க. பாலசுப்பிரமணியன்

வகுப்பறை ஒரு நாடக மேடை

education-1-1-1

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கற்றலின் முறையில் அதிகமான ஈடுபாடு இருக்கும். இதன் பொருள் அவர்கள் மற்ற முறைகளில் கற்றுக்கொள்வதில்லையென்றோ அல்லது மற்ற முறைகளில் அவர்களுக்கு அறிமுகம் அல்லது பழக்கம் இல்லை என்றோ கூறிவிட முடியாது. மேற்கூறப்பட்ட எல்லா முறைகளும் அனைவரிடமும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களுக்கு உகந்த முறையில் கற்றலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..

ஆகவே, வீடுகளில் குழந்தைகளின் படிப்பு முறைகளிலும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கும் நேரத்திலும் இந்த வேறுபாடான முறைகளுக்குத் தகுந்தாற்போல் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் தேவையான சூழ்நிலைகளை உண்டாக்குதல் அவசியமாகின்றது.

வகுப்பறையில் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் மாணவனைப் பார்த்து “ஏண்டா, நான் இங்கே நின்று கத்திக்கொண்டிருக்கின்றேன். நீ சன்னலையே பார்த்துக்கொண்டிருக்கிறாய் ” என்று கடிந்து கொள்வதும், வீட்டில் தன் மகனுக்கருகில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கும் தந்தை ” புத்தகத்தைப் பாருடா ; அங்கே என்ன நடந்தால் உனக்கென்ன ” என்று அங்கலாய்ப்பதும், கண்களாலும் பார்வைகளாலும் பக்கத்தில் இருக்கும் காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும் மாணவனின் நிலையை வெளிக்காட்டுகின்றது..

இதேபோல் ஆசிரியர் கேள்விகளை முடிக்கும் முன்னேயே எழுத்து அதற்குச் சரியாகவோ அல்லது தவறாகவோ பதில் சொல்லும் மாணவனைப் பார்த்து ஆசிரியர் “என் கேள்வியை முடிக்க விடுடா.. அதற்கப்புறம் பதில் சொல்லு ” என்று சொல்வதும், தாயின் வார்த்தைகளுக்கு முடிக்க நேரம் கொடுக்காமல் ” நீ சொல்றது புரியுதம்மா.. ஆனால் “என்று சொல்ல “என்னடா புரிந்தது? நான் சொல்லி முடிக்கவே இல்லை ” என்று வருத்தப்படும் தாயினைக் காணும்பொழுது இரண்டாம் வகையைச் சேர்ந்த “செவிச்செல்வத்தை” நம்பி இருக்கின்ற மாணவர்களின் நிலை நமக்குப் புரிகின்றது.

ஆகவே, வகுப்பறைகளில் ஒரே மாதிரியாகப் பாடங்களை நடத்தும் பொழுது அது எந்த வித முறையில் கற்றாலும் மாணவர்களை சேர்ந்து அடைவதில்லை. தங்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் நேரத்தில் அதற்குப் பலவிதமான உத்திகளைக் கையாளுதல் அவசியம். கற்பித்தல் என்ற செயல் உணர்வு பூர்வமாக இருந்தால் தான் கற்றல் சிறப்பாக அமைய வாய்ப்புண்டு.

எனக்கு ஆங்கிலத்தில் செகப்பிரியரின் (Shakespeare) நாடகங்களை பேராசிரியர் நடத்திய பொழுது “Hamlet” என்ற நாடகத்தில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். நடையுடை பாவனைகள், குரல், உணர்வுகள் அந்த பாத்திரத்தியே மீண்டும் பிறப்பித்ததுபோல் இருக்கும் . அதேபோல் கம்ப ராமாயணத்தை நடத்திய பேராசிரியர் குஹனும் இராமனும் சந்தித்த காட்சியை விளக்கியது நினைவை விட்டு அகல முடியாதது.. ஏழாவது வகுப்பில் Wordsworth என்ற ஆங்கிலக் கவிஞரின் “Daffodils” என்ற பாடலை நடத்தும் பொழுது ஆசிரியர் அந்த மலரைப் போல் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.!
இதனால்தான் ஒரு வகுப்பறையை ஒரு “நாடக மேடை” என்று சொல்லுகின்றனர். இதில் ஆசிரியர் மட்டுமல்ல, கற்கும் மாணவர்களும் பங்கேற்கும் பொழுது அங்கே கற்றல் மிகச் சிறப்பாக நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கற்றல் என்பது ஒரு புத்தகத்தின் முன் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் வரை உள்ள தகவல்களை வெளியிடுவது அல்ல. கற்றல் புத்தகம் மூலமாக மட்டுமன்றி, புத்தகத்திற்கு வெளியேயும் அப்பாலும் நடைபெறுகின்ற ஒரு செயல். ஒரு சிறப்பான கற்றல் சூழ்நிலையில் புத்தகத்திற்கு உள்ளே இருக்கும் தகவல்களை வாழ்க்கை நெறிகளோடும் தத்துவங்களோடும் செயல்பாடுகளோடும் இணைத்துச் செல்வதே ஆகும்.

“பரீட்சைக்குத் தயார் செய்வதன்றோ வகுப்பறையின் நோக்கம் ” என்று நினைப்பதும் “இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கின்றது ” என்று காரணங்கள் தேடிக்கொண்டிருப்பதும் கற்றலின் நோக்கத்தையும் மேன்மையையும் குறைப்பதாக அமையும்.

“சொல்லுங்கள்.. நான் மறந்துவிடுவேன். கற்பியுங்கள்…நான் நினைவில் வைத்துக்கொள்கின்றேன்… என்னை ஈடுபடுத்துங்கள்… நான் கற்றுக்கொள்கிறேன். ” என்று மேதை பெஞ்சமின் பிராங்கிளின் (Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn. Benjamin Franklin) கூறியது எல்லாக் காலங்களுக்கும் எல்லாக் கற்றல் சூழ்நிலைகளுக்கும் வெகுவாகப் பொருந்தும்.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *