க. பாலசுப்பிரமணியம்

மூளைநரம்பின் வலைத்தளங்களும் கற்றலும் (Neural Networks and Learning)

education-1-1-1

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் எந்த முறையில் கற்றல் நடந்தாலும் ஒரு மாணவனால் ஒரு அளவுக்குத்தான் படிக்க முடியுமே தவிர, படிப்புச் சுமை அதிகமாக இருந்தால் படிப்பின் மேலே அவனுக்கு வெறுப்பு வந்துவிடாதா” என்று நண்பர் ஒருவர் வினவினார். அந்தப் படிப்புச் சுமை என்பது எவ்வளவு? ஒரு தனி மனிதனின் கற்றல் வயதுக்குத் தகுந்தவாறு மாறுபடுமா ? எந்த அளவுக்கு மேல் படிப்புச் சுமை கற்றலுக்கு எதிரான பலன்களைத் தருகிறது? இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பல கோணங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன. கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. காலத்தோலோ நேரத்தாலோ கற்றல் தடைப்படுவதோ அல்லது பாதிக்கப்படுவதோ இல்லை. அதன் பரிமாணங்கள் சூழ்நிலைகளுக்கும் மனநிலைகளுக்கும் தகுந்தவாறு மாறுபட்டுக்கொண்டிருக்கும்.

எரிக் காண்டல் (Eric. R. Kandel) என்ற ஒரு ஆராய்ச்சியாளர் கற்றலின் பொது மூளை நரம்பின் வலைத்தளங்களில் ஏற்படும் மாற்றங்களை பற்றிச் செய்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவருடைய ஆராய்ச்சியின் படி மூளையிலுள்ள கற்றல் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் (Neural Networks) ஒவ்வொரு வினாடியும் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்குத் தகுந்தமாதிரியும் கற்றலுக்குத் தகுந்த மாதிரியும் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே ஒரு வகுப்பறையில் காலையில் நுழைகின்றபோது இருக்கும் அந்த வலைத்தளங்கள் (Neural networks) மாலையில் அதே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆசிரியர் ஒரு நாள் நடத்தும் பாடங்கள் அந்த நேரத்தில் எந்த உணர்வுப் பாங்கோடு கற்றுக்கொள்ளப் படுகின்றனவோ அதே மனநிலையம் உணர்வுப் பாங்குகளும் ஒரு வாரம் கழித்து அதே பாடத்தில் ஆசிரியர் தேர்வு வைக்கும்பொழுது இருப்பதில்லை. அதனால்தான் பல நாடுகளில் கற்றலும் தேர்வும் உடனுக்குடன் நடக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தனி மாணவனின் கவனம், கற்றல் திறன், கற்றலின் ஆழம், புரிதல் திறன்கள், கற்ற கருத்துக்களை கையாளும் திறன்கள் ஆகியவை பரிசீலிக்கப் படுகின்றன. ஒரு வகுப்பறையில் எல்லா மாணவர்களையும் எல்லா நேரங்களிலும் பரிசீலிப்பதற்கு அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களின் திறன்களையும் துல்லியமாக கணிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அனால் இதை நடத்துவதற்கான ஆற்றல்களும், திறன்களும், ஆர்வமும், புத்திக்கூர்மையும் ஆசிரியர்களுக்கு இருத்தல் அவசியம். இதைத் தொடர் பயிற்சி மூலமாக அவர்கள் கற்றுக்கொள்ள அநேக வாய்ப்புக்கள் உள்ளன.

ஹெர்மான் எப்பின்காஸ் என்ற ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் கற்றலையும் நினைவுத்திறன்களையும் பற்றிய ஆராய்ச்சியில் கண்டறிந்ததாவது :

1. கற்கப்பட்ட எந்த கருத்தும் கற்றலிருந்து முப்பது நாட்களில் 90 விழுக்காடு பலவீனமடைந்து மறந்து விடுகின்றது.
2. கற்றல் நடைபெற்ற ஒரு நாளுக்குள் இதில் அதிகமான விழுக்காடு நினைவிலுருந்து நழுவி விடுகிறது.
3. கற்றலை சீர்படுத்த/நிலைப்படுத்த கருத்துக்களை மீண்டும் மீண்டும் நினைவில் வைத்தல் அவசியம்.
4. கற்றல் எத்தனை முறை நினைவுகூறப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது நிலைபெற்ற நினைவாகிறது.

இந்தக்கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் “நரம்பின் நெகிழ்வின்மை ” (Neuro-Plasticity) பற்றிய பல் வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலமாக கற்றலின் தன்மையைப் பற்றிய பல வித புதிய கருத்துக்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

கலிபோர்னியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மைகேல் மெர்செனிச் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியின் மையக்கருத்தாகக் கூறுவது :

“மூளை நரம்புகளின் தொடர்ந்து மாறுகின்ற திறனின் (changing structure of the brain) காரணத்தால் கற்றலின் நோக்கங்களையும், முறைகளையும், ஆற்றல்களையும் மாற்றி அமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக மூளையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் முடியும்.

இது ஒரு மனிதனின் வாழ்வில் எந்த நேரமும் ஏற்படலாம். ஆகவே கற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கொள்ளோ, ஒரு தனிப்பட்ட விஷயத்தைச் சார்ந்தோ இருப்பதில்லை. இந்தச் செயல் தொடரும் பொழுது மூளையில் உள்ள பெருமூளை புறணி (Cerebral Cortex) கற்றலை மட்டும் பேணுவது அல்லாமல் எப்படி கற்கவேண்டும் (Learning to Learn) என்ற திறனையும் பெற்றுவிடுகிறது.”

எனவே, மூளை வெறும் கணினியைப் போல் பதிவு செய்ததை மட்டும் பாராட்டாமல் அறிவுவளர்ச்சியின் மையமாகச் செயல்படுகின்றது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கற்றல் ஒரு ஆற்றல் 39

  1. மனிதனின் மூளை, அறிவு வளர்ச்சி மையமாக செயலபடுகிறது என்று மேற்கோள் காட்டிய நண்பர் திரு. க பாலசுப்ரமணியனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  2. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published.