Blog

  • ’’கற்பகாம்பாள்’’….

    19bd4130-8c16-4ad2-a235-16f3a69dac16

     

    ”புன்னை வனநாதர் பூசை புரிந்திட
    அன்னை மயிலாய் அவதரித்த -தொன்னை
    மயிலைக்(கு)ஆ தார மணமிகு நெய்யே
    கயிலைக்க பாலிகற்ப கம்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    இன்று கேசவ் உபயத்தால் என் நினைவு மலர்ந்தது….1975ல் பொறியியல் கல்லூரியில் படிக்கையில் , விவேகானந்தாவில் படிக்கும் என் தம்பி ‘’மாது பாலாஜியின்’’ குழுவுக்கு சிறு சிறு நாடகங்கள் எழுதித் தருவேன்(SKITS)….அப்படி எழுதியதுதான் ‘’கச்சத் தீவு’’ SKIT(Political நாடகம்….சோ சாரைப் பார்த்து போட்டுக் கொண்ட சூடு….அன்றோடு பாலிடிக்ஸ் வசனங்களை விட்டுவிட்டேன்….)…. அதில் பஞ்ச பாண்டவர்களுக்கு சொந்தமான ‘’கச்சத் தீவைக்’’ கேட்க கிருஷ்ணர் துரியோதனாதியரிடம் தூது செல்கிறார்….அதில் ஒரு வசனம்….துரியோதனர்-கிருஷ்ணா எங்களுடன் விளையாடாதே நாங்கள் ‘’100 RIFLES”(அந்தக் கால சினிமா….) …..பதிலுக்கு கிருஷ்ணர் -’’உன்னோடு விளயாட நான் என்ன ‘’டென்னீஸ் கிருஷ்ணனா(இந்த வசனம் இன்றைய சாக்லேட் கிருஷ்ணாவிலும் உண்டு)….நீங்கள் நூறு பேரும் 100 RIFLES என்றால் பஞ்ச பாண்டவர்கள் ”5 MEN ARMY”(இதுவும் அந்தக் கால வெஸ்டேர்ன் மூவி….)….இண்டெர் காலேஜ் அதிரும்….மேலும் எங்கள் குழுவை(கிரேசி கிரியேஷன்ஸ்) சேர்ந்த நண்பன் பார்த்திபன் ‘’எல்லா பெண்களையும் கோடம்மா என்றும் (வீடு பெருக்கும் கன்னியம்மா முதல் குயின் எலிஸெபத் வரை அவனுக்கு கோடம்மாதான்)….எல்லா ஆண்களையும் ‘’குப்பாச்சுலு’’ என்று செல்லமாக விளிப்பதுண்டு….எனது ‘’மை-லவ்வாப்பூர்’’(சுஜாதா சாரின் ‘’ஸ்ரீரங்கத்து தேவதைகள் இராமுருகனின் ‘’ரெட்டைத் தெரு’’ ஜாடை) டைம்ஸில் எழுத உத்தேசம்….அதற்கு இந்த குறிப்பு ‘’நெட்-ப்ராக்டீஸ்’’…..இனி வெண்பா….

    39fabdfe-62cf-421e-9255-95b0543629df

    ‘’அப்பாச்சி(ஜாடையில் நேடிவ் அமெரிக்கன்) கண்ணனாய், ஆவை(பசுவை) அசுவமாய் (குதிரையாய்) – துப்பாக்கி நூறைத்(100RIFLES துரியோதனன் & கோ) தொலைக்கவும் , -குப்பாச்சுலு-பார்த்திபன்தேர் பூட்ட பரந்தாமர், டோக்கியோவின்(ஜப்பான் ஜாடையும் கண்ணனுக்கு இருப்பதால்) – தீர்த்தக் கரைதனில் திட் டம்’’….கிரேசி மோகன்….!

    * -ஈசர் நரியை பரியாக்கும் போது அவர் மைத்துனர் பெருமாள் ‘’ஆவை(பசுவை) அசுவன்(குதிரை) ஆக்கக் கூடாதா….!

    Share
  • தட்டொளி

    பவள சங்கரி

    தட்டொளியின் புறக்காட்சிகளனைத்தும்
    அறச்சீற்றத்தின் அகக்காட்சிகள்! 

    life 26

    தட்டொளி – உலோகத்தாலான கண்ணாடி
    உக்கம் – விசிறி

    ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. (படத்தில் உள்ளது). இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில், ‘உக்கமும் தட்டொளியும்’ என்று குறிப்பிட்டிருக்கிறாள் – கோதைத்தமிழ்!

    ஆண்டாள் அருளிய திருப்பாவை (493)large_133341970

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
    செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
    செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    192b7c36-9b0f-417e-8fbb-6920e25d1029

    ’’பாதஸாரிக் கன்றவர் பின்சென்று மேயுது
    நாதரிசை கேட்டபடி நீட்டுது, -காதிரெண்டை:
    ராஹிமால்ட் கண்ணனால் ராகம் விலகிடும்:
    பாஹிமாம் பாதாம் புஜம்’’….கிரேசி மோகன்….

    ராஹிமால்ட் -அந்த காலத்து குழந்தைகள் பானம்(காப்பி சாப்டாதே மோஹன்….கேசரி ராஹிமால்ட் சாப்டு-என் பாட்டியின் குரல் கேட்கிறது….)
    ராகம் -ராகத்துவேஷ வகையறா….

     

    Share
  • திருமால் திருப்புகழ்….

    மந்தவெளி மாரிச்செட்டி தெரு ஸ்ரீனிவாசப் பெருமாள்….
    ———————————

    இந்த பெருமாளைப் பத்தி சொல்லியே ஆகணும்….உப்பிலியப்பன் எங்க குலதெய்வம்னா, இவர் எங்க காவல் தெய்வம்….25வயசு வரை எனக்கு பரிட்சை ரிஸல்ட் வந்தாலும் சரி….காலில் சிரங்கு வந்தாலும் சரி…..என்னோட தந்தை வழி பாட்டி நாலணா உண்டில போட்டுட்டு ,இந்த பெருமாளைத்தான் நம்புவோ….கோமுட்டிச் செட்டியார் கைங்கரியத்துல இந்த மந்தவெளி மாரிச்செட்டி தெரு வெங்கடாசலபதி திருப்பணி நடக்கறது….இந்தக் கோயில் தாயார் சாக்‌ஷாத் பராசக்தி….பச்சை கலர் புடவையை இவளுக்கு சாத்திட்டு ‘’பில்-கேட்ஸ்’’ ஆகணும்னு வேண்டிண்டாலும் நிறைவேத்தி வப்பா…எதோ ஒரு சந்தத்துக்கு எழுதிண்டு போறச்சே , *ஈற்றடில இவர் வலிந்திடாது குதித்து எழுந்தருளியபோது , ப்ரபத்தி சரணாகதியை ப்ரஸ்தாபிக்கும் வைணவ விசிஷ்டாத்வைதத்தை உணர்ந்து அனுபவித்தேன்….எல்லாம் வல்ல மைவண்ணனுக்கும் நன்றி…’’
    —————————————————————————————————————-

    ’’பெருமாள் திருப்புகழ்’’
    —————————————–

    தந்ததன தானத்தத்த தந்ததன தானத்தத்த
    தந்ததன தானத்தத்த -தனதான….

    ’’ரெண்டுவிரல் சேரக்கட்டி பஞ்சுதனை நாசிக்கிட்டு
    பிண்டமென ரேழிக்கட்டில் -சவமாக
    சங்குபறை மோளக்கொட்டு அன்புமகன் தீயைப்பற்ற
    பெண்டிரழ ஓலைக்கட்டில் -தனிலேறி

    கொண்டுசுடு காடுக்கிட்டு வெந்துதண லாகச்சுட்டு
    இந்தவுடல் போலிச்சட்டை -எனநானும்
    அந்தரம ணேசர்க்குற்ற சொந்தஅனு பூதிக்கொத்த
    உந்தனிரு தாளைப்பற்ற -அருள்வாயே

    தொண்ட(ன்)அனு மானுச்சிப்ப றந்தரத மேறிக்கற்க
    பஞ்சவிஜ யோருக்கொப்ப -மொழிகீதை,
    சந்தகிரி வாரிக்கொட்டு கந்தரனு பூதிப்பித்த
    கண்டர்விழி ஜோதிப்புத்ரர் -முறைமாம

    உண்டுலக(ம்) ஏழைத்துப்ப பண்டைஇலை ஆலத்தெப்பம்
    சென்றபலி சாயக்குட்டை -திருவோணா
    *தந்தைவழி பாட்டிக்கென்று நின்றருளும் கோமுட்டிக்கு
    மந்தவெளி மாரிச்செட்டி -பெருமாளே….கிரேசி மோகன்….
    —————————————————————————————————————–

    Share
  • மறந்துவிட முடிவதில்லை !

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

         

          புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணில் 

                 நலங்கள்பல இங்கிருந்தும் நம்மனமோ வெறுமைநிலை

            உளம்மகிழ வாழவெண்ணி உழைக்கின்றோம் ஓய்தலின்றி

                 உளமகிழ்வோ சிலநேரம்  உளநெகிழ்வோ பலநேரம் 

            மனம்முழுக்க ஊரையெண்ணி மெளனித்தே நிற்கிறதே !

     

          நீர்கண்ட இடமெல்லாம் நீந்திநாம் களித்திருந்தோம்

                யாரென்ன கொடுத்தாலும் நாம்விரும்பி அதையுண்டோம்

          தார்ரோட்டில் ஓடிநின்றோம் தலைநிறைய எண்ணெய் வைத்தோம்

                 கார்ப்பயணம் இல்லாமல் கால்நடையாய் சென்றுவந்தோம் !

     

          ஓடிநிற்போம் பாடிநிற்போம் உடல்முழுக்க வியர்வைவரும்

                  ஒடியல்கூழ் குடித்துவிடின் உற்சாகம் தேடிவரும் 

          பனங்கிழங்கு பனாட்டு  பனங்குட்டான் பால்றொட்டி 

                  பாங்காக சுவைத்தபடி பந்தாடி மகிழ்ந்துநிற்போம் !

     

          சைக்கிளை எடுத்துக்கொண்டு சவாரி போய்வருவோம்

                 சந்தோஷம் மனமெல்லாம் தானாக வந்துநிற்கும்

          சைவத்தார் கடைவடையை சட்டினியில் தொட்டுநின்று

                  சகலரும் சுவைத்தநிலை சரித்திரமாய் போச்சுதிப்போ !

     

         எங்களது கல்லூரி அருகிலுள்ள கடையதனில்

              இடியப்பம் இடிசம்பல் இருப்பதுவோ சிலநாளே

        தங்கராசு அண்ணனது தாராள மனத்தாலே

               எங்களுக்கோ இடியப்பம் எப்படியோ கிடைத்துவிடும் ! 

     

         பாடசாலை விடுமுறையில் பலநண்பர் சேர்ந்தபடி

               கீரிமலைக் கேணிநோக்கி கிளம்பிடுவோம் சைக்கிளிலே

         கேணியிலும் குளித்திடுவோம் கிட்டவுள்ள கடலிலும்

                ஆசைதீர நீச்சலிட்டு அனைவருமே மகிழ்ந்துநிற்போம் !

     

          சித்திரையில் பட்டங்கட்டி திரளாகப் பறக்கவிட்ட

                  சத்தமிட்டுக் கூத்தாடி சகலருமே நின்றிடுவோம்

          வட்டமிடும் பட்டமெலாம் வாவெனவே அழைக்குதென

                 வண்ணக் கருவிழியால் வானத்தைப் பார்த்துநிற்போம் !

     

          போரென்னும் பெயராலே ஊரெல்லாம் ஓடியது

                 ஊரிலுள்ள மக்களெலாம் உருக்குலைந்தும் போனார்கள்

          ஊரைவிட்டு பேரைவிட்டு உற்றாரை இழந்துவிட்டு

                 யாருறவும் இல்லாத நாட்டிலிப்போ வசிக்கின்றோம் !

     

         எங்களது உழைக்கும்சக்தி எந்நாட்டில் இருந்தாலும்

               மங்காமல் இருப்பதனால் வாழுகிறோம் வீழாமல் 

        பொங்கிவரும் தமிழுணர்வால் எங்கள்தமிழ் வளர்க்கின்றோம்

               என்றாலும் தமிழ்பற்றி இன்னுமே எண்ணல்வேண்டும் !

             

            ஊரிலேவாழ்ந்த அந்த உவப்பில்லா காலமதை

                 உள்ளமது நினைக்கையிலே ஒருவெறுமை தெரிகிறது 

          வசதியுடன் வாழ்ந்தாலும் வசந்தகாலம் மனம்முழுக்க

               வாழ்ந்துகொண்டே இருப்பதனை மறந்துவிட முடிவதில்லை !

    Share
  • விரல்களில் வெளிச்சங்கள்

    ராஜகவி ராகில்

     

    வாடாத வரம் 

    பெறும்

    அன்னை மீது விழுந்த பூ 

    தாயின் நா கொண்டு சேர்க்கத்தான் 

    பூக்களில் 

    தேனும் தேனீயும் படைத்தான் 

    இறைவன் 

    பட்டு 

    மலர் 

    பஞ்சு 

    மெத்தைகள் சாய 

    ஆசைப்படும் இடம்  அன்னை மடி

    ஓர் ஆலயத்தை விட புனிதமானது 

    அன்னை உடுத்த 

    சேலை 

    அம்மா முகம்  பார்த்திடின் 

    எமனுக்கு தோணவே தோணாது 

    அவள் உயிர் பறிக்க 

    தாய் தாலாட்டின் பின்னே  கை கட்டி நிற்கும்  

    புகழ் பூத்த புலவன் 

    கவிதை 

    தாய் வாழுகின்ற 

    வீட்டுக்குத் தேவையில்லை 

    விளக்கு 

    உயிர் ஊட்டப்படுகின்ற புனித தலம்

    தாய் கருவறை 

    உலகம் என்ற உருண்டை விருட்சம்  

    நிற்கிறது 

    அன்னை வேரில் 

    மாதா கண்ணீர் திரவத் தீ 

    திரவத் தீ 

    அது அழித்துவிடும் பாறைகளையும் 

    அன்னை புன்னகை அரண் 

    அது தடுத்துவிடும் 

    எந்தச் சுனாமிகளையும் 

    அன்னை 

    பிசைந்தூட்டிய கூழ் 

    ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமுதத்தினையும் 

    ஆக்கிவிடும் வெறும் வைக்கோலாய்

    அம்மா சமைப்பது அரிசியல்ல

    பாசம் 

    விறகுகள் வென்று 

    அவள் எரிகிறாள் 

    அடுப்பில் 

    இறைவன் 

    அதிசயிக்கின்ற அதிசயம் 

    அன்னை பிரசவம் 

    தன் தாய் மறந்த மகன்  

    இதயத்தால் இறந்த 

    பிணப் பிரஜை 

    தாய் 

    இருமல் சத்தம் ஒரு தரம் கேட்டாலும் 

    மருத்துவம் செய் 

    வைத்தியன் கடத்தி வந்து 

    ஒரு குயிலிடம் கேள் 

    அது சொல்லும் 

    தன் குக்கூ 

    அன்னைக்கான வாழ்த்தென 

    மழைத் துளிகளிடம் விசாரி 

    அவை மொழியும்  

    தாய் பாதம் தொடத்தான் பொழிவதாய்

    அன்னைக்கு

    பணிவிடை செய்கின்ற கைகளில் இருப்பவை  

    விரல்களல்ல வெளிச்சங்கள்

    Share
  • இறைவனாய் வாழுகின்றார் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா

     

    தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா

    எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா

    அப்பாவி போலவர் அயலார்க்குத் தோன்றிடினும்

    அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் !

     

    ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா

    அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்

    பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா

    பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் !

     

    ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா

    அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா

    வீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா

    விருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை !

     

    ஓடியாடி நின்றிடுவார் ஓயாமல் உழைத்திடுவார்

    ஓய்வெடுப்பு எனும்வார்த்தை உள்ளமதில் அவர்க்கில்லை

    வாடிநிற்பார் முகங்காணின் மனமார உதவிநிற்பார்

    மாமனிதர் எங்களப்பா வாழ்வாங்கு வாழவேணும் !

     

    வடமொழியில் வல்லுனராய் எங்களப்பா இருப்பதனால்

    வாத்தியார் எனும்பெயரால் வரவேற்பார் யாவருமே

    உபநிடதம் விளக்கமெல்லாம் ஒழுக்காக விளக்கிநிற்பார்

    அவர்மீது எம்மதிப்பு அதிகரித்தே வருகிறது !

     

    வெள்ளைவேட்டி சால்வையுடன் வெளியிலவர் போய்வருவார்

    உள்ளமதில் கள்ளமதை உதறியே எறிந்துநிற்பார்

    பள்ளமதில் வெள்ளம்போல் பாய்ந்துவரும் கருணையினால்

    பலபேரின் துயர்துடைக்கப் பாடுபட்டார் எங்களப்பா !

     

    குங்குமப் பொட்டுடனே குதூகலிக்கும் அவர்முகத்தில்

    மங்காத காந்தசக்தி மலர்ந்தபடி அமைந்திருக்கும்

    பொங்கிவரும் பக்திதனை இங்கிதமாய் உரைத்துநிற்கும்

    எங்களது அப்பாவை என்னாளும் வியந்துநிற்போம் !

     

    கோவில்சென்று கும்பிடுவார் குறைசொல்லல் தவிர்த்திடுவார்

    யார்மனமும் நோகாமல் நல்லதெல்லாம் எடுத்துரைப்பார்

    கூர்மைநிறை கருத்தையெல்லாம் கொண்டுவந்து அளித்திடுவார்

    வாய்மைதனை வாழ்வியலாய் வாழ்ந்துநின்ற எங்களப்பா !

     

    கடவுளில்லை என்பார்க்கு கவனமாய் பதிலுரைப்பார்

    கடவுளினைக் காணுதற்கு கண்ணியமே தேவையென்பார்

    கண்ணியத்தை உணராதார் கடவுள்பற்றி உணரார்கள்

    கண்ணியத்தை வளர்த்துவிட்டு கடவுளையே தேடுஎன்பார் !

     

    சித்தரது தத்துவத்தை சிரசின்மேல் வைத்திடுவார்

    அத்தனையும் தமிழினத்தின் சொத்தெனவே சொல்லிநிற்பார்

    நாத்திகம் முழங்கிடுவார் நம்சித்தர் வழிபார்க்கின்

    ஆத்தீகம் எனும்வழியே அவர்க்கு நட்பாகுமென்பார் !

     

    வள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்துபார் எனச்சொல்வார்

    தெள்ளுதமிழ் நூல்களுள்ளே திருக்குறளே சிறந்ததென்பார்

    உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே மேன்மையென்பார்

    ஒருதீங்கும் நினைக்காதே என்றுரைப்பார் எங்களப்பா !

     

    எங்களப்பா எண்ணம்போல் எல்லோர்க்கும் இருந்துவிடின்

    சங்கடங்கள் சண்டைகள் தமைமறந்தே ஓடிவிடும்

    இங்கிதமாய் வாழுஎன்று எங்களப்பா எடுத்துரைப்பார்

    இதயமதில் எங்களப்பா இறைவனாய் வாழுகின்றார் !

    Share
  • வெள்ளைப் பனி மலை

    ரா.பார்த்தசாரதி

    Mt Rainer

    பனிபடர்ந்த மலையின் மேலே

    அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,

    பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,

    நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !

    பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி 

    அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !

    இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே  

    மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!

    மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே 

    வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !

    ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே 

    அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !

    இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே 

    எனது உனது என்பதெல்லாம்  இடையில் மாறும்  எண்ணமே ! 

    Share
  • குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன்.

    191a0bdf-08ee-4272-985b-801fad48393c

    பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் குயிலி.

    சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்திய பவன் அரங்கம். 2047 ஆடி 2 (17.07.2016) காலை 10 மணி தொடக்கம் கண்களை விரித்துக் கருத்தினை ஒடுக்கி, உள்ளத்தை ஒரே நெறிக்குள் அழைத்துச் சென்றவர்கள் நர்த்தகி நடராசரும் அவர் மாணவி குயிலியும்.

    1d562d43-56a9-47d9-8147-0f072d7ec409

    தோல்வியில் துவளாதீர், துயரில் மாளாதீர், விழிமின், எழுமின் என அழைக்கும் வரிகளைத் தந்தவர் அருள்மொழி. பெண்கள் பேராற்றலார் என 2000 ஆண்டுகளுக்கு ஊடாகத் தமிழர் வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றார். சங்கப் பெண்ணில் தொடங்கி, யாழ் மகள் வரை அழைத்துச் சென்றார். அந்த வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர் நர்த்தகி. நடனமாடியவர் குயிலி.

    எண், எழுத்து, பண், பதம் என மாதவி கற்ற நாட்டிய நன்னூல் பயிற்சியின் இலக்கணமாய்க் குயிலி. மாதவி ஏந்திய மலர்களோ குயிலி ஏந்துபவை? பகுதாரிப் பண், திசுர தாளம், தக்கதிமி தா எனச் சொற்கட்டுகள். வசுந்தாவின் குரலோ குயிலுக்குக் கருத்தியல் எடுப்பு. நாராயணனின் முழவோ குயிலியின் காலடி நடப்பு. சீனிவாசனின் நரம்பிசையோ குயிலின் பதங்களின் வனப்பு. தேவராசரின் குழலிசையோ குயிலின் கண்களில் மிதப்பு. சிவநாராயணனின் யாழிசையோ அரங்கத்தின் காதுகளின் குவிப்பு. நிகழ்ச்சித் தொடக்கக் களைகட்டலில்.

    “ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை அவ்வளி குழலிசை ஆக…” எனத் தொடங்கி மலைவளம் காட்டிய கபிலரின் வரிகள், குயிலிக்குக் கற்பனை வளம், நர்த்தகிக்கு கருத்தூறும் குளம். பண்களைத் தாளமாக்கி, கண்களை மீன்களாக்கி, கழுத்தினைத் தஞ்சாவூராக்கி, கால்களை அளந்து வைத்து, உடலே நடனமாகிய,  அடவுகளைப் பொருத்தினார் விருத்தத்தில்.

    அரும்பு விரிந்தன்ன, மொட்டு மலர்ந்தன்ன, முகம் சிவந்தன்ன, தாமரையாய்க் குயிலி அலர்ந்தார். முழவுக்குச் சந்தங்கள் விரல்களாக, குரலுக்கு ஓசைகள் நாண்களாக, நட்டுவத்துக்கு நாதம் சல்லாரியாக, திருப்புகழுக்கு முருகன் பொலிந்தான் அலாரிப்பில்.

    உயிரும் உடலும் சேர்வதில் உவகை, இயற்கையின் பேராற்றலில் வியப்பு, தீயன பழிப்பதில் இழிப்பு, அடக்க முயல்வோர்மீது வெகுளி, அடங்கா நிலையின் மென்னகை, பெண்மைப் புதுமையில் மறம், இயல்பு தருமோ அச்சம், யாழ்மகளின் வெம்பலில் அவலம், வையகம் பெண்ணால் உய்வதே அறம் என ஒன்பது சுவைகளும் பல்பண்மாலைக்குள் ஆதி தாளத்துள் அருள்மொழியின் எண்ணமாய் வந்த வண்ணத்தில்.

    “பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனான்டி” எனத் தொடங்கும் பாரதிதாசன் வரிகளில் ஊடலுக்கு ஆடல். நர்த்தகியார் அறிமுகித்த அமிழ்தமாய் மராட்டியச் சாவளியில்.

    மழையைக் கண்ட மாமயில் தோகை விரித்த விதம், பாரதியின் “திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌….” எனத் தொடங்கும் பாடலுக்குக் குயிலியின் பதம். வசுதாவின் குரலோ, நாராயணனின் முழவோ, சீனிவாசனின் நரம்போ, தேவராசரின் குழலோ, சிவநாராயணனின் யாழோ விஞ்சியது எதுவெனின், நர்த்தகியின் தாளக் கட்டை மீறக் கெஞ்சின, தம்முள் இசைந்து கொஞ்சின, கொடுத்தன கொள்ளை இன்பம் பதத்தில்.

    58e152df-d29e-4d9e-b1f2-27334f8dc347

    அரங்கு குறியில் சிலிர்த்தது, அவை மெய்யில் சிலிர்த்தது, அழகு பொய்யில் சிலிர்த்தது, குறத்தியின் சிந்துள் திளைத்தது, பள்ளுள் அலமந்தது, தாலாட்டில் மயங்கித் தூங்கிற்று, முகக் குறியில் மனவோட்டம் பொலிந்தது, “கூடை முறம் கட்டுவோம் குறி சொல்லுவோம்….” எனத் தொடங்கும் பழம் பாடலுக்கான குறவஞ்சி நடனத்தில்.

    ஈரோடு செல்லாமல் அ(திருவ)ண்ணாமலைக்கா? அண்ணாமலையாரின் பெண்ணாகிய பெருமகள் அருள்மொழியிடம் புராணங்கள் இருந்தாலன்றோ கொளுத்தலாம். திரிபுரமும் எரித்த கதை சொன்ன வேகத்தில் பகுத்தறிவுப் பகலவனாகி முடித்தார் குயிலி தில்லானாவில்.

    செப்பமாகப் பண்ணினால் ஒப்பனையை, குயிலியின் அணிகலன்கள் இடையிடையே சிதறியிரா. கூரில் குயிலியின் காலடி குற்றுமோ, குருதி கொட்டுமோ என அவையோர் நெஞ்சமும் பதறியிரா. அய்யலுவும் அருள்மொழியும் நர்த்தகியும் குயிலியை ஆரவாரமற்ற அடக்கமான எழில் கொஞ்சும் ஆடை வடிவுள்ள நடனியாக்கினர்.

    பேச்சரவம் கேட்கவில்லை, பேச்சு மழையாகப் பொழிந்தனர், பேச்சுகளுக்கு மேடை வேறு. குயிலியின் ஆடலை மட்டும் காட்டும் மேடைக்கு மீண்டும் மீண்டும் வருவேன். நர்த்தகியின் நட்டுவாங்கம் பார்க்கக் கண்களைக் கூர்மையாக்குவேன்.

    என் அருமை நண்பர், ஈழத்தமிழரின் தமிழகக் குரல், வழக்குரைஞர் அருள்மொழியின் பெண் எனும் பேராற்றல், அவர் மகள் வழக்குரைஞர் குயிலியே. முன்பு திருமுறை மாநாட்டில் குயிலியின் நட்டுவாங்கத்துக்கு நர்த்தகியார் ஆடப் பார்த்தேன். இங்கு இடம் மாறிப் பார்த்தேன், மகிழ்ச்சி.

    தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

    திருநடங் கும்பிடப் பெற்று

    மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு

    வாலிதாம் இன்பமாம் என்று

    கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்

    கைம்மல ருச்சிமேற் குவித்துப்

    பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

    பாடினார் பரவினார் பணிந்தார்.

    (சேக்கிழார், திருமுறை 12005253)  

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    An Eternal Child Playing An Eternal Game in an Eternal Garden-AUROBINDHO….

    9d049980-498c-4bd8-99c0-bb22a130c845

    ”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகாந்த ஏகமே -விந்தையே
    தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்’’….

    ‘’வந்தாலும் , போனாலும், வந்துவந்து போகின்ற,
    அந்தாளு நானில்லை அன்பரே, -பந்தாடும்,
    தேகான்ம பாவம் தெருகிரிக்கெட், விட்டுலக,
    ஏகாக்ர WORLD-CUPபுக்(கு) ஏங்கு’’….கிரேசி மோகன்..

    Share
  • ’’ஆகஸ்ட் இரண்டு’’…

    இன்று ஆடிப் பெருக்கு, அம்மாவாசை, குருப்பெயர்ச்சி ,மூன்றும் சேர்ந்து வருவது காலெண்டர் பார்க்கும் அனைவரும் அறிந்ததே….
    எங்கள் குடும்பம் மட்டுமே அறிந்தது….நான்காவது ஒற்றுமை எனது
    ‘’அம்மாவின்’’ திவசம்….பஞ்சாங்கப் படி….வருடத்திற்க்கு ஒருமுறை வரும் ‘’அதிதி தேவொ பவ’’ அவள்….

    ‘’ஆடிப் பெருக்கம்மா ஆசை குருபெயர்ச்சி
    கூடி வருகதென்று காலெண்டர் -கோடிட,
    ஆகஸ்ட் இரண்டின்று ,அம்மா சிரார்த்தம்
    ஆGUESTபஞ் சாங்கி அவள்’’….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 பேர் இவ்விருதைப் பெற்றார்கள். இந்தியர்களில் கூகுளின் சுந்தர் பிச்சை, பி.பி’.எசு (PBS) என்னும் பொது அலைபரப்பக நிறுவனத்தின் முக்கிய செய்தி நிகழ்ச்சியாகிய நியூசு அவர் (PBS NewsHour) மூத்த செய்தியாளர் அரி சீனிவாசன், அமெரிக்காவின் மெக்கின்சி (McKinsey) கம்பெனியின் தலைவர் விக்கிரம் மல்கோத்திரா, நேசனல் நூல் திறனாய்வு வட்டத்தின் பரிசுபெற்ற நூலாசிரியர் பாரதி முக்கர்ச்சி ஆகியோர் இருந்தனர்[1]. செய்தி ஊடகத்தில் அரி சீனிவாசன் (Hari Sreenivasan) அவர்களின் வளர்ச்சி சிறப்பானது.


    அரி சீனிவாசன் (Hari Sreenivasan) . படம் [3]

    1974 ஆண்டு மும்பையில் பிறந்த அரி சீனிவாசன் அமெரிக்காவுக்கு வருகையில் அவருக்கு அகவை 7. அமெரிக்காவில் மேற்கே உள்ள வாசிங்கடன் மாநிலத்தில் சீயாட்டில் நகரத்தில் நேத்தன் ஃகேல் உயர்நிலைப்பள்ளியில் (Nathan Hale High School) படித்தார். 1995 இல் பியூச்சே சவுண்டு பல்கலைக்கழகத்தில் (University of Puget Sound) மக்கள் செய்தித்தொடர்பியலில் (mass communication) இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, வட கரோலினா மாநிலத்தில் இராலே (Raleigh) என்னும் நகரத்தில் என்.பி’.சி (NBC) -யைச் சேர்ந்த WNCN-TV என்னும் தொலைக்காட்சி நிறுவனத்தில் 1995 இல் முழுநேரப்பணியில் சேர்ந்தார். பின்னர் ஏபி’சி(ABC) செய்தி ஊடகத்திலும் பின்னர் சிபி’எசு (CBS) செய்தியூடக நிறுவனத்திலும் பணியாற்றிய பிறகு 2009 ஆம் ஆண்டு பொது அலைபரப்பக்கத்தில் சிம் இலேரர் நியூசவர் (Jim Lehrer NewsHour) என்னும் புகழ்பெற்ற செய்தி நிகழ்ச்சியில் முதலில் செய்தி தொகுப்பாளராகவும் இணையவழி செய்தி வழங்குபவராகவும் இருந்து பின்னர் மதிப்பு வாய்ந்த மூத்த செய்தியாளராகவும் நிலைத்த செய்திவாசிப்பாளராகவும் உயர்ந்தார். பொது அலைபரப்பகம் (PBS) என்பது விளம்பரங்கள் அதிகம் இல்லாமல், பொதுமக்களும் கொடையாளர்களும் தரும் நன்கொடையையும் இதன் அடிப்படையில் அரசின் உதவியையும் கொண்டு கட்சி சார்புகள், மத, இன சார்புகள் ஏதுமின்றி மிகுசிறப்பாகவும் ஆழமாக அலசியும் நேர்த்தியுடன் அளிக்கும் செய்தியூடகம். பொது அலைபரப்பகத்தின் நடுநிலைமையும் நிகழ்ச்சிகளின் நேர்த்தியும் பெரும்புகழ் பெற்றவை. இந்தியத்தலைமை அமைச்சர் நரேந்திர மோதீ அவர்கள் செப்டம்பர் 28, 2014 அன்று அமெரிக்காவுக்கு வந்தபொழுது அரி சீனிவாசனும் 2014 ஆண்டு அமெரிக்க அழகிபோட்டி வெற்றியாளரான நினா துவுலூரி அவர்களுமாகச் சேர்ந்து மாடிசன் சதுக்கத்தில் நிகழ்ந்த திரு மோதீயின் உரையாற்று நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்கள்.

    அரி சீனிவாசன் சூலை 2016 இல் கார்னிகி நிறுவனத்தாரின் பெரும்பபுகழ் குடியேறி விருது பெற்றுள்ளார் [1].

    திரு அரி சீனிவாசன் அவர்களைப் பாராட்டி சூலை 18 ஆம் நாள் திங்கட்கிழமை தொடங்கும் கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்

    அடிக்குறிப்புகள்

    [1] India Aborad (http://www.indiaabroad-digital.com/indiaabroad/20160708?pm=1&fs=1&pg=3#pg3 )
    [2] English Wikipedia (https://en.wikipedia.org/wiki/Hari_Sreenivasan)
    [3] படம் கூகுள் பக்கம் (https://plus.google.com/u/0/+HariSreenivasan); http://www.pbs.org/newshour/author/hari-sreenivasan/

    Share
  • ஆட வருகவே….

    images
    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)
    ————————————————————

    Share