நிர்மலா ராகவன்

காதல் வந்துவிட்டதே!

நலம்-1-2

பல ஆண்கள் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது — அவர்கள் நான் பெற்ற குழந்தைகளைவிட இளையவர்கள் என்பதால்.
ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

`டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்ற சீன இளைஞரை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் சந்தித்தேன்.

`எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வது?’

`இது தவிர்க்க முடியாதது!’ என்றேன், பதிலுக்கு.

எந்த ஆணை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். பதினான்கு வயதில் ஏதாவது ஒரு ஆசிரியைமீது காதல் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் காதல் வித்தியாசமானது. இதில் காமக்கலப்பு கிடையாது. `இந்தமாதிரி ஒரு பெண்ணைத்தான் நான் மணக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் தோன்றுமாம். (நான் சில ஆண்களைக்கேட்டு அறிந்த ஞானம்!). அவர்கள் குடும்பத்திலுள்ள அம்மா, அக்கா முதலிய பெண்களிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஆசிரியை வேறுபட்டிருப்பார்.

மார்க் என்ற பையன் விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் எதைச் செய்யவும் அஞ்சுவான். `ஐயே! உடம்புதான் பெரிசு! பயந்தாங்கொள்ளி!’ என்று வகுப்பில் பெருவாரியாக இருந்த மலாய் மாணவர்கள் அந்த இந்தியப் பையனைக் கேலி செய்வார்கள்.

ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தேன். அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அம்மா ஒரே மகனான அவனைப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் என்றும் அவன் கூறியதிலிருந்து புலப்பட்டது.
அடுத்த முறை, `நீ இந்தப் பரிசோதனையைப் பண்ணு. நான் பக்கத்திலேயே நிற்கிறேன். ஒன்றும் ஆகாது!’ என்று தைரியம் அளித்துப்பார்த்தேன்.

`உயிருக்கு ஒன்றும் ஆகாதே?’ என்று சந்தேகப்பட்டான்.

`அப்படி ஆனால், நான்தான் போலீஸில் மாட்டிக்கொள்வேன்!’ என்று நான் சிரிப்புடன் கூற, சற்றுத் துணிந்தான். நாளடைவில், அவனுடைய தைரியம் பெருகியது. சற்று அபாயகரமாகவே நடக்க முனைய, நான் கண்டித்தேன். ஆனால், அவன் நல்லவிதமாக மாறிவிட்டான் என்ற பெருமிதமும் எழாமலில்லை.

தானும் பிறரைப்போல தைரியசாலிதான் என்ற நம்பிக்கையும், அதனால் மகிழ்ச்சியும் எழ, அந்தக் குணம் வெளிப்படக் காரணமாக இருந்த ஆசிரியைமேல் ஈர்ப்பு வந்தது அந்தப் பையனுக்கு.

ஒரு நாளைக்குப் பலமுறை என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சந்தித்து, `இன்று உங்களுக்கு ஐந்து முறை குட்மார்னிங் சொல்லிவிட்டேன்!’ என்று பெருமிதப்படுவான். `எங்கள் வகுப்புக்கு வாங்களேன்!’ என்று, நான் இன்னொரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து கெஞ்சுவான்.

ஒரு நாள் பள்ளி ஆரம்பிக்குமுன் என் அறைக்கு வந்து, `டீச்சர்! உங்கள் கணவர் எங்கு உத்தியோகம் பார்க்கிறார்?’ என்று விசாரிக்க, நான் சற்று கோபத்துடன், `நான் என் குடும்ப விவகாரங்களை மாணவர்களுடன் விவாதிப்பதில்லை,’ என்றேன்.

மார்க் மனந்தளராது, `எங்கம்மாவுக்கு அவரைத் தெரியுமாம்,’ என்றான். நாங்கள் இருவரும் ஏதோ விதத்தில் நெருங்கிவிட்டதைப்போல ஒரு பூரிப்பு அவனிடம்.

அந்த ஆண்டின் இறுதியில் மார்க்கின் போக்கில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பிறரும் அவனை முன்போல் கேலி செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள்.

அதற்கடுத்த வருடம் நான் அவன் வகுப்பில் பாடம் நடத்தவில்லை. ஆனால், என் வருகைக்காகக் காத்திருப்பவன்போல் பள்ளிக்கூட வாசலில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். முகம் வேறு பக்கம் திரும்பியிருக்கும். உடலில் படபடப்பு தெரியும். கைகள் இறுகியிருக்கும். ஒருவழியாக, `குட்மார்னிங், டீச்சர்!’ என்று திக்கித் திணறிச் சொல்வான். சற்று வளர்ந்திருந்ததால், தன் போக்கில் அவனுக்கு வெட்கம் உண்டாகியிருந்தது.

நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிப் போனபின், ஒரு நாள் மார்க்கை ஒரு பேரங்காடியில் பார்த்தேன். பெரியவனாக வளர்ந்திருந்தான். `ஹலோ, மிஸஸ். ராகவன்,’ என்றபடி, முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டு, உடலை விறைத்தபடி நகர்ந்தான். அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அம்மாவும், அக்காளும் பெரிதாகச் சிரித்தபோதுதான் எனக்கு விஷயம் விளங்கியது. என்னைப்பற்றி எப்போதும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பான் போலும்! வேறு சிலரும் இப்படி இருந்தார்கள்.

அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் ஒருவருக்கு உண்மையாகத்தான் இருக்கும். அதைக் கேலி செய்யாது ஏற்கவேண்டும். ஒரு குழந்தை இடியோசை கேட்டு அஞ்சுவதுபோல்தான் இதுவும்.

இதையெல்லாம் சீன நண்பரிடம் கூறினேன்.

அவர் சமாதானம் அடையாமல், `இதை எப்படித் தவிர்ப்பது?’ என்று துளைத்தார்.

எனக்கு வேறொரு நிகழ்ச்சி நினைவில் எழுந்தது. நீச்சல் குளத்தில் வேலையாக இருந்த ஜூல்கிஃப்லி என்ற ஒரு மலாய் இளைஞன் வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தான். கோலாலம்பூரில் எல்லாமே அவனைப் பயப்படுத்தியது. நான் `குட்மார்னிங்¸ ஜூல்!’ என்று கூற, உற்சாகமாக என்னிடம் பேச்சுக்கொடுப்பான்.

பிற பெண்கள் ஜூல்கிஃப்லியை வேலைக்காரன்போல் நடத்தியதைப்போல் இல்லாது, ஒரு நண்பனிடம் பழகுவதுபோல் அவனிடம் பேசினேன்.

அவன் வயதில் மகள், மாப்பிள்ளை எல்லாரும் வீட்டில் இருக்கிறாள், ஆனால் நான் அதிகாலையில் நீஞ்ச வந்துவிடுவேன் என்று கேட்டு அவனுக்கு ஒரே ஆச்சரியம்: `எல்லாரும் காலை உணவுக்கு என்ன செய்வார்கள்?’

`அது அவர்கள் பாடு!’ என்றேன், அலட்சியமாக.

அவன் அதிர்ந்து போனான்.

திடீரென்று ஒருநாள் உடலை நெளித்துக்கொண்டு, `எனக்கு எப்போது ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கொஞ்சலாகக் கேட்டானே, பார்க்க வேண்டும்! இப்போது நான்தான் அதிர்ந்தேன். திசை தெரியாது தவித்த ஒருவனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைத்து நான் பேசப்போக, இப்படி ஒரு திருப்பமா!
அவன் முதுகில் பளாரென்று அறைவிட்டு, `ரொம்பப் பேசாதே! போய் வேலையைக் கவனி!’ என்று மிரட்டினேன்.

அதன்பின் ஜூல்கிஃப்லி என்னிடம் வாலாட்டவில்லை. `

சே! இவளும் நம் அம்மாபோல் இருக்கிறாளே!’ என்ற கசப்பான உண்மை புரிந்திருக்கும்.

சீன நண்பரிடம் கூறினேன், `மாணவிகளை நீங்கள் அடிக்க முடியாது. ஆனால், நீங்கள் சிடுசிடுத்தாலே போதுமே! உங்கள்மீதுள்ள மோகம் போய்விடும்!’

அவர் பெருமூச்சு விட்டார். `பிரச்னை’ என்று தன்னை நாடி வருகிறவர்களின் மனதை மேலும் நோகடிக்க வேண்டுமா என்ற குழப்பம் அதில் தெரிந்தது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *