இழப்பு (சிறுகதை)

வசுராஜ்
நான் தான் ஜானகி. இந்தத் திண்ணையில் உட்கார்ந்து இரண்டு மாமாங்கம் ஆறது. இது திருச்சி பக்கத்திலுள்ள அழகான கிராமம். கல்யாணமானதிலிருந்து 30 வருஷம் இங்கு தானிருந்தேன். அப்புறம் பிள்ளைகளோடும் பெண்களோடும் இப்ப வரை இருந்துண்டிருக்கேன். ரொம்ப நாட்களுக்கப்புறம் குடும்பத்தோடு சொந்தக்காரா கல்யாணத்துக்கு இங்க வந்திருக்கோம். இரட்டை வரிசை வீடுகளும் கம்பீரமான கோபுரமும் மனதுக்கு இதமாய் இருக்கு. எல்லார் வீட்டு வாசலிலும் பெரிது பெரிதாய்க் கோலம். புள்ளி வைத்த கோலம், தாமரை இதழ்கள் விரியும் இழைக் கோலம், மணைக்கோலம் எனப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கு. கண் பார்வை தான் கொஞ்சம் மங்கிண்டு வருது. முன்னாடின்னா கோவில் வாசல்ல யாராவது வந்தால் கூட யாருன்னு கரெக்டாத் தெரியும். இப்ப நாலு ஆத்துக்கு முன்னாடி வந்தாத் தான் யாருன்னு தெரியறது.
பொண்ணோட பேரன் ஆதர்ஷ் பெங்களூரிலிருந்து வந்திருக்கான். குழந்தையோட அம்மா அதான் என் பேத்தி அவனுக்குச் சாப்பாடு ஊட்ட அவன் பின்னாலேயே ஓடிண்டிருக்கா. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதனால் அருமை தெரியலை. குழந்தைக்குன்னு தனியா வாட்டர் பாட்டில் வாங்கறா. அதையும் கொதிக்க வைச்சுக் குடுக்கறா. சாப்பிட புதுசு புதுசா ஏதேதோ குடுக்கறா. ஒரு பெரிய பெட்டி நிறைய குழந்தைக்கு மட்டுமே என்னென்னவோ எடுத்துண்டு வந்திருக்கா. எல்லாரும் ஒண்ணே ஒண்ணு பெத்துக்கறா. அதைப் பொத்திப் பொத்தி வளக்கறா. அதுல தப்பில்லையே. எங்க காலம் மாதிரிப் பெத்தது பாதியைப் பறி குடுக்கற நிலை இப்ப இல்லை.
நானும் 6 பெத்து அதுல இரண்டைப் பறி குடுத்தேன். முதல் பெண் நன்றாய் இருந்தாள். இரண்டாவது புள்ளை பிறக்கும் போதே ரொம்ப நோஞ்சானாகப் பிறந்து ஒரே வாரத்தில் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது. மத்ததெல்லாம் பார்க்க என்னைப் போல் சுமாராய் இருந்தாலும் ஆரோக்கியமாய் இருந்தது. அந்தக் கடைசிப் புள்ளை தாசரதி தான் கொள்ளை அழகு. கிட்டத்தட்ட இந்தக் கொள்ளுப்பேரன் ஆதர்ஷ் மாதிரி இருப்பான். பிறந்த போது கிருஷ்ண விக்ரகம் மாதிரி இருந்தான். கொழு கொழுன்னு தான் 10 மாசம் வரை இருந்தான். யார் கண் பட்டுதோ திடீர்னு ஒரு காய்ச்சல் வந்தது. பக்கத்து டவுண் திருச்சில உள்ள அரசாங்க ஆஸ்பத்தரில கொண்டு போய்க் காட்டினோம். அங்க குழந்தையை அட்மிட் பண்ணச் சொல்லிட்டா. குழந்தை கூட ஒருத்தர் தான் இருக்க முடியும்கறதால நான் மட்டும் இருந்தேன். இவர் ஆத்துக்கும் ஆஸ்புத்தரிக்கும் அலைஞ்சுண்டிருந்தார். மத்த குழந்தைகளை எச்சுமு அம்மங்கா தான் பாத்துண்டிருந்தா.
குழந்தைக்குக் காய்ச்சல் முதல்ல அனலா அடிச்சது. அப்புறம் 2 நாள்ல கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது. ரொம்ப பலகீனமாக இருந்ததால டிரிப்ஸ் ஏத்தினா. அரசாங்க ஆஸ்பத்திரி என்பதால டாக்டருக்குப் படிக்கறவா கூட வந்து வந்து பார்ப்பா. எல்லாருக்கும் குழந்தையை ரொம்ப பிடிச்சுப் போயிட்டதால தினமும் வந்து பார்த்துட்டுப் போவா. குழந்தையைக் கொஞ்சுவா. துவண்டு போன குழந்தை அவாளைப் பார்த்து சிரிச்சான். குழந்தை சிரிக்க ஆரம்பிச்சதும் எங்களுக்கும் நம்பிக்கை வந்துடுத்து. “இந்த டிரிப்ஸ் முடிஞ்சதும் இதோட நிறுத்திடலாம். இனிமேல் கஞ்சி குடுக்கலாம்”னு நர்ஸ் சொன்னா. அதை சொல்ல மறந்துட்டேனே, குழந்தைக்குக் காய்ச்சலோட வயித்துப்போக்கும் இருந்தது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சுண்டு வந்தது. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டா.
அதுனால இவர் ஆத்துக்குப் போயிட்டுக் காலையில குழந்தைக்கும் எனக்கும் உடுத்திக்கத் துணியும் பணமும் எடுத்துண்டு வரேன்னு இந்தக் கிராமத்துக்கு வந்தார். இந்தக் கிராமத்துல தான் அப்ப நாங்க இருந்தோம். நான் மறுநாள் ஊருக்குப் போகப் போறோம்னு பக்கத்து பெட் மாமி கிட்ட சொல்லிண்டிருந்தேன். அவா பெண்ணுக்குக் கீழ விழுந்து தலையில அடிபட்டு அவாளும் 10 நாளா ஆஸ்பத்திரில இருந்தா. பாவம் பொண்ணு பொழைச்சதே பெருசு என்றார்கள். அவாத்து மாமா தான் எங்களுக்கு நல்ல உதவியாய் இருந்தார். அந்தக் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகணும்னு வேண்டிண்டேன். அந்த மாமி “நீங்க இருந்தது எனக்கு எங்க அக்கா கூட இருக்கற மாதிரி இருந்தது. நீங்க போயிட்டா எனக்குக் கஷ்டமாய் இருக்கும். உங்க குழந்தைக்கு சரியாகி ஆத்துக்குப் போயிட்டா நல்லது தானே” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, “அய்யோ குழந்தை!” எனக் கத்தினாள். நான் அவா பொண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தால் என் குழந்தைக்குக் கையும் காலும் உதறிக் கொண்டிருந்தது. ஓடிப் போய் நர்சைக் கூப்பிட்டாள் அந்த மாமி. நான் குழந்தையை அழுத்திப் பிடிச்சுண்டே “தாசரதி தாசரதி” எனக் கூப்பிட்டுப் பார்த்தேன். குழந்தை முழியே வித்தியாசமாய் இருந்தது.
நர்ஸ் வந்து டிரிப்ஸை நிறுத்தினாள். அப்ப இருந்த டாக்டர் வந்தார். அவரைப் பார்த்தால் படிச்சுண்டிருப்பவர் போல இருந்தது. அவர் நர்ஸ் கிட்ட ஜன்னி வந்திருக்கு என ஏதோ மெதுவாய் சொல்லிண்டிருந்தார். நான் எல்லாத் தெய்வங்களையும் கெஞ்சிண்டிருந்தேன் 10 நிமிஷம் என்னென்னவோ பண்ணிப் பார்த்தார். எந்தத் தெய்வத்துக்கும் நான் கேட்டது காதுல விழலை போல. குழந்தையின் அசைவு கொஞ்சம் கொஞ்சமாய் நின்றுவிட்டது. டாக்டர் “என்னால எதுவும் பண்ண முடியலை. எனக்கே ரொம்பக் கஷ்டமாயிருக்கு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். நர்ஸ் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். எனக்குக் கொஞ்ச நேரம் உலகமே நின்னுட்ட மாதிரி இருந்தது.
“கடவுளே! எனக்குத் தைரியத்தைக் கொடு. அவன் உயிரைத்தான் கொடுக்கல” என்று வேண்டிக்கொண்டேன். அடுத்தது என்ன பண்ணணும்னு யோசிச்சேன். எப்படியும் உடனே ஊருக்குப் போயிடணும்னு முடிவு பண்ணினேன். பக்கத்து பெட் மாமாவும் மாமியும் குழந்தையைப் பார்த்து அழுது கொண்டிருந்தார்கள். நான் மாமா கிட்ட “ஒரு டாக்ஸி பிடிச்சுண்டு வர முடியுமா?” ன்னு கேட்டேன். அப்பெல்லாம் இந்த மாதிரி ஆம்புலன்ஸ் வசதி இருந்த மாதிரித் தெரியலை. ஏற்கெனவே இந்த மாதிரி ஒருத்தர் முந்தின நாள் செத்துப் போன போது ஆஸ்பத்திரில எதுவும் ஏற்பாடு பண்ண மாட்டோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவரிடம் டாக்ஸி பத்திக் கேட்டேன் அவர் தயங்கினார். செத்துப் போன குழந்தையை எப்படி டாக்ஸியில் ஏத்துவான்னு யோசிச்சார் போல. நான் சொன்னேன், “குழந்தை உயிரோட இல்லைன்னு டாக்ஸிக்காரர் கிட்ட சொல்லாதீங்கோ. நான் குழந்தை தூங்கற மாதிரி வைச்சுக்கறேன்”னு சொன்னேன். அவர் பிரமித்துப் போய்ப் பார்த்தார். மாமி தான் உடனே சுதாரிச்சுண்டு “டாக்ஸி பிடிச்சுண்டு வந்துட்டு நீங்களும் கூடப் போயிட்டு வாங்கோ”ன்னு சொன்னா. மாமா போய் டாக்ஸி கொண்டு வந்துட்டார். நான் இறுக்கமான முகத்துடன் குழந்தையுடன் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். மாமா முன்னாடி உட்கார்ந்து கொண்டார். டிரைவர் சின்னப் பையனாய்த் தெரிந்தான்.
“என்னம்மா, குழந்தைக்கு?” ன்னு கேட்டான். மாமா “ஜுரம். இப்ப பரவாயில்லை. மருந்து கொடுத்தது நன்னாத் தூங்கறான்” னு சொன்னார். “தூங்கறான்”னு சொல்லும் போது அவர் குரல் தழுதழுத்தது. குழந்தை மடியில் சில்லென்று இருந்தான். நான் கண்ணை மூடிக்கொண்டு “தெய்வமே! இந்தக் குழந்தையை எனக்குக் கொடுக்காமல் இருந்திருக்கலாம்” என்று மருகிக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அழகான குழந்தை, எனக்குக் கொடுத்தது தப்புன்னு நினைச்சயா? மத்த குழந்தைகள் மாதிரி இதுவும் சுமாராய் இருந்தால் என்னிடம் இருந்திருக்குமோ?” என நினைத்துக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டேன். டிரைவர் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். மாமாவும் கேட்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். ½ மணி நேரப் பயணம் மிக நீண்டதாகத் தெரிந்தது.
வீட்டு வாசலுக்கு வந்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. குழந்தை கனத்த மாதிரி இருந்தது. மாமா போய்க் கதவைத் தட்டினார். நான் குழந்தையுடன் இறங்கினேன். எங்க ஆத்துக்காரர் வந்து கதவைத் திறந்ததும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது அழுகையாய் வெடித்தது. என்னால் அதற்கு மேல் அடக்கவே முடியவில்லை. கதறிவிட்டேன். என் அழுகைச் சத்தம் கேட்டு எதிர்த்தாத்து மாமி, பக்கத்து ஆத்து பானு எல்லாரும் வந்துட்டா. அழுகையோடே டிரைவருக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன். அம்மங்கா வந்து பார்த்து விட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள். என் ஆத்துக்காரர் பித்துப் பிடிச்சாப்புல நின்னுண்டிருந்தார். அவருக்கு நடப்பதெல்லாம் நிஜமா, கனவான்னு தெரியலை.
அம்மங்கா வந்து பணம் கொடுத்தாள். டிரைவர் கண் கலங்க நின்றார். கூட வந்த மாமா, என் ஆத்துக்காரரிடம் “மாமா, பகவான் கருணையே இல்லாமல் குழந்தையை எடுத்துண்டுட்டார். மாமி இடிதாங்கி மாதிரி உக்காண்டு வந்தா” என்றார் அழுதுகொண்டே. என் ஆத்துக்காரர் அப்போது தான் உணர்வு வந்தவராய்க் குழந்தையை வாங்கி நெஞ்சோடு சேர்த்துண்டு அழ ஆரம்பிச்சார். டிரைவரிடம் “மன்னிச்சுடுப்பா. எனக்கு வேற வழி தெரியலை” என்றேன் அழுதுண்டே. அவன் சொன்னான் “இந்தக் குழந்தையைப் பார்த்தால் தெய்வக் குழந்தை மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் துக்கத்தை அடக்கிட்டு வந்த உங்களைப் பார்த்தால் தெய்வத்தைப் பார்த்த மாதிரி இருக்கு. உங்க கிட்டக் காசு வாங்கக் கூடாது. பெட்ரோலுக்கு மட்டும் வாங்கிக்கறேன்” என்று சொல்லி மீதியை வைத்துவிட்டுப் போனான். மாமாவும் அழுதுகொண்டே கிளம்பினார்.
அப்புறம் ஊரே வந்து அழுதுவிட்டுப் போனது. அவனைத் தூக்கிண்டு போகும் போது எங்கள் குடும்பத்தின் கதறல் அந்த எமனுக்கே கேட்டிருக்கும். நாளாக ஆக, இந்தக் குழந்தைகளையாவது ஆயுசோட வைத்திரு என்று பிரார்த்தனை பண்ணினேன். பகவானும் இரக்கப்பட்டு இப்போது வரை என் குழந்தைகள், பேரன், பேத்தி எல்லாரையும் நன்னா வச்சிருக்கான். பேத்தியின் குழந்தை முக ஜாடை என் தாசரதி மாதிரி இருக்கறதால இன்னிக்குப் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து உங்க கிட்ட புலம்பிட்டேன். எல்லாரும் ஷேமமா இருக்கப் பெருமாளைப் பிரார்த்திச்சுக்கறேன்.
ஆதர்ஷ் ஓடி வந்து மடியில் உட்கார்ந்தான். “தாசரதி” என அணைத்துக்கொண்டேன்.