Tag: வெ. சுப்ரமணியன்

  • கெம்மண்குண்டி சுற்றுலாத் தலம்

    கெம்மண்குண்டி சுற்றுலாத் தலம்

    கர்நாடக மாநிலம், சிக்மகளூரு அருகில் உள்ள கெம்மண்குண்டி என்ற சுற்றுலாத் தலம் குறித்து அறிவீர்களா? அங்கே சென்று வந்த வெ.சுப்ரமணியன், இந்தப் பதிவின் மூலமாக நம்மையும் அங்கேயே அழைத்துச் செல்கிறார். அவருடன் இணைந்து, இயற்கை அழகு கொஞ்சும் இந்த மலையைக் கண்டு களிப்போம் வாருங்கள்.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

    பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

    பச்சைப் பட்டாணி சுண்டல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எழுத்தாளர் சாய் குமார் நேர்காணல்

    எழுத்தாளர் சாய் குமார் நேர்காணல்

    பல்துறை வித்தகராக விளங்கும் எழுத்தாளர் சாய் குமார், ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் 25 நூல்களை எழுதியுள்ளார். பாடல் பெற்ற தலங்கள், திவ்விய தேசங்கள், புராணத் தலங்கள் என நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு நேரில் சென்று வணங்கியுள்ளார். மற்றவர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, அந்தந்தக் கோவில்களின் தல வரலாற்றுடன், அனைத்து விவரங்களுடன் வழிகாட்டி நூல்களை வெளியிட்டுள்ளார்.

    எழுத்துடன் பாடவும் தெரிந்த இவர், ஆயிரம் கச்சேரிகள் செய்துள்ளார். ஆண்டுதோறும் 15 படிகளில் கொலு வைத்துப் புதுமைகள் செய்து வருகிறார். கீபோர்டு வாசிக்கத் தெரிந்தவர். கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றைப் படித்து ஆவணப்படுத்துகிறார். சமஸ்கிருதத்திலும் பட்டயம் பெற்றுள்ளார். சாய் குமாரின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணலின் வழியே வெளிக்கொண்டு வந்துள்ளார், வெ.சுப்ரமணியன். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி?

    பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி?

    கொலு முடிந்த பிறகு, பொம்மைகளைப் பாதுகாப்பாக எடுத்து வைப்பது, மிக முக்கியப் பணி. இதில் மிகுந்த கவனமும் பொறுமையும் வேண்டும். இதை எப்படிச் செய்வது? இதோ விளக்குகிறார், வெ.சுப்ரமணியன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவனை நம்பிய இஸ்லாமியர்

    சிவனை நம்பிய இஸ்லாமியர்

    சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. மத நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளம். இந்தியாவின் ஒற்றுமைக்கு ஓர் உதாரணம். வெ.சுப்ரமணியன் சொல்லும் சம்பவத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீபிரியா ஆனந்த் வீட்டுக் கொலு

    ஸ்ரீபிரியா ஆனந்த் வீட்டுக் கொலு

    சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஸ்ரீபிரியா ஆனந்த், முதல் முறையாகக் கொலு வைத்திருக்கிறார். இராமர் பட்டாபிஷேகம், வள்ளித் திருமணம், காந்தியடிகள் ரவுண்டானா எனப் பலவும் இவரது கொலுவை அலங்கரிக்கின்றன. இவர் மகள், வன உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் தனித் தனியே சரணாலயம் அமைத்துள்ளார். சிங்கங்களை இப்படித் திறந்துவிட்டிருக்கிறீர்களே, ஆபத்து இல்லையா? என வெ.சுப்ரமணியன் கேட்டதற்கு ஸ்ரீபிரியாவின் பதில் அழகானது. தேவியரையும் தெய்வங்களையும் தரிசிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    நவராத்திரி என்றாலே கொலுவும் சுண்டலும் நமக்கு நினைவுக்கு வரும். அந்தச் சுண்டலிலும் ஏராளமான வகைகள் உண்டு. கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி என்பதை இன்று செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 5

    இதயம் திறந்த அனுபவங்கள் – 5

    வெ. சுப்ரமணியன்

    நோயாளி ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருக்கலாம். நோயாளிக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்து அவரது சிகிச்சைக்காக முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதித்து வழங்கப்பட்டிருப்பின் மீதமுள்ள தொகைக்கான கேட்பு (claim) மருத்துவமனையால் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் முன்பணத்தைக் கழித்துக் கொண்டு அனுமதிக்கக் கூடிய மீதமுள்ள தொகையை மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி விடும்.  காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகைக்கும் அதிகமாக நோயாளி  ஏதாவது தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தியதும் மருத்துவமனையை விட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார்கள். ஆரோக்கியக் காப்பீடு இல்லாத நோயாளி அவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டபோது செலுத்திய முன்பணம் போக மீதமுள்ள தொகையைச் செலுத்துதல் வேண்டும்.

    நோயாளி வீட்டிற்குச் செல்லும் முன் அவரிடம் அவருக்குச் செய்யப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளின் முடிவுகளும் மற்றும் சுருக்கமான வெளியேற்றக் குறிப்பு (Discharge summary). ஆகியவை அடங்கிய கோப்பு (file) ஒப்படைக்கப்படும்.

    இக் கோப்பு மிக முக்கியமானது. இதில்தான் நோயாளியின் மருத்துவ வரலாறு, செய்யப்பட்ட அறுவைச்சிகிச்சை குறித்த மருத்துவக் குறிப்புகள்,  நோயாளிக்கு அடுத்த மருத்துவ ஆலோசனை நாள் (next consultation date) வரை கொடுக்கப்பட வேண்டிய மருந்துகளின் விபரம் அடுத்த முறை ஆலோசனைக்கு வருமுன் நோயாளி செய்து கொண்டு வர வேண்டிய பரிசோதனைகள் ஆகிய அனைத்தும் குறிக்கப்பட்டு இருக்கும். இந்தக் கோப்பு வருங்காலங்களில் மருத்துவரை ஆலோசனைக்காகநோயாளி சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

    மேலும் அதில் அடுத்த மருத்துவ ஆலோசனைக்கு முன் வீட்டில் இருக்கும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கீழ்க்காணும் பட்டியலும் (list) இருக்கும்.

    அ) 101. 5° F  அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் (fever of 101. 5° F  and above)

    ஆ) புதியதாக வலி ஏற்பட்டாலோ அல்லது பழைய வலி அதிகரித்திருப்பதாக உணரப்பட்டால் ( newly developed pain or worsening of old pain)

    இ) கீறல் தளங்கள்  சிவத்தல், வீக்கம் அல்லது அவற்றிலிருந்து இரத்தப்போக்கு அல்லது திரவம் வடிதல் (reddening and swelling of incision area or bleeding or liquid dicharge)

    ஈ) உணர்வு நிலையில் மாற்றம் (altered level of consciousness)

    உ) சுவாசிப்பதில் சிக்கல் (difficulty in breathing)

    ஊ) விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (fast or irregular heartbeat)

    எ) கால்களில் வீக்கம் ( swelling of legs)

    ஏ) கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை (numbness in hands and feet)

    ஒ) தொடர்ந்து குமட்டல் அல்லது வாந்தி (nausea or vomitting)

    ஓ) இவை தவிர வேறு குறிப்பிடத்தக்க கவலையளிக்கும் அறிகுறிகள் ( Any other symptoms of concern)

    வீட்டிற்கு வந்த பின் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த மூன்று நாட்களுக்குப் பின் மார்பு எக்ஸ்ரே படமும் (Chest X – ray image), முழு இரத்த அணுக்கள் சோதனையும் (Complete Blood Count – CBC) மேற்கொண்டு அதன் முடவுகளுடன்  இதய மருத்துவரையும் அறுவைச் சிகிச்சை நிபுணரையும் சந்திக்கும்படி என்னுடைய வெளியேற்றக் குறிப்பில் (Discharge Summary) தரப்பட்டிருந்தது.

    அடுத்து இரத்தச் சர்க்கரை அளவு சோதனைகளான உணவு உட்கொள்ளாநிலையில் (fasting blood sugar), உணவு உட்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின் (Post Prandial Blood sugar) ஆகியவற்றின் முடிவுகளுடன் நீரிழிவு நோய் நிபுணரிடம் ஆலோசனை பெறும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்பின் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மருத்துவ ஆலோசனை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    முதல் வாரம் ஆறு பத்து நிமிடங்களாகப் பிரித்துக் கொண்டும், இரண்டாம் வாரத்தில் நான்கு பதினைந்து நிமிடங்களாகவும், மூன்றாம் வாரத்தில் மூன்று இருபது நிமிடங்களாகவும், நான்காவது வாரத்தில் இரண்டு முப்பது நிமிடங்களாகவும் பிரித்துக் கொண்டு நடக்கலாம். ஐந்தாவது வாரத்திலிருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நடக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அதிகம் உடல் சோர்வு ஏற்படும்படி அதிக நேரம் தொடர்ந்து நடப்பதோ அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் இயங்காமல் இருப்பதோ கூடாது.

    அடிக்கடி இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை அளவுகளைப் பரிசோதித்து அறிந்து கொண்டு அவற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது இருமுறையாவது இயன்முறை மருத்துவர் சொல்லிக் கொடுத்த உடற்பயிற்சிகளையோ (physical exercises) அல்லது அரைமணி நேரம் யோகாவோ (yoga) கண்டிப்பாக செய்தல் வேண்டும்.

    அடுத்ததாக மருத்துவமனையின் சார்பாக கொடுக்கப்படும் உணவுத் திட்ட அட்டவணையில் (Diet chart)  உட்கொள்ள வேண்டிய காய்கறிகள், பழங்கள், தானியங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் அன்றாடம் உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும்.

    அறுவை சிகிச்சையின் போது தையலிடப்பட்ட பகுதிகளைச் சுத்தமாகவும், உலர்ந்ததும் இருக்குமாறு வைத்திருப்பது முக்கியம்.

    மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பரிந்துரைத்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர் சொல்லும் வரையில் எந்த வகையான வாகனங்களையும் இயக்கக் கூடாது.

    கொரோனா காரணமாக இதய நோயாளிகள் இன்றைய கால கட்டத்தில் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அப்படித் தவிர்க்க இயலாமல் வெளியே செல்ல வேண்டியிருப்பின் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுதல் மற்றும் அதிகக் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் மேற்கொள்ள வேண்டும்.

    அறுவைச் சிகிச்சைக்குப் பின் மேற் சொன்ன ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தால் இதயப் பிரச்சினைகள் எதுவும் அணுக அதிக வாய்ப்பிருக்காது.

    முற்றும்.

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 4

    இதயம் திறந்த அனுபவங்கள் – 4

    வெ. சுப்ரமணியன்

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால்  நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit – PACU) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம்.

    கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் .

    Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/

    இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP), மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன.

    சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Single private room) இருக்கலாம்.

    நோயாளி மீட்பு அறையில்  முக்கால் மணி நேரம் முதல் முதல் இரண்டு மணி நேரம் சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்களால் தீவிரக் கண்காணிப்புக்கு உடபடுத்தப்படுவார். நோயாளிக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையைப் பொறுத்தும் மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து எவ்வளவு விரைவாக மீண்டு விழித்தெழுகிறார் என்பதைப் பொருத்தும் நோயாளி இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான காலத்திற்குக் கூட மீட்பு அறையில் இருக்க வேண்டியிருக்கலாம்.

    செவிலியர்கள் நோயாளியின் முக்கிய அறிகுறிகள் அனைத்தையும் கண்காணித்து அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள்.  மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவானது (Post Anesthesia Care Unit – PACU) நோயாளியின் முக்கிய அறிகுறிகளை உன்னிப்பாகக் கவனித்துத் தேவையான திரவங்களை உட் செலுத்தலும், வலி ​​மேலாண்மையும் (pain management) தொடங்கப்படும் ஒரு முக்கியமான பராமரிப்பு அலகு (care unit) ஆகும். நோயாளி மயக்கநிலை தெளிந்து எழுந்ததும் அவருக்குச் சில உடல் ரீதியான சங்கடங்கள் இருக்கலாம்.

    அடுத்து தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ)க்கு மாற்றப்படும் நோயாளி அங்கு உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார். நோயாளியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் தொடர்ந்து  எலக்ட்ரோ கார்டியோகிராம் (E.C.G) தடமறிதல், இரத்த அழுத்தம், பிற அழுத்த அளவீடுகள், சுவாச வீதம் மற்றும் உங்கள் ஆக்ஸிஜன் அளவைக் காண்பிக்கும்.

    Picture courtesy: https://healthmanagement.org/products/view/resp-multi-parameter-monitor-nibp-temp-ibp-17-tft-vizor-17-heyer-medical

    இதயத் தமனி புறவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைசிகிச்சைக்குக்குப் பின்னர் (CABG) குறைந்தபட்சம் ஒருவாரம் மருத்துவமனையில் தங்க வேண்டும்.

    சுவாச இயந்திரம் அதாவது  வென்டிலேட்டர் (Ventilator) மூலம் சுவாசிக்க உதவுவதற்கு உங்கள் தொண்டையில் ஒரு குழாய் வைக்கப்பட்டு இருக்கும். நோயாளி போதிய அளவுக்கு நிலையாகத்  தானாகவே சுவாசிக்கும் வரையில் சுவாச இயந்திரம் இணைக்கப்பட்டு செயல்பாட்டிலேயே இருக்கும்.

    Picture courtesy: https://m.indiamart.com/proddetail/icu-ventilator-siemens-300-16415709891.html

    நான் சுய நினைவை மீண்டும் அடையப் பெற்ற பின்னர் எழுதப்பட்டவை என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலானவை.

    மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டுத் தொடர்ந்து நோயாளி சுயமாக சுவாசிக்கத் தொடங்கும் போது,  அதிக அளவில் சுயமாகச் சுவாசிப்பதை  அனுமதிக்கும் வகையில் மருத்துவர் சுவாச இயந்திரத்தின் செயல்பாட்டை மாற்றியமைக்கக்கூடும்.

    நோயாளி போதுமான அளவு விழித்திருந்து சுயமாகவும் முழுமையாகவும் சுவாசிக்க தொடங்கி அவரால் இருமவும் (cough) முடிந்தால், மருத்துவர் சுவாசக் குழாயை அகற்றி விடுவார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொதுவாக அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நாளிலோ அல்லது மறுநாள் அதிகாலையிலோ சுவாசக் குழாய் (Breathing tube) அகற்றப்படும். அவ்வாறு அகற்றும் போதே மருத்துவர்  வயிற்றுக் குழாயையும் அகற்றி விடுவார்.

    சுவாசக் குழாயை வெளியே எடுத்த பிறகு நோயாளியின் நுரையீரலில் சளி சேர்ந்து நிமோனியா (Pneumonia) ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஆழ்ந்த மூச்செடுத்து இருமி சளியை வாய் வழியே வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியம். இதன் பொருட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நோயாளி ஆழ்ந்த மூச்சு எடுத்து இரும வேண்டும். இதனைச் செவிலியர் உதவியுடன் செய்தாலுமே மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள புண்கள் காரணமாக இது மிகச் சிரமமானதாக இருக்கும். ஆனால் மார்போடு ஒரு தலையணையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு இருமினால், இருமும் போது ஏற்படும் வலியையும் சிரமத்தையும் தணிக்கலாம். எனக்கு மருத்துவமனையில் மார்புடன் இறுக்கமாகப் பிணைத்துக் கொள்ளும் (chest brace) வெல்க்ரோ (velcro) அமைப்புடன் கூடிய சிறியதொரு சதுர வடிவிலான மார்பெலும்புத் திண்டு (sternum pad)  தரப்பட்டது.

    இதய அறுவைச்சிகிச்சைக் கீறல் காயங்கள் (CABG incision wounds) பல நாட்களுக்கு மென்மையாகவோ (tender) அல்லது புண்பட்டோ (sore) இருக்கலாம்.  இதனால் ஏற்படும் வலிக்கு மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணியை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரின் (Asprin) அல்லது வேறு சில வலிநிவாரணிகள் இரத்தப்போக்கு ஏற்படும் (bleeding) வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

    மருத்துவர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு உதவவும், இரத்தப்போக்கு தொடர்பான எந்தவொரு சிக்கலையும் கட்டுப்படுத்தவும்  IV குழாய் (IV line) மூலம் மருந்துகளை வழங்கலாம். நோயாளியின் உடல்நிலை சீராகும்போது, படிப்படியாக மருந்துகளின் அளவைக் குறைந்துப் பின்னர்  நிறுத்துவார். மருத்துவர் சுவாச மற்றும் வயிற்றுக் குழாய்களை அகற்றிய பின்னர் நோயாளி நிலையாக (stable) இருந்தால், அவர் திரவ உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கலாம். நோயாளியால் திட உணவுகளை உண்ண இயலுமானால் படிப்படியாகத்  திட உணவுகளை அதிகரிக்கலாம்.

    நோயாளி அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக மருத்துவர் தீர்மானிக்கும்போது, ​​ தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (ICU) அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நர்சிங் பிரிவுக்கு (Postoperative Nursing Care Unit – PNCU) மாற்றப்படுவார். நோயாளியின் மீட்பு (Recovery) அங்கு தொடரப்படும். காலை மாலை இரு வேளைகளிலும் படுக்கையில் இருந்து எழ வைத்துக் குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் நாற்காலியில் அமர வைக்கப்படுவார்.  ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பத்து முறை என்ற அளவில் மூன்று பந்து மூச்சுப் பயிற்சி ( tri ball breathing exercise) செய்வது நல்லது. ஆனால் உணவு எடுத்துக் கொண்ட இரண்டு நேரம் பயிற்சி செய்வது கூடாது. படிப்படியாக நோயாளியின்  செயல்பாடுகள் அதிகரிக்கப்படலாம். இதற்கிடையில் சிறுநீர் வடிகுழாய் (urine catheter) நீக்கப்படும். அறுவைச் சிகிச்சையின் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கசிவு நின்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் மார்பில் வைக்கப்பட்ட குழாயையும் மருத்துவர் எடுத்து விடுவார். நோயாளி திடமான உணவுகளை  எடுத்துக் கொள்ள முடிந்தால் அவற்றை உண்ணலாம். இந்தப்பிரிவில் இரண்டு  தினங்கள் இருந்த பின்னர் நோயாளி நிலையாக (stable) இருக்கும் என்று பட்சத்தில் மூன்றாம் நாளன்று இடது புறங்கையில் இரத்த நாளத்துடன் இணைக்கப்பட்ட ஐ.வி குழாய் தவிர மற்றவை எல்லாம் எடுக்கப்பட்டு விடும். நோயாளிக்கு மலமிளக்கி(laxative) தரப்பட்டு மலம் வெளியேற வழி செய்யப்படும். இடது கையில் உள்ள ஐ.வி குழாய் (IV cannula) அவசரத் தேவைக்காக நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியேறும் வரையில் விட்டு வைக்கப்படும். எல்லா கண்காணிப்புக் கருவிகளின் இணைப்பும் நீக்கப்பட்டு நோயாளி அறைத் தொகுதிக்கு  (ward) அனுப்பப்படுவார்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் வரையில் நோயாளிக்கு உதவியாக இருந்த செவிலியர் அவரது திரவ உணவு மற்றும் நீர் கொடுக்கப்பட்ட விபரங்களையும் (Input) மற்றும்  வெளியேறும் சிறுநீரின் அளவையும் குறித்துக் கொண்டு வருவார். அறைத் தொகுப்புக்கு வந்த பின்பு அதற்காகத் தரப்படும் படிவம் அவ்வப்போது நோயாளியின் உதவியாளரால் தவறாமல் நிரப்பப்பட வேண்டும்.  சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட திரவங்கள் காரணமாக உடலின் நிறை அறுவைச் சிகிச்சைக்கு முன் இருந்ததை விட அதிகமாக இருக்கும். திரவங்கள் வெளியேற வெளியேற உடல் நிறை குறையத் துவங்கும். உடல் நிறை தினசரி கண்காணிக்கப்படும்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போது இயன் மருத்துவர் (Physiotherapist) மார்புச் சளியை வெளியேற்றும் பயிற்சிகளைத் துவக்கியிருப்பார். அறைத் தொகுதிக்கு வந்த பின் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நோயாளியை நடக்க வைத்துச் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வைப்பார். அறைத் தொகுப்புக்கு வந்த இரண்டாம் நாள் இயன்முறை மருத்துவர் நோயாளிக்கு மாடிப் படிகள் ஏறப்  பயிற்சி தருவார். இருப்பினும் ஆறு வார காலத்திற்கு அவசியம் ஏற்பட்டான்றி மாடிப்படிகளில் ஏறுவதை நோயாளி தவிர்க்கலாம்.

    அறைத் தொகுப்புக்கு (ward) வந்ததும் மறுநாள் மார்பு மற்றும் கால்களில் இடப்பட்ட தையல்கள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு ஆறியிருப்பின் பிரிக்கப்படும். இல்லாவிட்டால் நோயாளி மருத்துவ மனையை விட்டு வெளியேறும் தினத்தில் (day of discharge) தையல் பிரிக்கப்படும். அதன் பிறகு குளிக்கும் முறையை மருத்துவர் நோயாளிக்கு விளக்குவார். அந்த முறையில் தையல் இடப்பட்ட பகுதியில் நீர் சேராமல் உடனடியாக மிருதுவான துவாலையால் ஒற்றி எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தையல் இடப்பட்டிருந்த இடங்களை அழுத்தித் துடைக்கக் கூடாது. தையல் பிரிக்கப்பட்ட பகுதிகளில் நகத்தால் காயம் ஏற்படாவண்ணம் மெல்லிய ரப்பர் கையுறைகள் (gloves) அணிந்து தினமும் சோப்புத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தையல் பிரிக்கப்பட்ட பின்னர் நோயாளி தினமும் குளிக்கலாம். குளித்து முடித்ததும் மறக்காமல் பீட்டாடைன் (Betadine solution) கரைசலை தையல் பிரிக்கப்பட்ட இடங்களில் மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரையில் தொடர்ந்து பூசி வர வேண்டும்.

    நோயாளியின் இரத்தச் சர்க்கரை அளவு தினமும் சோதனை செய்யப்படும். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளியின் இரத்தச் சர்க்கரை அளவைச் சார்ந்து அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட காயங்கள் விரைவாக ஆற வேண்டி அவருக்கு இன்சுலின் ஊசி (Insulin injection) குறிப்பிட்ட காலத்திற்குச் செலுத்தப்படலாம். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தால் அதனைக் கட்டுக்குள் வைக்க நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளும் (anti – diabetes drugs) தரப்படலாம்.

    அறுவைச் சிகிச்சை முடிந்த நாளுக்கு மறுதினம், அதாவது இரண்டாம் நாள் முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இதயத் துடிப்பலை வரைவிப்படம் (ECG) நோயாளிக்கு எடுக்கப்படும். தவிரவும் நோயாளியின் இரத்த மாதிரிகள் தினமும் அதிகாலையில் எடுக்கப்பட்டுப்  பரிசோதிக்கப்படும். என்னுடைய நேர்வில் (my case) இருமுறை முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கையும் (complete blood count) ஒருமுறை பிற பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

    அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்த மறுநாள் 

    மீண்டும் அதிகாலையில் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு

    சோடியம் (சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா) ஆகியவையும்

    முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count – CBC) யும் காணப்பட்டன.

    மீண்டும் அறுவைச்சிகிச்சை நடந்து முடிந்த மூன்றாவது நாளில் 

    முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count – CBC)யும் கூடுதலாக சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா) ஆகியவையும் காணப்பட்டன.

    நான்காவது நாளில் 

    முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count – CBC)யும் கூடுதலாக தொடர்பின்றி எடுக்கப்பட்ட இரத்தச் சர்க்கரை அளவும் (random blood sugar) காணப்பட்டன.

    இச் சோதனைகளின் அடுக்கு நிகழ்வு (frequency) மருத்துமனைக்கு மருத்துவமனை நோயாளிக்கு நோயாளி மாறுபடலாம்.

    அறுவைச்சிகிச்சைக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட எல்லாப் பரிசோதனை முடிவுகளும் திருப்தி அளிக்கும் பட்சத்தில் நோயாளி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து எட்டாவது நாளிலிருந்து பத்தாவது நாளுக்குள் மருத்துவமனையிலிருந்து முறைப்படி வெளியேறி (discharge) வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படலாம்.

    தொடரும்..

    Share
  • இதயம் திறந்த அனுபவம் – 3

    இதயம் திறந்த அனுபவம் – 3

    வெ. சுப்ரமணியன்

    அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம்.

    (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும்.

    (2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்து விட்டு மீண்டும் தனது பணி அறைப்பிரிவுக்குத் (duty ward) திரும்பி விடுவார்.

    (3) குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சை நிபுணருடன் அன்றைய தினம் பணிபுரியப் போகும் பணிக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நோயாளியிடம் தனித்தனியாக வந்து நோயாளியின் பெயர் (Name of the patient), வயது(age), இதயமருத்துவரின் பெயர் (Name of the cardiologist) , அறுவைச் சிகிச்சை அளிக்கப் போகும் நிபுணரின் பெயர் (Name of the surgeon) மற்றும் என்ன அறுவைச் சிகிச்சைக்காக (Name of the Surgery) அனுமதிக்கப்பட்டுள்ளார் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து அதனை அவரது இடது கையில் கட்டப்பட்டுள்ள மணிக்கட்டுப் பட்டையுடன் (wristband) அவற்றை ஒப்பிட்டும் உறுதி செய்து கொள்வார்கள். இதனால் நோயாளி மாறிப் போவது மாதிரியான குழப்பங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

    (4) இவ்வாறு குழுவினர்கள் அனைவருமே உறுதி செய்து கொண்ட பின்னரே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்கு செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகளுக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் துவங்குவார்கள்.

    அடுத்தது தூக்குப் படுக்கையிலிருந்து (stretcher) மெதுவாக அறுவைச் சிகிச்சை மேசைக்கு (operation table) மாற்றம் செய்யப்பட்டு  நோயாளி மல்லாந்து (lying on back) இருக்குமாறு கிடத்தப்படுவார்.

    உடலின் புறப் பகுதியில் (peripheral) உள்ள சிரை இரத்தக் குழாய் (vein) வழியாகச் சிறியதொரு பிளாஸ்டிக் குழாயைச் (cannula) செருகுவது ஆங்கிலத்தில் ஐவி லைன் (IV line) அல்லது இன்ட்ரெவனஸ் கேனூலேஷன் (Intravenous cannulation)  என்றழைக்கப்படுகிறது.

    Image source: pixabay https://www.nursesclass.com/2020/06/20-iv-therapy-tips-and-tricks-improve-cannulation-skills.html

    அடுத்தடுத்து சிரை வழியாகத் திரவங்கள், மருந்து மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உடலுக்குள் செலுத்த இம்முறை பயன்படுத்தப்படும். சில சமயங்களில் இந்தக் குழாய் (cannula) வழியே இரத்த மாதிரிகளும் எடுக்கப்படும். இதனைத் தவிர இரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயல்பாடுகளைக் கண்காணிக்க மணிக்கட்டிலும் கழுத்திலும் சிலாகைகள் (Catheters)  இணைக்கப்படும்.

    என்னுடைய சொந்த அனுபவத்தில் இருகைகளிலும் ஐவி குழாய்களை  (IV line) இணைக்கும் வரை சிறு வலியை உணர்ந்தேன். அதன் பின்பு என்ன நடந்தது என்பதை உணரவில்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று விட்டேன். ஆகவே இதன் பின்னர் என்னென்ன செயல்பாடுகள் நிகழ்ந்தன என்பதை என் உறவினரான மருத்துவரிடம் துருவித்துருவிக் கேட்டு அறிந்து கொண்டேன்.

    அறுவைச்சிகிச்சை முழுவதும் மயக்க மருந்து நிபுணர்( anesthetist) இதயத்துடிப்பு (heart beat), இரத்த அழுத்தம் (Blood pressure), சுவாசம் (Breathing) மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார். நோயாளி ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதும் தொண்டை வழியே ஒரு சுவாசக் குழாய் செலுத்தப்படும். இக்குழாய் செயற்கைச் சுவாசக் கருவியுடன் (Ventilator) இணைக்கப்படும்‌. அறுவைச்சிகிச்சை நடைபெறும் போது நுரையீரலின் சுவாசிக்கும் செயலைபாட்டை இக் கருவி மேற் கொள்ளும். அடுத்து ஒரு சிலாகை (Catheter) சிறுநீர்ப்புறவழி வழியாகச் சிறுநீர்ப்பையில் செலுத்தப்பட்டு சிறுநீரை வெளியேற்ற வழி செய்யப்படும். அனைத்துக் குழாய்களும் கண்காணிப்புக் கருவிகளும் (monitors) உடலுடன் சரியாக இணைக்கப்பட்டு அவற்றின் பழுதற்ற செயல்பாடு உறுதி செய்யப்பட்ட பின்னரே அறுவைச் சிகிச்சை தொடங்கப்படும்.

    அறுவைச் சிகிச்சை செய்யவிருக்கும் மார்பகப்பகுதியின் மேல் தோலின் மீது கிருமி நாசினித் திரவம் தேய்க்கப்பட்டுச் சுத்தம் செய்யப்படுகிறது. அடுத்ததாக அறுவைச் சிகிச்சை நிபுணர் கால் அல்லது கையில் இருந்து நீண்ட கீறல் அல்லது கீறல்களை (incisions) ஏற்படுத்துவதன் மூலம் புறவழி ஒட்டுப் (bypass grafting)  போடப் பயன்படுத்தப் போகும் சிரை இரத்தக் குழாயை அடைவார். அந்த இரத்தக் குழாய்களை வெட்டி நீக்கிய பின் கீறல்களைத் தையல் போட்டு மூடி விடுவார்.

    இதற்குப் பின்பு அறுவைச்சிகிச்சை நிபுணர் மார்பின் நடுப்பகுதியில் தொண்டையில் ஆதாமின் ஆப்பிளுக்குச் (Adam’s apple) சற்றே கீழிருந்து தொப்புள் (navel) சிறிது மேல் வரையில் அடுத்து நீளவாக்கில் கீறலிடுவார் (Incision).  மார்பெலும்பு (Sternum)  இரண்டு பாதியாக வெட்டப்பட்டு மார்பகத்தின் பகுதிகள் பரப்பி விரிக்கப்படுவதன் மூலம் இதயம் வெளிப்படுத்தப்படும்.

    இதயத் தமனி புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) –  அழுத்த விசைக்குக் கருவி இயக்க நிலை முறை (on – pump procedure)

    கரோனரி தமனிகள் மிகச் சிறிய அளவிலானவை. இவற்றின் மீது ஒட்டு இரத்தக் குழாய்களைத் தைக்க வேண்டுமானால் மருத்துவர் இதயத்தின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி விட வேண்டும். இதற்காக இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart- Lung bypass machine) மூலம் இரத்தத்தை உடலில் செலுத்தும் வகையில் வெளியிலிருந்து குழாய்கள் இதயத்திற்குள் வைக்கப்படும்.

    உடலின் இரத்த ஓட்டம் திசை திருப்பப்பட்டு இதய – நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாக  நடைபெறத் துவங்கியதும் மருத்துவர் இதயத்தில் ஒரு குளிர்ந்த திரவத்தை ஊசி மூலம் செலுத்தி இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுவார்.

    இதயம் 2 வழிகளில் குளிர்விக்கப்படலாம்:

    இதயம் – நுரையீரல் இயந்திரம் வழியாக செல்லும்போது இரத்தம் குளிர்ச்சியடைகிறது.  இந்தக் குளிரூட்டப்பட்ட இரத்தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் அடையும் போது உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது.

    குளிர்ந்த உப்பு நீர் (saline) இதயத்தின் மீது ஊற்றப்படுகிறது. குளிர்ந்த பிறகு, இதயம் மெதுவாக நின்று நிற்கிறது. ஒரு சிறப்பு பொட்டாசியம் கரைசலை (special potassium solution) இதயத்தில் செலுத்துவதன் மூலம், இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும் செயலை விரைவுபடுத்தி இதயத்தை முழுவதுமாக நிறுத்தி விட முடியும். இப்போது இதயம் சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரையில் இதயத்திசுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும். புறவழி அறுவை சிகிச்சையின் போது, ​​மார்பெலும்பு (sternum) பிரிக்கப்பட்டு, இதயம் நிறுத்தப்பட்டு, இதய-நுரையீரல் இயந்திரம் மூலம் இரத்தம் அனுப்பப்படுகிறது. மற்ற வகையான இதய அறுவை சிகிச்சைகளைப் போல் இல்லாமல், பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் அறைகள் திறக்கப்படுவதில்லை.

    ஒற்றைப் புறவழி (single bypass), இரட்டைப் புறவழி (double bypass) , மூன்று புறவழி (triple bypass) அல்லது நான்கு புறவழி (quadruple bypass) ஆகிய சொற்கள் அடைத்துக் கொண்ட எத்தனை தமனிகளின் (blocked arteries) இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டிட்டு இணைக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றன. என்னுடைய நேர்வில் மூன்று தமனிகளின் இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டுப் போட்டு இணைக்கப்பட்டன (triple bypass) என்று அறிந்து கொண்டேன். 

    கீழே தரப்பட்டுள்ளது என்னுடைய புறவழி ஒட்டு அறுவைச் சிகிச்சையின் மாதிரிப் படம்.

    இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டதும், பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்படும். காலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வெட்டி எடுக்கப்பட்ட சிரை இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார். மருத்துவர் மார்புக்குள் உள்ள உள் நெஞ்சகத் தமனியை (internal mammary artery) புறவழி ஒட்டுக்குக்காகப் ( bypass grafting) பயன்படுத்தினால், தமனியின் கீழ் முனை மார்பின் உள்ளே இருந்து வெட்டப்பட்டு அடைப்புக்கு கீழே உள்ள இதயத் தமனி (Coronary Artery) யில் செய்யப்பட்ட ஒரு திறப்பு மீது வைத்துத் தைக்கப்படும். பெண்களுக்கு இந்த உள் நெஞ்சகத் (IMA) தமனியை புறவழி ஒட்டாகப்  பயன்படுத்துவது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.

    நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

    புறவழி இரத்தக் குழாய் ஒட்டுகள் பரிசோதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பின், மருத்துவர் இதய – நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாகச் செல்லும் இரத்தத்தை மீண்டும்  இதயத்தின் வழியாகச் செல்ல அனுமதித்து இயந்திரத்திற்குச் செல்லும் குழாய்களை அகற்றி விடுவார். நோயாளியின் இதயம் தானாகவே மீண்டும் இயங்கத் தொடங்கலாம் அல்லது அவ்வாறு நிகழாத நேர்வில் மறுபடியும் இயங்கச் செய்ய லேசான மின்சார அதிர்ச்சி (Electric shock) தரப்படலாம்.

    அவசியம் ஏற்பட்டால் மருத்துவர்கள் இதயத்தின் தொடக்க மீள் இயக்கத்திற்காக இதயத்தில் மின் கடத்திக் கம்பிகளைச் செலுத்தி அவற்றை இதய மின்முடுக்கியுடன் (Pace maker) தற்காலிகமாக இணைத்து இதயத்தை இயங்கச் செய்வார்கள்.

    இதயத் தமனிப் புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) – அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off – pump procedure)

    இந்த முறையில் இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படுவதில்லை. மருத்துவர் மார்பைத் திறந்து இதயத்தை வெளிப்படுத்தியதும் ஒரு சிறப்புக் கருவியால் இதயத்தின் எந்தத் தமனிக்குழாய்க்குப் புறவழி இரத்தக் குழாயைத் தைத்து ஒட்டுப்  போட்டு இணைக்க வேண்டுமோ அதைச் சுற்றியுள்ள பரப்பை நிலைப்படுத்தி விடுவார்கள்.

    நிலைப்படுத்தல் அமைப்பு (Stabilization system) ஒரு இதய இடப் பொருத்தியையும் (Heart positioner)  மற்றும் திசு நிலைப்படுத்தியையும் (Tissue stablizer) கொண்டுள்ளது. இதய இடப் பொருத்தி இரத்த ஓட்டத்தைச் சீர் குலைக்காமல் இதயத்தை உயர்த்தித் தாங்கிப் பிடித்து கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதயத்தை திருப்பி அடைபட்ட தமனிகளை (blocked arteries) அடைவதற்கான சிறந்த அணுகலைப் பெற (best access) வழிவகுக்கிறது. திசு நிலைப்படுத்தி இதயத்தின் ஒரு சிறிய பகுதியில்  அறுவை சிகிச்சை நிபுணர் வேலை செய்யும் போது அப்பகுதியை அசையாமல் நிலையாக வைத்திருக்கிறது.

    என்னுடைய இதய அறுவைச் சிகிச்சை அழுத்த விசைக் கருவி (off pump coronary artery bypass – OPCAB)  இயங்கா நிலையில் ஆக்டோபஸ் 4.3 (Octobus 4.3) என்ற நிலைப்படுத்தும் அமைப்பைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது என்பதை என்னுடைய அறுவைச் சிகிச்சை ஆவணங்களிலிருந்து  தெரிந்து கொண்டேன்.

     

    Picture courtesy: https://www.ahajournals.org/doi/full/10.1161/01.cir.0000120292.65143.f5

    திசு நிலைப்படுத்தியால் (tissue stabilizer)  நிலைப்படுத்தப்பட்ட இதயத்தின்  குறிப்பிட்ட சிறு பரப்பைத் தவிர பிற பகுதிகள் இயக்கத்திலேயே இருக்கும். மேலும் இரத்தத்தை உடலில் அழுத்திச் செலுத்தும் (Pumping) பணியைத் தொடர்ந்து செய்யும். இதயத்தின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்பட்டு உடல் வழியாக இரத்தத்தை செலுத்தும்.

    ஒருவேளை இதயத்துடிப்பில் ஏதாவது எதிர்பாராத சிக்கல் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்டால் புறவழி இயந்திரம் புறவழி இரத்தக்குழாய் ஒட்டுதலை முடிக்கத் தேவைப்படக் கூடும். ஆகவே அத்தகைய நிலையில் இயந்திரமும் அதனை இயக்குவதற்குத் தொழில்நுட்பப் பணியாளரும் தயார் நிலையில் இருப்பார்கள். மற்றபடி இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart -Lung machine)  ஒரு மாற்று ஏற்பாடாக மட்டுமே இருக்கும்.

    பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்பட்டு இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார்.

    நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மார்பை மூடுவதற்கு முன் மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

    இப்போது சிஏபிஜியின் (CABG) அழுத்த விசைக்குக் கருவியின் இயக்க நிலை முறை (on pump) மற்றும் அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off pump) ஆகிய இருவகையான செயல்படும் முறைகளிலும் (Procedures) அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையை நெருங்கி விட்டது.

    அடுத்த கட்டமாகச் சில நேரங்களில் உடைந்த எலும்பை சரிசெய்யக் கம்பிகளைப் பயன்படுவது போல் சிறிய கம்பிகளால் மார்பெலும்பு(sternum) மருத்துவரால் தைக்கப்படும். இதயத்தைச் சுற்றிலும் சேர்ந்துள்ள இரத்தம் மற்றும் திரவங்களை வெளியேற்ற மார்பில் குழாய் செருகப்படும். அடுத்து மார்பெலும்பின் மீதுள்ள தோல் மீண்டும் ஒன்றாக இணைத்துத் தைக்கப்படும்.

    வயிற்றுப் பகுதியில் சேர்ந்துள்ள திரவங்களை வெளியேற்றுவதற்காக மருத்துவர் மூக்கு அல்லது வாய் வழியாக வயிற்றுக்குள் ஒரு குழாயைச் செலுத்துவார்.

    இதன் பின்னர் அறுவைச் சிகிச்சைக் (surgical wounds) காயங்களுக்கு கிருமித் தொற்று நீக்கப்பட்ட (sterilised bandage) புண் கட்டுத் துணியால் மருத்துவர் கட்டுகள்(dressing) இடுவார்

    தொடரும்..

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 2

    இதயம் திறந்த அனுபவங்கள் – 2

    வெ. சுப்ரமணியன்

    அறுவைச் சிகிச்சைக்குத் தயாராதல்

    நோயாளிக்கு சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச்சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மருத்துவர் முதலில் கூறுவார். அதன் பின்னர் செயல்முறை (procedure) குறித்து விளக்கி அதில் சாத்தியமான  அபாயங்களைப் பற்றியும் எடுத்துரைப்பார். அப்போது நோயாளி தன் மனதில் தோன்றும் அனைத்து ஐயங்களையும் அச்சங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து அவற்றுக்கான தக்க விளக்கங்களைப் பெற்றுத் தெளிவு பெறலாம்.

    நோயாளி அறுவைச்சிகிச்சைக்கு வாய்மொழி ஒப்புதல் கொடுத்த பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னாதாக மேற் கொள்ள வேண்டிய சோதனைகளுக்கான எழுத்துப் பூர்வமான அனுமதி அளிக்கும் படிவங்களில்  நோயாளியின் கையொப்பம் பெறப்படும். கையொப்பம் இடுமுன் படிவத்தைக் கவனமாகப் படித்தும் தெளிவு பெற இயலாத பட்சத்தில் மருத்துவரிடம் வினாக்களை எழுப்பித் தெளிவு பெறலாம்.

    நோயாளியின் மருத்துவ  வரலாற்றை (medical history) மருத்துவர் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தும் முழு உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் உடற்தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார். இது தவிர வேறு சில இரத்தப் பரிசோதனைகளும் பிற கண்டறியும் சோதனைகளும் கூடுதலாகத் தேவைப்படலாம்.

    எடுத்துக்காட்டாகத்  தற்போது முதலில் கோவிட் -19  தொற்றுச்  சோதனை நோயாளிக்குச் செய்யப்பட்டு எதிர்மறை (negative) என்று உறுதியான பின்னரே அடுத்த கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    (1) உள் நோயாளியாக (inpatient) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோயாளியின் இடது கையில் நோயாளியின் விவரங்கள் குறிக்கப்பட்ட மணிக்கட்டுப்பட்டை (wristband) கட்டப்படும்.

    படம் : மணிக்கட்டுப் பட்டை (wrist band)

    (2) அடுத்து வழக்கமாக அணியும் உடைகளுக்குப் பதிலாக மருத்துவமனையில் வழங்கப்படும் அங்கியையே அணிந்து கொள்ள வேண்டும். இதனால் மருத்துவமனையில் நோயாளியைப் பிரித்தறிய எளிதாக இருக்கும். மேலும் மருத்துவமனையில் செய்யப்படும் பல்வேறு சோதனைகளுக்கு வசதியாகவும் இருக்கும்.

    (3) அடுத்து அறுவைச் சிகிச்சைக்கு இடையூறாக இருக்கக் கூடிய நகைகள், தாயத்துகள் மற்றும் அரைஞாண் கயிறு போன்ற பிற பொருட்களும் அகற்றப்படும்.

    1) அறுவைச் சிகிச்சைக்கு முன் தினம் அதிகாலையில் இரத்தப் பரிசோதனைக்கு மாதிரி (sample) எடுக்கப்படும்.

    2) நோயாளிக்கு முழு உடற்சவரம் (Full body shave) செய்யப்படும். அதன் பின்னர் சோப்புத் தேய்த்து சிறப்புக் கிருமி நாசினி கலந்த வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

    அடுத்து காலைச் சிற்றுண்டி உண்ட  இரண்டு மணி நேரத்திற்குப் மீண்டும் பரிசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்படும்.

    3) அடுத்து நோயாளிக்கு மார்பு எக்ஸ் கதிர் (Chest X – ray) படம் எடுக்கப்படும்.

    4) அடுத்து இருபரிமாண வண்ண டாப்ளர் (2D Colour Doppler) சோதனை செய்யப்படும்.

    இருபரிமாண எதிரொலி (2D Echo) என்பது இதயத்திற்கான ஒரு சோதனை, இதில் மீயொலி (ultrasound) நுட்பம் இதயத்தைப் படங்கள் எடுக்கப் பயன்படுகிறது. இது துடிக்கும் இதயம், இதயத்தின் அறைகள், வால்வுகள் மற்றும் இதயத்தின் முக்கிய இரத்த நாளங்களை குறுக்கு வெட்டு முதலியவற்றை ‘ஸ்லைஸ்’ (Slice)  காட்டுகிறது.  இதயத்தின் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் ‘டாப்ளர்’ (Doppler) இந்த மீயொலிப் பரிசோதனையின் சிறப்பு உறுப்பாகும்.

    படம்: இருபரிமாண வண்ண டாப்ளர் (2D colour Doppler) கருவி

    4) காலை மற்றும் இரவில் துகள் தெளிப்பான் (nebulizer) கருவி உதவியுடன் நுரையீரலுக்கும் மற்றும் சுவாசப் பாதைக்கும் மருந்து செலுத்தப்படும். இதனால் சுவாசப் பாதையில் தடைகளும் நுரையீரலில் உள்ள பிரச்சினைகளும் நீக்கப்படக் கூடும்.

    5) நோயாளி தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருக்கலாம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கலாம். இவர்களுக்கு நுரையீரல் இறுக்கத்தைக் குறைக்க அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer) கருவியை ஒரு மணி நேரத்திற்கு 10 முறை பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைப்பார்.

     

    படம் : மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer)

    6) பல வகையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதயம் குறித்த விவரங்கள் ( Cardiac profile) சேகரிக்கப்படுகின்றன.

    அடுத்துவரும் பகுதியில் அறுவைச் சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பல்வேறு பரிசோதனைகளைக் குறித்து மிகச் சிறிய அளவில் எடுத்துக் கூறியுள்ளேன். உங்களுக்கு அப்பகுதி சலிப்பூட்டுவதாக உணர்ந்தால் நேராக  பகுதி (3) க்குச் செல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதாவது இச் சோதனைகள் நமக்குச் செய்யப்பட்டால் அவை ஏன் எதற்காகச் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

    (அ) இரத்தச் சர்க்கரை விவரங்கள்  (Sugar Profile)

    உணவு உட் கொள்ளாத நிலையில் இரத்தச் சர்க்கரை அளவு (Fasting Blood Glucose – FBG),

    உணவு உட்கொண்ட 2 மணி நேரத்திற்கு பின் இரத்தச் சர்க்கரை அளவு (Post Prandial Blood Glucose – PPBG) ,

    HbA1c சோதனை மூன்று மாத காலப்பகுதியில் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்பட்ட ஏராளமான ஏற்ற இறக்கங்களின் சராசரியை அளவிடுகிறது. மூன்று மாதங்களில் எந்த அளவிற்கு இரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தப்பள்ளது என்பதையும் HbA1c தெரிந்து கொள்ள உதவுகிறது.

    ஆ) கொலஸ்டிரால் கொழுப்பு விவரங்கள் (Lipid profile)

    கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு (Fat). கல்லீரல் (Lever) உடலுக்குத் தேவையான கொழுப்பை உருவாக்குகிறது. உண்ணும் உணவுகளிலிருந்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைப் பெறலாம். இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், சீஸ் மற்றும் பால் அனைத்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைக் கொண்டுள்ளன. பழங்கள், காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களில் எந்த கொலஸ்டிரால் கொழுப்பும் இல்லை.

    இந்த இரத்தப் பரிசோதனையில் மொத்தக் கொலஸ்டிரால் (Total cholesterol)

    டிரைகிளிசரைடு (Triglyceride),

    குறை அடர்த்திக் கொலஸ்டிரால் (LDL) அல்லது கெட்ட கொலஸ்டிரால் (Bad cholesterol),

    மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் (HDL) அல்லது நல்ல கொலஸ்டிரால் (Good cholesterol),

    மொத்தக் கொலஸ்டிரால் அளவுக்கும் மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் அளவுக்குமான (HDL) விகிதம் ஆகியவற்றின் மதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

    இ) சிறுநீரகச் செயல்பாடுச் சோதனைகள்

    இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN),

    கிரியாட்டினின் (Creatinine ),

    இரத்த யூரியா நைட்ரஜனுக்கும் கிரியாட்டினின் அளவுக்குமான விகிதம்.

    (ஈ) மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  

    மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  அல்லது குருதி ஊனீர்ச் சோதனை (serum electrolytes test)  என்பது உடலின் முக்கிய மின்பகு பொருட்களை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

    மின்பகு பொருட்கள் (electrolytes) உடல் திசுக்களிலும், இரத்தத்தில் கரைந்த உப்புக்களின் வடிவத்தில் காணப்படும் தாதுக்கள். மின்பகு பொருட்கள் மின்னூட்டம் பெற்ற துகள்கள். இவை உடலின் உயிரணுக்களுக்கு (body cells)  ஊட்டச்சத்துக்களை உள்ளேயும், கழிவுகளை வெளியேயும் நகர்த்த உதவுகின்றன. ஆரோக்கியமான அளவில் உடலில் உள்ள  திரவங்களின் அளவை பராமரிப்பதிலும்,  உடலின்  அமில  காரச் சமநிலையைப் (acid – base balance) பேணுவதிலும், உடலின் அமில – காரத்தன்மை (pH) அளவை நிலைநிறுத்தவும் உதவுகின்றன.

    இவை தசை மற்றும் நரம்புச் செயல்பாடு (muscular and neural activity), இதயத்தின் தாளலயம் (heart rhythm) மற்றும் வேறு பிற முக்கிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன.

    (1) சோடியம் (Sodium)  உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது

    (2) குளோரைடு (Chloride) உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது ஆரோக்கியமான இரத்த அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது

    (3) பொட்டாசியம் (Potassium)  உங்கள் இதயம் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது.

    (4) மொத்த கார்பன் டை ஆக்சைடு (Total Carbon di oxide – CO2) சோதனை என்பது  இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவை அளவிடும் எளிய இரத்த பரிசோதனையாகும் . கார்பன் ஆக்சைடு (Carbon di oxide – CO2) சோதனை சிறுநீரக மற்றும் சுவாசப் பிரச்சினைகளைக் கண்டறியவும்  உதவும்.

    உ) கல்லீரல் சோதனைகள் (Lever tests)

    பிலிரூபின்(Bilirubin) என்பது மஞ்சள் நிற நிறமி (Yellowish pigment) ஆகும், இது சிவப்பு இரத்த அணுக்கள் (Red cells) இயல்பாக முறியும் (normal breakdown) போது உற்பத்தியாகிறது. பிலிரூபின் கல்லீரல் (lever) வழியாகச் சென்று இறுதியில் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இரத்தத்தில் காணப்படும் பிலிரூபின் அளவை பிலிரூபின் சோதனை அளவிடுகிறது. சோதனையில்

    மொத்த பிலிருபின் அளவு (Total Bilirubin),

    இணைந்த பிலிருபின் (Conjugate Bilirubin) ஆகியவை அளவிடப்படுகின்றன.

    இயல்பான அளவை விட பிலிரூபினின் அளவு அதிகமாகக் காணப்படுவது பல்வேறு வகையான கல்லீரல் அல்லது பித்த நாளப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஹீமோலிசிஸ் (Hemolysis) என்ற சிவப்பு இரத்த அணுக்கள் அழிவடையும் வீதம் எப்போதாவது அதிகரித்தால் இரத்தத்தில் பிலிரூபின் அளவும் உயரலாம்.

    அல்கலைன் பாஸ்பேடேஸ் (Alkaline phosphatease -ALP) எனப்படும் கார பாஸ்பேடேஸ் சோதனை கல்லீரல் நோய் அல்லது எலும்பு கோளாறுகளைக் கண்டறிய உதவுகிறது. இது பெரும்பாலும் கல்லீரல் குழுச் சோதனைகளின் (Liver panel tests) ஒன்றாகச் செய்யப்படுகிறது.  கல்லீரலைப் பாதிக்கும் நிலைமைகளில், சேதமடைந்த கல்லீரல் செல்கள் இரத்தத்தில் அதிகரித்த ALP ஐ வெளியிடுகின்றன.

    மொத்தப் புரத சோதனை:

    இந்த இரத்தப் பரிசோதனை இரண்டு வகையான புரதங்களை அளவிடுகிறது.   (1) அல்புமின்  மற்றும் (2) குளோபுலின். புரத அளவு குறைவாக இருந்தால், நோயாளிக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் இருப்பதாகக் கருதலாம்.

    அல்புமின் (Albumin): 

    உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்க உதவும் புரதங்கள் இரத்தத்தில் முழுவதுமாகப் பரவுகின்றன. அல்புமின் என்பது கல்லீரல் உருவாக்கும் ஒரு வகை புரதமாகும். இது உங்கள் இரத்தத்தில் மிகுதியாக உள்ள புரதங்களில் ஒன்றாகும். இரத்த ஊனீர் அல்புமின் சோதனை (Blood serum Albumin test)  என்பது  இரத்தத்தில் உள்ள அல்புமினின் அளவை அளவிடும் எளிய இரத்தப் பரிசோதனை ஆகும். அறுவை சிகிச்சை, தீக்காயம் அல்லது திறந்த காயம் காரணமாக குறைந்த ஆல்புமின் அளவை இரத்தத்தில் கொண்டிருப்பதற்கான வாய்ப்புள்ளது.. ஆனால்  மேற் குறிப்பட்ட எதுவும் இல்லாத நிலையில் இரத்த ஊனீர் அல்புமின் அளவு அசாதாரணமான நிலையில் காணப்பட்டால் கல்லீரல் (Liver) அல்லது சிறுநீரகங்கள் (Kidneys) சரியாகச் செயல்படாத  நிலையின்  அறிகுறியாகவோ  அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதையோ  குறிக்கலாம்.

    குளோபுலின்கள் (Globulins)

    குளோபுலின்கள்  இரத்தத்தில் காணப்படும் புரதங்களின் குழுவாகும். அவை  நோயெதிர்ப்பு மண்டலத்தால் கல்லீரலில் தயாரிக்கப்படுகின்றன. கல்லீரல் செயல்பாடு, இரத்த உறைதல் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் குளோபுலின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குளோபுலின்களில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஆல்பா 1, ஆல்பா 2, பீட்டா மற்றும் காமா என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான குளோபுலின்கள் இருப்பதைப் போலவே, பல்வேறு வகையான குளோபுலின் சோதனைகளும் உள்ளன.

    1. G) ஏமக்குறைவு நோய்கான சோதனை (AIDS – HIV)

    எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV – Human immunodeficiency virus) எனப்படுவது ஏமக் குறைவு நோயை உருவாக்கும் தீ நுண்மம் ஆகும். எச்.ஐ.வி சோதனையில்  நேர் மறையான முடிவு கிடைத்தால், நோயாளி  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் தீ நுண்மக்கிருமியால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொருள்.

    1. H) ஈரலழற்சி பி தீ நுண்மம் (HBsAg)

    HBsAg சோதனையில் நேர் மறையான முடிவு கிடைக்கப் பெற்றால், நோயாளி ஹெபடைடிஸ் பி தீ நுண்மக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே ஹெபடைடிஸ் பி  நுண்மத்தை அவர் இரத்தத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரப்பக் கூடும்.

    1. H) இரத்த உறைதல் காலம் (Blood clotting time), புரோத்திராம்பின் காலம் (Prothrombin time) , இரத்தப் போக்கு நேரம் (Bleeding time)

    புரோத்ராம்பின் நேரம் (Prothrombin time – PT) என்பது உங்கள் இரத்தத்தின் திரவ பகுதியான பிளாஸ்மா (Plasma) உறைவதற்கு எடுக்கும் நேரத்தை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

    1. I) முழு இரத்தப் பரிசோதனை(Complete Blood Count)

    ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கைச் சோதனை (சிபிசி) என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் இரத்த சோகை, தொற்று மற்றும் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான கோளாறுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும் இரத்த பரிசோதனையாகும். ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனை  இரத்தத்தின் பல கூறுகளையும் அம்சங்களையும் அளவிடுகிறது, அவற்றுள்:

    சிவப்பு இரத்த அணுக்கள் இவை ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன

    வெள்ளை இரத்த அணுக்கள் இவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன

    ஹீமோகுளோபின், சிவப்பு இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்

    ஹீமாடோக்ரிட்,  இரத்தத்தில் உள்ள இரத்தக் கூறுகளின் விகிதம் அல்லது பிளாஸ்மாவுக்கும் சிவப்பு இரத்த அணுக்களும் உள்ள விகிதம்

    பிளேட்லெட்டுகள், இவை இரத்த உறைவுக்கு உதவுகிறது.

    அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒருமுறை மேற் கொள்ளப்படும் இந்த முழு இரத்த எண்ணிக்கைக் சோதனை அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியும் பொருட்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல முறை செய்யப்படும்.

    J) தைராய்ட் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் சோதனைகள் (Thyroid stimulating Harmon tests – TSH)

    தைராய்டைத் தூண்டும் இயக்குநீர்ச் (டி.எஸ்.எச்) சோதனை இரத்தத்தில் உள்ள டி.எஸ்.எச் அளவை அளவிடுகிறது. உங்கள் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பியால் இந்த இயக்குநீர் தயாரிக்கப்படுகிறது. தைராய்டுச் சுரப்பி வெளியிடும்  இயக்குநீர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த இயக்குநீருக்கு உண்டு.

    தைராய்டுச் சுரப்பி கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவச் சுரப்பி ஆகும். இச் சுரப்பி மூன்று முக்கியமான இயக்குநீர்களை சுரக்கிறது. அவை

    (1) ட்ரியோடோதைரோனைன் – டி3 (triiodothyronine  – T3)

    (2) தைராக்ஸின் – டி4 (thyroxine – T4)

    (3) கால்சிட்டோனின் (calcitonin)

    இந்த மூன்று இயக்குநீர்களையும் வெளியிடுவதன் வாயிலாக வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் வளர்ச்சி (growth)  உள்ளிட்ட பல்வேறு உடற் செயல்பாடுகளை தைராய்டுச் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.

    H) நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை (Pulmonary function test – PFT)

    படம் : நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைக் கருவி

    நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைகள் PFT (பி.எஃப்.டி) நுரையீரல் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டும் உடலின் தோலை ஊடுருவித் துளையிடவோ (pierce), கீறலிடவோ (incision) அவசிமற்ற சோதனைகள் (non invasive test). சோதனைகள் நுரையீரல் அளவு, திறன், ஓட்ட விகிதங்கள் மற்றும் வாயு பரிமாற்றம் ஆகியவற்றை அளவிடுகின்றன. அறுவைசிகிச்சைக்கு முன்னர் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம்.  நுரையீரல், இதய பிரச்சினைகள் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லது பிற சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்கான செய்முறைகளுக்களுக்காக (Procedures)  பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம். PFT களின் மற்றொரு பயன்பாடு ஆஸ்துமா(asthma), எம்பிஸிமா (emphysema) மற்றும் பிற நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகளுக்காகத் தரப்படும் சிகிச்சையை  மதிப்பிடுவதற்கும் (assessment of treatment) பி.எஃப்.டி(PFT) சோதனை பயன்படுத்தப்படுகிறது.

    கடைசியாக மருத்துவர் நோயாளியின் கால்களைப் பரிசோதிப்பார். கீழ் இடது காலில் இருந்து மேலோட்டமான சிரை இரத்தக் குழாயை (superficial vein) எடுத்து அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்த இரத்தக் குழாய் வீங்கிச் சுருண்ட சிரைப் புடைப்பு (varicose vein) இன்றி நல்ல நிலையில் உள்ளதா என்று  தெரிந்துகொள்வார்.

    எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறும் நாள் காலையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு,

    சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா)

    மொத்த  லூக்கோசைட்ஸ் எண்ணிக்கைக் சோதனையில்

    வெள்ளைளை அணுக்களின் எண்ணிக்கை (WBC count)

    வகைவாரி லூக்கோசையிட்ஸ் எண்ணிக்கையில்

    நியூட்ரோஃபில்ஸ் எண்ணிக்கை

    ஈஸினோஃபில்ஸ் எண்ணிக்கை

    லிம்ஃபோசைட்ஸ்கள் எண்ணிக்கை

    மோனோசைட்ஸ்கள் எண்ணிக்கை ஆகியன காணப்பட்டன.

    தொடரும்…

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 1

    இதயம் திறந்த அனுபவங்கள் – 1

    வெ. சுப்ரமணியன்

    சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் எனக்கு இதயத் தமனி அடைப்புக்காகச் செய்யப்படும் பக்க வழி ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG) செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை என்றாலே பெரும்பாலானவர்களின் மனதில் இரு பெரும் அச்சங்கள் ஏற்படுகின்றன. முதலில் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டுமே என்பதும் அடுத்தது  அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உயிர் பிழைத்து வருவோமா என்பதும். இந்த இரண்டு அச்சங்களுமே இதய நோயாளிகளில் பலரைச்  சரியான நேரத்தில் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போடச் செய்கிறது.

    உண்மையில் அறுவைச் சிகிச்சை குறித்த மேற் சொன்ன இரண்டு அச்சங்களுமே பொருளற்ற தேவையற்ற அச்சங்களே.

    இந்தத் தொடர் கட்டுரைகள் சற்று நீண்டதாக இருந்த போதிலும் முழுவதும் படிப்பவர்களுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open heart surgery) குறித்த  புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

    தற்போதய சூழலில் மருத்துவம் என்பது எப்படி நாள்தோறும் நவீனமாகி வருகிறதோ அதேபோல அதிகச் செலவு ஏற்படுத்தக் கூடுதாகவும் உள்ளது. எனவே அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க அனைவரும் கண்டிப்பாக ஆரோக்கியக் காப்பீடு (Health insurance Policy) எடுத்துக் கொள்வதே சரியான தீர்வாக இருக்கும்.

    பலரும் ஆயுள் காப்பீடு (Insurance) என்றாலே ஆயுள் காப்பீடு (Life insurance) என்றே பொருள் கொள்கின்றனர். ஆயுள் காப்பீடும் ஆரோக்கியக் காப்பீடும் வேறு வேறு என்பதே இன்னும் நம் நாட்டில் உணரப்படவில்லை. மேலும் ஆரோக்கியக் காப்பீட்டின் முக்கியத்துவம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் பலராலும் உணரப்படுகிறது. என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன், அறுவைச் சிகிச்சைக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் போது எந்தக் கட்டணமும் செலுத்தாமலே சேர என்னால் முடிந்தது. தவிரவும் என்னுடைய சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து புறப்படும் நாளில் அதுவரை சிகிச்சைக்கான செலவில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக நேரடியாக மருத்துவமனையின் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது.  மீதமுள்ள சுமார் 25 விழுக்காடுத் தொகையை மட்டும் செலுத்தி வீட்டிற்கு வர முடிந்தது. ஆகவே நிதிப் பிரச்சினை அதிகம் சிரமத்தைத் தரவில்லை.

    ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance)

    எந்த ஒரு நோயாளியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இரண்டு வகையான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதாவது, ஒன்று திடீர் உடல்நலக்குறைவு அல்லது விபத்து காரணமாக அவசர சிகிச்சைக்காகச் (emergency treatment) சேர்க்கப்பட்டுப் பின்னர் அதன் தொடர்ச்சியாக செய்யப்படும் சோதனைகள் அடிப்படையில் அறுவைச் சிகிச்சைக்கோ அல்லது வேறு வகையான சிகிச்சைக்கோ அனுமதிக்கப்படலாம்.

    இத்தகைய நேர்வில் நோயாளி மருத்துவக் காப்பீடு உடையவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கும், (Insurance company) காப்பீட்டு முகவருக்கும் (Insurance agent) தகவல் தொலைபேசி மூலம் சொல்லப்பட வேண்டும். .

    அடுத்து முடிந்த அளவுக்கு விரைவாகக் காப்பீடு ஆவணங்களையும், உரிய படிவங்களையும் பிழைகள் இன்றிப் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் சமர்ப்பித்து விட வேண்டும். காப்பீட்டு ஆவணங்கள் மருத்துவமனையில் சமர்ப்பிக்கப்பட்டதும் அவை மருத்துவமனை மூலமாகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும். அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவமனை மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனம் முன்பணம் வழங்குவது தொடர்பான ஒப்புதலை மின்னஞ்சல் வழியே பதிலாக அனுப்பி விடும். உங்கள் காப்பீட்டு முகவருக்குத் தனிப்பட்ட முறையில் தகவல் அளித்தால் அவரால் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு முன்பணத்திற்கு ஒப்புதல் வழங்குவதைத் துரிதப்படுத்தவும், ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களையும், காப்பீட்டுத் தொகை உரிமை கோரல் குறித்த (Claim) சரியான வழிகாட்டலையும் தர இயலும்.

    ஆரோக்கியக் காப்பீட்டின் மூலம் (Health insurance) மருத்துவமனையில் முன்பணமில்லாச் சிகிச்சைக்காகச் (Cashless treatment) சேர்க்கையை எளிதில் (Admission) பெற இயலும். நோயாளி சிகிச்சை பெறும்போதே ஒரு குறிப்பிட்ட முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்பளிப்பு (sanction) செய்யப்படும். ஒருவேளை முன்பணம் (advance amount) செலுத்தி இருந்தாலும் நோயாளி குணமடைந்து வீடு திரும்பும் போது தரப்படும் மொத்த செலவுப் பட்டியலில் அத்தொகை மருத்துவமனையால் காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் தொகையுடன் சேர்த்து வரவு வைக்கப்பட்டு மீதம் செலுத்த வேண்டிய தொகை எதாவது இருப்பின் அதற்கு நேர் (adjust) செய்து கொள்ளப்படும் அல்லது திரும்பத் தரப்படும்.

    இரண்டாவது வகை ஏற்கனவே மருத்துவர்களால் திறந்த இதய அறுவைச் சிகிச்சையோ அல்லது வேறு வகையான அறுவைச் சிகிச்சையோ மேற் கொள்ளப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நோயாளி தனது வசதிக்கு ஏற்பத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்க்கை (inpatient admission) பெறுவது.

    மருத்துவக் காப்பீடு உள்ளவர்கள் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காகத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் சேர்வதாக இருந்தால் சேர்க்கைக்கு (admission)  ஓரிரு நாட்கள் முன்னதாகச் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். உள் நோயாளியாகச் (Inpatient) சேருவதற்கு முந்தைய நாளில் மருத்துவக் காப்பீடு குறித்த ஆதாரங்களையும், உரிய வடிவங்களையும் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்தால் அவர்கள் மூலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு விவரம் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். அனுப்பப்பட்ட தகவல்கள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சைக்குத் தோராயமாகச் செலவாகும் என்று மருத்துவமனையால் குறிப்பிடப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடுத் தொகைக்கு முன்பணமாக காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விபரம் நோயாளிக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

    இத்தகைய நேர்வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நோயாளி முன் கட்டணமாக எதுவும்  செலுத்தத் தேவையில்லை. முன் பணமாகக் காப்பீட்டு நிறுவனத்தால்  ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை  மருத்துவமனையின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு விடும்.

    குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) குறித்த அனைத்து ஆவணங்களும் வீட்டில் எங்கிருக்கிறது  என்ற விவரத்தைக்  குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பது நல்லது. இதனால் குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல்நலப்  பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது முன்பணம் செலுத்துவது தொடர்பாக சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

    எந்த ஒரு அறுவைச்சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு கோவிட்- 19 (Covid -19), எச்.ஐ.வி (HIV – AIDS),  மார்பு எக்ஸ் கதிர் படம்( Chest  x – ray),  இருபரிமாண வண்ண டாப்ளர் வரிக் கண்ணோட்டம் (2D colur Doppler scan) மற்றும்  இரத்தப் பரிசோதனைகள்(Blood tests) பலவும் செய்யப்பட்டு நோயாளியின் உடல் நிலை மருத்துவர் குழுவால் நன்கு ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையில் மட்டுமே நோயாளியின் அறுவைச் சிகிச்சைக்கான உடற் தகுதி முடிவு செய்யப்படுகிறது. அதன் பின்னரே நோயாளிக்கு ஏற்ற வகையில் உரிய சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. ஆகவே இரண்டாவதாகக் கூறப்பட்ட அச்சமும் அர்த்தமற்றதே. இனி சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை குறித்து விரிவாகக் காண்போம்.

    இதயத் தமனி இரத்தக் குழாய் அடைப்பு (Coronary Artery Blockage)

    இதய இரத்தத் தமனி அல்லது நாடி குழாயில் (Artery) அடைப்பு (block) ஏற்படும் போது மேற்கொள்ளப்படுவதே பக்கவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG Surgery). இந்தச் சிகிச்சையே  நாம் பேச்சு வழக்கில் “பைபாஸ் சர்ஜரி” (Bypass surgery) என்று குறிப்பிடுகிறோம். இக்கட்டுரையில் பைபாஸ் சர்ஜரி  குறித்தே காணப் போகிறோம்.

    இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD)

    சிஏபிஜி (CABG) என்பது இதயத் தமனி இரத்தக்குழாய் நோய்க்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் செயல்முறையாகும் (Procedure). இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD) என்பது இதயத் தமனி இரத்தக் குழாய்கள் விட்டம் குறுகிப் போவதாகும். இதயத் தசைக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை வழங்குபவை  இதயத் தமனி இரத்தக் குழாய்கள். கொழுப்புப் பொருட்கள் இதயத் தமனி இரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் சி.ஏ.டி Coronary Artery Disease (CAD) ஏற்படுகிறது. இதனால் இரத்தக் குழாய் குறுகிப் போய் விடுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்தசைக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிந்த இரத்தம் கிடைப்பது குறைந்து போகிறது.

    இதயத் தமனி இரத்தக்குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச்சிகிச்சையை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG) அடைபட்ட மற்றும் குறுகிப் போன ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரத்தக்குழாய்களுக்குச் சிகிச்சையளித்து இதயத் தசைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மருத்துவரால் மேற்கொள்ளப்படுகிறது.

    இதய இரத்தக்குழாய் நோயின் அறிகுறிகள் (Symptoms of Coronary Artery Disease – CAD)

    அடுத்து இதய இரத்தக்குழாய் நோயின் (Coronary Artery Disease – CAD) அறிகுறிகளாக நெஞ்சுவலி, கடும் சோர்வு, படபடப்பு, இயல்புக்கு மாறான சீரற்ற இதயத் துடிப்பின் தாள லயம் (Heart beat rhythm) மூச்சுத்திணறல், கை கால்களில் வீக்கம், செரிமானப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும் இதய இரத்தக்குழாய் நோயின் ஆரம்ப நிலையில் துரதிருஷ்டவசமாக எந்த அறிகுறியும் வெளிப்படாமல் இருக்கலாம். இதனால் காலம் செல்லச்செல்ல தமனி இரத்தக்குழாய்களில் பெரிய அளவில் அடைப்பு அதிகரித்துச் சிக்கலை ஏற்படுத்தும் வரை நோயின் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும். இதனால் இதயத் தசைக்குப் போதுமான அளவிற்கு இரத்தம் கிடைப்பது குறைந்து கொண்டே போகும். இதயத் தசைக்குத் தடைப்படும் இரத்த ஓட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இரத்த இதயத் தசையின் எந்தப் பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறதோ அப்பகுதியில் உள்ள திசுக்கள் இறந்து விடுவதால் மாரடைப்பு ஏற்படும். இது தவிர வேறு பிற காரணங்களுக்காகவும் மருத்துவர் சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

    நகர்ப்புறங்களில் வசிக்கும்  பலரது இல்லங்களில் குழாய்க் கிணறுகளிலிருந்து (Bore wells) பெறப்படும் நீரையும் உபயோகிக்கிறோம். இந்த நீரில் கரைந்துள்ள உலோக உப்புக்கள் அதிக அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அந்த உப்புக்கள் குழாய்களின் உட்புறம் தொடர்ந்து படிந்து குழாய்களின் விட்டம் குறுகலாகும். இதன் காரணமாகக் குழாயில் நீர் செல்வது குறைந்து விடும். இந்தக் குறைபாட்டைக் கவனிக்காவிட்டால்  குழாயில் பயன்பாட்டுக்கு நீர் வருவதும் நீர் மேல் நிலைத் தொட்டிக்கு மேலேற்றப்படுவதும்  முற்றிலுமாகத் தடைப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் நீரிறைக்கும் மோட்டாரால் நீரை மேல் நோக்கித் தள்ள முடியாத நிலையில்  சூடாகிப் பழுதாகும்.  இதயத்தமனி இரத்தக் அடைப்பு நிகழ்வும் கிட்டத்தட்ட இது போன்ற நிலையே.

    முன்பெல்லாம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் வழியாகச் செல்லும். இப்போது நெடுஞ்சாலைகளில் பல நகரங்களை நகருக்குள் செல்லாமல் தவிர்த்துப் பயணிக்க புறவழிச் சாலைகள் (Bypass roads) போடப்பட்டுள்ளன. புறவழிச்சாலைகள் நெடுஞ்சாலையில் நகரங்களின் எல்லை தொடங்கும் முன்பாகவே பிரிந்து நகரங்களின் எல்லையைக் கடந்த பின்னர் மீண்டும் நெடுஞ்சாலையுடன் இணையும். இதனால் வாகனங்கள் நகரங்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துத் தடையின்றி விரைவாகச் செல்ல இயலுகிறது.

    இதய இரத்தக்குழாய் அடைப்புக்காகச் செய்யப்படும் ஒட்டு அறுவைச் சிகிச்சையும் (CABG – Coronary Artery Bypass Grafting surgery)  கிட்டத்தட்ட போக்குவரத்து தடைபடுவதைத் தவிர்க்கப் புறவழிச்சாலை ஏற்படுத்துதைப் போன்றதே.

    கொழுப்புப் பொருட்கள் படிந்து படிந்து குறுகலாகிப் போன தமனி இரத்தக் குழாய்களுக்கு மாற்றாக இணைப் பக்கப்பாதைகளை  நம் உடலின் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான தமனி  குழாய்களைக் கொண்டு தைத்து ஒட்டும்  அறுவைச்சிகிச்சைதான்  சி.ஏ.பி.ஜி வழி முறையாகும். இத்தகைய சிகிச்சைக்காக எடுக்கப்படும் இரத்த நாளம் காலிருந்தோ (leg), மார்பிலிருந்தோ (chest) அல்லது கையில் மணிக்கட்டுப் பகுதியிலிருந்தோ (wrist) எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட இரத்தக் குழாயின் ஒருமுனை  இரத்தக்குழாயின் அடைபட்ட பகுதிக்கு மேல்புறத்திலும் மறுமுனை அடைபட்ட பகுதிக்குக் கீழ்ப்புறத்திலுமாக இணைக்கப்படுகிறது. இதனால் இரத்தம் புதிய ஒட்டு இரத்தக்குழாயில் செல்வதால் இரத்த அடைப்பு தவிர்க்கப்படுகிறது.

    Picture courtesy:
    https://www.mayoclinic.org/tests-procedures/coronary-bypass-surgery/about/pac-20384589#dialogId19167970

    அடைபட்ட இதயத் தமனி இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG)

    அடைபட்ட இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சைக்கு  (சி.ஏ.பி.ஜி) மார்பைத் திறக்க மருத்துவர் மார்பில் கூரான கத்தியால் நீண்ட கீறல் (Incision) இடுவார். ஸ்டெர்னம் அல்லது மார்பெலும்பு என்பது மார்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நீண்ட தட்டையான எலும்பு ஆகும். இது குருத்தெலும்பு வழியாக விலா எலும்புகளுடன் இணைகிறது மற்றும் விலா எலும்புக் கூண்டின் முன்புறத்தை உருவாக்குகிறது, இதனால் இதயம், நுரையீரல் மற்றும் பெரிய இரத்த நாளங்கள் காயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஒரு கழுத்தணியைப் போல வடிவமைக்கப்பட்ட இது உடலின் மிகப்பெரிய மற்றும் நீளமான தட்டையான எலும்புகளில் ஒன்றாகும்.

    Picture courtesy: https://teachmeanatomy.info/thorax/bones/ribcage/

    பின்னர் (Sternam) நீளவாக்கில் பாதியாக வெட்டிப் பரப்பப்படும். இதனால் மார்புக்கூடு திறக்கப்பட்டு  இதயம் வெளிப்படும். இந்த நிலையில் மருத்துவர் இதய நுரையீரல் பக்கவழி இயந்திரத்தின் (Heart – Lung bypass machine) குழாய்களை இதயத்தில்  செலுத்தி இயந்திரத்தை இதயத்துடன் இணைத்து  விடுவார். இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் இதயத்தின் பணியான இரத்தத்தை அழுத்தி இரத்தக் குழாய்க்குள் செலுத்துவதையும் நுரையீரலின் அசுத்த  இரத்தத்தில் சேர்ந்துள்ள கார்பன் டை ஆக்சைடை அகற்றி அதில் ஆக்ஸிஜனேற்றுவதையும் இயந்திரம் மேற்கொள்ளும்.

    Picture courtesy: https://www.heart-valve-surgery.com/

    பலகாலமாகத் திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேலே குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதே பெரும்பாலும் பல சூழல்களிலும் விரும்பப்படுகிறது.

    இது ஒருபக்கம் இருந்தாலும் குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery) செய்யப்படுகிறது.

    குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery)

    1990 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சைச் செய்முறை (Minimally Invasive Surgical Procedure) அறிமுகமானது. இதில் இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படாமலே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதயநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் குறைந்தபட்ச ஊடுருவு இருதய அறுவை சிகிச்சையும் மிக நுட்பமானதோர் செய்முறையாகும். இது சாவித்துவார (Key hole surgery) அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

    வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையில் ஏற்படுத்தப்படும் பெரிய கீறல்களுக்கு மாற்றாக உடலில் சிறிய சாவித் துவார அளவிலான கீறல்களை (incisions) உருவாக்குவதன் மூலம் இந்தச் செய்முறையில் (Procedure) அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. பெரும்பாலும் சிறிய சாவித் துவாரக் கீறல்கள், சிறப்பு அறுவைச் சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

    Original picture courtesy : http://www.bypasssurgeryofmumbai.com/mica.aspx

    வழக்கமான அறுவை சிகிச்சைக்கு ஆறு முதல் எட்டு அங்குல நீளமுள்ள கீறல்கள் தேவைப்படும். ஆனால் குறைந்தபட்ச ஊடுருவு இதய அறுவை (Minimally Invasive Cardiac surgery)  சிகிச்சைக்கான கீறல்கள் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குலங்களே இருக்கும். மேலும் சாவித் துவார அறுவை சிகிச்சைகளில்  வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட மீட்சி நேரம் (Recovery time) மிகக் குறைவாகவே இருக்கும். மருத்துவர்கள் குறைந்த பட்ச ஊடுருவு அறுவை சிகிச்சைக்காக எல்லா இதய நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்யப்படுவதில்லை. சிகிச்சைக்குத் திட்டமிடும் முன்பு நோயறிதல்  தொடர்பான சோதனை முடிவுகளை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, நோயாளி குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery) ஏற்றதாக இருக்குமா அல்லது வழக்கமான திறந்த இதய அறுவைச் சிகிச்சையே (open heart surgery) அவருக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்பதை முடிவு செய்வார்கள்.

    குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery)  குறிப்பிட்ட சில இதய அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்கே  அதிகம் விரும்பப்படுகிறது.

    எந்திரனியல் இருதய அறுவை சிகிச்சை (robotic heart surgery) என்பது மார்பில் மிகச் சிறிய வெட்டுத் துளைகள் (incisions) மூலம் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை ஆகும்.

    இதில் மிகச் சிறிய செயற் கருவிகளையும் (tiny instruments),  மற்றும் எந்திரனால் கட்டுப்படுத்தப்பட்ட கருவிகளையும்  (Robot controlled tools) பயன்படுத்துவதன் மூலம், திறந்த இதய அறுவை சிகிச்சையை விடக் குறைவான அளவில் ஊடுருவும் இதய அறுவைச் சிகிச்சையை (Minimally Invasive heart surgery) இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் செய்ய முடியும். இந்தச் செயல்முறை (Procedure) அதிக அளவில் பயன்படுத்தப்படும் எந்திரனின் (Robot) உற்பத்தியாளரின் பெயராலும் டா வின்சி அறுவை சிகிச்சை (Da Vinci Surgery) என்றும்  சில நேரங்களில்  அழைக்கப்படுகிறது.

    Picture courtesy: https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/robotic-cardiac-surgery?amp=true

    எந்திரனியல் இதய அறுவை  சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்தல்

    • இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தமனி பக்கவழி செயல்முறையில் (Artery Bypass Procedure)
    • கடினமான, விறைப்பான அல்லது கசியும் இதயத் தடுக்கிதழ்களை (Valves) சரிசெய்யும் போது அல்லது மாற்றும் போது
    • இதய ஊற்றறைத் துடிப்பு (Atrial fibrillation) என்பது அரித்மியா (arrhythmia) என்னும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மருத்துவநிலைகளின் (group of medical condition) பொதுவானதோர் வகை. நிமிடத்திற்கு100 துடிப்புகளை விடக் கூடுதலான அல்லது  நிமிடத்திற்கு 60 துடிப்புகளை விடக் குறைவான இதய ஊற்றறைத் துடிப்பைச்  சரி செய்ய
    • இதயத்தில் உள்ள கட்டிகளை(tumor) அகற்றுதல்
    • பிறவியிலேயே காணப்படும் இதயக் குறைபாடுகளை (congenital defects) நீக்குதல்

    போன்ற பிரச்சினைகளுக்காகப் பொதுவாக மருத்துவர்கள் எந்திரனியல் இதய அறுவை சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்கிறார்கள்.

    இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் எதாவது அபாயம் அல்லது வெற்றியை உறுதி சொல்ல இயலாத நிச்சயமற்ற தன்மை கட்டாயமாக உண்டு. நூற்றுக்கு நூறு எந்தச் சிறு அபாயமோ அல்லது நிச்சயமாக வெற்றி தரக் கூடியதாகவோ எந்தச் செயல்பாடுமே இருப்பதில்லை. அது இயற்கையானது. மருத்துவமும் இதற்கு விலக்கில்லை. சொல்லப்போனால் அறுவைச்சிகிச்சையில் எதிர்பாராத சிக்கல்களும் அதனால் அபாயங்களும் ஏற்பட மிக அதிகமான வாய்ப்புகள் உண்டு. இதய இரத்தக் குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச் சிகிச்சையிலும் (CABG) எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத அபாயங்களுக்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.

    அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட வாய்ப்புள்ள அபாயங்கள்

    • அறுவைச் சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பின்னர் இரத்தப் போக்கு (Bleeding)
    • இரத்த உறைதல் ஏற்படும் நேர்வில் பக்கவாதம் (stroke) ,மாரடைப்பு (Heart attack) அல்லது நுரையீரல் பிரச்சனைகள் (Lungs Problem)
    • கீறல் (incision) செய்யப்பட்ட இடங்களில் நோய்க் கிருமித் தொற்று
    • நுரையீரல் அழற்சி (pneumonitis)
    • சுவாசக் கோளாறுகள்(Breathing problems)
    • கணைய அழற்சி (Pancreatitis)
    • சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)
    • இயல்புக்கு மாறான இதயத்தின் தாளலயம் (abnormal heart rhythm)
    • இணைப் பக்கவழி ஒட்டு தோல்வி அடைதல் (Bypass grafting failure)
    • இறப்பு(Death) ஆகிய மேற் குறிப்பிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

    இவை தவிர நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை சார்ந்து வேறு அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளும் முன்பாக நோயாளிகள் தங்கள் மருத்துவருடன் அவர்களின் கவலைகள் குறித்து தயக்கமின்றி விவாதித்தல் அவசியம்.

    அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நாளிரவில்  இரவு 9 மணிக்கு முன்னதாக உணவு உட்கொண்டு விடுதல் நல்லது. மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு உணவோ உட்கொள்வது, நீர் அல்லது  எவ்வகையான பானமும் கட்டாயமாக அருந்தக் கூடாது.

    நோயாளி மருத்துவரிடம் கட்டாயமாகத்  தெரிவிக்க வேண்டிய தகவல்கள்

    • இதய நோயாளி பெண்ணாக இருக்கும் நேர்வில் அவர் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் தரித்திருப்பதாகக் கருதினாலோ அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
    • தனக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுத்தும் மருந்துகள் (medicines), ரப்பர் (Latex), அயோடின் (Iodine), நாடாக்கள் (tapes) பொது மயக்க மருந்து (General anaesthesia) மற்றும் குறிப்பிட்ட உடற்பகுதியை உணர்விழக்கச் செய்யும் மயக்க மருந்து (Local anaesthesia) ஆகியன குறித்த விவரங்களை மருத்துவரிடம் நோயாளி தெரியப்படுத்த வேண்டும்.
    • நோயாளி பயன்படுத்தி வரும் ஆங்கில, ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மற்றும் மூலிகை மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் பொது ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளும் கூடுதல் மருந்துகள் (Health suppliment medicines) ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
    • இரத்தப் போக்குக் கோளாறுகள் (Bleeding disorders) உள்ளனவா என்பது குறித்தும் மற்றும் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள், ஆஸ்பிரின்(Aspirin) அல்லது இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் (Anti blood clotting medicines) எடுத்துக் கொண்டிருப்பின் அது பற்றிய விவரங்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சில மருந்துகளை அறுவைச் சிகிச்சைக்குச் சில தினங்களுக்கு முன் மருத்துவர் நிறுத்தி விடக் கூறலாம். அதற்கு மாறாக வேறு ஊசி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

    இரத்தம் உறைய ஆகும் நேரத்தைக் (Time taken for clotting) கண்டறிய இரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்  மேற்கொள்ளச்  சொல்வார்.

    • நோயாளிக்கு செயற்கை இதய மின்னியக்கியோ (Pace maker) அல்லது வேறு இதய சம்பந்தமான கருவிகளோ பொருத்தப்பட்டிருப்பின் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.
    • நோயாளி புகைப்பிடிப்பவராக இருந்தால் எவ்வளவு விரைவில் அதனைக் கைவிட முடியுமோ அத்தனை விரைவில் கைவிடுதல் நல்லது. இதனால் ஓட்டு மொத்த உடலாரோக்கியம்  மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது என்பது மட்டுமல்லாமல் அறுவைச் சிகிச்சையின் தாக்கத்திலிருந்து விரைந்து குணமடையும் வாய்ப்புகளையும் அதிகரிக்கக் கூடும்.

    (7) வாயில் செயற்கைப் பற்கள் பொருத்தப்பட்டிருப்பின் அவை நிரந்தரமாக இணைக்கப்பட்டவையா அல்லது கழற்றி மாட்டிக் கொள்ளக் கூடியவையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

    முதல் பதிப்பு

    Share
  • மாவடு ஊறுகாய் செய்யும் முறை

    மாவடு ஊறுகாய் செய்யும் முறை

    மாவடு ஊறுகாயின் சுவையே தனி. நினைத்தாலே வாயூறும். தயிர் சாதத்துக்கு மட்டுமில்லாமல், எல்லாச் சாதங்களுக்கும் அதைத் தொட்டுக்கொள்ளலாம். அது மட்டும் இருந்துவிட்டால், உணவே களைகட்டும். அமர்க்களமான சுவையும் மணமும் சத்தும் கொண்ட மாவடு ஊறுகாய் செய்யும் முறையை இதோ திருமதி ஜெயந்தி விளக்குகிறார். அவர் கணவர் வெ.சுப்ரமணியன், உடன் உரையாடுகிறார். இதைப் பார்த்து உங்கள் வீட்டிலும் மாவடு ஊறுகாய் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் – ஒரு சிறு விளக்கம்

    காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் – ஒரு சிறு விளக்கம்

    வெ. சுப்ரமணியன்

    காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance plans) குறித்து மக்களிடையே போதிய  விழிப்புணர்வு இல்லை. இன்னும் பொதுமக்களில் பலருக்கும் ஆயுள் காப்பீடு (Life Insurance), விபத்துக் காப்பீடு (Accidental Insurance) மற்றும் ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance) ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் குறித்த சரியான புரிதல் இல்லை.

    சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையின் சேர்க்கைப் பிரிவில் (admission section) எனக்கு முன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். அவர் அங்கிருந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடியதிலிருந்து அவர் படித்த பெண்மணி என்று ஊகித்துக் கொண்டேன். அவர் தன்னுடைய  கணவரை இதய அறுவைச் சிகிச்சைக்காக உள் நோயாளியாக சேர்க்கை பெற வேண்டி அங்கு வந்திருப்பதையும் அவருக்கும் மருத்துவமனை ஊழியருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் வாயிலாக அறிய முடிந்தது.

    மருத்துவமனை ஊழியர் அவரிடம் சேர்க்கைக்காக இருபதாயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்தும்படி கூறினார். அதற்கு அந்தப் பெண்மணி தன்னிடம் நாற்பது இலட்ச ரூபாய்க்குக் காப்பீடு (Insurance) உள்ளது ஆகவே முன்பணம் செலுத்தாமல் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னார்.

    அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை ஊழியர், அவரது கணவருக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்தால் முன்பணம் கட்ட அவசியம் இல்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் (Insurance company) சேர்க்கைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆகவே அருகில் உள்ள காப்பீடு மேசையில் (Insurance desk)  உரிய படிவங்களைப் பெற்றுத் தவறின்றிப் பூர்த்தி செய்து கூடவே உரிய காப்பீட்டு ஆவணங்களின் நகல்களையும் (copies of policy document) இணைத்துத் தர வேண்டும் என்று கூறி எதிர்வரிசையில் இருந்த காப்பீட்டு மேசைக்குச் செல்லும்படி கூறினார்.

    காப்பீட்டு மேசையில் பணியிலிருந்த ஊழியர் அந்தப் பெண்மணியிடம் தேவையான படிவங்களை வழங்கிய பின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் காப்பீட்டின் அளவு குறித்து மேலோட்டமாக அறிந்து கொள்வதற்காகக் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ள கடைசியாகச் செலுத்திய தவணைக் தொகை ரசீது அல்லது அதன் நகலைத் தரக் கோரினார். அந்தப் பெண்மணி உடனே எடுத்துக் கொடுத்த  ஆவணங்கள் ஆயுள் காப்பீட்டு எல்லாம் ஆவணங்களே (Life insurance policy document). அவற்றில் எதுவுமே ஆரோக்கியக் காப்பீட்டு ஆவணங்கள் (Health insurance documents) இல்லை. கல்வியறிவு உள்ளவர்களுக்கே இந்த வேறுபாடுகள் புரிவதில்லை.

    நான் ஆயுள் மற்றும் ஆரோக்கியக் காப்பீட்டு ஆலோசகராக (Insurance Advisor) இரு வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறேன். இருப்பினும் பொதுவெளியில் கட்டுரை எழுதும்போது சார்பற்று நடுநிலையான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால் இதில் நான் சார்ந்துள்ள நிறுவனங்களைக் கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை.

    இந்தக் கட்டுரை விழிப்புணர்வு நோக்கில் மட்டுமே எழுதப்பட்டது. ஆகவே எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தும் விவரங்களும் தரவுகளும் வியாபார நோக்கில் தரப்பட்டவை அல்ல. அதே போல் எந்த ஒரு தனிப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும் கட்டுரை எழுதப்படவில்லை. இக் கட்டுரை பல்வேறு வகை காப்பீட்டுத் திட்டங்களை மேலோட்டமாகப் பறவையின் கண்பார்வையில் (Bird’s eye view) காட்டும். கூடுமானவரை பொதுமக்கள் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்து கொண்டு பயனடைய வேண்டும் என்பதே கட்டுரையின் மைய நோக்கமாகும். கட்டுரையில் சொல்லப்பட்டவை அனைத்தும் சட்டபூர்வமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளத் தகுதி வாய்ந்தவை அல்ல. சரியான வழிகாட்டலுக்கு உங்களின் காப்பீடு ஆலோசகரையோ அல்லது நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியையோ அணுகவும்.

    நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் செயல்பாடுகளை எவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதோ அதைப் போலவே அனைத்து வகையான காப்பீட்டு நிறுவனங்களையும்  இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insuranace Regulatory and Development Authority of India – IRDAI) என்ற சட்டப்பூர்வமான அமைப்பு கட்டுப்படுத்தி வழி நடத்துகிறது.

    காப்பீட்டுத் துறையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும்  நிறுவனங்களின் எண்ணிக்கை 57. இவை அனைத்தும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவை.

    இவற்றில் 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் (Life Insurance companies) உள்ளன. இவற்றில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( Life Insurance Corporation of India) மட்டுமே அரசு நிறுவனம். மற்றவை அனைத்தும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே.

    ஆயுள் காப்பீடு அல்லாத பிற காப்பீட்டு நிறுவனங்கள் (Non – life insurance companies) மொத்தம் 33. இவற்றில் 6 காப்பீட்டு நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள்.

    இவை தவிர ஒரே ஒரு  மறு காப்பீட்டு நிறுவனமும் (Reinsurance company) உள்ளது. இது ஒரு அரசு நிறுவனம்.

    இவை தவிர அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Postal Life Insurance) மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

    ஆயுள் காப்பீடு குறித்து முதலில் காண்போம்.

    ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது,  ஒரு குடும்பத்தில்  முதன்மையானவர் குடும்பத்தை நடத்த வருவாய் ஈட்டுபவராவார். வருவாய் ஈட்டும் அந்தக் குடும்பத்தின் தலைவர் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால், அக் குடும்பத்தின் நிதி நிலைமையைப் பராமரித்துப் போதுமான உணவைப் பெற வழி வகை செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டில் பல வகைகள் புழக்கத்தில் உள்ளன. இவை குறித்து சுருக்கமாகக் காண்போம்.

    1) பிற கூறுகள் ஏதுமற்ற காலக் காப்பீடுத் திட்டம் ( Pure Term insurance policy)

    இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால அளவுகளில் அதாவது 10, 20, 30 அல்லது இன்னும் கூடுதலான ஆண்டுகளுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

    இத்திட்டம் ஆயுள் காப்பீட்டை மட்டுமே கொண்டுள்ளதால் இதில் சேமிப்புக் கூறு (savings component) இல்லை. இதனால் பிற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் போல இதிலிருந்து முதிர்வுப் பலன் (maturity benefits) எதுவும் கிடைக்காது. 

    இதனால் மற்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மிக அதிகமான காப்பீட்டுத் தொகைக்கும் மிகக் குறைந்த தவணைக் தொகையே செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.

    2) தவணைத் தொகையைத் திரும்பப் பெறும் காலக் காப்பீடுத் திட்டம் (Term insurance policy with return of premium)

    இந்தத் திட்டத்தில் காப்பீடு எடுத்துக் கொண்டவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்து காப்பீட்டுக் காலத்திற்குப் பின்னரும்  உயிர் வாழும் நேர்வில் (survival) அவர் செலுத்திய தவணைக் தொகை முதிர்வின் போது (maturity) முழுமையாகத் திரும்பத் தரப்படும்.

    கால காப்பீட்டுத் திட்டத்திற்கும், தவணைக் தொகையைத் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டத்திற்கும் செலுத்தும் தவணைத் தொகையில் பெரும் வேறுபாடு உண்டு. இதனைக் கீழ்வரும் அட்டவணை தெளிவுபடுத்தும்.

    Comparison chart courtesy: Business today

    3) யூலிப் திட்டங்கள் (unit linked insurance plans)

    ஒருசிலர் ஆயுள்காப்பீட்டிற்கா அல்லது சேமிப்பிற்கா எதற்கு  முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்து தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பமான மனநிலையில்  இருப்பார்கள். யூலிப் திட்டங்கள் இவர்களைப் போன்றவர்களைக் கருத்தில் கொண்டு  உருவாக்கப்பட்டவை. யூலிப் காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீடுதாரருக்கு ஒரே திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டையும், சேமிப்பையும் தரக் கூடியவை. இத்திட்டங்களின் மூலம் செலுத்தும் காப்பீட்டுத் தவணைத் தொகையைக் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத் திரும்பப் பெற முடியாது.

    செலுத்தப்படும் காப்பீட்டுத் தவணைத் தொகை காப்பீட்டு கூறு (Insurance component) மற்றும் சேமிப்புக் கூறாக (savings component) பங்குச் சந்தை முதலீடு என்று இரண்டு கூறுகளை உடையதாக இருக்கும். எந்தெந்த பரஸ்பர நிதிகளில் எந்த விழக்காடு அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் காப்பீட்டாளர் முடிவு செய்யலாம். காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட பரஸ்பர நிதிகளில் ( mutual fund schemes) முதலீடு செய்து அலகுகளாக (Units) மாற்றிக் காப்பீட்டாளரின் கணக்கில் வைத்துக் கொள்ளும். காப்பீட்டாளர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப பரஸ்பர நிதிகளையோ அல்லது முதலீட்டின் விழுக்காட்டையோ குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றம் செய்து கொள்ள முடியும் (switching). காப்பீட்டுக் காலம் முடியும் முன் ஐந்தாண்டுகளுக்குப் பின்பு எப்போது வேண்டுமானாலும் பரஸ்பர நிதி அலகுகளின் அன்றைய மொத்த சொத்து மதிப்பின் (Net Asset Value – NAV) அடிப்படையில் காப்பீட்டைச் சரண் செய்து முழுவதுமாகப் பணமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

    நீண்டகாலம் இத்தகைய திட்டங்களில்  நீடித்திருப்பதே நல்ல பலன்களைத் தரும். மேலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்துப் போதிய அனுபவம் இல்லாதவர்களும் அதில் ஒரளவுக்குப் பாதுகாப்பான முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பை யூலிப் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குகின்றன.

    4) காலவரை ஈட்டுறுதித் திட்டங்கள். (Endowment insurance plans)

    இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீட்டையும் சேமிப்பையும் ஒருங்கே தரக்கூடியவை. நீண்டகால  நிதி இலக்காக ( financial goal) அடைய நினைக்கும் தொகையை சிறுசிறு தவணைகளில் சேமித்து முதிர்வில் செலுத்திய தவணைக் தொகையுடன் ஊக்கத் தொகையாக (Bonus) ஒரு தொகையையும் சேர்த்து காப்பீட்டாளரால் பெற இயலும். காப்பீட்டாளர் துரதிர்ஷ்டவசமாக காப்பீட்டுக் காலத்திற்குள் இறக்க நேரிட்டால் காப்பீட்டுத் தொகையை நியமனதாரருக்குக் (nominee) காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

    5) பணம் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டம் (Money back insurance policy)

    காலவரைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேமித்த தொகை கைக்கு வர முதிர்வு வரை காத்திருக்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் பணத்தேவை அவ்வப்போது ஏற்படும் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டு வடிவமைக்கப்பட்டவையே பணம் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு காப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள இயலும். காப்பீட்டின் முதிர்வில் மீதமுள்ள காப்பீட்டுத் தொகையுடன் ஊக்கத் தொகையையும் சேர்த்து பெற்றுக் கொள்ள முடியும்.

    துரதிர்ஷ்டவசமாக காப்பீட்டாளர் காப்பீட்டுக் காலத்திற்குள் இறக்க நேரிட்டால் அதுவரை வழங்கப்பட்ட உயிர்வாழ் பலனாகப் பெற்ற தொகைகளைக் கணக்கில் கொள்ளாமல் முழுக் காப்பீட்டுத் தொகையும் நியமனதாரருக்குத் வழங்கப்படும்.

    6) முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Whole life insurance policy)

    முழு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் நூறு ஆண்டுகள் வரையில் காப்பீடு வழங்கும் திட்டமாகும். நூறாண்டுகளுக்கு மேல் காப்பீட்டாளர் உயிரோடிருப்பின் முதிர்வுத் தொகையுடன் ஊக்கத் தொகையும் சேர்த்து அவருக்கு வழங்கப்படும். ஒருவேளை துரதிருஷ்டவசமாகக் காப்பீட்டாளர் நூறு வயதை அடையும் முன் இறக்கும் தேர்வில் காப்பீட்டுத் தொகை நியமனதாரருக்கு (nominee) வழங்கப்படும்.

    முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டாளர் நுழையும் வயதைப் (entry age) பொறுத்து காப்பீட்டுத் தவணைத்தொகை (instalment of premium) அமையும்.  தவணைத்தொகை மாறாது (fixed premium). தவணைத்தொகை காலக் காப்பீட்டுத் திட்ட (term life insurance) தவணைத்தொகையை விடக் கூடுதலாக இருக்கும். ரொக்க மதிப்பு (Cash value) என்பது இத்திட்டத்தில் உள்ள ஒரு முக்கியக் கூறாகும்.

    காப்பீட்டாளர் ஆயுள் காலம் முழுவதும் தவணைத்தொகை செலுத்துதல் தவிர குறிப்பிட்ட கால அளவுகளில் தவணை செலுத்தும், அதாவது 15, 20, 25….. ஆண்டுகளுக்கு (Limited pay)  தவணைக் தொகை செலுத்தும் மற்றும்  ஒரே ஒருமுறை (single pay) மொத்தமாக  செலுத்தும்  விருப்பத் தேர்வுகளும் (options) இத்திட்டங்களில் உள்ளன.

    இத்திட்டத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. பின்னொரு சந்தர்ப்பத்தில் அவை குறித்துக் காண்போம்.

    7) குழுக் காப்பீட்டுத் திட்டம் (Group insurance policy)

    குழு ஆயுள் காப்பீடானது பெரியதொரு குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பிலான காப்பீட்டை வழங்குகிறது.  ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கும் குழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமொன்றில் பொதுவாக நிறுவனத்தின் முதலாளியே பாலிசிதாரராக இருப்பார். குழு ஆயுள் காப்பீடு மற்ற ஆயுள் காப்பீடுகளை விட சற்று குறைவான பாதுகாப்பையே அளிக்கிறது, காரணம் இது அதிகச் செலவின்றி கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைக்கிறது . நிறுவனத்தின் ஊழியர் குழு ஆயுள் காப்பீட்டை ஏற்றுக்கொள்ளும் நேர்வில், பொதுவான காப்பீட்டுத் தொகையைப்  பொறுத்து, ஒரு சிறிய தொகை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படலாம்.

    எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசாங்கம் ஓய்வூதியம் (pension) பெறுபவர்களின் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதியாக (pensioners’ family security fund) ரூபாய் 80/= பிடித்தம் செய்கிறது. ஓய்வூதியதாரர் இறக்கும் நேர்வில் அவரது நியமனதாரருக்கு ரூபாய் 50000/= வழங்கப்படுகிறது.

    அதைப் போலவே அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நான்கு இலட்சம் ரூபாய்ஆரோக்கியக் காப்பீடு வழங்க  ஒவ்வொரு மாதமும் சிறு தொகை ரூபாய் 350/= பிடித்தம் செய்கிறது.

    8) சிறார் காப்பீட்டுத் திட்டங்கள் (children insurance policies)

    பிற்காலத்தில் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்காகத் தேவைப்படும் நிதியை எட்டுவதை இலக்காகக் கொண்டு காப்பீடுடன் (Insurance) கூடிய முதலீடு (Investment) என்று நோக்கில் உருவாக்கப்பட்டவையே சிறார் காப்பீட்டுத் திட்டங்கள். இத்திட்டங்களில் குழந்தைகள் பிறந்த தினத்திலிருந்தே சேமிக்கத் துவங்கலாம். ஒருவர் தான் எட்ட வேண்டிய நிதி இலக்கைத் (financial goal) தனது நிதிநிலைக்கேற்ப (financial condition)  வெவ்வேறு நிதித்திட்டங்களைத் (funds) தேர்வு செய்யும் வசதி இத்திட்டங்களில் உள்ளது.

    9) ஓய்வு காலத் திட்டங்கள் (Retirement plans)

    ஓய்வு காலத் திட்டங்கள் ஒருவர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பு(financial security) மற்றும் செல்வ வளத்தை உருவாக்குதல் (wealth creation) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீட்டப்பட்டவையாகும். ஓய்வுக் காலத் திட்டங்களில் சேமிக்கப்பட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஓய்வூதியமாகப் பெற இயலும். ஒருவேளை துரதிருஷ்டவசமாகக் காப்பீட்டாளர் மரணமடைய நேரிட்டால் நியமனதாரருக்கு இறப்புப் பலன்கள் (death benefits) வழங்கப்படும்.  இதிலும் நிறைய வகைகள் உள்ளன. அவற்றைப் பின்னர் காண்போம்.

    சுருக்கமாகச் சொன்னால்,

    1) காலத் திட்டம் (Term insurance) –  ஆயுள் ஆபத்துக்கான பாதுகாப்பு மட்டும் (Purely life risk cover)

    2) யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் (Unit linked insurance plan – ULIP) (யுலிப்) – காப்பீடு (Insurance) + முதலீட்டு வாய்ப்பு (Investment opportunity)

    3) எண்டோவ்மென்ட் திட்டம் (Endowment plan) – காப்பீடு ( Insurance) + சேமிப்பு (Savings)

    4) பணம் திரும்பப் பெறுதல் திட்டம் (Money back plan)  – காப்பீட்டுத் தொகையுடன்  அவ்வப்போது வருமானம் (Insurance with periodic income)

    5) முழு ஆயுள் காப்பீடு (Whole life insurance) – முழு ஆயுளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஆயுள் பாதுகாப்பு (Guaranteed life cover for the whole life)

    6) சிறார்கள் காப்பீட்டுத் திட்டம் (Children insurance plan) – கல்வி, திருமணம் போன்ற உங்கள் குழந்தையின் வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றுவதற்காக ( To fulfilling the financial requirements of children like education , marriage)

    ஓய்வூதியத் திட்டம் (Pension plan) –  ஓய்வைத் திட்டமிட்டு, கவலை ஓய்வு பெறுங்கள்

    இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) பரிந்துரைக்கும் செய்ய வேண்டியவையும்

    செய்யக் கூடாதவையும் (Do’s and Don’ts)

    செய்ய வேண்டியவை(Do’s):

    காப்பீட்டை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான முக்கிய தேவைகள் மற்றும் உங்களின் எதிர்பார்ப்புகளைச் சிந்தித்துப் பாருங்கள்

    பொறுமையாக விருப்பங்களைத் தேர்வு செய்து, ஆலோசனைகளைப் பெறுங்கள்

    திறந்த மனதுடன் இருங்கள், நீங்கள் சேகரிக்கும் ஆலோசனை மற்றும் தகவல்களைப் பற்றி எச்சரிக்கையோடு இருங்கள்.  உங்கள் தேவைகளுக்கு எது பொருத்தமானது என்பதைக் காண காப்பீட்டின் பல்வேறு  விருப்பத் தேர்வுகள் (Policy options) குறித்து நிறைய வினாக்களை எழுப்பி உங்களுடைய தேவைக்குத் தோதான காப்பீட்டை கண்டு கொள்ளுங்கள்.

    காப்பீடு குறித்த விபரங்களை அதாவது ஒற்றைத் தவணையா (single premium) அல்லது வழக்கமான தவணைக் காப்பீடென்றால் (Regular premium policy) அதாவது காலாண்டுத் தவணையா (Quarterly premium), அரையாண்டுத் தவணையா (Half yearly premium) அல்லது ஆண்டுத் தவணையா (Yearly premium) அல்லது மின்னணு பணப் பரிமாற்றம் (Electronic Clearing Service – ECS) இவற்றில் எதுவாக இருந்தாலும் எது உங்களுக்கு பொருத்தமான சிறந்த தவணை முறை என்பதையும் கேட்டறிந்து கொண்ட பின் சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

    முன்மொழிவு படிவத்தை (Proposal form) மிகவும் கவனமாகவும் தனிப்பட்ட முறையில் உங்கள் கையால் நிரப்பவும்

    முன்மொழிவு படிவத்தின் (Proposal form) உள்ளடக்கங்களுக்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு என்பதை நினைவில் கொண்டு  அதனை முழுமையாகவும் உண்மையான தகவல்களால் மட்டுமே நிரப்பவும். இப்போது நீங்கள் கொடுக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  தகவல்களைப் பிற்காலத்தில் உரிமைகோரலின் (Claim) போது  மறுக்க முடியாது.

    நீங்கள் நியமனதார் விவரங்களைக் (Nominee details) கட்டாயமாக நிரப்பி உறுதி செய்து கொள்ளுங்கள்.

    ஒரு மொழியில் படிவம்  இருந்து எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் இருந்து, நீங்கள் வேறு மொழியில் எடுத்துக்காட்டாக தமிழில் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கிறீர்கள் என்றால் படித்துக் காட்டப்பட்ட வினாக்களை நன்கு உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கப்பட்டது என்ற உறுதிச்சான்றை (declaration) முன்மொழிவுப் படிவத்தில் அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் கையொப்பமிட்ட பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிவுப் படிவத்தின் நகலையும், உங்கள் பதிவுகளுக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளையும் உங்களது கோப்பில்  வைத்திருங்கள்

    நீங்கள் யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தை அதாவது யூலிப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் (Unit Linked Insurance Policy – ULIP)   அது குறித்த கீழ்க்கண்ட  வினாகளை எழுப்பித் கட்டாயமாகத் தெளிவு பெற வேண்டும்.

    அ) பல்வேறு கட்டணங்கள் (various changes)

    ஆ) நிதி விருப்பங்கள் (fund options)

    இ) நிதி மாறுதல் செய்தல் (switching of funds)

    ஈ) நீங்கள் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலகினால் விளையும் நன்மைகள் (Benefits of discontinuing the policy)

    உ) காப்பீட்டை சரண் செய்தல் (surrendering the policy)

    ஊ) பகுதியளவு நிதியைத் திரும்பப் பெறுதல்( Partial withdrawal of fund)

    செய்யக்கூடாதவை (Don’ts):

    அ) முன்மொழிவுப் படிவத்தில் (Proposal form) எந்த நெடுவரிசையையும் (coloumn) நிரப்பாமல் காலியாக விட வேண்டாம்.

    ஆ) முன்மொழிவுப் படிவத்தை நீங்களே நிரப்புங்கள்.  வேறு யாரும் நிரப்ப அனுமதிக்காதீர்கள்.

    இ) எந்தவொரு தகவலிலும் உண்மையை மறைக்கவோ (conceal) அல்லது தவறாகக் குறிப்பிடவோ (misstate)  வேண்டாம். காரணம் உரிமைகோரலின் போது சர்ச்சைகளுக்கும் சிக்கல்களுக்கும் அது வழிவகுக்கும்.

    ஈ) உங்கள் காப்பீடுத் தவணைத் தொகையைக் குறித்த நாளில் செலுத்துவதைத் வழக்கமாகக் கொள்ளுங்கள். தவணைக் தொகை செலுத்துவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தவறவிடவோ வேண்டாம்.

    அடுத்து ஆரோக்கியக் காப்பீடு குறித்து விரைவில் எழுதுகிறேன்.

    தொடரும்….

    Share