மீனாட்சி பாலகணேஷ்

இத்தொடரின் அடுத்த பகுதியாக அம்பிகை மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களைக் காண உள்ளோம்.

1. இணுவில் கௌரி அம்பாள் பிள்ளைத்தமிழ்

நாம் முதலில் காணப்போவது ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். கலாபூஷணம், பண்டிதை திருமதி. வைகுந்தம் கணேச பிள்ளை என்பவரே 2016ம் ஆண்டில் இதனை இயற்றியுள்ளார். இதுவே நான் கண்ட பிள்ளைத்தமிழ் நூல்களுள் முதன்முதலாக ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்டதாகும். பருவத்திற்கு ஐந்து பாடல்கள் வீதம் கொண்ட இப்பிள்ளைத்தமிழ் நூல் எழுந்த வரலாறு சிலிர்க்க வைப்பது. இவ்வம்மையார் ஏற்கெனவே இணுவில் கௌரி அம்பாள் மீது திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருப்பள்ளி எழுச்சி நூலுக்கு ஒரு பெரியவரிடம் ஆசியுரை வேண்டியபோது அவர் அதனைப் பிள்ளைத்தமிழ் நூலெனக் கருதிவிட்டமையால், அதற்கான ஆசியுரை இவருக்குக் கிடைத்ததாம். ஆகவே இதனை, கௌரி அம்பாளின் ஆணையாகவே கருதி, அன்னைமீது ஒரு பிள்ளைத்தமிழையே இயற்றியுள்ளார் இவ்வம்மையார்.

இணுவியம்பதியில் கௌரி அம்பாள் தெற்கில் வேப்பமரத்தடியில் குடிகொண்டு வேண்டுவோர்க்கு எல்லா நலன்களையும் அருளி வருகிறாள். இந்த அருமையான நூலிலிருந்து சில நயங்களைக் காண்போமா?

காக்குங்கடவுளான திருமாலைப் பாடும் வழக்கிற்கு மாறாகப் பரராசசேகர விநாயகரின் காப்புப்பாடலுடன் நூலைத் தொடங்கியுள்ளார். இவையனைத்தும் பலப்பல நயங்களுடன் அமைந்த பாடல்கள்.

செங்கீரைப் பருவத்துப் பாடலொன்றில்,

பன்னிருகையுடையான் முருகனின் அன்னையே உமையே
குன்றக்குற நாயகி வள்ளியும்
தேவகுஞ்சரியும் வந்து வந்து
கன்னத்தில் முத்தமிட்டுக்செல்லுகிறார் கண்ணே
 …….. ………… …………
……… ஆடுக செங்கீரை

எனும் வரிகள் புதுவிதமான கற்பனை நயத்திற்குச் சான்றாகும். உமையென்னும் மாமியைக் குழந்தையாக்கி, அவளுடைய மருமகள்கள் வந்து கொஞ்சுவதாகச் செய்த கற்பனை ரசிக்கத்தக்கது.

மீனாட்சி, அபிராமி, காமாட்சி, என அம்பிகையின் பல அவதாரங்களையும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளார். பல தொன்மங்களும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப ஆங்காங்கு பொருந்திநின்று அழகு செய்கின்றன.

முத்தப்பருவத்துப் பாடலொன்று: சிவபிரான் தன் காலால் செய்ததொரு செயலுக்கீடாக அம்பிகை காலால் தட்டி மகிஷாசுரனை வதம்செய்த செய்தியையும் சந்த நயத்துடன் போற்றுகிறது.

எட்டிக்காலால் உதைத்துக் காலனைக்
காலம் செய்த சிவனார் பாகத்து
அமர்ந்தவளே அகமகிழ்ந்து முத்தந்தருகவே
தட்டிக்காலால் மகிஷனை வதம்செய்த தேவி
 ……………………………….
……….. முத்தந் தருகவே.

குமரகுருபரர் மீனாட்சியம்மையை, ‘துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே’ எனப் பாடியது போலவே இதிலும் ‘தெள்ளுதமிழ்ப் புலவோர் நாவிருக்குந் தமிழே வருக’ என்றும், சங்கமிருந்த தாயே என்றும், கன்னித்தமிழே வருக என்றும் பல பாடல்களில் அமைந்துள்ளதைக் கண்டு களிக்கலாம்.

‘பெண்குலங்காக்க வருக’ எனச் சிறப்பாக மகளிருக்கான வேண்டுதலை முன்வைப்பதனையும் காணலாம்.

அம்புலிப்பருவத்தின் பாடலொன்றில், அம்புலிக்கு அச்சுறுத்தலாக ‘தண்டம்’ எனும் உபாயத்திலமைந்த பாடலில்,

‘மனிதர் ஏவும் ஏவுகணை தாக்குமுன்னம் அம்புலீ
அம்பிகையுடன் விளையாடவாவே’ எனவும் பாடியுள்ளார். இது நவீன யுகத்திற்கேற கருத்தாகக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

மொத்தத்தில் மிக இனிய அருமையான நூலிதாகும்.

                                                           ————————–

2. தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி பிள்ளைத்தமிழ்

இது 1999-ல் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட நூலாகும். இவர் ஒருமுறை இவ்வன்னையின் கோவிலுக்குச் சென்றபோது அவரது நாவில் அன்னை அட்சரமெழுதி, நெற்றியிலே திருநீறும் பூசினாளாம். பின்னரே இவர் அன்னைமீது பல நூல்களை இயற்றினார். இவரே 1974-ல் பருவத்துக்கொரு பாடல்வீதம் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களால் இவ்வன்னைமீதே ஒரு பிள்ளைத்தமிழ் நூலைப் பாடியுள்ளார். இரண்டாவது பாடிய நூல் பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் பெண்பால் பிள்ளைத்தமிழாக அமைந்துள்ளது. இவையனைத்தும் அம்மையின் அருளே எனலாம்.

இனி, சில பாடல்களின் நயங்களைக் கண்டு மகிழலாம். தமிழ்மொழியின் நயங்களை அன்னைக்கு அலங்கார அணிகளாகச் சூடும் பாடல்கள் பல இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

சங்கத்தமிழ் உலவும் சந்தன வீதியுடையதாகப் புலவர் துர்க்காபுரத்தைக் குறிப்பிடுகிறார். குழந்தை முருகனைத் தம் மடியில் கிடத்தி, அவனுடைய மழலைமொழிகளைக் கேட்கும் அம்பாளை,

“சங்கத்தமிழின் முதுதலைவி
தமியேற் கிரங்காய் தாலேலோ
சந்தன வீதித் துர்க்கைபுரச்
சாந்தினி தாலோ தாலேலோ” என்பார் ஒரு தாலப் பாருவப் பாடலில்.

‘சைவமுயர் தெல்லிநகர்த் துர்க்காபுரத்திறைவி’ எனவும் சப்பாணிப் பருவப் பாடலில் போற்றுவார்.

அம்புலிப்பருவத்து அழகான பாடலொன்று: மதி என்பவன் சந்திரன். இது சந்த்ரரூபியாகிய பராசக்தியையும் குறிக்கும் வண்ணம் இசைத்த பாடலொன்று.

திருஞானசம்பந்தருக்குத் தன் முலைப்பாலையூட்டுவித்துப் பாடவைத்த ஞான மதி இவ்வம்மை! அபிராமி பட்டருக்காகத் தன் தோட்டினை ஆகாயத்தில் வீசியெறிந்து நிலவாக்கிக் காட்டிய மதி இவள். அரிகேசன் என்னும் தவச்சிறுவனுக்குக் காசியிலே அன்னதாதா, பிராணதாதா, ஞானதாதா எனும் பதவி கொடுத்த மதி. தமன் என்பவன் தீபமேற்றித் தவமிருந்து சிவன்-பார்வதியைப் பார்க்கக்கூடிய கண்களைக் கேட்டான். காசி விஸ்வநாதனும் அன்னை விசாலாட்சியும் அவ்வரத்தைக் கொடுத்தனர். இருவரையும்  பார்த்த தமன் ஒருகண் பார்வையை இழந்தான். அழுது புலம்பினான். மதியான இறைவி அக்கண்ணைப் பொற்கண்ணாக்கினாள். அவனே குபேரன் எனும் அளகாபுரிக்கு அதிபன். வியாசமுனிவனுக்கு சுகரைத் தந்த சிவபிரானின் திருமதியாகிய இவளைப் புறக்கணித்து மதி கெட்டலையாதே அம்புலியே! இப்படிப்பட்ட தெல்லிநகர்த் துர்க்கையுடன் வந்து விளையாடுவாய் என விளிக்கும் பாடல்.

பரவுமுலைப் பால்கொடுத்துப்
பாடுவித்த ஞானமதி
பட்டருக்காய்த் தோடெறிந்த
பழமமிர்த லிங்கமதி
அரவாக்கி விட்டுணுவை
ஐங்கரன்சீர் விளக்குமதி
அரிகேசன் காசியிலே
அணிவிளங்கச் செய்தமதி
குருமுகமாய்த் தமனுக்குக்
குளிர்பொற்கண் கொடுத்தமதி
குலமுனிவர் வியாசனுக்குக்
குணச்சுகரைத் தந்தசிவத்
திருமதியைப் புறக்கணித்து
செயல்மதிகெட் டலையாதே
தெல்லிநகர்த் துர்க்கையுடன்
சேர்ந்தாடாய் அம்புலியே.

மதி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திய அரிய பாடலிது. இவ்வாறு படித்து, ரசித்து மகிழப் பல பாடல்கள் இந்நூலில் உள்ளன.

    ————————–

3. நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்

1977-ல் பன்னூல் வித்தகரான கரவை வ. சிவராசசிங்கம் அவர்களால் இப்பிள்ளைத்தமிழ் நூல் இயற்றப்பட்டு யாழ்ப்பாணம் சைவத் தமிழ்க் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கோயில் எங்கு அமைந்துள்ளது, அதன் சுவையான வரலாறு என்னவெனக் காண்போம். இலங்கையின் நயினைதீவு நாகபூஷணி அம்பாள் எவரும் தன் தோற்றத்தை அறிய முடியாத சுயம்பு மூர்த்தமாக உள்ளவள். இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர், வேடர் என்பது வரலாறு. இவருள் நாகர்கள் ஆதித்திராவிடர்களான தமிழர்கள். இவர்களது வழிபாட்டுத்தலமாக விளங்கியது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். இதன் வேறுபெயர்கள் நாகதீவு, மணிபல்லவம், நாகதீபம், மணித்தீவு எனவெல்லாமாகும். மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘மணிபல்லவம்’தான் நயினாதீவு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இது அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய புவனேஸ்வரி பீடம் என்று அறியப்படுகின்றது.

இந்நூலிலிருந்து சுவையான சில பாடல்களைக் காணலாம்.

செங்கீரைப்பருவத்தைப் பாடும்போதில் தவழ்ந்தாடி வரும் குழந்தையின் அணிகலன்கள் எவ்வாறு அசைகின்றன, ஒலிக்கின்றன எனக் கவித்துவமாகப் பாடிக் களிப்பர் புலவர் பெருமக்கள். மார்பிலணி ஆரங்கள் அசைந்தாடும் என்பது வழக்கு. ஒரு பாடலில் நயினை வளர் அம்மை மார்பின்மீது ஆணிமுத்தாரம் மட்டுமின்றி அடியார் பாடும் பாமாலையும் அசைந்தாடுகிறதென்கிறார். இது ஒரு புத்தம்புதிய அரிய கற்பனை!

…………………………………
ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
றமைந்தமணி மார்பகத்தே
ஆணிமுத் தாரமும் அடியார்பா மாலையும்
அசைந்திசைந் தொலி செய்தாட
செய்யமல ரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச்
செங்கீரை யாடி யருளே
தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
செங்கீரை யாடி யருளே.

தாலப் பருவத்தின் ஒரு பாடலும் மிகப் புதுமையான இயற்கைக் காட்சியை விளக்கி, அதனை அம்மையப்பரோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது. கொன்றைமரத்தின்மீது குருக்கத்தி படர்ந்துள்ளதாம். இவற்றை வெண்மையான மலர்களைக்கொண்ட மல்லிகை சூழ்ந்துள்ளது; இதில் கொன்றை சிவபெருமானையும், பசுமை நிறங்கொண்ட குருக்கத்தி சியாமளை என்னும் அம்பிகையையும், நினைவு படுத்துகின்றன. கொன்றையும் குருக்கத்தியும் இணைந்தது அம்மையப்பர் திருவுருவாகும். இது இவ்விருவரும் முத்தாலான விதானமமைந்த (தொங்கும் மாலைகளான மல்லிகை மலர்கள் முத்துவிதானத்துக்கு உவமை) தேரில் பவனிவருவது போலுள்ளதாம். எத்துணை இனிய கற்பனை! முழுப்பாடலையும் காணலாமே!

கொத்துக் கொத்தாய் மலர்ந்த பொலங்
கொன்றை மரத்தின் மீதுமிகக்
குழைத்துச் செழித்து மணிப் பசுமை
கொண்ட குருக்கத் திச்செடிபோய்த்
தொத்திப் படர்ந்து கிடக்க நெடுந்
தூரமணக்கும் மல்லிகை மேல்
தொங்க லிட்டுச் சூழ்ந்திருக்கும்
தோற்றம் நோக்கும் அடியவர்க்கு
முத்து விரித்த விதான முறு
முழுமா மணித்தே ரூர்ந்துவரு
முக்கண் மூர்த்தி நின்னொடருள்
முகிழ்த்த கோலம் அளிக்கின்ற
சித்ரப் பொழில்சூழ் நயினை வளர்
செல்வி தாலோ தாலேலோ
சிவனார் இடம்வாழ் நாகம்மைத்
தேவி தாலோ தாலேலோ.

அடுத்து, வருகைப்பருவப்பாடலொன்று மெய்யடியார்களை எவ்வாறு அன்னை பிறவிப்பிணியினின்றும் நீக்குவாள் என விவரிக்கிறது. அடியவரின் கருத்தினுட் புகுந்து ஞான ஒளி கொடுத்து உய்யும் நெறியைக் காட்டி, கருவில் புகாவகையையும் உணர்த்தியருளுகிறாள் நயினை நாகம்மை!

கருவிற் புகுதா வகையெனது
கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
கதிபெற் றுய்யும் நெறிகாட்டும்
கதிரே வருக ………………. என்பன பாடலின் சில வரிகள்.

இது போன்ற எண்ணற்ற பாடல்கள். தமிழன்பர்கள் படித்துப் போற்ற வேண்டிய நூலிதுவாம். தொடர்ந்து மேலும் பல நூல்களைக் காண்போம்.

(வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.