில் பரத்தி வைத்தது போல் தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையை விட்டுக் கண்களை நகற்றவே முடியவில்லை. ரோஜாப்பூ நிறத்தில் கருகருவெனத் தலைமுடியுடன் குட்டி தேவதை  போல இருந்தது. அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும்  போல் இருந்தது. தூக்கத்தில் என்ன கனவு கண்டதோ சிரித்தது. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்தது. அந்த அம்மா “இந்தக் குழந்தையைப் பார்த்தால் எல்லாரும் உங்கள் குழந்தை என்று தான் செல்வார்கள்” என்று சொன்னார். இவர்களுக்கும் அது சரிதான் எனத் தோன்றியது.

    அந்த நேரத்தில் முதல்  அறையிலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது. இவர்களால் ஆவலைக் கட்டுப்படுத்த  முடியவில்லை. பாவனா தான் முதலில் வேகமாய்ப் போனாள். அந்தப் பெண் குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்க ஆரம்பித்தாள். குழந்தை வேக வேகமாய்க் குடித்தது.  அவசரமாய்க் குடித்ததில் புரையேறி விட்டது. பாவனா தன்னிச்சையாக நெஞ்சை நீவி விட்டாள். எலும்புக் கூட்டைத் தொட்ட மாதிரி இருந்தது. அதையும் தாண்டி அவள் உடல் சிலிர்த்தது.  அவள் கணவனைப் பார்த்தாள். அவள் பார்வை ஏதோ சொல்வது புரிய என்ன எனக் கண்களால் கேட்டான். அவள் “கொஞ்சம் வரீங்களா?” என்று வாசல் நோக்கி நடந்தாள். அந்த அம்மாள் எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    வெளியில் வந்ததும் “நான் ஒண்ணு சொல்றேன், கேப்பீங்களா?” என்றாள். “நீ நினைக்கிறது எனக்குக் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு” என்று சொன்னான். “இல்லை இந்தக் குழந்தையைப் பார்த்தால் பாவமா இருக்கு. அத்தோட அது மேல ஒரு இனம் புரியாத பாசம் வருது.  முதலில் பார்த்த  குழந்தை தேவதை மாதிரி இருக்கு, எல்லோருக்கும் பிடிக்கும். அடுத்து யார் வந்தாலும் கண்டிப்பாக  அந்தக் குழந்தையைத் தான் கேட்பார்கள். இந்தக் குழந்தையைப் பார்ப்பவர்கள் தத்தெடுக்கத் தயங்குவார்கள். இந்தக் குழந்தையை நாம் நல்லா வளர்த்தா இதுவும்  அருமையா வளரும். அதன் கண்களைப் பார்த்தாலே ஒரு மின்னல் இருக்கு. நாம இந்தக் குழந்தையைத் தத்தெடுக்கலாமா?” என்று கெஞ்சலாய்க் கேட்டாள்.

    அவன் “நீ சொல்றது சரிதான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் உங்க குழந்தை மாதிரி இல்லையேன்னு கேப்பாங்க.  உங்கம்மா, எங்கம்மா எல்லாம் கூட இத ஒத்துக்க மாட்டாங்க. நம்மால் எல்லாரையும் சமாளிக்க  முடியுமா?”ன்னு கேட்டான்.  அதற்கு அவள் “நீங்க மட்டும் சம்மதிச்சாப் போதும். மத்தவங்கள நான் சமாளிச்சுக்கறேன். நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணினால் போதும்” என்றாள். அவனுக்கும் அவள் சொன்னது சரியெனப்பட்டது.

    அந்த அம்மாளிடம் போய்ச் சொன்னார்கள்.  அவர்கள் பிரமித்துப் போய்ப் பார்த்தார். இவ்வளவு நல்லவங்க இந்தக் குழந்தையைக் கண்டிப்பா நல்லாப் பாத்துப்பாங்க. இந்தக் குழந்தை இவர்கள் கண்ணில் பட்டது அதன் அதிர்ஷ்டம் என நினைத்தார். திரும்பவும் வந்து அந்தக் குழந்தையைப் பார்த்தார்கள். பால் சாப்பிட்ட நிம்மதியோ ஒரு நல்ல அம்மா அப்பா கிடைத்த சந்தோஷமோ அது நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் அந்தக் குட்டி லட்சுமி இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டாள்.  அந்த குட்டிக்கு அர்ச்சனா எனப் பெயர் வைத்தார்கள். அச்சுக் குட்டி மேல் அதிருப்தியாய் இருந்த பாட்டிகளையும் ஒரு சில மாதங்களில் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் கவர்ந்து விட்டாள். பாவனாவின் கவனிப்பாலும் அப்பாவின் அரவணைப்பிலும் அச்சுக் குட்டி கொழு கொழு குழந்தையாகி விட்டாள். நிறமும்  கொஞ்சம் கூடி விட்டது.

    ஆசிரமத்துக்குக் குழந்தையைக்  கூட்டிப் போன போது அந்த அம்மாவால் நம்பவே முடியவில்லை . அந்தக் குழந்தையா இது என ஆச்சரியப்பட்டார்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தைப் பொறுத்து ஜொலிப்பார்கள் போல என வியந்தார். இவர்கள் முதலில் பார்த்த அழகான குட்டி தேவதையும் மற்றொரு வீட்டிற்கு மகளாய்ப் போன செய்தி கேள்விப்பட்டு நிம்மதியானார்கள். அச்சுக் குட்டி அழகாய்ச் சிரித்தாள்.

    Share
  • தீபாவளிப் புறப்பாடு (சிறுகதை)

    தீபாவளிப் புறப்பாடு (சிறுகதை)

    வசுராஜ்

    “இன்னிக்குக் காலையில நரி முகத்துல முழிச்சேனா? இல்லையே எப்போதும் போல் எனதருமை மனைவி பிரேமா முகத்துல தான முழிச்சேன்? காலையில சுடச்சுட ஸ்டிராங் காபி கைக்கு வந்தது.

    எப்போதும் “போட்டு வைச்சா எடுத்துக் குடிக்கக் கூடத் தெரியாதா? மகாராஜாவுக்குக் கைல கொண்டு கொடுக்கணுமா?” என்ற கேள்வி வரும். மேசையில் உள்ள காபிக் கப்பை கிரிக்கெட்ல  ஜெயிச்சுக்  கிடைச்ச கோப்பையை  எடுப்பது போல் பவ்யமாக எடுத்து வந்து பால்கனியில் உட்கார்ந்து குடிப்பேன். சூடு குறைவாக  இருக்கும் அல்லது சர்க்கரை அதிகமாக இருக்கும். இன்னிக்கு எல்லாம் மிகச் சரியாய் இருந்ததுடன்  கைக்கே வந்துவிட்டது. உள்ளுக்குள் அலாரம் அடித்தது  ‘ஏதோ பெரிய செலவு வரப் போகிறது.’  சரி, நல்ல காபியை ரசித்துக் குடிப்போம்’ எனக் குடித்து முடித்தேன்.

    “வெந்நீர் போட்டிருக்கேன், குளிச்சுட்டு வரீங்களா?” என் மனைவி.

    எட்டி வானத்தைப் பார்த்தேன். மேகமெல்லாம் இல்லை. குளிச்சுட்டு சுவாமி கும்பிட்டுவிட்டு வந்தால் மேசையில் சுடச்சுடப் பொங்கல், கொத்சு.  சந்தேகமே இல்லை, ஏதோ ஒரு மர்மம் இருக்கு. சாப்பிட உட்கார்ந்தேன்.

    “பிரமாதம், இன்னிக்கு என்ன விசேஷம்? இதைப் பண்ணின கைக்கு வளையல் தான் போடணும்”.

