Blog

  • வாசுகியாயணம்!

    பவள சங்கரி

    1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய வெண்பா மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ:

    அடிசிற் கினியாளை அன்புடை யாளை
    படிசொற பழிநாணு வாளை … அடிவருடி,ப்
    பின்தூங்கி முன்னெழூஉம் ப யான்பிரிந்தால்
    என்தூங்கும் என்கண் எனக்கு.

    பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் அன்றாடம் வைத்துக்கொண்டிருந்தாராம்! காலம் முழுவதும் விளங்காமலே செய்த பணிவிடைக்கு தமது உயிர்பிரியும் இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டாராம் அம்மையார்..

    images
    அதாவது, ஐயனுக்கு உணவு பரிமாறும்போது சாதப்பருக்கை கீழே இறைந்துவிட்டால் அதை ஊசியால் எடுத்து தண்ணீரில் அலம்பி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்காக வைக்கச்சொன்னாராம். ஆனால் இறுதிவரை ஒருநாள் கூட அதற்கான தேவை ஏற்படவேயில்லையாம்!

    Share
  • ‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை!

    பவள சங்கரி

    DSC_0795[1]

    DSC_0799[1]
    ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. திருமதி.சாந்தாமணி ஆகியோரும், சமுதாய அக்கறை அதிகரித்துள்ளது என்ற அணியில் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், திரு மணிகண்டன், வழக்கறிஞர் சுமதி ஆகியோரும் வாதிட்டனர். இலக்கிய அரங்கம் என்று ஆவலாகச் சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். காரணம் வாதிட்ட அனைவரும் இலக்கியம் குறித்து ஏதும் பேசவில்லை. மேலோட்டமான வாதமாகவே இருந்தது. ஆனாலும் அனைவரின் வாதங்களும் சுவையாகவே அமைந்திருந்தது. இந்தக்குறையை நிவர்த்தி செய்யும்விதமாக நடுவர் திரு சுகி.சிவம் அவர்கள் தமது உரையில் ஆழ்ந்த பல கருத்துகளை முன்வைத்தது பாராட்டிற்குரியது.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    3ec6f343-8a8e-4f47-bb9e-089e18314e68

    ”இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து,
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி, -நில்லாது,
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழ்வதேன் !
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….கிரேசி மோகன்….

    Share
  • படக்கவிதைப் போட்டி 73 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13734582_1050429538344578_1049135032_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஷாமினி. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த ஒளி படத்தில் இடம் பெற்றிருப்பவர் பறை கொட்டி இசைக்கும் தொழிலாளி. இவர் கொட்டும் பறைக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

    பறையின் பயன்பாடு ஆதிகாலம் தொட்டு இருந்துவந்துள்ளதை சங்க இலக்கியத்தால் அறிய முடிகின்றது. பறை நிலத்தைக் குறிக்கும் குறியீடாக சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பறை கொட்டி முரசறைவிக்கும் வழக்கமும், விலங்கை விரட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    ஆதி காலம் தொட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழரின் பறை, இன்று ஏழை எளிய மக்கள் விரும்பும் பறையாகவே உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் ராதா விஸ்வநாதன்.

    செந்தமிழ் நாட்டுக் கலையாகவும், இந்த நாட்டு இசையாகவும் விளங்கிய பறையின் ஓசை நயத்தை நடையழகுடன் சொல்லியிருக்கின்றார் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    பறையின் தொன்மை வரலாற்றையும், பறை இசையின் பயன்பாட்டையும் இசை கருவியிலிருந்து எழும் ஒசை பற்றியும் எடுத்து கூறும் சரஸ்வதி ராசேந்திரன், இசைக்குள் புகுந்து விட்ட சாதிய பார்வையையும் சுட்டிக் காட்டியுள்ளார். கவிஞருக்கு பாராட்டுகள்.

    தமிழின அடையாளம்

    ஆதித்தமிழன் ஆரம்பித்த இசைமொழி

    அச்சம் மகிழ்வென கொண்டாடிய குலத்திற்கு

    விலங்கின அச்சத்தை விலக்கிட்ட பறை

    கலங்கின நெஞ்சத்தை கரம் உயர்த்திய பறை

    காலவெள்ளத்திலும் நிலைத்த இசைக்கலை

    பறையாட்டமே தப்பாட்டமாய்………

    இறவாப் புகழ்தரும் அஃறிணையின் தோல்

    இளைஞா்களுக்கு எழுச்சியூட்டும்

    இறந்தும் பாடம் சொல்லும்

    இசைக்க எத்தனையோ கருவியிருக்க

    இன்றளவும் பறை மனச்சிம்மாசனத்தில்

    படித்தவனோ பாமரனோ

    பாட்டாலே புரியவைப்பான்

    தேங்கிய உணர்வுகள் வெடித்தெழ

    வாங்கிய கரங்களில்

    ஓங்கியே ஒலிக்கும்

    ஒங்கிய இசையால் உலகளக்கும்

    தன்னை உருமாற்றி

    நாகரிகக் கரங்களில் இசைத்தாலும்

    பறைமொழி தான் இன்றளவும்

    புதுமொழியாய்………..

    பட்டிதொட்டியெல்லாம் பரவிய பறையாட்டம்

    தமிழர் கலையென தப்பாமல் முழக்கமிடும் தப்பாட்டம்

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பறையை எடுத்துக் கூறி, அதன் தொன்மை தன்மையையும், கால வெள்ளத்தில் நிலைத்து, இன்றுவரை நம் வாழ்வியல் கூறுகளில்  இடம் பெற்றுவரும் தன்மையையும், நாகரிக வளர்ச்சியில் உரு மாற்றத்துடன் பல்வேறு பெயரில் வழங்கப்பட்டுவந்தாலும், தமிழர் கலையான பறை தான் அடிப்படையான இசையாக அமைந்துள்ளதை எளிமையாகவும், நடையழகோடும் எடுத்துக் காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தேடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, அருமையான அறிவியல்நூல்கள் எழுதியுள்ள முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    சூலை 2, 2016 அன்று முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் 316-பக்க உயர்கணித நூலொன்றை அனைவரும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி வெளியிட்டுள்ளார் [1].
    இந்நூல் அறிவியல்-கணிதத் துறையின் ஆழங்குன்றாமல் எழுதப்பெற்றிருப்பது பெருஞ்சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளில் எட்டு அருமையான நூல்களை இலவசப்பதிப்பாக வெளியிட்டு தமிழுலகுக்கு அருந்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இவற்றுள் புகழ்பெற்ற ”One Two Three… Infinity: Facts and Speculations of Science” என்னும் தலைப்பில் சியார்ச்சு கேமாவ் (George Gamow) எழுதிய நூலின் தமிழாக்கத்தை ”ஒன்று , இரண்டு, மூன்று, முடிவிலி” என்னும் தலைப்பில் முனைவர் கோட்டாளம் மொழிபெயர்த்துள்ளார். இதேபோல தகுலசு ஆடம்சின் (Douglas Adams) “The Hitchhiker’s Guide to the Galaxy” என்னும் புகழ்பெற்ற நூலையும் தமிழில் ”பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி” என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் துறையில் எழுதுவோர்க்குப்பயன்படும் விதமாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை தமிழாக்குவதற்கான ஒரு கையேடு என்னும் அருமையான நெடிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார் [2].

    மகாகவி பாரதியாரின்
    ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’

    என்னும் பொன்மொழிகளைச் செயற்படுத்திவரும் நற்றமிழர் இவர்.


    முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் . படம் [3]

    முனைவர் கோட்டாளம் அவர்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். அதற்குமுன்பு சென்னையில் இருக்கும் இந்திய தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி-சென்னை) முதுநிலை அறிவியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலிலே இளநிலைப் பட்டமும் பெற்றார். இப்பொழுது அறிவியல் இலக்கியங்களைத் தமிழில் ஆக்குவதையும் மொழிபெயர்ப்பதையும் பேரார்வம் காட்டி உழைத்துவரும் இவர் பற்பல அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கிரே ஆய்வு (Cray Research), இசுட்ரக்சுரல் பயோ இன்ஃபர்மாட்டிக்சு (Structural Bioinformatics), இரியாக்ஃசன் திசைன் (Reaction Design) போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கின்றார். வேதியியலில் உயர்திறன் கணிமைகளில் இவர் பெரும்வல்லுநர். பெரும் நுண்ணறிவுபெற்ற இவர் தமிழில் நூல்கள் எழுதி தமிழ்ப்பணி ஆற்றுவது பெருமகிழ்ச்சி தருவது. இவர் ஆக்கிய அல்லது மொழிபெயர்த்த நூல்களை மின்வடிவில் யாரும் எளிதாக இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி செய்திருப்பதும் இவருடைய தொண்டுள்ளத்தைக் காட்டுகின்றது. இவரெழுதிய நூல்களைத் தரவிறக்கிப் படிக்க கீழ்க்காணும் பக்கத்தை அணுகவும்[4]. முனைவர் கோட்டாளம் அவர்கள் Journal of Chemical Physics, Journal of Statistical Physics, Biopolymers போன்ற அறிவியல் ஆய்விதழ்களில் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். சுபிரிங்கர் ஃபெர்லாகு (Springer Verlag) என்னும் பதிப்பகத்தாரின் நூலில் இவருடைய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. புத்தாக்கப்படைப்புக்கான உரிமமும் பெற்றுள்ளார்.

    முனைவர் கோட்டாளம் அவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்து வாழ்கின்றார்.

    முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் அருமைமிகு அறிவியல் தமிழ்நூல் படைப்புத் தொண்டினைப் பாராட்டி அவரை சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5TXU4aVhRMy11SlU/edit
    [2] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story
    [3] படம்- முனைவர் கோட்டாளம் அவர்களின் முகநூல் (https://www.facebook.com/kottalam?fref=nf)
    [4] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (6)
    
    kural
    

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

    கடவுளின் உண்மைப் புகழை விரும்பி, அன்புகொண்டவரிடத்து, அறியாமையால் உண்டாகும் இருவகை வினையும் சேர்வதில்லை.

    இருள் என்பது அறியாமை. இருவினை என்பது பாவமும் புண்ணியமும். இரண்டுமே மருள்மயமான பிறப்புக்குக் காரணம் என்பதால் நல்வினையும் தீவினை போலவே பிறவித் தளைக்குக் காரணமாக ஆகிறது.

    நல்வினையும் ஓர்சுமைதான் நட்ட நடுவிலதை

    மெல்ல இறக்கிவைத்தால் மீட்பு

    நல்வினை ஏன் சுமையாகிறது? அதை நாம் செய்கிறோம் என்ற உணர்வோடு செய்வதால்தான். செயல் நம் மூலம் நடக்கிறது என்று நம்பி, பிறகு பாவித்து நடந்துகொண்டால் அதுவே அனுபவமாகிறது. அப்படியென்றால் தீவினையும் என் செயலில்லை என்று கொள்ளலாமா? நல்வினை என்னுடையதில்லை, அதனால் வரும் விளைவுகளும் என்னுடையதில்லை என்ற உறுதி வருமானால் அதையே தீவினைக்கும் கொள்ளலாம். ஆனால், அந்த வைராக்கிய உறுதி வாய்த்தபின், தீவினை எப்படி நிகழும்?! வேள்வி செய்வோர், `இது இந்திரனுடையது எனதல்ல, இது அக்கினியுடையது எனதல்ல,` என்று சொல்லிச் சொல்லித்தான் நெய் சொரிவார்கள். அந்த எச்சரிக்கை உணர்வு இருக்கவேண்டும்.

    எப்படி இறக்கிவைப்பது? அறியாமை என்னும் பொய்மை இல்லாமல், அறிவு என்னும் மெய்மை வடிவான இறைவனின் புகழைச் சொல்வதன் மூலமே இது சித்திக்கும்.

    யாரைப் பற்றி, அல்லது எதனைப் பற்றி இடைவிடாமல் சிந்திக்கிறோமோ, பேசுகிறோமோ, கேட்கிறோமோ அவருடைய, அல்லது அதனுடைய தன்மை நமக்கு வந்துவிடுகிறது. (யத் பாவம் தத் பவதி) நம் மகன்தான். ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஒரு நல்ல வாய்ப்பு வந்து, வேலை பார்த்தபடியே படிக்க அமெரிக்கா செல்கிறான். கொஞ்சநாள் சென்று திரும்பி வருகிறான். அமெரிக்கன் மாதிரியே ஆங்கிலம் பேசுகிறான்! பழக்கம்தான்.

    ஜடபரதர் ஆற்று நீரில் நின்றபடி நித்திய கர்மாக்களைச் செய்துகொண்டிருக்கிறார். ஒரு தாய்மான் குட்டியைப் பிரசவித்து அப்படியே இறந்துவிடுகிறது. குட்டி, தண்ணீரில் விழுகிறது, அவர் கண்ணுக்கெதிரே. அதை அவர் காப்பாற்ற வேண்டுமா வேண்டாமா? செய்யலாமா கூடாதா? அப்படியே அள்ளிக் காப்பாற்றினார். அதுதான் செய்ய வேண்டியது. செய்ய வேண்டியது அவ்வளவுதான். ஆனால், அத்தோடு அவரால் நிறுத்த முடியவில்லை. அந்த மான்குட்டியை வளர்த்துக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். யாரும் தராத பொறுப்பு. அதற்குப் பால், அதற்காகப் பசு, அதற்குத் தழை, அதற்குத் தடுப்பு வேலி, அது இரவில் பாதுகாப்பாய் இருக்கிறதா என்ற அச்சம் என்று தன் கவனம் முழுதும் மான் மீதே செலுத்தி, மானைத் தழுவியபடியே மரணத்தைத் தழுவி மறுபிறப்பில் மானாய்ப் பிறந்தார் என்கிறது கதை.

    செய்கை என்பது தன் மூலம் நடக்கவில்லை என்னும் உறுதி கொண்டவன், செயலில் பற்றுவைப்பதில்லை. எனவே, அதன் பயனைப் பற்றி அவன் கருதுவதே இல்லை. எனவேதான், செயல் என்பது அவன் மூலம் நடக்கிறது.

    அறிவும் வெறும் பழக்கம்தான்; அறியாமையைப் போலவே!

    வேண்டுதல் வேண்டாமை இலான் இருவினையும் சேராதவன்தானே! அவனையே புகழ்ந்து வாழ்ந்தால் இருவினைகள் நம்மையும் சேரா!

    அறியாமை என்னும் பொய்மைதான் நல்வினை தீவினை என்னும் இருவினைகளுக்குக் காரணம். இறைவனோ மெய்மை மயம்.

     

     தொடருவோம்

     

     

     

    Share
  • ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர்

    மீ.விசுவநாதன்

     

    மலரினால் பூசை செய்யும்

         வகைநா(ன்) அறிந்தே(ன்) இல்லேன் !

    சிலரது அறிவைப் போல

         சிறிதும் கொண்டேன் அல்லேன் !

    பலவகை திரியும் எண்ணம்

         படிந்த பாவி நானும்

    குலகுரு உந்தன் பாத

        குணத்தில் கரைந்து போனேன் !

     

    மனதிலே மாசு நீங்க

       மௌன மொழியால் நித்தம்

    முனகிடு குருவின் பேரை ,

        மூச்சுப் பயிற்சி யாலே

    சினமிலா பண்பு ஓங்கும் ,

        சிந்தைத் தெளிவு காணும்

    எனவொரு வழியைச் சொல்லி

        எனக்குள் வந்த ஞானி !

     

    உலகிலே வந்து விட்டேன்

       உற்ற துணையைத் தேடிப்

    பலமுறை அழுது விட்டேன்

        பலம்நீ என்று நம்பி

    நிலவொளி ஒத்த உந்தன்

       நினைவில் பற்று வைத்தேன்

    இலையெனத் தள்ளி டாமல்

        என்னுள் வரவு மானாய் !

     

    உருகியே உள்ளன் போடு

        உதவி எனவே கேட்டால்

    இருவினை தீரும் வண்ணம்

        இவரே அள்ளிக் கொடுப்பார் !

    “அபிநவ வித்யா தீர்த்தர்”

        அருளை வேண்டும் பக்தன்

    கவிதனை ஏற்றுக் கொண்டு

         கருணை பொழிவார் சத்யம் !

    Share
  • குறளின் கதிர்களாய்…(130)

     

    செண்பக ஜெகதீசன்

     

    செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து         

    மில்லதனின் தீய பிற.  

         -திருக்குறள் -302(வெகுளாமை)

     

    புதுக் கவிதையில்…

    தம்மில் வலியோரிடம்

    கொண்டகோபம்,

    செல்லாது போகும்

    சேர்க்கும் தீமையையே..

     

    எளியோரிடத்து கோபம்

    எதையும் தராது,

    தீமை ஒன்றைத் தவிர…!

     

    குறும்பாவில்…

    செல்லாத இடத்து கோபந்தரும்

    தீமையே, செல்லும் எளியோரிடத்து,

    தருமது தீமையன்றி வேறிலையே…!

     

    மரபுக் கவிதையில்…

    வலியோர் தம்மிடம் சினங்கொண்டால்

         விரைவில் வந்திடும் தீமையதே,

    பலிக்கா தவரிடம் கொண்டகோபம்

       பலனாய்த் தருமே பெருந்துன்பம்,

    பலிக்குமென் றெண்ணிக் கோபமதை

       பலமிலா எளியோர் தம்மிடத்தில்

    செலுத்தும் மாந்தர் தமக்குத்தான்

      சேரும் தீமை எல்லாமே…!

     

    லிமரைக்கூ…

    வலியோரிடம் கோபம் செல்லாதது, 

    தீமையது, தராதே தீமையன்றி வேறெதுவும்

    எளியோரிடம் கோபம் பொல்லாதது…!

     

    கிராமிய பாணியில்…

    செல்லாது செல்லாது கோவஞ்செல்லாது

    வலியவங்கிட்ட கோவஞ்செல்லாது,

    கோவப்பட்டா உடமாட்டான்

    கொடுந்தீங்கு ஒனக்குவரும்..

     

    எளியவங்கிட்ட கோவப்பட்டா

    எளிசாப்போவுமுண்ணு எண்ணாத,

    தெளிவாநீயும் தெரிஞ்சிக்க

    தீமயத்தவுர எதுவும் வராதே…

     

    அதால

    கோவப்படாத கோவப்படாத

    யாருகிட்டயும் கோவப்படாத…!

    Share
  • உமையாள் திருப்புகழ் – 4

    வித்தக இளங்கவி
    விவேக்பாரதி 

    தனத்த தந்தன தனதன தனதன
    …
    தனத்த தந்தன தனதன தனதன
    ……
    தனத்த தந்தன தனதன தனதன – தனதானா ! 

    செழித்த மஞ்சளொ டழகுடை நுதலினிற்
    …
    சிவக்க குங்கும மணிபெற அணிபவள்
    ……
    சிவத்தி னங்கமு முடையவ ளுமையவள – ளடிபேணிச்

    சிறக்கு மந்நிலை அடையுக விரையுக
    …
    சிவத்தி னுள்பொரு ளறியுக உயருக
    ……
    சிதைக்கு மின்னலு மவளடி சரணெனின் – கடிதேகும் !

    கொழித்த கொங்கையு மதரமு முடலினில்
    …
    குதிக்கு மங்கியு குழைகளு மிடையினில்
    ……
    குறுக்க ணிந்திடு மணிகளு மதிசயப் – பொருளாகும்

    கொடுக்க நல்வர மிழிவொடு துயரினைக்
    …
    கெடுக்க வென்றவ ளழகினைத் தொழுதிடக்
    …….
    கொதிப்ப டங்கிடு மழிவுக ளழிவதை– உணர்வோமே !

    வழித்த டந்தனி லுமையவ ளதுபெயர்
    …
    விளிக்க வந்திடு மொருபுது பலமொடு
    ……
    விழிக்கு ளிங்ஙண மரிதெனு மறிவென – உணர்ந்தேதான்

    வளத்தை நல்கிடு முலகதின் கதியெனும்
    …
    வனக்கொ ழுந்தினை மதியினுள் நிறுவுக
    ……
    வருத்த மன்னையி னருளடி தொழுதிட – வுடனோடும்

    சுழித்த கங்கையுஞ் சுடர்விடு மதியொடு
    …
    சுழற்றும் வெஞ்சின விழியது முடையரண்
    …..
    சுவைக்கு மெல்லித ழுடையவ ளுமையவ – ளெனநாடி

    சுகத்தைத் தந்திடு வெனமொழி பகருக !
    …
    சொடுக்கி யின்னலைக் களையுக வெனுந்தினம்
    ……
    சுடர்க்க தம்பவி ழியினருள் பொழியுவ – ளுமையாளே !


     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல்! (15)

    நிர்மலா ராகவன்

    குழந்தைகள் காட்சிப்பொருட்களல்ல

    நலம்-

    எங்கள் உறவினர் பெண் ஒருத்தி தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தைப் பார்த்துப் பூரித்துப்போனாள். அருகில் இருப்பவர்களிடமெல்லாம், `இவளைப் பாருங்களேன்!’ என்று கூவுவாள். தாய் ஓயாமல் பார்ப்பதையெல்லாம் விளக்க, மகளின் அறிவு வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது என்னவோ உண்மை.

    ஆம், முதல் குழந்தைதான். இரண்டு வயது. பிறருக்கு அவளுடைய `நிர்ப்பந்தம்’ அலுப்பாகிவிட்டது. என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார்கள்: `எப்பவும் அந்தக் குழந்தையையே நாம்ப பார்த்துக் கொண்டிருக்கணும்!’

    `எத்தனையோ குழந்தையைப் பாத்தாச்சு!’ ஒரு முதிய பெண்மணியின் அலுப்பு.

    அடுத்த முறை அந்த இளம் தாய் என்னுடன் தொடர்பு கொண்டபோது, `உன் குழந்தை எப்படி இருக்கிறாள்? Don’t show her off!’ என்று அறிவுரை கூறினேன். (கண்டனம் தெரிவிப்பது ஆங்கிலத்தில் எவ்வளவு எளிதாக இருக்கிறது!).

    `இப்போதெல்லாம் நான் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் செய்தார்களாம். அதனால், `ஓயாமல் பெண்ணைப்பற்றி பெருமையாகப் பேசாதே!’ என்றுவிட்டார்,’ என்று தெரிவித்தாள்.

    அந்த மனிதர் சிறு வயதில் கர்னாடக இசையில் கேள்வி ஞானத்திலேயே சிறந்து, பல போட்டிகளில் வென்றிருக்கிறார். வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் அச்சிறுவன் பாடுவதைக் கேட்க வைப்பார்கள் அவனுடைய பெற்றோர். அவனைப் பாடச்சொல்லி, காசெட் வேறு எடுத்துக் கொடுப்பார்கள்.

    பெரியவனானதும், `எனக்கு கர்னாடக சங்கீதம் என்றாலே வெறுப்பாகிவிட்டது!’ என்கிறார் அந்த தந்தை. பெற்றோரை எதிர்க்க முடியாது, அவர்கள் விருப்பப்படியெல்லாம் ஆடியது இப்போது நினைத்தாலும் கசப்பாக இருக்கிறது, பாவம்! மிக நெருங்கியவர்களிடம் சொல்லி வருந்துவதுதான் அவரால் செய்ய முடிந்தது.

    நம் குழந்தை சிறந்திருந்தால் நமக்குத்தான் பெருமை. இதுவும் ஒருவித தற்பெருமைதானே! தவிர்க்கலாம்.

    `வயதில் மூத்தவர்களை திருப்திப்படுத்த மட்டும்தான் தான் வாழ்கிறோம்,’ என்ற நினைப்பு எந்தக் குழந்தைக்கும் கசப்பாகத்தான் இருக்கும். அதனுடைய தனித்தன்மையை வெளிக்கொணர்வதுதான் பெற்றோர் செய்யக்கூடிய உபகாரம்.

    தான் பெறாத திறமையை தான் பெற்ற குழந்தை (ஆணோ, பெண்ணோ) பெற்றுவிட்டான் என்ற பெருமிதத்தில் பார்ப்பவர்களிடம் எல்லாம் அவனைப்பற்றி பெருமையாகப் பேசும் தாய்மார்கள் சகஜம்.

    நம் குழந்தையால் நமக்குத்தான் பெருமை. மற்றவர்களுக்கு என்ன வந்தது!

    என் சுயக்கதை: இசையும், நடனமும் மிகச் சிறு வயதிலேயே எனக்குப் பிடிக்கும். நான் நாட்டியம் கற்றுக்கொண்டது பரதநாட்டியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்குத்தான் என்றிருந்த காலத்தில்.

    எங்கள் வீட்டுக்கு வருகை புரியும் முதிய பெண்மணிகள், `என்னமோ டான்ஸ், டான்ஸ் என்கிறாளே! அது எப்படீடி இருக்கும்?’ என்று என் அம்மாவைக் கேட்பார்கள். விசேட காலங்களில் கோயில்களில் சில பெண்கள் நாட்டியம் ஆடும்போது, அதைப் பார்ப்பதுகூட தம் கௌரவத்திற்கு இழுக்கு என்பது போலிருந்தது இவர்களது மனப்போக்கு. அதனால் நாட்டியம் என்பதே இவர்களுக்கு அந்நியமாகப் போய்விட்டது.
    அடுத்தது நான் வேண்டாவெறுப்புடன் எதிர்பார்த்ததுதான். ‘நிர்மலா ஆடுவாளே!’ என்று என் தாய் என்னை அழைப்பார்கள்.

    என் திருப்திக்காக நான் எப்போதும் ஆடிக் கொண்டிருப்பேன். ஆனால், கண்காட்சிப் பொருளாகத் தான் அமைவதை எந்தக் குழந்தைதான் விரும்பும்?

    `எதுக்கும்மா?’ என்று கொஞ்சம் முனகிவிட்டு, அம்மாவின் முறைப்பைத் தாங்கமுடியாது ஆடுவேன். எப்படித் தெரியுமா? கன்னங்கள் ஒட்டியிருக்கும்படி வாய்க்குள் இடுக்கிக்கொண்டு, இல்லையேல், வாயை இறுக மூடி, மேல் உதடு மூக்கில் படும்படி பொருத்திக்கொண்டு! (முயன்று பாருங்கள்!)

    கோரமாக இருந்தால், `இன்னொரு பாட்டுக்கு ஆடு!’ என்று கேட்க மாட்டார்களே! என் அதிருப்தியை பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!

    அடுத்த முறை, `சிரிச்சுண்டு ஆடு!’ என்று அம்மா தாஜா பண்ணுவாள். சிரிப்பு என்னவோ வராது.

    ஒரு முறை, வேற்றூரிலிருந்த ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் கணவர் பெருமையுடன், `எங்கள் மகள் அற்புதமாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுவாள்,’ என்று கூறியபடி, மகளைக் கூவி அழைத்தார்.

    முகத்தைத் தூக்கிக்கொண்டு வந்தாள், அந்த பதினேழு வயதுப் பெண். `I know! It is a set-up!’ என்று பெற்றோரைக் குற்றம் சாட்டினாள்.

    என் இளமைக்காலம் நினைவில் வந்தது. அவளுடைய வேண்டாவெறுப்பு புரிந்து, நான் அவளுடைய பயத்தைப் போக்கினேன். `அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் வீட்டு அலங்காரப் பொருட்களைப் பார்ப்பதற்காகத்தான் என்னை அழைத்து வந்தார்கள். உனக்கு விருப்பமில்லாவிட்டால் காட்ட வேண்டாம்!’ என்றுவிட்டேன்.

    அவள் உள்ளே போனாள், பெற்றோரின் அதிருப்தியைச் சட்டைசெய்யாது.

    `இன்னொரு முறை வந்தால், எங்கள் வீட்டு சாமிக்கும் நீங்கள் பாட வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தார் அந்த நண்பர். (அதற்கு முன்னால் கோயிலில் நான் பாடியதைக் கேட்டிருந்தார்).

    `இப்போதே பாடுகிறேனே,’ என்று உடனே தரையில் உட்கார்ந்தேன். இது தற்பெருமையோ, கர்வமோ அல்ல. (`யாராவது உன்னை பாடச் சொன்னால், உடனே பாட வேண்டும். பிகு பண்ணிக்கொள்ளக் கூடாது! அது தவறு,’ என்று என் குரு போதித்திருந்தார்).

    நான் பாடி முடித்ததும், அப்பெண் தான் எழுதிய கவிதைகளை வலியக் கொண்டுவந்து காட்டினாள்!

    தொடருவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (74)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13819697_1055298904524308_2074905093_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -37

    க. பாலசுப்பிரமணியன்

    கற்பதில் சில முறைகள்

    education-1-1

    “படிச்சிருக்கேன்… ஆனால் பரிட்சை ஹாலில் வந்து மறந்து போச்சு ” என்று அங்கலாய்க்கும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.  “வீட்டிலே எழுதறப்போ சரியா எழுதிறான். ஆனால் பள்ளிக்கூடத்திலே டெஸ்ட் வைத்தால்  அங்கே பொய் முழிக்கிறான் ” என்று தனது இரண்டாவது வகுப்பில் படிக்கும் குழந்தையைப் பற்றி ஆசிரியர்களிடம் குறை சொல்லாத பெற்றோர்கள் மிகக் குறைவு.

    படித்தது எப்படி மண்டையில் ஏறுகிறது? அது எப்படி நினைவில் அமைகின்றது? எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றது? மறந்து போவதற்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா? மறந்து போவதற்கும் சூழ்நிலைகளுக்கும் சம்பந்தம் உண்டா? நினைவில் வைத்துக் கொள்ளுதல் ஒரு கலையா? அது சிலருக்கு மற்றும் கிடைத்த வரமா? பல கேள்விகள் நம் முன்னே எழுகின்றன?

    ஒருவர் கற்கும் முறைக்கும் அந்த கற்றல் நினைவில் அமைவதற்கும் நெருக்கமான உறவு உண்டு என்று கற்றலில் ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    கற்கும் முறைகளைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

    1. visual Learners ( கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்ளுபவர்கள்)
    2. Auditory Learners (காதுகளால் கேட்டுக் கற்றுக்கொள்ளுபவர்கள் )
    3. Kinesthetic Learners

    (செயல் முறைகளால் கற்றுக்கொள்ளுபவர்கள்)

    இதில் ஏதோ ஒரு முறையில் வல்லமை பெற்றவர்கள் மற்ற முறைகளால் கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களுடைய ஆர்வம், திறன், கற்கும் நேரம், கற்றலின் சாதனை ஆகியவை பெருமளவில் பாதிக்கப் படுகின்றன.

    உதாரணமாக, கண்ணால் பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களின் சில பொதுவான  பண்புகள் :

    1. இவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே படித்துக்கொண்டிருப்பார்கள். அதிகமாக இடத்தை விட்டு விலக மாட்டார்கள்.
    2. இவர்கள் புத்தகத்தை பார்த்த வண்ணம் இருப்பார்கள். படிக்கும்பொழுத்து மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.
    3. இவர்கள் கவனம் புத்தகத்தில் இருப்பதால் சுற்றி நடக்கும் செயல்களால் அதிகம் பாதிக்கப் பட மாட்டார்கள்.
    4. கவனச் சிதறல்கள் இவர்கள் உணர்வுகளை பாதிக்கும்.
    5. படிக்கும் பொழுது தங்கள் புத்தகங்களில் கோடுகளாலோ அல்லது வரைபடங்களாலோ குறிப்புகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.

    6.வகுப்பறைகளில் ஆசிரியர்கள்                                           சொல்லிக்கொடுப்பதைக் கேட்காமல் கரும்பலகைகளையோ அல்லது சன்னல்கள் வழியாக வெளியே நோட்டம் விடுவது இவர்களுக்குப் பழக்கம்

    1. படங்கள் வரைதல், அலங்கரித்தல், எழுதி காண்பித்தல் ஆகியவற்றில் வல்லுநர்கள்.
    2. இவர்கள் கையெழுத்து பொதுவாக அழகாகவும், தெளிவாகவும் இருக்கும். புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருக்கும்

    மாற்றாக,செவிகளை அதிகமாக பயன்படுத்திக் கற்றுகொள்ளுபவர்கள் (Auditory Learners ) பின் பற்றும் சில பண்புகள் :

    1. பொதுவாக இவர்கள் படிக்கும் பொழுது வாய்விட்டு சத்தமாகப் படிப்பார்கள்.
    2. தான் படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆர்வம் இவர்களுக்கு உண்டு.
    3. படிக்கும் பொழுது வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தால் இவர்களிடம் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புண்டு.

    ‘4.படிக்கும்பொழுது பாடல்கள் கேட்பது, நடுவே தொலைக்காட்சிகளை பார்ப்பது அவர்களுக்கு கைவந்த கலை.

    1. ஆசிரியர்களிடமோ, மற்றவர்களிடமோ கேள்விகள் கேட்பதும், விளக்கங்கள் நாடுவதும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
    2. வகுப்பறைகளில் மற்றவர்களோடு அடிக்கடி பேசுவது , ஒலிகள் எழுப்புவது, தங்கள் பேச்சினால் மற்றவர்கள் கவனத்தைத் தம் பக்கம் ஈர்ப்பது இவர்களுக்குப் பிடிக்கும்
    3. . பள்ளிகளின் விழாக்களில் பேசுதல், பாடுதல், விழாக்களை ஒருங்கிணைத்தல், விருந்தாளின் விருந்தோம்பல் ஆகியவற்றில் வல்லுநர்கள்.
    4. இவர்கள் கையெழுத்து ஒழுங்கின்றி கோணலாக (slanting and wavy) இருக்க வாய்ப்புண்டு. கேள்விகளுக்கான பதில்களை முன்னுக்குப் பின்னாக எழுதுவது இவர்கள் வழக்கம்.

    இதற்க்கு முற்றும் மாற்றாக, செயல் முறையில் கற்போர் (Kinesthetic learners ) கீழ்கண்ட பண்புகளை பிரதிபலிக்கக் கூடியவர்கள்:

    1. இவர்கள் பொதுவாக ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க மாட்டார்கள்.. நடந்து கொண்டே படித்தல் இவர்களுக்குப் பிடிக்கும்.
    1. இவர்களுக்கு நடப்பதற்கு அதிக இடம் தேவைப் படுவதால் வீட்டில் மொட்டை மாடி, பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகளில் படிப்பதை விரும்புவர்.
    1. வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தால் கால்களை நீட்டிக்கொண்டோ, மடக்கிக்கொண்டோ, படுக்கையில் படுத்துக்கொண்டோ, சோபாக்களில் முடங்கிக்கொண்டோ படிப்பது இவர்களுக்கு வழக்கம்.
    2. வகுப்பறைகள் ஒரு இடத்தில் மாறாது சுற்றிக்கொண்டோ அல்லது ஆசிரியர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் எடுபிடி வேலைகள் செய்வதோ இவர்களுக்கு மனநிறைவைத்த தரும்.
    3. இருக்கும் இடத்தில் பென்சிலாலோ அல்லது வேறு உபகாரணங்களோ ஓசைகள் எழுப்புவது, தாளங்கள் போடுவது, பொருள்களை அடிக்கடி இடம் மாற்றுவது இவர்களுக்கு விருப்பமான செயல்.
    4. பள்ளிகளில் ஓடி ஆட்டி வேலை செய்வது, உடல் பயிற்சி மற்றும் பந்தயங்களில் கலந்து கொள்ளுதல், நாடங்களில் நடித்தல், தலமைப் பொறுப்புக்கள் ஏற்பது இவர்களுக்குப் பிடிக்கும்.
    5. இவர்கள் புத்தங்கள், அலமாரிகள் அனைத்தும் அநேகமாகத் தாறுமாறாக இருக்கும்.
    6. நோட்டுப் புத்தங்கள் அட்டைகளில் எழுதுவது, ஒரு ஒழுங்கான பாங்கின்றி எழுதுவது அவர்களின் பொதுவான பழக்கம்.

    இவ்வகையான கற்றல் முறைகள், அதனோடு சேர்ந்த பழக்க வழக்கங்கள், கற்போரின் திறன், கற்களின் ஆழம், நினைவாற்றல் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நினைவாற்றல்களையும் கற்றலின் திறன்களையும் எவ்வாறு சிறப்பிக்கலாம் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • மீன்கள் பெயர் நிலாக்கள்

    ராஜகவி ராகில்

    ‘ இந்தச் சூரியன் இப்படியே நிற்கக் கூடாதா ?’
    என் ஏக்கம் பெருமூச்சானது.

    இன்று ‘யூனிவர் சிட்டி ‘ வாழ்க்கை
    எனக்கு முற்றுப் புள்ளி தினம் .

    சோகத்துடன் அவிழ்ந்து கொண்டிருந்தது
    பிரியாவிடை விழா .

    எல்லோரும் செயற்கைப் புன்னகை தேடி
    தோற்றுக் கொண்டிருந்தார்கள் .

    ஒருகடல் கண்ணீர்
    எனக்குள் .

    சில வருடங்களின் சேமிப்பு
    தீர்ந்து போகிறது இன்றோடு .

    என் உடல் விழா மண்டபத்தில் இருந்தாலும்
    இதயம் அலைந்தது .

    எனது உடலில் எதுவுமே துடிக்கவில்லை
    உன்னைத் தவிர .

    ‘ இப்பொழுது ஒரு கவிதை ‘

    ‘துளியாக வந்தேன்
    கடலாகச் செல்கிறேன்

    இந்த வானம்
    வெற்றிடமாகச் செல்கிறது
    என் நிலா இன்றி ‘

    ஒரு நண்பனின் காதல்
    கண்ணீராக வடிந்து முடிந்தது .

    என் அருகே நீ பூத்திருந்தாய் .

    ‘ எனக்குள் பூத்திருப்பதை நீ பார்க்காமல்
    இருக்கிறாயே ‘

    என் இதயம் நீர் சுரந்தது .

    ‘ கவிதை சூப்பர் ‘
    என்றாய் நீ .

    ‘ இது கவிதை இல்ல ….அவன் தன் உயிரை
    அவளிடம் பரிமாறியிருக்கிறான்’ என்றேன் .

    ‘ எப்போ திருமணம் ?’
    திடீரெனக் கேட்டேன் .

    ‘யாரோடு ?’

    ‘ என் வாழ்க்கையில திருமணமே கிடையா …’
    நான் வெடித்துப் போனேன்
    துடித்துப் போனேன் .

    பிரியா விடை
    பிரிந்தது .

    ஒரு மரத்தடியில் சோகத்துடன் ஒதுங்கினேன்
    நீ பக்கத்தில் வந்தாய் .

    ‘ நான் செல்லட்டா …’
    திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தாய் நீ .

    ‘ திருமணம் செய்யுறதில்ல எண்டு ஏன் சொன்னீங்க …?’

    ‘ ஏற்கனவே எனக்குத் திருமணம் ஆகிட்டு ‘
    நான் மீண்டும் துடித்துப் போனேன் .

    ‘ உங்களை மனசால மணமுடிச்சி ரண்டு வருசமாச்சி ‘

    நான் உயிரால் உன் கை பற்றினேன் .

    ‘ நாம் பெஸ்ட் கிளாஸ்ல பாசாகிட்டோம் ‘
    என்றாய் நீ .

    ‘ காதல விட கஷ்டமான எக்ஸாம்
    வேறொண்டும் இல்ல ‘

    இனி
    வாழ்க்கை இனிப்புதான் என்றாய்
    முத்தத்தால்.

    Share
  • சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே! –பகுதி-3 (நிறைவுப் பகுதி)

    பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

     ‘பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை–3

    சீவன் சிவமாதல்

    எங்கும் நிற்றல் அல்லது எங்கும் கலந்திருத்தாலே ((வியாபிக்குந் தன்மை-வடசொல்) ‘மெய்’மை எனப்படும் தன்மை. இத்தன்மை உடைய ‘உயிர்’ அறியாமை என்னும் ஆணவத்தின் இயல்பான கலப்பினால், கட்டுண்டு கிடப்பதைக் கண்டு, கருணையால் அவ்வுயிரை இறைவன் மாயையினால் கட்டி உருவாக்கப்பட்ட ஊனுடம்பில் செலுத்தி அறிவு பெரும் பயணத்தைத் துவக்கி வைக்கின்றான். அப்பயண முடிவில், ஆணவம் என்னும் அறியாமைக் கட்டிலிருந்து விடுபடும் உயிர் மாயக்கட்டினாலாகிய உடலினின்றும் விடுதலை பெற்று எங்கும் கலந்திருக்கும் இறைவனுடன் கலந்து தானும் எங்கும் கலந்திருத்தல் தன்மையைப் பெறும். இதுவே, “சீவன் சிவமாதல்” எனப்படும்.

    ‘ஆண்டவன்’ உயிர்களின் சலைவைத் தொழிலாளி

    இது, உடையின் சேர்ந்த அழுக்கை நீக்க, உவர்மண் என்னும் வேறொரு அழுக்கை அத்துணியுடன் சேர்த்துத் துவைப்பதற்கு இணையானது. இங்கு, ‘ஆணவம்’ என்னும் அழுக்கை ‘உயிர்’ என்னும் துணியிலிருந்து நீக்கவே, ‘ஊனுடம்பு’ என்னும் உவர்மண்ணாலாகிய அழுக்கை உயிருடன் கலந்து ‘இறைவன்’ என்னும் சலைவைத் தொழிலாளி ‘வாழ்வு’ என்னும் காலநதியில் துவைத்துத் தூய்மை என்னும் ‘மெய்’த் தன்மையை உயிருக்குத் தருகின்றான்.

    உயிரின் இயல்பு “சார்ந்தவண்ணம் ஆதல்”

    இப்பண்பிற்கு மாறானவகையில், உயிர் தன் இயல்பான “சார்ந்தவண்ணம் ஆதல்” தன்மையால் பொய்யுடலையே என்றும் நிலையானது என்று மயங்கும். அத்தகைய இயல்படைந்தவர்களை “பொய்யர்” என்கின்ற வரையறை திருவாசகத்தால் தரப்படுகின்றது.

    எங்கும் கலந்து நிற்கும் மாறாத வானம்

     “திண்திறல் தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் –திருவண்டப்பகுதி:22

    இங்கு என்பது மாயைக்கு அப்பாற்பட்ட, நிலைப்பேறு பெற்றமையால் ‘பொய்தீர் வான்” என்னும் அடைமொழியை “வான்” பெறுகின்றது. எனவே, எப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும் தன்மையே ‘பொய்’ என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டிருக்கிறது. அத்தகைய, மாறாத ஆகாயத்தில்(பொய்தீர் வானில்) எங்கும் கலந்து நிற்கும் தன்மையை (வியாபிக்குந் தன்மை அல்லது வியாபகம் என்பது வடசொல்) வைத்தவன் இறைவன் என்கின்றார் பெருமான்.

     

    உயிர்களின் SUPERSTAR இறைவன்தான்!

    இறைவன் நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்கு கெட்டவன்! ஒளியும் அவன்தான்! இருளும் அவன்தான்! மெய்ம்மையும் அவன்தான்! பொய்மையும் அவன்தான்! (இது ‘கபாலி’யின் பஞ்ச் டயலாக்! –அவன் கபாலீஸ்வரன் அல்லவா?) என்கின்றார் மணிவாசகப் பெருமான். இறைவனை ‘ஒளி’ என்பது சரி! இறைவன் எப்படி ‘இருள்’ ஆவான்? இறைவனே ‘பொய்மை’ ஆனால், நாம எப்படி இருந்தா என்ன? குழப்பமாக இருக்கிறதா? அது என்ன என்று பார்க்கலாம்.

    பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் – பொற்சுண்ணம்:12

    மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் –பொற்சுண்ணம்:20

     

    இங்கு, மேலே குறிப்பிட்டவாறு, பொய்யுடலையே என்றும் நிலையானது என்று மயங்கும் இயல்படைந்த “பொய்யர்”களுக்கு, இறைவன் மாயையில் கலந்திருக்கும் காரணத்தால், அவன் பொய்யனாகவே காட்சி அளிப்பான். எனவே, “பொய்யர் தம் பொய்யனை” என்றார் பெருமான். அந்நிலை மாறிய மெய்யன்பர்களுக்கு அவன் “மெய்யனாய்”த் தன்னை வெளிக்காட்டித் தோன்றுவான். எனவே, “மெய்யர் மெய்யை” என்றார் பெருமான். உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்ப, இறைவன் ஒருவனே “மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆகி” உயிர்களைக் கடைத்தேற்றுவான் என்கிறார் பெருமான். இதையே,

     “சோதியனே, துன்னிருளே, தோன்றாப் பெருமையனே!” –சிவபுராணம்

     என்று முன்னர் சிவ புராணத்திலும் கூறினார் பெருமான். ஒளி வடிவான சோதியனும் அவனே, திணிந்த இருளாம் துன்னிருளும் அவனே. உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவன் கருணை பல்வேறு நிலைகளில் வெளிப்படுகின்றது.

     ‘கெட்டவனுக்கு கெட்டவன்’னா ‘வேண்டுதல்-வேண்டாமை இலான்’னு திருவள்ளுவர் ஏன் சொல்கிறார்?

     முரண்பாடு ஒன்றுமில்லை! இதையே திருநாவுக்கரசர் பெருமானும் பின்வருமாறு சொல்கிறார்:

    சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லால்

    நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்

    குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர்

    நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

     

    வேண்டுதல் -வேண்டாமை இல்லாது (சலமிலன் சங்கரன்) எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தன் திருவடிப் பேறாகிய உயர்நலன் நல்கான். ஏனெனில், அடியவர்கள் இறைவனையே பற்றுக்கோடாகக் கொள்வதால், வினைப் பயன்களிலிருந்தும், உலகியல் பொய்யடிமைகளிலிருந்தும் விடுபட்டு, இறைவனின் திருவடிப்பேறு பெறும் உயர்நிலையை அடைகின்றார்கள். ஏனையோர், இறைவழிபாடு செய்யினும் கூட, இறைவனைப் பற்றாது, பொய்யின்பங்களாகிய உலக நலன்களையே விரும்பிப் பெற்று, வினைகளை மேலும் மேலும் தேடிக்கொள்வர். பழவினை காரணமாய்ப் பிறவிபெற்றோர், மேல்வினைகளையும் தேடிக்கொள்வதால், அவரவர்களுடைய வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான் இறைவன். அடியவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர் அல்லராயினும், இறைவனையே பற்றுக்கோடாகக் கொள்வாராயின் நற்குலத்துக்குரிய திருவடிப்பேறு நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும் என்கிறார் அப்பர் பெருமான்.

     

    ‘பொய்’ – உலகியல் முறை திருவாசக வரையறை–4

    உண்மை(true)க்கு எதிர்ச்சொல் பொய் என்ற உலகியல் முறையில் பயின்ற திருவாசகப் பாடல்கள் இரண்டை இங்கே காணலாம்.

    பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. –நீத்தல் விண்ணப்பம்:6

    பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்

    பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. – எண்ணப்பதிகம்:2

     

     ‘பொய்’ என்ற சொல்லை இந்த நான்கு வகைகளில் பொருள் கொண்டு திருவாசகம் பயிலப்பட வேண்டும். இத்துணைத் தெளிவாக, ‘பொய்யடிமை” குறித்த மெய்யியல் விளக்கம் வேறு எந்த திருமுறையிலும் காணப்படாமை ஒன்றே சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டர் தொகையில் “பொய்யடிமையில்லாப் புலவர்” என்ற அடைமொழியோடு மாணிக்கவாசகரைக் குறித்து குறிக்க எதுவாய் இருந்திருக்க வேண்டும்.

    ‘பொய்’ என்ற சொல் பயின்றுவரும் ஏனைய திருவாசக வரிகள் வாசகர்கள் அறிந்து கொள்ள இங்கு தரப்பட்டிருக்கின்றன.

    கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

    பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் – திருச்சதகம்:1

     

    போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட்கொள்ளும் வள்ளல் –திருச்சதகம்:63

     

    பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி -திருச்சதகம்:69

     

    ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்

    பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் -திருச்சதகம்:73

     

    வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே

    ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ –திருச்சதகம்:74

     

    விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் –திருச்சதகம்:81

     

    சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.  –திருச்சதகம்:85

     

    புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு –திருச்சதகம்:86

     

    தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. -திருச்சதகம்:89

     

    யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால்

    வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே –திருச்சதகம்:90

     

    பொய்யி லங்கு எனைப் புகுதவிட்டு நீ போவதோ

    சொலாய் பொருத்தம் ஆவதே. –திருச்சதகம்:92

     

    பொருத்தம் இன்மையேன் பொய்மை உண்மையேன்

    போதஎன்று எனைப் புரிந்து நோக்கவும் -திருச்சதகம்:93

     

    கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி

    பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி

    வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. –திருச்சதகம்100

     

    பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட 

    மெய்யவனே விட்டிடுதி கண்டாய் –நீத்தல் விண்ணப்பம்:7

    புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்

    பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் –நீத்தல் விண்ணப்பம்:28

     

    அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்

    பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே –திருக்கோத்தும்பி:5

     

    பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்

    மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட –திருக்கோத்தும்பி:17

     

    புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த

    மெய்ச்சுடரே –கோயில் திருப்பதிகம்:3

     

    பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் புகுமலர்க்கழலிணையடி

    பிரிந்தும் –செத்திலாப் பத்து:1

     

    பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை –அதிசயப்பத்து:7

     

    தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி – அதிசயப்பத்து: 8

     

    அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே – அதிசயப்பத்து:10

     

    புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் –அச்சப்பத்து:1

     

    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

    புழுத்தலைப் புலையனேன் தனக்குச் –பிடித்தபத்து:3

     

    புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும் –சென்னிப்பத்து: 8

     

    போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. –யாத்திரைப்பத்து:1

     

    கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

    போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. –யாத்திரைப்பத்து:3

     

    போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே –யாத்திரைப்பத்து:9

     

    வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்

    பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய  –திருவெண்பா:1

     

    பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே

    மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் –அச்சோபதிகம்:3

     

    அறுபத்துமூவரில் மாணிக்கவாசகர் ஒருவர்

    திருவாசகத்தில் ‘பொய்யடிமை’ தீர்க்கமாகக் காணுமளவு வேறு எந்தத் திருமுறையிலும் இல்லை. திருவாசகப் பாடல்கள் 41 ‘பொய்யடிமை’ குறித்துப் பேசுகின்றன. அப்பாடல்களில் 47 முறை இச்சொற்கள் பயின்று வந்துள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளக் கருத்தை சேக்கிழார் பெருமான் ஒருவரே தெளிவாக விரித்துப் பாடியுள்ளார். எனவே, மாணிக்கவாசகரே திருத்தொண்டர் தொகையில்   சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்ட தனியடியார் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று திண்ணமாக நிறுவப்பட்டுள்ளது. அறுபத்துமூவரில் மாணிக்கவாசகர் ஒருவர் என்பதும் மிகத் தெளிவு.

    குழப்பங்களுக்குக் காரணம் என்ன?

    மனதில் கை வைத்துச் சொல்லுங்கள்! இது ஒன்று மட்டும் காரணமாக இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கிறித்துவ சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்த ஆங்கிலேய அருட்தந்தை ‘G.U. போப்’ அவர்களின் உள்ளத்தை உருக்கிய திருவாசகம், அவர்மூலம் உலகெங்கிலும் உள்ளவர்கள் இதயங்களைச் சென்றடைந்தது.

    சைவ உலகம் செய்த தவக்குறைவு

    ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று சமயவேறுபாடின்றி அனைவரும் போற்றும் திருவாசகத்தின் உருக்கமான பாடல் தன்மைகள் குறித்து சேக்கிழார் பெருமான் நிச்சயம் அறிந்திருப்பார். சமயாசிரியர் நால்வர் என்று சைவஉலகம் போற்றிப் பரவும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வரில் நாலாவதாகப் போற்றப்படுபவரான மாணிக்கவாசகரைப் பற்றி சேக்கிழார் பெருமான் இரண்டே பாடல்களில்தான் பாடியுள்ளார். திருஞான சம்பந்தப் பெருமான் புராணத்தை 1256 பாடல்களில், அதாவது, பெரியபுராணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாடல்களிலும், திருநாவுக்கரசுப் பெருமான் புராணத்தை 429  பாடல்களிலும், சுந்தரர் பெருமான் புராணத்தை 203 பாடல்களிலும் பாடியுள்ள சேக்கிழார் பெருமான் நாலாமவரான திருவாசகம் உடையாரின் புராணத்தைப் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்ற அளவில் மட்டும் 2 பாடல்களில் பாடிவிட்டு, அவர்தம் புராணத்தை விரித்துப் பாடாதது சைவஉலகம் செய்த தவக்குறைவுதான்.

    திருமூலநாயனாரைப் பற்றி திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடவில்லை

    காலத்தால் முற்பட்டவரான திருமூல தேவ நாயனாரைப் பற்றிய குறிப்புகள் திருஞானசம்பந்தர், அப்பரடிகள் பாடல்களில் காணப்படவில்லை. அவர்கள் காலத்தில், திருமூலரைச் சைவர்கள் பெருமளவு பின்பற்றவில்லை. திருமூலரின் சிவயோகநெறியைக் காட்டிலும், திருத்தொண்டு சார்ந்த பக்திநெறியே சைவ உலகில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், ஏழாம் நூற்றாண்டில், சிவயோகநெறியைச் சைவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது சுந்தரர் ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று பாடியதில் இருந்து தெளிவு. சுந்தரர் திருமூலரைத் திருத்தொண்டர் தொகையில் பாடியதால், 27 பாடல்களில் திருமூலர் புராணத்தைப் பாடியுள்ளார் சேக்கிழார் பெருமான். அந்த அளவு முக்கியத்துவம் சேக்கிழார் காலத்தில்கூட மாணிக்கவாசகர் சைவ உலகில் பெறவில்லை என்பதையே சேக்கிழார் இரண்டு பாடல்களில் மட்டும் பாடிச் சென்றமையால் அறிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணங்கள் ஆய்வுக்கு உரியது.

    சமய மறுமலர்ச்சிக் காலத்தில் யோக நெறியும், ஞான நெறியும் முதலாவதாகக் கொள்ளப்படவில்லை .

    கடைச் சங்ககாலச் சமண, புத்த சமயிகள் தமிழர்களாக இருந்தமையால், அவர்கள் தமிழில் சமயப் பரப்புரை செய்து, தமிழைப் போற்றினர். ஆயினும், இறைக்கொள்கை இன்றி ‘நிர்வாணம்’(துறவு) என்னும் விடுதலையை அவர்கள் பெரிதும் பரப்புரை செய்தமையால், காலப்போக்கில், தமிழரல்லாத களப்பிரர்களிடம் அரசு எளிதில் வீழக் காரணமாய் அமைந்தது. களப்பிரர் வசம் தமிழ்மண் வீழ்ந்ததன் பின், தமிழரல்லாத சமண, புத்தக் களப்பிரர்கள் வடமொழிக்கே முதலிடம் கொடுத்தார்கள்; தமிழ் புறந்தள்ளப்பட்டது. தமிழ்ச் சமூக மீட்டெடுப்பு இயக்கமாக பக்தி இயக்கம் எழுச்சிபெற்ற 6வது 7வது நூற்றாண்டுகளில், இல்லறம், பக்தித் தமிழ் என்ற இரண்டையும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இறைவன் அம்மையப்பனாக வழிபடப்பட்டான்.

     

    களப்பிரரிடம் தமிழகம் – தமிழனின் இருண்ட காலம்

    அகவாழ்வு, புறவாழ்வு என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் உயிரின் முழுவிடுதலையாம் ‘முத்தி’ என்னும் துறக்கம் உலக வாழ்வைத் துறந்த துறவியரே பெறத்தக்கது என்ற சமண, சாக்கியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பெருமளவு இல்லறம் துறக்கும் நிலை ஏற்பட்டது. அச்சூழல், தமிழரல்லாத சமண, சாக்கிய களப்பிரர்கள், போர்கள், உயிரிழப்புகள் அதிகமின்றி, தமிழகத்தைக் கைப்பற்ற ஏதுவாயிற்று. தமிழ்மொழி ஆதரிப்போர்இன்றி நிலைகுலைந்ததால், தமிழும் சைவமும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

    தமிழகத்தில் சமண, புத்த மதங்களே பெருமளவு வடமொழித் தாக்கத்தைக் கொண்டுவந்தன

    களப்பிரர் பிடியிலிருந்து தமிழகம்  நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மீண்டாலும், ஏற்கனவே தமிழகத்தில் வேரூன்றிவிட்ட பாலி, பிராகிருத வடமொழிகளின்  தாக்கத்திலிருந்து மீளவிடாமல் சமண சாக்கிய மதங்களைத் தழுவியிருந்த தமிழ் மன்னர்களைப் பயன்படுத்தி சமயவாதிகள் தடுத்தனர். தமிழ்மொழி வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது.

    ‘என்னை நன்றாக இறைவன் செய்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ 

    என்று பாடிய திருமூலரின் திருமந்திரம் புதைக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டிய நிலையிலேயே தமிழகம் அன்று இருந்தது. மாணிக்கவாசகரின் காலத்தில் புத்தமதத்தின் தாக்குதல் அதிகம் இருந்ததை அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன.

    சொர்க்கம் மண்ணிலே! காதல் செய்வீர்! அப்பரும், சம்பந்தரும் நடத்திய காதல் பாடம்!

    ஐந்தாம்,ஆறாம் நூற்றாண்டில் ஓரளவு காலூன்றிய சைவம், தமிழகமெங்கும் ஊர் ஊராகப் பயணித்து, அவ்வவ்வூரிலுள்ள சிவபெருமானைத் தம் தேவாரங்களால் பாடி எழுச்சியூட்டிய  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவரின் இடையறாப் பங்களிப்பாலேயே தமிழகம் சைவத்துக்கு மீண்டது எனலாம்.

    ஐந்திணைகளிலும் அகப்பாடல்கள் பாடிக் காதல் வாழ்வு வாழ்ந்து, உலகத்துக்கே அகப்பாட்டு பாடி  வழிகாட்டிய தமிழர்களுக்கே மணவாழ்வின் தேவை குறித்து இவ்விரு சமயாசிரியர்களும் கற்றுக்கொடுக்க வேண்டிய காலமாக ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் இருந்தன என்பது நமக்கெல்லாம் பெருவியப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை என்பதைப் பின்வரும் தேவாரப் பாடல் கூறும்:

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

    எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

    கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே! – திருஞானசம்பந்தர் தேவாரம்.

    இப்பாடலின் பொருள்: சுவர்க்கம் என்பது வானில் பெறும் வாழ்வன்று; இல்லறத்தானாக, மனைவி, குழந்தைகளுடன்  இம்மண்ணிலேயே நாளும் நல்லவண்ணம் வாழ்ந்து, சிவபுண்ணியம் என்னும் நற்கதியாம் சுவர்க்கத்தை நீங்கள் அடையலாம். அதற்கு இம்மண்ணில் யாதொரு குறைவுமில்லை. அதோ, சீர்காழிஎன்னும் கழுமலவளநகரிலே உறையும் நம் ஈசன் சிவபெருமானே பெண்ணின் நல்லாள் உமையோடு இருக்கின்றான். ஆகவே, இல்வாழ்வாம் பெருவாழ்வு வாழுங்கள் என்பது தொக்கிநிற்கும் பொருள்.

    இதையே நாவுக்கரசர் சொல்லும் அழகைப் பாருங்கள்:

    மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்

    போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

    யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

    காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்

    கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.     –திருநாவுக்கரசர் தேவாரம்.

     

    காணப்படுவனயாவும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து சிவமும், சக்தியுமாய் காட்சியளிப்பதைக் கண்டு வியந்து பாடுகின்றார். இப்பாடல் பத்துத் திருவையாறு திருத்தாண்டகப் பதிகப் பாடல்களில் முதலாவது பாடல். மாதர் பிறைக் கண்ணியான் சிவனை மலையான் மகளான உமையோடும் பாடி, இறைவனுக்கு நீராட்டு செய்ய அடியவர்களெல்லாம் நீர் சுமந்துகொண்டு திருக்கோயிலுக்குள் செல்கின்றார்கள்; அவர்கள் பின்னால் நானும் அமைதியாக அடியெடுத்துச் சென்று ஐயாறு கோயிலை அடையும்போது, அங்கு, காதல்கொண்ட பெண்யானையுடன் ஆண்யானை வருவதைக் கண்டேன்; அவற்றில் நான் இதுவரைக் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை  கண்டேன் என்கின்றார் அப்பர் பெருமான். எத்துணை அற்புதமாக, நுணுக்கமாகக் ஆணும் பெண்ணுமான காதல் வாழ்க்கைக்கு இறைஒப்புதல் அளிக்கிறார் பாருங்கள்! மற்ற ஒன்பது திருவையாறு பாடல்களிலும் இத்தகைய காட்சிகளைக் காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

    இப்போதும், தமிழக சைவப் பெருமக்களின் திருமண அழைப்பிதழ்களில் இவ்விரண்டு பாடல்களையும் அச்சிடுகின்றார்கள். இது, அந்நாளையப் பண்பாட்டுத் தொல்லெச்சங்களாகும்.

    திருஞானசம்பந்தரை முதலாவது சைவசமயாசிரியாராகக் கொள்வதின் காரணம்

    திருவடிப்பேறு என்னும் முத்தியடைய துறவு ஒன்றே வழியன்று; வாழ்வன்று; இல்லறத்தானாக, மனைவி, குழந்தைகளுடன்  இம்மண்ணிலேயே நாளும் நல்லவண்ணம் வாழ்ந்து, சிவபுண்ணியம் என்னும் நற்கதியாம் முத்தியை நீங்கள் அடையலாம். சிவபெருமானே உமையொரு பாகனாக உங்களுக்கு வழிகாட்டுகிறான் என்று தேவாரங்கள் பாடி சம்பந்தரும், அப்பரும் சைவத்தை நிலைநாட்டித் தமிழரை இல்லற வாழ்வுக்கு மடைமாற்றினர்; சைவமும் தமிழும் தழைக்கச் செய்தனர். திருஞானசம்பந்தப் பெருமான், வேள்வியியற்றும் அந்தணர் குலத்தில் பிறந்திருந்தும், வடமொழியைப் போற்றாது தன்னைத் தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன் பாடல்களில் பதித்துத் தமிழின் புகழ் ஓங்கச்செய்தார். மூவரில், திருஞான சம்பந்தர் ஒருவரே அவர்காலத் தமிழகத்திலுள்ள அனைத்து சிவாலங்களையும் பாடியவர். இந்தப் பங்களிப்பே அவரைத் தமிழர்கள் சமயாசிரியர் நால்வரில் முதலாசிரியராக கொள்ளக் காரணம். அவரின் பங்களிப்புப்பற்றியும், திருஞான சம்பந்தர் ஏன் அத்தகைய சிறப்புக்கு உரியவர் என்பது பற்றியும் ஒரு ஆய்வு நூலே எழுதுமளவுக்கு புதையுண்ட செய்திகள் உள்ளன.

    மாணிக்கவாசகர் நாலாவது சைவசமயாசிரியராக பிற்காலத்தில்தான் ஏற்கப்பட்டுள்ளார்

    வடமொழி ஆதிக்கத்தை எதிர்கொள்ளல், இல்லறவழியில் தமிழர்களை மடைமாற்றுதல், சமண, சாக்கியர்களை எதிர்கொள்ளல் போன்ற ‘திரோதானம்’ என்னும் ‘உலகியல் வழி சிவனை அடைதல்’ வழி மிகமுக்கியமாகச் சைவத்தில் கொள்ளப்பட்டதால், சிவஞானத்தையே பெரிதும் பாடும் திருவாசகமும், புலனடக்கம், யோகநிலை வலியுறுத்தும் திருமந்திரமும் பாடிய ஆசிரியர்களை அக்காலகட்டத்தில் இவர்களால் வெளிப்படையாகக் பாடப்படப்படவில்லை; திருமூலரை பெயரிட்டும், மாணிக்கவாசகரைப் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்புப் பெயர்கொண்டும் சுந்தரமூர்த்தி நாயனாரே முதன் முதலில் பாடினார். மேலும். சேக்கிழார் காலத்தில், மாணிக்கவாசகரை வீரசைவர்கள் தங்கள் குருவாகக் கொண்டிருந்தமையால், அவரும் வெளிப்படையாக மாணிக்கவாசகரைப் பாடவில்லை என்று கொள்வதில் தவறில்லை. பட்டினத்துஅடிகள்தான் முதன்முதலில் மாணிக்கவாசகரைப் பெயரிட்டுச் சைவத்தில் பதிவு செய்தார். அதன் பின்பே, மாணிக்கவாசகர் நாலாவது சைவசமயாசிரியராக ஏற்றனர் சைவர்கள்.

    திருத்தொண்டர் தொகை வரிசைப்படி மாணிக்கவாசகர் திருவுருவம் சிவன் கோவில்களில் அறுபத்துமூவரில் நிறுவப்படவேண்டும்

    சைவர்கள் திருவாசக முற்றோதுதலைக் சிவன் கோயில் பிரகாரங்களில் நிகழ்த்தினர்; என்றாலும், அம்மையப்பர் சன்னிதானத்தில் திருவாசகம் இடம்பெற வெகுகாலம் பிடித்தது. சைவசமயாசிரியரில் நாலாவது சைவசமயாசிரியராக மாணிக்கவாசகரை ஏற்றுக்கொண்ட சைவர்கள், அத்தகைய உயர்ந்த இடத்தைப் பெற்றவர் 63 நாயன்மாரிலும் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும்.  தம் தவறுகளைத் திருத்தி, சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில் கூறியவாறும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராண விளக்கத்தின்படியும் மாணிக்கவாசகரை அறுபத்துமூவரில் ஒருவராக வைத்து வணங்கவேண்டும்.

    இதே தவறைச் சைவர்கள் இன்று வள்ளலாருக்கும் செய்கின்றனர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ‘திருவருட்பா அன்று; மருட்பா” என்று வெள்ளையர்கள் நீதிமன்றத்தில் வழக்கே தொடுத்தார். சைவம் இன்னும் நிறைய மாற்றங்களைச் சந்திக்கும். திருவருட்பா சைவத்திருமுறைகளுள் முற்றிலும் ஏற்கப்படும் நாள் வெகு அருகில் உள்ளது.

    நிறைவாக,

    அரசர்கள் ஆதரவு, அரசின் சமயம், கட்டாய மதமாற்றம், பரப்புரை மூலம் சமயமாற்றம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் நுழைந்த, இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றாத, கிறித்துவம், இசுலாம் ஆகிய சமயங்களுக்கு மாறிய தமிழர்கள், அம்மதங்களிலேயே தொடர்ந்து இருந்து வருவதைப் பார்க்கும்போது, சமண, சாக்கிய மதங்களைப் பெருமளவு கைக்கொண்டிருந்த தமிழர்கள் முற்றிலுமாக அவைகளைக் கைவிட்ட காரணங்கள் ஆய்வுக்குரியன. தத்துவ அளவில், இறைக்கொள்கை இல்லாததும், துறவு மட்டுமே முத்தி தரும் என்ற நிலைப்பாடுகளும் தமிழர்களின் இயல்புகளுக்கு மாறானவைகளாலாதால், சமண, சாக்கிய சமயங்களின் முழு வீழ்ச்சிக்கு இவை பெரும்காரணிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். வடமொழி தமிழ் மொழியில் கலக்க சமண, பௌத்த மதங்களின், பிராகிருத, பாலி வடிவங்களே சமஸ்கிருதத்தைக் காட்டிலும் முதற்காரணிகள் என்பதை அறிதல் நலம். சமணத்திலிருந்து மீண்டு, சைவத்துக்குள் வந்த அப்பர் தேவாரப் பாடல்களில் அதிகமாகக் காணப்படும்  வடசொற்களைக் காட்டிலும், அப்பர் காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் வடசொற்கள் மிகப் குறைவு என்ற ஒன்றே இதற்குச் சான்று. தற்காலத் திராவிடச் சிந்தனையாளர்கள் ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற வடஇந்தியத் தத்துவங்களைத் தமிழர்களின் ஆதித் தத்துவங்கள் என்று உண்மைக்குப் புறம்பாக நிலைநாட்ட முயல்கின்றனர்.

    Share
  • மொரிசீயஸ் நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு – வந்தவாசியில் வரவேற்பு விழா –

    வந்தவாசி. ஜூலை.24. மொரீசியஸ் நாட்டின் மோக்கா நகரிலுள்ள
    மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு
    வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில்
    சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
    56752fc1-7c49-432f-9064-7f1103e30c27
    இவ்விழாவிற்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி
    முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன்
    அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் அன் கோ உரிமையாளர்
    இரா.சிவக்குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன்,
    நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    66944f5e-2d84-4ce3-a96e-881c255b794c

    தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் சார்பில் 2000 கிலோ எடையில்,
    4 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட
    திருவள்ளுவர் சிலை கடந்த ஜூலை 17-ஆம் தேதி கன்னியாகுமாரி
    கடற்கரையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தமிழகத்தின் முக்கிய
    மாவட்டங்கள் வழியாக, தலைநகர் சென்னைக்கு வரவிருக்கிறது.
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு வருகை தந்த
    திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்
    சங்கத் தலைவர் அ.மு.உசேன் மலர்த்தூவி வரவேற்றார். வந்தவாசி பழைய
    பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகேயிருந்த திருவள்ளுவர் சிலைக்கு
    பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவர்கள் மலர்த்தூவி வரவேற்றனர்.

    தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உடையார்கோயில்
    குணா, மேனாள் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி,
    துணைத் தலைவர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்ச் சங்க ஆலோசகரும் கவிஞருமான மு.முருகேஷ் ‘பொய்யாப்புலவர் வள்ளுவரின் புகழாரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
    தமிழின் சங்க இலக்கியப் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களையும் கல்வெட்டாய் பொதிந்து நிற்கும் பெருமை நம் திருக்குறளுக்கு உண்டு. எந்த சாதி, மத அடையாளத்தையும் சுமந்து நிற்காமல், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாய் பார்க்கும் சமத்துவத்தை தனக்குள் உள்ளடக்கியதாய் திருக்குறள் இருக்கிறது.
    பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் திருக்குறளை படிக்கும் பிற மொழி அறிஞர்கள், திருக்குறளின் மொழி வளத்தையும், எக்காலத்திற்கும் ஏற்ற அதன் சிறப்பான கருத்தினையும் பாராட்டுகிறார்கள். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று பல்லாண்டுகளாக தமிழ் அறிஞர்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை, மத்தியில் ஆட்சி செய்யும் எந்த அரசும் செவிமடுக்காமலேயே உள்ளது. திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்ப்பதற்கான முன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
    உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய்யின் முயற்சியில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை, சிலரின் தவறான தூண்டுதலால் அகற்றப்பட்டிருப்பதை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் கண்டித்துள்ளனர். தமிழ் அமைப்புகள் உத்தராகண்ட் மாநில முதல்வரை நேரில் சந்தித்து, அவரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் சிலை அரித்துவாரில் கங்கை நதியோரமாய் உள்ள மேளா பவனில் நிறுவப்படுமென்று முதல்வர் கரீஷ் ராவத் உறுதியளித்துள்ளார்.
    1330 குறள்களிலும் ஒரு இடத்தில்கூட தமிழ் என்கிற வார்த்தையே கிடையாது. ஆனபோதிலும், திருக்குறள் உலக்குக்கே தமிழர்களின் வாழ்வியல் தொன்மங்களை எடுத்துச் சொல்லும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழர்களின் அடையாளமாய் இருக்கும் திருக்குறள் தமிழர்களின் வீடுகள் தோறும் இருக்க வேண்டியது அவசியம். நம் வீட்டுப் பிள்ளைகள் திருக்குறளைப் படித்திட வேண்டும். அதன்படி நடந்திட நாம் வலியுறுத்திட வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார்.
    நிறைவாக, சங்கப் பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.
    இணைப்பு; நிகழ்வின் படங்கள்:

    Share