பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

13819697_1055298904524308_2074905093_n

32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (74)

 1. கருணையின் வடிவம்

  நிமிர்ந்து நின்றாலும்
  பசி அறிந்து
  வளைந்து கொடுப்பவள்
  காரணம்…..
  கருணையின் வடிவமிவள்
  இவளே தாய்

  வேற்றுமை இல்லை
  இவளது இலக்கண்ணத்தில்
  தான் பெற்றதல்லாமல்
  தரணிகெல்லாம் தாரை வார்ப்பவள்
  அம்மையும் அப்பனுமாய்
  ஆசானாக‌
  மண்ணுக்கும் விண்ணுக்கும்
  காற்றுக்கும் கருணையை கற்றுத் தருபவள்

  மண் மட்டுமல்லாமல்
  மரங்களும் தான்
  கற்றது கருணையை இவளிடத்தில்
  தான் காய் கனியைக் பெற்றாலும்
  மண்ணில் விழுந்தாலும்
  மரங்கள் உண்பதில்லை
  மற்றவருக்காகவே காய்க்கிறது

  தலைச்சுமை, மடிச்சுமை, மனச்சுமை
  எச்சுமையை ஏற்றாலும்
  கொடுப்பதற்காகவே வந்த வார்ப்படம்
  காரணம் இவள் தாய்
  பசியை அறிந்தவள்,
  உணவூட்டி உயிர் வளர்ப்பவள்

  நேசமும் பாசமும் இவளது நெற்றிச்சுட்டிகள்
  அன்பும் பண்பும் இவளது அடையாளங்கள்-இவள்
  கருணைக்கண்கள் கதிரவன் கற்ற கல்லூரிப்பாடங்கள்
  கொடுக்கவே ப்டைக்கப்பட்ட கைகளிரண்டும்
  கர்ணன் கற்ற குருகுலம்
  என்ன சொல்வது எப்படி சொல்வது
  வார்த்தைகளுக்கு பஞ்சமே மிஞ்சுகிறது

  எதற்ற்கும் வளையாத பெண்குலம்
  கருணைகு மட்டும் வளைகிறதே-இந்த‌
  அட்சயப்பாத்திரம்.
  இதற்குத்தானா இறைவனும்
  இம் மண்ணில் பிறக்கிறான்….
  அனுப்புனர்
  ராதா விஸ்வநாதன்

 2. ஆயாவும் ஆட்டுக்குட்டியும்

  ஆட்டுக்கு வால் அளந்துதான் வைத்து உள்ளான் என்றவழக்குச்சொல் உண்டு ஆனால்
  ஆசைக்கு அளவிலையே ஆயா!
  ஆட்டு மூளையா உனக்கு என் மானிடர் தம் இனத்தினை பேசுவதும் கேட்கிறது ஆனால்
  ஆட்டுப்பால் அருந்தி அஹிம்சையை போதித்தவரும் உண்டே
  இப்புவியினில்
  ஆடி மாதம் வந்தாலே ஆடுவெட்டி பலி நடக்கிறது
  ஆத்திக மக்களால்
  ஆட்டுக்கால் சூப் உடல் அரோக்கியத்திற்கு நல்லது என
  அறிவளிகளும் சொல்கின்றனர்
  நாங்கள் செல்லப்பிராணிகளாக் சி ல காலம் மட்டுமே
  இருக்கமுடியும் ஆனால் ஆயா வளர்ந்து விட்டாலோ
  சாமிக்கு பலியாகவும் ஆசாமிகளுக்கு உணவாக ஆகிவுவோம்
  ஏன் ஆயா? உங்களைபோல் உள்ளவர்களுக்கு முதியோர் இல்லங்கள் இருக்கிறதாமே
  அதுபோல் எங்களுக்கும் வயதானால் காப்பகம் இருக்குமா ஆயா
  ( சுவாதினி பரத்வாஜ்

 3. முதுமை போற்றுவோம்

  வீட்டின் கொல்லைப்புறத்தில்
  விலக்கப்பட்ட ஆட்டுஉரலோடு
  விடுவிக்கப்பட்ட உறவும்
  கவனிப்பாரற்றுத்தான் கிடக்கின்றது
  கருணை விழிகளுக்கு கதையாட உறவில்லை
  கரம் கோர்த்தாட கண்மணிகள் இல்லை
  புறக்கணிக்கப்பட்ட முதுமைக்கு
  புழக்கடையில் புத்துயிர் தருவது
  தொப்புள்கொடி உறவல்ல
  உணவுப் பதார்த்தங்களைப் பரிமாற
  காத்திருக்கும் கரங்களுக்கு
  அங்காந்து வாய்திறக்க
  அஃறிணை தவிர ஆளில்லை
  பாரம்பரிய நீரோட்டத்தில்
  குழுவாழ்க்கை சிதைந்து
  கூட்டுக்குடும்பமாய் கரைஒதுங்கினோம்
  தனிக்குடும்ப கொடிபிடித்து
  தனித்தீவாய்
  தனிமரமாய்…………..
  பேரன் பேத்திகளோடு குழாவிய பழங்கதைகள்
  நூற்றாண்டு பயணத்தில் கற்பனைகளாய்
  சுருங்கியது தசைகள் மட்டும் தான்
  இதயம் அல்ல எனும் பாவனையில்
  ஈரம் காட்டிய தாய்மை
  கருகிய மனங்களில் தாய்ப்பாலை வார்க்கட்டும்
  வருங்காலத்திலாவது
  முதுமை போற்றுவோம்

 4. நல்ல துணை…

  வேண்டிப் பெற்ற பிள்ளையெல்லாம்
  வேறூர் பார்த்துப் போய்விட்டார்,
  மாண்ட கணவன் நினைவிலவன்
  மண்ணில் தனியே வாழ்கின்றாள்,
  கூண்டுக் கிளியாய் அவளுந்தான்
  கிராம மதிலே தங்கிவிட்டாள்,
  வேண்டி வளர்க்கும் வெள்ளாடே
  உற்ற துணைதான் பாட்டிக்கே…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. வேண்டாம் ஐந்தறிவு

  முதுகு வளைந்தொடிந்து
  முன்னர் நான் சேர்த்த உறவெல்லாம்
  முதுமை நான் அடைந்த போது
  முகில்களாய் கலைந்தது

  கடைசி வரை கைவிடேன் எனக்
  கயிறு கட்டியவன்
  வயிறெல்லாம் புண்ணாக
  மதுக்கடை வாசலிலே
  மாய்ந்து போனான்

  வியர்த்து உழைத்து
  சேமித்த காசை எல்லாம்
  கடன்கார கணவனின்
  கண்ணீர் கதை சொல்லி
  ஆசை மகள் வந்து அழுதபடி
  அள்ளிப் போனாள்

  ஒற்றை மகனவன்
  உட்கார வைத்து
  உணவளிப்பான் என
  நான் உற்ற கனவெல்லாம்
  அவன்
  பட்டணத்துக்காரி கைப் பிடித்து
  மெத்தை வீடு சென்று
  மேல் பார்வை பார்த்தபோது
  சூரைத் தேங்காயாய்
  சிதறித் தெறித்தது

  இத்தனைக்கும் நடுவில்
  எதனையும் எதிர்பாரா
  உன் அன்பு மட்டுமே
  என் உயிர் துணையாய் இருக்கிறது

  ஓரறிவு படைத்த
  உங்களைப்போல்
  நாங்களும் இருந்திருந்தால்
  உலகம் நலமாய் இருந்திருக்கும்

  ஆறரிவு படைத்ததனால்
  அன்புப் பாசம்
  அனைத்தையும் இழந்து
  அல்லலில் தவிக்கிறோம்

  அடுத்தப் பிறவி ஒன்றிருந்தால்
  ஏ ஆட்டுக் குட்டியே
  நீயாகவே நான் பிறக்க வேண்டும்!

 6.  மலரும் முன்னே
  கருகும் மொட்டுகள்
  பொழுது புலரும் முன்னே
  தொலையும் விடியல்கள்
   கல்தோன்றும் முன்னே
  வாளொடு முன்தோன்றிய குடியில்
  பண்பாட்டுச் சிதறல்கள்
   தாம்பத்ய விளைநிலங்களில்
  அமிலமழைப் பாய்ச்சலால்
  தரிசாய்ப்போகும் மாற்றங்கள்
   இமயமாய் உயா்ந்து நிற்கும்
  அச்சிட்ட வெற்றுக் காகிதங்கள்
  வெற்றுக் காகிதத்திற்கும்
  இணையாகாத மனிதஉயிர்கள்
   அன்றாடச் செய்திகளில்
  அலறித் தான் போகிறது நெஞ்சம்
  ஆனாலும்
  அஃறிணைக்கும் பகிர்ந்தளிக்கும்
  இந்தத் தாயின் கண்கள் வழி….
  மனிதநேயம் உலகில்
  இன்னமும் மிச்சமிருக்கிறது கொஞ்சம்……..
  முனைவா் பா.பொன்னி
  தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்
  எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி( தன்னாட்சி )
  சிவகாசி

 7. பத்துப் பிள்ளை பெற்றவள் நான்
  சொத்தை யெல்லாம் பிரிச்சுகிட்டு
  ஒத்தையிலே நிற்க வைச்சுட்டு
  ஊரை விட்டேப் பிள்ளைகள்போனாலும்
  யாரை நம்பி நான் பிறந்தேன்னு
  நம்பிக்கையைத் துணை கொண்டு
  நம்பி வந்த உன்னையும் சேர்த்துகிட்டேன்
  பாடுபட்ட பொருட்களைகொண்டு போனாலும்
  வாடாத தாய்க்கு சேயாக நீ வந்தாய்
  உடலிலே எனக்கு வலு இருக்கு
  உழைச்சுப் பிழைக்கத் தெம்பிருக்கு
  எங்கேயும் நடப்பு இது தெளிவுஅது
  அங்கிருந்து ஆட்டுகிறவன் நாடகமிது
  நாம வந்த விதிப்பயனுக்கு
  சாபம் விடற தாயல்ல நான்
  திக்கற்றவளுக்கு ஊன்று கோலாய் நீ
  தெய்வ வாக்கை ஏற்றுக்கொண்டுவாழ்கிறேன்
  ஆடு நீ ஆடென்றாலும் ஓடுவாய் ரொம்ப தூரம்
  வாழ்க்கைஇனி உன்னுடன் இது போகும் ரொம்ப காலம்
  சரஸ்வதி ராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *