இசைக்கவி ரமணன்

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (8)

kural-4-1

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்ற லரிது (7)

 

தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகள் அடைந்தவருக்கு அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையைப் போக்க முடியாது.

 

சொற்பொருள்

தாள் = காகிதம், பாதம்

கவலை = கவலுதல், ஒன்று, இரண்டாகப் பிரிதல். என் மனம் கவல்கிறதே. கவலை என்பது இருமை

அரிது = சாத்தியமன்று

ஆங்கில இணைச் சொற்கள்

தனக்கு உவமை இல்லாதான் = Peerless one, Incomparable

கவலை +Worry, anxiety, forking

அரிது = dear, difficult, rare, impossible

 

 

 

இலக்கணம்:

தனக்கு – நான்காம் வேற்றுமை உருபு.விரித்தல்

உறவுப் பொருள் = நான்காம் வேற்றுமை = எனக்கு

உடைமைப் பொருள் = ஆறாம் வேற்றுமை = என்னுடைய

தாள் – சினையாகு பெயர். சினை என்றால் உறுப்பு. தாள் என்றால் பாதங்கள் அல்லவா? இங்கே கால்கள், தாள் என்றது, அவற்றையுடைய கடவுளைக் குறிப்பிடுகிறதல்லவா? உறுப்பைச் சொல்லி அதன் மூலம் அந்த உறுப்புக்கு உடையவனைச் சுட்டுகிறது. தலைக்குப் பத்து ரூபாய் கூலி என்பது போல

அல்லால்-எதிர்மறை, குறிப்பு வினையெச்சம்.  அன்றி என்று பொருள்படும்.

னிதனை பாதிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று மனம். இன்னொன்று கவலை. மனனம் செய்பவன் மனிதன். தான் என்னும் நினைப்பிருப்பவன் மனிதன். தான் உள்ளோம் என்பது மனிதனுக்குத் தெரியும். பசுவுக்குத் தான் பசு என்பது தெரியாது. மனிதனுக்குத் தான் இருப்பதும் தெரியும்; பசுவும் தெரியும். இதற்குக் காரணம் மனம்!

`கவலைப் படுதலே கடுநரகம்மா,` என்பான் பாரதி. நரகம் என்று ஒன்று எங்கோ இல்லை. கவலையே நரகம். `கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல்,` என்றும் பாடுவான் பாரதி. துக்கத்தில் ருசி கொண்டுவிட்டால் அந்த மனிதன் தொலைந்தே போகிறான். கவலையும் ஒரு போதையாகி மனிதன் அதற்கு அடிமைப்பட்டுப் போகிறான்.

யாருக்கும் எதற்கும் நிகரில்லாதவன் இறைவன். ஒப்பிட முடியாதவன் இறைவன். எனவே அதுபோல் இதுபோல் என்னும் உவமைகளுக்கு உட்படுத்த முடியாதவன்.

அவன் ஒருவன். ஒன்றே அவன். இருமைகள் நீங்கியே அந்த ஒருமையின் அருமையை உணர முடியும். இருமையே நமக்குத் துன்பம் தருவது. இருமை என்றால் என்ன? ரெண்டாட்டம். மனம் எப்போதும் சஞ்சலிக்கிறது – நடக்குமா-நடக்காதா? கிடைக்குமா-கிடைக்காதா? இருக்குமா-இருக்காதா? போன்ற இடைவிடாத இருமைகளால் பந்தாடப் படுகிறோம். இருமைதான் கவலை.

வலை என்பது `கவற்சி` என்னும் சொல்லிலிருந்து வருவது. கவண், கவடு, இவை forking என்பதை, பிரிந்து போகிற பாதை என்பதை, அதாவது ஒன்றாயிருந்தது இரண்டுபடுவதைக் குறிக்கின்றன. தாமாய் இருந்தோம். நானும் நீயுமானோம். நாமாகித் தாமாக விழைகிறோம். அதுவே விடுதலை. `கவலையற்றிருப்பதே முக்தி,` என்றும் சொன்னான் பாரதி. அது எப்படி சாத்தியம்?

நோய் என்பது எப்போது நீங்கும்? இன்னொரு நோயாளியிடம் சென்று பயனில்லை. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கிக் கொள்ளவேண்டும். மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொண்டால். அதுமட்டும் போதுமா? நாம் இருமல் தொல்லை தாங்க முடியாமல் மருத்துவரிடம் சென்றால், அவரும் ஓயாமல் இருமிக் கொண்டிருந்தால், அவரிடம் மருந்து வாங்கிக்கொள்ள நமக்கு மனம் வருமா?  நாம் நம்புவது மருந்தை அல்ல, மருத்துவரை! முகம்தெரியாத ஓட்டுனரை நம்பித்தான் ரயிலில் ஏறுகிறோம். ஏறிய பிறகும் சுமைகளைச் சுமப்பானேன்? இறக்கிவைத்துவிட்டு நீட்டிப் படுக்க வேண்டியதுதானே என்பார் ரமணர். ஆக, கவலை நீங்க வேண்டுமானால் முதலில் நமக்கு நம்பிக்கை வேண்டும். `என்னைக் காப்பது உன் பொறுப்பு. நான், நீ புனைந்த கவிதை. நீ ஆசையுடன் தோற்றுவித்த பிள்ளை,` என்கின்ற நினைப்பு நமக்கு இறைவனிடம் இருக்க வேண்டும். இரண்டாவது, நல்ல ஆர்வம் இருக்க வேண்டும். `நான் இருப்பது நாற்றம் பிடித்த சேறு. இதிலிருந்து எப்படியும் நான் வெளியே வரவேண்டும்,` என்னும் ஆர்வம் இருக்கவேண்டும். நாற்றத்தில் வெறுப்பின்றி நலம் நமக்கு நேராது. எந்தக் கவலையும் எப்போதும் இல்லாதவன் இறைவன் மட்டும்தான்.

அதுபோல், கவலை என்பது எப்போது நீங்கும்? அது இல்லாதவனை நாடும்போதுதான். அவனை யாரோடும் எதனோடும் ஒப்பிட முடியாது. எனவே தனக்குவமை இல்லாதவன். இதுபோல் அதுபோல் என்று அவனைச் சொல்ல முடியாது. எனில், அவனுக்கு நிகரும் இல்லை.

ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி

என்றான் பாரதி. இறைக்க இறைக்க இன்பமே தரும் கேணியாக இந்த உலகம் எப்போது தோன்றும்? இருப்பது ஒன்றே. அதுவே பரம்பொருள். நாம் அதனுடைய குழந்தைகள் என்கின்ற செம்மாந்த நினைப்பு தோன்றும்போதுதான்!

றைவன் கவலையாகிய இருமை இல்லாதவன். ஆண்டவனுக்குக் கவலை கிடையாது. அவன் அவனைப் பற்றியோ நம்மைப் பற்றியோ கவலைப் படுகிறவன் அல்லவே! அவனுடைய ஈரடிகளும் ஒன்றே! இதை விளக்குமுகமாகவும் அவனை ஏகபாதனாய் வருணிப்பார்கள். `யதங்க்ரி கமல த்வந்தம், த்வந்த தாப நிவாரணம்`  என்கிறது குரு ஸ்துதி. அவனுடைய சீரடிகளாகிய ஈரடிகளைச் சேர்ந்தால்தான் நம் இருள்சேர் இருவினைக்குக் காரணமான இருமை தீரும்.

`மாற்றல்` என்றால், துயரத்திற்கு மாற்று. அல்லது இருமையை ஒருமையாய் மாற்றல். கவலையின் திசையை மாற்றி விடுகிறான் கடவுள். காமத்தின் மீது குரோதம், என்று ஒன்றை ஒன்றின் மீது ஏவி விடுவதே இது! ஆவக்காய் ஊறுகாயில் உள்ள பொருட்கள் ஒன்றுக்கு ஒன்று மாற்றாக இருக்கும். ஒன்று கூடிச் சுவையை நல்கும். ஆக, அவனிடம் பற்றுக்கொண்டு, அவன் அருளைப் பற்றியே கவலைப் பட்டால், வேறு கவலைகள் யாவும் விடுபடும்.

கவலை யாவும் கன்னியராகி

அவர்கள் நடுவில் கண்ணன்..

கவலைகளே கன்னியராகி அவர்கள் நடுவில் கண்ணன் காட்சி தருகிறான்.

திசைதொலைந்து திணறும் போது

தெருவின் முனையில் கண்ணன்

இதுதான் மனக்கவலை மாற்றல்.

`அரிது` என்பது `இயலாது` என்றும் பொருள்படும். பொதுவாக, பெரியோர்கள் ‘அரிது’ என்றால் அது ஆகிற காரியமே இல்லை என்று புரிந்துகொள்வது நல்லது. இங்கே ‘அரிது’ என்றவர் திருவள்ளுவர் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது!

 தொடருவோம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *