வலி (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி
எல்லோருக்கும் வணக்கம் என்றார் டாக்டர் .
அவர் இன்றுடன் இந்த மருத்துவமனையில் சேர்ந்து பத்து வருடங்கள் முடியப் போகிறது .
உங்கள் அனைவருக்கும் நன்றி என ஆரம்பித்தார் .
நாம் எல்லோரும் சின்ன அல்லது பெரிய தப்புகளைச் செய்திருப்போம் . நான் உள்பட.
இந்தக் கூட்டத்தில் எல்லோரும் அதனை உண்மையாகச் சொன்னால் நான் மகிழ்வேன். எந்தத் தவறுக்கும் தண்டனை எந்த வகையிலும் இல்லை. இந்தக் கூட்டம் குற்ற உணர்ச்சியை எடுக்க மட்டுமின்றி, இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்றார்
யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை .
சரி , நான் ஆரம்பிக்கிறேன் . நான் வந்த புதிதில் ஒரு முதிய பெண்மணியிடம் மிகக் கடிந்து பேசி அவர்களை கிட்டத்தட்ட அழ வைத்து இருக்கிறேன். அப்போது மன்னிப்பு கேட்க கூட ஒரு முதிர்ச்சி இல்லை .
சார் நான் சிஸ்டர் கற்பகம் – ஒருவர் ரத்த தானம் கொடுக்க வந்தபோது அதிகமாக ரத்தம் எடுத்துவிட்டேன். அவர் மயங்கி விழுந்து எழுந்துவிட்டார். என்றாலும் இன்னும் வலிக்கிறது
மத்தவங்களும் சொல்லுங்க.
சார் நான் .
உங்க பெயரைச் சொல்லிட்டு ஆரம்பிங்க .
டேவிட் சார் .
சொல்லுங்க
நான் ஒருத்தர்க்கு ப்ளட் க்ரூப் மாத்திப் போட்டேன். ஆறு மாசம் கழிச்சு அவர் விலாசம் கண்டுபிடிச்சு சொல்லிட்டேன். ஆனாலும் தப்பு தப்பு தான் .
அடுத்து என்றார் .
நான் பிரபா .நான் ஒரு பேஷன்ட் கிட்ட கடன் வாங்கினேன் . அதைத் திருப்பியும் தரல. அவரும் இப்ப இறந்துட்டுதாகச் சொல்றாங்க
ம் . அடுத்து
நான் ஏழுமலை சார் .டெட்டால் பெனாயில் அடிக்கடி எடுப்பேன் .
எப்படி?
சாப்பாடு டிபன் பாக்ஸ்ல .
ம் என்றார்
அடுத்து?
நான் வீட்டுக்கு ப்ரூட் ஜூஸ் எடுத்துண்டு போவேன் .அது பேஷண்டுக்கு வாங்கினது
பேரச் சொல்லுங்க ?
சாவித்திரி
நான், பிறந்த குழந்தையோட பிறந்த நேரத்தையே மாத்திப் போட்டுட்டேன் . ஒன்னரைக்கு பிறந்த குழந்தையை இரண்டரைன்னு எழுதிட்டேன் .அதைப் பின்னால மாத்த பயம் .
அடுத்தது ..
சார் நான் வின்சென்ட் . இந்த வேலைக்கு நான் லஞ்சம் கொடுத்தேன் சார். மாசா மாசம் சம்பளம் வாங்கும்போது குத்துது சார். வாங்கினவர் போன வருஷம் இறந்துட்டாரு
நெக்ஸ்ட்
சார் இன்னும் முடியல .
சொல்லுங்க .
கோச்சிக்காதீங்க . அந்த பணம் வாங்கினவர் உங்க அண்ணன் .
நெக்ஸ்ட் .
யாரும் பேசவில்லை .
டாக்டர் என்ன சார் செய்யப் போறீங்க .
என் வலிக்கு ஒரே மருந்து நான் வேலையை விட்டுப் போறதுதான் .
சார் நாங்க .
அது உங்க இஷ்டம். இது சுய தண்டனை .
உங்களுக்கு வலி முக்கியமா, வாழ்க்கை முக்கியமான்னு நீங்க முடிவு பண்ணுங்க தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் .
அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த மருத்துவமனை பரபரவென இயங்கத் தொடங்கியது .