Blog

  • நடை பயில்வாய் மகளே !

    காயத்ரி பூபதி

    baby-walk-small

    சிந்தை முழுக்க நிறைந்தவள்

    சின்னஞ் சிறு குழந்தை யவள்

    சிறு நுதல் பேரொளியாய்

    குவி இதழ் குறு நகையாய்

    பூப் போன்ற புன்னகையால்

    அன்றலர்ந்த மலர் போல

    வான் முகம் சிவக்க

    இசைந்தாடும் சலங்கை ஒலிக்க

    அசைந்தாடும் தென்ற லென

    குறுநடையே கலை யென

    நடை பயிலும் சிலையழகே

    என் மகளே! என் மகளே!

    குவளை செவ்வாய் முத்தழகே!

    புவி சிறக்க நடைபயில்வாய்

    மகளே நடை பயில்வாய்!

    தத்தி தத்தி தடுமாறினாலும்

    தடம் மாறாமல் நடை பயில்வாய்!

    தடுமாறி விழுந்தாலும் திரும்ப

    எழும் திடம் மறவாமல் நடை பயில்வாய்!

    தடம் நிறைந்த இடர் நீக்க

    உன் திறம் உணர்ந்து

    கலங்காமல் நடை பயில்வாய்!

    புவி போற்ற நடை பயில்வாய்!

    நடை பயில்வாய் மகளே! நடை பயில்வாய் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    195625a6-1da7-47e4-887e-d7babb15b712

    ”பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது”….

    ”நாவல் நிறத்தவனே, நாலாயிரம் போற்றிடும்
    காவலில் தோன்றிய கண்ணனே, -தாவலால்
    விட்டகன்றாய் அத்வைதம், வந்தாய் விசிஷ்டனாய்,
    வெட்டுநீ துண்டிரெண்டா வோம்’’….கிரேசி மோகன்….

    Share
  • எத்தனை அழகு! எத்தனை அமைதி!

    கவியோகி வேதம்

     
    எத்தனை அழகு! எத்தனை அமைதி!
    ..இறைவனின் சன்னதியில்!
    முத்தெனும் பல்லின் ஒளியில் மூழ்கினன்
    …முருகனின் தண்ணருளில்!
    .
    எத்தனை முயன்றும் சொல்லே வரலையே?!
    … எங்ஙனம் பாடிடுவேன்?
    சத்தினை உறிஞ்சிய தலைவனின் அருளையே
    ….சாரமாய் நாடிடுதே!!
    .,
    சூடவே தொடுத்த மாலையும் நழுவித்–
    ..தொலைவில் போனதுவே!
    .பாடவே எடுத்த பல்லவி மறந்ததே,
    ……பதட்டம் ஆனதுவே!
    .
    கண்ணின் வீச்சில் உலகம் மறந்தது;
    …கவலையும் பறந்ததுவே!!
    தண்ணருள் புன்னகை முழுதுமே என்னைச்
    சக்கையாய்ச் செய்ததுவே!
    .
    ‘என்னஓர் புண்ணியம் செய்தனை!’- எனும்சொல்
    … ..எங்கோ கூறியதே!
    மின்னலாய் ஓர்வேல் தொடவே , ‘அவனாய்’-
    ..மேனியே மாறியதே!
    **********************************************(கவியோகி வேதம்)29-7-16`

    Share
  • காதல் தோட்டம்

    ராஜகவி ராகில்

     

    தாளம் தப்பினாலும் சுருதி விலகினாலும்

    சரியான சங்கீதம்

    காதல்

     

    பூமியில் நீ வானம்

    காதல்தான்

    சிறகு

     

    விண்மீன்கள் எண்ணிக்கை கேட்டால்

    மிக இலகுவாகச் சொல்வாய்

    உன்னிடம் இருக்கும் காதல் உச்சரித்த கணக்கு

     

    காதல்

    இளமையான முதுமை

     

    காதலுக்கு கூந்தல்  இருந்தால்

    இலட்சம் கோடி ஆண்டுகளானாலும்

    கறுப்புத்தான்

     

    காதல் வந்த பின்

    அந்தவினாடியில் அத்தனையும் மறந்து போய் விடும்

    காதலைத் தவிர

     

    காதல் முள்

    அதில் அமருகின்ற வண்டும்

    பூவாகி விடுகிறது

     

    நீ வீசுகின்ற வலையில்

    நீயே

    சிக்குப்படுகின்ற அதிசயம் காதல்

     

    நீச்சல் மறந்து போவாய்

    விழிக் கடலில் நீ விழ ஆரம்பிக்கும் போதே

     

    உன் சட்டைப் பைக்குள் சமுத்திரம் நிரப்பியும்

    கைக் குட்டையில் வானம் வைத்தும்

    காதல்

    உன்னை அதிசயமாக்கி விடுகிறது

     

    காதல்

    உன்னைப்  பூக்கூடையாக்குகின்ற முட் சோலை

     

    உலவுகின்ற பழக்கூடையாய்

    நீ மாறுவாய்

    காதல் தோட்டம் நீயெனில் .

    Share
  • ஒளிரும் சாலையில் பிரகாசப் பயணம்

    ராஜகவி ராகில்

     

    மனசெல்லாம்
    ரோஜாப் பூக்களைவிட லட்சம் மடங்கு நறுமணம்
    பக்தியோடு இருக்கும் போது .

    இதயம் உருகி உருகி
    இறைநாமம் உச்சரிக்கிறேன்
    பனித் துளி மென்மையை பின்தள்ளுகிறது என் இதயம் .

    பாவ நச்சு இருளுக்கு எனது வானத்தில்
    இடமில்லை என்றால்
    உயிருள்ள ஒளி நான் .

    சொர்க்கத்தை அடைகின்ற சிறகு
    வணக்கம் .

    இந்த உலகம்
    ஆகப் பெரிய பொய் என்று நம்புகின்ற போது
    மிகப் பெரிய மெய்யாகிறேன் நான் .

    இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்று
    நம்புகின்ற எறும்புகூட
    தீண்டுவதற்கு மறுக்குமே .

    ஓட்டைகளால் ஆன இந்த வாழ்க்கைக் கப்பல்
    ஆத்மீகக் கடலில் மட்டுந்தான் மிதக்கும் .

    இருளை நேசிப்பதில்லை
    இறை பாதை .

    Share
  • நாராய் அழு


    விவேக்பாரதி 

     

    நேரிசை ஆசிரியப்பா 

     

    கதிரவ னுதியாக் கருநிறக் காலை
    சதிர்படு மந்தச் சமவெளிப் பனியின்
    பால்நிற மன்ன படுவழ கோடே
    கால்நிற முள்ளக் கருநிற நாராய் !
    பெறுமல கதிலே பேருரு கொண்ட
    உறுமீ னேந்தி யுச்சியிற் செல்வாய் !
    உனதருங் கூட்ட மோய்விட மெல்லா
    மெனதருந் தலைவ ! னேவு கணையன் !
    விண்ணளந் திட்ட விசையன் ! வீரன் !
    கண்ணினி லதனைக் காட்டா மனிதன் !
    அப்துல் கலாமெனு மதிசயக் கார !
    னொப்பிலா தலைவன் ! ஒழுகிய பண்பன் !
    தலைமுடி கவிழ்ந்தும் தலைகவி ழாதே
    யுலகினைக் கண்ட உத்தம வில்லன் !
    வீணையும் மீட்டும் வித்தகக் காரன் !
    ஆணைக ளன்பாய் அவழ்த்திடும் மன்னன் !
    அழகிற குன்போ லக்கினிச் சிறகைத்
    தொழுதிட விரித்த தொல்லறி வாளன் !
    தென்றிசை தோன்றி எண்திசை யெங்குந்
    தன்பெய ரொலிக்கத் தமிழ்சொலுந் தீரன் !
    நாடிதை யாண்ட நாயக ! னென்கோ !
    ஆடிடா குணத்த ! னழிவினுக் கழிவை !
    ஆண்டவ னென்னு மாணவக் காரன்,
    ஆண்டவ னுயிரை அருகி லிழுத்துச்
    சுயநலச் செய்கை சுயவுரு காட்டிக்
    கயவனைப் போலே கடமையைச் செய்திங்
    கின்றோ டோராண் டாச்சென
    நின்றல றிடுவாய் நீயழு வாயே !

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (8)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7)

    kural-4

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

    நெறிநின்றார் நீடுவாழ்வார் (6)

     

    ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஆசைகளை அகற்றி, கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நீண்ட காலம் வாழ்வார்.

    புலன்களும் பொறிகளும் யாரிடமிருந்து வந்தன? இறைவனிடமிருந்துதானே? ஆனால் அவனோ பொறிவாயில் ஐந்தவித்தான்! அவனைத் தொழுதால் நமக்கும் அப்படித்தான். மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்ன? இறைவன் தன்னில் தானாய் நிலைத்தவன். மனிதன் பொறிவழி மனம் சென்று எங்கும் சிதறிக் கிடப்பவன். சிதறிக் கிடப்பவன் எவ்விதம் தன்னை நிறுவிக்கொள்வான்?

    அவித்தல் என்றால் பக்குவப் படுத்துதல். மொச்சைக் கொட்டை அவித்தல், சோறவித்தல் என்பது போல.

    பக்குவமே பரமன் இயல்பு. அவனைப் பணிந்து அவனியல்பையே நாமும் பெறுவோம்.

    பொறிகள் நம் கைப்பிடியில் இருந்தால், புவனம் நம் காலடியில் இருக்கும் என்பார்கள் பெரியோர்.

    வீடுபேறு என்னும் விடுதலையை நாடுவதே வழி. அதற்கு முதல்படியே புலனடக்கம். அதற்குமேல் பெரிதாய்ப் படிகள் இல்லை, காலத்தின் தாக்கம் மட்டும்தான். இறைவன் எப்படியோ அப்படியே வாழும் முறையே பொய்தீர் ஒழுக்க நெறி.

    அவ்விதம் வீட்டு நெறியைக் கடைபிடிப்பவர்கள் நெடுநாள் நன்கு வாழ்வார்கள். நெடுநாள் வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் அடிப்படை விருப்பம் என்றும் அதனால்தான் அன்றிலிருந்து இன்றுவரை, பெரியவர்களை நாம் வணங்கினால், அவர்கள் ‘பல்லாண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! ஆயிரம் பிறைகள் காண்க,’ என்றெல்லாம் வாழ்த்துகிறார்கள் என்றும் இறைவனை வணங்குவதன் மூலம் இது சாத்தியம் என்று வள்ளுவர் நமக்கு ஊக்கம் தருகிறார் என்றும் அதே சமயம், நீடு வாழ்வார் என்பது நீண்ட ஆயுளை மட்டும் குறிக்கவில்லை, அவர்கள் பெயர் மன்னுலகில் நீடித்து நிலைத்திருக்கும் என்றும் பொருள்படும் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். அவர்களுடைய நினைவே மற்றவர்களும் அதே வீட்டு நெறியைப் பின்பற்ற வழிகோலும். நீடு வாழ்வார் என்பது அவர்கள் விட்டுச் செல்லும் தவத்தைக் குறிக்கும்.

    வாழ்க்கை என்றால் என்ன? எது இறைவனின் நெறியோ அதில் நின்று நீடுவாழ ஒரு வாய்ப்பு. இறைநெறி என்பதைத் தெளிவாகக் கற்று அதில் ஆழ்ந்து கிடப்பதற்கு ஒரு வாய்ப்பு. மனிதன், முழுமையான மனிதத் தன்மையை அடைவதற்கு ஒரு வாய்ப்பு. எது கையில் வசப்படாது என்று கருதப்படுமோ, அந்த இறைமையே தன்னுள் கனிந்து காண்பதற்கு ஒரு வாய்ப்பு. இதை ஒரே வாய்ப்பு என்று கருதுபவர்களே உயர்கிறார்கள். இதற்குத்தான் நீடு வாழ்தல் என்று பெயர். அப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாகிறது. அவர்களுடைய வார்த்தையே பாதையாகிறது.

    சரி இறைவனின் ஒழுக்க நெறி என்பது என்னவாக இருக்க முடியும்? முந்தைய குறளிலேயே சொல்லிவிட்டாரே, வேண்டுதல் வேண்டாமை இலான்! இன்னொன்று, பொய்யின்றி வாழ்தல். 12 வருட காலம் உண்மையே பேசும் விரதம் பூண்டால், அதன்பிறகு அவன் சொல்வது யாவுமே உண்மையாகிப் போகிறது என்பார்கள். மனத்துக்கண் மாசிலனாதன் அனைத்தறன் என்று தெளிவாய்ச் சொல்கிறார்.

    அஸ்வத்தாமன் விடுத்த பாணத்தால் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு கரிப்பிண்டமாக வெளியே விழுகிறது. `நித்ய பிரம்மச்சாரி தொட்டால் இந்தப் பிண்டம் உயிர் பிழைக்கும்,` என்கிறார் வியாசர். எல்லோரும் தயங்குகிறார்கள். கண்ணன் கால் கட்டை விரலால் தொடுகிறான். கரிப்பிண்டம் களையான குழந்தையாக எழுகிறது. அதுவே பரீட்சித்! கண்ணனே மனத்துக்கண் மாசிலன்!

    `யோக: சித்த வ்ருத்தி நிரோத:` என்கிறது பதஞ்சலியின் முதல் சூத்திரம். பொருளால் ஈர்க்கப்பட்டு, பொறிகள் வழியே மனம்சிதறிப் போகாமல், பொறிகளை மனதிலும், மனதைப் புத்தியிலும், புத்தியைச் சித்தத்திலும், சித்தத்தை ஆன்மாவிலும் பொருத்திக் கொள்வதே சித்த வ்ருத்தி நிரோதம். அதுதான் பொறிவாயில் ஐந்தவிப்பது. அதுவே பொய்தீர் ஒழுக்க நெறிநிற்பது.

    `நீத்தார் பெருமை` என்னும் மூன்றாவது அதிகாரத்திலேயே `ஒழுக்கத்து நீத்தார் பெருமை,` `உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான், `ஐந்தவித்தான் ஆற்றல்,` என்றெல்லாம் பேசி,

    சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு

    என்றும் சொல்கிறார்.

    `ஆற்றலுடையோய்! யாருடைய பொறிகள் புலன்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுள்ளது,` என்பது கண்ணன் வாக்கு. (கீதை:2:68)

    கொம்பூதும் ஓசையால் சிக்கிக் கொள்கிறது மான். பூவின் வாசம் வண்டை இழுக்கிறது. இலை தழைகளைப் பின்பற்றி இரையாகிறது ஆடு. நெருப்பைக் கண்டு ஈர்க்கப்பட்டு அதில் வீழ்ந்து மாய்கிறது விட்டில். இப்படி ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு பொறி எதிரியாக இருக்கிறது. மனிதனுக்கோ எல்லாப் பொறிகளும் எதிரிகள்தாம்! அவன் எல்லாப் பொறிகளின் வழியாகவும் விழுந்து மாய்கிறான்.

    ஆதியிலேயே ஐந்தும் அவித்தவனின் பக்குவம் என்னும் இயல்பாகிய நெறியில் நின்றால்தான் நீடு வாழ முடியும்.

    கானக் குழல் ஒன்று கன்னக்கோலாய் ஆச்சு

    கன்னம் வைத்த இடம் காதுகளாச்சு

    ஆன காவல் ஐந்தும் ஆடரங்கமாச்சு

    அந்தந்தோ என்மனம்தான் கொள்ளை கொள்ளையாகப் போச்சு!

     

    என்று ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடுவதையும்,

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்த சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

     

    என்று திருமூலர் பாடும் போதும்,

    எந்தப் பொறிகள் நமக்கு இடர்விளைவிக்குமோ அவற்றையே அவனாடும் மேடையாக்கி அவற்றை அவிக்கலாம், பக்குவப்படுத்தலாம் என்று புரிகிறது.

    பொய்தீர் என்றால், அவன் ஏற்கெனவே பொய்கள் தீர்ந்தவன், பொய்மை இல்லாதவன் என்றும், பணியும் நம்முடைய பொய்மையைத் தீர்க்கின்றவன் என்றும் பொருள்.

     தொடருவோம்

     


     

    Share
  • கடன்

    சரஸ்வதி ராசேந்திரன்

     

    ‘’என்னங்க. பேசாமலேயே உட்கார்ந்திருக்கீங்க,கடன்காரன் எப்படி திட்டிட்டுப் போனான் ,   ஒரு வாரத்துக்குள்ளே பணத்தை கொடுக்கலைன்னா   சாமானெல்லாம் ரோட்டுக்கு வந்திடும்னு சொல்லிட்டுப்போறான்  நீங்க என்னடான்னா…’’’ கீதா சொல்ல

    ‘’எனக்கு என்ன காது செவிடா? இல்லே தமிழ் தெரியாதா? வேற மொழியில சொன்னமாதிரி மொழி பெயர்க்கிறாயா?எல்லாம் காதுல விழுந்துது ‘’எரிந்து விழுந்தான் வினோத்

    ‘’என்ன செய்யப்போறீங்க’’

    ‘’ ஒரு வாரம் இருக்கில்லே  யோசனை பண்ணுவோம் ‘’

    தெரிந்தவர்களிடம்  எல்லாம் கேட்டு பார்த்தான் கிடைக்க வில்லை

    நாள் நெருங்க நெருங்க பயம் அப்பிக் கொண்டது .

    ‘’என்னங்க தெருவே வேடிக்கை பார்க்கப் போகுது   அவமானமாகப்போகுது.. என்ன செய்யப் போறீங்க?’’

    ‘’ குடும்பமே தூக்கமாத்திரை சாப்பிட வேண்டியதுதான் .சும்மா தொணதொணக்காதே  உங்க வீட்டிலேயும் எங்க வீட்டிலேயும் கேட்கமுடியாது நாம இருக்கிற லட்சணத்திலே காதல் திருமணம்  வேறு..  கடைசியா நம்மயோசனைத்திலகம் யோகேஸ்வரனை கேட்போம்   அவனாவது உருப்படியா ஏதாவது சொல்றானா பார்ப்போம் இதோவரேன் ‘’சொல்லிவிட்டு வெளியேறினான் யோகேஸ்வரன் சொன்ன யோசனை பிடித்திருந்தாலும்  உயிருக்கு மோசம் வந்தால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது வினோத்திற்கு. அடுத்த   நாள்-

    தெருவில் ஒரே களேபரம்  .மாற்றுக்கட்சிக்காரன் எதிர்க்கட்சிக்கார தலைவரை கேவலமாக பேசி  விட்டதால்  துடித்தெழுந்த தொண்டர்கள்  மாற்றுக்கட்சிக்காரனின் உருவ பொம்மையை கொளுத்திக்கொண்டிருந்தார்கள்  .அப்பொழுது யோகேஸ்வரன் கண்ணைக்காட்ட  யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் வினோத் ரப்பர் செருப்புடன் எரியும் உருவப்பொம்மையை மிதித்து அணைக்க முற்பட திடீரென வினோத்தின் பேண்ட் பற்றி யெரிய..யோகேஸ்வரன்  ’’ வேண்டாண்டா  தலை வருக்காக தீ குளிக்காதே என்று சத்தமிட்டபடியே அவனை மணலில் போட்டு புரட்ட   தொடைகள் வெந்த எரிச்சலில் வினோத் கத்த- ஆஸ்பிடலுக்கு கொண்டுபோனார்கள்..என்னவோ  தலைவருக்காக தீகுளித்ததுபோல் பாவலா செய்ய ..எதிக்கட்சியின் தலைவர் தன்னை கேவலாமாகப் பேசியது பொறுக்காமல்  இப்படி யொரு தொண்டனா என எண்ணி உடனடியாக  தீக் குளித்த குடும்பத்திற்கு இரண்டு லட்சம் பணமும் ஆஸ்பிடல் செலவையும் ஏற்றுக் கொண்டார் ..யோகேஸ்வரன் ஐடியா ஒர்க் அவுட் ஆனதால்  வினோத் தன் கடனையும்  யோகேஸ்வரனுக்குரிய பங்கையும் கொடுத்து கடன் காரனிடமிருந்து தப்பினான்.

    Share
  • உமையாள் திருப்புகழ் 5

     

    விவேக்பாரதி

     

    தனனதந்த தத்தத்த தந்த

    …தனனதந்த தத்தத்த தந்த

    ……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா !

     

    மணமறிந்த தெத்திக்கு மந்த

    …மதுவருந்த தித்தித்த வண்டு

    ……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு

     

    மரமுவந்து கொட்டிக்க னிந்த

    …மணியிலிங்கு மொத்திட்ட தென்றல்

    ……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு

     

    கணமுமிங்கு சுற்றிக்கி டந்த

    …கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய்

    ……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு

     

    கடவுளென்னு மொப்பற்ற வொன்று

    …கவலைதுன்ப மெத்திக்க ளைந்து

    ……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு

     

    பணியொடந்த கட்டிச்ச தங்கை

    …பவளதண்டை யிட்டுத்தொ டர்ந்து

    ……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்

     

    பருவமங்கை சக்திக்க தம்ப

    …பதமறிந்து துக்கத்தெ ழுந்து

    ……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை

     

    அணிதிரண்டு சுற்றிக்கி டந்து

    …அழகுசங்க மத்தைப்பு கழ்ந்து

    ……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே !

     

    அயிலையந்த யிக்கட்ட ழிந்து

    ….மமரரங்கு சுற்றத்தை வெல்ல

    ……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே !

     

     

    Share
  •  வாழ்வினையே நடு !

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

     

    அன்பைநடு அறிவைநடு

    ஆணவத்தை அகற்று

    இன்பைநடு ஈகையைநடு

    எண்ணமதை திருத்து

    உண்மைநடு உழைப்புநடு

    ஊழலினை விரட்டு

    உன்மனதில் இலட்சியத்தை

    ஊன்றிநின்று நடு !

     

    இலக்கியத்தை என்னாளும்

    இங்கிதமாய் நடு

    நிலத்திலுள்ள மாந்தரிடம்

    நிம்மதியை நடு

    உனக்குதவி செய்வாரை

    உள்ளமதில் நடு

    உண்மையது யாவருக்கும்

    உதவுமென்று நடு !

     

    களவுதனைக் கழைந்துவிட்டு

    கண்ணியத்தை நடு

    காதலுடன் வாழ்வெலாம்

    கல்விதனை நடு

    கடவுள்பற்றி நினைக்கின்ற

    கருத்தினையும் நடு

    கண்களிலே என்னாளும்

    கருணையையும் நடு !

     

    பிறர்தம்மை நோகாவிடா

    பெருமனதை நடு

    குறைசொல்லா வகையினிலே

    குணங்களையும் நடு

    நிறைவான வாழ்வுவர

    நிம்மதியை நடு

    மறைவான எண்ணங்களை

    மனத்தைவிட்டே எடு !

     

    வள்ளுவத்தைப் படிக்கின்ற

    எண்ணமதை நடு

    வாழ்வினிலே பெற்றோரை

    மனமதிலே நடு

    கண்ணியத்தில் உயர்ந்தோரை

    கருத்தினிலே நடு

    காலமெலாம் நினைக்கும்படி

    வாழ்வினையே நடு !

    Share
  • எழுவகைப் பெண்கள்: 9

    அவ்வை மகள்

     பெண்ணின் மூலாதாரக்கனலில் அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    பெண்ணின் பெரினியத்தை அக்கினிப் பாண்டம் என்கிறோம் – படைப்பாற்றலின் குண்டமாக – பாத்திரமாக – செயல்படுவதால் அங்கே உஷ்ணம் உற்பத்தியாகிறது என்றோம். இந்த அக்கினி என்பது – எத்தகையது என்று பார்த்தால் அது ஒரு எண்ணெய் விளக்கைப் போன்றது. திரிபோட்டு, எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட விளக்கு எவ்வாறு எரிந்து வெப்பம் தருகிறதோ அதுபோன்றே பெரினியத்தின் உள்ளே விளக்கின் அழல் போல் கனல் தோன்றி அங்கே வெப்ப சக்தி உண்டாகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல இந்த வெப்பசக்தி பெண்ணில் உடலில, பூப்பெய்தும் நாளிலிருந்து சுயம்புவாக உருவாவது – தொடர்ச்சியாக உருவாவது. இதுதான் மூலாதாரத்தின் மூண்டெழுகனல்.

    ஆதித்தன் எனப்படும் சூரியனானவன் சுயம்புவாக, தனக்குள் தானே உட்கருவினையால் ஒரு அக்கினிப் பொறியை உண்டாக்கி, அந்த ஆரம்பப் பொறியைக்கொண்டு தன்னுள் அக்கினியைத் தொடர்ந்து மூட்டி – மூட்டி – கொழுந்தாய் ஜ்வாலை விட்டு எரியும்படியான நெருப்பு வளர்க்கும் ஆற்றல் மிக்கவன். அதாவது – தன்னுள் தானே ஆற்றலை உருவாக்கிப் பெருக்குவது என்கிற ஆற்றல் வித்தை என்பது சூரியனது தனிப்பெரும் குணாதிசயம். பிரபஞ்சத்தின் அண்டபகிரண்டங்களுக்கும் ஆற்றல் வழங்குவது யாரென்றால் – சூரியனே. இலக்கியங்களும் அறிவியலும், ஆன்மீகமும் ஒருசேர ஓர் அணியில் நின்று ஆமோதிக்கும் ஒப்பற்றப் பேருண்மை இது. பிரபஞ்சத்தில் 20 பில்லியன் சூரியக்குடும்பங்கள் இருப்பதாகவும் – அவற்றில் ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் நாம் வாழ்வதாகவும் சொல்லப்படுவது நாமறிந்த உண்மையே.

    ஆக, பிரபஞ்சத்தின் ஆற்றல் பிரதிநிதியான சூரியனது ஆற்றல் ஜனனத்தின் இயக்கம். இந்த இயக்கம் மனிதகுலத்தின் ஆற்றல் பிரதிநிதியான பெண்ணின் மூலாதாரத்தில் தத்ரூபமாய் நிகழ்கிறது. ஆனால் உஷ்ணம் பரவும் முறையில் பெண் சூரியனிலிருந்து வேறுபட்டவள். சூரியனது வெப்பமானது சூரியனிடம் மட்டுமே நில்லாமல், பிரபஞ்சம் முழுவதிலும் பரவுவதன் காரணம் – சூரியன் தன் அச்சில் தானே சுழன்று கொண்டு பெரு நீள்வட்டப் பாதையில் அண்ட வெளியில் சுழலுகிறான் என்பதால்.

    இப்பொழுது ஒரு காட்சியை உங்கள் கற்பனையில் ஓட்டிப் பாருங்கள்: ஒரு அக்கினிப் பாண்டம் இருக்கிறது – அதில் அக்கினி தொடர்ந்து உற்பத்தியாகிறது. அவ்வாறு அந்தப் பாண்டத்தில் உருவாகும் அக்கினியின் வெப்ப ஆற்றலானது அப்பாண்டத்திலிருந்து வெளியேறாமல் சுற்றிலும் பரவி விநியோகம் செய்யப்படாமல் இருக்குமேயானால் என்னவாகும் என எண்ணிப் பாருங்கள்.

    உருவாகும் வெப்பம் அங்கேயே தங்கி செறிவடையும் அல்லவா?!

    இப்போது இன்னொன்றைச் சிந்தியுங்கள்: ஒரு இடத்தில் வெப்பம் தொடர்ந்து உற்பத்தியாகும் ஒருநிலையில், அந்த வெப்பம் அங்கிருந்து வெளியேற்றப்படாமல் அங்கேயே தங்கிச் செறியுமானால், என்னவாகும்?

    அங்கு, அப்பாண்டத்தில் போடும் பொருட்களும், அப்பாண்டத்தைச் சுற்றியுள்ள பொருட்களும் சுருங்கி, வெந்து, வறண்டு, உலர்ந்து, கருகி எனப் பல்வாறானும் பாதிக்கப்படுமல்லவா? ஏன் – தீக்காயங்களும் – தீவிபத்துக்களும் கூட நிகழுமே. பொருட்களும் ஏன் அந்த பாண்டமே கூட வெடித்தும் சிதறுமே!

    ஆக, ஓரிடத்தில், வெப்பசக்தி செறிவடையுமேயானால் பற்பல இணைவிளைவுகள் நிகழும் என்பது வெள்ளிடைமலை.

    பெண்ணின் மூலாதாரக்கனல் இவ்வாறுதான் அவளது பெரினியம் எனும் உற்பத்திஸ்தானத்தினுள் செறிகின்றது. இவ்வாறு அந்த அக்கினி அங்கேயே செறிகிறது எனபதை நீங்கள் உணரவேண்டும் என்றால், பெண்ணின் உடலியல் விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும். பெண்ணின் மூலாதாரத்தில் அக்கினி சேருகிறது என்பதற்குப் பல சான்றுகள் – பல அடையாளங்கள் உள்ளன.

    முதலாவது அடையாளம்: பெண்ணின் ஆசனவாய் (குதம் அல்லது மலப்புற வழி) வெப்ப நிலை (Anal temperature or Rectal temperature) ஆணின் ஆசன வாயின் வெப்பநிலையைவிட சுமார் 0.5 டிகிரி கூடுதலான சூட்டுடன் உள்ளது. (எங்கள் வகுப்பறைகளில் நாங்கள் தப்பாமல் காணுகிற காட்சி – ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் ஒரு வகுப்பில் ஒரு சேர ஒரு மாணவி அமர்ந்துவிட்டு எழுந்தாள் என்றால், அவள் அமர்ந்திருந்த இருக்கை தகிக்கும். ஒருவகுப்பு முடிந்து இன்னொரு வகுப்பு வரும்போது ஒரு பெண் மாணவி அமர்ந்து விட்டு எழுத்துச்சென்ற இருக்கையில் ஒரு மாணவன் வந்து அமர நேரிட்டால் – அலறுவான் – “Why is the so hot?” என்று).

    இரண்டாவது அடையாளம்: மலச்சிக்கல் ஆணைவிடப் பெண்ணுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஐந்து பெண்க்ளுக்கு ஒரு ஆண் என்கிற விகிதாச்சாரத்தை மலச்சிக்கல் வியாதியில் காண முடியும். பெண்ணின் ஆசனவாய் சுருகி -இறுகி அதனால் ஏற்படும் மலச்சிக்கல் வகையைப் பெண்களிடம் காணமுடியும் – ஆணின் மலச்சிக்கல் வகை பெரும்பாலும் செரிமானக் கோளாறுகளால் ஏற்படுவதாக இருக்கிறது.

    மூன்றாவது அடையாளம்: ஆசன வாயின் வழியே வெளியேறும் வாயு ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு அதிக உஷ்ணத்துடன் அதிக அடர்த்தியுடன் வெளிவருகிறது. ஏனெனில் பெண்ணுக்கு உடலில் ஆணை விட அதிக மீத்தேன் வாயு உண்டாகிறது. மீத்தேன் வாயுவை இயற்கை வாயு (Natural Gas) என்பர். இந்த இயற்கை வாயு வெப்ப ஆற்றலும் – மின் ஆற்றலும் கொண்டது. பெண்ணினுள்ளே எத்தனை வெப்பச் செறிவு நிகழ்கிறது என்பதற்கு இது ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

    நான்காவது அடையாளம்: நாசியின் வழியே வெளிவிடும் மூச்சு, ஆணின் வெளிவிடும் மூச்சை விட சுமார் 0.5 டிகிரி கூடுதலாக உள்ளது. பெண்ணின் உள்வாய் வெப்ப நிலை ஆணின் உள்வாய் வெப்ப நிலையை விட சுமார் 0.6 டிகிரி கூடுதலாக உள்ளது.

    ஐந்தாவது அடையாளம்: பெண் ஆணைவிடவும் குறைவாகவே வியர்ப்பாள் (வியர்வை என்பது சுற்றுச்சூழலின் வெப்ப அளவு அதிகமாகும்போது உடலின் வெப்பம் அதிகரிக்க, அந்த அதிகரிப்பைக் குறைத்து, சாதாரண இயல்பான உடல்வெப்ப நிலைக்கு உடலை மீண்டும் வரவழைக்கவென உடலில் உண்டாகும் குளிர்விப்பு இயக்கமாகும். பெண்ணின் உடல் வெப்ப நிலை ஆணின் உடல் வெப்ப நிலையைவிட சுமார் 0.3 டிகிரி அதிகம் என்பதால், அவளது உடலை இயல்பு நிலைக்கு கொண்டுவர குறைவான அளவு வியர்வையே போதும்,)

    ஆறாவது அடையாளம்: உடலில் தசை இல்லாத நிலையிலும், பெண் ஆணைவிடவும் அதிகநேரம் தளராது சீராக வேலை செய்வாள்.

    ஏழாவது அடையாளம்: பெண் எந்த ஒரு செயலையும் வெகு அகல-ஆழ்ந்து ஆராய்ந்து, வெகு சிரத்தையோடு, கடும் நுணுக்கங்களை முதலீடு செய்து செய்வாள்.

    எட்டாவது அடையாளம்: பெண் ஆணைவிடவும் அதிக எச்சரிக்கை விழிப்புடன் இருப்பாள் – தூக்கத்திலும் கூட அவளுக்கு விழிப்புணர்வு மிகுந்திருக்கும். வீட்டுக்குள் ஏற்படும் மிகச் சன்னமான ஒளிமாற்றத்தைக்கூட தூங்கிக்கொண்டிருக்கும்போதே கூட அவளால் உணரமுடியும். ஹைப்போதலமஸ் எனப்படும் பிடரியில் உள்ள பின்மூளைப்பகுதியும் மூளைத்தண்டும் இணையும் பகுதி உடல் வெப்பத்தைக் கண்காணிக்கும் அதிபதி – பெண்ணுக்குச் சற்றே கூடுதல் நுணுக்கத்துடன் இந்த ஹைப்போதலமஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே பகுதிதான் விழிப்புணர்வுக்கும், ஹார்மோன்களுக்கும் பொறுப்பான பகுதியாகும். எனவே, உடல் வெப்பமும் – விழிப்புணர்வும் தொடர்புடையவை எனக் காண்க.

    ஒன்பதாவது அடையாளம்: பெண்ணின் செவிப்பறை வெப்பம் (Tympanic temperature) ஆணின் செவிப்பறை வெப்பத்தைவிட 0.3 டிகிரி கூடுதலாக உள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பால் – அவளது செவிப்பறை சவ்வு மெலிதாய் நன்கு விரிந்து – இறுக்கமாய் இருப்பதால் – மிக மிக சன்னமான ஒலியையும் பெண்ணால் உணரமுடியும்.

    பத்தாவது அடையாளம்: பெண்ணின் நரம்பு மண்டலம் ஆணின் நரம்பு மண்டலத்தைவிட வெகு நுட்பமானது. உறங்கும்போதும் கூட – தன்னை இன்னார் தொடுகிறார் – இன்னது தொடுகிறது என்று அவளால் க்ஷணத்தில் உணரமுடியும் – பெண்ணின் ஹைபோதலமஸின் ஒப்பற்ற நுணுக்கத்தின் ஆசீவாதம் இது.

    பதினோராவது அடையாளம்: பெண்ணுக்கு ஆணை விடச் சுருக்கென்று கோபம் வரும்.

    பன்னிரெண்டாவது அடையாளம்: படுத்த நிலையிலுருந்தோ தரையில் குந்தி அமர்ந்த நிலையிலிருந்தோ பெண்ணால் ஆணைவிட வெகுசீக்கிரமாக எழும்ப முடியும், இவ்வாறு எழும்புவது என்பது அதிக வெப்ப ஆற்றல் கோரும் செயலாகும். ஆணுக்கு மூலாதார வெப்ப ஆற்றல் குறைவு என்பதால் பிற எல்லா இயக்கங்களிலும் பெண்ணைவிட ஆண் (தசை வலிமையால்) வல்லவனே தான் என்றாலும் படுத்தெழுதல் – குந்தி எழுதல் என்பவற்றில் ஆண் கொஞ்சம் பின் நிலை தான்.

    பதின்மூன்றாவது அடையாளம்: பெண்ணின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் ரேகைகள் ஆணின் ரேகைகளைக் காட்டிலும் அதிக ஆழத்துடன் இருக்கின்றன. பெண்ணின் தோல், வெப்பமாற்றங்களுக்குத் தோதாக இலகுவாக அமையப்பெற்றிருப்பதால் இந்த ரேகை ஆழம் உள்ளது.

    ஆக, ஆதித்தனது சாயலாக தனக்குள் தானே அக்கினி வளர்த்து அதனை தனக்குள் செறிவு செய்துவைத்துக் கொள்ளும் இயல்பான சக்தி பெண்ணுக்கு இருக்கிறது.

    சூரியனின் சாயலாக, பெண்ணுள் நடக்கும் இன்னொரு விந்தை என்றால் அவளது உடல் வெப்பத்தில் ஏற்படும் இரவு- பகல் மாற்றங்கள் – இரவில் குறைந்தும் பகலில் கூடியும் இருக்கும் அவள் உடல் வெப்ப நிலை – பகல் பனிரெண்டு மணியில் உச்சத்தில் இருக்கும் – இரவின் நடுநிசியில் வெகு தாழ இருக்கும்.

    அதே நேரத்தில் பெண்ணின் மூலாதார வெப்பமும் – அதன் பதின்மூன்று அடையாளங்களும் அவளுடலில் ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. சிருஷ்டிப் பணிக்காக, பெண்ணின் உடலில் உருவாகும் பெண் ஹார்மோன் செய்யும் மாயமிது. பெண்ணின் கரு முட்டை நிலையின் தன்மையை திரவமாய் அறிவிக்கும் சுரோணிதம் “அமுது” எனும் சொல்லுக்குப் பொருளாய்க் கொள்ளமுடிவதாக உள்ளது. ஏனெனில், அமுது என்பதற்கு உயிரின் வேர் உயிரின் முதற்புள்ளி என்று பொருள் – அமுது என்பதை, சிசு என்றும் சொல்லுவர். சீம்பால் என்றும் கூறுவர். கிராமப்புறங்களில், பிரசவமான பசுவின் உடலிலிருந்து சிசுவைப் பிரிக்கும்போது வெளித்தள்ளப்படும் தொப்புள்கொடி-மற்றும் நஞ்சின் தொகுப்பை அமுது என்று அழைப்பதே வழக்கம்.

    பிரசவமான பசுவின் அமுதை மிகுந்த பயபக்தியடன் சேகரித்து அதனை சில பொருட்கள் சேர்த்துப் பதனப் படுத்தி – சுத்தமான துணியில் கட்டி, அதனை உரிய சம்பிரதாயங்களோடு ஆலமரத்தில் கட்டித் தொங்கவிட்டு, சூரியனைப் பிரார்த்திப்பது என்ற வழக்கம் வெகு காலமாக இருந்திருக்கிறது. வீட்டில் பிரசவம் நடந்த கால கட்டங்களில் தமிழகக் கலாச்சாரத்தில், மனிதப் பெண்ணின் பிரசவ நஞ்சும் கூட இவ்வாறு சில சடங்குகளுடன் சூரியனுக்குப் படைக்கப்பட்டதாய் 103 வயதாகும் தமிழ் மூதாட்டி ஒருவரிடம் அறிந்து கொண்டேன். இந்தச் சடங்கில் குல ஒழுக்கங்களில் வித்தியாசம் இருந்தாலும் – பொதுவாகப் பெண்ணின் உடலிலிருந்து வெளியேறிய நஞ்சு – நாய் – நரி – பாம்பு – பறவைகள் ஆகியன கண்ணில் படாமலும் – நீர் நிலைகளில் எறியப்படாமலும் – பூமியில் புதைக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டது என்றும் – பல குலத்தார் அதனை அக்கினியில் வார்த்தனர் என்றும் – சிலர் அதனை தீபமாக்கினர் என்றும் அவர் கூறினார்.

    இன்று பெண்ணின் 28 நாள் மாதவிடாய்ச் சுழற்சியில் அவளின் உடலின் வெப்ப ஏற்றத்தாழ்வுகளை மருத்துவ உலகம் ஆய்ந்திருக்கிறது. இன்றும் கூட – கருத்தரிப்பு மருத்துவ வல்லுநர்கள் – பெண்ணின் பெரினிய வெப்பத்தைத் தொடர்ச்சியாக அளவிட்டு – அந்த வெப்பநிலையைக் கணக்கில் கொண்டு – அவள் உடலில் முட்டை உண்டாகி இருக்கிறதா இல்லையா எனச் சட்டென அறிந்து கொண்டு – அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கிறார்கள்.

    அவ்வை, “அமுதநிலையும் – ஆதித்தன் இயக்கமும்” என்று விநாயகர் அகவலில் குறிப்பிடுவது பெண்ணின் உடல் உஷ்ணம் பற்றியே என்பதும் பெண்ணின் உடல் உஷ்ணதத்திற்கும் அவள் உடலில் கருமுட்டை தோன்றும் – விலகும் சுழற்சிக்கும் தொடர்பு உள்ளது என அவள் நம்மை உணரவைப்பதும் நமக்கு இப்போது புரிகிறது. இந்நிலையில் ஒரு பெண், ஒரு தாய், மருத்துவ அறிவியலில் மூழ்கி இருப்பவர் என்கிற வகையில் அவ்வையின் உயிரோட்டமான இந்த “அமுதநிலையும் – ஆதித்தன் இயக்கமும்” என்கிற வாசத்தை நான் எண்ணி எண்ணிப் பரவசப் படுவதுண்டு.

    பகவத் கீதையின் பதின்மூன்றாம் அத்தியாயம் ஷேத்திரம் எனும் உடலியலை விளக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் – அமுது என்பதன் சூட்சமங்களைக் கண்டேன்: உடம்பிலிருந்தபடி எது உயிர் உருவாகும் வண்ணம் உடலை மேற்பார்வை பார்க்கின்றதோ – எது உயிர் உருவாக அனுமதி தருகிறதோ – எது உயிர் உருவாகத் தான் உண்ணுகிறதோ – அதுவே பரமாத்மா எனப்படுவது. என்கிறது கீதை.

    அவ்வை காட்டும் அமுதமும் – பகவத் கீதை சொல்லும் பரமாத்மாவும் மருத்துவ அறிவியல் பார்வையில் பெண்ணின் கரு முட்டையே எனக் கூறமுடிகிறது.

    ஆக, பெண்ணின் மூலாதாரத்தின் மூண்டெழும் கனல் அங்கேயே தங்கிவிட்டதென்றால் பல எதிர் விளைவுகள் நிகழும் – அதனை அங்கு தங்காமல் எழுப்பியே ஆகவேண்டும் என்கிறாள் அவ்வை. இன்று மருத்துவ உலகம் பெரும்பாடுபட்டு ஏதோ கொஞ்சம் அறிந்து கொண்டு – அறிந்துகொண்ட அந்த கொஞ்சத்தையும் கூட சொல்லத்தெரியாமல் தத்துபித்தென்று உளறிக்கொண்டிருக்க – வெகு அனாயசமாக அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்று சொல்லிப்போன அவ்வையையும் – இதுபோன்றே பல மருத்துவ உடலியல் ஷரத்துக்களை வெகு யதார்த்தமாக இயம்பிச்சென்றிருக்கிற திருமூலர் மற்றும் எண்ணிறந்த சித்தர்களையும் வாழ்த்தி வணங்க வாழ்நாள் போதாது.

    மேலும் பேசுவோம்

    Share
  • தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    ரமணி

    தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    images

    (எழுசீர்ச் சந்த விருத்தம்:
    தான/தனன தானன/தனன தான/தனன தானன/தனன
    . தான/தனன தானன/தனன தானனா)

    ஆறு படைகளில் ஆல யங்கொளும் ஆறு மாமுக வேலனே
    ஏறு மாமயில் சேரும் மாவிணை ஈச னுமைமகன் பாலனே
    கூறு மாவடி யார்ம னத்தினில் கோலம் கொண்டமர் குமரனே
    சேறு வொன்றையே சீந்து மென்மனம் சேயெ னக்கருள் அமரனே. … 1 (2)

    [மாவிணை = அழகிய இரு மனைவியர்]

    ஓது மாமறை உன்ன தம்வரும் உன்னைப் பாடிடும் போதிலே
    யாதும் நீயெனும் ஞானம் வந்திடும் யானி லங்குள மீதிலே
    சோத னைபல தந்த ருள்குகன் சூர பதுமனின் காலனே
    தீத ழிந்துளம் நன்மை நாடவே சேயெ னக்கருள் பாலனே. … 2 (2)

    ஆழ்ம னத்துயர் நீக்கி ஞானமென் றாழ்ம னத்துயர் வாகவே
    பாழ்ம னத்தினில் பற்று நீங்கிடும் பான்மை யென்நெறி யாகவே
    ஊழ்வி னையடி யோடு நீங்ககண் ணொற்றி னேன்குகன் பாதமே
    வாழ்வி லேயினி வைய மேயிது மாயை யாமெனும் போதமே. … 3 (2)

    –ரமணி, 28-07-2016, கலி.13/04/5117

    *****

    Share
  • தொல்காப்பிய அளவியலும் சங்கக் கவிதை மரபும்

    முனைவர் ப. தமிழரசி, பேராசிரியர் மற்றும் தலைவர், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை  – 21.

     

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே

    பின்னைப்  புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே   (மாணிக்கவாசகர்)

    என்ற மாணிக்கவாசகரின் வரிகள் மேற்கண்ட தலைப்புக்கு முற்றும் பொருந்தும். தமிழனின்  மிகப்பழம் இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியமும், சங்க இலக்கியமும்  நீண்ட நெடிய தமிழ் இலக்கிய செழுமையில் கரைந்து, மறைந்து விடாது தனக்கென தனித்த இடத்தை இன்று வரை தக்க வைத்துத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதே அதன் பெருமைக்குச் சான்றாகும்.

    இன்று நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப்பழமையானது தொல்காப்பியமே.  மனித வரலாற்றின் பழமையை மறந்துவிடாமல் ஆனால் அதே சமயம் புதுமையை மையப்படுத்தி எழுதப்பட்ட தலைசிறந்த நூல் இது. அகத்தியர் எழுதியது அகத்தியம். பன்னிருவர் எழுதியது பன்னிரு படலம். இந்திரன் எழுதியது ஐந்திறம். காக்கைப் பாடினியார் பாடியது காக்கைபாடினியம். அதுபோல  தொல்காப்பியரால் எழுதப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியமாகும்.  எழுத்து, சொல் என்ற இரண்டு குறித்து மட்டுமே அதிகம் பேசிவந்த காலத்தில் பொருள் குறித்து முதலில் பேசியவர் தொல்காப்பியர் தான்.

    தமிழன் உலகில் முதல் தோன்றியவன் என்பது உண்மையோ இல்லையோ ஆனால் முதன் முதலில் ஒலி என்பதை அடிப்படையாகக் கொண்டு மொழியை உருவாக்கியவன் தமிழன் தான்.  தொல்காப்பியம்  ஒலியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.  எழுத்தை மையப்படுத்தி எழுதாமையும் தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பு. ஒலியின் அளவு மாறுபாடுகளைச் சொல்வதே அளவியல் எனலாம்.

    தமிழனின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலகட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள் செய்தார்கள். பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை எண்ணல், எடுத்தல், முகத்தல்,  சார்த்தல் என்ற நான்காகும்.

    எண்ணல்        1 2 3 4  என வரிசையாக எண்ணிச் சொல்வது  வாய்பாடுகள்

    எடுத்தல்    (சார்த்தி அளத்தல்) ஒப்புமை கூறுதல் அதனை விட இது மேலானது என்பது போல மாத்திரை சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.

    முகத்தல்    பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு

    நீட்டல்   பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை (ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும்.

    தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை. அளவை மையமாகக் கொண்ட(உழக்கு) செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.

    ஒலியை மையப்படுத்தியே தொல்காப்பியம் எனும் போது  அந்த ஒலியின் அளவை மையப்படுத்தியே நூற்பாக்கள் எழுதப்பட்டன

    அவற்றுள்

    அ இ உ

    எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்

    ஓரளபு இசைக்கும் குற்றெழுத் தென்ப(3)

    என குற்றெழுத்துக்களுக்கு அளவு வரையறை செய்கிறார்

    ஆ ஈ ஊ

    ஏ ஐ

    ஒ ஓள என்னும் அப்பால் ஏழும்

    ஈரளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப(4)

    என்று நெட்டெழுத்துக்களுக்கு அளவு வரையறை செய்கிறார்.

    மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே(5)

    நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

    கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்(6)

    அம்மா….. என அழைப்பது போலத் தேவை நேரிடின் எழுத்துக்களைக் கூட்டிக் கொள்ளவும் சுதந்திரம் தருகிறார்.

    கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை

    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே(7)

    கண்ணிமை நொடி என எப்படி அளவு வைப்பது என்று கேட்பவர்களுக்கும் பழைய நூல் ஒன்றில் அளவு கூறப்படுகிறது அதாவது  மாத்திரை என்பதாவது

    எண்ணல் (கால்)  எடுத்தல் (அரை)  முறுக்கல் (முக்கால்)  விடுத்தல் (ஒன்று)

    அதாவது கை நொடிப்பொழுது என்பதனை நமது கையை நாம் சொடக்குப் போட எண்ணுவதும் எடுத்தலும் கையை முறுக்கலும்  சொடக்கு விடுவதுமாகிய நேரமே மாத்திரையின் அளவாக வரையறை செய்வதன் மூலம்நம் முன்னோர்களின் அறிவார்ந்த புலமையை அறிந்து கொள்ள இயலும்.

    அரையளபு குறுகல் மகரம் உடைத்தே

    இசையிடன் அருகும் தெரியுங் காலை(13)

    சரி மாத்திரையின் அளவைக் குறைக்க வேண்டுமா  அழைத்தலைச் சுருக்குங்கள் என்கிறார்.

    அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

    உளவென மொழிப இசையொடு சிவணிய

    நரம்பின் மறைய என்மனார் புலவர்(33)

    உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

    மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா

    ஆய்தம் அஃகாக் காலை யான(40)

    உந்தி முதலா முந்துவளி தோன்றித்

    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

    பல்லும் இதழும் நாவும் மூக்கும்

    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

    உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

    எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்

    பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

    திறப்படத் தெரியும் காட்சி யான(83)

    எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

    சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

    பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

    அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

    அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

    அஃது இவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும்

    மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே(102)

    மேற்காண் நூற்பாக்கள் அனைத்தும் நாம் பேசும் முறையில் வரும் ஒலிக்குறிப்பை கொண்டே அமைந்திருப்பதைக் காணலாம். எல்லா எழுத்தும் வெளிப்படையாக வரும் ஒலிக்குறிப்புகளை கொண்டே அமைக்கப்பெற்றிருப்பினும் சில ஒலிகளின் அளவுகளை வரையறை செய்வதை நம்மையே முடிவு செய்து கொள்ளச் சொல்கிறார் அது தான் அளவிற் கோடல் அந்தணர்  மறைத்தே என்னும் வரியாகும். அதாவது எழுத்தின் அளவினை சொல்லுபவன் தேவை கருதி நீட்டித்தலும் அல்லது சுருக்குதலும் செய்யலாம் என்கிறார். தொல்காப்பியத்தில் வரும் பிறப்பியல் முழுக்க அளவியலுக்குரியதே.  அதே போல புணரியல் முழுக்க ஒலி மோதல்கள் குறித்த செய்திகளை உள்ளடக்கியதே அதனால் தான் பெரும்பாலான சூத்திரங்கள் ஈறுகெடும்,முதல் மாறும் என்பதாக அமைகின்றன. ஆனால் தெளிவாக தொல்காப்பியர் காலம் உருண்டோடுவதைப் போன்றே எழுத்துக்களும் உருளும் மாறும் என்பதனை அவரின்

    உட்பெறு புள்ளி உருவா கும்மே(14)

    என்ற சூத்திரத்தை மையப்படுத்தி தெளிவாகச்  சொல்லிச் சென்றதைக் கொண்டே நாம் இங்கு சங்கப்பாடல்களை ஆராயப் போகிறோம்.

    சங்கக் கவிதை மரபு

    மரபு என்பது நாம் இன்று வரை சங்க இலக்கியம் என்று வரையறை செய்து வைத்திருப்பது 2379 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களைத்தான்.  அதைத்தாண்டி நாம் எதையும் ஆராய முற்பட்டதில்லை. அன்றைய சங்ககாலம் என்பதை வரலாற்று அறிஞர்கள் கிறித்துவின் தோற்றத்தோடு ஒப்பிட்டு, சம காலத்தது என்று வரையறுப்பதும் சங்க இலக்கியத்தின்  காலத்தை நிர்ணயம் செய்ய உதவும். சங்க காலத்திற்கு முற்பட்டோ அல்லது சம காலத்திலேயோ தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியம்  தன்னுடைய நூலில் கூறியுள்ள அடிப்படை மரபுகளை சங்க இலக்கியம் தன்னுள் கொண்டுள்ளதா என்று ஆய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.  மனிதன் என்று தோன்றினானோ அன்றே  மரபுகளும் தோற்றம் பெற்றுவிட்டன என்றுதான் கூற வேண்டும். மனித சமூகம் எதைக் கற்றதோ, எத்தகைய செயல்களை மேற்கொண்டதோ, எதில் பயிற்சி பெற்றதோ அந்த அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருத்தலே மரபாகும். தமிழர் பண்பாடு என்பது தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் பண்பாடு மட்டுமன்று: மரபுகளோடு இணைந்த ஒன்றே ஆகும். அதனால் தான் தொல்காப்பியர் மரபுகளைப் பற்றிக் கூறவரும்போது

    பாடலுள்  பயின்றவை நாடுங்காலை

    பாடல் சான்ற புலனெறி வழக்கம்

    உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்

    மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை

    என்கிறார். அதாவது தன்னுடைய வேலை என்பது செய்யுட்களில் பெரும்பான்மையாக இருப்பதை ஆராய்வது, செய்யுட்களில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மரபுகள், காலம் சார்ந்த  மரபுகளைப் பின்பற்றிப் பெரியோரால் எழுதப்பட்ட பாடல்கள்,  மரபு நிலை திரியாது இருத்தலைக் கண்டறிதல் என்று கூறுவதன் மூலம், அவர் தன்னுடைய முன்னோர்கள் பாடிய செய்யுட்களில் காணலாகும் மரபார்ந்த சிந்தனைகளை மட்டுமே தன்னுடைய கருத்துக்களின் அடிநாதமாகக் கொள்கிறார் எனலாம்.

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தோற்றம் பெற்றவை சங்கப் பாடல்கள். அவை  பல்நெடுங் காலமாக மக்களின் வாய்வழியே பல்வேறு ஊர்களுக்கு பாணன் வாயிலாக பயணம் செய்தவை. நமக்கு இன்று கையில் கிடைக்கும் பாடல்களைக் கொண்டு இதுதான் சங்க மரபு என்று வரையறை செய்ய நம்மால் நிச்சயம் முடியாது.பல்வேற காலகட்டங்களில் தொகுக்கப்பட்ட வாய்மொழிப் பாடல்களில் தொகுப்பாக உள்ள சங்கப் பாடல்களை மரபு சார்ந்து பார்க்க நேரிடின், அவை தோன்றிய காலச் சூழல், மரபு சார்ந்த பின்புலம், பாடல்களை உள்வாங்கிய செய்யுள் மரபு, அவற்றை வளர்த்தெடுத்த தொல்காப்பியம் போன்ற இலக்கண மரபு  என்ற நிலைகளில் வைத்தே ஆராய வேண்டும். மேற்காண் முறையில் பார்க்கும் போது தான் சங்க இலக்கியங்களின் அமைப்பு மரபினையும், ஒலி மற்றும் ஓசை மாற்றங்களையும், சமுதாய மாற்றங்களையும் உள்வாங்கிக் கொள்ள முடியும்..

    அன்றைய சங்கக் கவிதைகள் முழுக்க ஓசை அடிப்டையிலேயே எழுதப்பட்டன. கேட்போனுக்கு உணர்வை உண்டாக்குதலே அதன் தேவையாக இருந்திருக்கிறது. செய்யுளியல் முழுக்க ஓசை அடிப்படையில் அமைந்திருப்பதே அதன் சாட்சி.

    அசை, சீர், தளை ஓசை தான் அடிப்படை

    நேர் நேர்    தேமாங்காய்

    ஓசைக்கு ஓசையே ஒப்புமை – சார்த்தி அளத்தல்

    நீளமான ஓசைக்கு  சான்றாக – பசுபதி

    எழுத்துப் புறத்திசைத்த என்ற நூற்பாவை காணும் போது தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும் இசை கலந்தனவே என்று உறுதியாவதால் பாணனுக்கு இருந்த முதன்மை விளங்கும்.  தமிழில் அனைத்து எழுத்துக்களும்ஓசை ஒட்டி வரக்கூடியவையே. இல்லாத ஓசை எழுத்தில் வராது உள்ள ஓசை விடுபடாது. இது அடிப்படை மரபு. அன்றிலிருந்து இன்று வரை தொடர்வது.  வரி வடிவம் இல்லாத எழுத்தை தமிழில் நாம் உச்சரிப்பது இல்லை. இதுவும் மரபு தான்.  (அஃகு, Knife)  இன்றைய நிலையில் நாட்டார் பாடல்களை ஆய்வு செய்ய நேரிடின் அதில் காணலாகும் மரபார்ந்த செய்திகளை, தாள அமைப்பைக்  காணின் இதில் உள்ள உண்மை விளங்கும்.   தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் அவற்றைக்  கேட்போன்  தானாகவே தூக்க மற்றும் துக்க நிலைக்கும், துள்ளல் நிலைக்கும் ஆளாவான். அதன் மாற்றுப் பதிப்புத்தான் இன்று சென்னை எங்கும் மாறி ஒலிக்கும் கானாப் பாடல்கள் என்று கூடக் கூறலாம்.

    சுட்டி ஒருவர்  பெயர் கொளப்பெறார் என்ற சூத்திரத்தின் அடிப்படையே சங்க அகப்பாடல்களின் அடிஓட்டமாகக் கொள்ளலாம்.  அந்த அடிப்படை சங்கப் பாடல்களில் எந்த இடத்திலும் மாறுபடவில்லை. அப்படியே பெயர் அல்லது ஊர் கூறப்பட்டாலும் அது புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை அதற்குச் சான்றாகும். சான்று – நெடுநல்வாடை.  அதே போலப்  அன்பின் ஐந்திணை என்று  அகத்திணைக்குப் பெயர் தரினும் நால்வகை நிலங்களைக் கொண்டே தலைவன் அழைக்கப்படுவதும் அதனைக் கொண்டே நாம் திணையை முடிவு செய்து சொள்வதும் இயல்பாக அமைந்துள்ளமையைப் பார்க்கலாம்.

    புறத்திணையின் அடிப்படை மரபுகளான வழிபடல், வாழ்த்தல், புகழ்தல், கையற்றுப் புலம்பல் என்ற சில நிலைகளை எளிதாக வாசிப்போன் புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஓளவையார்  –  அதியமான் பாடல்களைப் படித்தால் போதுமானது.  ஔவைக்கும் அதியமானுக்கும் இருந்த நுட்பமான உறவு அவரின் 59 (அகம் 26, புறம் 33) பாடல்களிலும் புலப்படும்.  26 அகப்பாடல்களையும் பெயர் கூறாது ஒருவரிடம் கொடுத்துப் படிக்கச் செய்யின் காதல் நிறைவேறாத ஒரு முதிர் கன்னியின்  புலம்பல்களாக அல்லது ஏக்கங்களாகவே பல பாடல்கள் இருப்பதை உணர முடியும்.

    ஒரு நாள் கழியினும்  வேறுபடுஉம்  ( நற் 129)

    மெய்ம்மலி காமத்து   (நற்  187 )

    காதல் மிகுதியால் ஒரு பெண் கூறுவது போல எழுதப்பட்ட

    முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

    ஆஅ ஒல்லெனக் கூவுவேன்  கொல்  ( குறுந்  28)

    போன்ற  பாடல்களைச் சான்றாகக் கூறும்  போது மேற்கண்ட பாடல்கள் அனைத்தும் தொல்காப்பியரின் விதிகளை மீறி படைக்கப்பட்ட பாடல்களாகவே காட்சி அளிப்பதைக் காணலாம்.  அதே போல ஔவை பாடிய புறப்பாடல்கள் 33இல் 16 பாடல்கள் அதியனைப் பாடியது.  அவனின் வாழ்க்கை முழுவதையும் உடனிருந்து பாடியிருக்கிறார் எனும் போதும் விதிகள் புறந்தள்ளப்படுவதைக் காணலாம்.  அதியனின் அவைபுலவர் ஔவை கிடையாது. ஆனால் அவன் வாழ்க்கை முழுக்க ஔவை பயணிக்கிறார். இது அழகிய முரண்.   எண்தேர் செய்யும் தச்சனின் ஆற்றலோடு  (புறம் 87) அதியனை ஒப்பிடுவதாகட்டும், பொருநரும் உளரோ நீ களம் புகினே (புறம் 90) என்ற பாடலாகட்டும் நாம் காணும் ஔவை சங்க மரபுகளுக்கு மாறானவர் என்பது திண்ணம்.  இதே போல சங்கப் பாடல்கள் பலவற்றையும் நாம் இனம் காண முடியும். நீட்சி கருதி ஒன்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

    ஓசை ஒழுங்கால் இசை கலந்து இயற்றப்பட்ட செய்யுள்களையே பா அல்லது பாட்டு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  அவ்வகையில் சங்க இலக்கியப் பாடல்களில் பதிற்றுபத்து மட்டுமே இசை, வண்ணம், ஓசை ஆகியவை வகுக்கப்பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பா தான் நான்காகப் பகுக்கப்பட்டு ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா என கட்டமைக்கப்பட்டது. பிற்காலத்தில்  பாக்களுக்கென தனித்த நூல்களும் தனித்த பாடல்களும் இயற்றப்பட்டது வரலாறு.   இசையின் ஒரு பகுப்பாக வண்ணங்கள் கூறப்பட்டன.இது பாட்டின் ஓசை நயத்தைக் குறிப்பது. தொல்காப்பியர் வண்ணங்களை 20 என வகைப்படுத்தினார். பின்னாளில் இசைக்கு அளவு குறிக்கப்பட்டது.  அவ்வண்ணங்களுக்கும்  மாற்று கண்டறியப்பட்டு இன்று 20 ஆக இருந்த வண்ணங்கள் 200 வரை பல்கிப் பெருகி நிற்கின்றன.

    மேற்குறிப்பிட்டவை மட்டுமின்றி தொல்காப்பியர் பண்ணத்தி என்ற மற்றொரு வகையையும் குறிப்பிடுகிறார்.  இது பாடப்படும் இசைப்பாடலில்  எடுத்தாளப்படும் பாடுபொருளைக் குறிப்பிடுகிறது.  இதனை பல உரையாசிரியர்களும் பல்வேறு பொருளில் எடுத்தாளினும் இதுவே நாட்டுப்புற மரபு சார்ந்த பாடல்களைக் குறிப்பிடும் உண்மையான பெயராகக் கொள்ளலாம்.  நாட்டுப்புறங்களில்  பாடும் பாடலின் உட்கருத்தாக அமைவது பெரும்பாலும் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளேயாகும். பண்களுக்கு எழுச்சி தரும் பாடல்களாக அமைவதால் பண்ணத்தி  என்று இளம்பூரணர் சொல்வது போல எடுத்துக் கொண்டாலும் அவை குறிப்பிடுபவை நாட்டுப்புற பாடல்களையே என்பது தெளிவாகும்.

    தொல்காப்பியர் தோற்றுப் போன இடம் என்ற ஒன்றை நாம் குறிப்பிட வேண்டுமெனில் அது அகப்பொருள் பற்றிச் சொல்ல வரும் போது   கலியே, பரிபாட்டு என்பார்.   அதாவது அகப்பொருள் பற்றி பாடப்பட கலியும் பரிபாட்டும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்   அதாவது அவர் கருத்தின் படி காதல் என்ற உணர்வு மனிதனுக்கு மகிழ்வைத் தரக்கூடியது  கலி எனில் துள்ளல்  அதாவது காதல் சுகம் என்றும் பரிபாட்டு இசை இசையும் மகிழ்வைத் தரக்கூடியது என்றும் அர்த்தம் தொனிக்க கூறியுள்ளார் இந்த மரபு சங்கச் செய்யுட்களில் பல்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.  கலித்தொகை மட்டுமே அந்த மரபை ஒட்டி பாடப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

    சங்கச் செய்யுள் மரபில் பத்துப்பாட்டு வேறுபட்டு நிற்கிறது.  மதுரைக் காஞ்சி முழுக்க முழுக்க வஞ்சி நெடும்பாட்டாகும்.  வஞ்சி  – தூங்கலோசை அதைப் பயன்படுத்தி அதிகப்பாட்டுக்கள் பாடப்பட்டுள்ளது பத்துப்பாட்டில் தான்.  ஆற்றுப்படை என்கிற நெடும்பாடல்கள் அதிகம் பாடப்பட்டது பத்துப்பாட்டில் தான்.  பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்து அந்ததாதித் தொடையில் பாடப்பட்டுள்ளது அந்தாதி என்ற புதிய இலக்கிய வகை தோற்றம் பெற உதவிற்று எனலாம்.  தொல்காப்பியர் தொகுத்தளித்த செய்யுள் மரபுகளுக்கும், சங்கப் பாடல்களில் காணலாகும் மரபுகளுக்கும் மிகுந்த வேறுபாடுள்ளது. எனினும்   செய்யுள் என்பது மரபின் சாரம் என்ற  திறனாய்வுக் கருத்து இங்கு நினைவு கூறத்தக்கது.  அதுவே இந்தக் கட்டுரையின் செய்தியாகவும் அமைகிறது.

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு  (இரண்டாம்  பகுதி)

    க. பாலசுப்பிரமணியன்

     

    நண்பனே !

    நமது அமைதியான பயணத்தில்

    ஆயிரம் கேள்விகள்..

    என் உள்ளத்தில் …

     

    நண்பனே,

    நீ எதை நேசிக்கிறாய்?

    என் உடலையா ?

    அல்லது உயிரையா?

     

    உயிரின்றி இந்த உடலுக்கு

    என்ன பொருள்?

    உடல் என்றால் என்ன?

     

    உடலுக்குள் உயிரா ?

    உயிரால் உணர்வுற்ற உடலா?

     

    உடல்…

    எலும்புத் துண்டுகளை..

    இசைவாய் காற்றினில் அடுக்கி..

    ஈரக் காற்றில் ..

    மிதக்க விட்ட மாளிகையா?

     

    எங்கேயோ மிதக்கும் எண்ணங்கள்

    இளைப்பாற இடமின்றி

    களைப்பு நீங்க ஒதுங்கிவிடும்

    உலகத்தின் பூங்காவனமா?

     

    காதலென்றும் ..

    காமமென்றும் ..

    சுகமென்றும்..

    சொந்தமெடுத்து ..

    சுவைக்கின்ற  உணர்வுகளில்..

    உடலுக்குச்  சொந்தமெது?

     

    ஆணென்றும் பெண்ணென்றும்

    அங்கங்களில் அலங்கரித்தாய் !

    ஆசைகள் ஆர்ப்பரிக்க

    அங்கமெல்லாம் எரிந்துவிட ..

    அலைபாயும் மனதிற்கு

    உடலை அடிமையிட்டாய் !

     

    கூற்றுவனின் கொடும்பசிக்கு

    நாற்றுநாட்டு ..

    பயிர்வளர்த்து..

    கதிர் அறுக்கும் ..

    அறுவடையோ…

    இந்த உடல்?

     

    “உடலென்றும் உண்மையில்லை

    ஓடுகின்ற பாம்பு ..

    உறிக்கின்ற சட்டையது ..”

    ஓதுகின்ற மாமுனிவர்…

    உதடுகளில் உண்மையுண்டோ ?

     

    இந்தக் கூண்டுக்குள்

    எதைச் சிறை வைத்தாய்?

    தமனிகளும் நரம்புகளும்

    தானாக வந்தனவா?

    அல்லது…

    தரகுக்குத் தந்தாயா

    ஒரு வாழ்வுக்கு?

     

    ஜீவநதியாய் குருதிப்புனலை

    ஓடவிட்டு..

    உடலெல்லாம் கோலமிட

    யார் கற்றுக்கொடுத்தது ?

     

    பசியெடுத்தால் அறுசுவை..

    பாலுணர்வுக்கு  ஒரு சுவை..

    பாரமில்லா வாழ்வுக்குப் பணச்சுவை..

     

    பகடையாய் உடலைப் படைத்தாய்…

    பாம்பென்றும் ஏணியென்றும் படம்வரைந்து

    பரமபதத்தில் ஆடவிட்டாய் !

     

    ஒரு மூச்சுக் காற்றை நிறுத்திவிட்டு

    உடலுடன்  உறவை நீக்கி

    அழுகிவிடும் என்ற அச்சத்தில்

    ஊரெல்லாம் தேரோட்டி

    நடுக்காட்டில் சுட்டெரிக்க ..

    ஏனிந்த அவலம் ?

    யார் கேட்டது இந்த உடலை?

     

    நண்பனே!

    கதை அறியாமல்

    நான் நடிக்கும் ..

    இந்த  நாடகத்தில்

    நான் கோமானா ?

    அல்லது கோமாளியா?

    நாடகத்தில் உன் வேடமென்ன ?

     

    உடலுக்குப் பெயர்கொடுத்து

    உயிரோட்டம் உள்ளவரை

    உலாவ  விட்டது

    நீயா அல்லது நானா ?

    இந்த உயிரோட்டம் எதுவரை?

    என் விருப்பமா?

    அல்லது உன் விருப்பமா?

     

    இந்த உடல்

    உன் கட்டிடக் கலையின்

    திறனுக்கு ஒரு பரிமாணமா ?

     

    இதில் அழகு என்பது என்ன?

     

    கண்ணுக்கும் முகத்திற்கும்

    கட்டான உடலுக்கும்

    கற்பனையில் அழகென்ற

    பரிமாணம் ஏன் கொடுத்தாய்?

     

    அழகையும் அருவருப்பையும்

    எப்படிக் கற்பனை செய்தாய் ?

     

    ஆயிரம் உள்ளுணர்வுகளை

    அழகாகக் கோர்த்து ..

    எப்படி இதயத்தின் உள்ளே வைத்தாய் ?

    எதற்காக ?

     

    நீ..

     

    விஞ்ஞானியா?

    விவேகியா?

    விகடகவியா ?

     

    யார் உன்னைப் படைத்தது?

    உன் படைப்பில் என் பங்கு என்ன?

     

    நண்பனே!! …

    ஆலமரத்தடியில் அமர்ந்து

    ஆனந்த தத்துவத்தை

    சொல்லாமல் சொன்னவேனே !

    உன் அமைதியின் பொருளென்ன ?

     

    இந்த நெடிய பயணத்தில்

    நிச்சயமாக…

    நீ என்னோடு வருவாய்..

    எனக்குத் தெரியும்…

    ஆண்டுகள் தோறும்..

    யுகங்கள் தோறும்…

    நீயும் நானும்…

     

    ஆனால்

    ஏன் இந்த அமைதி?

    என் கேள்விகளுக்கு

    நான் எங்கே பதில் தேடுவது?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ”வீட்டுக்குள் விஸ்வரூபம்’’
    ————————————————

    88ea18a7-04eb-4dca-89f6-31f0712b8b7b

    ‘’மதிய உதயம் கதிர்மதியம் போல்முகத்தான்’’(மாட்னி ஷோ….!அசோதைக்கு(யசோதை)….!

    ”அந்தரங்க ராஜன்தன் அன்னை அசோதையை
    அந்தரங்க மாக அழைத்துப்போய், -தந்திரமாய்
    வட்டக் கதிர்மதியோன் வாய்பிளந்து காட்டுகிறான்
    விட்ட உறிக்கு வளர்ந்து’’(விஸ்வரூபம்)….கிரேசி மோகன்….

    வளர்ப்பு அன்னைக்கு ஸ்பெஷலாய் வளர்ந்து காட்டுகிறான்,
    அதேசமயம் கண்ணன் இதை சாக்காக வைத்து விட்டத்து உறி
    தொங்கும் வெண்ணைய்க்கு வேட்டு வைக்கிறானோ மாயாவி….!

    Share