நிர்மலா ராகவன்

மாமனார் மெச்சிய மருமகன்

நலம்-

`என் கணவரோட அண்ணனை இப்போ பாத்தா, சுட்டுக் கொன்னுடுவேன்!’

நானும் என் சிநேகிதி மாதங்கியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மூன்று மணி நேரப் பயணம். அரை மணி நேரம் ஏதேதோ பேசிவிட்டு, அவள் தன் திருமணக் கதையை விவரிக்க ஆரம்பித்தாள். பாதியில், ஆத்திரத்துடன் தன் கொலைவெறியை வெளிப்படுத்தினாள்.

அப்படி என்னதான் ஆகிவிட்டது?

தந்தையின் செல்லப்பெண் குடும்பத்தில் கடைக்குட்டியான மாதங்கி. அயல் நாடுகளில் பத்து வருட கல்லூரிப் படிப்பு படித்திருந்தாலும், ஆண்களுடன் அதிகப் பழக்கம் இருக்கவில்லை அவளுக்கு.

படிப்பு முடிந்ததும் கைநிறையச் சம்பளத்துடன் உத்தியோகம். அடுத்தது கல்யாணம்தானே!

வேற்றூரில் இருந்த தந்தை, `நம் சாதியிலேயே ஒரு பையன் இருக்கிறார். உன்னைமாதிரியே நன்றாகப் படித்தவர். நீ போய் பார்!’ என்று தொலைபேசிவழி கூற, மகள் மறுத்தாள்.

மாப்பிள்ளைப் பையனும், அவரது அண்ணனும் அவளைப் பார்க்க வந்தார்கள். ஏதோ பொது இடத்தில்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தட்டிக்கழிக்கப் பார்த்தாள்.

மாப்பிள்ளைக்கும் சந்தேகம் வந்தது: நம் சாதியில் இவ்வளவு படித்த பெண்களே கிடையாதே! இவள் நம்மை மதிப்பாளா?

“அந்த அண்ணன்தான் இவர் மனசைக் கலைச்சிருக்கணும் — `அவ நல்லா சம்பாதிச்சுப் போடுவா. நீ மொதல்லேயே அடக்கி வைச்சுடு,’ அப்படின்னு,” மனம்நொந்து பேசினாள்.
“என் பெற்றோர் ஏழைத் தொழிலாளிகளாக இருந்தவர்கள்,” என்று வருங்காலக் கணவர் ஒப்புக்கொள்ள, `நம் பெற்றோரும் அப்படித்தானே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிற்று. ஆண்களுடன் கலந்து பழகியது கிடையாததால் அவர் குணம் அவளுக்குப் பிடிபடவில்லை. கல்லூரியில் அவ்வளவு தூரம் அவளைப் பொத்திப் பாதுகாத்திருந்தனர் இரு அண்ணன்களும்.

வருங்கால மாப்பிள்ளை அடிக்கடி மாமனாரைச் சந்தித்தான். இப்போது அவர் பெரிய முதலாளியாகி இருந்தார், கடுமையான உழைப்பினாலும், நேர்மையாலும். அவனுடைய போலிப்பணிவில் மயங்கினார் பெரியவர்.

தந்தையே இவ்வளவு தூரம் வற்புறுத்தும்போது சரியாகத்தான் இருக்கும் என்று கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டாள் மாதங்கி.

கணவரோ, தாய் சொல்லியபடியெல்லாம் ஆடினார். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவியை நையப் புடைத்தார்.

“ஏன் பொறுத்துப் போனீர்கள்?” என்று கேட்டேன்.

மலேசியாவில் சிறிய ரப்பர் எஸ்டேட்டில் வளர்ந்திருந்த பெண். தன் அறிவுத்திறனாலேயே பலரும் மதிக்க வாழ்ந்திருந்தாள். எது கேட்டாலும், `போ. படி!’ என்று தந்தை விரட்டியதாலேயே தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாகச் சொல்லிச் சிரித்தாள்.

அப்படிப்பட்ட தந்தை பார்த்து வைத்த மருமகன்! அவரைப்பற்றிக் குற்றம் சொல்வது தந்தையைப் பழிப்பதுபோல் ஆகிவிடுமோ?

தான் சொன்னாலும் தந்தை நம்புவாரா?

`ஆண்கள் முன்னேபின்னேதான் இருப்பார்கள்!’ என்று அவளைச் சமாதானம் செய்துவிட்டால்?

தான் கணவரிடம் படும் பாடு பிறருக்குத் தெரியாதிருந்தால்தான் தனக்கு மரியாதை என்று கணக்குப்போட்டாள் அப்பேதை.

எப்போது பார்த்தாலும், `எங்க ஐயா!’ என்று கணவரைப்பற்றி பெருமையுடன் மாதங்கி பேசியதைக் கேட்டிருந்தேன் நான். அப்போதெல்லாம், `தாலி கட்டியவரிடம் எப்படி உயிரையே வைத்திருக்கிறாள்!’ என்று வியந்து போயிருக்கிறேன்.

ஒரு பொது நிகழ்ச்சியில் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அதிர்ந்து போனேன். குணவானாகத் தெரியவில்லை. இவரைப்பற்றியா பெருமையாகப் பேசுகிறாள்!

சில ஆண்டுகள் கழித்து, நானும் மாதங்கியும் ஓர் ஊருக்கு ஒன்றாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் அதற்கு மேலும் பொறுக்க முடியாது, என்னிடம் எல்லா உண்மைகளையும் கூறினாள். அதற்காகவே என்னை வருந்தி அழைத்திருந்தாள் என்றுதான் தோன்றியது.

ஏதோ வேகத்துடன், ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள், “எல்லாத்தையும் இப்பவே மறந்துடுங்க, நிர்மலா!” என்று கெஞ்சியபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது.

கணவர் மோசமாக இருந்தால் இருந்துவிட்டுப் போகிறார்! அதனால் அவரை மணந்த பெண்ணுக்கு என்ன இழுக்கு? அவள்மேல் என்ன தவறு? எதற்காக மூடி மறைத்து, பொய்யான வாழ்க்கை வாழவேண்டும்?

நாங்கள் திரும்புகையில், அவள் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. “ஸாரிம்மா. என்னால ஒன்கூட வரமுடியலே!’ என்று உருகினார். தான் கிளப்பில் குடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாராம். மனைவி சம்பாதிப்பதையெல்லாம் பின் எப்படித்தான் செலவழிப்பது?

இவள் அலட்சியமாக, “அதனால என்ன! என் கூட்டாளி எங்கூட வந்திருக்காங்க,” என்றாள்.

“யாரு?”

“நிர்மலா ராகவன்!”

“ஒங்க பேரைக் கேட்டு அவருக்கு ஒரே ஷாக்! என்னை நம்பலே!” என்றாள் பெருமையுடன் சிரித்தபடி. “நீங்க பேசுங்க!”

நான் அவருக்கு `ஹலோ’ சொன்னேன். அந்தப் பக்கத்திலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

அவள் தொலைபேசியை மூடிவிட்டுப் பெரிதாகச் சிரித்தாள்.

நானும் லேசாகச் சிரித்தேன். `தான் எப்படி வளைத்தாலும் வளைந்து கொடுக்கும் மனைவி எதற்காக இப்படி ஒரு தோழியைத் தேடிப் பிடித்தாள்? நம் போதாத காலம், இவளுக்கு எங்காவது தன்னை எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டால்?’ என்று அஞ்சியிருப்பார்.

எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இதேபோல் வேறு ஒரு பெண் என்னை நாடி, தான் கணவரிடம் படும் அவதிகளைக் கேலியுடன் கூற, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர் `போகலாம். வா!’ என்று அவளை இழுக்காத குறையாக திரும்ப அழைத்துப்போனார்!

தாம் செய்வது — மனைவியைக் கேவலமாக நடத்துவது, உடல்வதை மட்டுமின்றி, பிறர்முன் மட்டம் தட்டி, உணர்ச்சிபூர்வமாகவும் வதைப்பது — தவறு என்று இவரைப் போன்ற ஆண்களுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தே செய்வதால், தம்மை மாற்றிக்கொள்ளும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. ஆகையால், அது `தவறு’ என்று பிறர் சுட்டிக்காட்டுவது பொறுக்க முடியாததுதான்.

பெண்ணுக்குப் பொறுமைதான் சிறந்த ஆபரணம் என்று நம்பவைக்கிற, நம்புகிற, பிற பெண்கள் இருக்கும்வரை இத்தகையவர்கள் எதற்காக மாறப்போகிறார்கள்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *