இந்த வார வல்லமையாளர்
செ. இரா.செல்வக்குமார்
இப்பதிவு சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, அருமையான அறிவியல்நூல்கள் எழுதியுள்ள முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
சூலை 2, 2016 அன்று முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் 316-பக்க உயர்கணித நூலொன்றை அனைவரும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி வெளியிட்டுள்ளார் [1].
இந்நூல் அறிவியல்-கணிதத் துறையின் ஆழங்குன்றாமல் எழுதப்பெற்றிருப்பது பெருஞ்சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளில் எட்டு அருமையான நூல்களை இலவசப்பதிப்பாக வெளியிட்டு தமிழுலகுக்கு அருந்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இவற்றுள் புகழ்பெற்ற ”One Two Three… Infinity: Facts and Speculations of Science” என்னும் தலைப்பில் சியார்ச்சு கேமாவ் (George Gamow) எழுதிய நூலின் தமிழாக்கத்தை ”ஒன்று , இரண்டு, மூன்று, முடிவிலி” என்னும் தலைப்பில் முனைவர் கோட்டாளம் மொழிபெயர்த்துள்ளார். இதேபோல தகுலசு ஆடம்சின் (Douglas Adams) “The Hitchhiker’s Guide to the Galaxy” என்னும் புகழ்பெற்ற நூலையும் தமிழில் ”பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி” என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் துறையில் எழுதுவோர்க்குப்பயன்படும் விதமாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை தமிழாக்குவதற்கான ஒரு கையேடு என்னும் அருமையான நெடிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார் [2].
மகாகவி பாரதியாரின்
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’
என்னும் பொன்மொழிகளைச் செயற்படுத்திவரும் நற்றமிழர் இவர்.
முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் . படம் [3]
முனைவர் கோட்டாளம் அவர்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். அதற்குமுன்பு சென்னையில் இருக்கும் இந்திய தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி-சென்னை) முதுநிலை அறிவியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலிலே இளநிலைப் பட்டமும் பெற்றார். இப்பொழுது அறிவியல் இலக்கியங்களைத் தமிழில் ஆக்குவதையும் மொழிபெயர்ப்பதையும் பேரார்வம் காட்டி உழைத்துவரும் இவர் பற்பல அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கிரே ஆய்வு (Cray Research), இசுட்ரக்சுரல் பயோ இன்ஃபர்மாட்டிக்சு (Structural Bioinformatics), இரியாக்ஃசன் திசைன் (Reaction Design) போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கின்றார். வேதியியலில் உயர்திறன் கணிமைகளில் இவர் பெரும்வல்லுநர். பெரும் நுண்ணறிவுபெற்ற இவர் தமிழில் நூல்கள் எழுதி தமிழ்ப்பணி ஆற்றுவது பெருமகிழ்ச்சி தருவது. இவர் ஆக்கிய அல்லது மொழிபெயர்த்த நூல்களை மின்வடிவில் யாரும் எளிதாக இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி செய்திருப்பதும் இவருடைய தொண்டுள்ளத்தைக் காட்டுகின்றது. இவரெழுதிய நூல்களைத் தரவிறக்கிப் படிக்க கீழ்க்காணும் பக்கத்தை அணுகவும்[4]. முனைவர் கோட்டாளம் அவர்கள் Journal of Chemical Physics, Journal of Statistical Physics, Biopolymers போன்ற அறிவியல் ஆய்விதழ்களில் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். சுபிரிங்கர் ஃபெர்லாகு (Springer Verlag) என்னும் பதிப்பகத்தாரின் நூலில் இவருடைய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. புத்தாக்கப்படைப்புக்கான உரிமமும் பெற்றுள்ளார்.
முனைவர் கோட்டாளம் அவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்து வாழ்கின்றார்.
முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் அருமைமிகு அறிவியல் தமிழ்நூல் படைப்புத் தொண்டினைப் பாராட்டி அவரை சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.
அடிக்குறிப்புகள்
[1] https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5TXU4aVhRMy11SlU/edit
[2] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story
[3] படம்- முனைவர் கோட்டாளம் அவர்களின் முகநூல் (https://www.facebook.com/kottalam?fref=nf)
[4] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story
அறிஞரைப் போற்றுவோம். இவரைப் போன்றவர்கள் மதிக்கப்பட வேண்டும். இவர்களின் கூட்டம் பெருக வேண்டும். தமிழ்வழிக் கல்வி நோக்கி முன்னேறுவோம்.
வல்லமையாளர் கோட்டாளம் அய்யா அவர்களுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள். தமிழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கி வருவதோடு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை எளிய தமிழில், புரியும்படி விளக்குகிறீர்கள். இதன் மூலம் தமிழ்வழிக் கல்வியும் தமிழில் அறிவியல் கருத்துப் பரிமாற்றமும் வலிமையுறுகிறது. அத்துடன், தமிழால் முடியும் என்பதைத் தமிழரே உணரும் வகையில் தன்னம்பிக்கை ஊட்டுகிறீர்கள். தங்கள் தொண்டு தொடரட்டும்.
முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
கட்டுரை திரு.கோட்டாளத்தின் ஃபேஸ்புக் பக்கமும், ஆக்கங்களையும் கொடுக்கிறது; திரு கோட்டாளம் தன் பெயரை ஜெயபாண்டியன் என கொடுக்கிறார், ஆன்னல் இங்கு பெயர் குளறுபடி இருக்கின்றது. கொடுக்கும் தகவல்கள் துல்லியமாக இருக்க வேண்டாமா?