அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 17 (தமர்)

0
1

ச.கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் சுற்றம் எனப் பொருள்படும் தமர் பற்றியும்; அவர் பேசியமை  பற்றியும் பிற பாத்திரங்கள் பேசுகின்றன. தமர் நேரடியாகப் பாடல் காட்சியில் இடம் பெறுவதில்லை. அளவில் பெரிய தொகைப்பாத்திரமாகிய தமர் சூழலுக்கு ஏற்ப அகஇலக்கியத்தின் ஏதேனும் ஒரு குழுப்பாத்திரத்தையோ அல்லது சில பல குழுப்பாத்திரங்களையோ தன்னுள் அடக்கும் தன்மை  உடையதாக உள்ளது. யாருடைய கூற்று; யாரை நோக்கிய கூற்று என்பதை அடியொட்டி ‘நுமர்’ என்றோ ‘எமர்’ என்றோ வடிவமாற்றம் பெறுவது மற்றோரு தன்மை ஆகும்.

சுற்றம் எனப்  பொருள்படும் தமர்

தலைவனிடம் இரவுக்குறி நேரும் தோழி அதிலிருக்கும்  வசதி பற்றிப் பேசும்போது;

“தமர் தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)

என்கிறாள். சுற்றத்தார் கூட ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயலாத சேரியில் இரவில் சந்தித்தால் எந்த ஒரு இடையூறும் நேராது என்று குறிப்பாகச் சொல்கிறாள். புறஇலக்கியத்திலும் தமர் சுற்றத்தைக் குறிக்கும் உறவுமுறைச்  சொல்லாகப் பயின்று வந்துள்ளது.

“தமர்தம் அறியா அமர் மயங்கு அழுவம்” (புறம்.- 294)

எனப் போர்க்களத்தின் தன்மை எடுத்துரைக்கப்படுகிறது. ‘இவர் நம்  சுற்றத்தார்’ என்று அடையாளம் காண இயலாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் இடம் என்பதே பொருளாகும். அச்சுற்றம் ஒவ்வொரு சூழலிலும்  வெவ்வேறு உறுப்பினர்களைக் கொண்டு இலங்குவதை அகஇலக்கியம் முழுவதிலும் காண இயல்கிறது.

நுமர் ஆகும் தமர்

காதலைப் புரிந்து கொள்ளும் பருவம் எய்தாத பெண்மகள்; மனதில் வேட்கையைத் தூண்டும் பேரழகுடன் அலைவது பற்றித் தருக்கித் தன்னுள் சொல்லி இன்புறுபவன்;

“நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதரவிட்ட நுமரும் தவறிலர்” (கலி.- 56)

என்று படைத்த இறைவனைத் தவறுடையவனாகப் பழிசுமத்தும் போது; அவளது தமரை ‘நுமர்’ என்கிறான். இது போல் தலைவியின் சுற்றத்தை ‘நுமர்’  என்று அழைக்கும் பிற பாடல்களும் உள (கலி.- 58, 112).

எமர் ஆகும் தமர்

தமர் தொழில் நிமித்தம் சென்றுவிடுவர் என்று குறியிடமும் நேரமும் பற்றிப் பேசிக் குறிப்பாக வரைவு வற்புறுத்தும் போது;

“எமரும் வேட்டம் புக்கனர் அதனால்” (நற்.- 67)

என்ற தோழியின் பேச்சில் தலைவியின் தமர் ‘எமர்’ ஆகின்றனர். தலைவனும் தலைவியும் தத்தம் சுற்றத்தை ‘ஏமர்’ என்று அழைக்கும் பிற பாடல்களும் உள (கலி.- 105,110, 112& 114)

தமரின் பேச்சு

மிகவும் செல்லமாக வளர்ந்த தலைவி; எந்த அளவுக்கு எனின் அந்தச் செல்வமிகுந்த பெருமனையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த கிளையினர் அனைவரும் அவளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தனர். அவர்கள் கொஞ்சியதையே தோழி பாராட்டு என்கிறாள்.

“தாயுடை நெடுநகர் தமர் பாராட்ட” (அகம்.- 310)

அமைந்த வளர்ப்பு அவளிடத்தில் மடமையை மிகுவித்துள்ளது என்று தலைவனிடம் அவளது போக்கிற்கு விளக்கம் அளிக்கிறாள் தோழி. ‘தலைவிக்கு உன்னிடத்தில் மிகுந்த மயக்கம் உள்ளதெனினும் அச்சமும் நாணமும் விஞ்சியுள்ளது’ என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். உமணரின் உப்புவண்டியோடு வந்த பேடை அஞ்சியோடும்படி இடிபோல ஒலித்துக் கடலலை எழுந்து சிதறி விழுகிறது என்ற இடப்பின்புலம் தோழி வெளிப்படையாகச் சொல்லாத நாணத்தின் காரணத்தையும் அச்சத்தையும் தலைவனுக்கு மட்டுமின்றி நமக்கும் தெளிவிக்கின்றன. இப்பாடல் தமரின் பாராட்டைக் குறிப்பிடுவதன் மூலம் தமரின் பேச்சைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

“ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்” (கலி.- 104)

என்று சுற்றத்தார் மகட்கொடைக்குச் சம்மதித்ததைச் சொல்லும் போதும் அவரது பேச்சு குறிப்பாகவே புலப்படுகிறது.

தலைவன் பாணனின் தமராதல்

குறித்த காலத்தில் திரும்பாத தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தோழி பாணனிடம் பேசும்போது;

“கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே” (ஐங்.- 472)

என்று தலைவன் தனக்கு ஏதிலன் என்பது போலவும் அவனைப் பாணனின் சுற்றம் என்பது போலவும் பேசுகிறாள்.

பெற்றோர் தலைவியின் தமராதல்

நடக்கவிருக்கும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புடன் பேசும் தலைவன்; தன் காதலியிடம் அவளது பெற்றோரை ‘நுமர்’ என்று சுட்டி; அவர்கள் மகளின் கையைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைப்பதை;

“நேரிறை முன்கை பற்றி நுமர்தர” (குறிஞ்சிப்.- அடி- 231)

இல்லறம் தொடங்கலாம் என்று கூற; அதைத் தோழி செவிலிக்கு எடுத்துச் சொல்கிறாள். இன்றும் பல சமூகங்களின் திருமணநிகழ்ச்சிகளில் ‘கைப்பிடித்துக் கொடுத்தல்’ எனும் சடங்கு நடைமுறையில் இருப்பது நினைந்து இன்புறத்தக்கது. இச்சடங்கு ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தொகைநூற் தரவு காட்டுகின்றது.

முதலிரவு பற்றிக் கற்புக் காலத்தில்  ஊடலின் போது சிந்தித்துப் பார்க்கும் தலைவன்;

“தமர் நமக்கு ஈந்த தலைநாள் இரவின்” (அகம்.- 136)

எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லும் போதும் பெற்றோரே தமர் எனச்  சுட்டப்படுகின்றனர்.

குடும்பத்தார் தலைவியின் தமராதல்

தலைவி பற்றித் தன் நெஞ்சோடு பேசிக் கொள்ளும் தலைவன் ‘அவள் இரவுக்குறியில் தன்னோடு இருக்கும் போது தனக்கு ஒத்தவளாகவும்; விடிந்த பிறகு அவளது குடும்பத்தாரோடு ஒத்தவளாகவும்; ஆக இருவேறு நடத்தையை உடைய கள்வியாகத் திறம்பட நடந்து கொள்கிறாள்’ என்று வியக்கும்போது;

“தமர் ஓர்அன்னள் வைகறையானே”  (குறுந்.- 312)

எனக் குடும்பத்தாரை அவளது தமர் என்கிறான். இக்குடும்பத்துள் கூட்டுக் குடும்ப உறுப்பினர்களாய்த்  தலைவியின் பெற்றோர், உடன்பிறப்புகள்,  பங்காளிகள், பெற்றோரைப் பெற்ற  ஆயி ஐயன் அனைவரும் அடங்குவர்.

ஆயர் குலப்பெண் மோர் விற்றுக்கொண்டு வருகிறாள். அவளிடம் மோர் வாங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் தம் மனையின் வாயிலை அடைத்து நின்றுகொண்டு; தம் கணவர் அவள் பின்னே தொடர்ந்து செல்லாதவாறு காக்கின்றமையை; அவள் மேல் மையல் கொண்ட தலைவன் காண்கிறான். அவளின் மயிர்முடியில் அவளது தமர் கட்டிச் சூட்டிய கண்ணி அழகூட்டுகிறது.

“பண்ணித் தமர்தந்து ஒருபுறம் தைஇய” (கலி.- 109)

அக்கண்ணியைச் சுமக்க மாட்டாதவள் போல மோர்க்குடத்தைச்  சுமந்து கொண்டு ஒயிலாக வரும் தோற்றம் கண்டு பெண்களே மருளுகின்றனர். ‘விரைவில் உன் கிளையோடும் சென்று சேர்க’ என்று சொல்லி அனுப்புகின்றனர். இங்கே ‘தமர்’ அவளது கிளையுடன் கூடிய குடும்பத்தைச் சுட்டுகிறது என்பதைப் பாடலின் பிற்பகுதி மூலம் அறிகிறோம்.

மடலேறியேனும் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடிவு செய்த   தலைவனுக்கு;

“…. …. வழுதிக்கு அருந்திறை
போலக் கொடுத்தார் தமர்” (கலி.- 141)

என்று அச்சத்துடன் பெண் கொடுத்தவர் பெற்றோரும் கிளையும் சேர்ந்த தமர் எனலாம். ஒரு ஆண் ஊரார் முன்னர் அறிவித்து; ஒரு பெண்ணை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டிக் கேட்டுவிட்டால்; அதன் பின்னர் அந்தப் பெண்ணின் இல்லற வாழ்க்கை நலம் கேள்விக்குறியாக அக்காலத்தில் இருந்தமை இதனால் தெளிவாகிறது.

தலைவியின் நட்பு வீட்டில் உள்ளவர்க்குத் தெரிந்தக்கால் அவளைக் குடும்பத்தினர் கண்காணிப்பது இயற்கையே. அத்தருணத்தில்;

“தமரின் தீராள் என்மோ” (குறுந்.- 392)

என்று தும்பியிடம் பேசுவதுபோல் சிறைப்புறம் நின்ற தலைவனிடம் தெரிவிக்கிறாள் தோழி. இங்கும் தமர் ஒரே பெருமனையில் வாழும் கிளை  கூடியிருக்கும் குடும்பத்தையே சுட்டுகிறது.

பெற்றோரும் உடன்பிறப்புகளும் தமராதல் 

தமரில் பல திறத்தவர் அடங்குவர். அவர்களுள் இரத்த சம்பந்தமுள்ள உறவுடையவரும் இருப்பர்; அப்படி இல்லாதவரும் தமராதல் உண்டு என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்கு ஏற்ப;

“பிறந்த தமரிற் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்குப் பிறழ்ந்து …
செல்குவள் ஆங்கு தமர் காணாமை” (பரி.- 19)

எனத் திருப்பரங்குன்றின் மேல் விழாக்காலத்தில் ஏறித் தொலைந்து நின்ற பேதைப்பெண் பற்றி வருணிக்கிறது ஒரு பாடல். அவள் ‘பிறந்த தமரை’ விட்டுப் பிரிந்தாள் என்பதால் குருதித் தொடர்புடைய பெற்றோரும் உடன்பிறப்புகளும் மட்டுமே இங்கு தமர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இப்பாடலின் புனைவில் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் அவசமும்  செயலும்  மிக இயல்பாக வருணிக்கப் பட்டுள்ளது.

தோழியர் தலைவியின் தமராதல்

தலைவனோடு நட்பு பாராட்டிப் பின்னர் தயங்கும் தலைவியிடம்;

“நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்” (நற்.- 32)

என்று அறிவுரைக்கிறாள் தோழி. ‘முன்பு நட்டு இப்போது விலகுதல் தகாது. என் சொற்கள் உனக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை எனில் நீயே யோசித்துப் பார்; அத்துடன் பிற தோழியரோடு ஆராய்ந்து அவனிடம் அளவளாவுவாயாக’ என்று வழிகாட்டும் தோழி கூறும் ‘நுமர்’ தோழியர் ஆவர். புராணச்செய்திகளை மிகுதியாகக் கொண்ட பரிபாடல் வள்ளியின் தோழியராகும்  கொடிச்சியரை ‘வள்ளி தமர்’ என்கிறது (பா.- 9- அடி- 67).

மங்கலப் பெண்டிர் தலைவியின் தமராதல்

திருமணம் என்னும் மங்கல நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுள் சுமங்கலிகளாகிய; பெற்றவள்,  கிளையுள் இருக்கும் பெண்டிர், கிளையல்லாத சொந்தத்தில் இருக்கும் பெண்டிர், உறவல்லாத ஊர்ப் பெண்டிர் அனைவரும் அடங்கும் வாய்ப்புளது. அவர்கள் மணப்பெண்ணை வாழ்த்தியமை;

“பேரில் கிழத்தி ஆகெனத் தமர்தர” (அகம்.- 86)

என்ற தலைவன் பேச்சில் இடம்பெறக் காண்கிறோம். தோழியிடம் பண்டு நடந்ததை நினைவுகூரும் தலைவன்; ‘மக்களைப் பெற்ற மகராசிகள்’ என்ற இக்கால வழக்கை ஒட்டி; பிள்ளைப்  பேற்றினால் தம் வயிற்றில் சுருக்கக் குறிகளைப் (stretch marks) பெற்ற வாழ்வரசிகளைச் சுட்டி அமைகிறான். இன்றும் திருமண நிகழ்ச்சிகளில் இத்தனை வகைப்பட்ட பெண்களும் முதலிடம் பெறுவதைத் தமிழ்ச் சமூகத்தில் காண இயல்கிறது. இப்பாடலில் மணப்பெண்ணின் தமர் மங்கலப் பெண்டிர் ஆகின்றனர்.

கிளையும் கிளையல்லா உறவினரும் தலைவியின் தமராதல்

மகட்போக்கிய செவிலி தன் குறைபாட்டை வெளிப்படையாகக் கூறி அரற்றுகிறாள்.  தலைவியின் மனநிலையை அறிந்து கொள்ளத் தனக்குத் தெரியவில்லை என்று புலம்பித் தவிக்கிறாள். கூந்தலை ஒப்பனை செய்து கொள்ளச் சொன்ன தன்னைப் புலந்த தலைவியின் உட்கிடக்கையைப் புரிந்து கொள்ளத் தெரியாத அவலத்தைக் காரியம் கைமீறிய பிறகு எண்ணி உளம் வருந்துகிறாள்.

“தமர் மணன் அயரவும் ஒல்லாள்” (அகம்.- 369)

எனத் திருமண ஏற்பாடு நடந்த பின்னரும்; அவள் மனம் ஒருப்படாமல்  தான் விரும்பிய தலைவனோடு சென்று விட்டமை குறித்துப் பேசும் அவள்; தன்னைத் தானே நொந்து கொள்கிறாளே அன்றி மகளைக் குறை கூறவில்லை. சுற்றத்தார் செல்வ மனையைப் புதுப்பித்து மணவிழா நடந்தேற ஆயத்தம் செய்தனர் என்பதால்; மணவினை தொடங்கி அது   நடந்தேறும் முன்னர் அவள் தலைவனுடன்  போய்விட்டாள் என்பது தெளிவாகிறது. அதனால் இங்கே ‘தமர்’ திருமணத்திற்கு முதலிலேயே வந்து சேரும் சொந்தபந்தம் அனைத்தையும் சேர்த்தே சுட்டுகிறது.

தாயாதிகள் தலைவனின் தமராதல்

‘மணந்து கொள்வேன்; வாக்குத் தவற மாட்டேன்; அதுவரை தலைவியைப் பேணிப் பார்த்துக் கொள்வாயாக’ என்று கூறிய தலைவன் சொற்களை நம்பிக்கையுடன் ஏற்றுத் தொடர்கிறாள் தோழி. உலக்கைப்பாட்டில்  தலைவனின் குடிப்பெருமையைப் பாடிக்கொண்டே  குற்றும் பின்புலத்தைக் காட்சிப்படுத்துகிறாள். பின்னர் தொடர்ந்து மேலான ஒழுக்கம்  உடையவரின் சொல்லும் செயலும் நடைமுறைப் படுத்தப்படும் முறையை விளக்கிப் பேசும் போக்கு குடிச்சிறப்பைக் கூறுவதால்;

“காஞ்சி நீழல் தமர்வளம் பாடி…….
அறனும் பொருளும் வழாமை நாடித்
தன் தகவுடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்” (அகம்.- 286)

என்ற பாடற்பகுதியில் இடம்பெறும் தமர் ஒரு குடியின் தாயாதிகளைக் குறிக்கிறது என்பதே பொருந்துகிறது. தாயாதிகள் பல தலைமுறைகளைச் சேர்ந்த கிளையினராக ஒரே குடியின் வழிவந்தோராவர்.

உற்றார், தமையர், கிளை, உறவினர் அனைவரும் தலைவியின் தமராதல்:

காதலியை உடனழைத்துக் கொண்டு காட்டு வழியாகத் தன் ஊர் செல்லும் தலைவன் அவளை ஓய்வெடுக்கச் சொல்லும் போது;

“அமர் வரின் அஞ்சேன் பெயர்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅயோளே” (நற்.- 362)

என்று வெளிப்படையாகத் தன்  மனத் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும்  காட்டிப் பேசுங்கால்; தலைவியைத் தேடி வரும் அவளது சுற்றத்தாரை எண்ணி அஞ்சுவது வெளிப்படை. உடன்போகும் தலைவியைத் தேடி வரும் சுற்றத்தில் தமையர், கிளையோடு பிற உறவினர், ஊரார், இளையர், நண்பர் என எல்லோரும் அடங்குவர் என்பதே தலைவனின் அச்சத்திற்குரிய காரணம் ஆகிறது. தனியொருவனாக அவளை அழைத்துச் செல்லும்போது அவன் சண்டைக்கு அஞ்சவில்லை ஆயினும்; அவனது மனத்திண்மைக்குச் சவாலாக அமைவது தமரின் பெருங்கூட்டம் எனில் மிகையாகாது. இக்கருத்தை அரண் செய்யும் இன்னொரு சான்றுப்பாவும் உளது. அது கற்புக்கால   நிகழ்ச்சியாக அமைந்து நகை ஊட்டுகிறது. பிரிவை உணர்த்துகிறான் தலைவன்; அவன் செல்ல வேண்டிய காடு தலைவி கண்முன்னர் தோன்றி மயக்கத்தைத் தருகிறது. ஏனெனில் அவள் தலைவனோடு அதே காட்டுவழியில் வந்து தான் இல்லறத்தைத் தொடங்கினாள். அப்போது ஆறலைப்போரால் ஏற்பட்ட துன்பத்தைத் தலைவன் தனியொருவனாய் எதிர்கொண்டே  நீக்கிவிட்டான்; ஆனால் தலைவியின் தமர் தேடி வந்தபோது ஒளிந்து கொண்டான்.

“அமரிடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே” (நற்.- 48)

என்ற தலைவியின் மறுப்பில் தான் அதை மறக்க முடியாத காரணம் எதனால் என்பது குறிப்பாக இடம்பெற்றுச் சுவை கூட்டுகிறது.

தாய்வீட்டார் மணம்முடிந்த பெண்ணின் தமராதல்

பறவைக்கூட்டம் மரக்கொம்பில் இருந்து கொண்டு; விளையாடும் மகளிர் தம்மை அலைத்தமை பற்றி அவர்களது சுற்றத்தார்க்குக்  கூறுவன போல் பலகாலும் பல ஒலிகளை எழுப்பிய ஊரினை உடையவன் தலைவன் என்ற இடப்பின்புலத்தில் இடம்பெறும் தமர் தலைவியின் தாய்வீட்டார். ஏனெனில் தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிய பாடலில்

“தமர்க்கு உரைப்பன போல் பல்குரல் பயிற்றும்”  (கலி.- 75)

என்ற பறவைகளின் ஆரவாரம் பற்றிய வருணனை உள்ளுறுத்தி அமைவது; அன்றாடம் ஒரு பெண்ணைத் தேடும் தலைவனின் பரத்தமை தலைவியின் தமரது காதுகளைச் சேர்வதைத் தவிர்க்க இயலாது என்பதாம்.

புகுந்த வீட்டார் தலைவியின் தமராதல்

புறத்தொழுக்கத்தை நீட்டிக்கும் தலைவனை இல்லத்திற்கு மீட்டு வரவழைக்க எண்ணும் தோழியிடம் தலைவி ‘அது தேவையற்றது; என் துன்பம் எமர்க்குத் தெரியக் கூடாது; அது போதும்’ என்கிறாள்.

“நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே” (நற்.- 64)

என அவள் தன் துன்பத்தைக் குடும்பத்தாரிடம் மறைக்க நினைக்கிறாள். ‘எமர்’ என்று அவள் சுட்டுவது புகுந்த வீட்டாரையே ஆகும்.  இவ்விடத்தில் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை சேர்ந்தவுடன் கோவலனிடம் பேசிய சொல்லும்  மனநிலையும் செயலும் ஒப்பு நோக்கத்தக்கன.

ஊரார் தலைவியின் தமராதல்

இரவுக்குறியில் துய்க்கும் தலைவனை வரைவிற்குப் பக்குவமாகத் தூண்டும் தோழி அவனிடம் ஊரிலுள்ள பரதவர் அனைவரும் வேட்டைக்குக் கடல்மேற் சென்று விட்டதைக் குறிப்பிட்டு; இரவில் அவன் தன் இருப்பிடத்திற்குத்  திரும்புவதில் உள்ள சிக்கல்களைக் கூறி ‘எங்கள் ஊரில் விருந்தினன் போல வந்து தங்கிச் செல் என்கிறாள்.

“இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய செங்கால்
கொடுமுடி பரியப் போகிய
கோட்சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே” (நற்.- 215)

‘வளைத்து முடியிட்ட வலை கிழியும்படி இடர் செய்த சுறாவைக் கொல்லாமல் எம் ஊரார் யாரும் திரும்ப மாட்டார். ஆகையால் ஊருக்குள் வந்து தங்குவதில் உனக்குச் சிக்கல் எதுவுமில்லை’ என்று தோழி தலைவனுக்கு உறுதியளிப்பதால் அவள் கூறும் ‘எமர்’ ஊராரே. இதே போக்கில் மேலும் சில பாடல்கள் உள்ளன (அகம்.- 300; நற்.- 49)

பரத்தையர் தலைவனின் தமராதல் 

புறத்தொழுகிய பின் மனைவியைச் சேர நினைத்துக் கெஞ்சும் தலைவனிடம் தோழி பரத்தையரை அவனது தமர் என்கிறாள்.

“அகலநீ துறத்தலின் அழுதுஓவா உண்கணேம்
புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்
நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடும் துணங்கையுள் அரவம்வந்து எடுப்புமே” (கலி.- 70)

என்ற பாடலில்; நீண்ட காலமாகத் தலைவியைத் துரந்த தலைவனிடம் பேசும் தோழி; ‘புதல்வனை அணைத்துக் கொண்டு தூங்க முயன்ற தலைவியை அவனது பரத்தையர் பாடி ஆடிய துணங்கையின் ஆரவாரம் தூங்க விடவில்லை’ என்ற மனக்கசப்பின் வெளிப்பாடு இடம் பெற்றுள்ளது. அத் துன்பமிகு உரையில் பரத்தையரைத் தலைவனின் தமர் என்று சுட்டுகிறாள். அதுவும் அந்தப் பரத்தையர் தலைவனின் மனைக்கு நேரில் வந்து பாடி ஆடினர் என்னும் செய்தி அன்றைய சமூகப்பழக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது.

ஏவலிளையர் தலைவனின் தமராதல் 

போர் மேற்சென்ற தலைவன் மனைக்குத் திரும்புங்கால்; தன்னுடன் வந்து போரில் பங்கேற்றுத் துணைசெய்த இளையர்; தனக்கு முன்னர் சென்று மனையாளிடம் தன் வரவை உரைப்பின்; அவள் மகிழ்ச்சி அடைவாள் என்று பாகனிடம் கூறும் போது;

“தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே” (அகம்.- 144)

என்கிறான். (பார்க்க- அகஇலக்கியச்  சிறுபாத்திரம்- இளையர்) இங்கு தலைவனுக்கு அவனது ஏவலராகிய கூலிப்படையினரே தமர் ஆகின்றனர்.

நண்பர் தமராதல்

வென்ற வேந்தருக்குத் திறை செலுத்தி மன்னர் நண்பர்  ஆயினமை அகப்பாடல் தலைவனின் கூற்றாக அமைகிறது.

“தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே” (அகம்.- 44)

என்று வேந்தனுக்காக வினைமேற் சென்ற தலைவன் தன் மனைக்குத் திரும்பும் போது கூறுகிறான். இப்பாடலில் பெரும்பூட்சென்னி கணையன் என்ற மன்னனை வீழ்த்திக் கழுமலத்தைக் கைப்பற்றிய செய்தி உள்ளது. கணையன் திறைப்  பொருளைக் கொடுத்து சோழ வேந்தனின் நண்பன் ஆயினமையால் தமராயினான்

கரும்பனூர் கிழானின் குறும்பல் குறும்பில் இருந்த இயந்திரப் படுபுழைக்குள் நண்பர் யாவராயினும் நுழையலாம் என்பதை;

“தமரெனின் யாவரும் புகுப” (புறம்.- 177)

என்றே புலவர் பாடியுள்ளார்.

இனத்தார் தமராதல்

ஆயர்குலப் பெண் தலைவனுடன் பேசும்போது;

“ஆயர் எமரானால் ஆய்த்தியேம்  யாம்மிக” (கலி.- 108)

 என்று பேசுவதில் ‘எமர்’ ஆயர் இனத்தைக் குறிக்கிறது.

“நல்லினத்து ஆயர் ஏமர்…
புல்லினத்து ஆயனை நீ” (கலி- 113)

என்று பசுக்கூட்டம் மேய்க்கும் ஆயரும்; ஆடு மேய்க்கும் ஆயரும் தொழில் அடிப்படையில் பிரித்துப்  பேசப்படினும் அப்பிரிவில் உயர்வு தாழ்வு கற்பிப்பதால் அங்கு சாதி வேறுபாடு தலை தூக்குவதைத் தலைமாந்தர் இடையே நிகழும் உரையாடல் காட்டுகிறது.

“கோட்டினத்து ஆயர்மகனோடு யாம் பட்டதற்கு
என்கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
தம்கண் பொடிவது எவன்” (கலி.- 105)

என்று தான் எருமைக்கூட்டம் மேய்க்கும் ஆய்மகனோடு கொண்ட நட்பைத் தனது சுற்றத்தார் ஏற்றுக்கொண்டாலும் விமர்சனம் செய்யும் பிறர் சொற்களைத் தான் கண்டுகொள்ளப் போவதில்லை என்று வாதிடும் தலைவியின் தாய் அவளைக் கண்களாலேயே கோல்கொண்டு புடைக்கிறாள். இப்படிக் குழப்பம் ஏற்படக் காரணம் இப்பாடல்கள் தோன்றிய காலத்தில் நிலவிய சாதி வேறுபாடு என்பதைப் புறப்பாடல்கள் நிறுவுகின்றன.

“எமர்க்கும் பிறர்க்கும் யாவராயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்” (பதி.- 20)

இமயவரம்பன் ஆவான் என்று புகழும் குமட்டூர் கண்ணனார் ‘எமர்’ என்று சுட்டிக் கொள்வது தன் இனத்தவரை ஆகும். இங்கு பரிசில் வாழ்க்கை உடைய கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோர் பிறர் என்று சுட்டப்படுவதால் பாடும் அவர் பாணர் இனத்தைச் சேர்ந்தவர் ஆகிறார்.

கபிலர் பாரிமகளிரை அழைத்துக் கொண்டு இருங்கோவேளிடம் சென்று அவர்களை மணந்து கொள்ள வினவிய பொழுது பாரியை;

“நுமருள் ஒருவன்” (புறம்.- 202)

என்கிறார். வேள்பாரியும் இருங்கோ வேளும் ஒரே இனத்தவர் என்பதைத் தான் ‘நுமர்’ என்னும் சொல்லால் குறிக்கிறார். செவ்விலக்கியக் காலத்தில் ஜாதிப்பாகுபாடு இருந்தது என்பதற்கு இது தக்க சான்றாகிறது.

தலைவன் மேல் ஊடல் கொண்டு பேசும் பரதவர் குலப்பெண் எமர் என்ற சொல்லிற்குப் பதிலாக எம்மனோர் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சாதி வேறுபாட்டைக் குறிப்பிடுகிறாள்.

 “எம்மனோரில் செம்மலும் உளரே” (நற்.- 45)

என்ற அவளது கூற்றில் ‘எம்மனோர்’ எமருக்கு ஈடாவர்.

முடிவுரை

அளவில் பெரிய தொகைப்பாத்திரமாகிய தமர் நேரடியாக அகப் பாடல் காட்சியில் இடம் பெறுவதில்லை. சுற்றம் எனப்படும் தமருள் ஒவ்வொரு சூழலிலும்  வெவ்வேறு உறுப்பினர்கள் இயைந்து  இலங்குவதை அகஇலக்கியம் முழுவதிலும் காண இயல்கிறது. தலைவன், இனத்தார், பெற்றோர், தமையர், குடும்பத்தார்,  கிளை, தோழியர், சொந்தபந்தம், பிறந்த வீட்டார்,  புகுந்த வீட்டார், தாயாதிகள், மங்கலப்பெண்டிர், ஊரார், பரத்தையர், இளையர், நண்பர் எனும் அனைவரிலும் சிலரையோ பலரையோ உள்ளடக்கிய உறவுமுறைச் சொல்லாகத் தமர், நுமர், எமர் ஆகிய சொற்கள் அகஇலக்கியத்தில் பயின்று வந்து சிறுபாத்திரத் தகுதியை அடைகின்றன. தலைவனின் தமராகும் பரத்தையர் அவன் மனைக்கு நேரில் வந்து பாடி ஆடினர் என்னும் செய்தி அன்றைய சமூகப்பழக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. ஆயர் இனத்தவருள் சாதி வேறுபாடு இருந்தமையை நுமர், ஏமர் ஆகிய சொல்வழக்குகள் நிறுவுகின்றன. பரதவர் இனத்தில் இருந்த சாதி உணர்வு ‘எம்மனோர்’ என்ற சொற்பயன்பாட்டில் புலப்படுகிறது.  புறப்பாடல்களில் தமர் பற்றிய குறிப்புகள் குறிப்பிட்ட இனத்தைச் சுட்ட மட்டுமே பயன்பட்டுள்ளன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.