    அடுத்த நிமிஷம் “அடடா ஓட்ட வாய் ராமநாதா” என்று எனக்குள் திட்டினேன்.

    அவளைப் பார்த்தேன். மோகனப் புன்னகை.

    “இன்னிக்கு தீபாவளிக்குப் பொருள் வாங்க, தி.நகருக்குப் போகலாமா?” ஆர்வமாய்க் கேட்டாள்.       

    “ராமநாதா (நான்தான்) இதை இதைத் தான எதிர்பார்த்த?”  எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

    “இந்தக் கொரோனா காலத்துல  தி.நகருக்குப் போய்த்தான் வாங்கணுமா? ஆன்லைன்ல பார்க்கலாமே” என்றேன்.

    “நேர போய்ப் பார்த்து தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் திருப்தியாய் இருக்கும். இவ்வளவு நாள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாச்சு.  இப்ப தீபாவளிக்காவது  நேரில் போய் வாங்கலாம். தீபாவளி நெருங்க நெருங்கக் கூட்டம் அதிகமாயிடும். இன்னிக்கு என்னோட ராசிக்கு நாள் நல்லா இருக்காம்.  டிவியில சொன்னாங்க” என்றாள்.

    “என்னோட ராசிக்கு இன்னிக்கு சந்திராஷ்டமம்னு சொல்லி இருப்பாங்களோ” என மனத்தில் நினைத்துக்கொண்டேன். சாப்பிட்ட பொங்கல், தொண்டை வரை இருந்ததால் செஞ்சோற்றுக் கடன் கருதி “சரி போகலாம்” எனத் தலையாட்டினேன்.

    அடுத்த  15 நிமிடத்தில் பிங்க் புடவை, பிங்க் மாஸ்க்குடன் தயாராகி நின்றாள்.

    “இவங்களை நம்பி எத்தனை பேருக்குப்  பிழைப்பு நடக்குது, நம்ம பிழைப்பு தான் தலையாட்டி பொம்மையாகி விட்டது” நானும் கிளம்பி காரை எடுத்தேன்.

    சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது, கொரானாவுக்குத் தடுப்பு மருந்து தயாராகி விட்டதோ எனச் சந்தேகம் வந்தது.  ஒரு வழியாக வந்து சேர்ந்து,  மனைவியைத் துணிக் கடையில்  இறக்கி விட்டுவிட்டு, பனகல் பார்க் பக்கம் காரை நிறுத்திவிட்டு அந்தக் கடைக்குப் போனேன். பட்டுப் புடவைப்  பக்கம் தான் இருப்பாள் என்ற உறுதியான  நம்பிக்கையுடன் அந்தப் பக்கம் போனேன். நல்ல கூட்டம். தள்ளி பிங்க் புடவை, பிங்க் மாஸ்கில் தெரிந்தாள்.

    பக்கத்தில் போனால் இதை எடுக்கவா,  அதை எடுக்கவா அல்லது ரெண்டையும் எடுக்கவா எனக் கேட்பாள்.  நம்ம நாக்குல தான் சனி பகவான் குடி கொண்டிருக்காரே,  தாராளமாய் எடுத்துக்கோயேன்னு சொல்லிடுவோம். அவளாவே  எடுத்தால் ஒரு புடவையோட  நிறுத்த சான்ஸ் இருக்கு. இந்தக் கூட்டத்தில் யாரும், விளம்பரத்தில் திரும்பத் திரும்பச் சொல்லும் போதுமான இடைவெளி கடைப்பிடிக்கவில்லை. இங்கேயே உட்கார்ந்துக்கலாம்  எனக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன்.

    என்னைப் போலவே அப்பாவிக் கணவன்மார்கள் உட்கார்ந்திருந்தார்கள். என் மனைவி என்னைப் பார்த்துவிட்டாள். நான் எடுத்தாச்சான்னு சைகையில் கேட்டேன். அவள் பக்கத்தில் நிற்பவரைப் பார்த்தாள். அட, அந்த மீசைக்காரன் எதுக்கு என் பெண்டாட்டிக்கு இவ்வளவு பக்கத்தில் நிக்கறான்? விவஸ்தை இல்லாதவன் என மனத்துக்குள் திட்டினேன். பக்கத்தில் போகலாமா  என யோசித்தேன். வழி எங்கும் கூட்டம். இவர்களைக் கடந்து போகணுமே! அதிலும் சிலர் மாஸ்க்கை இறக்கிவிட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.  என் மனைவி தைரியசாலி. அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். திரும்பவும் முடிச்சாச்சா எனச் சைகையில் கேட்டேன். அவள் பக்கத்தில் இருப்பவரிடம் என்னைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னாள். “எங்க வீட்டுக்காரர்  அங்க தான் நிக்கறார். ஜாக்கிரதை, தள்ளி நில்லுன்னு  சொல்லியிருப்பா. நாமதான் வீரனாச்சே“ எனக் கொஞ்சமாக இருந்த மீசையை முறுக்கிக்கொண்டேன்.

    “என்னங்க, இங்க எதுவும் சரிப்படலை. போகலாமா?” என் பக்கத்தில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி, அதே பிங்க் புடவை, பிங்க் மாஸ்க். “அடப்பாவி,  அது யாரு?ன்னு வடிவேலு ஸ்டைலில் மனத்துக்குள் கேட்டுக்கொண்டேன். அந்த பிங்க் புடவை, பிங்க் மாஸ்க் பக்கத்தில் உள்ளவர் என்னை நோக்கி வருவது போல் தெரிந்தது. “வா, சீக்கிரம் போகலாம். இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் எனக்குக் கொரானா வந்துடும் போல இருக்குன்னு மளமளவென வெளியேறினேன்.

    வெளியே வந்ததும் “புடவை ஆன்லைன்ல  வாங்கிக்கலாம். வளையல் வாங்கணும்னு சொன்னயே, வேணா வாங்கிக்கோ!” என்றேன். நான்தான் சொன்னேனே  சனி பகவான் என் நாக்குல இருக்கார்னு.

    என் மனைவி “நீங்க நிஜமாவே தெய்வம்க” என்றாள்.

    “கடவுளே! வளையல் கடையில எதுவும் இவளுக்குப் பிடிக்காமப் போகணும். அந்த மீசைக்காரர் வராம இருக்கணும்” என வேண்டிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தேன்.

    Share
  • கொல்லாமை (சிறுகதை)

    கொல்லாமை (சிறுகதை)

    வசுராஜ்

    இன்று பல்வலி அதிகமாக இருந்ததால் பல் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தேன்.

    கொரானா பயத்தால் வெளியே செல்ல பயந்து ஒத்திப் போட்டதால் பல்வலி அதிகமாகி இன்றுபோய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் காலை 11 மணிக்கு கிளினிக் வர சொல்லி இருந்தார்கள்.

    என் கணவர்  மாஸ்க் போட்டுக்கொண்டு தயாராக நின்றார். நான் எளிமையான சமையல் செய்து மேசை மேல் வைத்து விட்டுக் கைப்பையுடன் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு வருவதற்குள் என் கணவர் காரைச் சரிபார்க்கக் கீழே போய்விட்டார். ரொம்ப நாளாக எடுக்காததால் பெட்ரோல் எல்லாம் இருக்க வேண்டுமே என நினைத்துக்கொண்டு கீழே இறங்கினால் எங்கள் காரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

    பதற்றத்துடன் பக்கத்தில் போனால் “கிட்டே போகாதே” இது என் கணவர்.

    எங்கள் குடியிருப்பில் என் தளத்திலேயே குடியிருக்கும் தோழியும் அவள் கணவரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். “என்ன ஆச்சு?” எனக் கேட்டேன். என்னோட பல் வேறு “சுருக் சுருக்” என வலித்தது.

    “உங்க காருக்கு அடியில ஒரு பாம்பு பார்த்தோம்” என்றாள்.

    பயத்தில் நான் பத்தடி தள்ளிப் போனேன். அதற்குள் செக்யூரிட்டி கம்புடன் வந்துவிட்டார்.

    அந்தத் தோழி அவரைப் பார்த்து “பாம்பையெல்லாம் அடிக்கக் கூடாது. உடனே “Forest Department”க்கு ஃபோன் பண்ணுங்கள்” என்றார். எனக்குப் பதற்றமாய் இருந்தது.

    இவங்க எப்ப ஃபோன் பண்ணி, அவங்க வர வரைக்கும் அது அங்கேயே உட்கார்ந்திருக்குமா? ஏதாவது பொந்துக்குள் போய்விட்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். குழந்தைகள் எல்லாம் இங்கே தான் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் எல்லாம் இங்கே தான் காலையும் மாலையும் நடக்கிறார்கள். விஷமுள்ள பாம்பாய் இருந்தால் என்ன செய்வது என யோசனையில் மூழ்கினேன்.

    பல் வலி கூட மறந்து விட்டது.

    செக்யூரிட்டி பரிதாபமாய்ப் பார்த்தார். பாவம் அவர் தானே ராத்திரி எல்லாம் சுற்றிச் சுற்றி வருகிறார்!

    மெதுவாக அந்தத் தோழியைப் பார்த்து “போன தடவை ஃபோன் பண்ணினோம். அவங்க வந்து பார்க்கும் போது ஒண்ணும் கண்ணுல மாட்ட மாட்டேங்குது. அப்புறம் நாங்க ராத்திரி சுற்றி வரும் போது கண்ணுல படுது. சில நேரம் அடிச்சுடுவோம். பல தடவை தப்பிச்சுடுது” என்றார்.

    அதற்கு அந்தப் பெண் “நீங்களே பாம்பு பிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். பிடித்து வைத்திருந்து Forest Department ஆள் வந்ததும் அவங்க கிட்ட கொடுத்து விடுங்கள்” என்றார்.

    எனக்கு எங்கள் செக்யூரிட்டியின் மைன்ட் வாய்ஸ் கேட்டது. “நீங்க கொடுக்கற சம்பளத்துக்கு 12 மணி நேரம் காவல் காக்கறேன். இதுல பாம்பு பிடிக்க வேற கத்துக்கணுமா?”

    அதற்குள் அது மெதுவாக வெளியே வந்தது.

    இதற்குள் இன்னும் நாலைந்து பேர் கூடி விட்டனர். அதில் ஒருவர் “இதைப் பார்த்தா விஷமுள்ளது மாதிரி தெரியுது, அடிச்சுடுவோம்” என்றார்.

    அந்தத் தோழி விடுவதாயில்லை. “இல்லை, நான் ஃபோன் பண்றேன், கொல்லாதீங்க!” என்றார்.

    நான் பிரமிப்பாய் அவரைப் பார்த்தேன். ஜீவகாருண்யம் என்பது இது தானோ, நானும் இரக்கப்படுபவள் தான் என்றாலும் பாம்பை வைத்துப் பாதுகாக்கச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு இரக்கம் எல்லாம் என்னிடம் கிடையாது.

    இதற்குள் அப்போது தான் வந்த ஒருவர், பட்டென அதன் தலையில் அடித்துவிட்டார். உடனே இன்னும் 2 பேர் அடித்து விட்டார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. திரும்பப் பல் வலிக்க ஆரம்பித்து விட்டது. கடவுளே அந்தப் பாம்புக்கு மோட்சத்தைக் கொடு என வேண்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். அந்தத் தோழி செக்யூரிட்டியைத் திட்டிக் கொண்டிருந்தார்.

    மருத்துவரிடம் போய் விட்டு வந்து விட்டோம்.

    மாலை அந்தத் தோழி வீடு பூட்டி இருந்ததைப் பார்த்து விட்டு அவருக்கு ஆறுதலாக 2 வார்த்தை பேசலாமென ஃபோன் பண்ணினேன்.

