நான் அறிந்த சிலம்பு – 218

–மலர் சபா

மதுரைக் காண்டம் 11: வஞ்சின மாலை

வேறு ஒருவன் தன்னைத் தவறாகப் பார்ப்பது கண்டு,
“நிறைமதி போன்ற முகத்தைக்
குரங்கு முகம் ஆக்குக” என்று கூற,
அவ்வாறே அந்த முகத்தில் இருந்து,   paththini
வெளியூர் போன கணவன் வீடு திரும்பியதும்
குரங்குமுகம் நீக்கி இயல்பான முகம்கொண்ட
சிவப்பு மணிகள் பொருந்திய மேகலை அணிந்த
அல்குலை உடைய
அவளும் ஒரு பத்தினிப் பெண்.

மகளிர் அறிவு என்பது அறியாமை உடையது என
மேலோர் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணராது
பின்வருவது பற்றி ஆராயாது,
தன் சிறுவயதுத் தோழியுடன் வண்டலாடும்போது,
“ஒள்ளிய தொடியுடையாய்!
நான் ஒரு மகளும் நீ ஒரு மகனும் பெற்றால்
உன் மகனே என் மகளுக்குக் கணவன் ஆவான்” என்றேன்.

இன்று மணப்பருவம் என் மகள் எய்திய வேளையில்
என் தோழி ஆண் மகவைப் பெற்றிருக்கிறாள்.
என் உறுதிமொழியை நினைவுபடுத்தி
அவள் பெண் கேட்கிறாள்.
அச்செய்தியை நான் கேட்டதால் 
மிகவும் துயரம் அடைகிறேன் எனத்
தன் தந்தையிடம் தாய் கூறியதை மகள் கேட்டாள்.

தாயின் மொழியை நிறைவேற்றுவதற்காகத்
தானாகவே முன்வந்து புத்தாடை உடுத்திக்
கூந்தல் சீவி மணப்பெண்ணாய் உருவெடுத்து,
தன் தாய் கூறிய அந்த ஆண்மகவைக் கணவனாய்க் கொண்டு
அவன் கைபிடித்துத் தன் தலையில் சுமந்து வந்தாள்.
திருமகள் போன்ற சிறப்பான
அவளும் ஒரு பத்தினிப் பெண்.

தேன்நிறை கூந்தலையுடைய
பத்தினிப் பெண்கள்
இத்தகைய சிறப்புப் பொருந்தியவர்கள்
பலரும் பிறந்த புகார் நகரில் தான் நானும் பிறந்தேன்.

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க