படக்கவிதைப் போட்டி 73 – இன் முடிவுகள்

காயத்ரி பூபதி

13734582_1050429538344578_1049135032_n

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஷாமினி. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

இந்த ஒளி படத்தில் இடம் பெற்றிருப்பவர் பறை கொட்டி இசைக்கும் தொழிலாளி. இவர் கொட்டும் பறைக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

பறையின் பயன்பாடு ஆதிகாலம் தொட்டு இருந்துவந்துள்ளதை சங்க இலக்கியத்தால் அறிய முடிகின்றது. பறை நிலத்தைக் குறிக்கும் குறியீடாக சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பறை கொட்டி முரசறைவிக்கும் வழக்கமும், விலங்கை விரட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

ஆதி காலம் தொட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழரின் பறை, இன்று ஏழை எளிய மக்கள் விரும்பும் பறையாகவே உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் ராதா விஸ்வநாதன்.

செந்தமிழ் நாட்டுக் கலையாகவும், இந்த நாட்டு இசையாகவும் விளங்கிய பறையின் ஓசை நயத்தை நடையழகுடன் சொல்லியிருக்கின்றார் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

பறையின் தொன்மை வரலாற்றையும், பறை இசையின் பயன்பாட்டையும் இசை கருவியிலிருந்து எழும் ஒசை பற்றியும் எடுத்து கூறும் சரஸ்வதி ராசேந்திரன், இசைக்குள் புகுந்து விட்ட சாதிய பார்வையையும் சுட்டிக் காட்டியுள்ளார். கவிஞருக்கு பாராட்டுகள்.

தமிழின அடையாளம்

ஆதித்தமிழன் ஆரம்பித்த இசைமொழி

அச்சம் மகிழ்வென கொண்டாடிய குலத்திற்கு

விலங்கின அச்சத்தை விலக்கிட்ட பறை

கலங்கின நெஞ்சத்தை கரம் உயர்த்திய பறை

காலவெள்ளத்திலும் நிலைத்த இசைக்கலை

பறையாட்டமே தப்பாட்டமாய்………

இறவாப் புகழ்தரும் அஃறிணையின் தோல்

இளைஞா்களுக்கு எழுச்சியூட்டும்

இறந்தும் பாடம் சொல்லும்

இசைக்க எத்தனையோ கருவியிருக்க

இன்றளவும் பறை மனச்சிம்மாசனத்தில்

படித்தவனோ பாமரனோ

பாட்டாலே புரியவைப்பான்

தேங்கிய உணர்வுகள் வெடித்தெழ

வாங்கிய கரங்களில்

ஓங்கியே ஒலிக்கும்

ஒங்கிய இசையால் உலகளக்கும்

தன்னை உருமாற்றி

நாகரிகக் கரங்களில் இசைத்தாலும்

பறைமொழி தான் இன்றளவும்

புதுமொழியாய்………..

பட்டிதொட்டியெல்லாம் பரவிய பறையாட்டம்

தமிழர் கலையென தப்பாமல் முழக்கமிடும் தப்பாட்டம்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பறையை எடுத்துக் கூறி, அதன் தொன்மை தன்மையையும், கால வெள்ளத்தில் நிலைத்து, இன்றுவரை நம் வாழ்வியல் கூறுகளில்  இடம் பெற்றுவரும் தன்மையையும், நாகரிக வளர்ச்சியில் உரு மாற்றத்துடன் பல்வேறு பெயரில் வழங்கப்பட்டுவந்தாலும், தமிழர் கலையான பறை தான் அடிப்படையான இசையாக அமைந்துள்ளதை எளிமையாகவும், நடையழகோடும் எடுத்துக் காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தேடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க