Blog

  • ‘’ஆடிப் பெருக்கு’’……

     

    download
    ‘’புனரபி ஜனனம்’’
    ————————————–
    ’’ஆடிப் பெருக்கினாலும், ஆடா(து) இளைத்தாலும்,
    வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி
    இருக்கையில் இன்பம், பிரிகையில் துன்பம்,
    கருப்பையில் மீண்டும் குதிப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • படக்கவிதைப் போட்டி 74 – இன் முடிவுகள்

     

    13819697_1055298904524308_2074905093_n

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த வார புகைப்படத்தில் இ டம்பெற்றிருப்பவர் தன்னிடம் அடைக்கலம்  நாடி வந்த ஆட்டுக்குட்டிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மூதாட்டி. இம் மூதாட்டிக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    கருணையின் வடிவமாக, தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக் கொள்ளும் மண்ணிற்கும், கைம்மாறு கருதாமல் பொழியும் மழைக்கும் தாயின் கருணையை ஒப்பிட்டுக் கூறியிருக்கும் ராதா விஸ்வநாதனுக்குப் பாராட்டுகள்.

    உயிர் வதைக் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கிறார் சுவாதினி பரத்வாஜ்.

    கவனிக்க ஆளின்றித் தவிக்கும் மூதாட்டிக்கு நல்ல துணையென்று இருப்பது ஆட்டுக்குட்டி தான் என்று புதுமைப் பொலிவில் பழமைகள் கண் மறைக்கப் படுவதைச்  சுட்டுகின்றார் செண்பக ஜெகதீசன்.

    வேண்டாம் ஐந்தறிவு, என்ற ஒரு பக்க கவிதையில் விசுவின் குடும்பச் சித்திரம் போன்ற கதைப் பின்னலுடன் அழகிய கவிதை. உன் அன்பு மட்டுமே என் உயிர்துணையாய் இருக்கிறது, முதுமையின் எதிர்பார்ப்பைக் காட்டும் வரிகள். கவிதைப் படைத்துள்ள கொ.வை. அரங்கநாதனுக்குப் பாராட்டுகள்.

    மூதாட்டியின் மனித நேயத்தை எடுத்துக் கூறுகின்றார் பா. பொன்னி.

    பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியை, விதியை நொந்து சாபம் விடும் தாயாக அல்லாமல் , ஊன்று கோலாய் கிடைத்த ஆட்டுக்குட்டியோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடரக்கூடிய , எதையும் எதிர்கொள்ளும் தாயாக வெளிக்காட்டியுள்ள  சரஸ்வதி ராசேந்திரனுக்குப் பாராட்டுகள்.

    பொதுவாக வெளிவந்துள்ள கவிதைகள் மதுவினால், பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியை எடுத்துக் காட்டுகின்றன. நகர மயம், நாகரிக வளர்ச்சி, ஓட்டப் பந்தய வாழ்க்கை இதற்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்ப உறவில் புறந்தள்ளப்படும் முதுமையை எடுத்துக் காட்டியுள்ளது  இக்கவிதை,

    முதுமை போற்றுவோம்

    வீட்டின் கொல்லைப்புறத்தில்

    விலக்கப்பட்ட ஆட்டுஉரலோடு

    விடுவிக்கப்பட்ட உறவும்

    கவனிப்பாரற்றுத்தான் கிடக்கின்றது

    கருணை விழிகளுக்கு கதையாட உறவில்லை

    கரம் கோர்த்தாட கண்மணிகள் இல்லை

    புறக்கணிக்கப்பட்ட முதுமைக்கு

    புழக்கடையில் புத்துயிர் தருவது

    தொப்புள்கொடி உறவல்ல

    உணவுப் பதார்த்தங்களைப் பரிமாற

    காத்திருக்கும் கரங்களுக்கு

    அங்காந்து வாய்திறக்க

    அஃறிணை தவிர ஆளில்லை

    பாரம்பரிய நீரோட்டத்தில்

    குழுவாழ்க்கை சிதைந்து

    கூட்டுக்குடும்பமாய் கரைஒதுங்கினோம்

    தனிக்குடும்ப கொடிபிடித்து

    தனித்தீவாய்

    தனிமரமாய்…………..

    பேரன் பேத்திகளோடு குழாவிய பழங்கதைகள்

    நூற்றாண்டு பயணத்தில் கற்பனைகளாய்

    சுருங்கியது தசைகள் மட்டும் தான்

    இதயம் அல்ல எனும் பாவனையில்

    ஈரம் காட்டிய தாய்மை

    கருகிய மனங்களில் தாய்ப்பாலை வார்க்கட்டும்

    வருங்காலத்திலாவது

    முதுமை போற்றுவோம்

    சமூக மாற்றத்தால் குடும்பப் பாரம்பரியம் நலிவடைந்து வரும் இன்றைய சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டுகள்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    02f552fc-11d7-4a91-a3b3-5f00973db128
    ”புல்லாண்டு மேய்ந்து பொழுதைக் கழிக்காது,
    மல்லாண்டோன் தோளில் மயங்குது, -சொல்லாண்ட
    ஆழ்வார்கள் பாடிய ஆயிர நாமன்தோள்
    வீழ்வோர்க்கு வீடு வனம்’’….கிரேசி மோகன்….

    Share
  • உமையாள் திருப்புகழ் – 6

    விவேக்பாரதி

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் 
       தந்ததன தந்தனம் – தந்ததானா ! 

    முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம் 
    …முந்திவர வென்றதும் – தன்றனோடு 

    முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம் 
    …முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி !

    துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் ! 
    …துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத் 

    துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன் 
    …துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி !

    கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங் 
    …கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங் 

    கண்டவழி நல்கிடுங் கண்ணனவ னுந்தொழுங் 
    …கண்டவிட மன்னனின் – சம்புமாரி !

    சின்னமதி கொண்டிடுஞ் சிந்தைதெளி வும்பெறுஞ் ! 
    …சிங்கமதி லுள்ளநஞ் – சிந்துதாயைச் 

    சிந்தைசெய வந்திடும் நல்லவினை ! சந்தமுஞ் 
    …சிந்துமுமை யெங்களின் – சம்புமாரி ! 

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (75)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13867107_1059936447393887_1383995798_n

    138821911@N05_rமுபாரக் அலி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (8)

    kural-4-1

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    மனக்கவலை மாற்ற லரிது (7)

     

    தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகள் அடைந்தவருக்கு அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையைப் போக்க முடியாது.

     

    சொற்பொருள்

    தாள் = காகிதம், பாதம்

    கவலை = கவலுதல், ஒன்று, இரண்டாகப் பிரிதல். என் மனம் கவல்கிறதே. கவலை என்பது இருமை

    அரிது = சாத்தியமன்று

    ஆங்கில இணைச் சொற்கள்

    தனக்கு உவமை இல்லாதான் = Peerless one, Incomparable

    கவலை +Worry, anxiety, forking

    அரிது = dear, difficult, rare, impossible

     

     

     

    இலக்கணம்:

    தனக்கு – நான்காம் வேற்றுமை உருபு.விரித்தல்

    உறவுப் பொருள் = நான்காம் வேற்றுமை = எனக்கு

    உடைமைப் பொருள் = ஆறாம் வேற்றுமை = என்னுடைய

    தாள் – சினையாகு பெயர். சினை என்றால் உறுப்பு. தாள் என்றால் பாதங்கள் அல்லவா? இங்கே கால்கள், தாள் என்றது, அவற்றையுடைய கடவுளைக் குறிப்பிடுகிறதல்லவா? உறுப்பைச் சொல்லி அதன் மூலம் அந்த உறுப்புக்கு உடையவனைச் சுட்டுகிறது. தலைக்குப் பத்து ரூபாய் கூலி என்பது போல

    அல்லால்-எதிர்மறை, குறிப்பு வினையெச்சம்.  அன்றி என்று பொருள்படும்.

    மனிதனை பாதிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று மனம். இன்னொன்று கவலை. மனனம் செய்பவன் மனிதன். தான் என்னும் நினைப்பிருப்பவன் மனிதன். தான் உள்ளோம் என்பது மனிதனுக்குத் தெரியும். பசுவுக்குத் தான் பசு என்பது தெரியாது. மனிதனுக்குத் தான் இருப்பதும் தெரியும்; பசுவும் தெரியும். இதற்குக் காரணம் மனம்!

    `கவலைப் படுதலே கடுநரகம்மா,` என்பான் பாரதி. நரகம் என்று ஒன்று எங்கோ இல்லை. கவலையே நரகம். `கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல்,` என்றும் பாடுவான் பாரதி. துக்கத்தில் ருசி கொண்டுவிட்டால் அந்த மனிதன் தொலைந்தே போகிறான். கவலையும் ஒரு போதையாகி மனிதன் அதற்கு அடிமைப்பட்டுப் போகிறான்.

    யாருக்கும் எதற்கும் நிகரில்லாதவன் இறைவன். ஒப்பிட முடியாதவன் இறைவன். எனவே அதுபோல் இதுபோல் என்னும் உவமைகளுக்கு உட்படுத்த முடியாதவன்.

    அவன் ஒருவன். ஒன்றே அவன். இருமைகள் நீங்கியே அந்த ஒருமையின் அருமையை உணர முடியும். இருமையே நமக்குத் துன்பம் தருவது. இருமை என்றால் என்ன? ரெண்டாட்டம். மனம் எப்போதும் சஞ்சலிக்கிறது – நடக்குமா-நடக்காதா? கிடைக்குமா-கிடைக்காதா? இருக்குமா-இருக்காதா? போன்ற இடைவிடாத இருமைகளால் பந்தாடப் படுகிறோம். இருமைதான் கவலை.

    கவலை என்பது `கவற்சி` என்னும் சொல்லிலிருந்து வருவது. கவண், கவடு, இவை forking என்பதை, பிரிந்து போகிற பாதை என்பதை, அதாவது ஒன்றாயிருந்தது இரண்டுபடுவதைக் குறிக்கின்றன. தாமாய் இருந்தோம். நானும் நீயுமானோம். நாமாகித் தாமாக விழைகிறோம். அதுவே விடுதலை. `கவலையற்றிருப்பதே முக்தி,` என்றும் சொன்னான் பாரதி. அது எப்படி சாத்தியம்?

    நோய் என்பது எப்போது நீங்கும்? இன்னொரு நோயாளியிடம் சென்று பயனில்லை. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கிக் கொள்ளவேண்டும். மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொண்டால். அதுமட்டும் போதுமா? நாம் இருமல் தொல்லை தாங்க முடியாமல் மருத்துவரிடம் சென்றால், அவரும் ஓயாமல் இருமிக் கொண்டிருந்தால், அவரிடம் மருந்து வாங்கிக்கொள்ள நமக்கு மனம் வருமா?  நாம் நம்புவது மருந்தை அல்ல, மருத்துவரை! முகம்தெரியாத ஓட்டுனரை நம்பித்தான் ரயிலில் ஏறுகிறோம். ஏறிய பிறகும் சுமைகளைச் சுமப்பானேன்? இறக்கிவைத்துவிட்டு நீட்டிப் படுக்க வேண்டியதுதானே என்பார் ரமணர். ஆக, கவலை நீங்க வேண்டுமானால் முதலில் நமக்கு நம்பிக்கை வேண்டும். `என்னைக் காப்பது உன் பொறுப்பு. நான், நீ புனைந்த கவிதை. நீ ஆசையுடன் தோற்றுவித்த பிள்ளை,` என்கின்ற நினைப்பு நமக்கு இறைவனிடம் இருக்க வேண்டும். இரண்டாவது, நல்ல ஆர்வம் இருக்க வேண்டும். `நான் இருப்பது நாற்றம் பிடித்த சேறு. இதிலிருந்து எப்படியும் நான் வெளியே வரவேண்டும்,` என்னும் ஆர்வம் இருக்கவேண்டும். நாற்றத்தில் வெறுப்பின்றி நலம் நமக்கு நேராது. எந்தக் கவலையும் எப்போதும் இல்லாதவன் இறைவன் மட்டும்தான்.

    அதுபோல், கவலை என்பது எப்போது நீங்கும்? அது இல்லாதவனை நாடும்போதுதான். அவனை யாரோடும் எதனோடும் ஒப்பிட முடியாது. எனவே தனக்குவமை இல்லாதவன். இதுபோல் அதுபோல் என்று அவனைச் சொல்ல முடியாது. எனில், அவனுக்கு நிகரும் இல்லை.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

    உலகு இன்பக் கேணி

    என்றான் பாரதி. இறைக்க இறைக்க இன்பமே தரும் கேணியாக இந்த உலகம் எப்போது தோன்றும்? இருப்பது ஒன்றே. அதுவே பரம்பொருள். நாம் அதனுடைய குழந்தைகள் என்கின்ற செம்மாந்த நினைப்பு தோன்றும்போதுதான்!

    இறைவன் கவலையாகிய இருமை இல்லாதவன். ஆண்டவனுக்குக் கவலை கிடையாது. அவன் அவனைப் பற்றியோ நம்மைப் பற்றியோ கவலைப் படுகிறவன் அல்லவே! அவனுடைய ஈரடிகளும் ஒன்றே! இதை விளக்குமுகமாகவும் அவனை ஏகபாதனாய் வருணிப்பார்கள். `யதங்க்ரி கமல த்வந்தம், த்வந்த தாப நிவாரணம்`  என்கிறது குரு ஸ்துதி. அவனுடைய சீரடிகளாகிய ஈரடிகளைச் சேர்ந்தால்தான் நம் இருள்சேர் இருவினைக்குக் காரணமான இருமை தீரும்.

    `மாற்றல்` என்றால், துயரத்திற்கு மாற்று. அல்லது இருமையை ஒருமையாய் மாற்றல். கவலையின் திசையை மாற்றி விடுகிறான் கடவுள். காமத்தின் மீது குரோதம், என்று ஒன்றை ஒன்றின் மீது ஏவி விடுவதே இது! ஆவக்காய் ஊறுகாயில் உள்ள பொருட்கள் ஒன்றுக்கு ஒன்று மாற்றாக இருக்கும். ஒன்று கூடிச் சுவையை நல்கும். ஆக, அவனிடம் பற்றுக்கொண்டு, அவன் அருளைப் பற்றியே கவலைப் பட்டால், வேறு கவலைகள் யாவும் விடுபடும்.

    கவலை யாவும் கன்னியராகி

    அவர்கள் நடுவில் கண்ணன்..

    கவலைகளே கன்னியராகி அவர்கள் நடுவில் கண்ணன் காட்சி தருகிறான்.

    திசைதொலைந்து திணறும் போது

    தெருவின் முனையில் கண்ணன்

    இதுதான் மனக்கவலை மாற்றல்.

    `அரிது` என்பது `இயலாது` என்றும் பொருள்படும். பொதுவாக, பெரியோர்கள் ‘அரிது’ என்றால் அது ஆகிற காரியமே இல்லை என்று புரிந்துகொள்வது நல்லது. இங்கே ‘அரிது’ என்றவர் திருவள்ளுவர் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது!

     தொடருவோம்

     

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-23

    மீனாட்சி பாலகணேஷ்

    உண்ணாமுலைக்கு எந்தமலை ஒப்பாகும்?

    4b817202-4ed1-4e21-93d7-91b9137e56f7

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்களின் அழகே ஒவ்வொரு பருவத்துப் பாடல்களிலும் புலவர்களால் புனைந்து கூறப்படும் ரசமான சிறுசிறு நிகழ்ச்சிகளும் நயம்மிகுந்த அணிகளும்தான். சொற்பின்வரு நிலையணியைக் கையாண்டு சுவைபடக் கவிபுனைவதில் உண்ணாமலையம்மை பிள்ளைத்தமிழினைப் படைத்த சோணாசல பாரதியார் முதன்மையிடம் வகிக்கிறார் எனலாம். ஒவ்வொரு பருவத்திலும் மலை, மான், புலி, பாணி, முத்து, போன்ற சொற்களை அழகுறப் பொருத்தமாகத் திரும்பத்திரும்பக் கையாண்டு புலவனார் படைத்துள்ள பாடல்கள் பயில்வோர் உள்ளங்களை மிகுந்த உவகையில் ஆழ்த்துகின்றன. இக்கட்டுரையில் அத்தகைய அழகிய இரு பாடல்களைக் காணலாமே!
    *****
    சிறுகுழந்தை செங்கீரையாடியபடி வருகிறாள். பார்ப்பவர்கள் உள்ளம் பரவசத்திலாழ்கிறது. ஒருகாலை மடக்கியும், மறுகாலை நீட்டியும் நகரும்போது, காலிலணிந்த சிறுசதங்கை ஒலியெழுப்புகிறது. கழுத்திலணிந்த முத்துமாலைகளும் மற்றும் இடையிலணிந்த மேகலையும் தழைந்தாடுகின்றன. தலைமயிரை அன்னை உச்சிக்குடுமியாக முடிந்து அதிலும் அணிகலன்களை அணிவித்திருக்கிறாள். இவையனைத்துடனும் இப்பெண்மகவு தவழ்ந்து செங்கீரையாடி வருவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சி!

    காணும் செவிலித்தாய்க்கு இக்குழந்தை பராசக்தி அன்னையெனவே கண்ணில் தெரிகிறாள். பெருமை பெற்றுத்திகழும் அருணைநகர் எனும் ஊரில் பொருந்தி, நிலைபெற்று மகிழ்ச்சியாக வாழும் இந்தக்கன்னியே உண்ணாமுலை அம்மையெனக் கண்டுகொண்ட அச்செவிலித்தாய் தெய்வ அருள் பெற்றவள் எனலாம். தாதியர் புடைசூழ நின்று தனது செல்வமகளின் பெருமைகளைப் பட்டியலிடுகிறாள்.
    “மஞ்சரி! கேள்! விந்தியமலை, முனிவரான அகத்தியர் கையால் பாதாளத்தில் வீழ்ந்த மலையாகும்;

    “பொதிகைமலை, முனிவரான அகத்தியரால் அடியால் மிதிக்கப்பட்டமலை- (சிவ-பார்வதி திருமணத்தின்போது அனைவரும் இமயமலையில் கூடிவிட்டதால், இமயமலை தாழத்துவங்கவே, சிவனார் அகத்தியக் குறுமுனியிடம் பொதிகைமலைக்குச் சென்று காலால் அழுத்தி அதனை நேர் செய்ய அருளினார். ஆகவே அது அகத்தியரால் மிதிகொள்மலை ஆயிற்று);

    “வாருணி, உனக்குத் தெரியுமா? வெள்ளிமலை எனும் இமயமலையில் அமர்ந்தவனும், பிரமனின் ஒரு தலையைக் கிள்ளியவனுமான சிவபிரான் உறையும் மலை இன்னொருமலை;

    “அரக்கனான இராவணன் வெடுக்கென்று தனது இருபது கரங்களாலும் எடுத்த (தூக்கிய) மலையும் மற்றொருமலை;

    “கமலம்! திருமால் முன்பொருநாள் அழகிய அலைகடலைக் கடைவதற்காக எடுத்த மந்தரமலை என்னும் பருத்ததொருமலை; மத்தாகிய மலை என்பதை நீ அறிந்தாயோ?
    “உக்கிரகுமார பாண்டியனால் (பொன்முடி வழுதி) செண்டால் அடிக்கப்பட்ட மலையும் உண்டு கண்டாயோ?

    “காற்றினால் தாக்கப்பட்டு இடியுண்டு மூன்று சிகரங்களை இழந்தமலை,
    “இவையனைத்து மலைகளில் எந்தமலை நமது அம்மையின் உண்ணாமுலைக்கு நிகராகும்? ஒப்பாகும்? யாரால் இதற்கு விடைபகர இயலும்?” எனக் கேட்கின்றாள் செவிலித்தாய்.

    மதிநுட்பம் நிறைந்தவளான மஞ்சரி கூறுகிறாள்: “எங்கள் இறைவனார் உறையும் அண்ணாமலையே அதற்கு ஒப்பாகும்; உண்ணாமுலைக்கு நிகராகும்,” என்று. செவிலித்தாயின் முகத்தில் முறுவல் பூக்கின்றது; மற்ற பெண்கள் கரங்களைக் கொட்டி மகிழ்கின்றனர்.

    அவள் மட்டுமா அதனைக் கூறினாள்? இல்லையில்லை. “வெண்கமல மலரான வெள்ளைத்தாமரையில் உறையும் வாணியும், சிவந்த தாமரை மலரில் உறையும் திருமகளும், தேவலோகத்தின் அரசியான இந்திராணியும், மன்மதனின் துணைவியான இரதிதேவியும் கூட இவ்வாறேகூறி தமது உள்ளங்கள் மாறுபடாது பணிகின்ற மலைமகள் இவள்; உமையாகிய அமலை- தூயவள்,” என்கின்றனர் அனைவரும் ஒருமித்த குரலில்.

    “அத்தகைய அன்னையே! செங்கீரை ஆடியருளுக: அருணைநகரில் வாழ்பவளே! செங்கீரையாடியருளூக!” என அனைவரும் வேண்டி நிற்கின்றனர்.
    அன்னையின் உண்ணாமுலைக்கு ஒப்பிடப்பட்டுத் தோற்றுப்போனாலும், மலைக்குக் கிடைத்த பெருமை சொல்ல முடியுமா? ஒப்பற்ற ஒருத்தியுடன் ஒப்பிடப்பட்டு விட்டதல்லவா?

    விந்தமலை பாதலம் விழுந்தமலை பொதியமலை
    மிதிகொண் மலை முனிகையடியான்
    வெள்ளிமலை யமர்த லைகிள்ளிமலை நிருதன்
    வெடுக்கென் றெடுத்தமலைமான்
    முந்தமலை கடையைநிமிர் மந்தர மெனும்பெரிய
    மொத்துமலை மத்துமலைபொன்
    முடிவழுதி யடியுண்ட மலைகாலி னிடியுண்டு
    முடிமூன்று போனமலைபின்
    எந்தமலை நின்றிரு வுணாமுலைக் கொப்பாகு
    இறைவரண் ணாமலையதே
    என்றென்று துதிசெய்து வெண்கமலை செங்கமலை
    இந்திரா ணியுமிரதியும்
    சித்தமலை யாதுபணி யுமயமலை யுமையமலை
    செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
    செங்கீரை யாடியருளே

    (உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- சோணாசல பாரதியார்)
    *****

    இன்னொரு சுவையான உரையாடல்; அன்னைக்கும் அத்தனுக்குமிடையே நிகழ்வது; நாமும் கேட்போமே!

    “உமையே! உன்னை உலகம் முழுமையும் பெற்ற கருணை நிறைந்த தாய் என்று வேதங்கள் புகழ்ந்து கொண்டாடுகின்றன; ஆனால் உனக்கோ உண்ணாமுலை என்று பெயர்! நீ பால் தராவிட்டால் உலகத்திலுள்ள உனது குழந்தைகள் எவ்வாறு பயனடைவார்கள்?” என எல்லாம் அறிந்த இறைவனான அண்ணாமலைப்பிரான் அவளிடம் மென்மையாகக் கேட்கிறான்.

    உண்ணாமுலையம்மை இதனைக்கேட்டுச் சிறுமுறுவல் கொள்கிறாள். கேள்விக்கு மறுமொழியாகத் தானும் ஒரு கேள்வியை முன்வைக்கிறாள்!

    “ஐயனே! அடிகள், எல்லா உயிர்களுக்கும் தந்தை அன்றோ? தங்கள் வீடான இது அண்ணாமலை; அதாவது அணுக இயலாத மலையல்லவோ? அப்படியானால் உயிர்கள் எவ்வாறு உம்மால் பயனடைய முடியும்? நினைத்துப் பார்த்தீர்களா?” எனக்கேட்கிறாள்.

    “எம்மை நினைத்தாலே போதும்! அணுகிவரக்கூட வேண்டாம். கலகவினை நீக்கி உயர்கதியை அடையச் செய்வோம்,” என்கிறான் அண்ணாமலையான்.

    “அதுபோன்றே உள்ளன்போடு என்னையும் நினைத்திட்டால் போதும்! மிகுந்த ஞானத்தை அளிக்கும் அமுதினைக் கொடுத்து உயிர்களை நானும் காப்பேன்,” என விடையிறுக்கிறாள் அன்னை.

    080ade59-557d-4573-a977-05f675ba96bf
    “இவ்வாறு எந்தையாகிய சிவபிரான் களிப்பெய்துமாறு கூறிடும் அன்னையே! வாள்போன்ற நெற்றியும், மைதீட்டிய விழிகளும்கொண்டு, வெண்மையான முறுவல் பூப்பவளே! கிள்ளை மொழியாளே! நீ செங்கீரையாடியருளுக,” எனத் தாதியர் வேண்டுவதாகப் புலவர் பாடுகின்றார்.

    உலகமுழு தும்பெற்ற கருணைமா தாவென்
    றுவந்துமறை முரசறையநீ
    யுண்ணா முலைப்பெயர் புனைந்தனை யுயிர்ச்சிறா
    ருய்யும்வண மெவ்வணமெனா
    விலகவிள முரலொடு மண்ணா மலைப்பிரா
    னின்பவுரை யாடவடிக
    ளெவ்வுயிர்க் கும்பிதா வன்றுகொ னும்பெயரின்
    யாதுபய னென்னநினையிற்
    கலகவினை நீக்கியுயர் கதியருளு வோமெனக்
    காதலுட னெனையுநினையிற்
    கனஞான வமுதீந்து காப்பலென வெந்தையுங்
    களிகூர விளையாடுநற்
    றிலகவா ணுதன்மைக்கண் வெண்ணகைப் பைங்கிள்ளை
    செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
    செங்கீரை யாடியருளே.

    (உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- சோணாசல பாரதியார்)
    இதுபோன்ற இன்னும் எத்தனையெத்தனை கவின்மிகு பாடல்கள்? சுவைக்கச் சுவைக்கக் குறையாத தேனூறும் தமிழ்ச் செல்வங்கள்- இவற்றைத் தம்முள் இருத்திக்கொண்டு மிளிரும் இலக்கியச் சித்திரங்கள். தொடர்ந்து வரைவோம்; காண்போம்; களிப்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (14)

    நிர்மலா ராகவன்

    மாமனார் மெச்சிய மருமகன்

    நலம்-

    `என் கணவரோட அண்ணனை இப்போ பாத்தா, சுட்டுக் கொன்னுடுவேன்!’

    நானும் என் சிநேகிதி மாதங்கியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மூன்று மணி நேரப் பயணம். அரை மணி நேரம் ஏதேதோ பேசிவிட்டு, அவள் தன் திருமணக் கதையை விவரிக்க ஆரம்பித்தாள். பாதியில், ஆத்திரத்துடன் தன் கொலைவெறியை வெளிப்படுத்தினாள்.

    அப்படி என்னதான் ஆகிவிட்டது?

    தந்தையின் செல்லப்பெண் குடும்பத்தில் கடைக்குட்டியான மாதங்கி. அயல் நாடுகளில் பத்து வருட கல்லூரிப் படிப்பு படித்திருந்தாலும், ஆண்களுடன் அதிகப் பழக்கம் இருக்கவில்லை அவளுக்கு.

    படிப்பு முடிந்ததும் கைநிறையச் சம்பளத்துடன் உத்தியோகம். அடுத்தது கல்யாணம்தானே!

    வேற்றூரில் இருந்த தந்தை, `நம் சாதியிலேயே ஒரு பையன் இருக்கிறார். உன்னைமாதிரியே நன்றாகப் படித்தவர். நீ போய் பார்!’ என்று தொலைபேசிவழி கூற, மகள் மறுத்தாள்.

    மாப்பிள்ளைப் பையனும், அவரது அண்ணனும் அவளைப் பார்க்க வந்தார்கள். ஏதோ பொது இடத்தில்.

    அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தட்டிக்கழிக்கப் பார்த்தாள்.

    மாப்பிள்ளைக்கும் சந்தேகம் வந்தது: நம் சாதியில் இவ்வளவு படித்த பெண்களே கிடையாதே! இவள் நம்மை மதிப்பாளா?

    “அந்த அண்ணன்தான் இவர் மனசைக் கலைச்சிருக்கணும் — `அவ நல்லா சம்பாதிச்சுப் போடுவா. நீ மொதல்லேயே அடக்கி வைச்சுடு,’ அப்படின்னு,” மனம்நொந்து பேசினாள்.
    “என் பெற்றோர் ஏழைத் தொழிலாளிகளாக இருந்தவர்கள்,” என்று வருங்காலக் கணவர் ஒப்புக்கொள்ள, `நம் பெற்றோரும் அப்படித்தானே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிற்று. ஆண்களுடன் கலந்து பழகியது கிடையாததால் அவர் குணம் அவளுக்குப் பிடிபடவில்லை. கல்லூரியில் அவ்வளவு தூரம் அவளைப் பொத்திப் பாதுகாத்திருந்தனர் இரு அண்ணன்களும்.

    வருங்கால மாப்பிள்ளை அடிக்கடி மாமனாரைச் சந்தித்தான். இப்போது அவர் பெரிய முதலாளியாகி இருந்தார், கடுமையான உழைப்பினாலும், நேர்மையாலும். அவனுடைய போலிப்பணிவில் மயங்கினார் பெரியவர்.

    தந்தையே இவ்வளவு தூரம் வற்புறுத்தும்போது சரியாகத்தான் இருக்கும் என்று கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டாள் மாதங்கி.

    கணவரோ, தாய் சொல்லியபடியெல்லாம் ஆடினார். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவியை நையப் புடைத்தார்.

    “ஏன் பொறுத்துப் போனீர்கள்?” என்று கேட்டேன்.

    மலேசியாவில் சிறிய ரப்பர் எஸ்டேட்டில் வளர்ந்திருந்த பெண். தன் அறிவுத்திறனாலேயே பலரும் மதிக்க வாழ்ந்திருந்தாள். எது கேட்டாலும், `போ. படி!’ என்று தந்தை விரட்டியதாலேயே தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாகச் சொல்லிச் சிரித்தாள்.

    அப்படிப்பட்ட தந்தை பார்த்து வைத்த மருமகன்! அவரைப்பற்றிக் குற்றம் சொல்வது தந்தையைப் பழிப்பதுபோல் ஆகிவிடுமோ?

    தான் சொன்னாலும் தந்தை நம்புவாரா?

    `ஆண்கள் முன்னேபின்னேதான் இருப்பார்கள்!’ என்று அவளைச் சமாதானம் செய்துவிட்டால்?

    தான் கணவரிடம் படும் பாடு பிறருக்குத் தெரியாதிருந்தால்தான் தனக்கு மரியாதை என்று கணக்குப்போட்டாள் அப்பேதை.

    எப்போது பார்த்தாலும், `எங்க ஐயா!’ என்று கணவரைப்பற்றி பெருமையுடன் மாதங்கி பேசியதைக் கேட்டிருந்தேன் நான். அப்போதெல்லாம், `தாலி கட்டியவரிடம் எப்படி உயிரையே வைத்திருக்கிறாள்!’ என்று வியந்து போயிருக்கிறேன்.

    ஒரு பொது நிகழ்ச்சியில் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அதிர்ந்து போனேன். குணவானாகத் தெரியவில்லை. இவரைப்பற்றியா பெருமையாகப் பேசுகிறாள்!

    சில ஆண்டுகள் கழித்து, நானும் மாதங்கியும் ஓர் ஊருக்கு ஒன்றாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் அதற்கு மேலும் பொறுக்க முடியாது, என்னிடம் எல்லா உண்மைகளையும் கூறினாள். அதற்காகவே என்னை வருந்தி அழைத்திருந்தாள் என்றுதான் தோன்றியது.

    ஏதோ வேகத்துடன், ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள், “எல்லாத்தையும் இப்பவே மறந்துடுங்க, நிர்மலா!” என்று கெஞ்சியபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது.

    கணவர் மோசமாக இருந்தால் இருந்துவிட்டுப் போகிறார்! அதனால் அவரை மணந்த பெண்ணுக்கு என்ன இழுக்கு? அவள்மேல் என்ன தவறு? எதற்காக மூடி மறைத்து, பொய்யான வாழ்க்கை வாழவேண்டும்?

    நாங்கள் திரும்புகையில், அவள் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. “ஸாரிம்மா. என்னால ஒன்கூட வரமுடியலே!’ என்று உருகினார். தான் கிளப்பில் குடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாராம். மனைவி சம்பாதிப்பதையெல்லாம் பின் எப்படித்தான் செலவழிப்பது?

    இவள் அலட்சியமாக, “அதனால என்ன! என் கூட்டாளி எங்கூட வந்திருக்காங்க,” என்றாள்.

    “யாரு?”

    “நிர்மலா ராகவன்!”

    “ஒங்க பேரைக் கேட்டு அவருக்கு ஒரே ஷாக்! என்னை நம்பலே!” என்றாள் பெருமையுடன் சிரித்தபடி. “நீங்க பேசுங்க!”

    நான் அவருக்கு `ஹலோ’ சொன்னேன். அந்தப் பக்கத்திலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

    அவள் தொலைபேசியை மூடிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள்.

    நானும் லேசாகச் சிரித்தேன். `தான் எப்படி வளைத்தாலும் வளைந்து கொடுக்கும் மனைவி எதற்காக இப்படி ஒரு தோழியைத் தேடிப் பிடித்தாள்? நம் போதாத காலம், இவளுக்கு எங்காவது தன்னை எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டால்?’ என்று அஞ்சியிருப்பார்.

    எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இதேபோல் வேறு ஒரு பெண் என்னை நாடி, தான் கணவரிடம் படும் அவதிகளைக் கேலியுடன் கூற, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர் `போகலாம். வா!’ என்று அவளை இழுக்காத குறையாக திரும்ப அழைத்துப்போனார்!

    தாம் செய்வது — மனைவியைக் கேவலமாக நடத்துவது, உடல்வதை மட்டுமின்றி, பிறர்முன் மட்டம் தட்டி, உணர்ச்சிபூர்வமாகவும் வதைப்பது — தவறு என்று இவரைப் போன்ற ஆண்களுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தே செய்வதால், தம்மை மாற்றிக்கொள்ளும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. ஆகையால், அது `தவறு’ என்று பிறர் சுட்டிக்காட்டுவது பொறுக்க முடியாததுதான்.

    பெண்ணுக்குப் பொறுமைதான் சிறந்த ஆபரணம் என்று நம்பவைக்கிற, நம்புகிற, பிற பெண்கள் இருக்கும்வரை இத்தகையவர்கள் எதற்காக மாறப்போகிறார்கள்!

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய் (131)

    செண்பக ஜெகதீசன்

     

    விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்         

    கற்றாரோ டேனை யவர்.   

                   -திருக்குறள் -410(கல்லாமை)

     

    புதுக் கவிதையில்…

    அறிவுதரும் நூல்பல

    கற்றவரேர்டு

    கல்லாதவரை ஒப்பிடுகையில்,

    கல்லாதவர்

    விலங்குகளுக்கும் மாந்தர்களுக்குமுள்ள

    வேறுபாட்டை உடையோரே…!

     

    குறும்பாவில்…

    கல்லாதவரை அறிவுநூல் பலவும்

    கற்றவரோடு ஒப்பிடுகையில்,  

    விலங்குக்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடுதான்…!

     

    மரபுக் கவிதையில்…

    அறிவைத் தந்திடும் நூல்பலவும்

    ஆர்வ முடனே கற்றவரை,

    நெறிமுறை யில்லாக் கல்லாரொடு

    நேர்மை யாக ஒப்பிட்டால்,

    அறிந்து கொள்வாய் உண்மைதனை

    ஐந்தே அறிவுடை விலங்குகட்கும்

    அறிவது ஆறுடை மாந்தருக்கும்

    அளவி லுள்ள வேறுபாடே…!

     

    லிமரைக்கூ…

    கல்லாதவரை நூல்கற்றோருடன் ஒப்பிடு, 

    காண்பாய் விங்குகட்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடு,  

    உண்மைதான் யிதுவெனச் செப்பிடு…!

     

    கிராமிய பாணியில்…

    படிக்கணும்படிக்கணும் நல்லாப்படிக்கணும்

    பகுத்தறிவு வளர நல்லாப்படிக்கணும்..

     

    கல்வி அறிவு இல்லாதவனுக்கும்

    பலபல நூலப் படிச்சவனுக்கும்

    இதுதான்பாரு வித்தியாசம்..

    அஞ்சறிவு மிருகத்துக்கும்

    ஆறறிவு மனுசனுக்குமுள்ள வித்தியாசந்நதான்..

     

    அதால,

    படிக்கணும்படிக்கணும் நல்லாப்படிக்கணும்

    பகுத்தறிவு வளர நல்லாப்படிக்கணும்,

    பொல்லாதது பொல்லாதது

    கல்லாம பொல்லாதது…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 217

    மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை

    மலர்சபா

     

    thalaivi

     

    புகழ்மிக்க அரசன் கரிகாலன் மகள் ஆதிநந்தி.

    வஞ்சி நகரத்தின் தலைவன் 

    அவள் கணவன் ஆட்டனத்தியைக்

    காவிரி நீர் அடித்துச் சென்றது.

    ஆதிமந்தி ஆறு ஓடும் வழியாகத் 

    தானும் ஓடிச்சென்று,

    “கல்லைப்போன்ற தோள்உடையவனே!

    நீ எங்கே இருக்கிறாய்?”

    எனக் கூவிப் பலமுறை அரற்ற,

    கடல் உடனே ஆட்டனத்தியை

    அவள் முன் நிறுத்தியது.

    காதலனைத் தழுவிக்கொண்டு

    பொற்கொடி போல வந்த 

    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

     

    மணல் நிறைந்த கடற்கரைச் சோலையில் தங்கி,

    பொருள் ஈட்டி வரக் 

    கலம் ஏறிக் கடலில் சென்ற கணவன் வரும்வரை

    அவன் மனைவி கல்லாய் உருமாறிக்

    கரைவரும் கலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கணவன் திரும்பி வந்ததும்

    கல் உருவம் நீங்கிப் பழைய உருவம் பெற்ற

    அவளும்  ஒரு பத்தினிப் பெண்.

     

    தன் குழந்தைக்கு நிகரான

    மாற்றாளின் குழந்தை கிணற்றில் விழுந்தது.

    அபோது அம்மாற்றாள் வீட்டில் இல்லை.

    அப்பழி தன்மீது வருமே என அஞ்சித்

    தன் குழந்தையையும் கிணற்றில் தள்ளினாள் ஒருத்தி.

    பின், தன் கற்பின் திறத்தால்

    இறந்த இரு குழந்தைகளையும் 

    உயிருடன் கிணற்றில் இருந்து எடுத்தாள்.

    வேல் போன்ற கண்களையுடைய

    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 38

    க. பாலசுப்பிரமணியன்

    வகுப்பறை ஒரு நாடக மேடை

    education-1-1-1

    பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கற்றலின் முறையில் அதிகமான ஈடுபாடு இருக்கும். இதன் பொருள் அவர்கள் மற்ற முறைகளில் கற்றுக்கொள்வதில்லையென்றோ அல்லது மற்ற முறைகளில் அவர்களுக்கு அறிமுகம் அல்லது பழக்கம் இல்லை என்றோ கூறிவிட முடியாது. மேற்கூறப்பட்ட எல்லா முறைகளும் அனைவரிடமும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களுக்கு உகந்த முறையில் கற்றலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..

    ஆகவே, வீடுகளில் குழந்தைகளின் படிப்பு முறைகளிலும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கும் நேரத்திலும் இந்த வேறுபாடான முறைகளுக்குத் தகுந்தாற்போல் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் தேவையான சூழ்நிலைகளை உண்டாக்குதல் அவசியமாகின்றது.

    வகுப்பறையில் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் மாணவனைப் பார்த்து “ஏண்டா, நான் இங்கே நின்று கத்திக்கொண்டிருக்கின்றேன். நீ சன்னலையே பார்த்துக்கொண்டிருக்கிறாய் ” என்று கடிந்து கொள்வதும், வீட்டில் தன் மகனுக்கருகில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கும் தந்தை ” புத்தகத்தைப் பாருடா ; அங்கே என்ன நடந்தால் உனக்கென்ன ” என்று அங்கலாய்ப்பதும், கண்களாலும் பார்வைகளாலும் பக்கத்தில் இருக்கும் காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும் மாணவனின் நிலையை வெளிக்காட்டுகின்றது..

    இதேபோல் ஆசிரியர் கேள்விகளை முடிக்கும் முன்னேயே எழுத்து அதற்குச் சரியாகவோ அல்லது தவறாகவோ பதில் சொல்லும் மாணவனைப் பார்த்து ஆசிரியர் “என் கேள்வியை முடிக்க விடுடா.. அதற்கப்புறம் பதில் சொல்லு ” என்று சொல்வதும், தாயின் வார்த்தைகளுக்கு முடிக்க நேரம் கொடுக்காமல் ” நீ சொல்றது புரியுதம்மா.. ஆனால் “என்று சொல்ல “என்னடா புரிந்தது? நான் சொல்லி முடிக்கவே இல்லை ” என்று வருத்தப்படும் தாயினைக் காணும்பொழுது இரண்டாம் வகையைச் சேர்ந்த “செவிச்செல்வத்தை” நம்பி இருக்கின்ற மாணவர்களின் நிலை நமக்குப் புரிகின்றது.

    ஆகவே, வகுப்பறைகளில் ஒரே மாதிரியாகப் பாடங்களை நடத்தும் பொழுது அது எந்த வித முறையில் கற்றாலும் மாணவர்களை சேர்ந்து அடைவதில்லை. தங்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் நேரத்தில் அதற்குப் பலவிதமான உத்திகளைக் கையாளுதல் அவசியம். கற்பித்தல் என்ற செயல் உணர்வு பூர்வமாக இருந்தால் தான் கற்றல் சிறப்பாக அமைய வாய்ப்புண்டு.

    எனக்கு ஆங்கிலத்தில் செகப்பிரியரின் (Shakespeare) நாடகங்களை பேராசிரியர் நடத்திய பொழுது “Hamlet” என்ற நாடகத்தில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். நடையுடை பாவனைகள், குரல், உணர்வுகள் அந்த பாத்திரத்தியே மீண்டும் பிறப்பித்ததுபோல் இருக்கும் . அதேபோல் கம்ப ராமாயணத்தை நடத்திய பேராசிரியர் குஹனும் இராமனும் சந்தித்த காட்சியை விளக்கியது நினைவை விட்டு அகல முடியாதது.. ஏழாவது வகுப்பில் Wordsworth என்ற ஆங்கிலக் கவிஞரின் “Daffodils” என்ற பாடலை நடத்தும் பொழுது ஆசிரியர் அந்த மலரைப் போல் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.!
    இதனால்தான் ஒரு வகுப்பறையை ஒரு “நாடக மேடை” என்று சொல்லுகின்றனர். இதில் ஆசிரியர் மட்டுமல்ல, கற்கும் மாணவர்களும் பங்கேற்கும் பொழுது அங்கே கற்றல் மிகச் சிறப்பாக நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    கற்றல் என்பது ஒரு புத்தகத்தின் முன் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் வரை உள்ள தகவல்களை வெளியிடுவது அல்ல. கற்றல் புத்தகம் மூலமாக மட்டுமன்றி, புத்தகத்திற்கு வெளியேயும் அப்பாலும் நடைபெறுகின்ற ஒரு செயல். ஒரு சிறப்பான கற்றல் சூழ்நிலையில் புத்தகத்திற்கு உள்ளே இருக்கும் தகவல்களை வாழ்க்கை நெறிகளோடும் தத்துவங்களோடும் செயல்பாடுகளோடும் இணைத்துச் செல்வதே ஆகும்.

    “பரீட்சைக்குத் தயார் செய்வதன்றோ வகுப்பறையின் நோக்கம் ” என்று நினைப்பதும் “இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கின்றது ” என்று காரணங்கள் தேடிக்கொண்டிருப்பதும் கற்றலின் நோக்கத்தையும் மேன்மையையும் குறைப்பதாக அமையும்.

    “சொல்லுங்கள்.. நான் மறந்துவிடுவேன். கற்பியுங்கள்…நான் நினைவில் வைத்துக்கொள்கின்றேன்… என்னை ஈடுபடுத்துங்கள்… நான் கற்றுக்கொள்கிறேன். ” என்று மேதை பெஞ்சமின் பிராங்கிளின் (Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn. Benjamin Franklin) கூறியது எல்லாக் காலங்களுக்கும் எல்லாக் கற்றல் சூழ்நிலைகளுக்கும் வெகுவாகப் பொருந்தும்.

    (தொடரும் )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    f1095aab-19d3-44ba-9585-1492405d49b1
    ”உருவமன்று மாய அருவமன்று, ஆனால்
    திருவுண்டு மார்பில் திடமாய், -கருவண்டு
    எண்ண அநேகமவன் எண்ணா தவர்க்(கு)ஏகக்,
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்…

    Share
  • சிவனோடு ஒரு பேட்டி

    மீ.விசுவநாதன்

    விபாண்டகமகரிஷி சிவலிங்க வடிவாக

    சிவனே சிவனே உனைத்தேடி – நான்

    சிவலோகம் வரலாமா?

    மகனே மகனே வரவேண்டாம் – உன்

    மனம்தானே சிவலோகம் !

    அரனே அரனே உன்மேனி – எழில்

    அரவாய்நான் வரலாமா?

    அசடே அசடே வரவேண்டாம் -“நா”

    அசைவுதானே அரவுருவம் !

    அருவும் உருவும் இல்லானே – உனை

    அறிந்திடவே முடியாதா ?

    இருளில் இருந்து வெளியேவா – என்

    இருப்பைத்தான் அறிவாய்நீ !

    பஞ்ச பூத வடிவோனே – உன்

    பயனென்ன உரைப்பாயா ?

    கொஞ்சம் வயது போகட்டும் – உன்

    குணநலனால் தெளிவாய்நீ !

    (இன்று பிரதோஷ தினம் :  31.07.2016)

     

    Share
  • 15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி அரங்கு அமைக்க அழைப்பு

    அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது.

    கண்காட்சி அரங்கம்

    15 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டவுள்ளது. அது மாநாடு நடக்கவுள்ள செப்டம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் நீடிக்கும். கண்காட்சியில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் கணிமை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த எல்லா நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுப பயன்பெறலாம். தென் தமிழகத்தில் உங்கள் தொழில் வாய்ப்புகளை பெருக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    Fees per stall Rs.5000/- உத்தமம் உறுப்பினர்களுக்கு
    Fees per stall Rs.7000/- உத்தமம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு

    மேலும் விபரங்களுக்கு

     

    இந்த உலகத்தமிழ் இணைய மாநாடு உங்கள் தயாரிப்புகளை உலகமெங்கும் அறிமுகப்படுத்திட இது ஒரு சரியான வாய்ப்பு. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்!

    நன்றி!

    என்றும் அன்புடன்
    செல்வமுரளி

    ed@infitt.org

    Selva.Murali |

    Mobile : +91-99430-94945
    Mail ID :- murali@visualmediatech.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    195625a6-1da7-47e4-887e-d7babb15b712

    ”பெருந்தாய் அழைத்திட பாற்கடல் விட்டு
    விருந்தா வனத்திற்க்கு வந்தான் -கருந்தா
    மரைக்கண்ணன் மாதவன் மாம்பழ வாயன்
    தரைக்குவந்த தாமோ தரன்’’….கிரேசி மோகன்….

    வழக்கமாக ‘’பழம் நழுவிப் பாலில் விழும்’’
    இங்கோ ‘’பாலில்(பாற்கடலில்) இருந்த பழம்
    நழுவி’’ யசோதையிடம் வந்தது….
    ‘’மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’’
    ’’கண்ணன் என் தோழன்’’ என்ற மகாகவி பாரதியாரின் பிரயோகம்….
    வாயடைத்த மல்கோவா -யசோதை வாய் பிளந்து காண
    அந்த வாயடைக்க விஸ்வரூபம் காட்டிய வள்ளல்(பேகனே) கண்ணன்….

    ”பாம்பணைப்பை விட்டு பரிவோ(டு) அழைக்கின்ற
    தாம்பணைப்பில் வாழத் தயரானான்(தாயாரால்) -மாம்பழ
    வாயன் மகாகவி(பாரதியார்) தோழன் யசோதையின்
    வாயடைத்த மல்கோவா விஷ்ணு’’….கிரேசி மோகன்….

    Share