Blog

  • பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++

    காலக் குதிரை
    ஆழியைச் சுற்றுவது பரிதி.
    பரிதி வடுக்கள் தோன்றி
    ஊழித் தீயின்
    ஓவிய நாக்குகள் நீண்டு பாயும்  !
    தீக்கனல் அண்டங்களைத்
    திண்டாட வைக்கும் !
    பரிதியில் பூகம்பம் ஏற்படும் !
    ஓயாத சூரியனும்
    ஒருநாள் ஒளிவற்றி முடங்கும் !
    பூமியின் உட்கருவில்
    பூகம்பத் தொடரியக்கம்
    தூண்டும்
    பரிதியின் தீப்புயல்கள்  !
    சூரிய காந்தம், கதிர்வீச்சு
    காமாக் கதிர்கள்
    சூழ்வெளி வெப்பம் மாற்றுபவை !
    பூமியின் உட்கரு அணு உலை
    அரங்கேற்றம் செய்யும்
    பூகம்ப அடித்தட்டு
    நடனத்தை !
    எரிமலை கண்ணைத்
    திறக்கும் !
    பரிதி வடுக்களின் உச்சத்தில்
    துருவ மாற்றம்
    நேர்ந்திடும் !
    பாரில் நிலநடுக்கம் தூண்டும் !
    சுனாமி அலைகளை
    அனுப்பி
    மனித இனத்தை விழுங்கும்
    புனித பூமியில்.

    ++++++++++++

    Solar cycles 22-23-24

    சூரியன் போல் வலுவற்ற காந்த தளமில்லாத தீவிரக் கனல் விண்மீன்கள் இருப்பதை நாங்கள் நிச்சயம் எதிர்பார்க்க வில்லை. பரிதிக்கும் தீவிரக் கனல் உருவாக்க வாய்ப்புள்ளதற்கு, அது வழி திறக்கிறது.  அம்மாதிரி ஒரு தீவிரக் கனல் பாய்ச்சல், இப்போது புவிமேல் விழுமாயின் அது பேரளவு இடர் ஏற்படுத்தும்.  மின்னியற் சாதனப் பாதிப்புகள் மட்டுமின்றிப் புவியில் சூழ்வெளிக்குக் கேடும், உயிரின வளர்ச்சிக்குத் தடைப்பாடும் நேர்ந்திடும்.

    கிரிஸ்டொஃபர் கராஃப் [விஞ்ஞான நிபுணர், ஆரஸ் பல்கலைக் கழகம், டென்மார்க்]

    unnamed

    பூமியை அடிக்கடி தாக்கும் பரிதியின் தீக்கனல் வீச்சுகள்

    கி.பி. 775 ஆண்டில் ஒரு சிறு சூரிய தீக்கனல் வீச்சு நேர்ந்துள்ளதற்குச் சைனாவில் உள்ள புதிய குவோ சௌ ஜிங் தொலைநோக்கிய ஆதாரம் காட்டியுள்ளது.  அது  நாம் இப்போது விண்வெளி யுகத்தில் கண்டுள்ளதை விட 10 முதல் 100 மடங்கு பெரிது.  நமது பூமி அடிக்கடி இப்படிச் சூரிய தீக்கனல் பாய்ச்சுகளால் பாதிக்கப் படுகிறது.  இந்த தீக்கனல்களில் சக்தி வாய்ந்த துகள்கள், சூரியனிலிருந்து விண்வெளியில் வீசி எறியப்பட்டு, புவி நோக்கித் தாக்கும் போது, பூகாந்தத் தளத்திற்கு எதிராக மோது கின்றன.  அப்போதுதான் எழில்மயமான பன்னிறத் தோரணங்கள் [Auroras] வடதுருவத்தில் காட்சி அளிக்கின்றன.

    Solar Flares

    1859 இல் இதுவரைக் காணாதப் பெரிய தீப்புயல் அடிப்பு [Solar Eruptions] சூரியனிலிருந்து பேரளவு வெப்ப ஒளிப்பிழம்பைக் கக்கிப் பூமியைத் தாக்கியுள்ளது.  அப்போது கரிய சூரியத் தேமல்கள் [Solar Dark Spots] திடீரென பேரொளி வீசிப் பிரகாசித்தன !  இந்நிகழ்ச்சி காரிங்டன் நிகழ்ச்சி [Carrington Event]  என்று குறிப்பிடப் படுகிறது.  இவற்றைப் போலின்றி, மற்ற சில விண்மீன்கள் தீவிரத் தீப்புயல்களை [Superflares] மர்மமாகப் பூமி மீது பாய்ச்சு வருகின்றன !   அப்போது காணப்பட்டப் பன்னிற வட துருவ ஒளித் தோரணங்கள், தெற்கே கியூபா, ஹவாயியில் வாழ்ந்து வருவோர்க்குத் தெரிந்துள்ளன.  உலக முழுவதும் தந்திப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  பூகோளக் காப்பு ஓஸோன் குடை அடுக்கு [Earth’s Protective Ozone Layer] சக்தி வாய்ந்த துகள்களால் முறிவு பட்டிருப்பதைக் கிரீன்லாந்தின் பனிப்பதிவுகள் [Ice Records] காட்டுகின்றன.

    Solar magnetic field -1

    பிரபஞ்சத்தில் காரிங்டன் நிகழ்ச்சியை விட 10,000 மடங்கு பெரிய தீவிரத் தீப்புயல்கள் வெளியாக்கும் விண்மீன்கள் இருப்பது தெரிய வருகின்றன. டென்மார்க் ஆரஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டொஃபர் காராஃப் குழுவினர் சுமார் 100,000 விண்மீன்களின் காந்த தளங்களை ஆய்வு செய்து தீவிரத் தீப்புயல் வீச்சுகளைப் பற்றி எழுதி இருப்பதாகத் தெரிகிறது.

    ++++++++++++++++++++++
    பரிதியின் மேற்தளத்தில் குளத்தில் விழுந்த கல் கோலமிடும் வட்டங்கள் போல் சூரிய பூகம்பங்கள் ஏற்படுவதாக 1972 ஆம் ஆண்டிலே உல்ஃப்  (Wolff) என்பரால் முன்னறிவிக்கப் பட்டது.   அவை சூரிய தளத்தின் கீழே திடீரென எழும் சக்தியால் வளையும் ஒலி அலைகள் தோன்றி மெய்யாக மேற்தளத்தில் வட்டங்களாய் உண்டாகின்றன.

    டாக்டர் ஸெர்கி ஸகராவ்  (Dr. Sergei Zharkov)   (UCL’s Mullard Space Science Laboratory)

    “சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே !  பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்ரட் நிகோலா ஸ்க·பீட்டாவும் ) ஒப்புக் கொண்டோம்.”

    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)

    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது !  பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன.  இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”

    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1E Solar Weather & Atmosphere

    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது !  பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது.  துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை !  வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன.  இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை.  இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.

    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)

    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் “பரிதிக் குமிழி” எனப்படும் ஒரு கோளத்துக்குள்  (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது.  அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும்.  [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் குமிழியின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”

    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)

    பரிதியில் எழும் சூரிய தீப்புயல்கள் புரியும் தீவிர விளைவுகள்

    2012 மார்ச் 30 ஆம் தேதி  முல்லார்டு விண்வெளி விஞ்ஞான ஆய்வுக் கூடத்தைச்  (UCL’s Mullard Space Science Laboratory) சேர்ந்த டாக்டர் ஸெர்கி ஸகராவ்  (Dr. Sergei Zharkov)  தேசீய வானியல் கூட்டரங்கில்   (National Astronomy Conference)  தனது ஆய்வு உரையை நிகழ்த்திய போது கீழ்வரும் அதிசயத் தகவலை முதன்முதல் எடுத்துக் கூறியிருக்கிறார்.    அதாவது  பரிதியின் காந்த புலத்தாலும், மின்னேறிய துகள்களாலும் சூரிய தீப்புயல்கள் (Solar Eruptions) எழும்போது  பரிதிப் பூகம்பங்கள் (Sunquakes) உண்டாக்கப் படுகின்றன.   காரணம் :  அப்போது பரிதியிலிருந்து பேரளவு காந்தத் திரட்சி வடிவு (Magnetic Structure) சூரிய மண்டலச் சூழ்வெளியில்  வெளியேறுகிறது.    சூரியப் பூகம்ப நிகழ்ச்சியின் முதல் நோக்கை ஆய்வு செய்து 1990 ஆண்டு முடிவில் அறிவித்தவர் இருவர் : கோஸோவிசெவ்  & ஸர்காவ் (Kosovichev   &  Zharkov) .  கடந்த பத்தாண்டு காலத்தில் பரிதிச் சூழ்வெளியில்  வீசப் பட்ட சூரிய தீப்புயல்களின் (Solar Flares) வலுமிக்க துகள் கற்றைகள் தாக்கி (Impact of Powerful Beams of Particles) பரிதிக்குள் புகுந்து  சூரியப் பூகம்பங்களை  (Sunquakes) உண்டாக்கும்  என்பது உறுதியாக நிலைநாட்டப் பட்டது.    இப்போது 2012 இல் வெளியான  புதிய ஆய்வு அறிக்கையில் பரிதியின் “காந்தப் புலத் திணிவு எழுச்சிகளும்”   (CME Coronal Mass Ejections) சூரியப் பூகம்பத்தை உண்டாக்குகிறது என்பது தெரிய வருகிறது.

    இந்த விஞ்ஞானிகள் இருவரும் 2011 பிப்ரவரி 15 இல் பரிதியில் நேர்ந்த தீப்புயல்களை ஆய்வு செய்து 2011 மார்ச்சில் நேர்ந்த கிழக்கு ஜப்பான் புகுஷிமா பகுதி 9.0 ரிக்டர் நிலநடுக்கத்தை விட 1000 மடங்கு ஆற்றல் உள்ள சூரியப் பூகம்பம் எழுந்ததைக் கூறியிருக்கிறார்.   அந்த சூரியப் பூகம்பத்தைத் தூண்டியது பரிதிக் காந்த புலத்தின் புயலான இரு வால் முனைகளே.    அதாவது தீப்புயலில் உள்ள காந்தப் புலத்தின் திடீர் விரிவுதான் சூரிய பூகம்பத்தை உண்டாக்கி உள்ளது.    பரிதி  மண்டலத்தில் பாயும் தீப்புயலின் சராசரி வேகம்  வினாடிக்கு 600 கி.மீ. தூரம் (600 km/sec) (360 mps).  அதே பூகாந்தப் புயல் (Geomagnetic Storm) பூமியைத் தாக்கி  துருவங்களில் ஒளித்தோரணமும் தோன்றியது.

    பரிதியில் நேரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சிகள் சூரியச் சூழ்வெளியிலிருந்து எப்படிப் பரிதி மேற்தளத்திற்கும் உட்கருவுக்கும் சக்தியும் நெம்பு நிறையும் (Energy and Momentum) வருகின்றன என்று ஆராய விஞ்ஞானிகளுக்கு மிகவும் உதவுகின்றன.

    பரிதியின் மேற்தளத்தில் குளத்தில் விழுந்த கல் வரையும் வட்டங்கள் போல் சூரிய பூகம்பங்கள் ஏற்படுவதாக 1972 ஆம் ஆண்டிலே உல்ஃப்  (Wolff) என்பரால் முன்னறிவிக்கப் பட்டது.   அவை சூரிய தளத்தின் கீழே திடீரன எழும் சக்தியால் வளையும் ஒலி அலைகள் தோன்றி மெய்யாக மேற்தளத்தில் வட்டங்களாய் உண்டாகின்றன என்று   டாக்டர் ஸெர்கி ஸகராவ்  (Dr. Sergei Zharkov) சொல்கிறார்.   2012 ஆண்டில் பரிதியின் கொந்தளிப்பு மிகையாக ஏறுவதால் அதன் உச்சநிலை 2013 இல்அதிகமான சூரிய பூகம்ப எண்ணிக்கையுடன், அவற்றின் மூல காரணங்களையும் முக்கிய விளைவுகளை அறியவும் உதவும்.

    அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?

    பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை !  ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது.  கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டுகளையும் நகர்த்தி வருகிறது.  பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடுகிறார்கள்.  இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது.

    இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன !  ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன !  அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது !  இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் !  பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது !  உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.

    Fig 2 The Corona Heating Mystery

    ஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது !  இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள்.  கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன.  ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன.  அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம்.  1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன !  அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் !  உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை !  வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !

    Fig 1C Solar Magnetic Field

    பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்

    பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி !  அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது !  இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ?  எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ?  ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ?  பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும்.  அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது.  மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது.  லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன !  அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன.  அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந் தார்கள்.  நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது.  பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது.  நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.

    பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு

    பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார்.  அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :

    Mitch Buttros Equation :

    Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption

    Fig 3 The Equation for Sunspots & Extreme Weather

    மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :

    பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>> பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத் துன்பங்கள்.

    மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகி யோருடன் உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.

    சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்

    பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின் வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத் தெரிகிறது.  பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின் கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது.  அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே !  சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது !  நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும் (விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின் பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன.

    Fig 1A The Sun's Core

    பூமியில் இடி மின்னல் தாக்குவது போல் பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது.  பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகியவற்றை ஆய்ந்து உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின்  “காந்தப் புலத் திணிவு எழுச்சிகளும்” [Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத் துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும் உண்டாக்கு கின்றன !

    கடற் தளத்தின் மீது சீரான காந்தத் திணிப்புகள்

    1950 ஆண்டுகளில் கடற் தளத்தின் கீழ் பெட்ரோலிய ஆயில் புதையல்களைத் தேடிச் செல்லும் பூதள ஆய்வாளர் காந்தக் கருவி களைக் கட்டிக் கப்பல் அல்லது விமானம் மூலம் ஆராய்ந்த போது காந்த வலுவற்ற பாறைகளுக்கு அருகில் ஆயில் கிணறு இருப்பதைச் சோதித்தார்கள்.  பூமியின் தளத்தில் நோக்கிய போது பாறைக் காந்தங்கள் தாறுமாறாய் இங்கும் அங்கும் செம்மை யில்லாது இருந்தன.  ஆனல் கடற்தளங்களில் காந்தப் பாறைகள் அவ்விதம் அமையவில்லை !  மாறாக 1960 ஆண்டுகளில் அட்லாண்டிக் கடலில் தேடிய போது கடற்தளப் பாறைகளின் காந்தங்கள் சீராக ஓரினப் பண்பாட்டில் விந்தையாக நீண்ட அளவுத் துண்டங்களாய் “மைய அட்லாண்டிக் பிளவுக்கு” இணையாக (Parallel to the Mid-Atlantic Ridge) அமைந்திருந்தன.  அந்த மைய அட்லாண்டிக் கோட்டில்தான் எரிமலைக் கசிவுகள் உண்டாகி எரிமலைத் தீவுகள் எழும்பியுள்ளன !  மற்றும் எல்லைக் கோட்டில் தான் பூகம்பங்களும் பல நேர்ந்துள்ளன.

    Fig 4 The Nature of Solar Flares

    கடற் தளப்பரப்பு விலகி நகர்தல் !

    1962 இல் லாரென்ஸ் மார்லி (Lawrence Morley) என்பவர் கடற்தள விரிவைப் பற்றி முதன்முதல் அறிவித்தைப் பல பூதள விஞ்ஞானிகள் நிராகரித்தார்.  லாரென்ஸ் மார்லி, அடுத்து டிரம்மண்டு மாத்யூஸ், ·பிரெடெரிக் வைன் ஆகிய மூவரும் கடற்தளம் தொடர்ந்து சீராக ஆண்டுக்கு 2.5 செ.மீடர் வீதத்தில் விலகிக் கொண்டு வருவதாக அறிவித்தனர்.  அடித்தட்டுகள் விலகும் போது பிளவில் எரிமலைக் குழம்பு கசிந்து பிறகு குளிர்ந்து படிகிறது.  அப்போது அவை தமது காந்த முனை அமைப்புகளையும் முத்திரை செய்தன.  சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூகாந்தம் முனைத் திருப்பம் செய்கிறது.  அதே போல் கடற்தளப் பாறைகளும் தமது காந்த முனைத் திருப்பங்களைப் பதிவு செய்கின்றன.  அதாவது பூமியின் கடற்தளம் ஒரு “பூத நாடாப் பதிவு மானி” (Giant Tape Recorder) போல் இயங்குகிறது !  இவ்விதமாக அனைத்துக் கடற்தளங்களும் வெவ்வேறு காந்த முனைகளைப் பதிவு செய்த பாறைத் துண்டங்கள் கொண்டதாக காணப் படுகின்றன.  அந்த கடற்தள அடித்தட்டுகளைத் தொடர்ந்து தள்ளிக் கொண்டு நகர்த்துவது பூமியின் உட்கரு வெப்பச் சக்தியே !

    1. https://youtu.be/b_oI8TcZXck

    2.  https://youtu.be/ySAwoT5ysm4

    3. https://youtu.be/wwqlgbmjtyk

    4. https://jayabarathan.wordpress.com/

    5.https://widgets.wp.com/likes/#blog_id=633798&post_id=8326&origin=jayabarathan.wordpress.com&obj_id=633798-8326-5790e9ca18d80

    [தொடரும்]
    +++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 ( http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
    19 India Daily Technology Team (Aug 8, 2005)
    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)
    29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
    29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website : http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov&gt; (April 25, 2007)
    31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
    32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
    33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    34 National Geographic Picture Atlas of Our Word (1990)

    35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    36 http://www.space.com/11506-space-weather-sunspots-solar-flares-coronal-mass-ejections.html  (Space Weather: Sunspots, Solar Flares & Coronal Mass Ejections)
    37  http://science.nasa.gov/science-news/science-at-nasa/2006/10mar_stormwarning/  (NASA Science News   Solar Storm Warning)  (March 10, 2006)
    38  http://www.thecityedition.com/Pages/Archive/2010/Sunspots.html  [Sunspot Cycles & Power Grid] (November 18, 2011)
    39 http://solarham.com/ Joint USAF/NOAA Report of Solar and Geophysical Activity SDF Number 104 Issued at 2200Z (April 13, 2012)
    40.  Solar Science  – Solar Eruptions Cause Sunquakes  (April 4, 2012)

    41.  http://allnewspipeline.com/Massive_Solar_Flare_Earthquake_Precursor.php  [April 18, 2016]

    42. http://www.nydailynews.com/news/world/superflare-blast-devastating-effects-earth-article-1.2576288 [March 24, 2016]

    43. https://mic.com/articles/139142/earth-could-be-hit-with-a-devastating-superflare-from-the-sun#.Pg1R72Qav [March 29, 2016]

    44.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/07/its-a-frightening-possibility-our-sun-could-generate-a-devastating-superflare-that-impacts-earths-ab.html?   [July 20, 2016]

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  July 21, 2016 [R-1]

     
     
    Attachments area
    Preview YouTube video Sun Flares – Are We Safe From Solarstorms (Sun Documentary)

    Sun Flares – Are We Safe From Solarstorms (Sun Documentary)

    Preview YouTube video Scientists Warn Devastating Solar Storms Could Bring Darkness And Kaos

    Scientists Warn Devastating Solar Storms Could Bring Darkness And Kaos

    Preview YouTube video Scientists warn devastating solar storms could disable communications, electronics

    Scientists warn devastating solar storms could disable communications, electronics
    Share
  • தாத்தாவின் டைரி குறிப்புகள்

    எஸ். வி. வேணுகோபாலன்

    2011 தீக்கதிர் புத்தக மேசை பகுதியில் வெளிவந்த நூல் ரசனை கட்டுரை இது… மதுரை சுப்பாராவ் அவர்களது அருமையான சிறுகதை தொகுப்பின் மீதான இந்த எழுத்துக்களை, அதன் தொடக்கத்தில் எழுதி இருந்த மேற்கோள் கவிதையை திண்டுக்கல் தோழர் ஆர் எஸ் மணி நினைவூட்டிக் கேட்கவும் மீண்டும் அசைபோட நேர்ந்தது… உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்….

    தாத்தாவின் டைரி குறிப்புகள்

    ரசனையைத் தூண்டி சிந்தனையில் ஆழ்த்தும்
    வாசிப்புப் பயணம்

    என்றோ வசித்த
    ஒரு தெருவைக்
    கடப்பது
    அத்தனை எளிதல்ல.
    ஒரு தெருவைக்
    கடப்பது
    சமயங்களில்
    ஒரு வாழ்வைக்
    கடப்பது போல.
    -சுந்தர்ஜி (நன்றி:sundargprakashblogspot.com )

    நேற்று முன்தினம் தற்செயலாக வாசிக்கக் கிடைத்த மேலே உள்ள கவிதை, திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் அடிநாதமாக இருப்பதை உணர்ந்து லயித்துப் போனேன்.

    வசித்த தெரு மட்டிலுமல்ல, நாளிதழின் ஒற்றை வரி செய்தி கூட ஒரு பெரிய வாழ்வனுபவத்தைத் தன்னுள் சுமந்திருப்பது தொடர்புள்ளவர்களுக்குப் புலப்படும். எப்போதோ கேட்ட பழைய பாடல் ஒன்றை நீண்ட நாள் கழித்து நீங்கள் கேட்க நேரும் போது, அது உங்களுக்குள் எழுப்பும் சங்கிலித் தொடரான நினைவுகள் சமயத்தில் பாடலைக் கூட நழுவ வைத்துவிட்டுப் பிறகு ஒரு பெருமூச்சோடு அடுத்த வேலைக்கு நகர்த்தும். மரக் கிளையிலிருந்து கண்ணுக்குச் சட்டென்று தெரியாத வெள்ளிக் கம்பியாகத் தொங்கும் இழையில் ஒரு புழு சர்க்கஸ் வேலை செய்து தப்பிக்கத் துடிப்பதை சிறுவர்கள் சட்டென்று கண்டுபிடித்துத் துருவ ஆரம்பித்துவிடுவார்கள். தாத்தா பாட்டி சொன்ன புராணக் கதையோ, சரித்திர சங்கதியோ கூட திரும்ப அசை போடுகிற போது, மேகத் திரளை உற்றுப் பார்த்தால் அது பஞ்சுப் பொதியாய்ச் சிதறிப் பிரிந்து இணைந்து வேறு வேறு சித்திரங்களை அடையாளப் படுத்துவது போல புதிய தேடல்களை உருவாக்கக் கூடும்.

    சாதாரண, அசாதாரண என்றெல்லாம் பிரிப்பானேன் வாழ்க்கையை, அவரவர் அனுபவங்கள் அவரவர்க்கு மகத்தானவை. அதை உங்கள் உள்ளங்கையில் ஏந்திப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்க்கவேண்டும். அவ்வளவு தான். அந்த வேலையை எழுத்தின் சித்தர்கள் சிலர் பளீரென்று வடித்து உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைக்கும்போது அடடா..அதற்கு மேல் என்ன வேண்டும் ரசனையோடு அலையும் பிறவிகளுக்கு?

    “தாத்தாவின் டைரி குறிப்புகள்” வாசிப்பு ஒரு வித்தியாசமான நடைப் பயணம். புராண, வரலாற்று மறு வாசிப்புக் கதைகளை அதிகம் உள்ளடக்கிய 16 கதைகளை அறிமுகப்படுத்துவது வாசகருக்கு நேரடியான வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தில் குறுக்கீடு செய்துவிடலாம் என்ற தவிப்பிருந்தும், வாசிப்பின் நுகர்வைப் பகிரும் இன்பத்தின் முனையிலிருந்து இதை அணுகலாம்.

    தலைப்புச் சிறுகதை கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்த உற்சாகத்தோடு அலைபேசியில் அழைத்து அந்தக் கதையை உடனே வாசித்தாக வேண்டுமே என்றேன். கையெழுத்து பிரதியை எனக்காக நகல் எடுத்து அடுத்த அஞ்சலில் அனுப்பி வைத்தார் ச சுப்பாராவ். மதுரை மாநகரின் வைதிக பெரியவர் ஒருவரது டைரியில் பிரிட்டிஷ் காலத்துப் பதிப்பகங்களின் பெயர்களும், மாநகரின் முக்கிய இடங்களும், கடைகளின் பெயர்களும், கட்சி பிரமுகர்கள் அடையாளங்களுமாய் அசாத்திய விவரங்களின் தொகுப்பை விரிகிற அந்தக் கதையின் இறுதியில் தான் ஷாக் வைத்திருப்பார் சுப்பாராவ். தந்தையை இழந்த தன்னையும், தனது தாயையும் வருஷித்துக் காத்து வளர்த்த தாத்தாவின் ஞாபகமாய் இருக்கும் அந்த டைரிகளை எடுத்தாலே ஏன் அம்மா சலித்துக் கொள்கிறார் என்பதன் விடை, இளவயது கைம்பெண் ஒருத்தி நெறியோடு இருந்தாளா என்பதை அவளது தவறாத மாதவிலக்கைப் பதிவு செய்து வந்த நற்சான்றுக் கையேடுதான் அது என்று தெரியவருகிற இடம் சனாதன பெண்ணடிமைப் பார்வையை நெருப்பாய் எரிக்கும் இடம். “ஞானிகளும் சமயத்துல மனுஷாளா இருப்பா, சில சமயம் அதுக்குக் கீழயும் இறங்கிடுவா.. . ” என்று அம்மா சொல்லும் இடம் அது.

    “செல்வம் மாஸ்டர்” , அசாத்திய திறமை இருந்தும் வாழ்க்கையின் புதிர்கள் பிடிபடாத ஒரு கலைஞனின் வீழ்ந்த வாழ்க்கையின் மீது கண்ணீர் சிந்த வைக்கும் கதை. பொருளாதார தட்டுப்பாடு மனிதர்களைக் கொண்டு தள்ளும் நரகம் சமூகத்தின் மீதான மெலிய விமர்சனமாகவும் படர்கிறது. “சியர் கேர்ல்ஸ்” கதை, சொர்க்கம் நரகம் பற்றிய வருணிப்புகளின் பின்புலத்தில் அருவருப்பாகக் காட்சி தரும் அக்காலத்திய புனைவுகளைப் பகடி செய்கிறது. பிரிஜ்லால் சுப்ரமண்யம் சிறுகதை, நமது முக்கிய கைப்பொருளை அற்பத் தேவைக்காகக் கைமாற்றிக் கொண்டு காணாமல் போகும் பழைய நண்பனின் மீட்சியையும், மீள மறுக்கும் நட்பையும் அழகாகப் பேசுகிறது. “வெள்ளைக் கமலாவும், நாய்க்கண்ணனும்” கதை காதலைக் காட்டிக் கொடுத்துப் பறித்தவனின் காலம் கடந்த மன்னிப்பு கோரல், அது சம்பந்தப்பட்ட பெண்ணின் அன்றைய மேம்பட்ட வாழ்க்கையின் படிக்கட்டு எதிலும் பொருந்தாது திரும்ப அவனிடமே வந்து சேர்வது மனதை என்னவோ செய்கிறது. “செம்மண்”, நகர வாழ்க்கை பறிகொடுக்கும் பாரம்பரிய விஷயங்களைக் குறியீடாக உணர்த்துவது.

    “அக்பர் என்ற அப்பா”, “ஜெபான்னிசா” கதைகள் முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர்கள் அக்பர், அவுரங்கசீப் இருவரின் காணாத பக்கங்களை எடுத்து வைக்கும் அற்புதச் சிற்பங்கள். தனக்குச் சொல்ல வேண்டிய செய்தியை சுப்பாராவ் பதட்டமாகச் சொல்லத் தலைப்படுவதே இல்லை. கதையின் வாழிடத்தில் வாசகரையும் ஓர் அங்கமாக்கி அவர்கள் அருகேயே அந்தக் கதையை நிகழ்த்துக் கலையாக்கிவிடுபவர். ஆர் எஸ் மனோகர் நாடகங்களில் ஒரே ஒரு வரி வசனம் வருவதாயிருந்தாலும் மேடையில் மிகுந்த பாடெடுத்து அந்தக் காட்சிக்கான ஜோடனை அமைக்கப் பட்டிருப்பதைப் போல, மியூசியத்தின் கலைப் பொருள்களை உயிர்ப்பித்தும், புதையுண்ட மனிதர்களை மீண்டும் எழுப்பியும் வாழ்ந்து காட்ட வைக்கும் வல்லமையை எழுத்தில் வருவிக்கிறார் சுப்பாராவ். சோக சித்திரங்கள் எப்போதும் உள்ளத்தைத் தழுவுதல் இக்கதைகள் விஷயத்திலும் நடக்கிறது.

    காமச் சாமியார்களின் ஆதிகால வடிவமான ரைக்வரின் அடாவடி குறித்த கதைக்கு “நித்யானந்தம்” என்பதைத் தவிர பொருத்தமான தலைப்பு வேறு என்ன இருக்க முடியும் ? ஆனால், லோப முத்ரா வேறு தளத்தில் இயங்கும் கதை. ஜப தபங்களில் நாட்களைக் கடத்தும் தவ சிரேஷ்டர்களுக்கு இல்லற தருமத்தை பத்தினிகள் நினைவுபடுத்தவேண்டி வருவது குறித்த கவித்துவ மோகம் அது. ஏனோ அது, இக்காலத்தில் ஐ டி துறை இளம் தம்பதியினர் தமக்கான நெருக்கமான நேரங்களுக்குக் கூட யோசித்து யோசித்து அட்டவணை போடுவது குறித்து அண்மையில் வாசித்த வேதனை செய்தியை நினைவுபடுத்தியது.

    “கடைசிக் கேள்வி”, பாண்டவர்களின் மூத்தவன் உண்மையில் தருமத்தை அனுசரித்த தருமனா என்ற சவுக்கடிக் கேள்வியை வைக்கும் புராண மறுவாசிப்பு. “சுட்ட பழம்” கதையில் வரும் அவ்வை, பாட்டியாய் அறிமுகமாவதில்லை எனபது இன்ப அதிர்ச்சி. கேள்வி கேட்ட சேரிச் சிறுவனைப் போக வேண்டிய உலகுக்கு அனுப்பிவிட்டு அவனிடத்தில் முருகன் தான் சுட்ட பழம் வேண்டுமா என்று கேட்டவன் என்று வரலாறு புரட்டும் மன்னவன் பற்றிய இந்த மறுவாசிப்பில், அவ்வையும், அதியமானும் ருசித்து உண்ணும் உணவு வகைகளை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று சுப்பாராவிடமே கேட்டேன். கே கே பிள்ளை அவர்களின் தமிழர் வாழ்வும், பண்பாடும் என்ற அற்புத நூலில் இருந்து எடுத்த தரவுகள் என்றார். இந்த நுட்பமான தகவல் சேகரிப்பு அவரது சின்னச் சின்னக் கதைகளிலும் சுடர் விடுகிறது. தீர்மானமான நாத்திகப் பார்வையை, சாதியத்திற்கு எதிரான குரலை அப்பட்டமான பக்தி மார்க்கத்தில் விரியும் நிகழ்வுகளின் பின்புலத்தில் நின்று விரித்து வைக்கும் “கடவுளின் மறுமொழி” கதையிலும் விவரக் குறிப்புகள் ரசத்தைச் சேர்க்கின்றன. மகாகவி பாரதியின் பத்திரிகைத் துறை நுழைவாசலைத் திறக்கும் “விட்டுவிடுதலையாகி ” என்ற எளிய கதையிலும் இதை ருசிக்க முடியும்.

    “இந்த மரம் தான்…”கதை, சுதந்திரப் போரில் மங்கள் பாண்டே தியாகத்தை ஒரு மரத்தின் குரலில் பேசுவது. நெட்டை மரங்களென நின்ற மனிதர்களைக் கேள்விக்குள்ளாக்குவது.

    தொகுப்பின் சாட்டையடிக் கதையாக நிற்பது, “சில கேள்விகளும், ஆயிரம் பசுக்களும்”. வேதாந்த தத்துவார்த்தத்தின் மணிமுடியைத் தரித்து அத்தனை எதிர்வாதங்களையும் தவிடுபொடியாக்கி விடைபெறும் யாக்ஞவல்கியனை, எல்லாம் மாயை என்றானபின்னால் இத்தனைப் பரிசுப் பொருள்களும், பசுக்களும் எதற்கு என்று மன்னன் ஜனகன் தயங்கித் தயங்கித் தனியே போய்க் கேட்கவும், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன், என்னை நம்பியிருக்கும் பெரிய கூட்டத்தின் வயிறுகளை பிரம்மஞானம் நிரப்பாது, அனைத்திற்கும் ஆதாரம் ஆத்மா அன்று, பொருள் தான் என்று பதில் அளிக்கும் இடம் அற்புதக் கடல். இன்னமும் மாயை குறித்த மாயையில் இருக்கும் மக்களுக்குத் தெளிவைக் காட்டும் இக்கதை, தவிர்க்க முடியாதபடிக்கு ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை என்ற அசாத்திய நூலின் நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது. அகங்கார மத பீடங்களை ஞானத்தின் வடிவமாக தரிசிக்கும் இக்காலத்தில் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அதன் தேவையை இக்கதை உணர்த்துவதாகப் பட்டது.

    சுப்பாராவ் தேர்ச்சியான கதைக்கருவை எடுப்பதோடு கூடவே அது இயங்க வேண்டிய களத்திற்கான தயாரிப்புகளையும் நவராத்திரி கொலுவில் பூங்கா, நீரருவி, மலைக்கோட்டை, நெடும்பாதை அமைக்க சில வீடுகளில் குழந்தைகளும், பெரியவர்களும் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளைப் போல மேற்கொள்கிறார். அதற்கான மொழி அவரது சொந்த ரசிப்பின் திளைப்பிலிருந்து இலகுவாக வழிந்து எழுதுகோலை நிரப்புகிறது. அதன் கொண்டாட்டத்தில் தொடரும் வாசிப்பின் இடையேயும், இறுதியிலும் அவர் பொறி வைத்துக் கொடுக்கும் அதிர்ச்சி வாசகரை மீண்டும் மீண்டும் அதே வழியில் அதே பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுகிறது. இன்னும் மேம்பட்ட அனுபவங்களை நமது உள்ளங்கையில் எடுத்துக் கொடுக்க அவரை வேண்டுகிறது வாசக உள்ளம்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் இவ்வாண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவுப் பரிசை இந்தத் தொகுப்பு பெற்றதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. பாரதி புத்தகாலயம் நியாயமான பெருமிதம் கொள்ள முடியும். உறுத்தும் மிகச் சில பிழைகளைத் திருத்திய அடுத்தடுத்த பதிப்புகளைத் தமிழ் வாசிப்பு உலகம் கோரிப் பெற்று இன்புற வேண்டும்.

    தாத்தாவின் டைரி குறிப்புகள் – சிறுகதைத் தொகுப்பு
    ச சுப்பாராவ்
    பாரதி புத்தகாலயம்
    விலை ரூ.60/-. பக்கங்கள்:96

    Share
  • ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய கல்யாண் நினைவு கவிதைப் போட்டி – 2016.

    பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்

    உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா?

    ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா?

    மலர்களின் மகரந்தப் புன்னகையை, மழலையரின் பேதமற்ற உலகை, காதலின் யெளவனத்தை, பால்திரியா பொதுமையின் இலக்கணத்தை, இனம் பிரியா மானுட இலட்சணத்தை, பேதங்களின் அவலட்சணத்தை, உரிமைக்குரல்களின் முழக்கத்தை, நியாயத்தின் தர்மாவேசத்தை மொழிபெயர்க்க அறிந்தவரா நீங்கள்?

    அப்படியானால் இந்தப் போட்டி உங்களுக்குத் தான்..

    ரியாத் தமிழ்ச்சங்கம் – எழுத்துக்கூடம் சார்பில் கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி – 2016 நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெல்வோருக்குக் கீழ்க்காணும் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    முதல் பரிசு – 10,000 இந்திய உரூபாய்கள்

    இரண்டாம் பரிசு – 5000 இந்திய உரூபாய்கள்

    மூன்றாம் பரிசுகள் (இருவருக்கு) – தலா 2500 இந்திய உரூபாய்கள்

    உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் அரிய சந்தர்ப்பம்.

    சிந்தனைச் சிறகை விரியுங்கள் – சிறந்த கவிதையை வடியுங்கள் – சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள் – கலந்து கொள்வதற்கான ஒரே தகுதி : தமிழராய் இருப்பது மட்டுமே…

    விதிமுறைகள் :

    1. தமிழ் மொழி அறிந்த, உலகின் எப்பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.வயது வரம்பு இல்லை.

    2. கவிஞர்கள் தமக்குப் பிடித்தமான எந்தத் தலைப்பிலும் தம்மைக் கவர்ந்த எந்தச் சிந்தனையிலும் கவிதை எழுதலாம் என்றாலும் மதநெறி, தனி மனிதத் தாக்குதல் மற்றும் பாலியல் போன்ற விதயங்களை விலக்கியதாகப் பாடுபொருள் அமைந்திருக்க வேண்டும்.

    3. குறைந்த அளவில் 15 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.

    4. தமிழ்க்குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப் போட்டியும் அதன் முடிவும் அறிவிக்கப்படும்

    5. சிறந்த முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

    எப்படி கலந்துகொள்வது?

    1. கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) rtskavithaipotti2016@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

    2. தட்டச்சு வடிவம், இயலாவிடில் நல்ல தெளிவான உயர்தர தெளிவுறு (High-resolution) அமைப்பில் ஒளிவருடி (Scan செய்து) இணைப்புக் கோப்பாகவும் அனுப்பலாம்.

    3. கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி , தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    4. இந்தக் கவிதை இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் – இணையத்திலும் – இணைய மடலாற் குழுமத்திலும் – செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் ஆக்கியவர் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

    5. கவிதைகளை அனுப்புகையில் “ரியாத் தமிழ்ச் சங்கம் – கல்யாண் நினைவு கவிதைப் போட்டி 2016” என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

    விதிமுறைகள் :

    1. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிகக் கருத்து விவாதங்கள் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ படமாட்டாது.

    2. ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் – ஆட்சி மன்ற குழுவினர் – அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    3. இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றிக் கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச்சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.

    4. போட்டியில் பங்கு பெறுவோரிடமிருந்து படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2016 செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவு இந்திய நேரம் 00:00 மணி வரை.

    5. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச்சங்க ஆண்டு விழா மலரில், வலைத்தளத்தில், மடலாற்குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும்.

    இங்ஙனம்

    பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்
    முத்துசாமி வெற்றிவேல்
    ஷேக் முஹம்மது

    தலைவர் – ஒருங்கிணைப்பாளர்
    கலை இலக்கியப் பிரிவு (எழுத்துக்கூடம்)
    ரியாத் தமிழ்ச்சங்கம்
    ரியாத், சவூதி அரேபியா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    9ee96abd-aaf3-4bac-b652-5a6ac1a4d5d1

    ”அன்னம்போல், மயிற்பீலி வண்ணம்போல் பட்ஷிகளை
    எண்ணம்போல் கைவிரலால் ஏகாந்தக் -கண்ணன்,
    வனத்தினில் செய்து விளையாடி னாலும்
    மனத்திலோ பூபார முள்’’….கிரேசி மோகன்….

    Share
  • தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்

    பவள சங்கரி

    தலையங்கம்

    தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான ஒரு செய்தி என்றால் அது எந்த ஒரு புதிய வரிவிதிப்பும் இல்லை என்பதுதான். மற்றபடி இந்த நிதிநிலை அறிக்கை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. தொழில் வளர்ச்சிக்குரிய அறிவிப்புகளோ அல்லது உள் கட்டமைப்பு வளர்ச்சிக்குரிய அறிவிப்புகளோ ஏதுமில்லை. புதிதாக தொழில் முனைவோர்கள் அல்லது தொழிலகங்களின் வளர்ச்சிகளையோ உற்சாகப்படுத்துவதற்கான அறிவிப்புகளும் ஏதும் இல்லை. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில இலவசங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் மட்டும் காணப்படுகின்றன. இரண்டரை இலட்சம் கோடி கடன் சுமையைக் குறைப்பதற்கான எந்தவிதமான வழிவகையும் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் சார்பில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதற்கோ அல்லது அரசால் நிர்வகிக்கப்படக்கூடிய தொழிற்சாலைகளின் உற்பத்தியை பெருக்குவதற்குரியதான அறிவிப்புகளும் ஏதும் இல்லை. தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பஞ்சாலைகளில் உற்பத்தித் திறனை மேம்படுத்தி இலாப நோக்கில் செயல்படுத்தும்விதமாகவும், வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதற்கும்கூட எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லை. மற்றபடி இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    160701 - Vatsalyam series 100dpi

    “மார்கழி மாதத்தில் மாடுகள் மேய்த்திரவில்
    ஓர்கழி ஊது குழலோடு -ஊர்புகும்
    கார்முகில் வண்ணம்மேல் கோதூளி மின்னிட
    பார்மிசை ராப்பகல் பத்து’’….கிரேசி மோகன்…..

    ராப்பகல் பத்து -ராப்பத்து ,பகல்பத்து….கண்ணனைக் குறிக்கும்….!

    Share
  • பூச்செண்டுகள்

    ருத்ரா இ.பரமசிவன்

    கண்ணீரும் கனவும் கொண்டு

    துடைத்து வைத்த‌ பாதை.

    விடியும்போது

    இப்படி

    வாசல் தெளித்துவைத்த பாதை.

    நினவு நெளியல்களில்

    நெய்த கோலங்கள்

    இன்னும் விழவில்லை.

    பறவைச்சிறகுகள்

    நக்கிப்பார்த்து சொன்னது

    “வானம் இனிக்கத்தான் செய்கிறது.”

    நம்பிக்கை

    கசிவு வெளிச்சமாய்

    விழுது இறக்குகிறது.

    எதற்கு இந்த விடியல்?

    அப்புறம்

    எதற்கு மலையிடுக்கில்

    அந்தி எனும்

    ஒளி முடியல்?

    புள்ளி வைத்து வைத்து

    வாடிக்கையாக பால் ஊற்றும்

    பால்காரி வைப்பாளே

    அப்படி

    இந்த வட்டச்சூரியன்களை

    புள்ளி வைத்து வைத்து…

    முடிக்கவே முடியாத ஒரு வாக்கியத்தை

    முடக்க நினைக்கும்

    நெஞ்சே!

    அவன் வருவான்..

    அவன் வருவான்..

    போதும்!

    ஒரு அடுகளம் நோக்கி

    என்னை சங்கிலி கோர்த்து

    இழுத்துக்கொண்டு

    ஓடுவதெல்லாம் போதும்.

    நீ சிரித்தாய்!

    நானும் சிரித்தேன்!

    அவ்வளவு தானே

    அந்த இடைவெளிக்குள்

    இத்தனை பிரபஞ்சங்களுமா

    விழுங்கப்படவேண்டும்?

    காலம் எனும்

    நீள அகல ஆழங்கள்

    போதும்..போதும்.

    ஒரு கல்லறை கட்ட அல்லவா

    ஓ காலமே

    என் தோள்களில் வந்து

    உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.

    உட்கார்ந்து கொள் கவலையில்லை!

    கிழக்கு வயிறு

    கிழிந்து கிழிந்து

    போக்கு காட்டினாலும் கவலையில்லை!

    எங்கள் சிரிப்புகள்

    பிளந்து காட்டிய‌

    அதோ அந்த பள்ளத்தாக்குகளில்

    கிம்பர்லியின் வைரக்கிடங்குகள்

    ஒரு நம்பிக்கையின்

    கதிர்ப் பூச்செண்டுகளை

    அசைத்துக்கொண்டே இருக்கின்றன.

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (6)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (5)

    kural

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல (4)

    விருப்பு வெறுப்பற்ற கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர்க்கு, துன்பங்கள் எக்காலத்தும் உண்டாகா.

    மனிதர்களில், ஞானியை `தீரன்` என்று மறைநூல்கள் விளிக்கும். ஏனெனில் அவன், பொருள்களின் மீதுவரும் பற்றைத் துறந்தவன். ஞானியே இப்படி என்றால், மலர்மிசை ஏகினான் எப்படி இருப்பான்? அவன், விருப்பு, வெறுப்பு இரண்டுமில்லாதவன்.

    சிவனை ஆதிபிக்ஷு என்பார்கள். எதையும் நாடாமல், எதையும் வெறுக்காமல் அவன் விட்டேத்தியாய் இருந்ததனால்தான் பதினான்கு லோகங்களும் அவன் காலடியில் வந்து விழுந்தன என்று புராணம் விளக்கும்.

    வயதாகிவிட்டால், களைப்பு, இளைப்பு, சலிப்பு, பிணி இவை காரணமாக சில விருப்புகள் உதிர்ந்துபோகும். ஆனால் அப்போதும் கூட வெறுப்பு நீங்காது. வெறுப்பின் இருப்பு, விருப்பு இன்னும் எங்கோ ஒளிந்துகொண்டு பிணியாய்ப் பீடித்திருக்கிறது என்பதையே காட்டும். விருப்பையும் வெறுப்பையும் உதறமுடியாது. புதைமணலில் உதைக்க உதைக்க உள்ளேயல்லவா அமிழ்ந்துபோவோம்? விருப்பு வெறுப்பு அற்றவனின் திருவடிகளே கதி.

    `நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன். எனக்கு எதனிடத்தும் விருப்போ வெறுப்போ இல்லை,` என்பது கண்ணன் வாக்கு. (09:29)

    நாம் ஓயாமல் விருப்பு – வெறுப்புகளுக்கு இடையே பந்தாடப் படுகிறோம். அதற்குக் காரணம், கண நேரம் கூட நில்லாமல் சஞ்சலித்துக்கொண்டே இருக்கும் மனம். அதைக் கட்ட நினைக்கும் முயற்சிகள் யாவும் அதற்கு வலிமை சேர்த்து நம்முடைய வலிமையை நீர்க்கச் செய்வதாகவே முடிகின்றன. மனத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுத் தருவதாகப் புறப்பட்டிருக்கின்ற தலையணையளவு பருமனான புத்தகங்கள் எல்லாம் தலையணையாகக்கூடப் பயன்படுவதில்லை. மனமோ அடங்குகிற வழியாய் இல்லை. போராடிக் களைக்கிறோம். மற்றவர்கள் கண்களுக்கு, அதிலும் குறிப்பாய்ப் பெரியவர்கள் பார்வைக்கு, நாம் விகாரமாகவே காட்சியளிக்கிறோம். அவர்கள் கருத்துப்படி, நாம் நிழலோடு மல்யுத்தம் செய்கிறோம். நம்மைத்தவிர இந்த நிழல் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை! வீதியில் உருண்டு புரண்டு மேனியெல்லாம் சிராய்ப்புகளோடு முகமெல்லாம் வீங்கிக் கிடக்கின்றோம். ரமணரோ, `எண்ணமே மனம். எண்ணம் எழ எழ அதை வைராக்கியம் என்னும் வாளால் வெட்டிச் சாய்த்துக்கொண்டே இரு,` என்பார். சில சித்தாந்திகள், `மனம் என்ன கேட்டாலும் கொடுத்துவிடு. திருப்தி ஏற்பட்ட பிறகுதான் நீ உள்ளே போக முடியும்,` என்பார்கள். இது நெய்யூற்றி நெருப்பணைக்கிற கதைதான் என்பார் ரமணர்.

    நெய்ய ஊத்தி நெருப்ப அணெக்க முடியுமா? தம்பி
    நெனெச்சு நெனெச்சு நெனெப்ப நிறுத்த முடியுமா?

    என்று பாடத் தோன்றுகிறது.

    என்ன நம் பிரச்சினை? விருப்பாலும் வெறுப்பாலும் பந்தாடப்படுகிறோம். யாருக்கு விருப்பும் வெறுப்பும் இல்லையோ அவனைச் சரணடைவோம். அவன் அடிபணிவோம். அதற்குப் பிறகு மனமடங்கும். நம்மை விருப்பு வெறுப்பு இரண்டுமே விட்டுவிடும்.

    அது சரி, வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதும் `சம்பவாமி யுகே யுகே,` என்பதும் எப்படி ஒத்துப்போகும்? யுகந்தோறும் தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வருவேன் என்றானே, இதை எப்படிப் பொருள்கொள்வது? இறைவனுக்கு அவனுடைய செயல்களில் விருப்பும் வெறுப்பும் கிடையாது என்பதே பொருள். ராவணனைக் கொல்ல மனமின்றித்தான் நின்றான் ராமன். ஏன்? வெறுப்பு இல்லை. பின் ஏன் கொன்றான்? வேறு வழியில்லை. அது கடமையாகியது. தமோ குணத்தை வரவழைத்துக்கொண்டுதான் ராமன் ராவணனைக் கொன்றான் என்பார்கள்.

    மலம் அருவருப்பானதுதான். ஆனால், குழந்தையின் மலம், தாய்க்கு அப்படித் தெரிவதில்லையே! இன்பம், துன்பம் இரண்டுக்கும் மனம்தான் காரணம். ஆனால், வேண்டுதல் வேண்டாமை இரண்டும் இல்லாத இறைவனின் திருவடிகளில் பொருந்திக்கொண்டால், இன்பம் என்று ஒன்று பிரத்யேகமாக இல்லை. எதுவும் துன்பமாகத் தெரிவதில்லை. எனவே, கேட்கும் ஒலியிலெல்லாம் அவனுடைய கீதத்தைக் கேட்க முடிவதோடு, தீக்குள் விரலை வைத்தாலும் அவனைத் தீண்டுவது போலவே ஆகிவிடுகிறது. காந்தத்தோடு தொடர்பு கொண்ட இரும்பு காந்தமாகவே ஆகிவிடுவது போல, வேண்டுதல் வேண்டாமை இலாதவனை வணங்கியதால் நாமும் விருப்பு வெறுப்பு அற்றவர்களாகிறோம்.

    ஒரே சமயத்தில், விருப்பு, வெறுப்பு இரண்டுமின்றி, அதே நேரம் முழு உணர்வுடன் இருக்கும் இருப்பே இறைவன். அவனே `பற்றற்றான்.` பற்று விட நாம் பற்ற வேண்டியது அவனுடைய திருவடிகளையே. அவை இருக்குமிடம் நமது இதயக்கமலமே. அவனுடைய திருவடிகளை அகத்தே நாடுவதும், அவற்றைச் சார்வதும், பின்பு சேர்வதும் அடுக்கடுக்காய் நடக்கின்றன, மொட்டு முகையவிழ்வதுபோல்.

    அவ்விதம் உள்ள மனிதனுக்கு எந்தவிதமான துன்பமுமில்லை. எப்போதுமில்லை. எங்குமில்லை. இவ்வுலகிலும் துன்பமில்லை. இதை நீத்தபின், அவன் துன்பமயமான லோகங்களுக்குச் செல்வதில்லை. இதைத்தான் யாண்டும் இடும்பை இல என்றார்.

    தொடருவோம்

    Share
  • உமையாள் திருப்புகழ் – 3

    வித்தக இளங்கவி
    விவேக்பாரதி

    தனன தனனனா தத்தன தத்தன
    …தனன தனனனா தத்தன தத்தன
    ……தனன தனனனா தத்தன தத்தன – தனதானா !

    அருளி லடியவ ருற்றிடு மத்துய
    …ரதுவு மழிவுற வைத்திடு மத்தனி
    …..னரசி பதகம லத்தினைப் பற்றுக – தினமோடி !

    அரச மகளெனத் ! தச்சனி னற்புத
    …அழகு மகவென ! இப்புவி மெச்சுற
    ……அரணின் தவமதை முற்றிட வைத்தவ – னுடல்சேரக்

    கருமை நிறமதை யுற்றிட, அத்தனைக்
    …கடலொ டுலகுப டைப்பவ னுக்கொரு
    …..கடுமை தவமதி யற்றிய சக்தியைப் – பணிவோமே !

    கரும வினையதை முற்றுமெ ரிப்பவள்
    …களப விழியருள் முக்திய ளிப்பவள்
    …..கவலை உடையவ ரத்துய ரெத்திடு – முமையாளே !

     

    Share
  • நாம் உணர்ந்து செயற்படுவோம் !

             [ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ]

     

    பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை

    பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை

    பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால்

    பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !

     

    இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது

    இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது

    நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால்

    நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !

     

    விஞ்ஞானம் எனச்சொல்லி விபரீதம் வந்திருக்கு

    விளைச்சலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை

    பொய்யில்லா வகையினிலே விளைச்சல்கண்ட பூமியெலாம்

    பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !

     

    காய்கறியைப் பெருக்குதற்கு கண்டுவிட்ட விஞ்ஞானம்

    காய்பெருக்க வைத்துவிட்டு கால்பறித்து நிற்கிறதே

    நோய்நொடிகள் பலதந்து நொய்யும்படி செய்யுமிந்த

    வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !

     

    நாகரிகம் எனும்பெயரால் நம்வீட்டில் புகுந்துவிட்ட

    நாமறியா உணவுவெல்லாம் நம்முள்ளே செல்கிறது

    சென்றுவிட்ட உணவெல்லாம் சீரிழக்கச் செய்துநின்று

    குன்றிவிடச் செய்வதனை என்றுதான் உணருவதோ !

     

    பலகடைகள் பலவுணவு பல்வேறு வடிவங்களில்

    பாங்காக வலம்வந்து பலரையுமே மயக்கிறதே

    நலன்பற்றி நினையாமல் நயம்பற்றி எண்ணுவதால்

    நலன்கெட்டு போவதற்கு நாமுடந்தை ஆகுகின்றோம் !

     

    பண்டிகைகள் வந்துவிட்டால் பட்சணங்கள் செய்திடுவார்

    பட்சணங்கள் அத்தனையும் பக்குவமாய் அமைந்திருக்கும்

    இப்போது பட்சணங்கள் எத்தனையோ வருகிறது

    அத்தனையும் ரசாயான கலவையாய் அமைகிறதே !

     

    கூழ்குடித்தோம் மோர்குடித்தோம் குடல்நோய்கள் வரவில்லை

    பழஞ்சோற்றை உண்டாலும் பழுதெம்மை அண்டவில்லை

    விலைகொடுத்து பலவற்றை விருந்தெனவே உண்ணுகின்றோம்

    மறுநாளே வைத்தியரை வலம்வந்து நிற்கின்றோம் !

     

    நெல்லரிசிச் சோறுண்ண நிம்மதியே இல்லையென்று

    வெள்ளைநிற உணவெல்லாம் வீட்டில்வாங்கி வைக்கின்றோம்

    நல்லதெல்லாம் மாட்டுக்கு நாம்கொடுத்து விட்டுநிதம்

    பொல்லாத உணவையெல்லாம் பொறுக்கிவைத்து உண்ணுகின்றோம் !

     

    உயிர்ச்சத்து அத்தனையும் உதறிவிட்ட உணவுகளை

    உயர்வாக எண்ணிநிதம் ஒழுங்காக உண்ணுகின்றோம்

    நோய்வந்த பின்னாலே நூறுமுறை அழுகின்றோம்

    யார்வந்து சொன்னாலும் நம்குணமோ மாறவில்லை !

     

    பாட்டிதந்த உணவெல்லாம் பறக்கவிட்டு விட்டதனால்

    பருவம்வரும் முன்னாலே பலநோய்கள் வருகிறதே

    நாட்டார்கள் காட்டார்கள் காட்டிவைத்தs முறையாவும்

    நம்வாழ்வை வளம்படுத்தும் என்பதனை மறந்துவிட்டோம் !

     

    பழமையென்னும் அத்திவாரம் பலமளிக்கும் என்பதனை

    உணருகின்ற நிலையெம்முள் உருவாகி வரவேண்டும்

    விஞ்ஞானம் நாகரிகம் விந்தைபல செய்தாலும்

    நம்வாழ்வில் அதன்பெருக்கை நாமுணர்ந்து செயற்படுவோம் !

    Share
  • எழுவகைப் பெண்கள்: 8. பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம்

    அவ்வை மகள்

    மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்றவரிடம், “மூலாதாரத்தை விளக்கவேண்டுமெனில், அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி” என்றேன்.

    “விவேகி என்று நீங்கள் சொன்னதும் எனக்குப் பெண்களின் விவேகம் பற்றிய எண்ணம் எழுந்தது அதுபற்றி பேசிவிட்டு மூலாதாரம் பற்றிப் பேசலாமா அல்லது மூலாதாரம் பற்றிப் பெண்களின் விவேகம் பற்றிப் பேசலாமா?” என்றார்.

    “ஏறக்குறைய நானும் அதே மனோநிலையில் தான் இருந்தேன். நான் உங்களைச் சந்திக்கும் முன்பு, ஒரு ஆண் போலீஸ் அதிகாரியைச் சந்தித்துப் பேசினேன். பெண்களின் விவேகம் பற்றி அவர் சொன்னவற்றை என் சிந்தனையில் தடம் பதித்து வைத்திருக்கிறேன்.

    உங்களிடமும் பெண்களின் விவேகம் பற்றிப் பேசவே எண்ணியிருந்தேன். நீங்களே அதனை முன்வைத்ததற்கு நன்றி. மூலாதாரம் பற்றிப் பேசிவிட்டு விவேகத்திற்கு வருவோமே!” என்று தொடர்ந்தேன்.

    மூலாதாரம் என்பதனை Ultimate Origin என்றேன் அல்லவா?. மூலாதாரம் என்பதில், மூலம் மற்றும் ஆதாரம் ஆகிய இரண்டு தனிப்பெரும் சொற்கள் அடக்கம். இந்த இரண்டு சொற்களும் சொற்பச் சொற்கள் அல்ல வெளிப்பார்வைக்கு எளிமையாய் இருப்பினும் இவை பன்முகப் பரிமாணம் கொண்ட பவித்ரமான நுட்பச் சொற்கள்.

    முதலில், “மூலம்” எனும் சொல்லை கவனிப்போம். மூலம் என்றால் அதற்கு ஐந்து பிரதானமான அர்த்தங்கள் உண்டு. ஒன்று: Starting Point; இரண்டு: Roots; மூன்று:Seedling; நான்கு: Passage; ஐந்து: Gate. தமிழில் முறையே, அடிப்படைப் புள்ளி, வேர்கள், நாற்று, வழி, வாயில் ஆகியன.

    “வேர்கள்” என்று பார்த்தால் முவ்விதமான வேர்கள் இருக்கின்றன: (1) ஆணி வேர் (Tap Rot); (2) சல்லி வேர் (fibrous Root); (3) இணை வேர் (Adventitious Root) .

    ஆதாரம் என்பதும் ஒருபன்முகச் சொல். Foundation அல்லது Basement அல்லது Anchor அல்லது Basic Constructional Frame அல்லது Fundamental Structural Unit எனப்பொருள்படும். இவற்றை முறையே தமிழில், அஸ்திவாரம்/கடை கால், அடித்தளம், நங்கூரம், அடிப்படைக் கட்டிடச் சட்டம், அடிப்படை அச்சு என்று கூறலாம்.

    பெரினியம் என்பது நான் மேற்குறிப்பிட்ட பன்முகங்களிலும் மூலமாகவும் ஆதாரமாகவும் செயல்படுவதால் அதற்கு மூலாதாரம் என்று பெயர். ஆணின் மறை உறுப்புச் சந்தியும் கூட, பெரினியம் என்றேதான் அழைக்கப்படுகிறது என்றாலும், பொதுவாக, மூலாதாரம் எனும்போது அது பெண்ணின் பெரினியத்தையே பெரிதும் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. இது ஏனெனில் ஆணின் பெரினியத்திற்கு சிருஷ்டி ஆற்றல் கிடையாது. அங்கே ஜனனம் நிகழ்வதில்லை. சொல்லப்போனால், பெண்ணின் பெரினியத்தை சிருஷ்டி அடுப்பு என்றும் அக்கினி குண்டம் என்றும் அழைக்கின்றனர். அக்கினி என்றால் Fire – அது தீ – நெருப்பு – வெப்பக்கனல்.

    ஆணின் பெரினியத்தில் அக்கினி இல்லை – வெப்பம் என்பது விந்து உற்பத்திக்கு எதிரி. ஆணின் சொந்த உடலின் வெப்பத்தைக் கூட விந்து உற்பத்தி தாங்காது என்பதால் அவனது உடலில், ஆணுறுப்பு உடலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது. உடலின் வெப்பம் ஆணுறுப்பில் இடிக்காமல் (Conduction) – படராமல் (Convection), வீசாமல் (Radiation) இருக்க இயற்கை செய்துள்ள ஏற்பாடு இது.

    ஆனால், சிருஷ்டி ஆற்றலின் கர்த்தாவான பெண்ணுக்கோ, அவளுடலினுள்ளே அவள், உயிருள்ள உருவங்களைச் சமைக்கும் பணி – பணிக்கப்பட்டிருக்கிறது.

    தனது கருவிலே ஒரு ஆன்மாவிற்கு, உயிரூட்டி, அதற்கு உடல் சமைக்கும் பணி அவளுடையது. அந்த சமையல் பணிக்கு அக்கினி வேண்டும் அல்லவா? அதுதான் இந்த அக்கினி – உண்மையில் – பெண்ணுக்கு பெரினியக் குழியில், சிருஷ்டிக்கென, அதி வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.

    “கொஞ்சம் இதை “this heat requirement” மேலும் விளக்க இயலுமா/” என்றார்.

    கொஞ்சம் அடிப்படையிலிருந்து வந்தால் இது விளங்கும். விலங்கின சிருஷ்டியில் இருவித சிருஷ்டி வகைகள் உள்ளன – ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மற்றொன்று குட்டி போடுவது. முன்னதை Oviparous Germination என்போம்; பின்னதை, Viviparous Germination என்போம்.

    தவளை, பாம்பு, பல்லி, ஆமை, பறவைகள் ஆகியன முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதைப் பார்த்திருப்பீர்களே. தவளையின் முட்டை நீருக்குமேலே மிதக்கும் பாசிக்கு மேலே அமர்ந்துகொண்டு ஒய்யாரமாய் மிதந்தபடி வெயில் காயும், ஆமையின் முட்டையும், பாம்பு மற்றும் பல்லியின் முட்டையும் மணலுக்குக் கீழே வெப்பம் காணும்- பறவைகளோ முட்டைமேல் அமர்ந்து அமர்ந்து – அடைகாத்துச் சூடேற்றி முட்டைக்கு வெப்பம் ஊட்டும். இந்தக் காட்சிகள் எல்லாம் சிருஷ்டிக்கு வெப்பம் தேவை என்பதை விளக்கவில்லையா? தவளை, பாம்பு, பல்லி, ஆமை ஆகியன குளிர் இரத்தப் பிராணிகள் – அவைகளுக்கு நிறைய சூடு தேவை. பறவைகளோ குறைவெப்ப இரத்தப் பிராணிகள் அவைகளுக்கு சாதாரண வெளிப்புறச் சூட்டோடு – கொஞ்சம் தாயின் வெப்ப ஒத்தடமும் தேவை.

    மனிதன் எனும் உயிரியோ – உயர்வெப்ப இரத்தப் பிராணி – அதிகக்கடினமான – அதிக அழுத்தமான – அதிக பொருண்மை கொண்ட உடல் கொண்ட உயிரி – அதுவும் முட்டையாக மனிதன் வெளியே இடப்படுவதில்லை – முட்டையிலிருந்து மனிதன் பொரிக்கப்படுவதில்லை. பெண்ணின் உள்ளேயே கருஉருவாகி – உள்ளேயே – அது வளர்ந்து – சிசுவாகி – வெளிவரத் தயரான அந்த ஒரு நாளில், கருவறையின் உள்ளிருந்து வெளியே பிரசவமாகும் – குட்டி அல்லவா மனித உயிரி? எனவே மனித சிசுவை உருவாக்குவதற்கு உண்மையிலேயே அதிக வெப்பம் தேவைப்படுகிறது என்பது புரிகிறது அல்லவா?

    எனவேதான், படைத்தல் தொழிலின் எழுவாயும், பய நிலையும், செயபடுபொருளுமாயும் இருக்கிற பெரினியத்தின் குழியிலே பெண்ணுக்கு, அவளது படைப்புத் தொழிலுக்குத் தேவையான எரிபொருள் வார்க்கப்பட்டிருக்கிறது. எனவே பெண்ணின் பெரினியக்குழி உண்மையிலேயே ஒரு அக்கினி குண்டத்தைப் போன்றது என்பதை அறிவியல் வழியாகவும் உணரமுடிகிறது.

    “சரி, இந்த அக்கினிக்கு குண்டம் , ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே இருக்கிறதா?” என்றார்

    “ஆம் இருக்கிறது” ஆனால் அது சும்மா கிடக்கிறது வெறுமனே, அவள் பருவம் எய்தும் வரையில்.

    ஒரு பெண்குழந்தை ருதுவாகும் அந்தத் தருணம்தான் இந்த எரிபொருள் அவளுடலிலே தனக்குத்தானே சுயம்புவாய் உள்ளிருந்து வார்க்கப்படுகிறது . இயற்கை அமைப்பில் – இறைமாட்சிமையின் ஒப்பற்ற ஏற்பாடு இது. உயிர்களைச் சமைக்கும் இறைவனின் மகத்தான பணியில் இறைவனின் பிரதிநிதியாகப் பெண் இயங்குவதால், எங்கள் தமிழ்க் கலாச்சரத்தில், ருதுவாகும் பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டால், “பெண் சமைந்திருக்கிறாள்” என்பர். இந்த வழக்கு மொழியின் எளிமையையும் நயத்தையும் மட்டுமல்ல பெண் குழந்தை ருதுவாகும் நிகழ்வை, மஞ்சள் நீராட்டு விழா என்று ஒரு விழாவாக எடுக்கும், ஒப்பற்ற பெண் உடலியல் புரிந்து கொள்ளலையும் எங்கள் சமுதாயத்தில் பார்க்க முடியும்.

    சமுதாயத்தில் உள்ள பெண் ருதுவாகுவது என்பது – “எங்கள் – சமுதாயத்துக்கு, எங்கள் மாநிலத்திற்கு, எங்கள் நாட்டுக்கு எதிர்கால சந்ததிகள் வருவது உறுதி – எங்கள் குலம் வாழும் – எங்கள் மண்ணுக்கு என்றும் தாழ்வில்லை!” என்று அப்பெண்ணின் குடும்பம் மட்டுமல்ல அந்த பெண்ணைச் சுற்றியுள்ள சிறு சமுதாயமே குதூகலிக்கும் ஒரு மனிதவள வைபவம் இது. இது பெருந்தன்மையோடு விசாலப் பார்வையோடு பார்க்கப்படவேண்டிய விஷயம். மட்டமான எண்ணங்கள் இங்கு கூடாது.

    “எனக்கு ஸ்ரீலங்கன் நண்பர் இருந்தார் அவரும் இந்த “female puberty ritual” பற்றிச் சொன்னார்” என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    ஸ்ரீ லங்காவும் தமிழ்க்கலாச்சாரம் உள்ள ஒரு நாடு தானே – ஒரு காலத்தில் – கடல் கொள்ளாது – மண்ணோடு மண்ணாய் நாமும் ஸ்ரீலங்காவும் ஒன்றாகவே இருந்திருக்கிறோமே. அங்கும் தமிழர்கள் இருந்தனர் – இன்னமும் இத்தனை நடந்தும் அங்கு தமிழர் இருக்கின்றனர் – எனவே அங்கும் மஞ்சள் நீராட்டு விழா நடக்க நிறையவே சாத்தியக் கூறுகள் உள்ளன. பொதுவாக, தமிழ்க் கலாச்சாரம் உள்ள அல்லது பரவியிருக்கிற இடங்களில் இந்தச் சடங்குகள் நடப்பதோ அல்லது பேசப்படுவதோ இயல்புதான். மலேசியாவில் கொண்டாடுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் கூட, தாங்கள் வாழும் நாடுகளில் இன்றும் கூட இந்த வைபவத்தைக் கொண்டடாடுகிறார்கள்.

    ஆனால் – நான் இதைச் சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. “I had had very wrong notions about this female puberty ritual; when my Sri Lankan friend told me about it – I and other friends laughed and cut very nasty jokes at him – I was also very young at that time!’ என்றார்.

    சார், உங்களுக்கு ஏற்பட்டிருந்த தவறான அபிப்ராயத்திற்கு உண்மையில் என்ன காரணம் என்று சொல்லமுடியுமா? என்றேன்.

    “சடங்குகளுக்குள்ளே உண்மைகள் உள்ளன என்பதை உணராத அறியாமை” என்றார்.
    சரியாகவே சொன்னீர்கள் – இந்த அறியாமை நிறைய பேரிடம் உள்ளது – அதுவும் பெண்கள் பற்றிய விஷயம் என்றால் எல்லோருக்கும் அது புரட்டிப் பேசவும் புரட்டு பேசவும் சல்லீசான விஷயமாகப் போய்விட்டது. இதில் இன்றைய எங்கள் சமுதாயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய எங்கள் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் எங்கள் கலாச்சாரத்தின், உண்மைகளை உணவுபோல் ஊட்ட வசதி வாய்ப்புகள் உருவாக வேண்டும். காளான்கள் போல் மலிந்துகிடக்கிற கீழ்த்தரமான பெண் வர்ணனைகளும் – அதனால் மனிதர்கள் பெறுகிற அற்பமான இழி இன்பங்களும் சாடப்பட வேண்டும் – கண்டிக்கப்பட வேண்டும் – தண்டிக்கப்பட வேண்டும்!” என்றேன்.

    “Amen – True – True – True” என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். நன்றி பாராட்டினேன் அவரது உண்மை விளம்பலுக்காக.

    கடவுள் சாட்சியாக உண்மை – உண்மை – உண்மை!” என்று சொன்னவர், இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் வேறென்ன நான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

    நமது உரையாடலே பெண்ணின் உடலியலைப் பற்றியது – குறிப்பாக நாம் இன்றைய பணி செய்யும் பெண்களின் – இடை – தொடை – கால் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறோம். எனவே மஞ்சள் நீராட்டு விழாவில் பெண் உடலியல் சார்ந்த சாராம்சங்களைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்றேன்.

    மஞ்சள் நீராட்டு விழாவில், ருதுவான பெண்குழந்தையின் இடுப்பெலும்பு உறுதிப்பட அதற்குரிய ஊட்டச்சத்து உணவுகள் – குறிப்பாக – உளுந்து எனப்படும் – Black gram கொண்டு தயாரிக்கப் பட்ட களி அவளுக்குத் தரப்படும். வெல்லப்பாகில் வறுத்த வேர்க்கடலை சேர்த்தது செய்த உருண்டைகளும் , பொரிவிளங்காய் உருண்டைகளும் தருவர். பொரிவிளங்காய் உருண்டை என்பது பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இருவகைப் பருப்புக்களும் , கோதுமை, அரிசி ஆகிய இருவகை தானியங்களும் வறுத்து – இடித்து – அதில் பசு நெய் – வெல்லம், ஏலக்காய் – சுக்கு ஆகிய நறுமணம் மிக்க மருத்துவ நலம் தரும் திரவியங்களும் சேர்த்து உருட்டிச் செய்வது. இதைத்தவிர முட்டையின் வெள்ளை தரப்படும். புலால் மறுக்கப்படும். கீரை வகைகள் அதிகம் சேர்க்கப்படும் – இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சேர்த்துச் செய்த கேழ்வரகு ரொட்டி தரப்படும் – இரும்புச் சட்டியில் செய்த விறுவிறுப்பான புளிக்குழம்பு சோற்றுடன் பிசைந்து தரப்படும். உளுந்து அப்பளம் அதனுடன் தரப்படும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீரும் – இஞ்சி கருவேப்பிலை, வறுத்த வெந்தயத்தின் பொடி கலந்த மோர் தொடர்ந்து வழங்கப்படும். அவித்த உணவுகளே அதிகம் இருக்கும் – நார்ச்சத்து உணவில் கட்டாயம் மிகும் – பழங்கள் தப்பாமல் இருக்கும் – குழந்தைக்கு மலச்சிக்கலோ வேறு எந்த உபாதையோ நிகழாமல் பார்த்துக் கொள்வர்.

    தன் உடலில் ஏற்பட்டிருக்கிற – ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மாற்றங்களை அப்பெண் குழந்தை, தானே சுதந்திரமாய் அறிந்து கொள்ளும்படியாக – அவளுக்குத் தனிமைச் சுதந்திரம் வழங்கப்படும் – அவளுக்கென்று தனியிடம் வழங்கப்படும் – அவளை எவரும் வீணே தொந்திரவு செய்வது தடுக்கப்படும். தாயோ – மூத்த சகோதரியோ அல்லது பிற மூத்தப் பெண்மணிகளோ மட்டுமே அவளது தனியிடத்தத்துக்குள் நுழையமுடியும் – அதுவும் – அவர்கள், தான் வருவதை அவளுக்கு உணர்த்திய பின்னரே நுழைவர். திடீரென நுழைந்து அதனால் – அவள் எவ்விதத்திலும் அதிர்ச்சி அடையக்கூடாது என்பதிலே அனைவரும் கவனம் வைப்பர். ஒவ்வொரு நாளும் சிறிதளவு எள்ளுருண்டை தருவர். இந்த எள்ளுருண்டை வறுத்த எள்ளும் வெல்லமும் சேர்த்து தயாரிக்கப்படுவது. பெண் குழந்தையின் இரத்தப்போக்கில் இரத்தக்கட்டிகள் இடையூறு செய்யாமல் இலகுவாய் வெளியேற உதவும் உணவார்ந்த மருந்து இது. மேலும், மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு கட்டாயம் தாம்பூலம் அருந்தச் சொல்வர். தாம்பூலம் – வெற்றிலை, சிறிதளவு பாக்கு, இலவங்கம், வெள்ளரி விதை , ஜாபத்திரி போன்ற பொருட்களோடு துளி சுண்ணமும் கலந்தது. அக்குழந்தைக்கு ஜீரண சக்தியும் கால்சிய சக்தியும் ஒருங்கே கிடைக்க இது உதவும்.

    ஒவ்வொரு காலையும் மாலையும், தாயோ அல்லது வேறு ஒரு மூத்தப் பெண்மணியோ அப்பெண்ணுக்கு உடைமாற்ற உதவுவர். அவளுக்கு அழகாய்த் தலைவாரி – பூமுடித்து – முகம் திருத்தி – அவளது இருப்பிடத்தைச் சுத்தம் செய்து – கோலமிட்டு விளக்கேற்றி வைப்பர். உடைமாற்றும் முன் அவளது இடுப்பின் திருவெலும்பில் – வறுத்த தவிடு கொண்டு ஒத்தடம் தருவர். அங்கு இரத்த ஓட்டம் சீர்படுவதற்காக. இடைப்பட்ட பகல் வேளையில் அப்பெண்குழந்தையை ஒரு மணி நேரம் தூங்கச் சொல்லுவார்கள். அதிக நேரம் தூங்காமல் தடுப்பார்கள் – ஏனெனில் இரவு தூக்கம் கெட்டுவிடுமே! பகலில் மூத்த பெண்மணிகளில் யாராவது ஓரிருவர் அவளுடன் போய் – தாயம் – கல்லுக்காய் -பல்லாங்குழி -பரமபதம் ஆகிய விளையாட்டுக்கள் ஆடுவர். புதிய கோலங்கள் வரைவர். அப்போது – அக்குழந்தையுடன் பேச்சுக் கொடுத்து அவளுக்கு ஏதேனும் உபாதை இருக்கிறதா – அசவுகரியங்கள் ஏதேனும் இருக்கிறதா எனவும் விசாரித்து அறிந்து கொள்வர். அவளை கழிப்பிடத்துக்கு அழைத்துக்கொண்டு சென்று வருவர். ஒவ்வொரு இரவும், தாயோ அல்லது பாட்டியோ அக்குழந்தையுடன் உறங்குவர். ஒன்பது நாள் கழிய – பத்தாம் நாள் – அவரவர் குல ஒழுக்கத்த்துக்கு ஏற்ப மஞ்சள் நீராட்டுவிழா வைபவம் நிகழும் – மஞ்சள் கரைக்கப்பட்டப் புனித நீரில் குழந்தையை, சுமங்கலிகள் எனப்படும் மங்கல மங்கையர் நீராட்டுவர் வெல்லமும் அரிசி மாவும் சேர்த்து அவித்துச் செய்வதான பிட்டு எனும் உணவைச் சுற்றுவர் – திருஷ்டி கழிப்பர். சுற்றமும் நட்பும், சமூக அன்பர்களும், சூழவந்திருந்து குழந்தையை வாழ்த்துவர் -பல்வகையான பரிசுகள் வழங்குவர். குழந்தை வீட்டுக்குள் புஷ்பவதியாக வலது கால் எடுத்து வைத்து நுழைவாள்.

    மிக சுவாரசியமாக இருக்கிறதே! “Blackgram என்று சொன்னீர்களே அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?” என்றார்.

    உளுந்து மாவு என்பது எலும்பு உளுத்துப்போகாமல் உறுதிப்படுத்தும் தன்மை உடையது. எங்கள் கலாச்சாரத்தில் தமிழ் மருத்துவம் என்கிற தனி மருத்துவம் உண்டு. அதனை நாட்டு மருத்துவம் என்றும் சொல்லுவர். எங்கள் நாட்டு மருத்துவத்தில், எலும்பு முறிவுக்கு உளுந்துமாவைப் பயன்படுத்தியே முறிந்த எலும்புகளை இணைப்பர் – Plaster of Parris பயன்படுத்துவது கிடையாது. எங்கள் ஊரின் கோட்டைகளும் பல கோயில்களும் உளுந்துமாவை சிமெண்ட் ஆகப் பயன்படுத்தியே கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சிமெண்ட் தயாரிக்க உளுந்து மாவுடன் சுண்ணப்பொடியையும் கள்ளிப்பாலையும் – கோழி முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்தே உருவாக்கியதாகவும் அறிகிறோம்.

    “நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கான உணவு வகைகளில் jaggery எனப்படும் வெல்லத்தை அதிகம் பயன்படுத்த்துவதாக உணர்ந்தேன். சர்க்கரையைப் பயன்படுத்தாமல் வெல்லத்தைப் பயன்படுத்த்துவது ஏன்?” என்றார்.

    வெள்ளைச் சர்க்கரையின் பலாபலன்களை இன்று இவ்வுலகமே உணர்ந்து விட்டது – வெள்ளைச் சர்க்கரை அழிவின் தொடக்கம் – இதனை எங்கள் மூதாதையர் அன்றே அறிந்து கொண்டிருந்தனர் என்றே சொல்லவேண்டும். எனவே வெல்லப் பழக்கம் எங்களிடம் வெகுகாலமாக இருந்து வருகிறது. இந்த வெல்ல வகைகளில் ஒருபடி மேலே போய் – பனைவெல்லம் பயன்படுத்தும் பாரம்பரியமும் எங்களிடம் உள்ளது. இயன்ற போதெல்லாம் பனைவெல்லம் பயன்படுத்துவோம். வெல்லம் – என்பது – வெளுக்கப்படாத – இயற்கைச் சர்க்கரை – இதில் நார்ச்சத்துடன் நிறைய உயிர்ச் சத்துக்கள் உள்ளன. மேலும் குடலுக்கும் – கல்லீரலுக்கும் இணக்கமானது. குடலில் ஓட்டைகள் ஏற்பட்ட நோயாளிக்கு தமிழ் மருத்துவ முறையில், வெல்லம் மூலமாகவே அறுவைச் சிகிச்சை இன்றி, குடலை ஒட்டவைத்ததாக – குணப்படுத்தியதாக அறிகிறோம். இன்றும் கூட, எங்கள் வீடுகளில், நாங்கள் பயன்படுத்தும் மட்பாண்டங்களோ – சிமெண்டாலான தொட்டிகளோ வீரல் விட்டாலோ உடைந்தாலோ சுண்ணமும் வெள்ளமும் கலந்து பூசி ஓட்டையை அடைத்துவிடுவார்கள்.

    வெல்லம் நல்லது என்பதற்காக, வெல்லத்தையே முழு உணவாய்க் கொள்ளமுடியாது. அதனைத் தேவைப்படும்போது தேவைப்படும் அளவில் மட்டுமே பயன்படுத்தும் கட்டுப்பாடும் இருந்தது.

    “அப்படியென்றால், உனக்குள் தமிழ்ப்பெண்கள் மிகுந்த பலசாலிகளாக – மிகுந்த ஆரோக்கியம் கொண்டவர்களாக இருக்கவேண்டுமே!”

    “அப்படித்தான் பலகாலம் இருந்திருக்கிறது. புலியையும் கூட முறத்தால் துரத்தியிருக்கிற வீரப்பெண்களாகவே எங்கள் பெண்கள் இருந்திருக்கின்றனர்”என்றேன்.

    “இப்போதும் உங்கள் பெண்கள் அதே பலத்தோடு இருக்கவேண்டுமே!” என்றார்.

    துரதிருஷ்டவசமாக, உங்கள் கேள்விக்கு நான், “இல்லை” என்ற பதில் சொல்லவேண்டி இருக்கிறது. இன்று இடுப்பு மற்றும் கீழ் முதுகுப்பகுதி வியாதிகள் எனும் உடல் நலக்குறைபாட்டுடன் இருக்கும் பெண்களின் உலக எண்ணிக்கையில் எங்கள் பெண்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள்.

    அதிர்ந்தார் – உண்மையாகவா? இது எவ்வாறு நிகழ்ந்தது – என்ன காரணம் என்றார்.

    அவ்வை எனும் தெய்வப் பெண்மணி, பெண்களுக்கான எங்களுக்காய் எழுதிவைத்துவிட்டுப்போன விநாயகர் அகவல் எனும் மருத்துவ -பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம் – எங்கள் பெண் குழந்தைகளுக்கு – அந்த வேதத்தைச் சொல்லிக்கொடுக்கும் கடமையில் தவறினோம்- விநாயகர் அகவல் எனப்படும் பெண் உடல்நல மருத்துவ வேதத்தின் ஒழுக்க நெறிப்படி எங்கள் மூதாதையர்கள் எங்களுக்காய் ஏற்படுத்தி வைத்திருந்த அன்றாடப் பழக்கவழக்கங்களைத் தூக்கி எறிந்தோம். சுருங்கச் சொன்னால், Modernism எனப்படும் படுமாயையான கவர்ச்சியில் மூழ்கித்தொலைந்தோம்.

    பெண்கள், தமது மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தை அவள் அறிந்து எங்களுக்குச் சொன்னதை உதாசீனம் செய்தோம். இன்றைய நிலைக்கு நாங்களே காரணம். சொல்லப்போனால், கடந்த முப்பது ஆண்டுகளில், எங்களையும் நாங்கள் சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை எங்கள் பெண் குழந்தைகளையும் நாங்கள் சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.

    மேலும் பேசுவோம்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [8] பாமரகீர்த்தி [1]

    இன்னம்பூரான்
    21 07 2016

    unnamed

    “ என்னுடைய நோயாளிகளில் 95% சமுதாயத்தில் மிகவும் கீழ்படிந்த நிலையில் வறுமையில் உழலும் திக்கற்றவர்கள். அவர்களின் எதிர்நீச்சல்களை காணும் போது நம்மால் அவர்களுக்கு நல்லதொரு மாற்றம் தர இயலும் என்பது கண்கூடு”
    -டாக்டர் டொனால்ட் மெக்லார்ட்டி.

    “… சமுதாயத்தில் உரத்த குரல் எழும் வரை, அன்றாடம் நிகழும் அவலங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
    -இன்றைய பாமரன்

    வரலாற்றின் கதாநாயகர்கள் ராஜா ராணியும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் தான். சுருங்கச்சொல்லின் பிரபலங்கள். அங்கும் இங்கும் மிகை இருக்கலாம். உண்மை நீர்த்துத் தென்படலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பாடப்புத்தகத்தில் கூட போட்டுவிடுவார்கள். ஆனால், பெரும்பான்மை மக்களை பற்றி பேச்சு மூச்சு கிடையாது. அவர்களின் சாதனை சேற்றில் மறைந்த மலர். வீடு தோறும் தலைமாந்தர்கள் மேலாண்மை வகித்துள்ளனர். ஜெயகாந்தனின் கெளரிபாட்டியின் யுக சந்தி ஒரு புரட்சி. அவள் மாதிரி தான் என் நண்பரின் பிராமண சம்பிதாயத்தை போற்றும் அன்னை நாமகிரி அம்மாள் பேத்திகளின் கலப்பு மணத்தை ஆதரித்தார். தம்பி காளைராஜனின் முன்னோர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தார்கள்; தாயகத்துக்கு. அதே மாதிரி, இரண்டாவது உலகப்போரின் காலகட்டத்தில். குஞ்சும் குளவானுமாக குழந்தைகளை தூக்கிக்கொண்டு மலேசியா- சிங்கப்பூரிலிருந்து கடைசியாக கிளம்பிய ஜப்பான் கப்பலில் இலங்கைக்கு வந்து, கால்நடை, கட்டைவண்டி, கரிமூட்டை பஸ் என்று வந்த எச்சுமி என்ற இளம்பெண்ணுக்கு தலையாய பிரச்னை: பசங்க பாம்பன் பாலத்தில் பிடிக்க முடியாதபடி ஓடியது தான். சோறு தண்ணி இல்லாமல், வெடித்த பாதங்கள் வலித்ததும், நாட்கணக்கில் தூங்காததும் அவருக்கு பிரச்னையாக படவில்லை. அவரை தினமும் பார்க்கும்போது, பாமரகீர்த்தி எழுத விழைவேன். துவக்க, ஒரு அதிசயப்பிறவி பாமரனை தேடிக்கொண்டிருந்தேன். இன்று தான் அவர் கிடைத்தார். போகப்போகப் பார்க்கலாம்; பாமரனுக்கா பஞ்சம்!

    இன்றைய பாமரகீர்த்தி கதாநாயகன் டாக்டர் கெளசிக் ராமையா. அவருடன் உரையாடிய ஜூலெஸ் மார்கன், அவர் இராப்பகல் பார்க்காமல், சம்பாத்தியத்தை அறவே மறந்து, ஏழை பாழைகளுக்காக 24 x 7 ஊழியம் செய்வதை கண்டு, மாய்ந்து போகிறார். அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது அவர் பணி புரியும் நாடு ~ டான்சானியா. அந்த நாடு ராமையாவை என்றோ தத்து எடுத்துக்கொண்டு விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னாலிருந்து குடும்ப வணிகம் முந்திரிக்கொட்டை ஏற்றுமதி. ராமையா சொல்வதைப்போல, ஆப்பிரிக்க நாடுகளில் குடி பெயர்ந்த இந்தியர்கள் குடும்பத்தொழில்களை வகுத்துக்கொண்டு திரவியம் தேடினர். அந்த தொழிலில் வாழ்க்கையை தொடங்கிய ராமையாவுக்கு வானூர்தி பொறியியலில் இருந்த ஆர்வம்,சாக்கியமுனிக்கு ஞானோதயம் கிடைத்தது போல மக்களுக்கு மருத்துவம் மூலமாக தொண்டு செய்வதற்கு மாறியது. மும்பைக்கு வந்து மருத்துவத்தில் பட்டம் பெறுகிறார். டான்சானியாவின் தலைநகரான தாருல் இஸ்லாம் நகரில் மேற்படிப்பு. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அமைந்த ஆசான்கள் டொனால்ட் மெக்லார்ட்டியும், சாம்ஸன் பாஸீண்டாவும் அவருக்கு மருத்துவம் மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. மனித நேயப்பாடங்களையும் சொல்லிக்கொடுத்தார்கள். தன்னுடைய குடும்பம் இவரது படிப்புக்காக செய்த தியாகங்களை ரோமம் சிலிர்க்க, பகிர்ந்து கொண்ட ராமையா வறுமையின் கொடுமையினால் மருத்துவ நிவாரணம் கிடைக்காத ஏழைகளின் பாதிப்பு தன்னை திசை திருப்பியது என்கிறார்.

    ‘தட்டுங்கள்; கதவு திறக்கும்’ என்பார்கள். இவரை தேர்வுக்கு பரிசோதிக்க வந்த டாக்டர் ஜார்ஜ் ஆல்பெர்ட், மேற்படிப்புக்கு இவரை இங்கிலாந்துக்கு அழைத்து செல்கிறார். அதை முடித்து விட்டு தாய்வீடு திரும்பிய ராமையா, “மேல்நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கு உள்ள இடைவெளியை குறைக்க செல்வம் இன்றியமையாதது இல்லை.’ என்ற தீர்மானத்துடன் நான்கு டாக்டர்கள், மூன்று அறைகள், பத்து படுக்கைகள் கொண்ட ஒரு தரும ஆஸ்பத்திரியுடன் தன்னை இணைத்துக்கொண்டார், 1982ல். அது தற்காலம் அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில், நீரழிவு நோய்க்கும், ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் சிகிச்சைக்கும் பெரிய ஆஸ்பத்திரியாக இயங்குகிறது. நாட்தோறும் 600 நோயாளிகள், 45 படுக்கைகள். இதுவே சிறியதாகத் தோன்றும், நாம் அவர்கள் கடந்த இன்னல்களை அறியாவிடின்.

    1990 காலகட்டத்தில் ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் உயிர்கொல்லிகள். ராமையா உடனே அமெரிக்கா சென்று அது பற்றி படித்து திரும்பி வந்து அநேக நோயாளிகளுக்கு மறு வாழ்வு அளித்தார். டைப் 1 டயாபிடீஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை. இவர்கள் எல்லாரும் வந்து, உங்களால் எங்கள் வாழ்க்கைக்கு புனருத்தாரணம் தரமுடிந்தது என்று சொல்வது தான், அவருக்கு பரிசு. அவர் தலைமை வகிக்கும் அந்த ஆஸ்பத்திரியின் பெயர்: ஶ்ரீ ஹிந்து மண்டல் ஆஸ்பத்திரி.

    சஹாரான் ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் உலகளாவிய டயாபிட்டீஸ் நிறுவனத்தின் தலைவரும் இவரே. 24 x 7 டாக்டர் கெளசிக் ராமையாவின் பொழுது போக்கு: தபால் தலை சேகரம்.

    டாக்டர் கெளசிக் ராமையா போன்ற பாமரகள் நிறைந்த நல்லுலகம் இது.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.pharmaccess.org/images2/Photo&Caption/openingresized.jpg

    படித்தது:
    DOI: http://dx.doi.org/10.1016/S2213-8587(16)30104-8

    இன்னம்பூரான்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஒரு கதையை நடத்திச் செல்ல இருவர் வேண்டும்….PROTAGONIST & ANTAGONIST…..மேலும் PROTAGANISTஐ ANTOGANIST டுக்குஅடையாளம் காட்ட ஒருவரோ இல்லை ஒருத்தியோ வேண்டும்….பாகவதத்தில் PROTAGANIST கண்ணன்தான், ANTOGANIST கம்ஸன்தான்….. அன்று ANTOGANIST கம்ஸன் கைநழுவி ஆவேசமாய் ஆகாஸம் சென்று’’முட்டாளே !….உனது எருமை மாட்டு எமன் கோகுலத்தில் பசு மாட்டோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்’’ என்று பாகவதத்தில் கண்ணனை அடையாளம் காட்டியது ‘’ஆட்டகனிஸ்ட் காளி’’…..அதன்பின் வெகுநாள் கழித்து கண்ணனை தினமும்’’ முட்டாளே(அடியேன்தான்)…. உனது காலைக் கடன் (திரு)மாலைக் கடன் கம்ப்யூட்டரில் வந்தாச்சு….எழுந்தேலோ ரெம்பாவாய் வெண்பாவாய்’’ என்று அடையாளம் காட்டிக் கொண்டிருப்பது ‘’கண்ணனை வரைந்து போட்டகனிஸ்ட் கேசவ்’’….இது என் அபிப்ராயம் & அனுபவம்….இனி வெண்பா(ஸாரி காலைக் கடன்)….!

    KRISHNA FOR TODAY….
    —————————————-

    d283a7a2-cd17-44e9-8c0e-83edf773d7f8

    ”தூளியாட்டம் ஆடும், துவண்டவன் காலில்கோ
    தூளியாய் ஒட்டித் துகள்பருக, -காளியாட்டம்
    ஆடிட்டு கம்ஸனுக்கு அண்ணன் வரவைமுன்:
    கோடிட்டு(வண்ணக் கோடிட்டு) கேசவ் (பின்)கழித்து’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    8a29c8d3-2e10-47c5-8583-4186f4ee279f

    ’’கன்றைப்போல் கண்ணன் கரத்தில் பிதாமகர்,
    சென்றடைந்து நாம சஹஸ்ரத்தை, -மென்று,
    முழங்கினார் , அந்திம மாடன் அழைத்தும்,
    வழங்கினார் விஷ்ணு விருது’’….கிரேசி மோகன்….

    அந்திம மாடன் -காலன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் !

     unnamed

    (கட்டுரை: 12)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்

    பொரி உருண்டை சிதறித்

    துகளாகித்

    துணுக்காகித் துண்டமாகிப்

    பிண்டமாகி,

    பிண்டத்தில் பின்னமாகி

    அணுவாகி,

    அணுவுக்குள் அணுவான

    பரமாணு வாகித்

    திரண்டு

    பல்வேறு மூலகமாய்ப்

    பின்னித்

    தொடர்ப் பிளவில்

    பேரளவுச் சக்தி வெளியேற்றி

    நுண்துகள்கள் பிணைந்து

    பேரொளி வீசிப்

    பிரமாண்டப் பிழம்பாகி,

    விண்மீன்களாகி

    பால்மய வீதியாகி, அதனுள்

    பரிதி மண்டலமாகி

    அண்டக் கோள்கள்

    பம்பரமாய்ச் சுழலும் பந்துகளாகி,

    செம்மை நெறியிலே

    மகத்தான தோரணமாய்

    வியப்பான காட்சியாய்

    அம்மானை ஆடுகிறாள், என்

    அன்னை !

    +++++++++++

    பிரபஞ்சத்தைக் கட்டிய அடிப்படைத் துகள்கள்

    +++++++++++

    அது விட்டு விலகுவ தில்லை இன்னும் !

    அதை உணர்கிறேன், ஆனால் புரிவதில்லை !

    கையிக்குள்ளே வைக்க முடிய வில்லை !

    மறந்து போகவும் இயல வில்லை !

    அது முழுவதும் அகப் பட்டால்

    அளக்க முடிய வில்லை என்னால் !

    ரிச்சர்டி வாக்னர், ஜெர்மன் இசைக்கலைகஞர் [Richard Wagner (1813-1883)]

    Funamental particles

    மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி நிகழ்ச்சிகள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

    ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படைப் பரமாணுக்கள் (Subatomic Particles). அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன. 1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் அவை உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது. புதிய முறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

    ஒளித்துகள் ஒட்டுத்துகள் ஆவது

    கிளாஸ் ரித் & ஆன்டிரியா சே·பர் (Klaus Rith & Andreas Schafer)

    நுண்துகள் பௌதிகத்தின் நிலைபெறும் மாதிரி விதி (The Standard Model of Particle Physics) விஞ்ஞான வரலாற்றில் வெற்றியின் உச்சத்திலும், அதைக் கடந்த முன்னேற்ற துவக்க முனையிலும் கால அச்சின் மீது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது !

    கார்டன் கேன், (Goron Kane) பௌதிகப் பேராசிரியர், மிச்சிகன் பல்கலைக் கழகம்.

    உன்னத இழை நியதி பிரபஞ்சத்தின் இயக்க நெறியைக் கூறுகிறது

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் “பொது ஒப்பியல் நியதி” (General Theory of Relativity) விளக்கும் அண்டங்களின் ஈர்ப்புவிசை தோற்ற அமைப்பு பிரபஞ்சத்தின் கால வெளி உண்டாக்கும் வளைவே (Space-Time Curvature) ஈர்ர்ப்பு விசையுடன் தொடர்பு கொள்வதாய்க் கூறுகிறது.

    நுண்ணிய அணு வடிவைக் கட்டுப்படுத்தும் பிரபஞ்சத் “துகள் யந்திர விதியில்” (Quantum Mechanics) ஆட்சி செய்பவை அலைகளா அல்லது துகள்களா என்னும் உறுதியின்மை வெளிப்படையானது.

    விஞ்ஞானி போஹ்ரின் அணுத் தோற்றம்

    “குளுவான்” அல்லது ஒட்டுவான் (Gluon) என்பது அணுவுக்குள்ளே பரமாணுக்களை (Subatomic Particles) ஒன்றாகக் கட்டிப் பிணைத்திருக்கும் ஒருவித வலுவான அணுக்கரு விசை (Nuclear Force) என்று அறியப்படுகிறது.

    மிக்க மூலாதாரமான இயற்கை நுண்துள்களின் (Electrons & Quarks) இயக்கப்பாடுகளுக்கு 1960 -1970 ஆண்டுகளில் ஒரு “நிலைபெறும் இயக்க மாதிரி நியதியை” (Theory of Interactions – Standard Model) விஞ்ஞானிகள் விரிவாக்கினார்கள். ஆனால் அந்த மாதிரி நியதி ஈர்ப்பாற்றலைப் பற்றி இன்னும் விளக்க முடியாத நிலையில் உள்ளது.

    பிரபஞ்சம் மற்றும் நுண்ணணு இயக்கங்களை ஒருங்கே விளக்கும் ஓர் “ஐக்கிய நியதி” (A Unified Theory of the Universe) துகள் வடிவில்லாத ஒற்றைப் பரிமாண நூல் கொண்ட “இழை நியதி” (One Dimensional Filament – The String Theory). இந்த நூதன இழை நியதி முரண்பாடான பொது ஒப்பியல் நியதியையும், நுண்துகள் யந்திர விதியையும் இணைக்கிறது.

    ஒளிமந்தை நோக்கித் துகளின் பயணம்

    பிரபஞ்ச ஐக்கிய நியதிக்கு வழியிடும் உன்னத இழை நியதி

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி ! இது ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் !

    மூலாதாரத் துகள்கள்

    புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை யாவும் மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற “சவ்வியல் குமிழிகளில்” (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

    குவார்க்குகள் & டியூட்ரான்கள்

    பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களும் அவற்றின் பிணைப்புகளும்

    விண்வெளியில் மினுமினுக்கும் எண்ணிலா விண்மீன்கள் முதலாக நமது மூலாதார டியென்னே (DNA) அணுக்கள் வரை அனைத்துப் பிண்டங்களும் (Matter) அடிப்படைத் துகள்களைக் (Fundamental Particles) கொண்டவை. மூலாதாரமான அந்த நுண்துகள்களை மேலும் பிளக்க முடியாது. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு விஞ்ஞான மேதைகள் ரூதர்·போர்டு (1871-1937), நீல்ஸ் போஹ்ர் (1885-1962) ஆகியோர் முன்னோடிகளாய் விளக்கிய அணு அமைப்பில் உட்கருவில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் உள்ளன வென்றும், அவற்றை எலெக்டிரான்கள் சுற்றி வருகின்றன வென்றும் கூறினார்கள். அதாவது எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை அணுவின் பிளக்க முடியாத அடிப்படைத் துகள்கள் என்று கருதினார்கள்.

    அணுவிலிருந்து குவார்க் அறிவு

    1960 ஆண்டுக்குப் பிறகு அடிப்படைத் துகள்கள் பற்றிய அந்த அணுவியல் அமைப்புச் சித்தாந்தம், பின்னால் வந்த விஞ்ஞானிகளால் திருத்தப் பட்டது. பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களில் ஒன்றான குவார்க்கு (Quarks) என்பது அறியப்பட்டது. ஆறு வகையான குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது. அதாவது குவார்க்குகள் << மேல், கீழ், நளினம், புதினம், உச்சம், நீச்சம் >> (Up, Down, Charm, Strange, Top, Bottom) என்று நினைவில் நிற்கும் எளிய பெயர்களில் குறிப்பிடப் பட்டன. மென்மையான குவார்க்குகள் மேல், கீழ் எனப்படுபவை. அவைதான் பொதுவாக அணுவின் உட்கருவில் இருப்பவை.

    ஒட்டுவான் & புரோட்டான்

    பிரபஞ்சத்தில் குவார்க்குகள் வலுமிக்க விசையால் (Strongest Force) ஒன்றை ஒன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளவை. அதாவது குவார்க்குகள் தனியாக இருக்க மாட்டா ! ஒரு குவார்க் மற்ற குவார்க்கு களுடன் வலுவுள்ள விசையுடன் எப்போதும் இணைந்தே இருப்பது. அந்த வலுவான விசை குளுவான் அல்லது ஒட்டுவான் (Gluon) என்று அழைக்கப்படுகிறது. அப்படிப் பட்ட அடைப்படைத் துகள்களால் கட்டப் பட்டவையே இந்த பிரபஞ்சமும் அதன் கோடான கோடிப் பிண்டப் பொருட்களும். அத்தகைய மூலாதாரக் குவார்க்கையும் அவற்றைப் பிணைத்துள்ள அசுர வலுவான விசையையும் அறிவதே விஞ்ஞானிகளின் பிரதமக் குறிக்கோள்.

    அகிலக் கதிர் ஒளிப்பற்றை

    குவார்க்குகள் விஞ்ஞானக் கருவிகளால் அளக்க முடியாதபடி மிக மிக நுண்ணியவை. குவார்க்குகளைப் பிரிக்க முடியாது. ஒரு புரோட்டானைப் பிளக்க முயன்றால், குவார்க்குகள் பத்து டன் விசை வலுவுடன் ஒட்டிக் கொள்கின்றன. அவை மிக நுட்பமாக இருப்பதால் புரோட்டானுள் பில்லியனில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. பளுவிலும் மிகச் சிறிய விகிதமாக உள்ளது. புரோட்டானில் குவார்க்குகள் அடைத்துக் கொண்ட சிற்றிடம் போகக் காலியாகக் கிடக்கும் இடத்தில் இருப்பதென்ன ? அந்தக் காலி மனையில்தான் குளுவான் எனப்படும் பிசின் குவார்க்குகளைப் பிணைக்கும் ஒட்டு விசையாக நிரப்பிக் கொண்டுள்ளது ! அத்தகைய குவார்க், குளுவான் பிசினே பிரபஞ்சத்தின் 98% பளுவாகப் பரவியுள்ளது ! இயற்கையானது கோடான கோடி முறைகளில் பளுவில்லா குவார்க்குகளையும், வலுவான குளுவான்களையும் பிணைத்து பிரபஞ்சத்தைப் படைத்துள்ளது !

    குவார்க்குகள் & லெப்டான்கள்

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11 Astronomy Magazine – What Particle Physics Says about the Universe By: Scott Wakely (September 2006)

    12 Scientic American – ” The Mystery o Nucleon (Protons & Neutrons) Spin ” By : Klaus Rith & Andreas Schafer (July 1999)

    13 Scientific American ” The Dawn of Physics Beyond the Standard Model ” By : Gordon Kane Professor of Physics, University of Michigan (February 20, 2006)

    14. http://www.iflscience.com/physics/what-are-fundamental-particles/

    15.  https://en.wikipedia.org/wiki/Elementary_particle  [May 23, 2016]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) July 19, 2016 [R-1]

    Share