இசைக்கவி ரமணன்

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7)

kural-4

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ்வார் (6)

 

ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஆசைகளை அகற்றி, கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நீண்ட காலம் வாழ்வார்.

புலன்களும் பொறிகளும் யாரிடமிருந்து வந்தன? இறைவனிடமிருந்துதானே? ஆனால் அவனோ பொறிவாயில் ஐந்தவித்தான்! அவனைத் தொழுதால் நமக்கும் அப்படித்தான். மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்ன? இறைவன் தன்னில் தானாய் நிலைத்தவன். மனிதன் பொறிவழி மனம் சென்று எங்கும் சிதறிக் கிடப்பவன். சிதறிக் கிடப்பவன் எவ்விதம் தன்னை நிறுவிக்கொள்வான்?

அவித்தல் என்றால் பக்குவப் படுத்துதல். மொச்சைக் கொட்டை அவித்தல், சோறவித்தல் என்பது போல.

பக்குவமே பரமன் இயல்பு. அவனைப் பணிந்து அவனியல்பையே நாமும் பெறுவோம்.

பொறிகள் நம் கைப்பிடியில் இருந்தால், புவனம் நம் காலடியில் இருக்கும் என்பார்கள் பெரியோர்.

வீடுபேறு என்னும் விடுதலையை நாடுவதே வழி. அதற்கு முதல்படியே புலனடக்கம். அதற்குமேல் பெரிதாய்ப் படிகள் இல்லை, காலத்தின் தாக்கம் மட்டும்தான். இறைவன் எப்படியோ அப்படியே வாழும் முறையே பொய்தீர் ஒழுக்க நெறி.

அவ்விதம் வீட்டு நெறியைக் கடைபிடிப்பவர்கள் நெடுநாள் நன்கு வாழ்வார்கள். நெடுநாள் வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் அடிப்படை விருப்பம் என்றும் அதனால்தான் அன்றிலிருந்து இன்றுவரை, பெரியவர்களை நாம் வணங்கினால், அவர்கள் ‘பல்லாண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! ஆயிரம் பிறைகள் காண்க,’ என்றெல்லாம் வாழ்த்துகிறார்கள் என்றும் இறைவனை வணங்குவதன் மூலம் இது சாத்தியம் என்று வள்ளுவர் நமக்கு ஊக்கம் தருகிறார் என்றும் அதே சமயம், நீடு வாழ்வார் என்பது நீண்ட ஆயுளை மட்டும் குறிக்கவில்லை, அவர்கள் பெயர் மன்னுலகில் நீடித்து நிலைத்திருக்கும் என்றும் பொருள்படும் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். அவர்களுடைய நினைவே மற்றவர்களும் அதே வீட்டு நெறியைப் பின்பற்ற வழிகோலும். நீடு வாழ்வார் என்பது அவர்கள் விட்டுச் செல்லும் தவத்தைக் குறிக்கும்.

வாழ்க்கை என்றால் என்ன? எது இறைவனின் நெறியோ அதில் நின்று நீடுவாழ ஒரு வாய்ப்பு. இறைநெறி என்பதைத் தெளிவாகக் கற்று அதில் ஆழ்ந்து கிடப்பதற்கு ஒரு வாய்ப்பு. மனிதன், முழுமையான மனிதத் தன்மையை அடைவதற்கு ஒரு வாய்ப்பு. எது கையில் வசப்படாது என்று கருதப்படுமோ, அந்த இறைமையே தன்னுள் கனிந்து காண்பதற்கு ஒரு வாய்ப்பு. இதை ஒரே வாய்ப்பு என்று கருதுபவர்களே உயர்கிறார்கள். இதற்குத்தான் நீடு வாழ்தல் என்று பெயர். அப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாகிறது. அவர்களுடைய வார்த்தையே பாதையாகிறது.

சரி இறைவனின் ஒழுக்க நெறி என்பது என்னவாக இருக்க முடியும்? முந்தைய குறளிலேயே சொல்லிவிட்டாரே, வேண்டுதல் வேண்டாமை இலான்! இன்னொன்று, பொய்யின்றி வாழ்தல். 12 வருட காலம் உண்மையே பேசும் விரதம் பூண்டால், அதன்பிறகு அவன் சொல்வது யாவுமே உண்மையாகிப் போகிறது என்பார்கள். மனத்துக்கண் மாசிலனாதன் அனைத்தறன் என்று தெளிவாய்ச் சொல்கிறார்.

ஸ்வத்தாமன் விடுத்த பாணத்தால் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு கரிப்பிண்டமாக வெளியே விழுகிறது. `நித்ய பிரம்மச்சாரி தொட்டால் இந்தப் பிண்டம் உயிர் பிழைக்கும்,` என்கிறார் வியாசர். எல்லோரும் தயங்குகிறார்கள். கண்ணன் கால் கட்டை விரலால் தொடுகிறான். கரிப்பிண்டம் களையான குழந்தையாக எழுகிறது. அதுவே பரீட்சித்! கண்ணனே மனத்துக்கண் மாசிலன்!

`யோக: சித்த வ்ருத்தி நிரோத:` என்கிறது பதஞ்சலியின் முதல் சூத்திரம். பொருளால் ஈர்க்கப்பட்டு, பொறிகள் வழியே மனம்சிதறிப் போகாமல், பொறிகளை மனதிலும், மனதைப் புத்தியிலும், புத்தியைச் சித்தத்திலும், சித்தத்தை ஆன்மாவிலும் பொருத்திக் கொள்வதே சித்த வ்ருத்தி நிரோதம். அதுதான் பொறிவாயில் ஐந்தவிப்பது. அதுவே பொய்தீர் ஒழுக்க நெறிநிற்பது.

`நீத்தார் பெருமை` என்னும் மூன்றாவது அதிகாரத்திலேயே `ஒழுக்கத்து நீத்தார் பெருமை,` `உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான், `ஐந்தவித்தான் ஆற்றல்,` என்றெல்லாம் பேசி,

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

என்றும் சொல்கிறார்.

`ஆற்றலுடையோய்! யாருடைய பொறிகள் புலன்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுள்ளது,` என்பது கண்ணன் வாக்கு. (கீதை:2:68)

கொம்பூதும் ஓசையால் சிக்கிக் கொள்கிறது மான். பூவின் வாசம் வண்டை இழுக்கிறது. இலை தழைகளைப் பின்பற்றி இரையாகிறது ஆடு. நெருப்பைக் கண்டு ஈர்க்கப்பட்டு அதில் வீழ்ந்து மாய்கிறது விட்டில். இப்படி ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு பொறி எதிரியாக இருக்கிறது. மனிதனுக்கோ எல்லாப் பொறிகளும் எதிரிகள்தாம்! அவன் எல்லாப் பொறிகளின் வழியாகவும் விழுந்து மாய்கிறான்.

ஆதியிலேயே ஐந்தும் அவித்தவனின் பக்குவம் என்னும் இயல்பாகிய நெறியில் நின்றால்தான் நீடு வாழ முடியும்.

கானக் குழல் ஒன்று கன்னக்கோலாய் ஆச்சு

கன்னம் வைத்த இடம் காதுகளாச்சு

ஆன காவல் ஐந்தும் ஆடரங்கமாச்சு

அந்தந்தோ என்மனம்தான் கொள்ளை கொள்ளையாகப் போச்சு!

 

என்று ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடுவதையும்,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்த சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

 

என்று திருமூலர் பாடும் போதும்,

எந்தப் பொறிகள் நமக்கு இடர்விளைவிக்குமோ அவற்றையே அவனாடும் மேடையாக்கி அவற்றை அவிக்கலாம், பக்குவப்படுத்தலாம் என்று புரிகிறது.

பொய்தீர் என்றால், அவன் ஏற்கெனவே பொய்கள் தீர்ந்தவன், பொய்மை இல்லாதவன் என்றும், பணியும் நம்முடைய பொய்மையைத் தீர்க்கின்றவன் என்றும் பொருள்.

 தொடருவோம்

 


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *