படக்கவிதைப் போட்டி 74 – இன் முடிவுகள்
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.
இந்த வார புகைப்படத்தில் இ டம்பெற்றிருப்பவர் தன்னிடம் அடைக்கலம் நாடி வந்த ஆட்டுக்குட்டிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மூதாட்டி. இம் மூதாட்டிக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,
கருணையின் வடிவமாக, தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக் கொள்ளும் மண்ணிற்கும், கைம்மாறு கருதாமல் பொழியும் மழைக்கும் தாயின் கருணையை ஒப்பிட்டுக் கூறியிருக்கும் ராதா விஸ்வநாதனுக்குப் பாராட்டுகள்.
உயிர் வதைக் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கிறார் சுவாதினி பரத்வாஜ்.
கவனிக்க ஆளின்றித் தவிக்கும் மூதாட்டிக்கு நல்ல துணையென்று இருப்பது ஆட்டுக்குட்டி தான் என்று புதுமைப் பொலிவில் பழமைகள் கண் மறைக்கப் படுவதைச் சுட்டுகின்றார் செண்பக ஜெகதீசன்.
வேண்டாம் ஐந்தறிவு, என்ற ஒரு பக்க கவிதையில் விசுவின் குடும்பச் சித்திரம் போன்ற கதைப் பின்னலுடன் அழகிய கவிதை. உன் அன்பு மட்டுமே என் உயிர்துணையாய் இருக்கிறது, முதுமையின் எதிர்பார்ப்பைக் காட்டும் வரிகள். கவிதைப் படைத்துள்ள கொ.வை. அரங்கநாதனுக்குப் பாராட்டுகள்.
மூதாட்டியின் மனித நேயத்தை எடுத்துக் கூறுகின்றார் பா. பொன்னி.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியை, விதியை நொந்து சாபம் விடும் தாயாக அல்லாமல் , ஊன்று கோலாய் கிடைத்த ஆட்டுக்குட்டியோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடரக்கூடிய , எதையும் எதிர்கொள்ளும் தாயாக வெளிக்காட்டியுள்ள சரஸ்வதி ராசேந்திரனுக்குப் பாராட்டுகள்.
பொதுவாக வெளிவந்துள்ள கவிதைகள் மதுவினால், பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியை எடுத்துக் காட்டுகின்றன. நகர மயம், நாகரிக வளர்ச்சி, ஓட்டப் பந்தய வாழ்க்கை இதற்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்ப உறவில் புறந்தள்ளப்படும் முதுமையை எடுத்துக் காட்டியுள்ளது இக்கவிதை,
முதுமை போற்றுவோம்
வீட்டின் கொல்லைப்புறத்தில்
விலக்கப்பட்ட ஆட்டுஉரலோடு
விடுவிக்கப்பட்ட உறவும்
கவனிப்பாரற்றுத்தான் கிடக்கின்றது
கருணை விழிகளுக்கு கதையாட உறவில்லை
கரம் கோர்த்தாட கண்மணிகள் இல்லை
புறக்கணிக்கப்பட்ட முதுமைக்கு
புழக்கடையில் புத்துயிர் தருவது
தொப்புள்கொடி உறவல்ல
உணவுப் பதார்த்தங்களைப் பரிமாற
காத்திருக்கும் கரங்களுக்கு
அங்காந்து வாய்திறக்க
அஃறிணை தவிர ஆளில்லை
பாரம்பரிய நீரோட்டத்தில்
குழுவாழ்க்கை சிதைந்து
கூட்டுக்குடும்பமாய் கரைஒதுங்கினோம்
தனிக்குடும்ப கொடிபிடித்து
தனித்தீவாய்
தனிமரமாய்…………..
பேரன் பேத்திகளோடு குழாவிய பழங்கதைகள்
நூற்றாண்டு பயணத்தில் கற்பனைகளாய்
சுருங்கியது தசைகள் மட்டும் தான்
இதயம் அல்ல எனும் பாவனையில்
ஈரம் காட்டிய தாய்மை
கருகிய மனங்களில் தாய்ப்பாலை வார்க்கட்டும்
வருங்காலத்திலாவது
முதுமை போற்றுவோம்
சமூக மாற்றத்தால் குடும்பப் பாரம்பரியம் நலிவடைந்து வரும் இன்றைய சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டுகள்.