Blog

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 67

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், பொன், வைடூரிய ஆபரணங்கள் என்ற வகையிலும் தங்கள் சேகரிப்புக்களை இத்தகைய அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் எகிப்திய பண்டைய நாகரிகத்தின் சின்னங்களும், இந்திய உபகண்டத்தின் சமயச்சின்னங்களும், சீன தேசத்தின் மன்னர்களின் உடமைப் பொருட்களும், ஆப்பிரிக்க தேசத்தின் ஆதிவாசிகளின் நம்பிக்கைக்கு உரிய பொருட்களும் இவ்வகை சேகரிப்புக்களில் முக்கியமானைவையாக இடம்பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் பெரும் நகரங்களில் உள்ள ஏறக்குறைய அனைத்து அருங்காட்சியகங்களிலும் இத்தகைய சேகரிப்புக்களைப் பார்த்திருக்கின்றேன்.

    as1
    அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்தபோது நான் சென்று வந்த சில அருங்காட்சியகங்களில் இத்தகைய அரும்பொருட் சேகரிப்புக்களைப் பார்த்தேன். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஒன்றுதான் பிலடெல்ஃபியா அருங்காட்சியகம்.

    திரு.நரசய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆலவாய் நூலை வாசித்த போது மதுரையிலிருந்த ஒரு கோயிலின் சில பகுதிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தது என் நினைவில் இருந்தது. அதனை நேரில் சென்று பார்ப்பதுடன் இங்குள்ள ஏனைய அரும்பொருட்களையும் காணும் ஆவலுடன் இங்கு சென்றிருந்தேன்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாம் மாடியில் சில கோயில்களின் மண்டபங்களும் கருவறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட கோயிலில் ஒரு பகுதியானது ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோயில் மண்டபம். மதுரையிலிருந்து இந்த கோயில் மண்டபத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டில் திருமதி அடலீன் பெப்பர் என்பவர் இதனை மதுரையில் காசு கொடுத்து வாங்கியிருக்கின்றார். பின்னர் அவரது மகள் சூசன் பெப்பர் இந்த மண்டபத்தை பிலடெல்ஃபிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

    as3

    இன்று தான் கோயில் கலைப்பொருட்கள் ஒரு சில சமூக விரோதிகளால் கொள்ளயடிக்கப்பட்டு திருடப்படுகின்றன என்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிப்படையாக காசு கொடுத்து ஒரு அம்மையார் கோயில் மண்டபத்தையே வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது திகைக்க வைக்கின்றது தானே. இந்தக் கோயில் நாயக்கர் காலத்தில் அதாவது கிபி 1550ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட கோயிலென இங்குள்ள குறிப்பில் காணலாம்.

    நான் சென்றிருந்த நேரத்தில் இப்பகுதியை சீரமைப்பு செய்து கொண்டிருந்தமையால் என்னால் சரியாகப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இருட்டாக ஒளி வெளிச்சம் குறைந்த நிலையில் இருந்ததால் புகைப்படம் சரியாக எடுக்க இயலவில்லை. இவை கருங்கற்களால் ஆன தூண்கள். நாயக்கர் கால அமைப்புடன் கூடியவை. கோயில்களில் நாம் காணும் கற்தூண்களில் பொறுத்திய சிற்பங்கள் என வரிசையாக இவை இங்கே உள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நம் கண்கள் பழகிய ஒரு கோயிலைக் காண வியப்பாகத்தான் இருந்தது. 1940ம் ஆண்டு தொடங்கி இந்த மண்டபம் பொது மக்கள் பார்வைக்காக இங்கே இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் வருவோரின் கண்களுக்கு இது விருந்து.

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம் திங்கள் தவிர ஏனைய நாட்களில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்தின் முகவரி, 2600 Benjamin Franklin Parkway, Philadelphia, PA 19130.

    as4

    ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையானது இந்த அருங்காட்சியகம். 1876ம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கள் படிப்படியாக விரிவாக்கம் கண்டன. இங்குள்ள மேலும் சில அரும்பொருட்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

    தொடரும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(132)

    செண்பக ஜெகதீசன்

     

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்          

    மேற்சென் றிடித்தற் பொருட்டு.   

           –திருக்குறள் –784(நட்பு)

     

    புதுக் கவிதையில்…

    சிரித்து விளையாடுவதல்ல

    சிறந்த நட்பு,

    தவறான வழிசெல்லும் நண்பனைத்

    திருத்திட

    தட்டிக்கேட்டு சரிசெய்வதே…!

     

    குறும்பாவில்…

    சிரிப்பதற்கல்ல நட்பு

    சீராக்கிட,

    தவறும் நண்பனைத் தட்டிக்கேட்டு…!

     

    மரபுக் கவிதையில்…

    என்றும் நல்ல நட்பென்பது

         எதற்கும் சிரித்து விளையாடும்

    ஒன்றும் உதவா உறவல்ல

       ஓசைச் சிரிப்பில் பயனில்லை,

    சென்றிடும் நட்புப் பாதையிலே

      செயலில் தவறிடும் நண்பனைத்தான்

    அன்புடன் இடித்துத் திருத்துவதே

      ஆக்க மான நட்பாமே…!

     

    லிமரைக்கூ…

    நட்பல்ல வீணாய்ச் சிரிப்பது, 

    தவறும் நண்பர் திருந்திட இடித்துரைப்பதே

    நட்பெனும் பெயரைத் தரிப்பது…!

     

    கிராமிய பாணியில்…

    நல்லதில்ல நல்லதில்ல

    நட்பதுதான் நல்லதில்ல,

    சிரிச்சிப்பேசி நேரம்போக்கும்

    நட்பதுதான் நல்லதில்ல..

     

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நம்பிக்கையான நட்பிதுதான்,

    கெட்டவழில நண்பன்போனா

    கேட்டுத் திருத்துற

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நம்பிக்கையான நட்பிதுதான்,

    உண்மயான நட்பிதுதான்…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 218

    –மலர் சபா

    மதுரைக் காண்டம் 11: வஞ்சின மாலை

    வேறு ஒருவன் தன்னைத் தவறாகப் பார்ப்பது கண்டு,
    “நிறைமதி போன்ற முகத்தைக்
    குரங்கு முகம் ஆக்குக” என்று கூற,
    அவ்வாறே அந்த முகத்தில் இருந்து,   paththini
    வெளியூர் போன கணவன் வீடு திரும்பியதும்
    குரங்குமுகம் நீக்கி இயல்பான முகம்கொண்ட
    சிவப்பு மணிகள் பொருந்திய மேகலை அணிந்த
    அல்குலை உடைய
    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    மகளிர் அறிவு என்பது அறியாமை உடையது என
    மேலோர் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணராது
    பின்வருவது பற்றி ஆராயாது,
    தன் சிறுவயதுத் தோழியுடன் வண்டலாடும்போது,
    “ஒள்ளிய தொடியுடையாய்!
    நான் ஒரு மகளும் நீ ஒரு மகனும் பெற்றால்
    உன் மகனே என் மகளுக்குக் கணவன் ஆவான்” என்றேன்.

    இன்று மணப்பருவம் என் மகள் எய்திய வேளையில்
    என் தோழி ஆண் மகவைப் பெற்றிருக்கிறாள்.
    என் உறுதிமொழியை நினைவுபடுத்தி
    அவள் பெண் கேட்கிறாள்.
    அச்செய்தியை நான் கேட்டதால் 
    மிகவும் துயரம் அடைகிறேன் எனத்
    தன் தந்தையிடம் தாய் கூறியதை மகள் கேட்டாள்.

    தாயின் மொழியை நிறைவேற்றுவதற்காகத்
    தானாகவே முன்வந்து புத்தாடை உடுத்திக்
    கூந்தல் சீவி மணப்பெண்ணாய் உருவெடுத்து,
    தன் தாய் கூறிய அந்த ஆண்மகவைக் கணவனாய்க் கொண்டு
    அவன் கைபிடித்துத் தன் தலையில் சுமந்து வந்தாள்.
    திருமகள் போன்ற சிறப்பான
    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    தேன்நிறை கூந்தலையுடைய
    பத்தினிப் பெண்கள்
    இத்தகைய சிறப்புப் பொருந்தியவர்கள்
    பலரும் பிறந்த புகார் நகரில் தான் நானும் பிறந்தேன்.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (16)

    நிர்மலா ராகவன்

    காதல் வந்துவிட்டதே!

    நலம்-1-2

    பல ஆண்கள் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது — அவர்கள் நான் பெற்ற குழந்தைகளைவிட இளையவர்கள் என்பதால்.
    ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

    `டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்ற சீன இளைஞரை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் சந்தித்தேன்.

    `எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வது?’

    `இது தவிர்க்க முடியாதது!’ என்றேன், பதிலுக்கு.

    எந்த ஆணை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். பதினான்கு வயதில் ஏதாவது ஒரு ஆசிரியைமீது காதல் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் காதல் வித்தியாசமானது. இதில் காமக்கலப்பு கிடையாது. `இந்தமாதிரி ஒரு பெண்ணைத்தான் நான் மணக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் தோன்றுமாம். (நான் சில ஆண்களைக்கேட்டு அறிந்த ஞானம்!). அவர்கள் குடும்பத்திலுள்ள அம்மா, அக்கா முதலிய பெண்களிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஆசிரியை வேறுபட்டிருப்பார்.

    மார்க் என்ற பையன் விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் எதைச் செய்யவும் அஞ்சுவான். `ஐயே! உடம்புதான் பெரிசு! பயந்தாங்கொள்ளி!’ என்று வகுப்பில் பெருவாரியாக இருந்த மலாய் மாணவர்கள் அந்த இந்தியப் பையனைக் கேலி செய்வார்கள்.

    ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தேன். அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அம்மா ஒரே மகனான அவனைப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் என்றும் அவன் கூறியதிலிருந்து புலப்பட்டது.
    அடுத்த முறை, `நீ இந்தப் பரிசோதனையைப் பண்ணு. நான் பக்கத்திலேயே நிற்கிறேன். ஒன்றும் ஆகாது!’ என்று தைரியம் அளித்துப்பார்த்தேன்.

    `உயிருக்கு ஒன்றும் ஆகாதே?’ என்று சந்தேகப்பட்டான்.

    `அப்படி ஆனால், நான்தான் போலீஸில் மாட்டிக்கொள்வேன்!’ என்று நான் சிரிப்புடன் கூற, சற்றுத் துணிந்தான். நாளடைவில், அவனுடைய தைரியம் பெருகியது. சற்று அபாயகரமாகவே நடக்க முனைய, நான் கண்டித்தேன். ஆனால், அவன் நல்லவிதமாக மாறிவிட்டான் என்ற பெருமிதமும் எழாமலில்லை.

    தானும் பிறரைப்போல தைரியசாலிதான் என்ற நம்பிக்கையும், அதனால் மகிழ்ச்சியும் எழ, அந்தக் குணம் வெளிப்படக் காரணமாக இருந்த ஆசிரியைமேல் ஈர்ப்பு வந்தது அந்தப் பையனுக்கு.

    ஒரு நாளைக்குப் பலமுறை என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சந்தித்து, `இன்று உங்களுக்கு ஐந்து முறை குட்மார்னிங் சொல்லிவிட்டேன்!’ என்று பெருமிதப்படுவான். `எங்கள் வகுப்புக்கு வாங்களேன்!’ என்று, நான் இன்னொரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து கெஞ்சுவான்.

    ஒரு நாள் பள்ளி ஆரம்பிக்குமுன் என் அறைக்கு வந்து, `டீச்சர்! உங்கள் கணவர் எங்கு உத்தியோகம் பார்க்கிறார்?’ என்று விசாரிக்க, நான் சற்று கோபத்துடன், `நான் என் குடும்ப விவகாரங்களை மாணவர்களுடன் விவாதிப்பதில்லை,’ என்றேன்.

    மார்க் மனந்தளராது, `எங்கம்மாவுக்கு அவரைத் தெரியுமாம்,’ என்றான். நாங்கள் இருவரும் ஏதோ விதத்தில் நெருங்கிவிட்டதைப்போல ஒரு பூரிப்பு அவனிடம்.

    அந்த ஆண்டின் இறுதியில் மார்க்கின் போக்கில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பிறரும் அவனை முன்போல் கேலி செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள்.

    அதற்கடுத்த வருடம் நான் அவன் வகுப்பில் பாடம் நடத்தவில்லை. ஆனால், என் வருகைக்காகக் காத்திருப்பவன்போல் பள்ளிக்கூட வாசலில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். முகம் வேறு பக்கம் திரும்பியிருக்கும். உடலில் படபடப்பு தெரியும். கைகள் இறுகியிருக்கும். ஒருவழியாக, `குட்மார்னிங், டீச்சர்!’ என்று திக்கித் திணறிச் சொல்வான். சற்று வளர்ந்திருந்ததால், தன் போக்கில் அவனுக்கு வெட்கம் உண்டாகியிருந்தது.

    நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிப் போனபின், ஒரு நாள் மார்க்கை ஒரு பேரங்காடியில் பார்த்தேன். பெரியவனாக வளர்ந்திருந்தான். `ஹலோ, மிஸஸ். ராகவன்,’ என்றபடி, முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டு, உடலை விறைத்தபடி நகர்ந்தான். அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அம்மாவும், அக்காளும் பெரிதாகச் சிரித்தபோதுதான் எனக்கு விஷயம் விளங்கியது. என்னைப்பற்றி எப்போதும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பான் போலும்! வேறு சிலரும் இப்படி இருந்தார்கள்.

    அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் ஒருவருக்கு உண்மையாகத்தான் இருக்கும். அதைக் கேலி செய்யாது ஏற்கவேண்டும். ஒரு குழந்தை இடியோசை கேட்டு அஞ்சுவதுபோல்தான் இதுவும்.

    இதையெல்லாம் சீன நண்பரிடம் கூறினேன்.

    அவர் சமாதானம் அடையாமல், `இதை எப்படித் தவிர்ப்பது?’ என்று துளைத்தார்.

    எனக்கு வேறொரு நிகழ்ச்சி நினைவில் எழுந்தது. நீச்சல் குளத்தில் வேலையாக இருந்த ஜூல்கிஃப்லி என்ற ஒரு மலாய் இளைஞன் வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தான். கோலாலம்பூரில் எல்லாமே அவனைப் பயப்படுத்தியது. நான் `குட்மார்னிங்¸ ஜூல்!’ என்று கூற, உற்சாகமாக என்னிடம் பேச்சுக்கொடுப்பான்.

    பிற பெண்கள் ஜூல்கிஃப்லியை வேலைக்காரன்போல் நடத்தியதைப்போல் இல்லாது, ஒரு நண்பனிடம் பழகுவதுபோல் அவனிடம் பேசினேன்.

    அவன் வயதில் மகள், மாப்பிள்ளை எல்லாரும் வீட்டில் இருக்கிறாள், ஆனால் நான் அதிகாலையில் நீஞ்ச வந்துவிடுவேன் என்று கேட்டு அவனுக்கு ஒரே ஆச்சரியம்: `எல்லாரும் காலை உணவுக்கு என்ன செய்வார்கள்?’

    `அது அவர்கள் பாடு!’ என்றேன், அலட்சியமாக.

    அவன் அதிர்ந்து போனான்.

    திடீரென்று ஒருநாள் உடலை நெளித்துக்கொண்டு, `எனக்கு எப்போது ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கொஞ்சலாகக் கேட்டானே, பார்க்க வேண்டும்! இப்போது நான்தான் அதிர்ந்தேன். திசை தெரியாது தவித்த ஒருவனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைத்து நான் பேசப்போக, இப்படி ஒரு திருப்பமா!
    அவன் முதுகில் பளாரென்று அறைவிட்டு, `ரொம்பப் பேசாதே! போய் வேலையைக் கவனி!’ என்று மிரட்டினேன்.

    அதன்பின் ஜூல்கிஃப்லி என்னிடம் வாலாட்டவில்லை. `

    சே! இவளும் நம் அம்மாபோல் இருக்கிறாளே!’ என்ற கசப்பான உண்மை புரிந்திருக்கும்.

    சீன நண்பரிடம் கூறினேன், `மாணவிகளை நீங்கள் அடிக்க முடியாது. ஆனால், நீங்கள் சிடுசிடுத்தாலே போதுமே! உங்கள்மீதுள்ள மோகம் போய்விடும்!’

    அவர் பெருமூச்சு விட்டார். `பிரச்னை’ என்று தன்னை நாடி வருகிறவர்களின் மனதை மேலும் நோகடிக்க வேண்டுமா என்ற குழப்பம் அதில் தெரிந்தது.

    தொடருவோம்

    Share
  • புதுக்கவிதையின் நோக்கும், போக்கும்

    –க.தமிழ் அழகன்

    Thamizhazhaganஆதி இலக்கியங்கள் கவிதை வடிவின. தொல்காப்பியம் கூறும் செய்யுளியல் இலக்கணம் அவர்காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களின் வடிவங்களை விளக்கும். காரிகை கற்று எவரும் கவிதை இயற்றுவதில்லை. ‘யாப்பருங்கலக்காரிகை’ எனும் யாப்பிலக்கணநூல் தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றியது.

    வடிவம் மட்டும் கவிதையாகிவிடாது. தேமா, புளிமா சேர்க்கையோடு எதுகை, மோனையுடன் கருத்துணர்வு நிலையும் சேர்ந்தால்தான் கவிதை உயிர்பெறுகிறது. தற்காலத்தில் கவிஞர்கள் பலர் முற்றிலும், வடிவிலும், பொருளிலும் மாறுபட்டுப் புதிய பிறவியாகக் காட்சியளிக்கும் புதுக்கவிதைகளை இயற்றிவருகின்றனர். அத்தகைய புதுக்கவிதைகளின் நோக்கும் போக்கும் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    நோக்கம்

    அக்காலக் கவிதைகளில் அகமும், புறமும் பாடுபொருளாயின. இன்று மனிதசமுதாயத்தின் பல்வேறு படிநிலைகள் பாடுபொருளாக்கப்படுகின்றன. நிற்கவே நேரமில்லாத இயந்திர உலகத்தில் விரைந்து படிக்கவேண்டும். எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் கவிஞர்கள் தத்தம் அனுபவக் கருத்துக்கள் விரைவில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்றனர்.

    ‘சொல் புதிது, பொருள் புதிது’ என்று பாரதி கூறியிருப்பதும் மரபிலிருந்து மாற்றம் தேவை என்பதையே குறிக்கிறது. அதனால்தான் மானிடவர்க்கத்தின் பாடுகளையும், பட்டினிக்கோலங்களையும், பெண்களின் நிலைகளையும் கருத்துப்பொருளாகக் கொண்டு படைப்புகளைப் படைக்கின்றனர்.

    புதுக்கவிதை பிரெஞ்சுப்புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் தோன்றியதாகும். ஆங்கிலக் கவிஞர் ‘வால்ட் விட்மன்’, ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதையைப் படைத்தார். தொடக்க காலத்தில் ஆங்கிலம் படித்த கவிஞர்கள் மட்டுமே பிறநாட்டுக் கவிஞர்களின் புதுக்கவிதைகளைப் படித்துத் தமிழ்மொழியில் புதுக்கவிதைகளை எழுதினர். எனினும் கவிதை வடிவங்களில் காலந்தோறும் புதுமைகள் நிகழ்ந்துள்ளன. நாட்டுப்புறப் பாடல்களிலும் புதுக்கவிதைகளின் வடிவங்களைக் காணலாம். ஜப்பான் நாட்டு ’ஹைகூ’ கவிதைகள் தமிழில் ’குறும்பாக்கள்’ தோன்றக் காரணமாயின. இருப்பினும், தமிழ் விடுகதைப்பாடல்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

    “எருக்கிலைப் பழுப்பதேன்?
    எறுமைக்கன்று சாவதேன்?”
    ”பாலின்மையால்”

    இவ்விடுகதைப் பாடல் ஜப்பானிய ‘ஹைகூ’ பாடலின் வடிவம் கொண்டதுதான் என்றாலும், ஒலிநயச் சேர்க்கை இருப்பதாலும், எதுகை மோனை அமைவதாலும், இதனை மரபுக்கவிதையில் அடக்கிவிடுகின்றனர். கருத்து வடிவத்தை நோக்கின் இது ஹைகூ வடிவமேயாகும்.

    மரபுக்கவிஞர்கள் உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி யாப்பிற்கு உட்பட்டு கவிதைகளை யாத்தனர். அவற்றைப் புரிந்துகொள்ள விளக்கவுரை, பொழிப்புரை, கருத்துரை என உரையாசிரியர்களின் உரைவிளக்கங்கள் தேவைப்பட்டன. புதுக்கவிதைப் படைப்பாளர்கள், உருவம், உள்ளடக்கம், படிமம், குறியீடு, அங்கதம், முரண் என்பன போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தி யாப்பின்றி கவிதைகளை எழுதுகின்றனர். மரபு மீறலிலும் புதுமைகள் பொலிகின்றன. புதிய வகையான உவமைகளைப் பயன்படுத்தி யதார்த்தப்போக்கில் கருத்துக்களைக் கவிதையாக்குகின்றனர். நமக்குப் பரிச்சயமான உவமைகளைக் கையாளும்போது கவிதை சிறக்கின்றது.

    சிலர் பிற கவிஞர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு அதைப்போல எழுத முயல்கின்றனர். சிலர், தங்கள் விருப்பத்தை நிறைவுசெய்யும் பொருட்டு முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திக் கவிதைகளைக் குறைப்பிரசவ மாக்கிவிடுவதால் தரமற்ற கவிதைகள் தோன்றுகின்றன. அவை நீர்க்குமிழிபோல மறைந்து விடுகின்றன.

    புதிய பாடுபொருள்

    கடவுளர்களையும், அரசர்களையும் பாடிவந்த காலம்மாறி சமுதாய அவலங்களை விளக்கப் பாட்டாளிகள், பாமரர்கள், சமூக விரோதிகள், அரசியல்வாதிகள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், விபச்சாரிகள் போன்றவர்களையும் வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சணைக் கொடுமை, வறுமை, லஞ்சம், பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற அன்றாட நடப்புகளையும் புதுக்கவிதையின் பாடுபொருளாக்குகின்றனர்.

    படிமம்

    பொருளையும், அனுபவத்தையும், உணர்ச்சிகளையும் படிப்பவர் மனத்தில் எழுப்பிக் காட்டுவதையே ‘படிமம்’ என்கின்றோம். இன்றைய புதுக்கவிதைகள் நிலைத்து நிற்பதற்கும், இலக்கியத்தகுதி பெறுவதற்கும் படிமம், குறியீடு, அங்கதம், முரண் போன்ற கருத்துச்செறிவுகள் அவசியமாகின்றன.

    புதிதாகக் கவிதை எழுத நினைப்பவர்கள் எடுத்த எடுப்பில் காதலைப் பற்றி எழுதுகின்றனர். ஆகையால், புதுக்கவிதைகளில் காதல் கவிதைகள் பெருகிவருகின்றன.

    “இனியவளே
    ஈரக்கூந்தலை இறுக்கி
    முடியாதே
    எனக்கு இதயம் வலிக்கிறது”    (த. பன்னீர்செல்வம்)

    புரியாத புதிர்

    சிலர், தம்விருப்பம்போல சொற்களைப் பயன்படுத்திப் புலனுக்கோ, புத்திக்கோ புரியாத வண்ணம் புதுக்கவிதை படைக்கின்றனர்.

    “நிஜம் நிஜத்தை நிஜமாக
    நிஜமாக நிஜம் நிஜத்தை
    நிஜத்தை நிஜமாக நிஜம்
    நிஜமும் நிஜமும் நிஜமாக
    நிஜமோ நிஜமே நிஜம்
    நிஜம் நிஜம் நிஜம்”   (ஆத்மாநாம் கவிதைகள், ப. 120)

    இக்கவிதை நிஜமாகவே புரியாத புதிராகும். இவ்வகைக் கவிதைகள் படைப்பாளருக்கும், வாசகருக்கும் உள்ள தூரத்தை அதிகரிக்கின்றது.

    அரசியல்வாதி

    சமூக அக்கறையுள்ள கவிஞன் சில சமூகச்சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றான். கவிஞர் ஈரோடு தமிழன்பன்,

    “சலுகைகள்
    சீர்திருத்தங்கள்
    வாக்குறுதிகள்’
    புரட்சித் தவத்தைக் கலைக்க
    ஆதிக்க
    புரியிலிருந்து புறப்பட்டுவரும்
    மேனகை ரம்பை
    திலோத்தமை ஊர்வசியாய்”

    என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல்வாதிகள் மக்களின் உள்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

    வேலையில்லாத் திண்டாட்டம்

    கவிஞர் அறிவுமதி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலையை,

    “எம்ப்ளாய்மெண்ட்
    எக்ஸ்சேஞ்சுக்குப்
    புறப்பட்டுப்போன
    மகனிடம் கேட்டுக்கொண்டார்
    தந்தை
    என்னுடையதையும்
    ரெனிவல் செய்துகொண்டு
    வந்துவிடப்பா”

    என்று பாடியுள்ளார். இக்கவிதையில் ஆங்கிலச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்ப பயின்று வந்துள்ளன. இது பிறமொழிச்சொற்கள் சரளமாகக் கையாளப்பட்டுள்ள போக்கினைக் காட்டுகிறது.

    பெண்ணியக் கருத்துக்கள்

    பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் தங்கள் கவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களைக் கையாண்டுள்ளனர். கவிஞர் மு. மேத்தா பெண்சிசுக் கொலையை,

    “பெண்கள் கிளிகளாம்
    உவமை சரி
    நெல்மணி”

    எனும் கவிதை வரிகளில் பாடியுள்ளார். வரதட்சணைக் கொடுமையால் மணமாகாத முதிர்கன்னியான நிலையை,

    “விழிகள்
    நட்சத்திரங்களை வருடினாலும்
    விரல்கள் என்னவோ
    ஜன்னல் கம்பிகளோடுதான்”

    என்று கண்ணில் கனவுகளையும், நெஞ்சில் காதலையும் சுமந்துகொண்டு வாழும் பெண்களின் அவலநிலையை இக்கவிதை விளக்குகிறது.

    கவிதை என்ற சொல் மரபுக்கவிதையைக் குறித்தமையால் வடிவாலும், பொருளாலும் புதுமையாக விளங்கும் கவிதைகளைப் புதுக் கவிதைகள் என்று அழைக்கின்றனர். யாப்பு மீறல் மட்டுமே புதுக்கவிதைப் பண்பாகாது. யதார்த்தப் பாடுபொருளாலும் உணர்வு நிலையாலும், சொல்லாடல்களாலும் புதுமைபெற்று விளங்குவதால் புதுக்கவிதை நிலைத்து நிற்கிறது. ஆண் கவிஞர்களும், பெண் கவிஞர்களும் தங்கள் அனுபவங்களையும், சமூகச் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டிக் குறைந்த அடிகளில் எளிய சொற்களைப் பயன்படுத்துவதால் புதுக்கவிதைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சிறந்த கவிதைகள் நிலைத்தும், தரமற்ற கவிதைகள் அழிந்தும் போவதை அறிய முடிகிறது.

    ***

    க.தமிழ் அழகன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    அரசு கலைக்கல்லூரி, அரியலூர்

     

    Share
  • அவன் என்னவன்!

    –கிருத்திகா

    அவன் இரண்டு நாட்களுக்குமுன்தான் எதிர் வீட்டுக்கு, அதாவது சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். யாரையும் கவரும் அழகு. இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது அவனது கம்பீரமான நடையும், பார்வையும்…. அப்பப்பா!!

    இனி அவன் இங்குதான் தங்கப்போகிறான் என்பதையும் தெரிந்து கொண்டாயிற்று…  உடனே சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு ஓட்டம் எடுக்க மனம் துடித்தது. முடியவில்லையே….!

    என் வீட்டில் இருந்த நேரத்தைவிட அவர் வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம்… ஆனால் இந்த அம்மாவுக்கு என்னாயிற்று?? இதுவரை நான் அங்குச் செல்ல எந்தத் தடையும் சொல்லாதவர் அவன் வந்ததிலிருந்து அந்தப்பக்கம் பார்க்கக் கூட விடவில்லை…

    என் வீட்டு ஜன்னலில் இருந்தே எத்தனை நாள் அவனைப் பார்ப்பது..? அவனது ஒவ்வொரு கண்சிமிட்டலும் ஆயிரம் கதைகள் சொல்கின்றதே… என் நண்பர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை, முன்பைவிட அதிகநேரம் அங்கு தான் இருக்கிறார்கள்.

    இதற்கு முடிவுகட்டியே ஆக வேண்டும்… என்ன செய்யலாம்??

    இதுதான் சரியான திட்டம்… “அம்மா… நாளைக்கு எனக்கு பரீட்சை இருக்கு… இங்க இருந்தா எனக்கு டிவி பார்க்கத் தோணும்… நான் போய் மொட்டை மாடில உட்கார்ந்து படிக்கறேன்….”

    “என்னடா தங்கம்.. இங்க வா.. உனக்கு உடம்பு சரியில்லையா..? படிக்கறன்னு சொல்ற… அதுகூடப் பரவாயில்லை… டிவி பார்க்காம படிக்கப் போறேன்னு சொல்றயே… அதுதான் நம்ப முடியல…    சரிடா தங்கம்.. நீ போய் நல்லாப் படி”

    “நான் இனிமே நல்லாப் படிக்கணும்னு இருக்கேன்மா… அதான்…   சரிம்மா நான்போய்ப் படிக்கறேன்..” மனதுக்குள் ‘ப்ளான் சக்சஸ், இனிமே தினமும் நானும் அவன்கூடப் பேசலாம்….பழகலாம்..’

    எப்படியோ, மாடிக்கு வந்தாயிற்று…. இனி அவனுடன் பழகுவதற்கு யாரும் தடை இல்லை… தினமும் அவனுடன் சைகையில் உரையாடினேன்…. அவன்தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை…

    ஒருநாள் அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, சோமுத் தாத்தா வீட்டிற்கு அவனைப் பார்க்கச் சென்றேன்… முதலில் என்னைப் பார்த்தாலே கோபப்பட்டான்… இப்போதெல்லாம் அப்படி இல்லை…

    இருவரும் அப்படி இணைபிரியாதவர்களாக ஆகிவிட்டோம். தினமும் அம்மாவிற்குத் தெரியாமல் போய்ப் பார்ப்பேன்…. அம்மா இல்லாத சமயத்தில் அவனை என்வீட்டிற்கு ஒரு முறை அழைத்து வந்தேன்…. அப்பாவும் தடை போடவில்லை….  நான் அப்பாவின் செல்லமாயிற்றே!!  அவர் என் மகிழ்ச்சிக்குத் தடைவிதிக்க மாட்டார்…

    அவனோடு நான் பழகுவது அம்மாவுக்குத் தெரியாமல் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன்… இருந்தும், இன்று அங்கிருந்து வரும்போது பார்த்துவிட்டார்…

    “அந்த நாய்கிட்ட போய் என்ன செய்ற..?  அந்த வீட்டுக்கு போகக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்…. இப்பதான் நீ மொட்ட மாடில போய்ப் படிச்ச அழகு புரியுது… நீ ஒண்ணும் குழந்தை இல்ல, ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் குடுக்க…. ”

    முதுகிலும் பலமாக ரெண்டு வாங்கிக் கொண்டேன். அழுவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்…?

    அம்மாவுக்கு நாய்களைக் கண்டால் பிடிக்காது… அதனால்தான் எங்கள் வீட்டில் நாய்க்குட்டி இல்லை… அதற்காக எதிர்வீட்டு நாயைக் கொஞ்சக்கூட அனுமதி இல்லை….

    நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் சின்னப் பையன் பாலுதான்… ஆனால் எனக்கும் குட்டிக்குட்டி ஆசைகள் உண்டு….!!!

    அந்த எதிர்வீட்டு சோமுத் தாத்தாவின் டாமி… என்னவன்…!   அவன் எனக்கு வேண்டும்… அவனை விட்டுப் பிரியமாட்டேன்!

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 39

    க. பாலசுப்பிரமணியம்

    மூளைநரம்பின் வலைத்தளங்களும் கற்றலும் (Neural Networks and Learning)

    education-1-1-1

    “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் எந்த முறையில் கற்றல் நடந்தாலும் ஒரு மாணவனால் ஒரு அளவுக்குத்தான் படிக்க முடியுமே தவிர, படிப்புச் சுமை அதிகமாக இருந்தால் படிப்பின் மேலே அவனுக்கு வெறுப்பு வந்துவிடாதா” என்று நண்பர் ஒருவர் வினவினார். அந்தப் படிப்புச் சுமை என்பது எவ்வளவு? ஒரு தனி மனிதனின் கற்றல் வயதுக்குத் தகுந்தவாறு மாறுபடுமா ? எந்த அளவுக்கு மேல் படிப்புச் சுமை கற்றலுக்கு எதிரான பலன்களைத் தருகிறது? இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பல கோணங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன. கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. காலத்தோலோ நேரத்தாலோ கற்றல் தடைப்படுவதோ அல்லது பாதிக்கப்படுவதோ இல்லை. அதன் பரிமாணங்கள் சூழ்நிலைகளுக்கும் மனநிலைகளுக்கும் தகுந்தவாறு மாறுபட்டுக்கொண்டிருக்கும்.

    எரிக் காண்டல் (Eric. R. Kandel) என்ற ஒரு ஆராய்ச்சியாளர் கற்றலின் பொது மூளை நரம்பின் வலைத்தளங்களில் ஏற்படும் மாற்றங்களை பற்றிச் செய்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவருடைய ஆராய்ச்சியின் படி மூளையிலுள்ள கற்றல் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் (Neural Networks) ஒவ்வொரு வினாடியும் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்குத் தகுந்தமாதிரியும் கற்றலுக்குத் தகுந்த மாதிரியும் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே ஒரு வகுப்பறையில் காலையில் நுழைகின்றபோது இருக்கும் அந்த வலைத்தளங்கள் (Neural networks) மாலையில் அதே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆசிரியர் ஒரு நாள் நடத்தும் பாடங்கள் அந்த நேரத்தில் எந்த உணர்வுப் பாங்கோடு கற்றுக்கொள்ளப் படுகின்றனவோ அதே மனநிலையம் உணர்வுப் பாங்குகளும் ஒரு வாரம் கழித்து அதே பாடத்தில் ஆசிரியர் தேர்வு வைக்கும்பொழுது இருப்பதில்லை. அதனால்தான் பல நாடுகளில் கற்றலும் தேர்வும் உடனுக்குடன் நடக்கின்றன.

    ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தனி மாணவனின் கவனம், கற்றல் திறன், கற்றலின் ஆழம், புரிதல் திறன்கள், கற்ற கருத்துக்களை கையாளும் திறன்கள் ஆகியவை பரிசீலிக்கப் படுகின்றன. ஒரு வகுப்பறையில் எல்லா மாணவர்களையும் எல்லா நேரங்களிலும் பரிசீலிப்பதற்கு அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களின் திறன்களையும் துல்லியமாக கணிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அனால் இதை நடத்துவதற்கான ஆற்றல்களும், திறன்களும், ஆர்வமும், புத்திக்கூர்மையும் ஆசிரியர்களுக்கு இருத்தல் அவசியம். இதைத் தொடர் பயிற்சி மூலமாக அவர்கள் கற்றுக்கொள்ள அநேக வாய்ப்புக்கள் உள்ளன.

    ஹெர்மான் எப்பின்காஸ் என்ற ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் கற்றலையும் நினைவுத்திறன்களையும் பற்றிய ஆராய்ச்சியில் கண்டறிந்ததாவது :

    1. கற்கப்பட்ட எந்த கருத்தும் கற்றலிருந்து முப்பது நாட்களில் 90 விழுக்காடு பலவீனமடைந்து மறந்து விடுகின்றது.
    2. கற்றல் நடைபெற்ற ஒரு நாளுக்குள் இதில் அதிகமான விழுக்காடு நினைவிலுருந்து நழுவி விடுகிறது.
    3. கற்றலை சீர்படுத்த/நிலைப்படுத்த கருத்துக்களை மீண்டும் மீண்டும் நினைவில் வைத்தல் அவசியம்.
    4. கற்றல் எத்தனை முறை நினைவுகூறப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது நிலைபெற்ற நினைவாகிறது.

    இந்தக்கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் “நரம்பின் நெகிழ்வின்மை ” (Neuro-Plasticity) பற்றிய பல் வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலமாக கற்றலின் தன்மையைப் பற்றிய பல வித புதிய கருத்துக்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

    கலிபோர்னியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மைகேல் மெர்செனிச் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியின் மையக்கருத்தாகக் கூறுவது :

    “மூளை நரம்புகளின் தொடர்ந்து மாறுகின்ற திறனின் (changing structure of the brain) காரணத்தால் கற்றலின் நோக்கங்களையும், முறைகளையும், ஆற்றல்களையும் மாற்றி அமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக மூளையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் முடியும்.

    இது ஒரு மனிதனின் வாழ்வில் எந்த நேரமும் ஏற்படலாம். ஆகவே கற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கொள்ளோ, ஒரு தனிப்பட்ட விஷயத்தைச் சார்ந்தோ இருப்பதில்லை. இந்தச் செயல் தொடரும் பொழுது மூளையில் உள்ள பெருமூளை புறணி (Cerebral Cortex) கற்றலை மட்டும் பேணுவது அல்லாமல் எப்படி கற்கவேண்டும் (Learning to Learn) என்ற திறனையும் பெற்றுவிடுகிறது.”

    எனவே, மூளை வெறும் கணினியைப் போல் பதிவு செய்ததை மட்டும் பாராட்டாமல் அறிவுவளர்ச்சியின் மையமாகச் செயல்படுகின்றது.

    தொடருவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (76)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13874994_1059936904060508_1239459592_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    75fe4bff-c7c0-42c0-aa6d-4735d257012d

    ’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து
    மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-,
    நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால்
    சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி

    கிரேசி மோகன்

     

    ’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி….இன்றைய மூன்று ‘’வாமனாய, ஸ்ரீதராய, ரிஷிகேசாய’’….!

    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் வாமனனே ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் சீதரனே
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! [ஹிரோஷிமா நாகசாக்கி நினைவு நாள்]

    அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

    anuyu

    (ஏப்ரல் 26, 1986)

    சி. ஜெயபாரதன், கனடா

    பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து விழுதற்றுப் போக,
    விதையும் பழுதாக
    ஹிரோஷிமா
    எழில் நகரம் அழித்து
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும் அணுப் பேரிடியால்
    நாசமாகி
    மட்டமாக்கப் பட்டது!
    திட்ட மின்றி
    தென்னாலி ராமர்
    சந்ததி
    மூடர்கள் அணு உலையைச்
    சூடாக்கி
    வெடிப்புச் சோதனை
    அரங்கேற்றி
    நிர்வாண மானது,
    செர்நோபில் அணு உலை !
    சமாதி யானது
    மரணித்த மனிதரோடு !

    மாய்ந்தனர் மக்கள்,
    மடிகிறார் !
    மேலும் மரிப்பார் ! மரிப்பார் !
    நாடு நகரம்
    வீடு வயல்கள் எங்கும்
    மூடின வெங்கதிர் வீச்சுகள்!
    கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
    கடத்தப் பட்டார்,
    கைப்பையுடன்
    கதிர்மழைப் பொழிவால்!
    புற்று நோயும், இரத்த நோயும்
    பற்றின பாலரை !
    படுகிறார் வேதனை !
    மன்னிக்க முடியாத,
    மாபெரும்
    மனிதத் தவறால் நேர்ந்த
    முதல்
    அணுயுகப் பிரளய
    அரங்கேற்றம் !

    ​+++++++++++​

    the-boy-1

    ++++++++++++

    [செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
    பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

    Share
  • எழுவகைப் பெண்கள்: 10

    அவ்வைமகள்

    துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும்

    அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    “நான்கு மனைவிகள் – எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை – புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள – ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது – காதும் கேட்காது – மூளையும் விளங்காது – துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம் – நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். பெண்கள் பற்றிய புரிந்து கொள்ளல் கொஞ்சம் இருந்தது என்றாலும் – அவர்களைப் பற்றிய சரியான ஞானம் இல்லாமலேயே என் வாழ்நாளைக் கழித்திருக்கிறேனே என்று இப்போது உணர்கிறேன் – ஒருவேளை உங்கள் கலாச்சாரம் போன்று எங்கள் கலாச்சாரத்திலும் பெண்களின் நலன் என்பது முத்தாய்ப்பான விஷயமாக இருந்திருக்குமேயானால் நான் உங்கள் ஆடவர்களைப் போல ஒரே ஒரு மனைவியோடு நல்விதமாய் வாழ்ந்து – இப்படி அழிந்தொழியாமல் – அலைந்துகெடாமல் ஒழுங்காய் இருந்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.” என்கிறார்.

    அந்த வெளிப்படையான நேர்மையைப் பாராட்டி விட்டுச் சொன்னேன், உங்கள் வாக்கின் சாட்சியாக எங்கள் ஆடவர்களை மீண்டும் நிலைக்கழைக்கும் பணி எங்களுக்கு இருக்கிறது என்பதை நான் எனக்கு மீண்டும் நினைவூட்டிக்கொண்டேன். சொல்லப்போனால், ஆண்களால் தான் ஒரு நாடு தாழ்வுறுகிறது என்பதை அவ்வையே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாடு எதுவாகினும், அது எத்தகைய நிலத் தன்மையைக் கொண்டதாகினும், அந்நிலத்தில் உள்ள ஆடவரின் தராதரத்தைக் கொண்டே அந்நிலத்த்தின் தராதரமும் அமையும் என்கிறார் அவ்வை என்றவள் தொடர்ந்து.

    அவ்வையின்

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவ ராடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

    என்ற பாடலை மொழிபெயர்த்துச் சொன்னேன். அந்நொடி, “அப்படியா – அப்படியா – அப்படியா?” என்று தொடர்ந்து கூவி வியந்தார் – மேலும் தொடர்ந்தார்.

    “இது எத்தனைப் பெரிய சமூகப் பொருளாதாரத் தத்துவம் தெரியுமா? ஆடவனின் நடத்தை – அவனது பழக்க வழக்கங்கள் – அவனது பெண்ணறம் பேணும் பாங்கு ஆகியன உண்மையிலேயே ஒரு சமூகத்தை அழிக்கும் அல்லது வாழவைக்கும். ஆடவனின் இளமை ஆற்றல் வெகுபெரும்பாலும் விரயமாகிறது – ஆனால் பெண்ணோ துடித்தெழுகிறாள் – காவல் தெய்வமாய் அவதாரம் எடுக்கிறாள். தன் வீட்டை – தனது சமூகத்தைக் காக்க – பெண் எத்தனைப் பாடுபடுகிறாள் என்பதை நான் அறிவேன் – சொல்லப்போனால் உங்கள் அவ்வையின் வாசகம் எனக்கு மிகவும் பொருந்தும் – என்னை வழிநடத்திச் செல்ல என்வாழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண்ணும் முயன்றாள் – என் தாயிலிருந்து – நான் பழகி விலகிய அனைத்துப் பெண்கள் வரை! ஆனால் நான்? உதாசீனம் செய்தேன் – புறக்கணித்தேன் – அவர்கள் யாவரையும் உடுப்பாய்ப் பயன்படுத்தி, என் வாழ்விலிருந்து கழற்றி எறிந்தேன். உண்மையில் சொல்கிறேன் மோசமான ஆடவர்கள் எந்த சமூகத்துக்கும் அடுக்காது. உங்கள் அவ்வை, ஆடவர்கள் பற்றி நூற்றுக்கு நூறு சரியாய்ச் சொல்லியிருக்கிறாள்.” என்றார். அவரது களங்கமற்ற உண்மையின் வெளிப்பாட்டை மீண்டும் பாராட்டித் தொடர்ந்தேன்.

    “துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம்” என்றீர்களே அந்த வாசகம் என் சிந்தனையைக் கிளறியது. துவார பாலகர்களின் – Hole Guards நினைவு வந்தது என்றேன்.

    “அப்படியா அவர்கள் யார்?” என்றார்.

    “எங்கள் கோயிலில் மூலவர் எனப்படும் பிரதானக் கடவுள் கருவறையில் இருப்பார் என்று முன்னம் சொன்னேன் அல்லவா? எங்கள் கோயில்களில் கருவறையின் பிரதான துவாரத்தில் – அதாவது நுழைவாயிலில் – இருபுறமும் துவார பாலகர்கள் எனும் காவல் தெய்வங்கள் இருவர் இருப்பர் -இவர்கள் கர்ப்பக்கிரகத்தின் தலைமை துவாரத்தில் பக்கத்திற்கு ஒருவராக நிற்பர். பாலகன் என்றால் ஆண்பிள்ளை என்பது பொருள்.

    நெடிய தோற்றமும், ஊடுருவி வினவும் வியப்புக் கண்ளும் – கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி நிற்பர் துவார பாலகர்கள். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்றால் – துவார பாலகரின் இருகால்களில் ஒரு கால் மட்டுமே கீழே பதிந்திருக்கும் – இரண்டாவதுகாலைத்தூக்கி – தூக்கிய அக்காலை மாறுகோணமாய்ச் செலுத்தி – அக்காலைக் கொண்டு – எழுச்சியுடன் கர்ச்சிக்கும் ஒரு ஆண் சிங்கத்தை அடங்குவார் துவாரபாலகர். அந்த காட்சியைக் கொஞ்சம் உற்று கவனிக்க வேண்டும். துவாரபாலகரின் கோணத்தில் தூக்கிய காலானது, ஒரு ஆண்சிங்கத்தின் தலைமீது நன்கு அழுத்திக்கொண்டிருக்கும்- அந்த சிங்கமோ “ஏய் நான் ஒரு சிங்கராஜா! என்னை நீ இப்படிச் செய்கிறாயே” என்று மிதர்ப்போடு அச்சிங்கம் அலறுவதுபோல் காட்சி இருக்கும்.

    அதற்கு துவாரபாலகர், “ஏய்! நீ சிங்க ராஜாவானால் எனக்கென்ன? உன் ஆம்பளைத் திமிரோடு இங்கே நுழைந்தாய் என்றால் அசிங்கப்படுவாய் ஜாக்கிரதை!” என்றபடியாக பதிலிருப்பார். ஒருவித அசாத்திய புன்னகையோடு – அச்சிங்கத்தை – அதாவது ஆண் செய்யக்கூடிய அசிங்கத்தைத் தரையோடு தரையாக அமுக்கி – அதனை எழும்பாமல் – மிதித்தபடி நிற்கிறார் எங்கள் துவாரபாலகர்.

    உண்மையில், எங்கள் துவாரபாலகர்களின் ஒய்யாரத்தையும் கம்பீரத்தையும் உடல்முத்திரை இலக்கணத்தையும் சொல்ல வார்த்தைகள் போதா. சொல்லப்போனால், இந்த துவார பாலகர்கள் ஏன் இங்கு கருவறை வாயிலில் நிற்கிறார்கள் – இவர்கள் கூறுவது என்ன என்று சிறுவயது முதல் நான் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் புரியாதது – நவீன மருத்துவ அறிவியலில் கல்வி பெற்று – தொழில் மேற்கொண்டதால் – பின்னாளில் புரிந்தது. எங்கள் பாட்டியின் அம்மா ஓயாமல் சொல்லுவாள் “பலகாரமும் பலதாரமும் பாடைக்குப் பக்கம்” என்று அதுவும் கூட இந்த மருத்துவ அறிவியல் ஞானத்திற்குப் பின்பு மட்டுமே புரிந்தது. பலகாரம் -snack சாப்பிடுவதுபோல் பலபெண்களுடன் உறவு கொள்ளுவதா என்பதே அவள் கூறிய பழமொழியின் பொருள்.

    மருத்துவ அறிவியலில், பலதாரம் கொள்பவனுக்கு இதயக் கோளாறுகள் டக்கென வருகின்றன என்பது கண்டு ஆச்சரியப்பட்டேன் – பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது அவனுடலில் – T helper செல்கள் பாதிக்கப்படுகின்றனவே என்று வியந்தேன். இந்த வாழ்வியல் அனுபவங்களின் விளைவால் எங்கள் கலாச்சாரத்தின் உன்னதத் தன்மையும் – எங்கள் மூதாதையர்கள் நாட்டியிருக்கிற மூலவேர்களையும் கொஞ்சம் கூடுதல் தெளிவுடன் பார்க்கும் சிந்தையும் என்னுள் வளர்ந்தது.

    ஆக, ஆண்களுக்கு இருக்கின்ற துவாரம் தேடும் எழுச்சியின் கடும் விளைவுகளின் விளக்கம் தான் துவாரபாலகர்கள் என்பேன். இளமையின் எழுச்சியால் உந்தப்பட்டு – பெண்ணின் கருவறையின் முகப்பான பெரினிய துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சிக்கு துவாரபாலகர்கள் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்பேன்: “மறையுறுப்புக்கள் ஆயுதம் போன்றவை – நெறிபிறழும்போது பதம் பார்த்துவிடுபவை – மனிதா நீ இதை புரிந்து கொள்! இந்தத் துவாரத்துக்குள் புனித அக்கினிக் கனல் இருக்கிறது – இந்த துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சி தூய்மையானதென்றால் – நியாமானதென்றால் – இங்குள்ள அக்கினி அந்த எழுச்சியைப் புடம்போட்டுத் தங்கமாக்கும் – நுழைந்த நல் எழுச்சியின் பிரதி பலனாய் – எழுச்சிமிக்கப் பரிசாய் நல்ல உறவு தரும் – நல்ல பிணைப்பு  தரும் – நல்ல ஆரோக்யம் தரும் – தங்கமான வாரிசு தரும். அன்றேல், இந்த துவாரத்தில் உள்ள அக்கினி உன் தீய எழுச்சியைக் கொய்து உன்னையே பொசுக்கிவிடும் ஜாக்கிரதை!” என்று துவாரபாலகர்கள் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது!” என்றேன்.

    பார்க்கப்போனால், பெரினியத் துவாரத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு ஆணும் துளைநிலை ஒழுக்கத்தோடு மட்டுமே நுழையமுடியும் என்னும் எங்கள் ஆன்மீக விளக்கங்கள் இன்றைய மருத்துவச் சான்றுகளின் கருத்தையே என்றோ அனாயாசமாய்ச் சொல்லிப்போயின என்பேன். சொல்லப்போனால் கற்பு என்கிற ஒரு கோட்பாட்டை எங்கள் கலாச்சாரம் நேரிடையாகவும் – மறைமுகமாகவும் வாழ்க்கைக் கோட்பாடாகவே முன்வைக்கிறது எனலாம்” என்றேன்.

    “What you said really makes sense” என்றார். “Chastity” அதாவது கற்பு என்பது ஆணுக்கு மிகவும் முக்கியம் – அதனை நான் இந்நிலையில் வெகு ஆணித்தரமாகச் சொல்லமுடியும் – என் தனிமனித வாழ்வின் பலாபலன்கள் அடிப்படையில் என்றார். கற்பை உலகின் பல கலாச்சாரங்கள் கோடிட்டேனும் காட்டுகின்றன – ஆனால்  உங்கள் கலாச்சாரம் பல்லாயிரம் படிகள் மேலே போய் அதனை வாழ்வின் இன்றியமையாக் கூறாகக் காட்டுவது உண்மையில் மிகப்பெரிய சாதனை!” என்றவர் நான் இன்னொன்றையும் சொல்லவேண்டும் என்று தொடர்ந்தார்.

    “ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ஆயுசு பரியந்தமும் வாழமுடியும் என்று உங்களைப்போலவே இங்கு சில வெள்ளையர்களும் காட்டிவருகிறார்கள். ஏகபத்தினி விரதத்தோடு வாழும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் – அப்படி இருந்திருக்கலாமே என என் எண்ணம் இப்போது ஏங்குகிறது. ஏனெனில் – எனக்குத் தெரிந்து ஏகபத்தினி விரதம் கடைபிடிக்கும் நபர்களின் குடும்பங்கள் உண்மையிலேயே, ஸ்திரமாய் – சவுக்கியமாய் – வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. கிளைபட்டு – கிளைபட்டு branching செய்பவன் உண்மையிலேயே சீக்கிரம் ரோகியாகிறான் – இதில் நானும் அடக்கம் என்றார். ஒரு பெண்ணைத் தாண்டி இன்னொரு பெண்ணைப் புணரும்போது உண்மையிலேயே – அது கொடூர எண்ணம் தான் என நான் எங்கும் கூறுவேன்” என்றார்.

    சரி, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    f3546a80-305f-4863-8e4d-d7964e2c7672

    ’’ஒலிம்பிக் டார்ச்சேந்தி ஓடுகின்றான் கண்ணன்
    குளம்படி மான்வேகம் கொண்டு: -களம்புகும்,
    பார்த்தனின் வெற்றி பிரகா ச(ம்)அடைய
    வேர்க்கின்றான் நந்த வனன்’’…..கிரேசி மோகன்….

    குளம்படி -மானின் பாதம்….!

    Share
  • பெருமாள் துதி!

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….இன்று 3 நாமங்கள் ’’கோவிந்தாய, விஷ்ணவே, திரிவிக்ரமாய’’….!

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
    நிலைதர நின்றிடும் கோவிந்தா
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • இலக்கியம் எழுதாத நட்பு ( நான்காம் பகுதி)

    க.பாலசுப்பிரமணியன்

     

    அமைதியான பயணம்…
    நினைவுக்கடலில்…
    ஆழ்கடலின் உள்ளே..
    அலைகளில்லாத இடத்தில்……
    இன்னும் அமைதியைத் தேடி…

    அமைதி எங்கே?
    மகிழ்சியாலா ?
    துயரத்தாலா ?

    இன்பங்களின் அந்தப்புர வாசலில்..
    சிதறிக்கிடப்போதோ மகிழ்ச்சி?
    அல்லது..
    துன்பக்கிணறைத் தூர்வாரியபின்..
    கொஞ்சிவரும்..
    குளிர் நீரூற்றோ ?

    இன்பங்கள்…
    வறண்டு காய்ந்த பூமியில்…
    சில்லென்று விழுகின்ற..
    சில நீர்த்துளிகள் போல்..
    ஒட்டியவுடன் உலர்ந்துபோகும் !!

    உடலின் ஒவ்வொரு அணுவிலும்..
    உள்ளே அமர்ந்து..
    அமுதம் போல்…
    சிகரத்தை வெல்லும் சிந்தனையைத் தூண்டி..
    வந்த சுவடு தெரியாமல்..’
    தன் வீடுநோக்கிச் செல்லும் !

    இன்பங்கள்.. எதில்?

    பிறக்காத பிள்ளைக்குப்
    பெயர் சூட்டும் ஆர்வத்தில் !

    உழைத்த உடலிலிருந்து
    உதிரமாய் கொட்டும் ..
    வியர்வையின் சுவாசத்தில் !!

    பசித்த வயிற்றை
    பானைச் சோறு ..
    முத்தமிடும் மோகத்தில் !!

    ஏழ்மையின் இதயத்தை
    காதலிக்கும் வறுமையின் தேடலில் !!

    வெறுப்பென்ற நெருப்புக்குள்
    கருணையும் வீடுகட்டி …
    வீணைமீட்டும் நாதத்தில்!!!!

    மருண்ட இருளின் துயர் நீக்க ..
    இன்னொரு விளக்கேற்றும்
    மெழுகுவர்த்தியின் தியாகத்தில் !!!!

    இன்பத்தையே துறந்து வந்த
    இன்பத்தை..
    நேசிக்கும் இன்பத்தில் !!

    இன்பங்கள் நீர்க்குமிழிகள்..

    இதயங்களோடு விலைபேசும்
    இடைக்காலத் தரகர்கள் !

    உணர்வுகளின் வாசலில்
    உமிழ்ந்து செல்லும்
    உல்லாசப் பறவைகள் !

    வானவில்லை வாசலில் காட்டி ..
    கானல் நீரில் கலங்கவிடும்
    கற்பனைத் தேர்கள் !

    இன்பங்கள்..
    வாசமுள்ள பூக்கள் தான் !
    வாடிவிடும் காலையிலே !

    சிற்றின்பச் சிரிப்பிற்காக
    சீழ்பிடித்த உடலும்
    சீறியெழுந்து …
    விசிலடிக்கும் வேட்கை !!

    பூசைக்கு வந்த மலராய்
    பேரின்பச் சிந்தனைகள்..
    புலனுள்ளே தவமிருக்க ..
    போராடும் வாழ்வோடு!!

    சொந்தமென்று எதுவுமில்லை..
    இன்பத்தில்..
    இல்லாதவர்க்கு கிடைப்பதெல்லாம்
    இன்பம் !!
    இருப்பவருக்கு இன்னும் வேண்டுவதோ
    இன்பம் !!
    துறந்தவர்க்குத் வந்தவினை கழிப்பதுவே
    இன்பம் !!

    மதமுற்ற களிறுபோல்
    வீதியெல்லாம் ஓடுகின்றேன் ..
    இன்பமென்ற ஒன்றைத் தேடி ..
    ஏங்குவதென்…..
    மனமா? உடலா? உயிரா ?

    மாயத்தை நீக்கி ..
    மனதுள் சொல்லிடுவாய்..
    மாயவனே !

    நண்பனே !
    கைப்பிடித்த உன்னுடன்
    காலமெல்லாம்
    கேள்விகளின்றி…
    பதில்களின்றி..
    அமைதியில் ..
    நடப்பதுவோ இன்பம் ?

    Share