மறவன்புலவு க. சச்சிதானந்தன்

யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன்.

191a0bdf-08ee-4272-985b-801fad48393c

பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் குயிலி.

சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்திய பவன் அரங்கம். 2047 ஆடி 2 (17.07.2016) காலை 10 மணி தொடக்கம் கண்களை விரித்துக் கருத்தினை ஒடுக்கி, உள்ளத்தை ஒரே நெறிக்குள் அழைத்துச் சென்றவர்கள் நர்த்தகி நடராசரும் அவர் மாணவி குயிலியும்.

1d562d43-56a9-47d9-8147-0f072d7ec409

தோல்வியில் துவளாதீர், துயரில் மாளாதீர், விழிமின், எழுமின் என அழைக்கும் வரிகளைத் தந்தவர் அருள்மொழி. பெண்கள் பேராற்றலார் என 2000 ஆண்டுகளுக்கு ஊடாகத் தமிழர் வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றார். சங்கப் பெண்ணில் தொடங்கி, யாழ் மகள் வரை அழைத்துச் சென்றார். அந்த வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர் நர்த்தகி. நடனமாடியவர் குயிலி.

எண், எழுத்து, பண், பதம் என மாதவி கற்ற நாட்டிய நன்னூல் பயிற்சியின் இலக்கணமாய்க் குயிலி. மாதவி ஏந்திய மலர்களோ குயிலி ஏந்துபவை? பகுதாரிப் பண், திசுர தாளம், தக்கதிமி தா எனச் சொற்கட்டுகள். வசுந்தாவின் குரலோ குயிலுக்குக் கருத்தியல் எடுப்பு. நாராயணனின் முழவோ குயிலியின் காலடி நடப்பு. சீனிவாசனின் நரம்பிசையோ குயிலின் பதங்களின் வனப்பு. தேவராசரின் குழலிசையோ குயிலின் கண்களில் மிதப்பு. சிவநாராயணனின் யாழிசையோ அரங்கத்தின் காதுகளின் குவிப்பு. நிகழ்ச்சித் தொடக்கக் களைகட்டலில்.

ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை அவ்வளி குழலிசை ஆக…” எனத் தொடங்கி மலைவளம் காட்டிய கபிலரின் வரிகள், குயிலிக்குக் கற்பனை வளம், நர்த்தகிக்கு கருத்தூறும் குளம். பண்களைத் தாளமாக்கி, கண்களை மீன்களாக்கி, கழுத்தினைத் தஞ்சாவூராக்கி, கால்களை அளந்து வைத்து, உடலே நடனமாகிய,  அடவுகளைப் பொருத்தினார் விருத்தத்தில்.

அரும்பு விரிந்தன்ன, மொட்டு மலர்ந்தன்ன, முகம் சிவந்தன்ன, தாமரையாய்க் குயிலி அலர்ந்தார். முழவுக்குச் சந்தங்கள் விரல்களாக, குரலுக்கு ஓசைகள் நாண்களாக, நட்டுவத்துக்கு நாதம் சல்லாரியாக, திருப்புகழுக்கு முருகன் பொலிந்தான் அலாரிப்பில்.

உயிரும் உடலும் சேர்வதில் உவகை, இயற்கையின் பேராற்றலில் வியப்பு, தீயன பழிப்பதில் இழிப்பு, அடக்க முயல்வோர்மீது வெகுளி, அடங்கா நிலையின் மென்னகை, பெண்மைப் புதுமையில் மறம், இயல்பு தருமோ அச்சம், யாழ்மகளின் வெம்பலில் அவலம், வையகம் பெண்ணால் உய்வதே அறம் என ஒன்பது சுவைகளும் பல்பண்மாலைக்குள் ஆதி தாளத்துள் அருள்மொழியின் எண்ணமாய் வந்த வண்ணத்தில்.

பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனான்டி” எனத் தொடங்கும் பாரதிதாசன் வரிகளில் ஊடலுக்கு ஆடல். நர்த்தகியார் அறிமுகித்த அமிழ்தமாய் மராட்டியச் சாவளியில்.

மழையைக் கண்ட மாமயில் தோகை விரித்த விதம், பாரதியின் “திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌….” எனத் தொடங்கும் பாடலுக்குக் குயிலியின் பதம். வசுதாவின் குரலோ, நாராயணனின் முழவோ, சீனிவாசனின் நரம்போ, தேவராசரின் குழலோ, சிவநாராயணனின் யாழோ விஞ்சியது எதுவெனின், நர்த்தகியின் தாளக் கட்டை மீறக் கெஞ்சின, தம்முள் இசைந்து கொஞ்சின, கொடுத்தன கொள்ளை இன்பம் பதத்தில்.

58e152df-d29e-4d9e-b1f2-27334f8dc347

அரங்கு குறியில் சிலிர்த்தது, அவை மெய்யில் சிலிர்த்தது, அழகு பொய்யில் சிலிர்த்தது, குறத்தியின் சிந்துள் திளைத்தது, பள்ளுள் அலமந்தது, தாலாட்டில் மயங்கித் தூங்கிற்று, முகக் குறியில் மனவோட்டம் பொலிந்தது, “கூடை முறம் கட்டுவோம் குறி சொல்லுவோம்….” எனத் தொடங்கும் பழம் பாடலுக்கான குறவஞ்சி நடனத்தில்.

ஈரோடு செல்லாமல் அ(திருவ)ண்ணாமலைக்கா? அண்ணாமலையாரின் பெண்ணாகிய பெருமகள் அருள்மொழியிடம் புராணங்கள் இருந்தாலன்றோ கொளுத்தலாம். திரிபுரமும் எரித்த கதை சொன்ன வேகத்தில் பகுத்தறிவுப் பகலவனாகி முடித்தார் குயிலி தில்லானாவில்.

செப்பமாகப் பண்ணினால் ஒப்பனையை, குயிலியின் அணிகலன்கள் இடையிடையே சிதறியிரா. கூரில் குயிலியின் காலடி குற்றுமோ, குருதி கொட்டுமோ என அவையோர் நெஞ்சமும் பதறியிரா. அய்யலுவும் அருள்மொழியும் நர்த்தகியும் குயிலியை ஆரவாரமற்ற அடக்கமான எழில் கொஞ்சும் ஆடை வடிவுள்ள நடனியாக்கினர்.

பேச்சரவம் கேட்கவில்லை, பேச்சு மழையாகப் பொழிந்தனர், பேச்சுகளுக்கு மேடை வேறு. குயிலியின் ஆடலை மட்டும் காட்டும் மேடைக்கு மீண்டும் மீண்டும் வருவேன். நர்த்தகியின் நட்டுவாங்கம் பார்க்கக் கண்களைக் கூர்மையாக்குவேன்.

என் அருமை நண்பர், ஈழத்தமிழரின் தமிழகக் குரல், வழக்குரைஞர் அருள்மொழியின் பெண் எனும் பேராற்றல், அவர் மகள் வழக்குரைஞர் குயிலியே. முன்பு திருமுறை மாநாட்டில் குயிலியின் நட்டுவாங்கத்துக்கு நர்த்தகியார் ஆடப் பார்த்தேன். இங்கு இடம் மாறிப் பார்த்தேன், மகிழ்ச்சி.

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

திருநடங் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு

வாலிதாம் இன்பமாம் என்று

கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்

கைம்மல ருச்சிமேற் குவித்துப்

பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

பாடினார் பரவினார் பணிந்தார்.

(சேக்கிழார், திருமுறை 12005253)  

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்

  1. தமிழ் களிநடனம் புரிகிறது ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *