தலையங்கம்

முடங்கிப்போகும் கண்டுபிடிப்புகள்!

பவள சங்கரி

தலையங்கம்

இந்திய இளைய சமுதாயத்தினரிடையே இன்று அறிவியல் திறன் பெருமளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. சமூக நலன் கருதிய பலவிதமான கண்டுபிடிப்புகள் இன்று பலர் முனைந்து செய்தாலும் பெரும்பாலும் அவைகள் வெளியே வராமலேயே முளையிலேயே கருகிவிடுகின்றன அல்லது குடத்திலிட்ட விளக்காக முடங்கிப்போய்விடுகின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டின் கொங்குச் சரகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவரின் கண்டுபிடிப்பு நம் நாட்டிற்கு மிக முக்கியமானது. தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த இக்காலகட்டத்தில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி, சல்லி வேருக்கு நேரடியாக நீர் பாய்ச்சும் முறை மூலம் அதிக மகசூல் தரக்கூடிய ஒரு விவசாயத்துறை சார்ந்த கண்டுபிடிப்புதான் அது. அந்தப் பெண் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தமது ஆசிரியரின் துணையுடன் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நிரூபித்துக்காட்டினார். ஆனால் நாம் அறிந்த வகையில் அவருக்கு உரிய அங்கீகாரமோ அல்லது அவருடைய ஆய்வுகளுக்குத் துணை நிற்கும்வகையில் மாநில அரசோ, மத்திய அரசோ எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இது போன்று பல இளம் மாணவ விஞ்ஞானிகள் நம் நாட்டிலிருந்தும் அவர்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விசயம். அமெரிக்காவில் இளம் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த வரவேற்பும், ஊக்கமும், உற்சாகமும் வழங்கப்படுவதைக் காணமுடிகிறது. அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா அவர்கள் 100 இளம் விஞ்ஞானிகளை அழைத்து அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அவர்களோடு அளவளாவி அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம் அறிந்து அவர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த 100 பேரில் 13 மாணவர்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. அதில் நீல் தவே என்ற 20 வயது மாணவர் ‘திரவ திசு ஆய்வு’ மூலமாக புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறியக்கூடிய முக்கியமானதொரு கண்டுபிடிப்பை வழங்கியுள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலமாக புற்று நோய் மட்டுமன்றி காச நோய் போன்ற கொடிய நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். இதையறிந்த, நாற்பத்தி ஆறு வயதான தன்னுடைய மகன் பியூ என்பவரை புற்று நோயால் இழந்த அமெரிக்கத் துணை குடியரசுத் தலைவர், ஜோ பிடன், அந்த மாணவர் படிக்கும் கல்லூரிக்கு நேரில் சென்று 30 நிமிடங்கள் இருந்து அந்த ஆய்வு பற்றிய தகவல்களைக் கோரிப் பெற்றதோடு அந்த மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுக் கூடம், மற்றும் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருவதாகவும் வாக்களித்துள்ளார். இதையறிந்த ஒபாமா அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த மாணவரை வரவழைத்து இதைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்துகொண்டதோடு குறிப்பிட்ட அந்த ஆய்வை மேலெடுத்துச்செல்ல அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் பார்க்கும்போது நம் மாணவர்களுக்கும் இப்படி உயரிய அங்கீகாரம் கிடைத்தால் இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகளைப் பெற முடியும் என்ற ஏக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சமீபத்தில் அமெரிக்காவில் படிக்கும் ஒரு 16 வயது மாணவன், பெங்களூருவில் உள்ள தன் தாத்தா பாட்டியின் சிரமங்களைக் கண்ணுற்று அதைப்போக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு அரிய கண்டுபிடிப்பை வழங்கியுள்ளான். ஆம், முகுந்த் வெங்கடகிருட்டிணன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவன் மிகக் குறைந்த விலையில் (60 அமெரிக்க டாலர்) காது கேளாதோருக்கான கருவியை கண்டுபிடித்திருக்கிறார். இக்கருவி 1500 முதல் 1,900 டாலர் வரை அனாவசிய விலை விற்பதை அவர் சுட்டிக்காட்டி தன் கண்டுபிடிப்பு மூலம் ஏழை எளியவர்களும் பயன்பெறும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இக்கருவிகளை வழங்கப்போவதாகக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் நடுத்தர குடும்பங்களில் ஒருவரின் வருமானம் ஆண்டொன்றிற்கு 616 அமெரிக்க டாலர் மட்டுமே என்ற வகையில் ஒருவர் வருடம் முழுவதும் உழைத்து அதை ஒரு பைசா செலவு செய்யாமல் சேர்த்து வைத்தாலும் காது கேட்கும் கருவியை வாங்க இயலாது.. வளர்ந்து வரும் நாடுகளில் பலருக்கு இது ஒரு ஆடம்பரச் செலவாகவே இருப்பதும் வருந்தத்தக்க விசயம் என்கிறார் இவர்.

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    உண்மையில் சிந்திக்க வேண்டிய கருத்து. பல நேரங்களில் பல நிறுவனங்களில் நம் இளைய தலைமுறைகளின் முயற்சிகளும் கண்டுபிடுப்புக்களும் “தலை”களால் ஒடுக்கப்பட்டும் ஓரங்கட்டபட்டும் இழிவுபடுத்தப்பட்டும் முடங்கிக்கிடக்கின்றன. உண்மையான முயற்சிகளும் கண்டுபிடிப்புக்களும்  பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப் பட்டாலன்றி  முன்னேற்றத்தைக் காணுதல் அரிது. 

  2. Avatar

    நம் இளைய திறனாளிகளின் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு, பொறியியல் படைப்புகளை அறிவித்து, தமிழக, இந்திய அரசாங்கத்தார் ஊக்கமும், வெகுமதியும், நிதிக்கொடையும் அளித்து அவற்றைப் பலருக்குப் பயன்பட உற்பத்தியும் செய்ய வேண்டும்.   இவ்விழிப்புணர்ச்சியை வல்லமையில் உண்டாக்கிய பவளாவுக்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்.   

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க