அவ்வை மகள்

 பெண்ணின் மூலாதாரக்கனலில் அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

பெண்ணின் பெரினியத்தை அக்கினிப் பாண்டம் என்கிறோம் – படைப்பாற்றலின் குண்டமாக – பாத்திரமாக – செயல்படுவதால் அங்கே உஷ்ணம் உற்பத்தியாகிறது என்றோம். இந்த அக்கினி என்பது – எத்தகையது என்று பார்த்தால் அது ஒரு எண்ணெய் விளக்கைப் போன்றது. திரிபோட்டு, எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட விளக்கு எவ்வாறு எரிந்து வெப்பம் தருகிறதோ அதுபோன்றே பெரினியத்தின் உள்ளே விளக்கின் அழல் போல் கனல் தோன்றி அங்கே வெப்ப சக்தி உண்டாகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல இந்த வெப்பசக்தி பெண்ணில் உடலில, பூப்பெய்தும் நாளிலிருந்து சுயம்புவாக உருவாவது – தொடர்ச்சியாக உருவாவது. இதுதான் மூலாதாரத்தின் மூண்டெழுகனல்.

ஆதித்தன் எனப்படும் சூரியனானவன் சுயம்புவாக, தனக்குள் தானே உட்கருவினையால் ஒரு அக்கினிப் பொறியை உண்டாக்கி, அந்த ஆரம்பப் பொறியைக்கொண்டு தன்னுள் அக்கினியைத் தொடர்ந்து மூட்டி – மூட்டி – கொழுந்தாய் ஜ்வாலை விட்டு எரியும்படியான நெருப்பு வளர்க்கும் ஆற்றல் மிக்கவன். அதாவது – தன்னுள் தானே ஆற்றலை உருவாக்கிப் பெருக்குவது என்கிற ஆற்றல் வித்தை என்பது சூரியனது தனிப்பெரும் குணாதிசயம். பிரபஞ்சத்தின் அண்டபகிரண்டங்களுக்கும் ஆற்றல் வழங்குவது யாரென்றால் – சூரியனே. இலக்கியங்களும் அறிவியலும், ஆன்மீகமும் ஒருசேர ஓர் அணியில் நின்று ஆமோதிக்கும் ஒப்பற்றப் பேருண்மை இது. பிரபஞ்சத்தில் 20 பில்லியன் சூரியக்குடும்பங்கள் இருப்பதாகவும் – அவற்றில் ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் நாம் வாழ்வதாகவும் சொல்லப்படுவது நாமறிந்த உண்மையே.

ஆக, பிரபஞ்சத்தின் ஆற்றல் பிரதிநிதியான சூரியனது ஆற்றல் ஜனனத்தின் இயக்கம். இந்த இயக்கம் மனிதகுலத்தின் ஆற்றல் பிரதிநிதியான பெண்ணின் மூலாதாரத்தில் தத்ரூபமாய் நிகழ்கிறது. ஆனால் உஷ்ணம் பரவும் முறையில் பெண் சூரியனிலிருந்து வேறுபட்டவள். சூரியனது வெப்பமானது சூரியனிடம் மட்டுமே நில்லாமல், பிரபஞ்சம் முழுவதிலும் பரவுவதன் காரணம் – சூரியன் தன் அச்சில் தானே சுழன்று கொண்டு பெரு நீள்வட்டப் பாதையில் அண்ட வெளியில் சுழலுகிறான் என்பதால்.

இப்பொழுது ஒரு காட்சியை உங்கள் கற்பனையில் ஓட்டிப் பாருங்கள்: ஒரு அக்கினிப் பாண்டம் இருக்கிறது – அதில் அக்கினி தொடர்ந்து உற்பத்தியாகிறது. அவ்வாறு அந்தப் பாண்டத்தில் உருவாகும் அக்கினியின் வெப்ப ஆற்றலானது அப்பாண்டத்திலிருந்து வெளியேறாமல் சுற்றிலும் பரவி விநியோகம் செய்யப்படாமல் இருக்குமேயானால் என்னவாகும் என எண்ணிப் பாருங்கள்.

உருவாகும் வெப்பம் அங்கேயே தங்கி செறிவடையும் அல்லவா?!

இப்போது இன்னொன்றைச் சிந்தியுங்கள்: ஒரு இடத்தில் வெப்பம் தொடர்ந்து உற்பத்தியாகும் ஒருநிலையில், அந்த வெப்பம் அங்கிருந்து வெளியேற்றப்படாமல் அங்கேயே தங்கிச் செறியுமானால், என்னவாகும்?

அங்கு, அப்பாண்டத்தில் போடும் பொருட்களும், அப்பாண்டத்தைச் சுற்றியுள்ள பொருட்களும் சுருங்கி, வெந்து, வறண்டு, உலர்ந்து, கருகி எனப் பல்வாறானும் பாதிக்கப்படுமல்லவா? ஏன் – தீக்காயங்களும் – தீவிபத்துக்களும் கூட நிகழுமே. பொருட்களும் ஏன் அந்த பாண்டமே கூட வெடித்தும் சிதறுமே!

ஆக, ஓரிடத்தில், வெப்பசக்தி செறிவடையுமேயானால் பற்பல இணைவிளைவுகள் நிகழும் என்பது வெள்ளிடைமலை.

பெண்ணின் மூலாதாரக்கனல் இவ்வாறுதான் அவளது பெரினியம் எனும் உற்பத்திஸ்தானத்தினுள் செறிகின்றது. இவ்வாறு அந்த அக்கினி அங்கேயே செறிகிறது எனபதை நீங்கள் உணரவேண்டும் என்றால், பெண்ணின் உடலியல் விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும். பெண்ணின் மூலாதாரத்தில் அக்கினி சேருகிறது என்பதற்குப் பல சான்றுகள் – பல அடையாளங்கள் உள்ளன.

முதலாவது அடையாளம்: பெண்ணின் ஆசனவாய் (குதம் அல்லது மலப்புற வழி) வெப்ப நிலை (Anal temperature or Rectal temperature) ஆணின் ஆசன வாயின் வெப்பநிலையைவிட சுமார் 0.5 டிகிரி கூடுதலான சூட்டுடன் உள்ளது. (எங்கள் வகுப்பறைகளில் நாங்கள் தப்பாமல் காணுகிற காட்சி – ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் ஒரு வகுப்பில் ஒரு சேர ஒரு மாணவி அமர்ந்துவிட்டு எழுந்தாள் என்றால், அவள் அமர்ந்திருந்த இருக்கை தகிக்கும். ஒருவகுப்பு முடிந்து இன்னொரு வகுப்பு வரும்போது ஒரு பெண் மாணவி அமர்ந்து விட்டு எழுத்துச்சென்ற இருக்கையில் ஒரு மாணவன் வந்து அமர நேரிட்டால் – அலறுவான் – “Why is the so hot?” என்று).

இரண்டாவது அடையாளம்: மலச்சிக்கல் ஆணைவிடப் பெண்ணுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஐந்து பெண்க்ளுக்கு ஒரு ஆண் என்கிற விகிதாச்சாரத்தை மலச்சிக்கல் வியாதியில் காண முடியும். பெண்ணின் ஆசனவாய் சுருகி -இறுகி அதனால் ஏற்படும் மலச்சிக்கல் வகையைப் பெண்களிடம் காணமுடியும் – ஆணின் மலச்சிக்கல் வகை பெரும்பாலும் செரிமானக் கோளாறுகளால் ஏற்படுவதாக இருக்கிறது.

மூன்றாவது அடையாளம்: ஆசன வாயின் வழியே வெளியேறும் வாயு ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு அதிக உஷ்ணத்துடன் அதிக அடர்த்தியுடன் வெளிவருகிறது. ஏனெனில் பெண்ணுக்கு உடலில் ஆணை விட அதிக மீத்தேன் வாயு உண்டாகிறது. மீத்தேன் வாயுவை இயற்கை வாயு (Natural Gas) என்பர். இந்த இயற்கை வாயு வெப்ப ஆற்றலும் – மின் ஆற்றலும் கொண்டது. பெண்ணினுள்ளே எத்தனை வெப்பச் செறிவு நிகழ்கிறது என்பதற்கு இது ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

நான்காவது அடையாளம்: நாசியின் வழியே வெளிவிடும் மூச்சு, ஆணின் வெளிவிடும் மூச்சை விட சுமார் 0.5 டிகிரி கூடுதலாக உள்ளது. பெண்ணின் உள்வாய் வெப்ப நிலை ஆணின் உள்வாய் வெப்ப நிலையை விட சுமார் 0.6 டிகிரி கூடுதலாக உள்ளது.

ஐந்தாவது அடையாளம்: பெண் ஆணைவிடவும் குறைவாகவே வியர்ப்பாள் (வியர்வை என்பது சுற்றுச்சூழலின் வெப்ப அளவு அதிகமாகும்போது உடலின் வெப்பம் அதிகரிக்க, அந்த அதிகரிப்பைக் குறைத்து, சாதாரண இயல்பான உடல்வெப்ப நிலைக்கு உடலை மீண்டும் வரவழைக்கவென உடலில் உண்டாகும் குளிர்விப்பு இயக்கமாகும். பெண்ணின் உடல் வெப்ப நிலை ஆணின் உடல் வெப்ப நிலையைவிட சுமார் 0.3 டிகிரி அதிகம் என்பதால், அவளது உடலை இயல்பு நிலைக்கு கொண்டுவர குறைவான அளவு வியர்வையே போதும்,)

ஆறாவது அடையாளம்: உடலில் தசை இல்லாத நிலையிலும், பெண் ஆணைவிடவும் அதிகநேரம் தளராது சீராக வேலை செய்வாள்.

ஏழாவது அடையாளம்: பெண் எந்த ஒரு செயலையும் வெகு அகல-ஆழ்ந்து ஆராய்ந்து, வெகு சிரத்தையோடு, கடும் நுணுக்கங்களை முதலீடு செய்து செய்வாள்.

எட்டாவது அடையாளம்: பெண் ஆணைவிடவும் அதிக எச்சரிக்கை விழிப்புடன் இருப்பாள் – தூக்கத்திலும் கூட அவளுக்கு விழிப்புணர்வு மிகுந்திருக்கும். வீட்டுக்குள் ஏற்படும் மிகச் சன்னமான ஒளிமாற்றத்தைக்கூட தூங்கிக்கொண்டிருக்கும்போதே கூட அவளால் உணரமுடியும். ஹைப்போதலமஸ் எனப்படும் பிடரியில் உள்ள பின்மூளைப்பகுதியும் மூளைத்தண்டும் இணையும் பகுதி உடல் வெப்பத்தைக் கண்காணிக்கும் அதிபதி – பெண்ணுக்குச் சற்றே கூடுதல் நுணுக்கத்துடன் இந்த ஹைப்போதலமஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே பகுதிதான் விழிப்புணர்வுக்கும், ஹார்மோன்களுக்கும் பொறுப்பான பகுதியாகும். எனவே, உடல் வெப்பமும் – விழிப்புணர்வும் தொடர்புடையவை எனக் காண்க.

ஒன்பதாவது அடையாளம்: பெண்ணின் செவிப்பறை வெப்பம் (Tympanic temperature) ஆணின் செவிப்பறை வெப்பத்தைவிட 0.3 டிகிரி கூடுதலாக உள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பால் – அவளது செவிப்பறை சவ்வு மெலிதாய் நன்கு விரிந்து – இறுக்கமாய் இருப்பதால் – மிக மிக சன்னமான ஒலியையும் பெண்ணால் உணரமுடியும்.

பத்தாவது அடையாளம்: பெண்ணின் நரம்பு மண்டலம் ஆணின் நரம்பு மண்டலத்தைவிட வெகு நுட்பமானது. உறங்கும்போதும் கூட – தன்னை இன்னார் தொடுகிறார் – இன்னது தொடுகிறது என்று அவளால் க்ஷணத்தில் உணரமுடியும் – பெண்ணின் ஹைபோதலமஸின் ஒப்பற்ற நுணுக்கத்தின் ஆசீவாதம் இது.

பதினோராவது அடையாளம்: பெண்ணுக்கு ஆணை விடச் சுருக்கென்று கோபம் வரும்.

பன்னிரெண்டாவது அடையாளம்: படுத்த நிலையிலுருந்தோ தரையில் குந்தி அமர்ந்த நிலையிலிருந்தோ பெண்ணால் ஆணைவிட வெகுசீக்கிரமாக எழும்ப முடியும், இவ்வாறு எழும்புவது என்பது அதிக வெப்ப ஆற்றல் கோரும் செயலாகும். ஆணுக்கு மூலாதார வெப்ப ஆற்றல் குறைவு என்பதால் பிற எல்லா இயக்கங்களிலும் பெண்ணைவிட ஆண் (தசை வலிமையால்) வல்லவனே தான் என்றாலும் படுத்தெழுதல் – குந்தி எழுதல் என்பவற்றில் ஆண் கொஞ்சம் பின் நிலை தான்.

பதின்மூன்றாவது அடையாளம்: பெண்ணின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் ரேகைகள் ஆணின் ரேகைகளைக் காட்டிலும் அதிக ஆழத்துடன் இருக்கின்றன. பெண்ணின் தோல், வெப்பமாற்றங்களுக்குத் தோதாக இலகுவாக அமையப்பெற்றிருப்பதால் இந்த ரேகை ஆழம் உள்ளது.

ஆக, ஆதித்தனது சாயலாக தனக்குள் தானே அக்கினி வளர்த்து அதனை தனக்குள் செறிவு செய்துவைத்துக் கொள்ளும் இயல்பான சக்தி பெண்ணுக்கு இருக்கிறது.

சூரியனின் சாயலாக, பெண்ணுள் நடக்கும் இன்னொரு விந்தை என்றால் அவளது உடல் வெப்பத்தில் ஏற்படும் இரவு- பகல் மாற்றங்கள் – இரவில் குறைந்தும் பகலில் கூடியும் இருக்கும் அவள் உடல் வெப்ப நிலை – பகல் பனிரெண்டு மணியில் உச்சத்தில் இருக்கும் – இரவின் நடுநிசியில் வெகு தாழ இருக்கும்.

அதே நேரத்தில் பெண்ணின் மூலாதார வெப்பமும் – அதன் பதின்மூன்று அடையாளங்களும் அவளுடலில் ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. சிருஷ்டிப் பணிக்காக, பெண்ணின் உடலில் உருவாகும் பெண் ஹார்மோன் செய்யும் மாயமிது. பெண்ணின் கரு முட்டை நிலையின் தன்மையை திரவமாய் அறிவிக்கும் சுரோணிதம் “அமுது” எனும் சொல்லுக்குப் பொருளாய்க் கொள்ளமுடிவதாக உள்ளது. ஏனெனில், அமுது என்பதற்கு உயிரின் வேர் உயிரின் முதற்புள்ளி என்று பொருள் – அமுது என்பதை, சிசு என்றும் சொல்லுவர். சீம்பால் என்றும் கூறுவர். கிராமப்புறங்களில், பிரசவமான பசுவின் உடலிலிருந்து சிசுவைப் பிரிக்கும்போது வெளித்தள்ளப்படும் தொப்புள்கொடி-மற்றும் நஞ்சின் தொகுப்பை அமுது என்று அழைப்பதே வழக்கம்.

பிரசவமான பசுவின் அமுதை மிகுந்த பயபக்தியடன் சேகரித்து அதனை சில பொருட்கள் சேர்த்துப் பதனப் படுத்தி – சுத்தமான துணியில் கட்டி, அதனை உரிய சம்பிரதாயங்களோடு ஆலமரத்தில் கட்டித் தொங்கவிட்டு, சூரியனைப் பிரார்த்திப்பது என்ற வழக்கம் வெகு காலமாக இருந்திருக்கிறது. வீட்டில் பிரசவம் நடந்த கால கட்டங்களில் தமிழகக் கலாச்சாரத்தில், மனிதப் பெண்ணின் பிரசவ நஞ்சும் கூட இவ்வாறு சில சடங்குகளுடன் சூரியனுக்குப் படைக்கப்பட்டதாய் 103 வயதாகும் தமிழ் மூதாட்டி ஒருவரிடம் அறிந்து கொண்டேன். இந்தச் சடங்கில் குல ஒழுக்கங்களில் வித்தியாசம் இருந்தாலும் – பொதுவாகப் பெண்ணின் உடலிலிருந்து வெளியேறிய நஞ்சு – நாய் – நரி – பாம்பு – பறவைகள் ஆகியன கண்ணில் படாமலும் – நீர் நிலைகளில் எறியப்படாமலும் – பூமியில் புதைக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டது என்றும் – பல குலத்தார் அதனை அக்கினியில் வார்த்தனர் என்றும் – சிலர் அதனை தீபமாக்கினர் என்றும் அவர் கூறினார்.

இன்று பெண்ணின் 28 நாள் மாதவிடாய்ச் சுழற்சியில் அவளின் உடலின் வெப்ப ஏற்றத்தாழ்வுகளை மருத்துவ உலகம் ஆய்ந்திருக்கிறது. இன்றும் கூட – கருத்தரிப்பு மருத்துவ வல்லுநர்கள் – பெண்ணின் பெரினிய வெப்பத்தைத் தொடர்ச்சியாக அளவிட்டு – அந்த வெப்பநிலையைக் கணக்கில் கொண்டு – அவள் உடலில் முட்டை உண்டாகி இருக்கிறதா இல்லையா எனச் சட்டென அறிந்து கொண்டு – அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கிறார்கள்.

அவ்வை, “அமுதநிலையும் – ஆதித்தன் இயக்கமும்” என்று விநாயகர் அகவலில் குறிப்பிடுவது பெண்ணின் உடல் உஷ்ணம் பற்றியே என்பதும் பெண்ணின் உடல் உஷ்ணதத்திற்கும் அவள் உடலில் கருமுட்டை தோன்றும் – விலகும் சுழற்சிக்கும் தொடர்பு உள்ளது என அவள் நம்மை உணரவைப்பதும் நமக்கு இப்போது புரிகிறது. இந்நிலையில் ஒரு பெண், ஒரு தாய், மருத்துவ அறிவியலில் மூழ்கி இருப்பவர் என்கிற வகையில் அவ்வையின் உயிரோட்டமான இந்த “அமுதநிலையும் – ஆதித்தன் இயக்கமும்” என்கிற வாசத்தை நான் எண்ணி எண்ணிப் பரவசப் படுவதுண்டு.

பகவத் கீதையின் பதின்மூன்றாம் அத்தியாயம் ஷேத்திரம் எனும் உடலியலை விளக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் – அமுது என்பதன் சூட்சமங்களைக் கண்டேன்: உடம்பிலிருந்தபடி எது உயிர் உருவாகும் வண்ணம் உடலை மேற்பார்வை பார்க்கின்றதோ – எது உயிர் உருவாக அனுமதி தருகிறதோ – எது உயிர் உருவாகத் தான் உண்ணுகிறதோ – அதுவே பரமாத்மா எனப்படுவது. என்கிறது கீதை.

அவ்வை காட்டும் அமுதமும் – பகவத் கீதை சொல்லும் பரமாத்மாவும் மருத்துவ அறிவியல் பார்வையில் பெண்ணின் கரு முட்டையே எனக் கூறமுடிகிறது.

ஆக, பெண்ணின் மூலாதாரத்தின் மூண்டெழும் கனல் அங்கேயே தங்கிவிட்டதென்றால் பல எதிர் விளைவுகள் நிகழும் – அதனை அங்கு தங்காமல் எழுப்பியே ஆகவேண்டும் என்கிறாள் அவ்வை. இன்று மருத்துவ உலகம் பெரும்பாடுபட்டு ஏதோ கொஞ்சம் அறிந்து கொண்டு – அறிந்துகொண்ட அந்த கொஞ்சத்தையும் கூட சொல்லத்தெரியாமல் தத்துபித்தென்று உளறிக்கொண்டிருக்க – வெகு அனாயசமாக அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்று சொல்லிப்போன அவ்வையையும் – இதுபோன்றே பல மருத்துவ உடலியல் ஷரத்துக்களை வெகு யதார்த்தமாக இயம்பிச்சென்றிருக்கிற திருமூலர் மற்றும் எண்ணிறந்த சித்தர்களையும் வாழ்த்தி வணங்க வாழ்நாள் போதாது.

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *