திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7)
இசைக்கவி ரமணன்
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (6)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி, அன்புகொண்டவரிடத்து, அறியாமையால் உண்டாகும் இருவகை வினையும் சேர்வதில்லை.
இருள் என்பது அறியாமை. இருவினை என்பது பாவமும் புண்ணியமும். இரண்டுமே மருள்மயமான பிறப்புக்குக் காரணம் என்பதால் நல்வினையும் தீவினை போலவே பிறவித் தளைக்குக் காரணமாக ஆகிறது.
நல்வினையும் ஓர்சுமைதான் நட்ட நடுவிலதை
மெல்ல இறக்கிவைத்தால் மீட்பு
நல்வினை ஏன் சுமையாகிறது? அதை நாம் செய்கிறோம் என்ற உணர்வோடு செய்வதால்தான். செயல் நம் மூலம் நடக்கிறது என்று நம்பி, பிறகு பாவித்து நடந்துகொண்டால் அதுவே அனுபவமாகிறது. அப்படியென்றால் தீவினையும் என் செயலில்லை என்று கொள்ளலாமா? நல்வினை என்னுடையதில்லை, அதனால் வரும் விளைவுகளும் என்னுடையதில்லை என்ற உறுதி வருமானால் அதையே தீவினைக்கும் கொள்ளலாம். ஆனால், அந்த வைராக்கிய உறுதி வாய்த்தபின், தீவினை எப்படி நிகழும்?! வேள்வி செய்வோர், `இது இந்திரனுடையது எனதல்ல, இது அக்கினியுடையது எனதல்ல,` என்று சொல்லிச் சொல்லித்தான் நெய் சொரிவார்கள். அந்த எச்சரிக்கை உணர்வு இருக்கவேண்டும்.
எப்படி இறக்கிவைப்பது? அறியாமை என்னும் பொய்மை இல்லாமல், அறிவு என்னும் மெய்மை வடிவான இறைவனின் புகழைச் சொல்வதன் மூலமே இது சித்திக்கும்.
யாரைப் பற்றி, அல்லது எதனைப் பற்றி இடைவிடாமல் சிந்திக்கிறோமோ, பேசுகிறோமோ, கேட்கிறோமோ அவருடைய, அல்லது அதனுடைய தன்மை நமக்கு வந்துவிடுகிறது. (யத் பாவம் தத் பவதி) நம் மகன்தான். ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஒரு நல்ல வாய்ப்பு வந்து, வேலை பார்த்தபடியே படிக்க அமெரிக்கா செல்கிறான். கொஞ்சநாள் சென்று திரும்பி வருகிறான். அமெரிக்கன் மாதிரியே ஆங்கிலம் பேசுகிறான்! பழக்கம்தான்.
ஜடபரதர் ஆற்று நீரில் நின்றபடி நித்திய கர்மாக்களைச் செய்துகொண்டிருக்கிறார். ஒரு தாய்மான் குட்டியைப் பிரசவித்து அப்படியே இறந்துவிடுகிறது. குட்டி, தண்ணீரில் விழுகிறது, அவர் கண்ணுக்கெதிரே. அதை அவர் காப்பாற்ற வேண்டுமா வேண்டாமா? செய்யலாமா கூடாதா? அப்படியே அள்ளிக் காப்பாற்றினார். அதுதான் செய்ய வேண்டியது. செய்ய வேண்டியது அவ்வளவுதான். ஆனால், அத்தோடு அவரால் நிறுத்த முடியவில்லை. அந்த மான்குட்டியை வளர்த்துக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். யாரும் தராத பொறுப்பு. அதற்குப் பால், அதற்காகப் பசு, அதற்குத் தழை, அதற்குத் தடுப்பு வேலி, அது இரவில் பாதுகாப்பாய் இருக்கிறதா என்ற அச்சம் என்று தன் கவனம் முழுதும் மான் மீதே செலுத்தி, மானைத் தழுவியபடியே மரணத்தைத் தழுவி மறுபிறப்பில் மானாய்ப் பிறந்தார் என்கிறது கதை.
செய்கை என்பது தன் மூலம் நடக்கவில்லை என்னும் உறுதி கொண்டவன், செயலில் பற்றுவைப்பதில்லை. எனவே, அதன் பயனைப் பற்றி அவன் கருதுவதே இல்லை. எனவேதான், செயல் என்பது அவன் மூலம் நடக்கிறது.
அறிவும் வெறும் பழக்கம்தான்; அறியாமையைப் போலவே!
வேண்டுதல் வேண்டாமை இலான் இருவினையும் சேராதவன்தானே! அவனையே புகழ்ந்து வாழ்ந்தால் இருவினைகள் நம்மையும் சேரா!
அறியாமை என்னும் பொய்மைதான் நல்வினை தீவினை என்னும் இருவினைகளுக்குக் காரணம். இறைவனோ மெய்மை மயம்.
தொடருவோம்