திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (6)
இசைக்கவி ரமணன்
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (5)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (4)
விருப்பு வெறுப்பற்ற கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர்க்கு, துன்பங்கள் எக்காலத்தும் உண்டாகா.
மனிதர்களில், ஞானியை `தீரன்` என்று மறைநூல்கள் விளிக்கும். ஏனெனில் அவன், பொருள்களின் மீதுவரும் பற்றைத் துறந்தவன். ஞானியே இப்படி என்றால், மலர்மிசை ஏகினான் எப்படி இருப்பான்? அவன், விருப்பு, வெறுப்பு இரண்டுமில்லாதவன்.
சிவனை ஆதிபிக்ஷு என்பார்கள். எதையும் நாடாமல், எதையும் வெறுக்காமல் அவன் விட்டேத்தியாய் இருந்ததனால்தான் பதினான்கு லோகங்களும் அவன் காலடியில் வந்து விழுந்தன என்று புராணம் விளக்கும்.
வயதாகிவிட்டால், களைப்பு, இளைப்பு, சலிப்பு, பிணி இவை காரணமாக சில விருப்புகள் உதிர்ந்துபோகும். ஆனால் அப்போதும் கூட வெறுப்பு நீங்காது. வெறுப்பின் இருப்பு, விருப்பு இன்னும் எங்கோ ஒளிந்துகொண்டு பிணியாய்ப் பீடித்திருக்கிறது என்பதையே காட்டும். விருப்பையும் வெறுப்பையும் உதறமுடியாது. புதைமணலில் உதைக்க உதைக்க உள்ளேயல்லவா அமிழ்ந்துபோவோம்? விருப்பு வெறுப்பு அற்றவனின் திருவடிகளே கதி.
`நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன். எனக்கு எதனிடத்தும் விருப்போ வெறுப்போ இல்லை,` என்பது கண்ணன் வாக்கு. (09:29)
நாம் ஓயாமல் விருப்பு – வெறுப்புகளுக்கு இடையே பந்தாடப் படுகிறோம். அதற்குக் காரணம், கண நேரம் கூட நில்லாமல் சஞ்சலித்துக்கொண்டே இருக்கும் மனம். அதைக் கட்ட நினைக்கும் முயற்சிகள் யாவும் அதற்கு வலிமை சேர்த்து நம்முடைய வலிமையை நீர்க்கச் செய்வதாகவே முடிகின்றன. மனத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுத் தருவதாகப் புறப்பட்டிருக்கின்ற தலையணையளவு பருமனான புத்தகங்கள் எல்லாம் தலையணையாகக்கூடப் பயன்படுவதில்லை. மனமோ அடங்குகிற வழியாய் இல்லை. போராடிக் களைக்கிறோம். மற்றவர்கள் கண்களுக்கு, அதிலும் குறிப்பாய்ப் பெரியவர்கள் பார்வைக்கு, நாம் விகாரமாகவே காட்சியளிக்கிறோம். அவர்கள் கருத்துப்படி, நாம் நிழலோடு மல்யுத்தம் செய்கிறோம். நம்மைத்தவிர இந்த நிழல் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை! வீதியில் உருண்டு புரண்டு மேனியெல்லாம் சிராய்ப்புகளோடு முகமெல்லாம் வீங்கிக் கிடக்கின்றோம். ரமணரோ, `எண்ணமே மனம். எண்ணம் எழ எழ அதை வைராக்கியம் என்னும் வாளால் வெட்டிச் சாய்த்துக்கொண்டே இரு,` என்பார். சில சித்தாந்திகள், `மனம் என்ன கேட்டாலும் கொடுத்துவிடு. திருப்தி ஏற்பட்ட பிறகுதான் நீ உள்ளே போக முடியும்,` என்பார்கள். இது நெய்யூற்றி நெருப்பணைக்கிற கதைதான் என்பார் ரமணர்.
நெய்ய ஊத்தி நெருப்ப அணெக்க முடியுமா? தம்பி
நெனெச்சு நெனெச்சு நெனெப்ப நிறுத்த முடியுமா?
என்று பாடத் தோன்றுகிறது.
என்ன நம் பிரச்சினை? விருப்பாலும் வெறுப்பாலும் பந்தாடப்படுகிறோம். யாருக்கு விருப்பும் வெறுப்பும் இல்லையோ அவனைச் சரணடைவோம். அவன் அடிபணிவோம். அதற்குப் பிறகு மனமடங்கும். நம்மை விருப்பு வெறுப்பு இரண்டுமே விட்டுவிடும்.
அது சரி, வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதும் `சம்பவாமி யுகே யுகே,` என்பதும் எப்படி ஒத்துப்போகும்? யுகந்தோறும் தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வருவேன் என்றானே, இதை எப்படிப் பொருள்கொள்வது? இறைவனுக்கு அவனுடைய செயல்களில் விருப்பும் வெறுப்பும் கிடையாது என்பதே பொருள். ராவணனைக் கொல்ல மனமின்றித்தான் நின்றான் ராமன். ஏன்? வெறுப்பு இல்லை. பின் ஏன் கொன்றான்? வேறு வழியில்லை. அது கடமையாகியது. தமோ குணத்தை வரவழைத்துக்கொண்டுதான் ராமன் ராவணனைக் கொன்றான் என்பார்கள்.
மலம் அருவருப்பானதுதான். ஆனால், குழந்தையின் மலம், தாய்க்கு அப்படித் தெரிவதில்லையே! இன்பம், துன்பம் இரண்டுக்கும் மனம்தான் காரணம். ஆனால், வேண்டுதல் வேண்டாமை இரண்டும் இல்லாத இறைவனின் திருவடிகளில் பொருந்திக்கொண்டால், இன்பம் என்று ஒன்று பிரத்யேகமாக இல்லை. எதுவும் துன்பமாகத் தெரிவதில்லை. எனவே, கேட்கும் ஒலியிலெல்லாம் அவனுடைய கீதத்தைக் கேட்க முடிவதோடு, தீக்குள் விரலை வைத்தாலும் அவனைத் தீண்டுவது போலவே ஆகிவிடுகிறது. காந்தத்தோடு தொடர்பு கொண்ட இரும்பு காந்தமாகவே ஆகிவிடுவது போல, வேண்டுதல் வேண்டாமை இலாதவனை வணங்கியதால் நாமும் விருப்பு வெறுப்பு அற்றவர்களாகிறோம்.
ஒரே சமயத்தில், விருப்பு, வெறுப்பு இரண்டுமின்றி, அதே நேரம் முழு உணர்வுடன் இருக்கும் இருப்பே இறைவன். அவனே `பற்றற்றான்.` பற்று விட நாம் பற்ற வேண்டியது அவனுடைய திருவடிகளையே. அவை இருக்குமிடம் நமது இதயக்கமலமே. அவனுடைய திருவடிகளை அகத்தே நாடுவதும், அவற்றைச் சார்வதும், பின்பு சேர்வதும் அடுக்கடுக்காய் நடக்கின்றன, மொட்டு முகையவிழ்வதுபோல்.
அவ்விதம் உள்ள மனிதனுக்கு எந்தவிதமான துன்பமுமில்லை. எப்போதுமில்லை. எங்குமில்லை. இவ்வுலகிலும் துன்பமில்லை. இதை நீத்தபின், அவன் துன்பமயமான லோகங்களுக்குச் செல்வதில்லை. இதைத்தான் யாண்டும் இடும்பை இல என்றார்.
தொடருவோம்