    அவர்களிடம் “உங்களுக்குத் தான் எவ்வளவு இளகிய மனசு. வருத்தப் படாதீர்கள். இதுக்கு எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு பண்ணலாம். ஆமாம், வீடு பூட்டி இருக்கே எங்கே போயிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

    “ஆமாம் மேடம், அவர்கள் பாம்பை அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லி விட்டு உடன் உற்சாகமாக “இங்கே தாம்பரத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். இன்னிக்கு அம்மா எனக்காக ஸ்பெஷல் சமையல் பண்ணி இருந்தாங்க. அதை சாப்பிட்டப்புறம் செம குஷி ஆயிட்டேன்” என்றார்.

    “அப்படியா? என்ன சமையல்”னு அப்பாவியாய்க் கேட்டேன்.

    “இந்தக் கொரானா நேரத்துல வெளில வாங்க வேண்டாம்னு வீட்டுல வளர்த்த நாட்டுக் கோழி குழம்பு, மட்டன் (அதுவும் வீட்டுல வளர்த்தது தான்) எல்லாம் செஞ்சுருந்தாங்க. செம கட்டு கட்டிட்டேன்”என்றாள்.

    எனக்குத் தலை சுற்றியது.

    இது தான் ஜீவகாருண்யமா? “ஒண்ணுமே புரியல உலகத்திலே”. சந்திரபாபு பாட்டு தான் நினைவுக்கு வந்தது.

    Share
  • நடை (சிறுகதை)

    நடை (சிறுகதை)

    வசுராஜ்

    மொட்டை மாடியில் நடக்க ஆரம்பித்தேன். மாலை வானம் எஸ்.பி.பி. அவர்களை நினைவுபடுத்தும் “வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்” தந்து கொண்டு தானிருக்கு. என்ன நிறங்கள்!

    இந்த நிறங்களுக்கு இறைவன் எதைக் கொண்டு வண்ணம் சேர்க்கிறான்? எந்தத் தூரிகையால் தீட்டுகிறான்? அட எனக்கே கவிதை வரும் போல் இருந்தது. தலைக்குப் பக்கத்தில் விமானம் தரையிறங்கத் தாழ்ந்து பறந்தது. (விமான நிலையம் வெகு அருகே) எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி. விமானம் தரையிறங்குவது ஒரு ராட்சசக் கழுகு மிக லாகவமாகத் தரையைத் தொடுவது போல இருக்கும். விமானம் கண்ணை விட்டு அகன்றதும் கீழே எட்டிப் பார்த்தேன்.

    எதிரில் சின்னச் சின்னத் தகரத் தடுப்புகள். பக்கத்தில் உள்ள அடுக்குமாடிப் பணியாளர்களின் தங்குமிடம் புறாக் கூண்டுகள் போலிருந்தது. வேலை நேரம் முடிந்து வட மாநிலப் பசங்க வந்து கொண்டிருந்தார்கள். ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாய் வந்தார்கள். பாவம் வாழ்க்கையின் கஷ்டங்களைச் சிரித்தே தாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள் போலும். நான் நடக்க ஆரம்பித்தேன். பக்கத்து வீட்டுக் குழந்தை சிரித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கான்னு  நடந்து கொண்டிருந்தது. பாட்டி, குழந்தை கூட ஓடிக்கொண்டிருந்தாள்.

    இந்தக் கொரானா காலத்தில் எல்லா மொட்டை மாடியிலும் தலைகள். எல்லாருக்கும் வெளிக் காற்றை சுவாசிக்க ஆசை. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்க ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடுவான். நண்பா, காலையில் பார்க்கலாம் என்று மனத்துக்குள் விடை கொடுத்தேன். சீருடைப் பள்ளிக் குழந்தைகள் போல் காகங்கள் வரிசையாக நின்றபடி ஒன்றுக்கொன்று ஏதோ பேசிக்கொண்டன. உற்றுக் கேட்டேன்.

    “என்ன இன்னிக்கு நல்லா சாப்பாடு கிடைச்சுதா மகனே?”

    அம்மா. இன்னிக்கு 4ஆவது மாடி பாய் வீட்டு பிரியாணி சூப்பரா இருந்தது. நான் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். நீ வரவேயில்லை. அதுனால நானும் நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணும் சாப்பிட்டோம்” என்றது.

    அம்மா காக்கா “எனக்குத் தெரியுண்டா, உனக்கு அவ மேல ஒரு கண். என்னைக் கூப்பிட்டெல்லாம் இருக்க மாட்ட. அவளப் பார்த்தா தான் உனக்குத்  தலகால் புரியாதே. நான் 2ஆவது மாடி மாமி வீட்டுத் தயிர் சாதம் சாப்பிட்டேன்” என்றது.

    இன்னொரு பெரிய காக்கா வந்து “எல்லாரும் வந்தாச்சா? அவங்க அவங்க வீட்டுக்குப் போகலாமா”ன்னு கேட்டது. அது தான் கூட்டத்துக்குத் தலைவர் போல.

    நம்ம பிரியாணிக் காக்கா மெதுவாக “எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு வரலை”ன்னு சொல்லிச்சு. அம்மா காக்கா, ஒற்றைக் கண்ணால் முறைத்தது. பையனுக்குக் கண்ணுல புது ஒளி. தோழி வந்துவிட்டாள். “எல்லாரும் வந்தாச்சு” உற்சாகமாய்ச் சொன்னது. தனித் தனி பேட்ச்சா கிளம்பிப் போச்சு எல்லாம்.

    ஐ. எனக்குக் காக்கா பாஷை புரியுது.   போன ஜென்மத்துல காக்காவாப் பொறந்திருப்பேனோ!

    கீழே எட்டிப் பார்த்தேன். சப்பாத்தி, உருளை மசாலா ரெடியாகிக் கொண்டிருந்தது. இன்னும் 15 நிமிடம் நடந்து விட்டுக் கீழே இறங்க வேண்டியது தான் என்று நினைத்தேன். கிழக்கே நிலாப் பெண் தகதகவெனப் புறப்பட ஆரம்பித்தாள். இயற்கை தான் என்ன அழகு. ஓ! இன்னிக்கு பௌர்ணமி. நிலாவுடன் பேசிக் கொண்டே கொஞ்ச நேரம் நடந்தேன். இப்போது கடற்கரையில் இருந்தால் நல்லா இருக்கும். இப்போ தான் பீச்சக் கூட பூட்டிட்டாங்களே!

    கீழே எட்டிப் பார்த்தேன். வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்களும் இருந்தார்கள். குடும்பத்தோடு வேலைக்கு வந்திருப்பார்களோ. பாவம் இதில் பெண்களும் எப்படித் தங்குகிறார்களோ.  பக்கத்தில் Movable toilet & bathroom இருக்கு. அதில் பெண்கள் குளிப்பார்களோ. ஆண்கள் எல்லாம் தெருவிலேயே தான் குளிப்பார்கள். அதில் ஒரு பையனும் பெண்ணும்  கண்ணால் பேசிக் கொள்வது போல் தெரிந்தது. தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் இருந்ததால் ஓரளவு தெரிந்தது.

    நம்ம பிரியாணிக் காக்கா மாதிரி தானா இவர்களும். நல்லா இருக்கட்டும் 2 ஜோடியும் என மனதிற்குள் வாழ்த்தினேன். மனுசனும் ஒரு விதத்தில் காக்கா தானோ, இல்லை,  அவற்றிடமிருந்து நாம் தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டுமோ? சப்பாத்தி பசியைத் தூண்டியது. போய் தோசை பண்ணலாம் என நினைத்துக் கொண்டே கீழிறங்கினேன்.

    Share