Blog

  • கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி?

    கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி?

    கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி? இதோ ஒரு செய்முறை விளக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [3 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [3 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    வேலேந்தி நிற்கின்ற வேலவனே போற்றி
    விண்ணவர்கள் துயர்தீர்த்த வேலவனே போற்றி
    மாலயனும் காணவொணா சிவன்மைந்தா போற்றி
    மனவழுக்கைப் போக்கிடுவாய் வடிவழாகா போற்றி

    தேனான திருநாமம் கொண்டவனே போற்றி
    திருக்கையில் வேலேந்தி நிற்பவனே போற்றி
    வள்ளை தேவயானையுடன் அமர்ந்தவனே போற்றி
    மனமமர்ந்து நிற்கின்ற மால்மருகா போற்றி

    ஈராறு கரமுடைய எழிலழகா போற்றி
    ஈனமுடை எண்ணமதை எரித்திடுவாய் போற்றி
    பாரமுடை பாவமூட்டை அழித்திடுவாய் போற்றி
    பரம்பொருளாம் சிவன்மைந்தா முருகையா போற்றி

    Share
  • அறிஞர் அண்ணாவின் காஞ்சி உரை

    அறிஞர் அண்ணாவின் காஞ்சி உரை

    மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாஜியுடன் ஒரே மேடையில் நின்று அண்ணா பேசினார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருக்குறள் அழ. இராம்மோகனின் நூல் – மூன்றாம் பதிப்பு, சிகாகோ, 2022

    திருக்குறள் அழ. இராம்மோகனின் நூல் – மூன்றாம் பதிப்பு, சிகாகோ, 2022

    இனிய நண்பர் அழ. ராம்மோகன் (கானாடுகாத்தான்/சிகாகோ) திருக்குறள் வெளியீட்டில் சாதனை செய்தவர். அவரைப் பற்றிக் கொஞ்சம் எழுதியுள்ளேன்.

    Tiru. Al’s Tirukkural volume is in Third printing. Just a few thousand $ more needed. If possible, send you donation via Zelle, or mail the check to Mrs. Rammohan. This will make sure 10,000 copies of Tirukkural and Culturescape of Tamils volume will be available at $ 15 or so.

    A good gift for any youth entering college, at weddings, when you meet friends, … ~NG

    This Noble project is taken forward by International Tamil Language Foundation which is a 501(c) (3) organization. The donation is tax deductible. EIN: 36-3755576.

    Donation can be made by check to:

    International Tamil Language Foundation,
    8417, Autumn Drive,
    Woodridge, Illinois, 60517, USA.
    One can also pay via PayPal or Zelle using meenakshi@kural.org

    http://nganesan.blogspot.com/2022/10/al-rammohan-tirukkural-book-chicago.html

    திருக்குறள் அழ. இராம்மோகனின் நூல் – மூன்றாம் பதிப்பு, சிகாகோ, 2022

    சிகாகோவில் வாழ்ந்த அரிய நண்பர், அழகப்ப இராம்மோகன் (1939 – 2019) கானாடுகாத்தான் என்னும் புகழ்மிக்க ஊரைச் சார்ந்தவர். திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டுடன் மிக அழகிய முறையில் வெளியிட்டவர். தமிழில் அறிவியலைக் கற்றுத்தரப் பல நல்ல ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்த புரவலர். மூன்றாம் பதிப்பாக, திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு அச்சாகிக் கொண்டுள்ளது. அதற்கான நிதி உதவியைச் செய்து தாருங்கள். நன்றி.

    பெரும் பதவி வகித்தாலும் பழகுதற்கு இனியர். தமிழர் முன்னேற்றம் பற்றியே சிந்தித்தவர். அவர் வெளியிட்ட பண்பாட்டுக் கையேட்டில் என் நூலகத்தில் இருந்த பல கட்டுரைகள், ஒளிப்படங்கள் காணலாம்.

    அமெரிக்காவில் தமிழும், திருக்குறளும் வளர்த்த இனிய நண்பர், திருமிகு. அழகப்ப இராம்மோகன். அவரது குடும்பத்தார் அனைவரும் – குறிப்பாக, மகள் பார்வதி வெங்கட், மகன் சிதம்பரம் ராம்மோகன், திருமதி. மீனாட்சி இராம்மோகன் – எங்கள் நண்பர்கள். ஸ்டீபன் ஹாக்கிங்கின் நூல்களைத் தக்காரைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலையில் வெளியான இயற்பியல் காணொளிகளைத் தமிழாக்கித் தந்த பெருமகன். தமிழர் வாழ்வு உயர, அறிவியலும், சுயசிந்தனையும், தாய்மொழிப்பற்றும் இன்றியமையாதவை என்று கண்டு வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரது நூலகம் 10,000 நூல்களைக் கொண்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது போல, உலகின் முதல் நூலகம் அலெக்சாண்டிரியாவில் இருந்து சில ஆயிரம் ஆண்டு முன்னே அழிந்தது. அந்த இடத்தைச் சென்று ஆராய்ந்தவர் அவர்.

    அழகப்ப ராம்மோகனின் கனவுத்திட்டமாகிய நூலகம், அதில் காணொளிகள், இணைய வசதி, ஏராளமான நூல்கள் என அவரது சொந்த ஊர் கானாடுகாத்தானில் டிசம்பர் 26, 2019-ல் தொடங்கிற்று. அந்த விழாவில் கலந்துகொண்டேன்.

    நான் ஸ்பேஸ் ஸ்டரக்சர்ஸ், ராக்கெட் ஸயன்ஸ்-ல் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்க விண்வெளி நிலையத்தில் பணியில் சேர்ந்த அமயம், திரு. ராம்மோகன் பலமுறை ஹூஸ்டன் இல்லம் வந்திருக்கிறார். அவர் கடின உழைப்பாளி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க முலாம் பூசிய விவிலிய நூல் இருக்கும். அதே போல, அதே பதிப்பகத்தில் தங்க முலாம் பூசி திருக்குறளும், ஓவியமும் (மணியம்செல்வன்), பண்பாட்டுக்கையேடும் மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டார்கள். அந்நூலுக்காக, ஒரு தலைப்பை வடித்துத் தந்தேன் “Culturescape of Tamils” என்பது அச்சொல். இராம்மோகனுக்கு மிகப்பிடித்த தலைப்பு அது. ஏ. கே. ராமாநுஜன் “Interior Landscape” என்று அகத்திணைக் கோட்பாட்டுக்குப் பெயரளித்தார். அதன் வழி, Culturescape of Tamils என்ற பெயரமைத்தேன். தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டில் வெளியான கட்டுரைகள் பலவும் என் நூலகத்தில் இருந்து இராம்மோகனார் தேர்ந்தெடுத்தவை. 1900களின் ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் கட்டுரைகள், ஆய்வேடுகள், நூல்கள் பற்றிய விரிவான தமிழ், தென்னிந்திய மொழியியல், சமூகவியல், கலைவரலாறு பற்றிய நூற்றொகுப்பு (Bibliography on Tamils) செய்தேன். அதில் இருந்து ஒருபக்கம், இராம்மோகனின் வலைத்தளத்தில் (https://kural.org/ ) இருந்து பார்க்கலாம்: https://kural.org/culturescape/

    சிகாகோ இராம்மோகன்

    அன்பார்ந்த நண்பர் அழகப்ப ராம்மோகன்
    இன்பார் திருக்குறளை இப்பாரில் என்றும்
    அமிழ்தெனப் போற்றஅரும் பாதைதந்தார் வாழி
    தமிழுள் ளளவும் தழைத்து.

    https://ar-ar.facebook.com/1428383984066811/posts/1428415247397018/

    தங்க முலாம் பூசிய திருக்குறள் நூல்

    திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே – கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே. தொடர்புக்கு : திரு. அழகப்பா ராம்மோகன், திட்ட இயக்குநர், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா.

    More at http://nganesan.blogspot.com/2022/10/al-rammohan-tirukkural-book-chicago.html

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [ 2 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [ 2 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    வேதநெறி திருமுறைகள் வியந்துவிடும் முருகா
    நாதனக்கே  ஆசானாய் ஆகிநின்ற முருகா
    வாதமிடு குணமகல வழிசமைப்பாய் முருகா
    வையகத்தார் மனஞ்சிறக்க வைத்திடுவாய் முருகா

    சோலைமலை எல்லாமே கோயில்கொண்டாய் முருகா
    சுவையான தமிழ்கேட்ட துள்ளிவந்தாய் முருகா
    வாலைவள்ளி காதல்கொண்டு லீலைசெய்தாய் முருகா
    வடிவழகா வேலவனே வரமருள்வாய் முருகா

    அருணகிரி தமிழ்பாட அருளிநின்றாய் முருகா
    அமுதத்தமிழ் அனைவரையும் பருகச்செய்தாய் முருகா
    திருமுறைகள் வரிசையிலே அமருகின்ற வகையில்
    திருப்புகழை அருளச்செய்தாய் திருக்குமாரா சரணம்

    Share
  • இலங்கை அதிபர் அலுவலகத்திற்கு முன் நந்திக் கொடிகள்

    இலங்கை அதிபர் அலுவலகத்திற்கு முன் நந்திக் கொடிகள்

    புதன் 26.10.22

    சிவ சேனையின் சிவத்தொண்டர் சிறீந்திரன் மற்றும் சிவத்தொண்டர் செயமாறன் அனுப்பும் செய்தி.

    கொழும்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்டுச் சைவத்தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

    கொழும்பில் சைவக் கோயில்களுக்கு வெளியே நந்திக் கொடிகள் பறப்பது அபூர்வம். சில விழாக்களில் பறந்து இருக்கின்றன.

    தீபஒளித் திருநாளையொட்டி மேதகு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்ட மேதகு குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கர் மற்றும் சைவத் தமிழரான மூத்த அமைச்சர் மாண்புமிகு தேவானந்தா இருவருக்கும் நன்றி.

    1920களில் ஏஇ குணசிங்கா தொடக்கம் 2022இல் இன்றைய சரத் வீரசேகரா வரை சிங்கள புத்த இனவெறியை அரசியலுக்கு முன்னெடுத்தோர் நாணிக் குனியும் வகையதே அரசின் நடவடிக்கை.

    செயவீர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி 1358இலும் குணவீர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி 1370இலும் 4ஆம் 5ஆம் புவனேகபாகர்களை விரட்டிக் கம்பளையில் நந்திக் கொடியை நாட்டினர். கல்வெட்டு எழுதினர்.

    செண்பகப் பெருமாள் சிங்கக் கொடியை நல்லூரில் ஏற்றினார். 22 ஆண்டுகள் 1461 வரை சிங்கக் கொடி பறந்தது.

    1948 தொடக்கம் சிங்கக் கொடி நல்லூரில் பறக்கிறது. அப்பொழுதே நந்திக் கொடியும் இணைய வேண்டும் என்ற சைவத்தமிழர் குரலைச் சிங்கக் கொடியார் மதிக்கவில்லை.

    நல்லூரிலிருந்து சிங்கக் கொடியை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் இன்னும் ஓயவில்லை.

    இதற்கிடையில் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவின் முயற்சியால் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தீபஒளித் திருநாள் அன்று, கம்பளைக்கு அப்பால் கொழும்பில், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில், நந்திக் கொடிகள் பறந்துள்ளன.

    சிங்கக் கொடியும் நந்திக்கொடியும் இந்த நாட்டின் இறைமைக் கொடிகள். இவை சரிசமமாகப் பறக்கும் நாள்கள், இலங்கை முழுவதும் பறக்கும் நாள்கள், வெகு தொலைவில் இல்லை.

    தீபஒளித் திருநாள் அன்று இவ்வாறு கட்டியம் கூறிய மாண்புமிகு தேவானந்தரும் வாழ்க. மேதகு இரணில் விக்ரமசிங்கரும் வாழ்க.

    *******

    News from Sivathondar Srintharan and Sivathondar Jayamaaran of Sivasenai, Sri Lanka.

    Saiva Tamils are delighted. Their hearts are filled with joy. Fluttering Nandhi flags unfurled in front of the Sri Lankan President’s office in Colombo is a matter of honour and pride bestowed on the Saiva Tamils of Sri Lanka.

    Nandhi flags in Colombo are usually hoisted inside Hindu temples. Occasionally they are hoisted in Saiva Tamil functions.

    His Excellency, President Ranil Wickramasinghe and Honourable Minister Devananda are bold enough to open a new chapter in the history of Saiva Tamils in Sri Lanka. We are grateful.

    A. E. Gunasingha in the 1920ies basked politically by fanning the flames of Sinhalese Buddhist extremism. From then-on, up to Sarath Weerasekhara (2022), Sinhalese Buddhist chauvinism dominated Sri Lankan politics. Sri Lankan President innovatively extends the hands of friendship and peace to Saiva Tamils shaming those chauvinists.

    Jayaveera Singhai Aarya Chakravarthy (1358) and Gunaveera Singhai Aarya Chakravarthy (1370) chased away the 4th and 5th Buvaneka Bahus from Gampola to hoist the Nandhi flag there. A stone inscription has been left behind recording this event.

    Shenbaga Perumal hoisted the Lion flag for 22 years continuously up to 1461 in Nallur, Jaffna. From 1948, Lion flag dominates Nallur. During 1948, Saiva Tamil leaders asked for the inclusion of Nandhi in the national flag along with the Lion. Lions refused confluence.

    The struggle to remove the Lion only flag from Nallur is continuing.

    In the meantime, on Deepavali day this year, beyond Gampola, at Colombo, by the efforts of the Saiva Tamil Minister, Hon. Devananda, Nandhi flags are fluttering at the residence of His Excellency the President of Sri Lanka.

    Lion and Nandhi represent sovereignty of the Sri Lankan people. Their confluence represents the confluence of the free will of the people, by the people, for the people of Sri Lanka. Such is the south Asian and global political trend now. The day of such confluence in Sri Lanka is not far away.

    Thank you, your Excellency Ranil Wikramasingha. Thank you, your Honour, Devananda. Your action is a forerunner of the future.

    Share
  • ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை

    ஈகுவடாரில் ஒலித்த தமிழ்க் கவிதை

    ஈகுவடார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கவிஞர் சேது குமணன் (சேது பாஸ்கரா குழுமக் கல்வி நிறுவனங்களின் தாளாளர்) பங்கேற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை வழங்கியுள்ளார். உலக அரங்கில் ஒலித்த தமிழ்க் கவிதையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [1 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [1 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பேரரக்கர் தனையழித்த பெருமானே போற்றி
    பாருலகில் பேரரக்கர் பெருகுகிறார் நாளும்
    தீராத தொல்லையினை கொடுக்கின்றார் தினமும்
    சிவன்மைந்தா தீர்வுதந்து காத்துவிடு ஐயா

    ஊர்சிறக்க உழைக்கின்றார் ஒன்றுங் கிடையாமல்
    உளமுடைந்து உணர்விளந்து உழலுகிறார் ஐயா
    பாருலகில் கலியெழுந்து ஆடுகிறான் கந்தா
    பகையழித்த வேலவனே பொழிந்திடுவாய் கருணை

    ஆலமதை உண்டானின் அழகு திருக்குமரா
    நீலமயில் நீயமர்ந்து எமக்கருள வேண்டும்
    சீலமுடை வாழ்வுதனை தந்திடுவாய் முருகா
    திருவடியே சரணமையா சிவானாரின் மைந்தா

    Share
  • அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை

    அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை

    தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அண்ணா அழகாகப் பேசக் கூடியவர். அண்ணாவின் ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் ஆளுமைத் திறனும் புகழ் பெற்றவை. பாராளுமன்றத்திலும் வீறுடன் முழங்கியவர். சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் அண்ணா ஆற்றிய ஆங்கில உரையை இங்கே கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்ம வீட்டுத் தீபாவளி 2022

    நம்ம வீட்டுத் தீபாவளி 2022

    நம்ம வீட்டுத் தீபாவளி கொண்டாட்டம், சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகாலட்சுமி அஷ்டகம் கேளுங்கள்

    மகாலட்சுமி அஷ்டகம் கேளுங்கள்

    தீபாவளித் திருநாளை லட்சுமி பூஜை என்றும் அழைப்பார்கள். இந்நன்னாளில் திருமகளை வணங்கி வழிபடுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம். சக்தி வாய்ந்த மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்திரத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் மூவரசம்பட்டு சகோதரிகளுள் ஒருவரான மாதங்கியும் அடுத்தடுத்துப் பாடக் கேளுங்கள். உங்கள் இல்லத்தில் மகாலட்சுமி தங்கி, நிலைபெற்று, எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரின் அடுத்த பகுதியாக அம்பிகை மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களைக் காண உள்ளோம்.

    1. இணுவில் கௌரி அம்பாள் பிள்ளைத்தமிழ்

    நாம் முதலில் காணப்போவது ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். கலாபூஷணம், பண்டிதை திருமதி. வைகுந்தம் கணேச பிள்ளை என்பவரே 2016ம் ஆண்டில் இதனை இயற்றியுள்ளார். இதுவே நான் கண்ட பிள்ளைத்தமிழ் நூல்களுள் முதன்முதலாக ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்டதாகும். பருவத்திற்கு ஐந்து பாடல்கள் வீதம் கொண்ட இப்பிள்ளைத்தமிழ் நூல் எழுந்த வரலாறு சிலிர்க்க வைப்பது. இவ்வம்மையார் ஏற்கெனவே இணுவில் கௌரி அம்பாள் மீது திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருப்பள்ளி எழுச்சி நூலுக்கு ஒரு பெரியவரிடம் ஆசியுரை வேண்டியபோது அவர் அதனைப் பிள்ளைத்தமிழ் நூலெனக் கருதிவிட்டமையால், அதற்கான ஆசியுரை இவருக்குக் கிடைத்ததாம். ஆகவே இதனை, கௌரி அம்பாளின் ஆணையாகவே கருதி, அன்னைமீது ஒரு பிள்ளைத்தமிழையே இயற்றியுள்ளார் இவ்வம்மையார்.

    இணுவியம்பதியில் கௌரி அம்பாள் தெற்கில் வேப்பமரத்தடியில் குடிகொண்டு வேண்டுவோர்க்கு எல்லா நலன்களையும் அருளி வருகிறாள். இந்த அருமையான நூலிலிருந்து சில நயங்களைக் காண்போமா?

    காக்குங்கடவுளான திருமாலைப் பாடும் வழக்கிற்கு மாறாகப் பரராசசேகர விநாயகரின் காப்புப்பாடலுடன் நூலைத் தொடங்கியுள்ளார். இவையனைத்தும் பலப்பல நயங்களுடன் அமைந்த பாடல்கள்.

    செங்கீரைப் பருவத்துப் பாடலொன்றில்,

    பன்னிருகையுடையான் முருகனின் அன்னையே உமையே
    குன்றக்குற நாயகி வள்ளியும்
    தேவகுஞ்சரியும் வந்து வந்து
    கன்னத்தில் முத்தமிட்டுக்செல்லுகிறார் கண்ணே
     …….. ………… …………
    ……… ஆடுக செங்கீரை

    எனும் வரிகள் புதுவிதமான கற்பனை நயத்திற்குச் சான்றாகும். உமையென்னும் மாமியைக் குழந்தையாக்கி, அவளுடைய மருமகள்கள் வந்து கொஞ்சுவதாகச் செய்த கற்பனை ரசிக்கத்தக்கது.

    மீனாட்சி, அபிராமி, காமாட்சி, என அம்பிகையின் பல அவதாரங்களையும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளார். பல தொன்மங்களும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப ஆங்காங்கு பொருந்திநின்று அழகு செய்கின்றன.

    முத்தப்பருவத்துப் பாடலொன்று: சிவபிரான் தன் காலால் செய்ததொரு செயலுக்கீடாக அம்பிகை காலால் தட்டி மகிஷாசுரனை வதம்செய்த செய்தியையும் சந்த நயத்துடன் போற்றுகிறது.

    எட்டிக்காலால் உதைத்துக் காலனைக்
    காலம் செய்த சிவனார் பாகத்து
    அமர்ந்தவளே அகமகிழ்ந்து முத்தந்தருகவே
    தட்டிக்காலால் மகிஷனை வதம்செய்த தேவி
     ……………………………….
    ……….. முத்தந் தருகவே.

    குமரகுருபரர் மீனாட்சியம்மையை, ‘துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே’ எனப் பாடியது போலவே இதிலும் ‘தெள்ளுதமிழ்ப் புலவோர் நாவிருக்குந் தமிழே வருக’ என்றும், சங்கமிருந்த தாயே என்றும், கன்னித்தமிழே வருக என்றும் பல பாடல்களில் அமைந்துள்ளதைக் கண்டு களிக்கலாம்.

    ‘பெண்குலங்காக்க வருக’ எனச் சிறப்பாக மகளிருக்கான வேண்டுதலை முன்வைப்பதனையும் காணலாம்.

    அம்புலிப்பருவத்தின் பாடலொன்றில், அம்புலிக்கு அச்சுறுத்தலாக ‘தண்டம்’ எனும் உபாயத்திலமைந்த பாடலில்,

    ‘மனிதர் ஏவும் ஏவுகணை தாக்குமுன்னம் அம்புலீ
    அம்பிகையுடன் விளையாடவாவே’ எனவும் பாடியுள்ளார். இது நவீன யுகத்திற்கேற கருத்தாகக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

    மொத்தத்தில் மிக இனிய அருமையான நூலிதாகும்.

                                                               ————————–

    2. தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி பிள்ளைத்தமிழ்

    இது 1999-ல் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட நூலாகும். இவர் ஒருமுறை இவ்வன்னையின் கோவிலுக்குச் சென்றபோது அவரது நாவில் அன்னை அட்சரமெழுதி, நெற்றியிலே திருநீறும் பூசினாளாம். பின்னரே இவர் அன்னைமீது பல நூல்களை இயற்றினார். இவரே 1974-ல் பருவத்துக்கொரு பாடல்வீதம் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களால் இவ்வன்னைமீதே ஒரு பிள்ளைத்தமிழ் நூலைப் பாடியுள்ளார். இரண்டாவது பாடிய நூல் பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் பெண்பால் பிள்ளைத்தமிழாக அமைந்துள்ளது. இவையனைத்தும் அம்மையின் அருளே எனலாம்.

    இனி, சில பாடல்களின் நயங்களைக் கண்டு மகிழலாம். தமிழ்மொழியின் நயங்களை அன்னைக்கு அலங்கார அணிகளாகச் சூடும் பாடல்கள் பல இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

    சங்கத்தமிழ் உலவும் சந்தன வீதியுடையதாகப் புலவர் துர்க்காபுரத்தைக் குறிப்பிடுகிறார். குழந்தை முருகனைத் தம் மடியில் கிடத்தி, அவனுடைய மழலைமொழிகளைக் கேட்கும் அம்பாளை,

    “சங்கத்தமிழின் முதுதலைவி
    தமியேற் கிரங்காய் தாலேலோ
    சந்தன வீதித் துர்க்கைபுரச்
    சாந்தினி தாலோ தாலேலோ” என்பார் ஒரு தாலப் பாருவப் பாடலில்.

    ‘சைவமுயர் தெல்லிநகர்த் துர்க்காபுரத்திறைவி’ எனவும் சப்பாணிப் பருவப் பாடலில் போற்றுவார்.

    அம்புலிப்பருவத்து அழகான பாடலொன்று: மதி என்பவன் சந்திரன். இது சந்த்ரரூபியாகிய பராசக்தியையும் குறிக்கும் வண்ணம் இசைத்த பாடலொன்று.

    திருஞானசம்பந்தருக்குத் தன் முலைப்பாலையூட்டுவித்துப் பாடவைத்த ஞான மதி இவ்வம்மை! அபிராமி பட்டருக்காகத் தன் தோட்டினை ஆகாயத்தில் வீசியெறிந்து நிலவாக்கிக் காட்டிய மதி இவள். அரிகேசன் என்னும் தவச்சிறுவனுக்குக் காசியிலே அன்னதாதா, பிராணதாதா, ஞானதாதா எனும் பதவி கொடுத்த மதி. தமன் என்பவன் தீபமேற்றித் தவமிருந்து சிவன்-பார்வதியைப் பார்க்கக்கூடிய கண்களைக் கேட்டான். காசி விஸ்வநாதனும் அன்னை விசாலாட்சியும் அவ்வரத்தைக் கொடுத்தனர். இருவரையும்  பார்த்த தமன் ஒருகண் பார்வையை இழந்தான். அழுது புலம்பினான். மதியான இறைவி அக்கண்ணைப் பொற்கண்ணாக்கினாள். அவனே குபேரன் எனும் அளகாபுரிக்கு அதிபன். வியாசமுனிவனுக்கு சுகரைத் தந்த சிவபிரானின் திருமதியாகிய இவளைப் புறக்கணித்து மதி கெட்டலையாதே அம்புலியே! இப்படிப்பட்ட தெல்லிநகர்த் துர்க்கையுடன் வந்து விளையாடுவாய் என விளிக்கும் பாடல்.

    பரவுமுலைப் பால்கொடுத்துப்
    பாடுவித்த ஞானமதி
    பட்டருக்காய்த் தோடெறிந்த
    பழமமிர்த லிங்கமதி
    அரவாக்கி விட்டுணுவை
    ஐங்கரன்சீர் விளக்குமதி
    அரிகேசன் காசியிலே
    அணிவிளங்கச் செய்தமதி
    குருமுகமாய்த் தமனுக்குக்
    குளிர்பொற்கண் கொடுத்தமதி
    குலமுனிவர் வியாசனுக்குக்
    குணச்சுகரைத் தந்தசிவத்
    திருமதியைப் புறக்கணித்து
    செயல்மதிகெட் டலையாதே
    தெல்லிநகர்த் துர்க்கையுடன்
    சேர்ந்தாடாய் அம்புலியே.

    மதி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திய அரிய பாடலிது. இவ்வாறு படித்து, ரசித்து மகிழப் பல பாடல்கள் இந்நூலில் உள்ளன.

        ————————–

    3. நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்

    1977-ல் பன்னூல் வித்தகரான கரவை வ. சிவராசசிங்கம் அவர்களால் இப்பிள்ளைத்தமிழ் நூல் இயற்றப்பட்டு யாழ்ப்பாணம் சைவத் தமிழ்க் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கோயில் எங்கு அமைந்துள்ளது, அதன் சுவையான வரலாறு என்னவெனக் காண்போம். இலங்கையின் நயினைதீவு நாகபூஷணி அம்பாள் எவரும் தன் தோற்றத்தை அறிய முடியாத சுயம்பு மூர்த்தமாக உள்ளவள். இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர், வேடர் என்பது வரலாறு. இவருள் நாகர்கள் ஆதித்திராவிடர்களான தமிழர்கள். இவர்களது வழிபாட்டுத்தலமாக விளங்கியது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். இதன் வேறுபெயர்கள் நாகதீவு, மணிபல்லவம், நாகதீபம், மணித்தீவு எனவெல்லாமாகும். மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘மணிபல்லவம்’தான் நயினாதீவு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இது அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய புவனேஸ்வரி பீடம் என்று அறியப்படுகின்றது.

    இந்நூலிலிருந்து சுவையான சில பாடல்களைக் காணலாம்.

    செங்கீரைப்பருவத்தைப் பாடும்போதில் தவழ்ந்தாடி வரும் குழந்தையின் அணிகலன்கள் எவ்வாறு அசைகின்றன, ஒலிக்கின்றன எனக் கவித்துவமாகப் பாடிக் களிப்பர் புலவர் பெருமக்கள். மார்பிலணி ஆரங்கள் அசைந்தாடும் என்பது வழக்கு. ஒரு பாடலில் நயினை வளர் அம்மை மார்பின்மீது ஆணிமுத்தாரம் மட்டுமின்றி அடியார் பாடும் பாமாலையும் அசைந்தாடுகிறதென்கிறார். இது ஒரு புத்தம்புதிய அரிய கற்பனை!

    …………………………………
    ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
    றமைந்தமணி மார்பகத்தே
    ஆணிமுத் தாரமும் அடியார்பா மாலையும்
    அசைந்திசைந் தொலி செய்தாட
    செய்யமல ரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச்
    செங்கீரை யாடி யருளே
    தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
    செங்கீரை யாடி யருளே.

    தாலப் பருவத்தின் ஒரு பாடலும் மிகப் புதுமையான இயற்கைக் காட்சியை விளக்கி, அதனை அம்மையப்பரோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது. கொன்றைமரத்தின்மீது குருக்கத்தி படர்ந்துள்ளதாம். இவற்றை வெண்மையான மலர்களைக்கொண்ட மல்லிகை சூழ்ந்துள்ளது; இதில் கொன்றை சிவபெருமானையும், பசுமை நிறங்கொண்ட குருக்கத்தி சியாமளை என்னும் அம்பிகையையும், நினைவு படுத்துகின்றன. கொன்றையும் குருக்கத்தியும் இணைந்தது அம்மையப்பர் திருவுருவாகும். இது இவ்விருவரும் முத்தாலான விதானமமைந்த (தொங்கும் மாலைகளான மல்லிகை மலர்கள் முத்துவிதானத்துக்கு உவமை) தேரில் பவனிவருவது போலுள்ளதாம். எத்துணை இனிய கற்பனை! முழுப்பாடலையும் காணலாமே!

    கொத்துக் கொத்தாய் மலர்ந்த பொலங்
    கொன்றை மரத்தின் மீதுமிகக்
    குழைத்துச் செழித்து மணிப் பசுமை
    கொண்ட குருக்கத் திச்செடிபோய்த்
    தொத்திப் படர்ந்து கிடக்க நெடுந்
    தூரமணக்கும் மல்லிகை மேல்
    தொங்க லிட்டுச் சூழ்ந்திருக்கும்
    தோற்றம் நோக்கும் அடியவர்க்கு
    முத்து விரித்த விதான முறு
    முழுமா மணித்தே ரூர்ந்துவரு
    முக்கண் மூர்த்தி நின்னொடருள்
    முகிழ்த்த கோலம் அளிக்கின்ற
    சித்ரப் பொழில்சூழ் நயினை வளர்
    செல்வி தாலோ தாலேலோ
    சிவனார் இடம்வாழ் நாகம்மைத்
    தேவி தாலோ தாலேலோ.

    அடுத்து, வருகைப்பருவப்பாடலொன்று மெய்யடியார்களை எவ்வாறு அன்னை பிறவிப்பிணியினின்றும் நீக்குவாள் என விவரிக்கிறது. அடியவரின் கருத்தினுட் புகுந்து ஞான ஒளி கொடுத்து உய்யும் நெறியைக் காட்டி, கருவில் புகாவகையையும் உணர்த்தியருளுகிறாள் நயினை நாகம்மை!

    கருவிற் புகுதா வகையெனது
    கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
    கதிபெற் றுய்யும் நெறிகாட்டும்
    கதிரே வருக ………………. என்பன பாடலின் சில வரிகள்.

    இது போன்ற எண்ணற்ற பாடல்கள். தமிழன்பர்கள் படித்துப் போற்ற வேண்டிய நூலிதுவாம். தொடர்ந்து மேலும் பல நூல்களைக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?

    அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?

    அசத்தல் சுவையில் ஆளையே தூக்கும் அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(422)

    குறளின் கதிர்களாய்…(422)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(422)

    வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.

    -திருக்குறள் – 439 (குற்றங்கடிதல்)

    புதுக் கவிதையில்…

    அனைத்திலும் மேன்மையுற்றே
    அரசன் உயர்நிலை பெறுங்காலத்தும்
    அவன்
    தன்னைத்தான் உயர்வாகத்
    தற்செருக்கால் எண்ணக்கூடாது,
    நாட்டிற்கும் தனக்கும்
    நன்மைதராச் செயல்கள் செய்ய
    நினைவில்கூட விரும்பக்கூடாது…!

    குறும்பாவில்…

    தன்நிலை உயர்ந்த போதிலும்
    எக்காலத்தும் அரசன் தற்செருக்கில் இருக்கக்கூடாது,
    நன்மைதராச் செயல்செய்ய விரும்பலாகாது…!

    மரபுக் கவிதையில்…

    நாட்டைக் காக்கும் அரசனவன்
    நானே எல்லாம் என்றேதான்
    வாட்ட மில்லா உயர்வினிலும்
    வஞ்சச் செருக்கால் எண்ணவேண்டாம்,
    நாட்டு நன்மை யுடனேதான்
    நன்றாய்த் தனக்கும் நன்மைதராக்
    கேட்டை மட்டும் தருஞ்செயலைக்
    கேடாய் எண்ணிச் செய்யாதே…!

    லிமரைக்கூ…

    தானுயர்வெனத் தற்செருக்கு பண்ணாதே
    தன்நிலை உயர்ந்தபோதும், நாட்டுக்கும் நன்மை
    தராச்செயலை விரும்பிச்செய்ய எண்ணாதே…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    தானுங்கிற தற்பெரும,
    வேண்டவே வேண்டாம்
    நாட்டுக்குக் கேடுசெய்ய நெனைப்பே..

    தன்னோட நெலயில
    ஒசந்த நேரத்திலயும்
    ஒருநாளும் வேண்டாம் ராசாவுக்கு
    தானுங்கிற கெறுவம்,
    நாட்டுக்கும் தனக்கும்
    நன்மதராத செயலெதயும் செய்ய
    நெனைக்கக்கூட வேண்டாமே..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    தானுங்கிற தற்பெரும,
    வேண்டவே வேண்டாம்
    நாட்டுக்குக் கேடுசெய்ய நெனைப்பே…!

    Share