தெய்வக் குழந்தை (சிறுகதை)

0

வசுராஜ்

பாவனா மிக்சியில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். குக்கரில் இட்லி வெந்து விட்டது போல. தொடர்ந்து வந்த ஆவியுடன் இட்லி வெந்து விட்ட வாசனையும் வந்தது. அடுப்பை சிம் பண்ணின விட்டு அடுத்த அடுப்பில் சட்னிக்குத் தாளித்தாள். ஹாலில் ஊதுபத்தி மணத்துடன் கந்த சஷ்டிக் கவசம் கணீரென ஒலித்தது.

அது முடிந்ததும் மணிச்சத்தம் கேட்டது. இட்லியை ஹாட் பேக்கில் வைத்து விட்டு அவளும் ஹாலுக்கு வந்து தீபாராதனையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.  கணவனைப் பார்த்தாள்.  காதோரம் நரைக்க ஆரம்பித்திருந்தது. அவன் முகத்திலும் பதட்டம் தெரிந்தது. “கடவுளே! இன்று எல்லாம் நல்லபடியாக  முடியணும்” என வேண்டிக் கொண்டாள்.  அவளறியாமல் கண்ணீர் வழிந்தது. இரண்டு பேர் மனதிலும் பரபரப்பு. ஒருவருக்கொருவர் அதனை முகத்தில் காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிர்ந்தார்கள்.

அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். எளிய அலங்காரத்துடன் கிளம்பினார்கள். முதலில் மோகன் கிளம்பிக் காரை சரி பார்த்தான். பெட்ரோல் அரை டாங்குக்கு மேல் இருந்தது.  பாவனா புது விருந்தினரை வரவேற்க எல்லாம் சரியாக இருக்கான்னு பார்த்தாள். இன்னிக்கு இவர்களுடன் அவர் வருவது சந்தேகம் தான். ஆனாலும்  எதற்கும் எல்லாம் தயாராக வைத்துக் கொள்வோம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். கடைசியாக எல்லாக் கடவுளையும் பார்த்து அவசரமாகப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

வீட்டைப் பூட்டி விட்டு வந்து காரில் ஏறிக் கொண்டாள்.  மோகன் காரைக் கிளப்பினான். பாவனா திரும்பிக் கணவனைப் பார்த்தாள். சாந்தமான அவன் முகம் இன்று இன்னும் அழகாய்த் தெரிந்தது. இப்பவே இப்படி இருப்பவன் 10 வருஷத்துக்கு  முன்னால் கல்யாணத்தின் போது அரவிந்த் சாமி (அப்போதுள்ள)  போலிருந்தான். பெண் பார்க்க எல்லாம் வர மாட்டேன் என்று அவன்  சொன்னதால் இரண்டு பெற்றோர்களுடன் இவர்கள் ஒரு ஹோட்டலில் சந்தித்தார்கள். பார்த்தவுடனே அவன் முகம் அவளுக்குள் பதிந்து விட்டது. “ஐயோ! இவன் வேண்டாம்னு சொல்லிக் கூடாதே” எனப் பிள்ளையாருக்கு 100 தோப்புக்கரணம் போடறேன்னு  வேண்டிக் கொண்டாள். அவனுக்கோ  ஜாங்கிரியை ஆசையாய்ச் சாப்பிட்ட அவளே ஜாங்கிரியாய்த் தெரிந்தாள்.  சாதாரண சுடிதாரில் தேவதையாய்த் தெரிந்தாள்  “இந்தப் பெண் என்னை  ஓ.கே சொல்லி விட்டால் எங்க வீட்டிலிருந்து (மாம்பலத்தில் வீடு) வடபழனி வரை  நடந்து வரேன்னு முருகனை வேண்டிக் கொண்டான்.  அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூட்டணி அமைத்து அவர்களது பக்தர்களின் வேண்டுதலை எளிதாக  நிறைவேற்றி வைத்து விட்டார்கள். திருமணம் முடிந்ததும் 2 பேரும் சேர்ந்து வேண்டுதல்களை நிறைவு செய்தார்கள்.

முதல்  2,3  வருஷங்கள் சந்தோஷமாகத் தான் போச்சு. மோகன் பெற்றோர் கிராமத்திலேயே மூத்த பையன் வீட்டில் இருந்தார்கள். இங்கு வரும் போது பாவனா அவர்களை அருமையாய்ப் பார்த்துக் கொண்டதால் அவர்களுக்கும் திருப்தி  தான். கல்யாணம் ஆகி 3 வருடம் ஆன பின் அவர்களிடம் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் “என்ன உங்க இளைய மருமகள் சும்மாதான்  இருக்காளா?” எனக் கேட்க ஆரம்பித்த பின் அவர்களும் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

முதலில் இவர்கள் அது பற்றி ஏதும் சட்டை பண்ணவில்லை என்றாலும் நாளாக நாளாகக் சின்னக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் கலங்க ஆரம்பித்தார்கள்.

ஒருவருக்கொருவர் அடுத்தவர் மனசைக் காயப்படுத்தி விடக் கூடாதே என்பதில் கவனமாய் மனதுக்குள்ளேயே மறுகினார்கள்.  இப்படிப் போராட்டத்திலேயே 2 வருடம் ஓடி  விட்டது. அப்புறம் அவர்களே மனம் விட்டுப் பேசி இதற்கான மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை பண்ணினார்கள். 2 பேரிடமும் குறை இல்லையென்று சொல்லி விட்டார்கள். ஆனால் 5 வருடமாக சிகிச்சை எடுத்து உடலும் மனமும் ரணமானது தான் மிச்சம். இவர்களுக்குப் பணம் ஓரளவு இருப்பதால் அது பற்றிப் பிரச்சனை ஏதும் எழவில்லை.

இவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டதால்  இவர்களே ஒரு அனாதைக் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என முடிவு பண்ணினார்கள். பெற்றவர்களிடம் சொன்னதுக்கு அவர்களும்  அரைகுறையாகச் சம்மதித்தார்கள்.  “சரி,உங்கள் வாழ்க்கை! நீங்களே முடிவெடுங்கள்!“ என்று இவர்களிடம்  பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். இவர்களும் நன்றாக  யோசித்து நகருக்கு வெளியே உள்ள ஒரு இல்லத்தைத் தொடர்பு கொண்டு தத்தெடுப்பது  குறித்து விவாதித்தார்கள்.  இல்லத்தின் பொறுப்பாளர்  இவர்களை நேரில் வரச் சொல்லி விவரங்கள் எல்லாம் கேட்டார்கள். இவர்களுக்கு 3 முதல் 6 மாதத்திற்குள் உள்ள குழந்தை தான் வேண்டும் என சொல்லி இருந்தார்கள். இன்று இவர்களுக்கு  ஏற்ற குழந்தை இருப்பதாகவும் நேரில் வந்து பார்த்து முடிவெடுக்கச் சொன்னதால் இப்போது கிளம்பி விட்டார்கள்.

இதெல்லாம் பாவனாவின் மனதில் திரைப்படம் போல் ஓடியது. இவ்வளவு நேரம் பேசாமல் மௌனமாய் இருவரும் இருந்ததே இல்லை.  ஏதாவது வளவளவென்று பேசிக் கொண்டே வருவாள். அந்த ஆசிரமம் வந்து விட்டது. சுற்றிலும்  மரங்களுடன் அந்த எளிமையான கட்டிடம் இவர்களுக்கு ஒரு கோயில் போலத் தோன்றியது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சின்னச் சின்ன தெய்வங்களால்  நிறைந்திருந்ததால் அப்படித் தோன்றியது போல. வெளியே உள்ள தோட்டத்தில் உள்ள விதவிதமான பூக்கள் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடனேயே இரண்டு பேர் முகத்திலும் மலர்ச்சி.

உள்ளே நுழைந்து  வரவேற்பறையில் உட்கார்ந்தார்கள். களையான முகமுள்ள  ஒடிசலான  ஒரு இளம் பெண் வரவேற்றாள். “வணக்கம்.  உங்கள் பெயர் மோகன், பாவனாவா? நீங்கள் வருவீர்கள் என்று அம்மா சொன்னார்கள்” என்றாள். அவர்களுக்கு அந்தப் பெண் அவர்கள் பெயர் சொல்லி வரவேற்றது மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆசிரமத்தின் மீதிருந்த நம்பிக்கை கூடியது.  இன்று எப்படியும் வந்த வேலை முடிந்து விடும் எனத் தோன்றியது. அப்போது  ஒரு சின்னக் குழந்தையின்  அழுகைச் சத்தம் பக்கத்து அறையிலிருந்து வந்தது . அழக் கூட சக்தியில்லாத மாதிரி தீனமாகக் கேட்டது. அந்த அம்மா பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டார்.  சாந்தமான  முகம், நரைத்த  தலை, மூக்குக் கண்ணாடியுடன் பார்த்தவுடனே எழுந்து வணங்கும்  தோற்றத்துடன் இருந்தார்.

இவர்கள் எழுந்து வணங்கினார்கள். இதற்குள் முதலில் பார்த்த இளம்பெண் கண்ணாடி டம்ளர்களில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.  குளிர்ச்சியான மோர் இதமாக இருந்தது. குடித்து முடித்தவுடன் அந்த அம்மாள் “உங்களுக்கு இந்தக் குழந்தை கண்டிப்பாகப் பிடிக்கும்.  நீங்க வந்துட்டுப் போனதிலிருந்து இந்த அருமையான ஜோடிக்கு ஏற்ற மாதிரி குழந்தை கிடைக்கணுமேன்னு பிரார்த்தனை பண்ணினேன்.  இந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் இது உங்க குழந்தை மாதிரியே தோணித்து. வந்து பாருங்க” என்று சொல்லிக் கூட்டிப் போனார். இவர்கள் அடுத்த அறையைக் கடக்கும் போது தன்னிச்சையாகச் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சம்  கறுப்பான நோஞ்சான் குழந்தை படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டிர்ந்தது. அந்த இளம்பெண் ஒரு பொம்மையைக் காட்டி அந்தக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். குழந்தையின் கண்கள் நட்சத்திரம் மாதிரி ஜொலித்தது.  அதன் உயிரே அந்தக் கண்களில் தான் இருப்பது போலத் தோன்றியது.

அந்த அறையைக் கடந்து விட்டார்கள். மூன்றாவது அறைக்குள் அந்த அம்மா நுழைந்தார். இவர்களும் பின்னால் போனார்கள். அங்கே தொட்டிலில் கிடந்த குழந்தை கொள்ளை அழகுடன் பூக்குவியலைத் தொட்டிலில் பரத்தி வைத்தது போல் தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையை விட்டுக் கண்களை நகற்றவே முடியவில்லை. ரோஜாப்பூ நிறத்தில் கருகருவெனத் தலைமுடியுடன் குட்டி தேவதை  போல இருந்தது. அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும்  போல் இருந்தது. தூக்கத்தில் என்ன கனவு கண்டதோ சிரித்தது. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்தது. அந்த அம்மா “இந்தக் குழந்தையைப் பார்த்தால் எல்லாரும் உங்கள் குழந்தை என்று தான் செல்வார்கள்” என்று சொன்னார். இவர்களுக்கும் அது சரிதான் எனத் தோன்றியது.

அந்த நேரத்தில் முதல்  அறையிலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது. இவர்களால் ஆவலைக் கட்டுப்படுத்த  முடியவில்லை. பாவனா தான் முதலில் வேகமாய்ப் போனாள். அந்தப் பெண் குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்க ஆரம்பித்தாள். குழந்தை வேக வேகமாய்க் குடித்தது.  அவசரமாய்க் குடித்ததில் புரையேறி விட்டது. பாவனா தன்னிச்சையாக நெஞ்சை நீவி விட்டாள். எலும்புக் கூட்டைத் தொட்ட மாதிரி இருந்தது. அதையும் தாண்டி அவள் உடல் சிலிர்த்தது.  அவள் கணவனைப் பார்த்தாள். அவள் பார்வை ஏதோ சொல்வது புரிய என்ன எனக் கண்களால் கேட்டான். அவள் “கொஞ்சம் வரீங்களா?” என்று வாசல் நோக்கி நடந்தாள். அந்த அம்மாள் எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியில் வந்ததும் “நான் ஒண்ணு சொல்றேன், கேப்பீங்களா?” என்றாள். “நீ நினைக்கிறது எனக்குக் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு” என்று சொன்னான். “இல்லை இந்தக் குழந்தையைப் பார்த்தால் பாவமா இருக்கு. அத்தோட அது மேல ஒரு இனம் புரியாத பாசம் வருது.  முதலில் பார்த்த  குழந்தை தேவதை மாதிரி இருக்கு, எல்லோருக்கும் பிடிக்கும். அடுத்து யார் வந்தாலும் கண்டிப்பாக  அந்தக் குழந்தையைத் தான் கேட்பார்கள். இந்தக் குழந்தையைப் பார்ப்பவர்கள் தத்தெடுக்கத் தயங்குவார்கள். இந்தக் குழந்தையை நாம் நல்லா வளர்த்தா இதுவும்  அருமையா வளரும். அதன் கண்களைப் பார்த்தாலே ஒரு மின்னல் இருக்கு. நாம இந்தக் குழந்தையைத் தத்தெடுக்கலாமா?” என்று கெஞ்சலாய்க் கேட்டாள்.

அவன் “நீ சொல்றது சரிதான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் உங்க குழந்தை மாதிரி இல்லையேன்னு கேப்பாங்க.  உங்கம்மா, எங்கம்மா எல்லாம் கூட இத ஒத்துக்க மாட்டாங்க. நம்மால் எல்லாரையும் சமாளிக்க  முடியுமா?”ன்னு கேட்டான்.  அதற்கு அவள் “நீங்க மட்டும் சம்மதிச்சாப் போதும். மத்தவங்கள நான் சமாளிச்சுக்கறேன். நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணினால் போதும்” என்றாள். அவனுக்கும் அவள் சொன்னது சரியெனப்பட்டது.

அந்த அம்மாளிடம் போய்ச் சொன்னார்கள்.  அவர்கள் பிரமித்துப் போய்ப் பார்த்தார். இவ்வளவு நல்லவங்க இந்தக் குழந்தையைக் கண்டிப்பா நல்லாப் பாத்துப்பாங்க. இந்தக் குழந்தை இவர்கள் கண்ணில் பட்டது அதன் அதிர்ஷ்டம் என நினைத்தார். திரும்பவும் வந்து அந்தக் குழந்தையைப் பார்த்தார்கள். பால் சாப்பிட்ட நிம்மதியோ ஒரு நல்ல அம்மா அப்பா கிடைத்த சந்தோஷமோ அது நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் அந்தக் குட்டி லட்சுமி இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டாள்.  அந்த குட்டிக்கு அர்ச்சனா எனப் பெயர் வைத்தார்கள். அச்சுக் குட்டி மேல் அதிருப்தியாய் இருந்த பாட்டிகளையும் ஒரு சில மாதங்களில் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் கவர்ந்து விட்டாள். பாவனாவின் கவனிப்பாலும் அப்பாவின் அரவணைப்பிலும் அச்சுக் குட்டி கொழு கொழு குழந்தையாகி விட்டாள். நிறமும்  கொஞ்சம் கூடி விட்டது.

ஆசிரமத்துக்குக் குழந்தையைக்  கூட்டிப் போன போது அந்த அம்மாவால் நம்பவே முடியவில்லை . அந்தக் குழந்தையா இது என ஆச்சரியப்பட்டார்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தைப் பொறுத்து ஜொலிப்பார்கள் போல என வியந்தார். இவர்கள் முதலில் பார்த்த அழகான குட்டி தேவதையும் மற்றொரு வீட்டிற்கு மகளாய்ப் போன செய்தி கேள்விப்பட்டு நிம்மதியானார்கள். அச்சுக் குட்டி அழகாய்ச் சிரித்தாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *