செ. இரா.செல்வக்குமார்

இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 பேர் இவ்விருதைப் பெற்றார்கள். இந்தியர்களில் கூகுளின் சுந்தர் பிச்சை, பி.பி’.எசு (PBS) என்னும் பொது அலைபரப்பக நிறுவனத்தின் முக்கிய செய்தி நிகழ்ச்சியாகிய நியூசு அவர் (PBS NewsHour) மூத்த செய்தியாளர் அரி சீனிவாசன், அமெரிக்காவின் மெக்கின்சி (McKinsey) கம்பெனியின் தலைவர் விக்கிரம் மல்கோத்திரா, நேசனல் நூல் திறனாய்வு வட்டத்தின் பரிசுபெற்ற நூலாசிரியர் பாரதி முக்கர்ச்சி ஆகியோர் இருந்தனர்[1]. செய்தி ஊடகத்தில் அரி சீனிவாசன் (Hari Sreenivasan) அவர்களின் வளர்ச்சி சிறப்பானது.


அரி சீனிவாசன் (Hari Sreenivasan) . படம் [3]

1974 ஆண்டு மும்பையில் பிறந்த அரி சீனிவாசன் அமெரிக்காவுக்கு வருகையில் அவருக்கு அகவை 7. அமெரிக்காவில் மேற்கே உள்ள வாசிங்கடன் மாநிலத்தில் சீயாட்டில் நகரத்தில் நேத்தன் ஃகேல் உயர்நிலைப்பள்ளியில் (Nathan Hale High School) படித்தார். 1995 இல் பியூச்சே சவுண்டு பல்கலைக்கழகத்தில் (University of Puget Sound) மக்கள் செய்தித்தொடர்பியலில் (mass communication) இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, வட கரோலினா மாநிலத்தில் இராலே (Raleigh) என்னும் நகரத்தில் என்.பி’.சி (NBC) -யைச் சேர்ந்த WNCN-TV என்னும் தொலைக்காட்சி நிறுவனத்தில் 1995 இல் முழுநேரப்பணியில் சேர்ந்தார். பின்னர் ஏபி’சி(ABC) செய்தி ஊடகத்திலும் பின்னர் சிபி’எசு (CBS) செய்தியூடக நிறுவனத்திலும் பணியாற்றிய பிறகு 2009 ஆம் ஆண்டு பொது அலைபரப்பக்கத்தில் சிம் இலேரர் நியூசவர் (Jim Lehrer NewsHour) என்னும் புகழ்பெற்ற செய்தி நிகழ்ச்சியில் முதலில் செய்தி தொகுப்பாளராகவும் இணையவழி செய்தி வழங்குபவராகவும் இருந்து பின்னர் மதிப்பு வாய்ந்த மூத்த செய்தியாளராகவும் நிலைத்த செய்திவாசிப்பாளராகவும் உயர்ந்தார். பொது அலைபரப்பகம் (PBS) என்பது விளம்பரங்கள் அதிகம் இல்லாமல், பொதுமக்களும் கொடையாளர்களும் தரும் நன்கொடையையும் இதன் அடிப்படையில் அரசின் உதவியையும் கொண்டு கட்சி சார்புகள், மத, இன சார்புகள் ஏதுமின்றி மிகுசிறப்பாகவும் ஆழமாக அலசியும் நேர்த்தியுடன் அளிக்கும் செய்தியூடகம். பொது அலைபரப்பகத்தின் நடுநிலைமையும் நிகழ்ச்சிகளின் நேர்த்தியும் பெரும்புகழ் பெற்றவை. இந்தியத்தலைமை அமைச்சர் நரேந்திர மோதீ அவர்கள் செப்டம்பர் 28, 2014 அன்று அமெரிக்காவுக்கு வந்தபொழுது அரி சீனிவாசனும் 2014 ஆண்டு அமெரிக்க அழகிபோட்டி வெற்றியாளரான நினா துவுலூரி அவர்களுமாகச் சேர்ந்து மாடிசன் சதுக்கத்தில் நிகழ்ந்த திரு மோதீயின் உரையாற்று நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்கள்.

அரி சீனிவாசன் சூலை 2016 இல் கார்னிகி நிறுவனத்தாரின் பெரும்பபுகழ் குடியேறி விருது பெற்றுள்ளார் [1].

திரு அரி சீனிவாசன் அவர்களைப் பாராட்டி சூலை 18 ஆம் நாள் திங்கட்கிழமை தொடங்கும் கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்

அடிக்குறிப்புகள்

[1] India Aborad (http://www.indiaabroad-digital.com/indiaabroad/20160708?pm=1&fs=1&pg=3#pg3 )
[2] English Wikipedia (https://en.wikipedia.org/wiki/Hari_Sreenivasan)
[3] படம் கூகுள் பக்கம் (https://plus.google.com/u/0/+HariSreenivasan); http://www.pbs.org/newshour/author/hari-sreenivasan/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்

  1. வல்லமையாளர் அரி சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் வளர்க, வெற்றிகள் தொடர்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *