தொல்காப்பிய அளவியலும் சங்கக் கவிதை மரபும்

0

முனைவர் ப. தமிழரசி, பேராசிரியர் மற்றும் தலைவர், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை  – 21.

 

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே

பின்னைப்  புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே   (மாணிக்கவாசகர்)

என்ற மாணிக்கவாசகரின் வரிகள் மேற்கண்ட தலைப்புக்கு முற்றும் பொருந்தும். தமிழனின்  மிகப்பழம் இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியமும், சங்க இலக்கியமும்  நீண்ட நெடிய தமிழ் இலக்கிய செழுமையில் கரைந்து, மறைந்து விடாது தனக்கென தனித்த இடத்தை இன்று வரை தக்க வைத்துத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதே அதன் பெருமைக்குச் சான்றாகும்.

இன்று நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப்பழமையானது தொல்காப்பியமே.  மனித வரலாற்றின் பழமையை மறந்துவிடாமல் ஆனால் அதே சமயம் புதுமையை மையப்படுத்தி எழுதப்பட்ட தலைசிறந்த நூல் இது. அகத்தியர் எழுதியது அகத்தியம். பன்னிருவர் எழுதியது பன்னிரு படலம். இந்திரன் எழுதியது ஐந்திறம். காக்கைப் பாடினியார் பாடியது காக்கைபாடினியம். அதுபோல  தொல்காப்பியரால் எழுதப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியமாகும்.  எழுத்து, சொல் என்ற இரண்டு குறித்து மட்டுமே அதிகம் பேசிவந்த காலத்தில் பொருள் குறித்து முதலில் பேசியவர் தொல்காப்பியர் தான்.

தமிழன் உலகில் முதல் தோன்றியவன் என்பது உண்மையோ இல்லையோ ஆனால் முதன் முதலில் ஒலி என்பதை அடிப்படையாகக் கொண்டு மொழியை உருவாக்கியவன் தமிழன் தான்.  தொல்காப்பியம்  ஒலியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.  எழுத்தை மையப்படுத்தி எழுதாமையும் தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பு. ஒலியின் அளவு மாறுபாடுகளைச் சொல்வதே அளவியல் எனலாம்.

தமிழனின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலகட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள் செய்தார்கள். பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை எண்ணல், எடுத்தல், முகத்தல்,  சார்த்தல் என்ற நான்காகும்.

எண்ணல்        1 2 3 4  என வரிசையாக எண்ணிச் சொல்வது  வாய்பாடுகள்

எடுத்தல்    (சார்த்தி அளத்தல்) ஒப்புமை கூறுதல் அதனை விட இது மேலானது என்பது போல மாத்திரை சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.

முகத்தல்    பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு

நீட்டல்   பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை (ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும்.

தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை. அளவை மையமாகக் கொண்ட(உழக்கு) செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.

ஒலியை மையப்படுத்தியே தொல்காப்பியம் எனும் போது  அந்த ஒலியின் அளவை மையப்படுத்தியே நூற்பாக்கள் எழுதப்பட்டன

அவற்றுள்

அ இ உ

எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்

ஓரளபு இசைக்கும் குற்றெழுத் தென்ப(3)

என குற்றெழுத்துக்களுக்கு அளவு வரையறை செய்கிறார்

ஆ ஈ ஊ

ஏ ஐ

ஒ ஓள என்னும் அப்பால் ஏழும்

ஈரளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப(4)

என்று நெட்டெழுத்துக்களுக்கு அளவு வரையறை செய்கிறார்.

மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே(5)

நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்(6)

அம்மா….. என அழைப்பது போலத் தேவை நேரிடின் எழுத்துக்களைக் கூட்டிக் கொள்ளவும் சுதந்திரம் தருகிறார்.

கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே(7)

கண்ணிமை நொடி என எப்படி அளவு வைப்பது என்று கேட்பவர்களுக்கும் பழைய நூல் ஒன்றில் அளவு கூறப்படுகிறது அதாவது  மாத்திரை என்பதாவது

எண்ணல் (கால்)  எடுத்தல் (அரை)  முறுக்கல் (முக்கால்)  விடுத்தல் (ஒன்று)

அதாவது கை நொடிப்பொழுது என்பதனை நமது கையை நாம் சொடக்குப் போட எண்ணுவதும் எடுத்தலும் கையை முறுக்கலும்  சொடக்கு விடுவதுமாகிய நேரமே மாத்திரையின் அளவாக வரையறை செய்வதன் மூலம்நம் முன்னோர்களின் அறிவார்ந்த புலமையை அறிந்து கொள்ள இயலும்.

அரையளபு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகும் தெரியுங் காலை(13)

சரி மாத்திரையின் அளவைக் குறைக்க வேண்டுமா  அழைத்தலைச் சுருக்குங்கள் என்கிறார்.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

உளவென மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்(33)

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா

ஆய்தம் அஃகாக் காலை யான(40)

உந்தி முதலா முந்துவளி தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்

பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

திறப்படத் தெரியும் காட்சி யான(83)

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃது இவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே(102)

மேற்காண் நூற்பாக்கள் அனைத்தும் நாம் பேசும் முறையில் வரும் ஒலிக்குறிப்பை கொண்டே அமைந்திருப்பதைக் காணலாம். எல்லா எழுத்தும் வெளிப்படையாக வரும் ஒலிக்குறிப்புகளை கொண்டே அமைக்கப்பெற்றிருப்பினும் சில ஒலிகளின் அளவுகளை வரையறை செய்வதை நம்மையே முடிவு செய்து கொள்ளச் சொல்கிறார் அது தான் அளவிற் கோடல் அந்தணர்  மறைத்தே என்னும் வரியாகும். அதாவது எழுத்தின் அளவினை சொல்லுபவன் தேவை கருதி நீட்டித்தலும் அல்லது சுருக்குதலும் செய்யலாம் என்கிறார். தொல்காப்பியத்தில் வரும் பிறப்பியல் முழுக்க அளவியலுக்குரியதே.  அதே போல புணரியல் முழுக்க ஒலி மோதல்கள் குறித்த செய்திகளை உள்ளடக்கியதே அதனால் தான் பெரும்பாலான சூத்திரங்கள் ஈறுகெடும்,முதல் மாறும் என்பதாக அமைகின்றன. ஆனால் தெளிவாக தொல்காப்பியர் காலம் உருண்டோடுவதைப் போன்றே எழுத்துக்களும் உருளும் மாறும் என்பதனை அவரின்

உட்பெறு புள்ளி உருவா கும்மே(14)

என்ற சூத்திரத்தை மையப்படுத்தி தெளிவாகச்  சொல்லிச் சென்றதைக் கொண்டே நாம் இங்கு சங்கப்பாடல்களை ஆராயப் போகிறோம்.

சங்கக் கவிதை மரபு

மரபு என்பது நாம் இன்று வரை சங்க இலக்கியம் என்று வரையறை செய்து வைத்திருப்பது 2379 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களைத்தான்.  அதைத்தாண்டி நாம் எதையும் ஆராய முற்பட்டதில்லை. அன்றைய சங்ககாலம் என்பதை வரலாற்று அறிஞர்கள் கிறித்துவின் தோற்றத்தோடு ஒப்பிட்டு, சம காலத்தது என்று வரையறுப்பதும் சங்க இலக்கியத்தின்  காலத்தை நிர்ணயம் செய்ய உதவும். சங்க காலத்திற்கு முற்பட்டோ அல்லது சம காலத்திலேயோ தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியம்  தன்னுடைய நூலில் கூறியுள்ள அடிப்படை மரபுகளை சங்க இலக்கியம் தன்னுள் கொண்டுள்ளதா என்று ஆய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.  மனிதன் என்று தோன்றினானோ அன்றே  மரபுகளும் தோற்றம் பெற்றுவிட்டன என்றுதான் கூற வேண்டும். மனித சமூகம் எதைக் கற்றதோ, எத்தகைய செயல்களை மேற்கொண்டதோ, எதில் பயிற்சி பெற்றதோ அந்த அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருத்தலே மரபாகும். தமிழர் பண்பாடு என்பது தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் பண்பாடு மட்டுமன்று: மரபுகளோடு இணைந்த ஒன்றே ஆகும். அதனால் தான் தொல்காப்பியர் மரபுகளைப் பற்றிக் கூறவரும்போது

பாடலுள்  பயின்றவை நாடுங்காலை

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்

மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை

என்கிறார். அதாவது தன்னுடைய வேலை என்பது செய்யுட்களில் பெரும்பான்மையாக இருப்பதை ஆராய்வது, செய்யுட்களில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மரபுகள், காலம் சார்ந்த  மரபுகளைப் பின்பற்றிப் பெரியோரால் எழுதப்பட்ட பாடல்கள்,  மரபு நிலை திரியாது இருத்தலைக் கண்டறிதல் என்று கூறுவதன் மூலம், அவர் தன்னுடைய முன்னோர்கள் பாடிய செய்யுட்களில் காணலாகும் மரபார்ந்த சிந்தனைகளை மட்டுமே தன்னுடைய கருத்துக்களின் அடிநாதமாகக் கொள்கிறார் எனலாம்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தோற்றம் பெற்றவை சங்கப் பாடல்கள். அவை  பல்நெடுங் காலமாக மக்களின் வாய்வழியே பல்வேறு ஊர்களுக்கு பாணன் வாயிலாக பயணம் செய்தவை. நமக்கு இன்று கையில் கிடைக்கும் பாடல்களைக் கொண்டு இதுதான் சங்க மரபு என்று வரையறை செய்ய நம்மால் நிச்சயம் முடியாது.பல்வேற காலகட்டங்களில் தொகுக்கப்பட்ட வாய்மொழிப் பாடல்களில் தொகுப்பாக உள்ள சங்கப் பாடல்களை மரபு சார்ந்து பார்க்க நேரிடின், அவை தோன்றிய காலச் சூழல், மரபு சார்ந்த பின்புலம், பாடல்களை உள்வாங்கிய செய்யுள் மரபு, அவற்றை வளர்த்தெடுத்த தொல்காப்பியம் போன்ற இலக்கண மரபு  என்ற நிலைகளில் வைத்தே ஆராய வேண்டும். மேற்காண் முறையில் பார்க்கும் போது தான் சங்க இலக்கியங்களின் அமைப்பு மரபினையும், ஒலி மற்றும் ஓசை மாற்றங்களையும், சமுதாய மாற்றங்களையும் உள்வாங்கிக் கொள்ள முடியும்..

அன்றைய சங்கக் கவிதைகள் முழுக்க ஓசை அடிப்டையிலேயே எழுதப்பட்டன. கேட்போனுக்கு உணர்வை உண்டாக்குதலே அதன் தேவையாக இருந்திருக்கிறது. செய்யுளியல் முழுக்க ஓசை அடிப்படையில் அமைந்திருப்பதே அதன் சாட்சி.

அசை, சீர், தளை ஓசை தான் அடிப்படை

நேர் நேர்    தேமாங்காய்

ஓசைக்கு ஓசையே ஒப்புமை – சார்த்தி அளத்தல்

நீளமான ஓசைக்கு  சான்றாக – பசுபதி

எழுத்துப் புறத்திசைத்த என்ற நூற்பாவை காணும் போது தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும் இசை கலந்தனவே என்று உறுதியாவதால் பாணனுக்கு இருந்த முதன்மை விளங்கும்.  தமிழில் அனைத்து எழுத்துக்களும்ஓசை ஒட்டி வரக்கூடியவையே. இல்லாத ஓசை எழுத்தில் வராது உள்ள ஓசை விடுபடாது. இது அடிப்படை மரபு. அன்றிலிருந்து இன்று வரை தொடர்வது.  வரி வடிவம் இல்லாத எழுத்தை தமிழில் நாம் உச்சரிப்பது இல்லை. இதுவும் மரபு தான்.  (அஃகு, Knife)  இன்றைய நிலையில் நாட்டார் பாடல்களை ஆய்வு செய்ய நேரிடின் அதில் காணலாகும் மரபார்ந்த செய்திகளை, தாள அமைப்பைக்  காணின் இதில் உள்ள உண்மை விளங்கும்.   தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் அவற்றைக்  கேட்போன்  தானாகவே தூக்க மற்றும் துக்க நிலைக்கும், துள்ளல் நிலைக்கும் ஆளாவான். அதன் மாற்றுப் பதிப்புத்தான் இன்று சென்னை எங்கும் மாறி ஒலிக்கும் கானாப் பாடல்கள் என்று கூடக் கூறலாம்.

சுட்டி ஒருவர்  பெயர் கொளப்பெறார் என்ற சூத்திரத்தின் அடிப்படையே சங்க அகப்பாடல்களின் அடிஓட்டமாகக் கொள்ளலாம்.  அந்த அடிப்படை சங்கப் பாடல்களில் எந்த இடத்திலும் மாறுபடவில்லை. அப்படியே பெயர் அல்லது ஊர் கூறப்பட்டாலும் அது புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை அதற்குச் சான்றாகும். சான்று – நெடுநல்வாடை.  அதே போலப்  அன்பின் ஐந்திணை என்று  அகத்திணைக்குப் பெயர் தரினும் நால்வகை நிலங்களைக் கொண்டே தலைவன் அழைக்கப்படுவதும் அதனைக் கொண்டே நாம் திணையை முடிவு செய்து சொள்வதும் இயல்பாக அமைந்துள்ளமையைப் பார்க்கலாம்.

புறத்திணையின் அடிப்படை மரபுகளான வழிபடல், வாழ்த்தல், புகழ்தல், கையற்றுப் புலம்பல் என்ற சில நிலைகளை எளிதாக வாசிப்போன் புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஓளவையார்  –  அதியமான் பாடல்களைப் படித்தால் போதுமானது.  ஔவைக்கும் அதியமானுக்கும் இருந்த நுட்பமான உறவு அவரின் 59 (அகம் 26, புறம் 33) பாடல்களிலும் புலப்படும்.  26 அகப்பாடல்களையும் பெயர் கூறாது ஒருவரிடம் கொடுத்துப் படிக்கச் செய்யின் காதல் நிறைவேறாத ஒரு முதிர் கன்னியின்  புலம்பல்களாக அல்லது ஏக்கங்களாகவே பல பாடல்கள் இருப்பதை உணர முடியும்.

ஒரு நாள் கழியினும்  வேறுபடுஉம்  ( நற் 129)

மெய்ம்மலி காமத்து   (நற்  187 )

காதல் மிகுதியால் ஒரு பெண் கூறுவது போல எழுதப்பட்ட

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

ஆஅ ஒல்லெனக் கூவுவேன்  கொல்  ( குறுந்  28)

போன்ற  பாடல்களைச் சான்றாகக் கூறும்  போது மேற்கண்ட பாடல்கள் அனைத்தும் தொல்காப்பியரின் விதிகளை மீறி படைக்கப்பட்ட பாடல்களாகவே காட்சி அளிப்பதைக் காணலாம்.  அதே போல ஔவை பாடிய புறப்பாடல்கள் 33இல் 16 பாடல்கள் அதியனைப் பாடியது.  அவனின் வாழ்க்கை முழுவதையும் உடனிருந்து பாடியிருக்கிறார் எனும் போதும் விதிகள் புறந்தள்ளப்படுவதைக் காணலாம்.  அதியனின் அவைபுலவர் ஔவை கிடையாது. ஆனால் அவன் வாழ்க்கை முழுக்க ஔவை பயணிக்கிறார். இது அழகிய முரண்.   எண்தேர் செய்யும் தச்சனின் ஆற்றலோடு  (புறம் 87) அதியனை ஒப்பிடுவதாகட்டும், பொருநரும் உளரோ நீ களம் புகினே (புறம் 90) என்ற பாடலாகட்டும் நாம் காணும் ஔவை சங்க மரபுகளுக்கு மாறானவர் என்பது திண்ணம்.  இதே போல சங்கப் பாடல்கள் பலவற்றையும் நாம் இனம் காண முடியும். நீட்சி கருதி ஒன்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

ஓசை ஒழுங்கால் இசை கலந்து இயற்றப்பட்ட செய்யுள்களையே பா அல்லது பாட்டு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  அவ்வகையில் சங்க இலக்கியப் பாடல்களில் பதிற்றுபத்து மட்டுமே இசை, வண்ணம், ஓசை ஆகியவை வகுக்கப்பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பா தான் நான்காகப் பகுக்கப்பட்டு ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா என கட்டமைக்கப்பட்டது. பிற்காலத்தில்  பாக்களுக்கென தனித்த நூல்களும் தனித்த பாடல்களும் இயற்றப்பட்டது வரலாறு.   இசையின் ஒரு பகுப்பாக வண்ணங்கள் கூறப்பட்டன.இது பாட்டின் ஓசை நயத்தைக் குறிப்பது. தொல்காப்பியர் வண்ணங்களை 20 என வகைப்படுத்தினார். பின்னாளில் இசைக்கு அளவு குறிக்கப்பட்டது.  அவ்வண்ணங்களுக்கும்  மாற்று கண்டறியப்பட்டு இன்று 20 ஆக இருந்த வண்ணங்கள் 200 வரை பல்கிப் பெருகி நிற்கின்றன.

மேற்குறிப்பிட்டவை மட்டுமின்றி தொல்காப்பியர் பண்ணத்தி என்ற மற்றொரு வகையையும் குறிப்பிடுகிறார்.  இது பாடப்படும் இசைப்பாடலில்  எடுத்தாளப்படும் பாடுபொருளைக் குறிப்பிடுகிறது.  இதனை பல உரையாசிரியர்களும் பல்வேறு பொருளில் எடுத்தாளினும் இதுவே நாட்டுப்புற மரபு சார்ந்த பாடல்களைக் குறிப்பிடும் உண்மையான பெயராகக் கொள்ளலாம்.  நாட்டுப்புறங்களில்  பாடும் பாடலின் உட்கருத்தாக அமைவது பெரும்பாலும் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளேயாகும். பண்களுக்கு எழுச்சி தரும் பாடல்களாக அமைவதால் பண்ணத்தி  என்று இளம்பூரணர் சொல்வது போல எடுத்துக் கொண்டாலும் அவை குறிப்பிடுபவை நாட்டுப்புற பாடல்களையே என்பது தெளிவாகும்.

தொல்காப்பியர் தோற்றுப் போன இடம் என்ற ஒன்றை நாம் குறிப்பிட வேண்டுமெனில் அது அகப்பொருள் பற்றிச் சொல்ல வரும் போது   கலியே, பரிபாட்டு என்பார்.   அதாவது அகப்பொருள் பற்றி பாடப்பட கலியும் பரிபாட்டும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்   அதாவது அவர் கருத்தின் படி காதல் என்ற உணர்வு மனிதனுக்கு மகிழ்வைத் தரக்கூடியது  கலி எனில் துள்ளல்  அதாவது காதல் சுகம் என்றும் பரிபாட்டு இசை இசையும் மகிழ்வைத் தரக்கூடியது என்றும் அர்த்தம் தொனிக்க கூறியுள்ளார் இந்த மரபு சங்கச் செய்யுட்களில் பல்வேறு இடங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.  கலித்தொகை மட்டுமே அந்த மரபை ஒட்டி பாடப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

சங்கச் செய்யுள் மரபில் பத்துப்பாட்டு வேறுபட்டு நிற்கிறது.  மதுரைக் காஞ்சி முழுக்க முழுக்க வஞ்சி நெடும்பாட்டாகும்.  வஞ்சி  – தூங்கலோசை அதைப் பயன்படுத்தி அதிகப்பாட்டுக்கள் பாடப்பட்டுள்ளது பத்துப்பாட்டில் தான்.  ஆற்றுப்படை என்கிற நெடும்பாடல்கள் அதிகம் பாடப்பட்டது பத்துப்பாட்டில் தான்.  பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்து அந்ததாதித் தொடையில் பாடப்பட்டுள்ளது அந்தாதி என்ற புதிய இலக்கிய வகை தோற்றம் பெற உதவிற்று எனலாம்.  தொல்காப்பியர் தொகுத்தளித்த செய்யுள் மரபுகளுக்கும், சங்கப் பாடல்களில் காணலாகும் மரபுகளுக்கும் மிகுந்த வேறுபாடுள்ளது. எனினும்   செய்யுள் என்பது மரபின் சாரம் என்ற  திறனாய்வுக் கருத்து இங்கு நினைவு கூறத்தக்கது.  அதுவே இந்தக் கட்டுரையின் செய்தியாகவும் அமைகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *