Blog

  • குறளின் கதிர்களாய்…(117)

    –செண்பக ஜெகதீசன்

    ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (திருக்குறள்-155: பொறையுடைமை) 

    புதுக் கவிதையில்…

    தீங்கு செய்தவர்க்குத்
    தண்டனை கொடுத்தவரைத்
    தனியாகக் கண்டுகொள்ளாத உலகம்,
    தீங்கதனைப் பொறுத்துக்கொண்டு

    தண்டிக்காதவரைக்
    கண்டுகொண்டு, அவரைப்
    பொன்போலப் போற்றிப் பாதுகாக்கும்…! 

    குறும்பாவில்…

    தண்டனை கொடுப்போரைக் கண்டுகொள்ளாமல்,
    பொறுமையுடையோரைப் பார்த்து

    பொன்போலப் பாதுகாப்பர் புவிமாந்தர்! 

     மரபுக் கவிதையில்…

    தனக்குத் தீங்கு செய்வோர்க்குத்
         -தண்டனை கொடுக்கும் மனிதனைத்தான்
    மனதில் கொள்ளா உலகமாந்தர்,
         -மன்னித் தவரை ஒறுக்காத

    மனமதில் பொறுமை கொண்டோரை,
         -மண்ணில் உயர்ந்த பொன்போல

    இனிதாய்ப் போற்றி இவர்வாழ
         -என்றும் துணையாய் இருப்பாரே…! 

    லிமரைக்கூ…

    தண்டனையுண்டு செய்தால் தீங்கு,
    மன்னித்திடும் பொறையுடையோரை உலகோர்

    பொன்போலப் போற்றுவர் ஆங்கு! 

    கிராமிய பாணியில்…

    வேணும்வேணும் பொறுமவேணும்
    ஒவ்வொருவருக்கும் பொறுமவேணும்,
    வேதனவந்தாலும் பொறுமவேணும்

    ஒலகம்வாழ்த்தப் பொறுமவேணும்… 

    தீமசெஞ்ச மனுசனுக்குத்
    தண்டனகுடுக்கறது பெருசில்ல,
    அதக்

    கண்டுக்காது ஒலகமுமே… 

    தீமதனக்குச் செய்தவனயும்
    தண்டிக்காம மன்னிக்கிற
    பொறுமயான மனுசனத்தான்
    பொன்னப்போலப் பாதுகாத்து
    பொகழுமிந்த ஒலகமெல்லாம்… 

    அதால,
    வேணும்வேணும் பொறுமவேணும்

    ஒவ்வொருவருக்கும் பொறுமவேணும்,
    வேதனவந்தாலும் பொறுமவேணும்

    ஒலகம்வாழ்த்தப் பொறுமவேணும்!

     

     

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே [ 26]

    இன்னம்பூரான்
    ஏப்ரல் 16 ,2016
    innam

    கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஆளவந்தார் கொலை வழக்கு நாள்தோறும் தடபுடலாக, ஊடகங்களில் உலா வந்தபடி இருக்கும். கட்டுப்பெட்டி பெண்ணரசிகளும் கட்டுக்கடங்கா ஆண்வர்க்கமும் விழுந்தடித்துப் படிப்பார்கள். அவர்கள் சற்றே அசந்தால் போதும். நாங்களும் ஒரு கண்ணோட்டம் விடுவோம். வகுப்பில், அக்கு வேறு, ஆணி வேறாக அலசுவோம். ஒரு குறுக்கு விசாரணை:

    எதிர்த்தரப்பு வக்கீல்: ஆளவந்தாரும் தேவகியும் கட்டியணைத்து அந்தரங்கமாக இருந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எந்த ஜன்னல்?

    சாட்சி: குளியலறை ஜன்னல்.

    எ.வ: உங்கள் மூக்குக்கண்ணாடி சோடாபாட்டில் கண்ணாடியாக இருக்கிறதே. அதை போட்டுக்கொண்டு தான் பார்த்தீர்களா?

    சா: ஆமாம்.

    எ.வ. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

    சா. குளித்துக்கொண்டிருந்தேன்.

    எ.வ. ஓஹோ! கண்ணாடி போட்டுக்கொண்டுதான் குளிப்பீர்களோ?

    சா. உம்………

    எ.வ. குறுக்கு விசாரணை முடிந்து விட்டது, கனம் கோர்ட்டார் அவர்களே!
    [சாக்ஷியம் குப்பையிலே.]

    அதை நினைவூட்டும் வகையில் ஒரு அரசியல் கொலையைப் பற்றிய ஒரு கொலை வழக்கு ஏப்ரல் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. டாக்டர் ஶ்ரீதர் என்ற பிஜேபி திருச்சி பிரமுகரை, ஒரு மதவெறி கும்பல் பெப்ரவரி 2, 1999 அன்று இரவு பத்து மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவருடைய கூக்குரலை கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்த அவருடைய மகள் இதைக் கண்ணால் கண்டாள். அவளது நேர்முக சாட்சியத்தில் ஓட்டை கண்டுபிடிக்க, அவர் அந்த மங்கலான ஒளியில் இதைக் கண்டு இருக்கமுடியாது என்று குற்றம் சாற்றப்பட்டவர்களின் வக்கீல்கள் செய்த சாகசங்களை இப்போதைக்கு விடுவோம். தெரு விளக்கும், மற்ற விளக்குகளும் நல்ல வெளிச்சம் போட்டதால், அவரால் தன் தந்தையின் கொலைகாரர்களை காணமுடிந்தது என்பதில் ஐயமில்லை என்று உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பு. இந்த மாபெரும் இயல்பு – உண்மையைக் கண்டுபிடிக்க, அடித்தள கோர்ட்டார் மூன்று வருடங்களும், உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களும், உச்சநீதிமன்றம் எட்டு வருடங்களும் எடுத்துக்கொண்டன.

    தெரு விளக்கு வெளிச்சத்தில் வெளிச்சம் காண 16 வருடங்கள்!

    ஹூம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://www.thebigstorage.com/images/ebay/sa/E59383.jpg

    இன்னம்பூரான்

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 59-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. சாமினி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு வல்லமையின் நன்றி!

    a lady near the tides

     

    அலையெறியும் கடற்கரையோரம் நின்றிருக்கும் இந்த ஆரணங்கின் மனத்தில் பொங்கிவரும் எண்ண அலைகள் சுமந்துவருபவை துன்ப நினைவுகளா? இல்லை இன்பக் கனவுகளா?

    ஏந்திழையின் எண்ணங்களை எழுத்தில் படம்பிடிக்கும் வேலையை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்! நமக்குத் தொழில் அவர்தம் கவிதைகளை இரசிப்பது மட்டுமே!

    ***

    வெளிநாட்டில் வேலைசெய்யும் கொழுநனின் நினைவோடு குலக்கொடியாள் தவித்திருக்க, அவள் தனிமைத்துயரை அவன் காதில்போடவே இந்த அலைகள் இவ்வாறு ஆர்ப்பரித்து ஓடுகின்றன என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நீலக் கடலின் அலையெல்லாம்
    நேரில் வந்து சேதிசொல்லும்,
    வேலை செய்யும் வெளிநாட்டில்
    விரும்பிச் சென்ற கணவன்நிலை,
    கோல மயிலிவள் தனிமைத்துயர்க்
    கண்ணீர் துடைக்க வந்ததுபோல்
    ஓல மிட்டே அழுதுமீண்டும்
    ஓடிச் செல்லும் அவனிடமே…!

    ***

    ”கைம்மாறு கருதாமல் கருங்கல்லைக் கட்டியணைக்கும் இந்தக் கடலலையானது நம்பிக்கை நீர்தெளிக்க, சுற்றத்தின் அருமையை முற்றாய் உணர்கின்றாள் இந்த மாது” என்று மொழிகின்றார் திருமிகு. ஹிஷாலி.

    விண்ணில் தெறிக்கும்
    சூரியன் வரவில்
    செலவானது எனது
    காலைக் கடன்
    கருணையுடன் முடித்து வைத்த
    உணவுத்துறை
    எழுச்சி முகமாய் தொடரும்
    கல்விப் பணி
    மாமியார் மருமகள்
    கூட்டு முயற்சி
    மாமனாரின் சமூகப் புரட்சி
    அலுவலகப் பட்டி மன்றம்
    ஆண் ஆதிக்கத்திலும் சிறு
    அகிம்சை அன்பு
    இதெல்லாம் முடித்தப் பின்
    ஈவு மீதிக்கு எடுத்துச்
    சென்றது …
    மாலை நேர சுற்றுப் பயணம்
    மதிமயக்கும் மல்லிகை வாசம்
    சுட்டெரிக்கும் மணல் மேடு
    கைம்மாறு கருதாமல்
    கருங்கல்லைக் கட்டி அணைக்கும்
    கடல் அலை
    தும்பிக்கையாய் மாறி
    நம்பிக்கை நீர்தெளிக்க
    சுற்றத்தைவிட இன்பம்
    வேறில்லை என்று
    ஐயம் தெளிந்து
    புன்னகைத்தாள்!

    ***

    புத்திரனைப் பறிகொடுத்துச் சித்தம் குலைந்திட்ட சித்திரப்பாவையின் சோகத்தைத் தன் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    என் பாலனை ஈவிரக்கமின்றி
    ”””’
    விழுங்கிய கடலே
    என்னையும் விழுங்க மாட்டாயா
    ””””
    என்னையும் பயமுறுத்துகிறாயா
    எத்தியெறியும்அலையே அறிவாயா
    ””””
    புத்திரசோகம் எப்டியென்பதை
    சமீபத்தில் விவேக் அன்று
    ”””””
    சக்கரவர்த்தி தசரதன்!

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம் இனி! 

    வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?

    சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…

    அமுதென்று நினைத்து
    நஞ்சை அருந்தினேன்
    மலரென்று எண்ணி
    முட்களைச் சூடினேன்
    ஆசை அழைத்த வழி சென்றேன்
    நேசமுடன் பேசிய காதலன்
    பாதி வழியில் விட்டுப்போனான்
    பாழும் மனது குழம்பி, புலம்பிப்
    பல நேரங்களில் சஞ்சலித்தது
    என் காதல் ஜெயிக்காமல்
    போனதற்குக் காரணம் இறைவா நீ
    இதோஇந்த அலைகள் ஓடிவந்து
    பாறையில் மோதிச் சிதறியதுபோல்
    என் ஆசைகளும் சிதறிப்போயின…
    கடற்கரையில் ஆரம்பித்த காதல்
    கடற்கரையிலேயே கரைந்துபோனது
    ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
    நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
    கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று!

    கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

     ***

    தரைமேல் பிறக்கவைத்த இறைவன் மீனவரைத் தண்ணீரில் பிழைக்க வைக்கின்றான். அவ்வாறு தண்ணீரில் பிழைக்கச்செல்லும் நம் இந்திய மீனவர், இலங்கைப் படையால் அடையும் கொடுமைகள் சொல்லி மாளா! சொல்லில் அடங்கா!

    மீன்பிடிக்கச் சென்ற தன் காதற்கணவன் உயிரோடு மீள்வானா? இல்லை இலங்கைப் படையால் மாள்வானா? எனப் பரிதவிக்கும் பாவையின் ஏக்கத்தைச் சுமந்துவரும் கவிதையொன்று நம் கவனம் கவர்கின்றது. 

    நீலக்கடல்தான்……எம்
    கண்ணீர்த் துளிகளை விழுங்கிய
    நீலக்கடல் தான்…..

    கரையோரம் தவிக்கவிட்டுக்
    கட்டுமரமேறி மீன்பிடிக்கச் சென்றவன்
    கரைக்கு மீண்டுவருவானோ…இல்லை
    கட்டுமரமிழந்து கயவர் வலையறுககக்
    கைதாகிக் கண்ணீர்விட்டுக்கதறச்
    சிறைக்குள் அடைபட்டிருப்பானோ….

    சென்றவன் நடுக்கடலில்
    சிறீலங்காக் குண்டடிபட்டு
    செத்தவனாய் வருவானோ…
    சிறுபேதை என்செய்வேன்…

    வேதனைகள் தீர்க்கவும்
    விரைந்து தீர்வைச் சேர்க்கவும்
    யாரிங்கு வருவாரோ….
    ஆறுதல் தான் தருவாரோ…..

    கரைமேல் தவிக்கவும்
    கண்ணீரில் குளிக்கவும்
    நிலையாய் விதியெனவே
    நீலக்கடல் படைத்ததுவோ….

    கரையோரம் நிற்கும்
    கதியற்ற பெண்ணுக்கு
    கடல்தந்த பாடம் சீற்றந்தான்..
    கடலலையின் சீற்றமல்ல….
    கண்ணீர் அலைகளின் சீற்றந்தான்! 

    திரு. இளவல் ஹரிஹரனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!      

     

     

     

    Share
  • திருக்குறளில் மனித வாழ்வியல் கூறுகள்

    — க. பிரகாஷ்.

    குறள்திருக்குறள் நீதி நூலாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கும், 21 ம் நூற்றாண்டிலுள்ள புதிய தலை முறையினருக்கும் வழிகாட்டும் ஒரு அறநூலாகும். வள்ளுவத்தின் மேன்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லை கடந்த மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அளவிற்குச் சிறந்து விளங்குகிறது.

    வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இனி வரும் தலைமுறையினருக்கும் பொருந்தும் படியாக மனிதனுக்கு வாழச்சொல்லிக் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை விளக்குகிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்க்கையின் அறநெறி சாராம்சத்தையும் பதிவு செய்கின்றது.

    ”இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான்கும்
    முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்
    குள்ள அரிதென்றவை வள்ளுவர் உலகம்
    கொள்ள மொழிந்தார் குறள்”. (நரிவெரூஉத்தலையார்)

    இன்பம் பொருள் வீடு என்னும் இந்நான்கும் மன் பதைகட்கும் முன்பு அறியச் சொன்ன முது மொழிநூல் உள்ள அரிது என்று இன்பம் முதலி இந்நாற்பொருள் இயல்புகளையும் மக்கள் பரப்புக்கு அக்காலத்தில் அறியும் வண்ணம் சொல்லப்பட்ட பழமொழி வேதமானது ஓதி உணரப்படுதற்கு அரிது என்று, வள்ளுவர் அவை உலகம் கொள்ள குறள் மொழிந்தார். மனித வாழ்க்கை தலைசிறந்த அறமாக விளங்கும் அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறியவைத்துப் பயனுடைய வாழ்க்கையை வாழ வள்ளுவம் நன்கு வழி காட்டுகிறது.

    அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் நல்லறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.

    ஆன்மீக அறம்:
    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு” – (குறள் – 1)

    கடவுளை அறிவு, ஆற்றல் அப்பாற்பட்ட நிலை என்னும் கருதுகோள் நிலையில் வைத்து மனித பெருமைக்கும், சமுதாய அமைதிக்கும் வள்ளுவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார். “உலகு“ என நினைவூட்டி உலகளாவிய நோக்கத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தைத் தந்துள்ளது.

    வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை ஆனால் அது பேரறிவு, வாய்மையான அறிவு, குணங்களின் திருவுரு, இன்பத்தின் திருவுரு, அன்பின் திருவுரு, அறத்தின் அடையாளம் என்று கருதப்படுகிறது.

    ஈதல் அறம்:
    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
    ஊதியம் இல்லை உயிர்க்கு”

    மனிதப் பண்பை உணர்த்தும் ஒரு நெறி ஈதல் அறமாகும். ஈகை என்பது பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம்.அவ்வாறு கொடுத்துதவும் போது மனிதன் பக்குவம் அடைந்தவனாகி விடுகிறான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும் ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளுவர் ஈகை குணமே உயிரின் ஊதியம் என்பர். கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது.

    காதல் அறம்:
    காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண் – பெண் உறவுகளையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர் உறவுநிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி அன்பெனும் நெறிக்குள் மனங்களின் சங்க மருததிற்குள், மாசுபடாத வாழ்வியல் படி நிலையை வடித்துத் தந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி மனிதம் அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவா் தந்துள்ளார்.

    இல்வாழ்க்கை:
    “பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் – 44)

    பழி அஞ்சிப் பார்த்து ஊண் உடைத்தாயின் ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்ததற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

    அன்பும் அறனும்:
    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” (குறள் – 45)

    இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்தப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன் விளைவுமாகும்.

    கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும், அறம் பயனும் இல்வாழ்க்கை உரித்தே ஆகும்.

    இல்லவள் மாணாக் கடை:
    “இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை? (குறள் -53)”

    இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

    அடக்கமுடைமையின் சிறப்பு:
    “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை” (குறள் – 132)

    ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும் பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதையும் வாழ்க்கை நெறிமுறைகளையும், வாழ்வியல் கூறுகளையும் வழுவாகவும், செழுமையாகவும், செதுக்கியுள்ளார் திருவள்ளுவர்.

    பார்வை நூல்கள்:
    1. திருக்குறள் – வள்ளுவர் கண்ட தத்துவம் – தெ.பொ.மீ.
    2. திருக்குறள் – தமிழ் மரபுரை – ஞா.தேவநேயப் பாவாணர்
    3. மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் – ப.மருதநாயகம்
    4. புதிய நோக்கில் திருக்குறள் பாயிரம் – எஸ்.முத்துகிருஷ்ணன்

    _____________________________________

    க. பிரகாஷ் எம்.ஏ, எம்ஃபில்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்ப கள ஆய்வு பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

    Share
  • சட்டத்தின் உரிமை மீறல்

    — சு.காந்திமதி.

    சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அது மட்டும் அல்ல மதம், இனம், மொழி, தேசியம், மற்றும் பாலியல் ரீதியாக எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் எல்லா இடங்களிலும் மனித உரிமை கிடைக்கப் பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தனி மனிதர் ஒருவருக்குப் பிரச்சனை என வந்தால் நாம் எல்லோரும் விலகி ஓடுகிறோம். வீட்டில் நிம்மதியாகக் கூட உறங்க முடிவதில்லை.

    பொதுவாகக் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் திருவிழாக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் சூழ்நிலை தவறி சண்டை சச்சரவுகள் வந்து விடுகின்றது. இதில் சிலரது கோபத்தினாலும் சூழ்ச்சியினாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்படப் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதில் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத அப்பாவிகள் வீட்டில் இருந்தாலும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி பொது மக்களையும் பிரச்சனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் சூழ்நிலையும் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. சூழ்நிலையும், அக்கம் பக்கத்தினர் கூறுவதையும் மதிக்காமல் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இதனால் பொது மக்கள் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது சட்டத்தின் உரிமை மீறல் தானே!

    ____________________________________________

    சு.காந்திமதி
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், காந்திகிராமம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    b1bd6b1b-a076-4812-9c8c-be000dc0a48c

    “புத்தருக்கு போதிமரம் ,கர்த்தர் மரம்சிலுவை
    அத்தன் சிவபிரானுக்(கு) ஆலமரம்; -சத்வ
    விசுவரூப கண்ணனுக்கு வாத்ஸல்யம் என்றும்
    பசுமரத்தைப் பற்றும் பரிவு”….கிரேசி மோகன்….

    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் — 8

    — சி. ஜெயபாரதன்.

     

    நைல் நதி நாகரீகம்-8

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZoevycJ1bbY

    https://youtu.be/0bRWBwP1KcQ

    https://youtu.be/xDgkHd670PU

    ‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘

    கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]

    ‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று ? ‘

    ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)

    Egyptian Pyramid inside

    Egyptian Mathematics [Solid Geometry] -3

    ‘உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா ? மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லா வற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது! கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின் களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது!

    லியனார்டோ டவின்ஸி

    Egyptian Mathematics -1

    Egyptian Mathematics -3

    Egyptian Pyramid building -2

    ‘எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை! அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை! பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். ‘

    பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]

    முன்னுரை: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.

    Egyptian Measurements

    எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

    Egyptian phonograms

    எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை

    4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!

    Egyptian Pyramid building -1

    எகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்

    விஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான ‘ஆல்கெமி ‘ [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

    Egyptian Pyramid building

    தற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:

    எண்: 1 …. ஒற்றைக் கோடு

    எண்: 10 …. ஒரு லாடம்

    எண்: 100 …. C எழுத்து போல் ஒரு சுருள்

    எண்: 1000 …. தாமரை மொட்டு

    எண்: 10,000 …. ஒரு விரல்

    எண்: 100,000 …. ஒரு தவளை

    எண்: 1000,000 …. கை உயர்த்திய ஒரு கடவுள்

    Egyptian Pyramid Symbols

    எகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள்

    4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.

    Egyptian Shopping Guide

    முதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.

    Fig History on the Wall

    இரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7

    Fig Calendar

    கூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு

    கிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.

    பிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

    Fig Stone Levelling

    Social Pyramid

    மாபெரும் கீஸா பிரமிடில் மகத்தானக் கணிதக் கண்டுபிடிப்புகள்

    ஃபாரோ மன்னன் கூஃபூ [King Khufu] எழுப்பிய பிரமிட்தான் எல்லாவற்றிலும் பெரியது; உலகத்தின் ஏழு விந்தைகளில் ஒன்றாகப் பாராட்டப் படுவது. அந்த கற்பாறைக் கூம்பகம் மிகத் துல்லியமான பாறைக் கற்களின் அமைப்புகளால் உருவாக்கப் பட்டது. அதன் பீடத்தளச் சதுரப் பக்கம் 230 மீடர். நான்கு பக்கங்களின் மட்டநிலை நீளம் ஒன்றுக் கொன்று 20 செ.மீ. வேறுபாட்டில் உள்ளதென்றால், கட்டடக் கலை வல்லுநரின் நுணுக்க ஆற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியாது! உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன்! பாறைக் கற்கள் நுணுக்கமாகச் செதுக்கப் பட்டு அமைக்கப்பட்ட அவ்வடுக்கின் ஊடே ஒரு மெல்லிய இழைத் தகடு கூடச் செலுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது!

    Section of Pyramid

    கீஸா பிரமிடில் உள்ளதாக அறியப்படும் கணித மகத்துவங்கள்

    1. பிரமிடின் பீடச் சுற்றளவு: 230×4=920 மீடர். எகிப்தியர் முழங்கை [cubit measure: 40 செ.மீ] அளவுக்கு

    920/40= வருவது சுமார்: 365! அதாவது ஓராண்டின் நாட்கள் [ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிப்பிடப் பிரமிட் நீளம்: 230 மீடர் [230/40= 575] அதாவது 575 முழங்கை அளவு திட்டமிடப் பட்டது.

    2. பிரமிட் பீடச் சுற்றளவை 230×4=920, இரட்டை உயரத்தால் [2×150] வகுத்தால் வருவது வட்ட நிலை இலக்கம் பையின் [Pi] மதிப்பு= 3.14 வருகிறது.

    3. பிரமிடின் உயரத்தை 10^9 [10 to the power of 9] எண்ணால் பெருக்கினால், சுமார் பூமிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம் கிடைக்கிறது.

    4. பிரமிட் எடையைப் 10^15 எண்ணால் பெருக்கினால், பூமியின் சுமாரான எடை வருகிறது.

    5. பிரமிட் உள்ளே அமைக்கப்பட்ட மன்னர் அடக்க மாளிகைகள் பித்தகோரியன் முக்கோணங்களான, [3-4-5] அல்லது [2-5-3] ஆகிய கணித விதியில் ஆக்கப் பட்டுள்ளன.

    சில ஐரோப்பிய வல்லுநர்கள் இந்தப் பொருத்தங்களில் [3], [4] கூற்றுக்களை எகிப்தியர், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம், பூமியின் எடை ஆகியவற்றை யூகித்துப் பிரமிடைக் கட்டி யிருக்கிறார் என்று பூரணமாக நம்புவதில்லை!

    Spynx Head 1

    (தொடரும்)

    தகவல்:

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

    10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

    11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

    12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

    13 Egyptian Art & Paintings [Several Websites]

    14 Egypt: Art & Architecture [Several Websites]

    15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

    16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

    17 Egyptian Dancers [From Websites].

    18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

    19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

    20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

    21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

    22 Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)

    23 History Topic: An Overview of Egyptian Mathematics.

    24 The Ancient Egyptian Number Sytem By: Caroline Seawright (March 19, 2001)

    25. http://discoveringegypt.com/egyptian-hieroglyphic-writing/egyptian-mathematics-numbers-hieroglyphs/

    26. http://www-groups.dcs.st-and.ac.uk/history/HistTopics/Egyptian_numerals.html

    27. https://en.wikipedia.org/wiki/Egyptian_numerals [March 14, 2016]

    ****

    S. Jayabarathan [jayabarathans@gmail.com (April 15, 2016)] [R-1]

    Share
  • தோழா…….விமர்சனம்! (திரை)

    சுரேஜமீ

    as
    எப்படி இருக்கீங்க?

    இந்த ஒரு சொல் நம் இதயத்தைச் சட்டெனத் தொட்டுவிடும் அன்பின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஏதோ காரணங்களால், இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோமோ என ஏங்கும் நேரத்தில்,

    அந்த ஒரு சொல்லை வைத்து, தொலைத்த இடத்தில் நம்மைத் தேட வைத்திருக்கிறார் இயக்குனர் வசி அவர்கள்!

    மாற்றான் தோட்டத்து மல்லிகையானாலும் (The Intouchables), கதையின் கருவை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை நம்முடையதன்றோ!

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதன் வலிமையைப் பறைசாற்றிய இந்த மண்ணிற்கு,

    மீட்டு எடுத்துவந்து, வாழ்க்கையின் அவசியம் பணமல்ல; மாறாக மனதைப் புரிந்து கொள்ளும் ஒரு புனிதமான உறவுதான் என்பதைத் தெளிவாகக் காட்சிகளில் மட்டுமல்லாமல், வார்த்தைகளிலும் பதிவு செய்த இயக்குனருக்கு பாரட்டுக்கள்!

    மிக நேர்த்தியான மற்றும் இயல்பான நடிப்பால் தன் பாத்திரங்களைக் கையாண்ட நாகார்ஜுனா, கார்த்திக் மற்றும் தமனாவிற்கு வாழ்த்துக்கள்!

    காதலுக்குத் தேவை காணும் கவர்ச்சி அல்ல; கண்ணில் துளி நீர் வந்தாலும், அதன் வலியைப் புரிந்து கொள்ளும் மனம்தான் என்ற புரிதலை வலியுறித்திய வசனங்கள்

    காதலை மேன்மைபடுத்தி இருக்கிறது!

    அடுத்து ஒரு நிகழ்வு, ஒரு மனிதனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயம் ஒரு தடவையாவது வந்து செல்வதுதான் வாழ்க்கை. ஆனால், அந்த நிலையிலிருந்து மீள, நமக்குத் தேவை ஒரு நல்ல துணை!

    அதையும் வள்ளுவர் அழகாகச் சொல்லுவார்…

    கேட்டினும் உண்டோர் உறுதி…..என்று!

    அத்தகைய நட்பிற்கு அடையாளமாக ஒரு பாத்திரத்தை அமைத்து, அதற்கு நேர்த்தியாக நடிகர்களைத் தெரிவு செய்து,

    இந்த வேகமான வாழ்வில், தொலைந்து போன நட்பிற்கு ஒரு இலக்கணத்தை மீட்டு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்! மொத்தத்தில் வழிதவறும் வாழ்கைக்கு எது தேவை என்பதையும்;
    சில மணிநேர மகிழ்ச்சிக்குத் தேவையான காட்சி அமைப்பையும்,
    பொழுதுபோக்கிற்கு ஏற்ற பாடல் காட்சிகளையும்,

    எல்லை மீறாமல் எண்ண ஓட்டத்தைப் பதிவு செய்த மொத்த படக் குழுவிற்கும் வாழ்த்துச் சொல்ல

    ஒவ்வொரு ரசிகனும், ரசிகையும் தவற மாட்டார்கள்!

    இதுதான் ‘தோழா’வின் வெற்றி!

    அவசியம் பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய ஒரு நல்ல ப(பா)டம்!

    – சுரேஜமீ

    Share
  • முடங்கிப்போகும் கண்டுபிடிப்புகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்திய இளைய சமுதாயத்தினரிடையே இன்று அறிவியல் திறன் பெருமளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. சமூக நலன் கருதிய பலவிதமான கண்டுபிடிப்புகள் இன்று பலர் முனைந்து செய்தாலும் பெரும்பாலும் அவைகள் வெளியே வராமலேயே முளையிலேயே கருகிவிடுகின்றன அல்லது குடத்திலிட்ட விளக்காக முடங்கிப்போய்விடுகின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டின் கொங்குச் சரகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவரின் கண்டுபிடிப்பு நம் நாட்டிற்கு மிக முக்கியமானது. தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த இக்காலகட்டத்தில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி, சல்லி வேருக்கு நேரடியாக நீர் பாய்ச்சும் முறை மூலம் அதிக மகசூல் தரக்கூடிய ஒரு விவசாயத்துறை சார்ந்த கண்டுபிடிப்புதான் அது. அந்தப் பெண் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தமது ஆசிரியரின் துணையுடன் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நிரூபித்துக்காட்டினார். ஆனால் நாம் அறிந்த வகையில் அவருக்கு உரிய அங்கீகாரமோ அல்லது அவருடைய ஆய்வுகளுக்குத் துணை நிற்கும்வகையில் மாநில அரசோ, மத்திய அரசோ எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இது போன்று பல இளம் மாணவ விஞ்ஞானிகள் நம் நாட்டிலிருந்தும் அவர்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விசயம். அமெரிக்காவில் இளம் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த வரவேற்பும், ஊக்கமும், உற்சாகமும் வழங்கப்படுவதைக் காணமுடிகிறது. அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா அவர்கள் 100 இளம் விஞ்ஞானிகளை அழைத்து அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அவர்களோடு அளவளாவி அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம் அறிந்து அவர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த 100 பேரில் 13 மாணவர்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. அதில் நீல் தவே என்ற 20 வயது மாணவர் ‘திரவ திசு ஆய்வு’ மூலமாக புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறியக்கூடிய முக்கியமானதொரு கண்டுபிடிப்பை வழங்கியுள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புற்று நோய் மட்டுமன்றி காச நோய் போன்ற கொடிய நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். இதையறிந்த, நாற்பத்தி ஆறு வயதான தன்னுடைய மகன் பியூ என்பவரை புற்று நோயால் இழந்த அமெரிக்கத் துணை குடியரசுத் தலைவர், ஜோ பிடன், அந்த மாணவர் படிக்கும் கல்லூரிக்கு நேரில் சென்று 30 நிமிடங்கள் இருந்து அந்த ஆய்வு பற்றிய தகவல்களைக் கோரிப் பெற்றதோடு அந்த மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுக் கூடம், மற்றும் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருவதாகவும் வாக்களித்துள்ளார். இதையறிந்த ஒபாமா அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த மாணவரை வரவழைத்து இதைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்துகொண்டதோடு குறிப்பிட்ட அந்த ஆய்வை மேலெடுத்துச்செல்ல அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதையெல்லாம் பார்க்கும்போது நம் மாணவர்களுக்கும் இப்படி உயரிய அங்கீகாரம் கிடைத்தால் இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகளைப் பெற முடியும் என்ற ஏக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சமீபத்தில் அமெரிக்காவில் படிக்கும் ஒரு 16 வயது மாணவன், பெங்களூருவில் உள்ள தன் தாத்தா பாட்டியின் சிரமங்களைக் கண்ணுற்று அதைப்போக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு அரிய கண்டுபிடிப்பை வழங்கியுள்ளான். ஆம், முகுந்த் வெங்கடகிருட்டிணன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவன் மிகக் குறைந்த விலையில் (60 அமெரிக்க டாலர்) காது கேளாதோருக்கான கருவியை கண்டுபிடித்திருக்கிறார். இக்கருவி 1500 முதல் 1,900 டாலர் வரை அனாவசிய விலை விற்பதை அவர் சுட்டிக்காட்டி தன் கண்டுபிடிப்பு மூலம் ஏழை எளியவர்களும் பயன்பெறும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இக்கருவிகளை வழங்கப்போவதாகக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் நடுத்தர குடும்பங்களில் ஒருவரின் வருமானம் ஆண்டொன்றிற்கு 616 அமெரிக்க டாலர் மட்டுமே என்ற வகையில் ஒருவர் வருடம் முழுவதும் உழைத்து அதை ஒரு பைசா செலவு செய்யாமல் சேர்த்து வைத்தாலும் காது கேட்கும் கருவியை வாங்க இயலாது.. வளர்ந்து வரும் நாடுகளில் பலருக்கு இது ஒரு ஆடம்பரச் செலவாகவே இருப்பதும் வருந்தத்தக்க விசயம் என்கிறார் இவர்.

    Share
  • ஸ்ரீ இராமர் திருப் புகழ்….

    images

     

     

    ‘ஏறு மயிலேறி விளையாடு முகமொன்று’ திருப்புகழ் மெட்டில்….

    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….கிரேசி மோகன்….

    ஈசன்சிலையாக-ஈசன் அரண்டுபோய் சிலையாக சமைந்திட அவரது ‘’சிலையை’’(சிவ தனுசு-வில்) வளைத்த முகம் ஒன்று….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    d2abf97b-ab64-4450-8e47-6b2ea08d20bc

    “சீதை புகுந்தவூர் சீமந்தம் ஆனவூர்
    பேதை லவகுசாளைப் பெற்றவூர் -காதையில்(ராமாயணக் காதை)
    நாரா யணரே நவமி யிலுதித்த,
    ஊராம் அயோத்தியை உன்னு”….கிரேசி மோகன்….

    உன்னு – நினை….

    Share
  • நன்னர் நெஞ்சம்!

    -மேகலா இராமமூர்த்தி

    பெண்களின் உள்ளம் அன்பு வடிவானது; அருள் நிறைந்தது; எனினும், எல்லாத் தருணங்களிலும் எல்லாரிடத்திலும் அவர்களுக்கு அன்பு பிறந்துவிடும்; அருள் சுரந்துவிடும் என்று உறுதி கூறுவதற்கில்லை. காதலுக்கும் இது பொருந்தும். அதனைப் பின்வரும் நிகழ்வு விளக்குகின்றது.

    குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியின்பால் காதல் கொண்டான். அவளுடைய காதலை விரும்பியவனாய்த் தினந்தோறும் அவள் தன்தோழியுடன் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலுப்பின்றிச் சலிப்பின்றி வந்து, அன்பான மொழிகளை அவளிடம் கூறிநின்றான். அதன்பின்னரும் தலைவின் நெஞ்சம் அவன்பால் திரும்பவில்லை; அவனை விரும்பவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கவனித்துவந்த தோழியின் நெஞ்சமோ அவன்நிலைகண்டு உருகியது.

    இவ்வாறு நாள்தவறாது தலைவியைக்காண வந்துகொண்டிருந்த தலைவனைச் சின்னாட்களாகக் காணவில்லை. அதுகண்டு வருந்திய தோழி, தலைவியை நோக்கி, ”பெண்ணே! ஒருநாளா? இருநாளா? உன்னைக்காண பன்னாள் (பல நாள்கள்) வந்து பணிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறி, உன் காதலையும், கனிவையும் எதிர்பார்த்துநின்றான் தலைவன். அவனுடைய இரங்கத்தக்க செய்கைகண்டு (உனக்கு நன்மையையே எப்போதும் எண்ணுகின்ற) என் நன்னெஞ்சு நெகிழ்ந்தது. இப்போதோ மலைமீது தூங்கும் முற்றிய தேனிறால் கீழேவீழ்ந்து மறைவதைப்போல் அவன் காணாமற்போயினான். நமக்குப் பற்றுக்கோடாய்த் திகழ்ந்த, எந்தையான அவன் எங்குச் சென்றானோ யானறியேன்; அதனால் வேற்றுப்புலத்திலுள்ள நல்லநாட்டில் பெய்தமழை பாய்ந்துவருதலால், நம்புலத்து நீர் கலங்கிப்போதல்போல என்னுள்ளம் கலிழ்கின்றது (கலங்குகின்றது)” என்றாள்.

    ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
    பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
    நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
    வரைமுதிர் தேனிற் போகி யோனே
    ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
    வேறுபுல னன்னாட்டுப் பெய்த
    ஏறுடை மழையிற்  கலிழும்என்
    னெஞ்சே.  (குறு- 176)

    ”ஒருநாளா? இருநாளா? பலநாள் வந்தானே உன்னைத்தேடி; உன் அன்பை நாடி” எனும் தோழியின் மொழிகளில், கஜினி முகம்மதுபோல் அயராதுதொடர்ந்த தலைவனின் விடாமுயற்சிக்காகவாவது நீ அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாகாதா?” எனும் ஆற்றாமை தொனிக்கின்றது.

    இப்பாடலில் கவனிக்கத்தக்க இன்னொரு சொல்லாட்சி ’ஆசாகு எந்தை’ என்பது. ”நமக்குப் பற்றுக்கோடாகிய எந்தை போன்றவன்” என்று தலைவனைத் தோழி அழைக்கிறாளென்றால் அவன்பால் எத்துணைப் பரிவும் பாசமும் அவள் கொண்டிருக்கின்றாள் என்பதனை நாம் உய்த்துணரலாம். தலைவிக்கு எப்போதும் நன்மையையே எண்ணுகின்ற தன் நெஞ்சை ‘நன்னர் நெஞ்சம்” என்று தோழி பெருமிதத்தோடு கூறிக்கொள்வதும் இங்கே கவனிக்கத்தக்கது.

    மலையில் தொங்கிக்கொண்டிருந்த சுவையான தேனடை யாருக்கும் பயனின்றி வீழ்ந்துபோதல்போல், தலைவனின் இனிய காதலும் தலைவியின் காதல் கிடைக்கப்பெறாமையால் பயனற்று அழிந்தது என்பதை இப்பாடலின் உள்ளுறையாகக் கொள்வர்.

    சிறிய பாடலாயினும் ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்தபொருளை இப்பாடலின் ஆசிரியரும் பெண்பாற்புலவருமான வருமுலையாரித்தியார் பொதிந்துவைத்திருப்பது அவருடைய நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகின்றது. இவர் பாடியதாய்ச் சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே கிடைத்திருப்பது நம் தவக்குறைவே!

    இந்தத் தலைவனைப் போன்றே நிதமும் தலைவியைச் சந்திக்கவரும் தலைவனொருவன், தன் வாயால் தன்காதலை வெளியிடத் தயங்கியவனாய் வந்துதிரும்பும் காட்சியைக் கலித்தொகை 37-ஆம் பாடலும் அழகாய்ப் பதிவுசெய்திருக்கின்றது.

    கய மலருண் கண்ணாய் காணாயொருவன்
    வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
    கண்ணியன்
    வில்லன் வருமென்னை நோக்குபு
    முன்னத்திற் காட்டுதல்லது தானுற்ற
    நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்… 
    (கலி- 37)

    பேசும் பொருளடிப்படையில் வேறுபட்டாலும், ஒருமை, இருமை, பன்மை எனும் சொற்களின் கட்டமைப்பில் ஒத்திருக்கும்,

    ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
    பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
    தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ…
    (புறம்-101)

    என்று ஔவையார் அதியனைப் போற்றிப்பாடிய புறநானூற்றுப் பாடலும் இந்தக் குறுந்தொகைப் பாடலோடு ஒப்பிட்டு உவக்கத்தக்கது.

     

     

    Share
  • அனுமன் அறுபது -(ஒரு கவிதை மாலை)

    க.பாலசுப்பிரமணியன்      

     

    இரண்டாம்  பத்து          

    12938256_10206189995525673_3878937499269568556_n            

    வெள்ளை யுள்ளம் கொண்டவனே வேதவித்தே

    பிள்ளை யெந்தன் அஞ்ஞானம் நீக்கிடுவாய்

    வெண்ணையுடை கொண்ட மெய்ஞான மாமேரு

    விரைந்திடுவாய் நகர்ந்திடவே வாழ்க்கைத் தேரே!

     

    அடியாருக்கு அடியவனாய்  ஆனவனே அமரா

    ஆனந்தநிலை தவறா அதிசயனே அனுமந்தா

    அறிவுக்குப் பொருளாய் விளங்கும் ஆஞ்சநேயா

    அன்பும் அருளும் அளிப்பாய் ஆகாயவீரா  !

     

    சமயத்தில் உதவிடும் சஞ்சீவி நீயே

    சரணம் அடைந்தோருக்கு சாரதி நீயே

    சாகாத வரம் கொண்ட சிரஞ்சீவி நீயே

    சரணம் தருவாய் சங்கடம் அகற்றி  !

     

    சொல்லாமல் புரிந்துகொள்ளும் சூட்சுமம் உனக்கு

    சொல்லியும் அறியாத பேதைமை எனக்கு

    செக்கிழுக்கும் மாடாய் சுழலும் வாழ்வை

    சீக்கிரம் மாற்றிவிடு ஸ்ரீராமன் காட்டிவிடு !

     

    இருப்பது எதுவும் போதாத மனமெனக்கு

    இருப்பதுவும் சென்றுவிடும் பயத்தில் தவிப்பு

    இருப்பது என்றும் இறைவன் வழித்துணையே

    இசைவாய் நீயிருக்கும் இறைவன் காலடியே !

     

    கொடியினிலே அமர்ந்தே குருசேத்திரம் கண்டவனே

    கோகுலனின் தேரமர்ந்து குலம்காக்க அருளியவனே

    கோடியுள்ளம் தேடிவரும் குறைசொல்ல நாடிவரும்

    கோமகனே!  குறையில்லா வானரனே ! வாழ்த்திடுவாய் !

     

    கணையாழி கொண்டுவந்து கவலைகள் தீர்த்தவனே

    கலையாத மனம்கொண்டு கடமைகள் செய்தவனே

    கடல்மீது கால்நடக்கப் பாலங்கள் படைத்தவனே

    காமத்தை வென்று நாமத்தில் நெகிழ்ந்தவனே !

     

    தூதனுக்கு இலக்கணம் இலங்கயில் படைத்தாய்

    தூற்றாமல் நல்லறிவைத் துணிந்தே சொன்னாய் !

    தூங்காத விழிகொண்டு துயர்தீர்க்கும் தூயவனே

    தூயமனத்திற்குத்  துணை நிற்கும் பேரொளியே !

     

    நீருண்ட மேகமென வானில் நீபறக்க

    நிழலுண்ட நீர்த்துளிகள் உன்னைத் துதிக்க

    வானின்ற வேதவரும் எழில்கண்டு வியக்க

    நானறிந்த ஐம்பொறியின் சாரதியே சரணம் !

     

    ஊழ்வினைகள் உனைநினைத்தால் ஓடி விடும்

    நிகழ்வினைகள் உன்னருளால் அமைதி பெரும்

    வருவினைகள் விதியறிந்து வளம் பெருக்கும்

    மூவுலகும் போற்றிவிடும்  மூப்பறியா மாமருந்தே !

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • ஸ்ரீ ராமநவமி ….

    rkuaf_273514
    ——————————————
    தீதண்டும் நேரத்தில் கோதண்டம் கொள்வோனை
    வா!தெண்ட னிட்டின்று வாழ்த்துவோம் -தூதன்தன்
    தோளிருந்து ராவணணை துண்டித்த ராகவனின்
    தாளிரெண்டைக் கொள்வோம் துணை….(1)

    கவிமழை கம்பன் உவமையில் கண்ட
    நவமிக்கு நாயகன் நாளை -அவனிக்கு
    வந்த தினத்தில் வணங்கித் துதித்திட
    முந்தை வினைக்கு முழுக்கு….(2)

    சொல்லொன்று, இல்லொன்று, வில்லம்பு ஒன்றென்று,
    செல்லென்றும் பெற்றோர்கள் சொன்னபடி -முள்ளென்றும்
    கல்லென்றும் பாராமல் கானில் நடந்தவனை
    உள்ளொன்றிப் பின்தொடர்ந்து உய்….(3)….

    Share