எஸ். வி. வேணுகோபாலன்

2011 தீக்கதிர் புத்தக மேசை பகுதியில் வெளிவந்த நூல் ரசனை கட்டுரை இது… மதுரை சுப்பாராவ் அவர்களது அருமையான சிறுகதை தொகுப்பின் மீதான இந்த எழுத்துக்களை, அதன் தொடக்கத்தில் எழுதி இருந்த மேற்கோள் கவிதையை திண்டுக்கல் தோழர் ஆர் எஸ் மணி நினைவூட்டிக் கேட்கவும் மீண்டும் அசைபோட நேர்ந்தது… உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்….

தாத்தாவின் டைரி குறிப்புகள்

ரசனையைத் தூண்டி சிந்தனையில் ஆழ்த்தும்
வாசிப்புப் பயணம்

என்றோ வசித்த
ஒரு தெருவைக்
கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக்
கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.
-சுந்தர்ஜி (நன்றி:sundargprakashblogspot.com )

நேற்று முன்தினம் தற்செயலாக வாசிக்கக் கிடைத்த மேலே உள்ள கவிதை, திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் அடிநாதமாக இருப்பதை உணர்ந்து லயித்துப் போனேன்.

வசித்த தெரு மட்டிலுமல்ல, நாளிதழின் ஒற்றை வரி செய்தி கூட ஒரு பெரிய வாழ்வனுபவத்தைத் தன்னுள் சுமந்திருப்பது தொடர்புள்ளவர்களுக்குப் புலப்படும். எப்போதோ கேட்ட பழைய பாடல் ஒன்றை நீண்ட நாள் கழித்து நீங்கள் கேட்க நேரும் போது, அது உங்களுக்குள் எழுப்பும் சங்கிலித் தொடரான நினைவுகள் சமயத்தில் பாடலைக் கூட நழுவ வைத்துவிட்டுப் பிறகு ஒரு பெருமூச்சோடு அடுத்த வேலைக்கு நகர்த்தும். மரக் கிளையிலிருந்து கண்ணுக்குச் சட்டென்று தெரியாத வெள்ளிக் கம்பியாகத் தொங்கும் இழையில் ஒரு புழு சர்க்கஸ் வேலை செய்து தப்பிக்கத் துடிப்பதை சிறுவர்கள் சட்டென்று கண்டுபிடித்துத் துருவ ஆரம்பித்துவிடுவார்கள். தாத்தா பாட்டி சொன்ன புராணக் கதையோ, சரித்திர சங்கதியோ கூட திரும்ப அசை போடுகிற போது, மேகத் திரளை உற்றுப் பார்த்தால் அது பஞ்சுப் பொதியாய்ச் சிதறிப் பிரிந்து இணைந்து வேறு வேறு சித்திரங்களை அடையாளப் படுத்துவது போல புதிய தேடல்களை உருவாக்கக் கூடும்.

சாதாரண, அசாதாரண என்றெல்லாம் பிரிப்பானேன் வாழ்க்கையை, அவரவர் அனுபவங்கள் அவரவர்க்கு மகத்தானவை. அதை உங்கள் உள்ளங்கையில் ஏந்திப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்க்கவேண்டும். அவ்வளவு தான். அந்த வேலையை எழுத்தின் சித்தர்கள் சிலர் பளீரென்று வடித்து உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைக்கும்போது அடடா..அதற்கு மேல் என்ன வேண்டும் ரசனையோடு அலையும் பிறவிகளுக்கு?

“தாத்தாவின் டைரி குறிப்புகள்” வாசிப்பு ஒரு வித்தியாசமான நடைப் பயணம். புராண, வரலாற்று மறு வாசிப்புக் கதைகளை அதிகம் உள்ளடக்கிய 16 கதைகளை அறிமுகப்படுத்துவது வாசகருக்கு நேரடியான வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தில் குறுக்கீடு செய்துவிடலாம் என்ற தவிப்பிருந்தும், வாசிப்பின் நுகர்வைப் பகிரும் இன்பத்தின் முனையிலிருந்து இதை அணுகலாம்.

தலைப்புச் சிறுகதை கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்த உற்சாகத்தோடு அலைபேசியில் அழைத்து அந்தக் கதையை உடனே வாசித்தாக வேண்டுமே என்றேன். கையெழுத்து பிரதியை எனக்காக நகல் எடுத்து அடுத்த அஞ்சலில் அனுப்பி வைத்தார் ச சுப்பாராவ். மதுரை மாநகரின் வைதிக பெரியவர் ஒருவரது டைரியில் பிரிட்டிஷ் காலத்துப் பதிப்பகங்களின் பெயர்களும், மாநகரின் முக்கிய இடங்களும், கடைகளின் பெயர்களும், கட்சி பிரமுகர்கள் அடையாளங்களுமாய் அசாத்திய விவரங்களின் தொகுப்பை விரிகிற அந்தக் கதையின் இறுதியில் தான் ஷாக் வைத்திருப்பார் சுப்பாராவ். தந்தையை இழந்த தன்னையும், தனது தாயையும் வருஷித்துக் காத்து வளர்த்த தாத்தாவின் ஞாபகமாய் இருக்கும் அந்த டைரிகளை எடுத்தாலே ஏன் அம்மா சலித்துக் கொள்கிறார் என்பதன் விடை, இளவயது கைம்பெண் ஒருத்தி நெறியோடு இருந்தாளா என்பதை அவளது தவறாத மாதவிலக்கைப் பதிவு செய்து வந்த நற்சான்றுக் கையேடுதான் அது என்று தெரியவருகிற இடம் சனாதன பெண்ணடிமைப் பார்வையை நெருப்பாய் எரிக்கும் இடம். “ஞானிகளும் சமயத்துல மனுஷாளா இருப்பா, சில சமயம் அதுக்குக் கீழயும் இறங்கிடுவா.. . ” என்று அம்மா சொல்லும் இடம் அது.

“செல்வம் மாஸ்டர்” , அசாத்திய திறமை இருந்தும் வாழ்க்கையின் புதிர்கள் பிடிபடாத ஒரு கலைஞனின் வீழ்ந்த வாழ்க்கையின் மீது கண்ணீர் சிந்த வைக்கும் கதை. பொருளாதார தட்டுப்பாடு மனிதர்களைக் கொண்டு தள்ளும் நரகம் சமூகத்தின் மீதான மெலிய விமர்சனமாகவும் படர்கிறது. “சியர் கேர்ல்ஸ்” கதை, சொர்க்கம் நரகம் பற்றிய வருணிப்புகளின் பின்புலத்தில் அருவருப்பாகக் காட்சி தரும் அக்காலத்திய புனைவுகளைப் பகடி செய்கிறது. பிரிஜ்லால் சுப்ரமண்யம் சிறுகதை, நமது முக்கிய கைப்பொருளை அற்பத் தேவைக்காகக் கைமாற்றிக் கொண்டு காணாமல் போகும் பழைய நண்பனின் மீட்சியையும், மீள மறுக்கும் நட்பையும் அழகாகப் பேசுகிறது. “வெள்ளைக் கமலாவும், நாய்க்கண்ணனும்” கதை காதலைக் காட்டிக் கொடுத்துப் பறித்தவனின் காலம் கடந்த மன்னிப்பு கோரல், அது சம்பந்தப்பட்ட பெண்ணின் அன்றைய மேம்பட்ட வாழ்க்கையின் படிக்கட்டு எதிலும் பொருந்தாது திரும்ப அவனிடமே வந்து சேர்வது மனதை என்னவோ செய்கிறது. “செம்மண்”, நகர வாழ்க்கை பறிகொடுக்கும் பாரம்பரிய விஷயங்களைக் குறியீடாக உணர்த்துவது.

“அக்பர் என்ற அப்பா”, “ஜெபான்னிசா” கதைகள் முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர்கள் அக்பர், அவுரங்கசீப் இருவரின் காணாத பக்கங்களை எடுத்து வைக்கும் அற்புதச் சிற்பங்கள். தனக்குச் சொல்ல வேண்டிய செய்தியை சுப்பாராவ் பதட்டமாகச் சொல்லத் தலைப்படுவதே இல்லை. கதையின் வாழிடத்தில் வாசகரையும் ஓர் அங்கமாக்கி அவர்கள் அருகேயே அந்தக் கதையை நிகழ்த்துக் கலையாக்கிவிடுபவர். ஆர் எஸ் மனோகர் நாடகங்களில் ஒரே ஒரு வரி வசனம் வருவதாயிருந்தாலும் மேடையில் மிகுந்த பாடெடுத்து அந்தக் காட்சிக்கான ஜோடனை அமைக்கப் பட்டிருப்பதைப் போல, மியூசியத்தின் கலைப் பொருள்களை உயிர்ப்பித்தும், புதையுண்ட மனிதர்களை மீண்டும் எழுப்பியும் வாழ்ந்து காட்ட வைக்கும் வல்லமையை எழுத்தில் வருவிக்கிறார் சுப்பாராவ். சோக சித்திரங்கள் எப்போதும் உள்ளத்தைத் தழுவுதல் இக்கதைகள் விஷயத்திலும் நடக்கிறது.

காமச் சாமியார்களின் ஆதிகால வடிவமான ரைக்வரின் அடாவடி குறித்த கதைக்கு “நித்யானந்தம்” என்பதைத் தவிர பொருத்தமான தலைப்பு வேறு என்ன இருக்க முடியும் ? ஆனால், லோப முத்ரா வேறு தளத்தில் இயங்கும் கதை. ஜப தபங்களில் நாட்களைக் கடத்தும் தவ சிரேஷ்டர்களுக்கு இல்லற தருமத்தை பத்தினிகள் நினைவுபடுத்தவேண்டி வருவது குறித்த கவித்துவ மோகம் அது. ஏனோ அது, இக்காலத்தில் ஐ டி துறை இளம் தம்பதியினர் தமக்கான நெருக்கமான நேரங்களுக்குக் கூட யோசித்து யோசித்து அட்டவணை போடுவது குறித்து அண்மையில் வாசித்த வேதனை செய்தியை நினைவுபடுத்தியது.

“கடைசிக் கேள்வி”, பாண்டவர்களின் மூத்தவன் உண்மையில் தருமத்தை அனுசரித்த தருமனா என்ற சவுக்கடிக் கேள்வியை வைக்கும் புராண மறுவாசிப்பு. “சுட்ட பழம்” கதையில் வரும் அவ்வை, பாட்டியாய் அறிமுகமாவதில்லை எனபது இன்ப அதிர்ச்சி. கேள்வி கேட்ட சேரிச் சிறுவனைப் போக வேண்டிய உலகுக்கு அனுப்பிவிட்டு அவனிடத்தில் முருகன் தான் சுட்ட பழம் வேண்டுமா என்று கேட்டவன் என்று வரலாறு புரட்டும் மன்னவன் பற்றிய இந்த மறுவாசிப்பில், அவ்வையும், அதியமானும் ருசித்து உண்ணும் உணவு வகைகளை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று சுப்பாராவிடமே கேட்டேன். கே கே பிள்ளை அவர்களின் தமிழர் வாழ்வும், பண்பாடும் என்ற அற்புத நூலில் இருந்து எடுத்த தரவுகள் என்றார். இந்த நுட்பமான தகவல் சேகரிப்பு அவரது சின்னச் சின்னக் கதைகளிலும் சுடர் விடுகிறது. தீர்மானமான நாத்திகப் பார்வையை, சாதியத்திற்கு எதிரான குரலை அப்பட்டமான பக்தி மார்க்கத்தில் விரியும் நிகழ்வுகளின் பின்புலத்தில் நின்று விரித்து வைக்கும் “கடவுளின் மறுமொழி” கதையிலும் விவரக் குறிப்புகள் ரசத்தைச் சேர்க்கின்றன. மகாகவி பாரதியின் பத்திரிகைத் துறை நுழைவாசலைத் திறக்கும் “விட்டுவிடுதலையாகி ” என்ற எளிய கதையிலும் இதை ருசிக்க முடியும்.

“இந்த மரம் தான்…”கதை, சுதந்திரப் போரில் மங்கள் பாண்டே தியாகத்தை ஒரு மரத்தின் குரலில் பேசுவது. நெட்டை மரங்களென நின்ற மனிதர்களைக் கேள்விக்குள்ளாக்குவது.

தொகுப்பின் சாட்டையடிக் கதையாக நிற்பது, “சில கேள்விகளும், ஆயிரம் பசுக்களும்”. வேதாந்த தத்துவார்த்தத்தின் மணிமுடியைத் தரித்து அத்தனை எதிர்வாதங்களையும் தவிடுபொடியாக்கி விடைபெறும் யாக்ஞவல்கியனை, எல்லாம் மாயை என்றானபின்னால் இத்தனைப் பரிசுப் பொருள்களும், பசுக்களும் எதற்கு என்று மன்னன் ஜனகன் தயங்கித் தயங்கித் தனியே போய்க் கேட்கவும், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன், என்னை நம்பியிருக்கும் பெரிய கூட்டத்தின் வயிறுகளை பிரம்மஞானம் நிரப்பாது, அனைத்திற்கும் ஆதாரம் ஆத்மா அன்று, பொருள் தான் என்று பதில் அளிக்கும் இடம் அற்புதக் கடல். இன்னமும் மாயை குறித்த மாயையில் இருக்கும் மக்களுக்குத் தெளிவைக் காட்டும் இக்கதை, தவிர்க்க முடியாதபடிக்கு ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை என்ற அசாத்திய நூலின் நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது. அகங்கார மத பீடங்களை ஞானத்தின் வடிவமாக தரிசிக்கும் இக்காலத்தில் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அதன் தேவையை இக்கதை உணர்த்துவதாகப் பட்டது.

சுப்பாராவ் தேர்ச்சியான கதைக்கருவை எடுப்பதோடு கூடவே அது இயங்க வேண்டிய களத்திற்கான தயாரிப்புகளையும் நவராத்திரி கொலுவில் பூங்கா, நீரருவி, மலைக்கோட்டை, நெடும்பாதை அமைக்க சில வீடுகளில் குழந்தைகளும், பெரியவர்களும் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளைப் போல மேற்கொள்கிறார். அதற்கான மொழி அவரது சொந்த ரசிப்பின் திளைப்பிலிருந்து இலகுவாக வழிந்து எழுதுகோலை நிரப்புகிறது. அதன் கொண்டாட்டத்தில் தொடரும் வாசிப்பின் இடையேயும், இறுதியிலும் அவர் பொறி வைத்துக் கொடுக்கும் அதிர்ச்சி வாசகரை மீண்டும் மீண்டும் அதே வழியில் அதே பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுகிறது. இன்னும் மேம்பட்ட அனுபவங்களை நமது உள்ளங்கையில் எடுத்துக் கொடுக்க அவரை வேண்டுகிறது வாசக உள்ளம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் இவ்வாண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவுப் பரிசை இந்தத் தொகுப்பு பெற்றதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. பாரதி புத்தகாலயம் நியாயமான பெருமிதம் கொள்ள முடியும். உறுத்தும் மிகச் சில பிழைகளைத் திருத்திய அடுத்தடுத்த பதிப்புகளைத் தமிழ் வாசிப்பு உலகம் கோரிப் பெற்று இன்புற வேண்டும்.

தாத்தாவின் டைரி குறிப்புகள் – சிறுகதைத் தொகுப்பு
ச சுப்பாராவ்
பாரதி புத்தகாலயம்
விலை ரூ.60/-. பக்கங்கள்:96

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *