கொல்லாமை (சிறுகதை)

0

வசுராஜ்

இன்று பல்வலி அதிகமாக இருந்ததால் பல் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தேன்.

கொரானா பயத்தால் வெளியே செல்ல பயந்து ஒத்திப் போட்டதால் பல்வலி அதிகமாகி இன்றுபோய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் காலை 11 மணிக்கு கிளினிக் வர சொல்லி இருந்தார்கள்.

என் கணவர்  மாஸ்க் போட்டுக்கொண்டு தயாராக நின்றார். நான் எளிமையான சமையல் செய்து மேசை மேல் வைத்து விட்டுக் கைப்பையுடன் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு வருவதற்குள் என் கணவர் காரைச் சரிபார்க்கக் கீழே போய்விட்டார். ரொம்ப நாளாக எடுக்காததால் பெட்ரோல் எல்லாம் இருக்க வேண்டுமே என நினைத்துக்கொண்டு கீழே இறங்கினால் எங்கள் காரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

பதற்றத்துடன் பக்கத்தில் போனால் “கிட்டே போகாதே” இது என் கணவர்.

எங்கள் குடியிருப்பில் என் தளத்திலேயே குடியிருக்கும் தோழியும் அவள் கணவரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். “என்ன ஆச்சு?” எனக் கேட்டேன். என்னோட பல் வேறு “சுருக் சுருக்” என வலித்தது.

“உங்க காருக்கு அடியில ஒரு பாம்பு பார்த்தோம்” என்றாள்.

பயத்தில் நான் பத்தடி தள்ளிப் போனேன். அதற்குள் செக்யூரிட்டி கம்புடன் வந்துவிட்டார்.

அந்தத் தோழி அவரைப் பார்த்து “பாம்பையெல்லாம் அடிக்கக் கூடாது. உடனே “Forest Department”க்கு ஃபோன் பண்ணுங்கள்” என்றார். எனக்குப் பதற்றமாய் இருந்தது.

இவங்க எப்ப ஃபோன் பண்ணி, அவங்க வர வரைக்கும் அது அங்கேயே உட்கார்ந்திருக்குமா? ஏதாவது பொந்துக்குள் போய்விட்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். குழந்தைகள் எல்லாம் இங்கே தான் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் எல்லாம் இங்கே தான் காலையும் மாலையும் நடக்கிறார்கள். விஷமுள்ள பாம்பாய் இருந்தால் என்ன செய்வது என யோசனையில் மூழ்கினேன்.

பல் வலி கூட மறந்து விட்டது.

செக்யூரிட்டி பரிதாபமாய்ப் பார்த்தார். பாவம் அவர் தானே ராத்திரி எல்லாம் சுற்றிச் சுற்றி வருகிறார்!

மெதுவாக அந்தத் தோழியைப் பார்த்து “போன தடவை ஃபோன் பண்ணினோம். அவங்க வந்து பார்க்கும் போது ஒண்ணும் கண்ணுல மாட்ட மாட்டேங்குது. அப்புறம் நாங்க ராத்திரி சுற்றி வரும் போது கண்ணுல படுது. சில நேரம் அடிச்சுடுவோம். பல தடவை தப்பிச்சுடுது” என்றார்.

அதற்கு அந்தப் பெண் “நீங்களே பாம்பு பிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். பிடித்து வைத்திருந்து Forest Department ஆள் வந்ததும் அவங்க கிட்ட கொடுத்து விடுங்கள்” என்றார்.

எனக்கு எங்கள் செக்யூரிட்டியின் மைன்ட் வாய்ஸ் கேட்டது. “நீங்க கொடுக்கற சம்பளத்துக்கு 12 மணி நேரம் காவல் காக்கறேன். இதுல பாம்பு பிடிக்க வேற கத்துக்கணுமா?”

அதற்குள் அது மெதுவாக வெளியே வந்தது.

இதற்குள் இன்னும் நாலைந்து பேர் கூடி விட்டனர். அதில் ஒருவர் “இதைப் பார்த்தா விஷமுள்ளது மாதிரி தெரியுது, அடிச்சுடுவோம்” என்றார்.

அந்தத் தோழி விடுவதாயில்லை. “இல்லை, நான் ஃபோன் பண்றேன், கொல்லாதீங்க!” என்றார்.

நான் பிரமிப்பாய் அவரைப் பார்த்தேன். ஜீவகாருண்யம் என்பது இது தானோ, நானும் இரக்கப்படுபவள் தான் என்றாலும் பாம்பை வைத்துப் பாதுகாக்கச் சொல்லும் அளவுக்கு அவ்வளவு இரக்கம் எல்லாம் என்னிடம் கிடையாது.

இதற்குள் அப்போது தான் வந்த ஒருவர், பட்டென அதன் தலையில் அடித்துவிட்டார். உடனே இன்னும் 2 பேர் அடித்து விட்டார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. திரும்பப் பல் வலிக்க ஆரம்பித்து விட்டது. கடவுளே அந்தப் பாம்புக்கு மோட்சத்தைக் கொடு என வேண்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். அந்தத் தோழி செக்யூரிட்டியைத் திட்டிக் கொண்டிருந்தார்.

மருத்துவரிடம் போய் விட்டு வந்து விட்டோம்.

மாலை அந்தத் தோழி வீடு பூட்டி இருந்ததைப் பார்த்து விட்டு அவருக்கு ஆறுதலாக 2 வார்த்தை பேசலாமென ஃபோன் பண்ணினேன்.

அவர்களிடம் “உங்களுக்குத் தான் எவ்வளவு இளகிய மனசு. வருத்தப் படாதீர்கள். இதுக்கு எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு பண்ணலாம். ஆமாம், வீடு பூட்டி இருக்கே எங்கே போயிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“ஆமாம் மேடம், அவர்கள் பாம்பை அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லி விட்டு உடன் உற்சாகமாக “இங்கே தாம்பரத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். இன்னிக்கு அம்மா எனக்காக ஸ்பெஷல் சமையல் பண்ணி இருந்தாங்க. அதை சாப்பிட்டப்புறம் செம குஷி ஆயிட்டேன்” என்றார்.

“அப்படியா? என்ன சமையல்”னு அப்பாவியாய்க் கேட்டேன்.

“இந்தக் கொரானா நேரத்துல வெளில வாங்க வேண்டாம்னு வீட்டுல வளர்த்த நாட்டுக் கோழி குழம்பு, மட்டன் (அதுவும் வீட்டுல வளர்த்தது தான்) எல்லாம் செஞ்சுருந்தாங்க. செம கட்டு கட்டிட்டேன்”என்றாள்.

எனக்குத் தலை சுற்றியது.

இது தான் ஜீவகாருண்யமா? “ஒண்ணுமே புரியல உலகத்திலே”. சந்திரபாபு பாட்டு தான் நினைவுக்கு வந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *