தீபாவளிப் புறப்பாடு (சிறுகதை)

0

வசுராஜ்

“இன்னிக்குக் காலையில நரி முகத்துல முழிச்சேனா? இல்லையே எப்போதும் போல் எனதருமை மனைவி பிரேமா முகத்துல தான முழிச்சேன்? காலையில சுடச்சுட ஸ்டிராங் காபி கைக்கு வந்தது.

எப்போதும் “போட்டு வைச்சா எடுத்துக் குடிக்கக் கூடத் தெரியாதா? மகாராஜாவுக்குக் கைல கொண்டு கொடுக்கணுமா?” என்ற கேள்வி வரும். மேசையில் உள்ள காபிக் கப்பை கிரிக்கெட்ல  ஜெயிச்சுக்  கிடைச்ச கோப்பையை  எடுப்பது போல் பவ்யமாக எடுத்து வந்து பால்கனியில் உட்கார்ந்து குடிப்பேன். சூடு குறைவாக  இருக்கும் அல்லது சர்க்கரை அதிகமாக இருக்கும். இன்னிக்கு எல்லாம் மிகச் சரியாய் இருந்ததுடன்  கைக்கே வந்துவிட்டது. உள்ளுக்குள் அலாரம் அடித்தது  ‘ஏதோ பெரிய செலவு வரப் போகிறது.’  சரி, நல்ல காபியை ரசித்துக் குடிப்போம்’ எனக் குடித்து முடித்தேன்.

“வெந்நீர் போட்டிருக்கேன், குளிச்சுட்டு வரீங்களா?” என் மனைவி.

எட்டி வானத்தைப் பார்த்தேன். மேகமெல்லாம் இல்லை. குளிச்சுட்டு சுவாமி கும்பிட்டுவிட்டு வந்தால் மேசையில் சுடச்சுடப் பொங்கல், கொத்சு.  சந்தேகமே இல்லை, ஏதோ ஒரு மர்மம் இருக்கு. சாப்பிட உட்கார்ந்தேன்.

“பிரமாதம், இன்னிக்கு என்ன விசேஷம்? இதைப் பண்ணின கைக்கு வளையல் தான் போடணும்”.

அடுத்த நிமிஷம் “அடடா ஓட்ட வாய் ராமநாதா” என்று எனக்குள் திட்டினேன்.

அவளைப் பார்த்தேன். மோகனப் புன்னகை.

“இன்னிக்கு தீபாவளிக்குப் பொருள் வாங்க, தி.நகருக்குப் போகலாமா?” ஆர்வமாய்க் கேட்டாள்.       

“ராமநாதா (நான்தான்) இதை இதைத் தான எதிர்பார்த்த?”  எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

“இந்தக் கொரோனா காலத்துல  தி.நகருக்குப் போய்த்தான் வாங்கணுமா? ஆன்லைன்ல பார்க்கலாமே” என்றேன்.

“நேர போய்ப் பார்த்து தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் திருப்தியாய் இருக்கும். இவ்வளவு நாள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாச்சு.  இப்ப தீபாவளிக்காவது  நேரில் போய் வாங்கலாம். தீபாவளி நெருங்க நெருங்கக் கூட்டம் அதிகமாயிடும். இன்னிக்கு என்னோட ராசிக்கு நாள் நல்லா இருக்காம்.  டிவியில சொன்னாங்க” என்றாள்.

“என்னோட ராசிக்கு இன்னிக்கு சந்திராஷ்டமம்னு சொல்லி இருப்பாங்களோ” என மனத்தில் நினைத்துக்கொண்டேன். சாப்பிட்ட பொங்கல், தொண்டை வரை இருந்ததால் செஞ்சோற்றுக் கடன் கருதி “சரி போகலாம்” எனத் தலையாட்டினேன்.

அடுத்த  15 நிமிடத்தில் பிங்க் புடவை, பிங்க் மாஸ்க்குடன் தயாராகி நின்றாள்.

“இவங்களை நம்பி எத்தனை பேருக்குப்  பிழைப்பு நடக்குது, நம்ம பிழைப்பு தான் தலையாட்டி பொம்மையாகி விட்டது” நானும் கிளம்பி காரை எடுத்தேன்.

சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது, கொரானாவுக்குத் தடுப்பு மருந்து தயாராகி விட்டதோ எனச் சந்தேகம் வந்தது.  ஒரு வழியாக வந்து சேர்ந்து,  மனைவியைத் துணிக் கடையில்  இறக்கி விட்டுவிட்டு, பனகல் பார்க் பக்கம் காரை நிறுத்திவிட்டு அந்தக் கடைக்குப் போனேன். பட்டுப் புடவைப்  பக்கம் தான் இருப்பாள் என்ற உறுதியான  நம்பிக்கையுடன் அந்தப் பக்கம் போனேன். நல்ல கூட்டம். தள்ளி பிங்க் புடவை, பிங்க் மாஸ்கில் தெரிந்தாள்.

பக்கத்தில் போனால் இதை எடுக்கவா,  அதை எடுக்கவா அல்லது ரெண்டையும் எடுக்கவா எனக் கேட்பாள்.  நம்ம நாக்குல தான் சனி பகவான் குடி கொண்டிருக்காரே,  தாராளமாய் எடுத்துக்கோயேன்னு சொல்லிடுவோம். அவளாவே  எடுத்தால் ஒரு புடவையோட  நிறுத்த சான்ஸ் இருக்கு. இந்தக் கூட்டத்தில் யாரும், விளம்பரத்தில் திரும்பத் திரும்பச் சொல்லும் போதுமான இடைவெளி கடைப்பிடிக்கவில்லை. இங்கேயே உட்கார்ந்துக்கலாம்  எனக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன்.

என்னைப் போலவே அப்பாவிக் கணவன்மார்கள் உட்கார்ந்திருந்தார்கள். என் மனைவி என்னைப் பார்த்துவிட்டாள். நான் எடுத்தாச்சான்னு சைகையில் கேட்டேன். அவள் பக்கத்தில் நிற்பவரைப் பார்த்தாள். அட, அந்த மீசைக்காரன் எதுக்கு என் பெண்டாட்டிக்கு இவ்வளவு பக்கத்தில் நிக்கறான்? விவஸ்தை இல்லாதவன் என மனத்துக்குள் திட்டினேன். பக்கத்தில் போகலாமா  என யோசித்தேன். வழி எங்கும் கூட்டம். இவர்களைக் கடந்து போகணுமே! அதிலும் சிலர் மாஸ்க்கை இறக்கிவிட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.  என் மனைவி தைரியசாலி. அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். திரும்பவும் முடிச்சாச்சா எனச் சைகையில் கேட்டேன். அவள் பக்கத்தில் இருப்பவரிடம் என்னைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னாள். “எங்க வீட்டுக்காரர்  அங்க தான் நிக்கறார். ஜாக்கிரதை, தள்ளி நில்லுன்னு  சொல்லியிருப்பா. நாமதான் வீரனாச்சே“ எனக் கொஞ்சமாக இருந்த மீசையை முறுக்கிக்கொண்டேன்.

“என்னங்க, இங்க எதுவும் சரிப்படலை. போகலாமா?” என் பக்கத்தில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி, அதே பிங்க் புடவை, பிங்க் மாஸ்க். “அடப்பாவி,  அது யாரு?ன்னு வடிவேலு ஸ்டைலில் மனத்துக்குள் கேட்டுக்கொண்டேன். அந்த பிங்க் புடவை, பிங்க் மாஸ்க் பக்கத்தில் உள்ளவர் என்னை நோக்கி வருவது போல் தெரிந்தது. “வா, சீக்கிரம் போகலாம். இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் எனக்குக் கொரானா வந்துடும் போல இருக்குன்னு மளமளவென வெளியேறினேன்.

வெளியே வந்ததும் “புடவை ஆன்லைன்ல  வாங்கிக்கலாம். வளையல் வாங்கணும்னு சொன்னயே, வேணா வாங்கிக்கோ!” என்றேன். நான்தான் சொன்னேனே  சனி பகவான் என் நாக்குல இருக்கார்னு.

என் மனைவி “நீங்க நிஜமாவே தெய்வம்க” என்றாள்.

“கடவுளே! வளையல் கடையில எதுவும் இவளுக்குப் பிடிக்காமப் போகணும். அந்த மீசைக்காரர் வராம இருக்கணும்” என வேண்டிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.