புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.                  
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

சொன்னவையும் பெற்றவையும்

முன்னுரை

‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னுந் தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் இத்தொடர் பரிமேலழகர் உரைவழித் திருக்குறள் பொருண்மையை முழுமையாகக் காண்பதையே தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது. திருக்குறளுக்குத் தான் விரும்பியவழி உரையெழுதும் பரிமேலழகர் அவ்விருப்பத்தைத் தன்னிச்சையாகச் செய்யாது அறிவியல் அடிப்படையில் வலிமையான சான்றுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறார். தான் இப்படி உரை காண்பதற்குரிய காரணங்களை அவர் அடுக்கியுரைக்கிறபோது கற்பார்க்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறதேயன்றிக் குழப்பம் என்பதே இல்லாமற் போய்விடுகிறது. (1) குறளுக்கு உரையெழுதுகிறார். (2) அதில் அமைந்துள்ள சீர் அல்லது தொடருக்குத் தனித்த பொருள் கொள்கிறார். (3) இந்தப் பொருளன்றி உண்மையில் உணர்த்துகின்ற பொருள் வேறொன்று என்பதைக் குறிக்கின்றார். (இதுபற்றிய விளக்கம் கடந்த வாரக் கட்டுரையில் தரப்பட்டது) (4) இறுதியாக இந்தக் குறட்பா கூறவரும் கருத்துப் பிறிதொன்று என வினைமுடிபு செய்கிறார். இந்த நான்கனுள் ஏற்றபெற்றி அமைத்துக் கொண்டு இத்தொடரைக் கற்றாலன்றித் தொடர்ப்பயன் கிட்டுவது எளிதன்று. அறிமுகத்தை முன்னிறுத்திச் சொல்வோமேயானால்,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (34)

என்னும் குறட்பாவில் மன மாசை முன்னிறுத்துகிறார் வள்ளுவர். இந்தப் பாட்டில் பயின்றுவந்த சொற்களைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் கருத்து, “உள்ளத்தில் குற்றமில்லாது இருத்தலே அறம். அதுவன்றி ஏனைய சொல்லும் ஒப்பனையும் ஆரவாரத்தன்மையுடையன” என்பது மட்டுமே. ஆனால் ‘வித்தின் பழுது விளைச்சலில்’ என்பதை உணர்ந்த பரிமேலழகர், மனத்தது மாசோடு கூடிய  ஏனைய சொல்லும் செயலும் பயனற்றன என்னும் குறட்பாவில் சொல்லாத கருத்தினைப் பெற்றுச் சொல்லுகிறார்.

“மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது”

இந்தத் தெளிவால் குறட்பாவின் கருத்து முழுமையாகக் கற்பாரைச் சென்றடைவதைக் காணலாம். குறட்பா மனத்து மாசைச்சுட்டி ஏனையவற்றின் தன்மையை விவரிக்கப், பரிமேலழகர் ‘அவற்றால் எந்தப் பயனும் இல்லை’ என்னும் கூடுதல் தகவலைக் கூறுகிறார் என்பதாம். வள்ளுவர் சொன்னவற்றோடு இவ்வாறு தம் நுண்மான் நுழைபுலத்தால் பெற்றறிந்து உரைப்பதைத்தான் ‘சொன்னவையும் பெற்றவையும்’ என்னும் தலைப்பு குறிப்பதாகக் கொள்ளலாம்.

ஆகம அளவையும் காட்சி அளவையும்

அறத்தின் வலிமையை உணர்த்த வந்த அதிகாரம் ‘அறன் வலியுறுத்தல்’. அதனுள் அமைந்த குறட்பா ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை (37)

இந்தக் குறளுக்கு,

“அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்துவான் இடைக் காட்சியளவைத் தன்னானே உணரப்படும்”

என்று பொழிப்புரை எழுதுகிறார். இது முதல் நிலை. ‘இனி அறத்தின் பயன் இது’ என்பதை ‘ஆகம அளவையால் சொல்ல வேண்டியதில்லை’ என்பதற்கும் ‘காட்சியளவையால் காணலாம்’ என்பதற்குமான மூலம் (மூலச்சொல்) குறட்பாவில் இருக்க வேண்டும் அல்லவா? நம் கண்ணுக்குத் தெரியாதது அவர் கண்ணுக்குத் தெரிகிறது. எப்படி? ‘என’ என்னும் எச்சத்தால் ‘சொல்’ (ஆகமம்) என்பதைப் பெற்றாராம். ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்பதால் காட்சியளவையைப் பெற்றாராம். அதாவது ஒரு பொருளை உணர்த்துவதற்குரிய மூன்று வழிகள் ‘அளவைகள்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

“பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும்  கருத்தா மொழி ஆகிய ஆகமும் என மூன்று” (242)

என்னும் அவருடைய உரைப்பகுதியாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். திருக்குறளில் அமைந்துள்ள,

“என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம்”

இந்த இரு சொற்களைக் கொண்டுதான் ஆகம அளவை என்பதையும் காட்சியளவை என்பதையும் உணர்ந்து கொண்டு உரையெழுதுவதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார் பரிமேலழகர். இத்தகைய தர்க்க அறிவியல் சார்ந்த நெறிமுறையைப் பற்றியே இந்தக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது குறட்பாச் சீர்களை அவற்றின் உள்ளடக்கம் அறியும் கருவிகளாகத் தான் பயன்படுத்திக் கொள்வதாகப் பரிமேலழகர் கூறுகிறார். இவ்வாறு குறட்பாத் தொடர்களிலிருந்து பரிமேலழகர் பெற்றுக் கொண்ட ‘பொருட்செல்வத்தைப்’ பற்றிய ஆய்வு தொடர்கிறது.

பலருக்கும் பொதுவான ‘பனுவல்’

ஒழுக்கத்தை வற்புறுத்தாத சமயங்களோ சமுதாயமோ இல்லை. எல்லாச் சமயங்களுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் ஒழுக்க நெறி பொதுவானது. இன்றியமையாதது. மானுடத்திற்கு அழியாப் புகழை அளிப்பது. திருவள்ளுவர் கூறிய பத்து உடைமைகளில் அதுவும் ஒன்று. இல்லறத்தில் கடைப்பிடிக்கப்படும் அவ்வொழுக்கம் துறவறத்தில் பிசகிவிடுமானால் அது கூடாவொழுக்கம் ஆகிவிடும். அதனால்தான் அதனை உலகத்து நூல்களெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு” (21)

என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

“தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும்  இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு”

என்னும் பொழிப்புரையைத் தொடர்ந்து பரிமேலழகர் எழுதுகிறார்.

‘பனுவல்’ எனப் பொதுப்பட கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம்.

‘நூல்கள் சொல்லுகின்றன’ என்பதுதான் குறட்பா கூறவரும் கருத்து. ஆனால் எத்தகைய நூல்கள் அல்லது எந்தச் சமயத்து நூல்கள் என்பதைத் திருவள்ளுவர் கூறவில்லை. நூலின் அகக்கட்டுமானத்தைக் கருத்திலிருத்தி உரையெழுதும் பரிமேலழகர் ‘எல்லாச் சமயத்திற்கும் திருவள்ளுவர் பொதுவானவர்’ என்னும் தனது உட்கிடக்கையை இதன் வழி வெளிப்படுத்துகிறார். பரிமேலழகர் உரையில் எல்லாச் சமயத்து நூல்களும் உரைவிளக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நோக்குதற்குரியது.

‘பனுவல்’ என்பது எல்லாச் சமயங்களையும் தழுவி நிற்கும் ஒரு பொதுச்சொல் திருவள்ளுவர் ‘பனுவல்’ என்று பொதுப்படக் கூறுகிறாரேயன்றி ‘இன்ன சமயத்து நூல்’ என விதந்தோதவில்லை. அது மட்டுமன்றி இணக்கமான சமயங்கள் என்றும் முரண்பட்ட சமயங்கள் என்றும் வடகலை, தென்கலை என்றும் பாசுரங்கள், பதிகங்கள் என்றும் வழங்கப்படும் சொற்களை நோக்கினால் உண்மை புரியக்கூடும். எனவே மாறுபடு சமயங்கள் வேறுவேறாயினும் ஒழுக்கம் என்பது மாறாத எல்லாரும் ஏற்றுக் கொள்கிற ஒன்று. இதனைத்தான் பரிமேலழகர் அந்தப் பொதுச்சொல்லிலிருந்து பெற்றுக் கொண்டதாக எழுதிக் குறட்பாவின் பொருளடர்த்தியை மிகுவிக்கிறார்.

இனித் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமயச் சிமிழுக்குள் அடக்க முற்படுவாருக்கும் பரிமேலழகர் வடமொழிச் சார்பாளர் என்னும் கருத்தியல் கொண்டவர்க்கும் அவரை வைணவர் என அடையாளப்படுத்துவார்க்கும் இவ்வாறு பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரைநெறியே அவர்தம் கருத்து பிசகானது என்பதற்குப் போதுமான சான்றாகலாம். அதாவது பரிமேலழகர் எந்த நிலையிலும் எந்தக் குறடபாவிலும் தன் கருத்தினைத் திருக்குறளுக்கு ஏற்றிக் சொல்லவில்லை என்பதாம். காரணம் திருவள்ளுவர் எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் பொதுவானவர் என்னும் கருத்தியலால் கவரப்பட்டவர் பரிமேலழகர் என்பதும் அதனைக் கருத்திற்கொண்டே அவர் உரை அமைந்திருக்கிறது என்பதும் இங்கே முன்னெடுக்கப்படுகிறது.

‘இனிய’, ‘இன்னாத’ எப்படிச் சொற்களாகும்?

‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தின் இறுதியில் அமைந்திருப்பது,

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

என்னும் குறட்பாவாகும். இந்தக் குறளை உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். ‘இனிய’ என்பது பண்படியாகப் பிறந்த உடன்பாட்டுப் பெயர்ச்சொல். அதாவது ‘இனிமையானவை’ என்பது பொருள். ஆனால் ‘எவை இனிமையானவை?’ என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதுபோலவே ‘இன்னாத’ என்பதும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர்ச்சொல். அதாவது ‘இன்னாதவை’ என்பது பொருள். ஆனால் “எவை இன்னாதவை?” என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதிகாத்தின் தலைப்பு ‘இனியவை கூறல்’ என்பதாகும். பரிமேலழகரின் பொழிப்புரை இப்படி அமைகிறது.

“அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது, பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல் இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னா காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

‘இனிய, இன்னாத’ என்று குறிப்பாகவே குறட்பாவில் பயின்றிருக்கப் பரிமேழகர் அவற்றிற்கு ‘இனிய சொற்கள்’ ‘இன்னாத சொற்கள்’ என உரைகாண்கிறார். அவ்வாறு உரை காண்பதற்கு அந்தக் குறட்பாவில் ஏதேனும் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது. இருப்பதும் அவருக்குத் தெரிகிறது!. எங்கே? ‘கூறல்’ என்ற வினைச்சொல்லை நோக்கி உரையெழுதுகிறார். சொல்லைத் தானே கூறுவார்கள்?. எனவே ‘கூறல்’ என்ற வினைச்சொல் பொதுவாக அமைந்திருப்பதால் ‘சொற்கள்’ என்பதாகத் தான் உரை காண்பதாக விளக்கமளிக்கிறார்.

“கூறல் என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்”

இது பரிமேலழகரின் சுருக்க உரை. ‘இன்னாத கூறல்’ என்னும் தொடரில் உள்ள ‘கூறல்’ என்னும் உடன்பாட்டை உற்று நோக்கி, அதனை ‘இனிய’ என்பதோடு எதிர்மறையாகப் பொருத்தி உரை காணும் நுண்ணியம் உணரத்தக்கது. அதிகாரத்  தலைப்பு, குறட்பாவில் சொற்களின் பயன்பாடு ஆகியவற்றை நோக்கி உரையெழுதுவதை இயல்பாகக் கொண்ட பரிமேலழகர் தான் உரைகாண்பதற்கான மூலத்தைக் குறட்பாவிலிருந்தே காட்டுவதைக் காணலாம்.

என்பில்லாததும் அன்பில்லாததும்

மேலே காட்டிய குறட்பாவில் ‘கூறல்’ என்னும் வினையால் சொற்கள் என்பதைப் பெற்றுக் கொண்டதைப்போல இன்னொரு குறட்பா அமைந்திருக்கிறது. ‘அன்பு’ என்பது உயிர்ப்பண்பு. அப்பண்பு இல்லாவிடின் மானுடம் சிறக்காது. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது வள்ளுவம் அத்தகைய அன்பு ஒருவனுக்கு இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாவான் என்பது வள்ளுவர் சொல்லவரும் கருத்து. இதனை ஓர் உவமத்தின் வழி நின்று விளக்குகிறார்.

“என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்” 77

என்பது அந்தப் பாட்டு. இதற்கு,

“என்பில்லாத  உடம்பை வெயிற் காய்ந்தாற்போலக் காயும், அன்பில்லாத உயிரை அறம்”

எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். இந்தக் குறட்பாவில் ‘என்பிலது’ எனவே இருக்க, பொழிப்புரையில் ‘உடம்பு’ என உரைகாண்கிறார். அதுபோலவே ‘அன்பிலது’ எனவே குறட்பாவில் இருக்க ‘உயிர்’ என உரை காண்கிறார். இவ்வாறு அவ்விரு சொற்களுக்கும் உரைகண்டதற்குரிய காரணத்தை விளக்குகிறார். உடம்பும் எலும்பும் இணைந்தேயிருக்கும். எலும்பில்லாத உடம்பு என்றால் அதனால் நிற்க இயலாது. வெப்பத்தைத் தாங்காது. மென்மையான தோல் மட்டுமே இயக்கத்திற்கு உதவும் ‘புழு’ என்பது கருத்து. அன்போடு இயைந்த வழக்காதலின் அன்பு உயிர்ப்பண்பு ஆயிற்று. எனவே அன்பிலது என்பதனால் அன்பில்லாத உயிர் என்பது கருத்து. இதனை,

“என்பிலது என்றதனான் உடம்பு என்பதும் அன்பிலது என்றதனான் உயிர் என்பதும் பெற்றாம்.”

திருவள்ளுவர் சொன்ன சொற்களிலிருந்து சொல்ல நினைத்த கருத்தினைப் பெற்றுக் கொள்ளும் பரிமேலழகரின உரைத்திறன் இதுவாம்.

‘பாவம்’ மறுமைக்கானது

மாற்றானுடைய மனைவியை விரும்பியொழுகும் ஒழுக்கத்தை வன்மையாகக் கண்டிப்பது திருக்குறள். அவ்வாறு விரும்பி ஒழுகுபவனிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளாக நான்கினைப் பட்டியலிடும் குறட்பா இவ்வாறு அமைந்திருக்கிறது.

“பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்”  146

“பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்” என்பது இப்பாட்டிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புரை. இந்தப் பாட்டு இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தை அடுத்து அமைந்துள்ளது. இல்லறவியலில் சொல்லப்படும் எதிர்மறை நெறிகளுக்கான விளைவு இம்மைப் பயன் இழப்பதே, இல்லறம் இம்மை நோக்கியதாதலின். ஆனால் பிறனில் விழைதலாகிய இம்மைப் பாவத்தைச் செய்பவன் மறுமைப்பயனையும் இழக்கிறான் எனச் சொல்ல வரும் பரிமேலழகர்  பார்வையில் ‘பாவம்’ என்னும் சொல் படுகிறது.

“எனவே இருமையும் இழத்தல் பெற்றாம்.”

என்னும் ஒரு தொடரால் பிறனில் விழைபவனுக்கு மறுமைப்பயனும் கிடையாது எனத் தெளிவுபடுத்துகிறார். அதாவது பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கனுள் ‘பாவம்’ மறுமைக்காக, ஏனைய மூன்றும் இம்மைப் பயனை இழக்கச் செய்வது. எனவே இருமைப் பயனையும் அவன் இழப்பதாக உரையெழுதுகிறார். குறட்பாவில் பயின்று வந்துள்ள சொற்களை அப்படியே பின்பற்றி உரையெழுதாமல் ஆசிரியரின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப நுட்பமாக உரையெழுதும் அவருடைய ஆற்றல் இதனால் புலப்படக் கூடும்.

களிற்றை எதிர்ப்பதுதான் காளையின்  வீரம்

‘என’ என்னும் எச்சத்தால் ஆகம அளவை என்பதைப் பெற்றுக் கொள்கிறார். ‘கூறல்’ என்னும் தொழிற்பெயரால் ‘சொற்கள்’ என்னும் செயப்படுபொருளைப் பெற்றுக் கொள்கிறார். ‘என்பிலது’ என்பதால் உடம்பையும் ‘அன்பிலது’ என்பதால் உயிரையும் பெற்றுக் கொள்கிறார். பயின்று வந்துள்ள சொற்களின் சரியான பொருத்தப்பாட்டினை அறிந்து பாவம் என்பது மறுமைக்கானது என்பதைப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வகையாகவும் அவர் இவ்வாறு பெற்றுக் கொள்வதை அறிய முடிகிறது. சித்திரிக்கும் காட்சியைக் கொண்டு சித்திரிக்கப்படாத காட்சியைப் பெற்றுக் கொள்கிறார்.

பொருட்பாலில் படையினது தன்மை எனப் படையினது இயல்புகளைக் கூறும் அதிகாரத்திற்குப் ‘படைமாட்சி’ என்று பெயர். படை அங்கங்களுள் சிறந்தது என்பதும் அதனுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும் அதுதன்னுள்ளும் வீரன் சிறந்தவன் என்பதும் அந்த அதிகாரம் விளக்கும் பொருண்மையாகும். அந்த வீரனின் வீரச்செருக்குப் பற்றிக் கூறுவதே அடுத்த அதிகாரமாகிய  ‘படைச்செருக்கு’. இந்த அதிகாரத்தில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்” (774)

இந்தக் குறட்பா ‘படைச் செருக்கு’ என்னும் அதிகாரத்தில் வருகின்ற பத்துப்பாடல்களில் நான்காவதாக அமைவது. போர்க்களத்தில் எதிர்கொள்கின்ற இடர்களைப் பொருட்படுத்தாது மேன்மேலும் முன்னோக்கிச் செல்லும் போராண்மையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது. இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்ற வேலைக்கண்டு பறித்து மகிழும்”

என்று விளக்குகிறார். பாட்டில் சொல்லப்படும் கருத்துக்கள் இரண்டே.

  1. கைப்படையாகிய வேலைக்கொண்டு தன் மேல் முதலில் பாயவரும் களிற்றினை உயிரோடு போக்குகிறான்
  1. தொடர்ந்து தன் மேல் பாயவரும் களிற்றினை எறிவதற்கு வேல் இல்லையே என்ற நிலையில் ஏற்கனவே பகைவர்கள் எய்து, தன் மார்பில் தைத்திருக்கும் வேல்களில் ஒன்றினைக் கண்டு மகிழ்கிறான். அவ்வளவுதான்!.

பரிமேலழகர் சிந்தனையில் கூடுதலாக மூன்று வினாக்கள் தோன்றுகின்றன.

  1. முதலில் தாக்கியது களிறு என்பது சரி. தொடர் தாக்குதலுக்கு வந்ததும் களிறுதானா? என்பதற்கான குறிப்பு பாட்டில் இல்லை.
  2. வேல் கிடைக்காது திகைத்தவன் தன் மார்பில் தைத்த வேல்கண்டு மகிழ்கிறான் என்றால் அவன் மார்பில் பகைவர்களின் வேல் தைத்ததை அவன் அறியவில்லை. இந்தக் குறிப்பு பாட்டில் இல்லை.
  3. ஒரு களிறு அடக்கியது போதுமென எண்ணாது தொடர்போரில் அவன் மனம் ஈடுபட்டது என்பது பாட்டில் குறிக்கப்படவில்லை.

ஆனால் இந்த மூன்றும் இருந்தால்தான் அது படைச்செருக்கு. ‘படைச்செருக்கு’ என்பதற்கு வீரத்தனம் என்பது பொருள். வழக்கில் இது ‘சூரத்தனம்’ எனப்படும். படைவீரர்களின் போர்க்குணம். இந்தப் போர்க்குணத்தைத் தம் மனக்காட்சியால் பெற்றுக் கொண்டு உரையெழுதுகிறார் பரிமேலழகர்.

“இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம் சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன.”

இரண்டு வினைகளோடு முற்றுப்பெறும் ஒரு குறட்பாவை ஐந்து வினைகளோடு முடித்துக்காட்டும் பரிமேலழகரின் உரைத்திறனை என்னென்பது? எப்படிப் புகழ்வது?

நிறைவுரை

குறட்பாவிலிருந்து இவ்வாறு வேண்டியனவற்றைப் பெற்றுக் கொண்டு உரையெழுதும் இத்தகைய உரைநெறி பரிமேலழகர் உரையில் ஏறத்தாழ தொண்ணூறு (90) இடங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த உரைநெறியை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கை கொண்டும் அளக்க முடியாது. அதனால் அளக்கவும் கூடாது. அளந்தால் பயன் தராது. இந்த உரை நெறி தமிழுக்கேயுரியது. உலகமொழி இலக்கியங்களில் காணற்கரிய காட்சி இது. தமிழ் உரையாசிரியப் பெருமக்களின் உரைநெறிகள் தனித்த நோக்கிற்கும் ஆழமான ஆய்வுக்கும் உரியவை. மூலநூல் ஆசிரியனின் உள்ளம் கண்டுணரும் பேரார்வம் இருந்தாலேயொழிய இத்தகைய உரைத்திறன் கைவரப்பெறுவது அரிது. பரிமேலழகருக்கு அந்த ஆர்வம் அளவு கடந்தது. அதனால் அது கைவரப்பெற்றது!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *