Blog

  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    போதுமென்ற மனமே…

    திருமூலர்-1

    “போதும் என்ற மனமே புன்செய்யும் மருந்து” என்பது பழமொழி. ஒரு மனிதனுக்கு எந்தத்  தேவையையும் தனக்கு வேண்டிய அளவு மட்டும் பெற்றுக் கொண்டு, பின் “இது போதும், இதற்கு மேல் எனக்குத் தேவையில்லை” என்ற மனம் வருமானால் அவனுக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் தேவைகளுக்கு மேலும் வேண்டி நிற்பானேயாயில் அவன் தேவைகள் என்றும் பூர்த்தி அடைவதில்லை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்றும், இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்றும் மனம் சஞ்சலத்தில் உழன்று வேதனைக்கு வித்திடுகின்றது.

    வாழ்க்கையில்  ஒரு நல்ல செல்வ  நிலையில் இருப்பவனும். இல்லாத பாட்டுப் பாடி துயருறுகின்றான். ஒரு மன நோயாளியைப் போல் வாழ்கையை வாழுகின்றான்.

    இந்த ஆசையினால் ஏற்படும் துன்பத்திலிருந்து நம்மைக் கத்தட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வள்ளுவரோ கூறுகின்றார்:

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

    பேரா இயற்கை தரும்

    ஒரு முறை அரசனைப் பார்க்க நினைத்த  ஒரு சாது அரசனைச் சந்தித்தால்  தனக்கு வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் . அரண்மனையை நோக்கிச் செல்லுகின்றார். அங்கே அந்த அரசர் பிரார்த்தனையில் அமர்ந்திருக்கின்றார். அந்தப் பிரார்த்தனையின்போது அவர் இறைவனிடம் தனக்கு மேலும் செல்வங்களை வாரி வழங்குமாறு வேண்டுகின்றார்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சாது மௌனமாகத் திரும்பி விடுகின்றார். பிரார்த்தனையை முடித்த அரசர் அந்த சாதுவைப்  பார்த்து “என்ன வேண்டும்? ஏன் திரும்பிச் செல்லுகிறீர்கள்?” என்று கேட்கின்றார்.

    அந்த சாது  அரசனைப் பார்த்துச் சொல்கின்றார். “நான் ஏழை. உங்களிடம் உதவி கேட்டுச் செல்லலாம் என்று வந்தேன். ஆனால் இங்கு என்னை விட ஒரு பெரிய  ஏழையைக் கண்டேன். ஆகவே  நீங்கள் யாரிடம் உதவி கேட்கிறீர்களோ நானும் அதே இறைவனிடமே உதவி கேட்டுக்கொள்கிறேன்”  என்று பதிலளிக்கிறார்.

    ஆகவே நம்மில் பலரும் நம்மிடம் தேவைக்கு அதிகமான பொருள்கள் இருந்தாலும் ஒரு பிச்சைக்கராரைப் போல் வாழ்கின்றோம். இந்த நிலையை திருமூலர் மிக அழகாக விளக்குகின்றார்

    புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை

    அடையப்பட்டார்களும் அன்பிலரானர்.

    கொடையில்லை கோளில்லை கொண்டாட்டமில்லை

    நடையில்லை நாட்டில் இயங்குகின்றார்களே.

    எல்லாம் இருந்தும் தனக்கும் எதுவுமில்லையென நினைத்து வாழ்பவர்கள் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவர்கள் என்று அறிவுறுத்துகின்றார்  ஆகவே, போதுமென்ற மனமே ஒருவனுக்குச் செல்வச்சிறப்பைக் கொடுக்கின்றது. இதைவிட ஒரு அழகான அறிவுரையை நாம் வேறே எங்கு கேட்க முடியும்?

    இதே கருத்தை தன் உள்ளத்தில் நிறுத்தி நிலையற்ற வாழ்விற்க்காக ஏங்கும் மக்களைப் பார்த்த பட்டினத்தாரோ வருந்துகின்றார்

    நீர்க்குழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேஎண்ணிப்

    பாக்களவா மன்னம் பசித்தோர்க் களியாமல்

    போர்க்களெம தூதன் பிடித்திழுக்கு மப்போது

    ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.

    எவ்வாறு வேண்டாமையை நாம் வளர்த்துக்கொள்ள முடியும்? அதனால் பயன்தான் என்ன?  அதனால் நமக்கு அமைதியும் இன்பமும் கிடைக்குமா? இத்தனை கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது வள்ளுவரின் இந்தக் குறள் :

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

    யாண்டும் அஃதொப்பது இல்.

    (தொடரும்)

    Share
  • சுமைகளும் சுகங்களும்!

    -பெருவை பார்த்தசாரதி

    சுகங்களையே பெரிது மண்டும் மனிதர்கள்
    சுமைகளை வெறுப்ப துண்மை இயல்பன்றோ..!

    ஈரதன்பண்பைச் சீர்தூக்கி சிந்தையினுள் வைத்தால்சுமைகளும் சுகங்களும்
    சீராகுமுன் பயணம்..! சிறக்குமுன் வாழ்வுநிலை..!

    சூரியனும் வெண்ணிலவும் விண்ணிலே மாறிவருவதும்
    சுகமும் சுமையும் வாழ்வில்வலம் வருவதுமியற்கை..!

    இணையாகும் இவ்விரண்டும் இவ்வாழ்வில்..ஈதொரு
    நாணயத்தின் இருபக்கமென நினைவில் வையப்பா..!

    அன்னையவள் கருவைச் சுமப்பதைச் சுமையென
    அதனைக் கருதினால் சுகமாக மகவைப் பெறமுடியுமா..?

    தாயீன்ற தன்மகவைச் சுமந்தகாலம் சுமையேயாகும்
    சேயீன்ற மகிழ்வின்பின் பலசுகங்கள் பிறக்குமப்பா..!

    பதினான்கு ஆண்டுகள் இராமனேற்ற சுமைகள்பல..
    பதிவிரதை சீதாதேவி சுகமாயதை இறக்கிவைத்தாள்..!

    பிறகு தானேசுமையும் சுகமும்பல வடிவம்கொண்டு
    இறகு முளைத்து இராமாயணமென்னும் காவியமானது..!

    சுமைகண்டு வாழ்வில் துவண்டுவிடாதே எதையும்
    சுகம்கொண்டு எதிர்கொள் என்றது பகவத்கீதை..!

    சுமைகளும் சுகங்களும் நம்மிரண்டு கைகள்போலதைச்
    சமமாகப் பார்க்கப்பழகி வெற்றியடைந்தான் பார்த்தன்..!

    பாவிக்க வேண்டும் ஈரதையொன்றாக வென்பதை..மா
    பாரதக்கதை பக்குவமாக உணர்த்தியதை நீஉணர்வாய்..!

    குறையைச் சுமையாகவும் நிறையைச் சுகமாகவும்
    அரைகுறை யாகவறிந்தவராரும் சாதனை புரிவதில்லை..!

    காலிழந்த வாலிபனும் கையிழந்த நங்கையும்
    பார்புகழும் பாராலிம்பிக்கில் பதக்கம்வெல்வ தெதனாலே.?

    மிஞ்சியது எதுவுமில்லை எனயிடர்வரும் வேளையில்
    எஞ்சியவர் வாழ்வை யொருகணம்நீ நினைத்துப்பார்..!

    சுமையும்சுகமும் வாழ்க்கையெனும் நதியில் ஓடுமது
    சுழித்தோடும் சூழலை யெதிர்த்து நீவாழப்பழகு..!

    வாழ்க்கையுமொரு நற்பாடம் தானதைப் பக்குவமா
    வாழ்ந்திடலாம் முறையான பயிற்சிமேற் கொண்டால்..!

     

     

    Share
  • அவள் பேரழகி!

    -இந்து

    ஒற்றைச் சுழியில் தொடங்கி
    ஒரு வளைவு, இரு நெளிவு கடைசியில் ஒரு குழிவு ….
    என்னே எழில்…!
    தன் எழில் போதாதென்று சில சமயம் ஒய்யாரத் தங்கையுடன்….
    சில சமயம் காலில் சி்ணுங்கும் மெட்டி சுழியுடன்….
    மொத்தமாக அவள் பேரழகி….
    அந்த அவள் ‘காவிரித்தாய்’ அல்ல…
    அந்த அவள் உயிருள்ள மங்கையும் அல்ல….
    அவள் பாரதி தீராத காதல் கொண்டிருந்த உயிர்க் காதலியின் வாரிசுகள்…
    ஆம்….
    அவள் கன்னி ‘தமிழ்’த்தாயின் பிள்ளைகள்….
    அந்த அவள் ‘ஒ’, ‘ஓ’, ‘ஔ’…..

    ***
    பொறுமையாக இருக்க வேண்டும்…
    மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்…
    எதிரே தடைகள் இருக்கலாம்…
    இருந்தால் ஒதுங்கிச் செல்ல வேண்டும்…
    முன்னேறிச் செல்லும்போது தோல்வி அடையலாம்…
    தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது….
    விடாமுயற்சி செய்ய வேண்டும இலக்கை அடையும் வரை ….
    இவை என் வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்கள் அல்ல…
    பெங்களூரு ட்ராபிக் கற்று தந்த பாடங்கள்!!

    ***

    குட்டிக் குட்டி கைகள்…
    ரோஜா நிறக் கால்கள்….
    உன் குட்டி மூக்கு…
    பூந்தளிர்க் கன்னம்…
    பிறைநிலா நெற்றி…
    இப்படி இருப்பாயாடி என் மருமகளே…!
    அண்ணன் ஜாடையில் கண்கள் இருக்குமோ…?
    அண்ணி ஜாடையில் குட்டி உதடு இருக்குமோ..?
    நித்தமும் உன்னையே எண்ணி
    என் கவிதைச் சரக்கும் சுவைக்கவில்லையடி..!.

    முதல் முறை உருப்படியாய் என் அண்ணன் தந்த அழகுப் பொம்மை
    நீ மட்டும் தான் என் பெண்ணே…!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    krishna

     

     ”ஆண்டவா! நீலவண்ணம் பூண்டவா! நீள்விசும்பில்
       நீண்டவா! பாரதப் பாண்டவராய் – வேண்டவா?
       தூண்டவா பக்தியால்? தீண்டவா பாரதியாய்?
       கீண்டவா தீங்கைக் கிழித்து”….

     ”உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
      விண்டுரைத்த போதும் விசுவமே – கண்டுகொண்டேன்
      மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
      வித்தை பழகும் விதம்”….  (கிரேசி மோகன்….!)

     

     

    Share
  • எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

    vallamai_8th_year

    8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android இனி, ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். இதனைக் குறுகிய காலத்தில் உருவாக்கிய கலீல் ஜாகீருக்கு நன்றி.

    சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வாரந்தோறும் வல்லமையாளர் விருதுகளை வழங்கி வருகிறோம். முனைவர் செ.இரா.செல்வக்குமாரைத் தொடர்ந்து, முனைவர் செல்வனின் ஒத்துழைப்புடன் 222ஆவது வாரமாக வல்லமையாளர் விருதினை வழங்கியுள்ளோம். வாசகர்களின் பேராதரவுடன் படக் கவிதைப் போட்டி, 112ஆவது வாரத்தை எட்டியுள்ளது. கடினமான இப்பணியை மேகலா இராமமூர்த்தி செம்மையாக ஆற்றி வருகிறார்.

    கிரேசி மோகனின் புதுமையான கோணத்தில் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் இரட்டை விருந்தாக, ஓவியமும் கவிதையுமாகத் தினந்தோறும் வெளியாகி வருகிறது. முனைவர் சுபாஷிணியின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம், 87 வாரங்களை எட்டியுள்ளது. இன்னம்பூரானின் நாளொரு பக்கம், இசைக்கவி ரமணனின் சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள், அண்ணாமலை சுகுமாரனின் வரலாறுகளின் வேர், க. பாலசுப்பிரமணியனின் கற்றல் ஒரு ஆற்றல், திருமந்திரத்தில் தேன் துளிகள், நிர்மலா ராகவனின் நலம் .. நமறிய ஆவல், மீனாட்சி பாலகணேஷின் இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் என ரங்கோலிக் கோலமாகப் படைப்புகள் அணி வகுக்கின்றன.

    சி. ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எழிலரசி கிளியோபாத்ரா , உமர் கயாம் ஈரடிப் பாக்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்தவை. எளிய தமிழில் இவ்வளவு விரிவான விண்ணியல் / அறிவியல் ஆக்கங்கள், அச்சிதழ்களில் வெளிவருவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மலர்சபாவின் நான் அறிந்த சிலம்பு, சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்களாய்… என அடுக்கடுக்கான படைப்புகள், வாசகர் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    தொடர்கள் மட்டுமல்லாது தனிப் படைப்புகளும் தங்கள் தனி முத்திரையைப் பதித்து வருகின்றன. இவ்வகையில் வையவன், விப்ரநாராயணன், பழமைபேசி, ஒரு அரிசோனன், எஸ்.வி.வேணுகோபாலன், மீ.விசுவநாதன், மு. இளங்கோவன், எம். ரிஷான் ஷெரீப், தமிழ்த்தேனீ, கவிஞர் ஜவஹர்லால், ஜெயராமசர்மா, முல்லை அமுதன், மணிமுத்து, வேதா. இலங்காதிலகம், ராஜகவி ராகில், நா. பார்த்தசாரதி, கருமலைத்தமிழாழன், பெருவை பார்த்தசாரதி, கவியோகி வேதம், சுபாஷிணி திருமலை, சரஸ்வதி ராஜேந்திரன், உமாஸ்ரீ, பொன்.ராம், நாகினி, பா.ராஜசேகர் உள்ளிட்ட பலரின் பங்களிப்புகளும் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வருகின்றன.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பு, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் விரைவில் நூல்வடிவம் பெறுகிறது. வல்லமையாளர்களின் தொகுப்பும் விரைவில் மின்னூலாக வெளிவர உள்ளது.

    வல்லமையில் இன்று வரை 12,363 இடுகைகளை வெளியிட்டுள்ளோம். 12 ஆயிரம் பின்னூட்டங்களைப் பெற்றுள்ளோம். பல்லாயிரம் வாசகர்கள், உலகெங்கும் இருந்து வல்லமையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். வல்லமையின் கூகுள், பிளிக்கர், பேஸ்புக், வாட்சாப் குழுமங்கள், தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்குக் களம் அமைத்துள்ளன. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற இலக்குடன் திடமாக, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி வரும் வல்லமையை வாழ்த்துங்கள். தொடர்ந்து வாசியுங்கள். படைப்புகளை அனுப்புங்கள். ஆர்வமுள்ளோர், ஆசிரியர் குழுவுடன் இணைந்து செயல்படலாம். உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

    இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அவற்றைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இணைந்திருங்கள், இன்னும் சாதிப்போம்.

    Share
  • அன்னை 

    -சித்ரப்ரியங்கா ராஜா

    அன்பின் உருவம்
    இன்முகத்தரசி                                   annai
    ஈடில்லா குணவதி
    உத்தம பத்தினி
    ஊமையாய்ப் பலநேரம்
    எளிமையின் பிறப்பிடம்
    ஏற்றத்தாழ்வின்மை என்றும்
    ஐயம் தீர்க்கும் குரு
    ஒப்பனையற்ற தேவதை
    ஓய்வில்லா எந்திரம்
    ஔடதமாய் ஆயுள் வரை
    இஃதே அழகு அன்னை
    இனிதே பணிவோம் உன்னை!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்!

     

    kesavvannam

     

    ”எனக்கே எனெக்கென்(று) எவருளார் என்று
    தனக்கே தனக்குள் தவித்தால் – உனக்குள்
    உவமை இலாத ஒருத்தனைக் காண்பாய்
    அவனே ஹரிகிருஷ்ணன் ஆம்’’ …கிரேசி மோகன்….!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (112)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18471505_1321588284562034_1389758775_n

    126194543@N03_rஅனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 78

    க. பாலசுப்பிரமணியன்

    ஒலிஅதிர்வுகளும் கற்றலும்

    education-1

    கேள்வி அறிவைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகின்றன. இதிலிருந்து வரும் பல குறிப்புகள் கற்றலைப் பற்றிய நமது முந்திய கருத்துக்களை மாற்றியும் அவைகளில் பலவற்றுக்கு உயிரூட்டியும் வருகின்றன. உதாரணமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஆசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் கேள்வி அறிவின் மூலமாகவே  (oral communications) கற்றல் நடைபெற்று வந்ததது. இதில் கேட்கும் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவை மூளையில் நினைவாற்றலாக மாறி வாழ்க்கை முழுவதும் தங்கள் பரிமாணங்களை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தன. கேள்வி  அறிவால் பெறப்படும் அறிவுத்துகள்கள் சில நேரங்களில் சொற்ப காலத்தில் வலுவிழந்து போய்க்கொண்டிருந்தன (volatile memory). சில புதுப்பிக்கப்பட்டு குறுகிய காலகட்டத்திற்கு  தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன (short-term memory). மற்றும் சில நினைவில் ஆழமாகப் பதிந்து நிரந்தர நினைவாக (Long-term memory)அமைந்து விடுகின்றன. இதைப் பற்றிய ஆரய்ச்சிகள் கேட்டலுக்கும் -நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன.

    இதன்படி உணர்ச்சித் தாக்கங்கள் உள்ள உந்துதல்கள் (Emotionally Competent Stimuli) மூளையின் நினைவாற்றல்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும் கற்பவர்களின் நினைவுகள் (memory), அறிவுப் பரிமாணங்கள்(cognitive parameters), செயல்கள் (Skills and actions) மற்றும் பதில்கள் (responses) ஆகியவை இந்த உணர்ச்சித் தாக்கமுள்ள ஒலி உந்துதல்களால் சிறப்புறுவதாகவும் சொல்லப்படுகின்றன. ஆகவே ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தையோ அல்லது ஒரு கருத்தையோ அல்லது ஒரு விளக்கத்தையோ உணர்ச்சி பூர்வமாக சொல்லிக்கொடுக்கும்பொழுது அவை கற்பவர்கள் நினைவில் ஆழமாகப் பதிவது மட்டுமின்றி அவர்கள் கருத்துக்களிலும் கருத்துக்களின் மேலாண்மையிலும் பெரிய தாக்கத்தை (Behavioural modifications) ஏற்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான செயலாக அமைகின்றது. இதை ஆசிரியர்கள் கருத்தில் கொண்டு தங்கள் வகுப்பறைச் செயல்முறைகளை மாற்றியமைத்தால் அதன் விளைவுகள் பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை,

    பல நேரங்களில் ஆசிரியர்கள் கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்தும் பொழுது அதிலுள்ள பாத்திரமாகவே மாறுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆங்கிலக் கவிஞர் wordsworth அவர்களின் Daffodils என்ற மலரைப் பற்றிய கவிதையை எங்கள் ஆசிரியர்  நடத்திய பொழுது அந்த மலரைப் போலவே ஆடியதையும், தமிழ் பேராசிரியர் கம்ப ராமாயணத்தில் குகனைப் பற்றிய படலத்தில் குகனாகவே மாறியதையும் நினைவில் கொள்ள முடிகின்றது.

    இதனால்தான் வகுப்பறை என்பது ஒரு நாடக மேடை என்ற கருத்தும் நிலவுகின்றது. இங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் கருத்துப் பரிமாற்றத்தில் நடிகர்களாகவும், பாடலாசிரியர்களாகவும், பாடகர்களாகவும் உருவாகின்றனர் என்ற கருத்து பல மேலைநாடுகளில் இன்னும் கருதப்படுகின்றது.

    அது மட்டுமல்ல, கேள்வி அறிவு ,ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களிடையே ஏற்படுகின்ற கருத்துக் பரிமாற்றங்களாலும் (Interactive peer learning ) வலுப்படுகின்றது. ஆகவே வகுப்பறைகளிலும் அதன் வெளியிலும் நடத்தப்படும் பாடங்கள் கருத்துக்களின் பரிமாற்றங்களை வலுப்படுத்தும் வண்ணம் சூழ்நிலைகள் உருவாக்கப்படவும் மேம்படுத்தப்படவும் வேண்டும். கற்றலில் இந்த சமநிலை கருத்துப் பரிமாற்றமாகளால் ஏற்படும் நன்மைகளை பற்றி வெகுவாக கூறப்பட்டுள்ளது.

    இந்த ஒலிவடிவங்கள் எவ்வாறு நமக்குத் தேவையான கருத்தையோ பொருளையோ தருகின்றன என்பது பற்றிய மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒலி அலைகள் காதுகளின் செவிப்பறைகளைத் தாக்கும் பொழுது அவை நுண்ணதிர்வுகளாக மட்டும் இருக்கின்றன. காதுகளுக்கு அதன் மொழி, பொருள்  மற்றும் மற்ற கருத்து வண்ணங்கள் தெரிவதில்லை.

    ஒலி அதிர்வுகள் தரும் சுருதி, குரல், வளம், ஏற்ற தாழ்வுகள் போன்றவை காதிலிருந்து நரம்புகள் வழியாக மூளையின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவை பரிசீலிக்கப் பட்டு, மூளை நினைவுகளில் உள்ள பழைய அறிவுத்துகள்களோடு ஒப்பிடப்பட்டு நமக்கு புலப்படுகின்றது. அப்பொழுது அந்த ஒலி எந்த மொழியைச் சார்ந்தது, எப்படி ஒலிக்கின்றது, அதன் உட்பொருள் என்ன, எந்த நோக்கத்தில் சொல்லப்படுகின்றது, எப்படிப்பட்ட உணர்வுகளோடு அது இணைந்து வருகின்றது என்ற பல கருத்துக்களை மூளை நமக்குத் தருகின்றது. இந்த கருத்துக்கள், உணர்வுகள் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்டவை. ஆகவே எந்த இரு நபர்கள் கேட்கும் வார்த்தைகளுக்கான ஒரே பொருளை ஒரே மாதிரி ஒரே தன்மையில் பெறுவது என்பது  ஒரு விந்தையான செயல். இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதால் ஒரே நிகழ்வை இரு மாணவர்கள் வெவ்வேறு விதமாக பொருள் கொள்ள வாய்ப்புக்கள் உண்டு. இது கற்றலில் சமநிலையை ஏற்படுத்துவதற்குத் தடங்கலாக இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவேதான் ஆசிரியர்கள் ஒரே கருத்தை பல விதமாக எடுத்துச் சொல்லும் பொழுது அதன் விரிவாக்கங்கள் புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையே உள்ள தூரங்களை குறைக்க உதவும்.

    மூளை நரம்பியல் மற்றும் கற்பியல் பற்றிய வல்லுநர்கள் பொதுவாக “அர்த்தங்கள் கொள்வதை ” (Meaning Making) மூளையின் ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதுகின்றனர். இந்தச் செயலுக்கு மூளையின் பல பகுதிகள் பல விதங்களில் ஒருங்கிணைந்து ஒத்துழைத்துச் செயல்படுகின்றன. இந்தச் செயலில் மூலையில் உள்ள “கண்ணாடி நியூரோன்களின் ” (mirror neurons) பங்குகள் பற்றியும் ஆரய்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதைத்தவிர, சொல்லப்படும் வார்த்தைகள் எவ்வாறு மூளையில் தாக்கம் ஏற்படுத்தி செயல்களை பாதிக்கின்றன, செயல்களை ஊக்கப்படுத்துகின்றன, செயல்களில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு உதவியாக இருக்கின்ற்ன என்பது பற்றிய ஆராய்ச்சி “நரம்பியல் மொழி நிரலாக்கங்கள் ” *(Neuro -Linguistic Programing) என்ற தலைப்பின் கீழ் உலகத்தின் பல நாடுகளில் செய்யப்பட்டு பயிற்சியளிக்கப் பட்டு வருகின்றது.

    ஆகவே கற்றலில் கேட்டல் என்பது ஒரு தலையாய செயல். இதுபோன்று படித்தல் என்ற செயல் எவ்வாறு கற்றலுக்கு உதவுகின்றது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (56)

    நிர்மலா ராகவன்

    என்னைப்போல் உண்டா!

    நலம்
    இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள்.

    இன்னொரு குழந்தை, ஒரு முறை தலைமயிரை வெட்டிக்கொண்டு வந்ததும், `அழகா இருக்கியே!’ என்று எல்லாரும் பாராட்ட, தினசரி தானே வெட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்! வீட்டிலிருந்த கத்தரிக்கோல்கள் எல்லாவற்றையும் ஒளித்துவைக்க நேர்ந்தது!

    பண்டைக்காலத்தில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த நார்சீஸஸ் (Narcissus) என்பவன் நீரில் தெரிந்த தனது பிம்பத்தைக் கண்டு சொக்கிப்போய், நகராது அதையே பார்த்துக்கொண்டு இருந்தானாம். நாளடைவில், ஒரு மலராகி விட்டானாம்! இது காதில் பூசுற்றும் வேலையோ, என்னவோ, ஒரு பூவிற்கு இன்றளவும் அவன் பெயர்தான்.

    சிறுகுழந்தை, `உலகமே தன்னைச்சுற்றித்தான் இயங்குகிறது!’ என்பதுபோல் நடந்துகொள்வது இயற்கை. வளர்ந்த பின்னரும் அப்படியே இருப்பவர்களுக்கு நார்சீஸிஸம் (Narcissism) என்ற தன்மை இருப்பதாகப் பெயர். இது அளவுக்கு மீறினால், ஒருவித மனநோயாகிறது.

    `நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று கடவுளைப்போல் தன்னை நினைக்கும் ஒருவன், `நான் செய்வதெல்லாம் சரிதான்!’ என்று அலட்டிக்கொண்டு, அவன் சொல்லிலோ, செயலிலோ குற்றம் கண்டுபிடிப்பவர்களை எதிரியாகப் பாவித்து நடத்துவது நார்சீஸிஸம்.

    அளவுக்கு அதிகமான சுயநலம், தன் திறமைகளையும் அழகையும் தானே மெச்சி, `என்னைப்போல் உண்டா!’ என்ற பெருமிதம் கொள்வது, பிறரது பாராட்டுக்காக ஏங்குவது போன்ற குணங்கள் நார்சீஸிஸத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.

    எதற்குப் பிறர் மெச்சுவதுபோல், பிறரைப்போல் இருக்க வேண்டும்? நாம் நாமாகவே இருந்தால் நிறையச் சாதிக்கலாமே!

    இது புரிந்து, `என்னால் முடியும்!’ என்று தன் திறமையின் எல்லையை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஒரு காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பது தன்னம்பிக்கை.

    தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் வழிகள்: நம்மை பயப்பட வைக்கும் (நல்ல) காரியம் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும்.

    நம் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு. நாம் நம்மையே தாழ்வாக நினைக்கும்போதுதான் பொறாமை பிறக்கிறது.

    நார்சீஸிஸம் ஏன் வருகிறது?

    தமக்கு என்ன வதை நேர்ந்தாலும், அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளத் தெரியாது சிறுவர்களுக்கு. ஆனால், அதை மறக்க முடியாது, அல்லது ஏதாவது சிகிச்சையால் அதை ஏற்கும் திறனையும் பெறாது, பெரியவர்களான பின்னரும் அதன் பாதிப்புடன் இருப்பார்கள் ஒரு சிலர்.

    அப்படிப்பட்ட ஒருவரின் கதையைப் பார்ப்போமா?

    சீராகச் செயல்படாத குடும்பம் அது. மிகுந்த கோபக்காரரான தந்தை மனைவியுடன் அவள் பெற்ற குழந்தைகளையும் உடல் வதைக்கு ஆளாக்கினார். பணத்தட்டுப்பாடு வேறு. சகோதர சகோதரிகளுக்குள் மட்டும் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இல்லை, கல்வியில்தான் மனம் போகும்? குடும்பத்தில் எல்லாருக்கும் சொல்ல முடியாத அவமானம் மற்றும் தாழ்மை உணர்ச்சி.

    சிறு பிராயத்துத் தேவைகள் மாறாமலே வளர்ந்த அந்த ஒருவன் தன் தேவைக்காகத்தான் பிறர் இருக்கிறார்கள் என்பதுபோல் பிறரை நடத்தினான். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அளவுகடந்த ஆத்திரம் எழும். தன் குறைபாடுகளை ஏற்கத் துணியாது, பிறரது குற்றங்களையே கவனிப்பான். `நான் ஏதோ விதத்தில் தாழ்ந்தவன்!’ என்று உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இருக்க, தெரிந்தவர், தெரியாதவரை எல்லாம் மட்டம் தட்டி, அதனால் தான் ஓரளவு உயர்ந்துவிட்டதாக மனப்பால் குடித்தான்.

    முன்பின் தெரியாதவர்களுடன் அலட்டலாகச் சிரித்துப் பேசி, பலரது நட்பைப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்கள் இவனைப் போன்றவர்கள். ஆனால், தம் குடும்பத்தாருடன் இணக்கமாக நடக்க மட்டும் தெரியாது. பிறருக்கு உரிய அன்பையும் மரியாதையையும் அளிக்கத் தவறிவிடுவதால், காலப்போக்கில் பிறரது மரியாதையை இழந்துவிடுகிறார்கள்.

    இதெல்லாம் பயத்தால் ஏற்படுவது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    என்ன பயம்?

    பிறர் நம் தோற்றம், செயல்களை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற பயம் இத்தகையவர்களிடம் நிலைத்திருக்கும். ஆகையால், பிறர் பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புவதைத்தான் வெளிக்காட்டுவார்கள். இதற்காகவே பிறருக்காக நிறைய நேரத்தைச் செலவிடுவார்கள். இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்களுக்கு ஆரம்பத்தில் நிறைய நண்பர்கள் வாய்ப்பதில் ஆச்சரியமில்லை.

    இக்குணம் கொண்ட ஒருவன் கையாளும் பொதுவான சில முறைகள்

    தான் செய்த தவறுக்குப் பிறரைக் காரணம் காட்டுவான்.

    எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் அநாவசியமான பொய்.

    உதாரணம்: நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டு, நுழைவுச்சீட்டு கிடைக்காது திரும்பியதும், `உன்னை விட்டுப்போக மனமில்லை. அதனால் திரும்பிவிட்டேன்!’ என்று கூசாமல் மனைவியிடம் கூறி, அவளுடைய நல்லெண்ணத்தைப் பெற முயற்சிப்பது.

    மிரட்டல். (`யாருமே நான் சொல்வதைக் கேட்பதில்லை. நான் இருந்து என்ன பயன்? தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்!’)

    கொடுமைப்படுத்துதல்.

    `உன் மனசில யாரோ இருக்கான்!’ என்று, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், மனைவியைச் சாடுவது. மனைவியை உடல் மற்றும் உணர்ச்சிபூர்வமான வதைக்கு உட்படுத்திவிட்டு, `தப்பு செய்தது நீதானே? நான் உன்னை இப்படி நடத்துவது சரிதானே?’ என்று குற்ற உணர்ச்சியை அவளுக்கே திருப்புவது.

    பிறர் சொல்லில், செயலில் ஓயாது குற்றம் கண்டுபிடிப்பது.

    பொய்யான வாக்குறுதிகள். (`உன்னைத் தங்கத்தாலேயே இழைக்கப்போகிறேன்!’ `நாம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போகலாமா?’)

    மேற்கண்ட எதுவும் பலிக்காவிட்டால், முகத்தைத் தூக்கிக்கொண்டு, மௌனமாக நாட்களைக் கடத்தல். இது கெஞ்சலில் முடியும்.

    இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் சமாளிப்பது?

    `நான் ரொம்ப கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்!’ என்று பரிதாபகரமாக ஒரு இளைஞன் கூறும்போது எந்தப் பெண்ணின் மனமும் உருகிவிடாதா! ஆனாலும், திருமணத்துக்குமுன் ஒருவன் இக்குணங்களை வெளிப்படுத்தினால், அவனைவிட்டு விலகுவதுதான் புத்திசாலித்தனம்.

    திருமணமானதும் சில பெண்கள், `உணர்ச்சிபூர்வமான வதை’ என்று விவாகரத்து கோருகிறார்கள்.

    பொறுத்துப்போகவேண்டிய கட்டாயம் இருப்பவர்கள், தான் எந்தத் தவறும் செய்யவில்லை, கணவருக்குத்தான் மனநிலை சரியில்லை என்று புரிந்து, அவர் வாயிலிருந்து வெளிப்படும் கடும் சொற்களுக்கு மதிப்பளிக்காது, தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டால், ஓரளவு அமைதி பெறலாம்.

    நார்சீஸிஸம் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் இருக்கிறதாம். குற்றவாளி: அவர்களுடைய ஹார்மோன்.

    தகுதி இல்லாவிட்டாலும் எத்துறையிலாவது பிரபலமாக விழைபவர்கள், நடிப்புத்துறையில் ஈடுபடும் ஆசை இருப்பவர்கள் அல்லது ஈடுபட்டிருப்பவர்களில் பலரும் நார்சீஸஸத்தால் பாதிக்கப்பட்டவர்களாம். (நடிகைகள் சிலர் தொலைகாட்சியில் பேட்டி அளிக்கும்போது தம் நீண்ட (போலி) முடியை மார்பில் விட்டுக்கொண்டு, அடிக்கடி அதைத் தடவுவது இதனால் இருக்குமோ?)

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(168)

    –செண்பக ஜெகதீசன்

    வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
    தானறி குற்றப் படின். (திருக்குறள் -272: கூடாவொழுக்கம்) 

    புதுக் கவிதையில்…

    தவறென அறிந்தபின்னும்,
    அதைச் செய்ய
    மனம் நாடும் ஒருவன்
    கொண்ட
    உயர்ந்த தவக்கோலத்தில்,
    ஒரு பயனுமில்லை…! 

    குறும்பாவில்…

    அறிந்தே தவறுசெய்ய எண்ணங்கொண்டோன்,
    வானுயர் தவக்கோலம் கொண்டாலும்
    வராது நற்பலனே…! 

    மரபுக் கவிதையில்…

    குற்ற மென்றே தெரிந்தபின்னும்
         -கேடு செய்ய நினைத்திடுவோர்,
    கற்று யர்ந்த துறவிபோலக்
       -காவி யுடையும் தண்டுடனே
    மற்றும் பலவாய்த் தவவேடம்
      -மாற்றி மாற்றிப் போட்டாலும்,
    பெற்று விடவே போவதில்லை
      -பெரிதாய் நல்ல பயனதுவே…! 

    லிமரைக்கூ…

    அறிந்தே செய்வார் கேடு,
    உயர்தவ வேடத்திலும் ஒன்றும்பெறார்,
    பெறுவார் பலனாய்ப் பாடு…! 

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத தவறு செய்யாத,
    தவறுன்னு தெரிஞ்சிதுன்னா
    தவறிக்கூட தவறு செய்யாத… 

    தவறுன்னு தெரிஞ்சபின்னும்
    தவறுசெய்ய மனசுவச்சா
    தவறிப்போவான் பாத்துக்கோ… 

    அவன்
    தவசிபோலக் காவிகெட்டிப்
    பெருசாத்
    தவவேசம் போட்டாலும்,
    பயனில்ல பயனில்ல
    கொஞ்சங்கூடப் பயனில்ல… 

    அதால,
    தவறு செய்யாத தவறு செய்யாத,
    தவறிக்கூட தவறு செய்யாத…!

     

     

     

    Share
  • ஆணடிமைகள்!

    -தமிழ்த்தேனீ

    ஆண்களே விழித்துக்கொள்ளுங்கள்!

    பாகம் 1:

    இது பெண்களுக்கு எதிரான கட்டுரை அல்ல; ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை முயற்சி. 

    “Henpecked husbands“ என்று இதுவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் “Henpecked Wives“   என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

    கீழே எழுதியிருப்பதைப் படித்துவிட்டு உடனே பொங்காமல் சொற்களை அவசரப்பட்டு அள்ளித் தெளித்து விடாமல்  தீர ஆராய்ந்து  விவாதிக்க  தைரியமான  உண்மையான ஆண்பிள்ளைகளே வாருங்கள். அப்படி உண்மைகளைத் தைரியமாக சொல்லிவிட்டால் மறுநாளிலிருந்து உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற  தார்மீக  பயம் கொண்ட ஆண்பிள்ளைகள் இந்த இழையில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து தங்களுடைய  மானமுள்ள சாப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

    அல்லது  பெண்டாட்டியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு  தைரியமாக களத்தில் இறங்குங்கள். தைரியமாக கருத்தைச் சொல்லுங்கள். அவ்வப்போது பரிதாபமாக பெண்டாட்டியைப் பார்த்து கோவப்படாதே சும்மா இந்த  இழைக்காக  எழுதுகிறேன் என்று சமாதானப்படுத்திக்கொண்டே எழுதுங்கள்.

    மீண்டும் தலைப்பில் எழுதியதையே இங்கே அளிக்கிறேன்

    Henpecked husbands என்று இது வரை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்

    Henpecked Wives என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

    அதே போல்  தமிழில் பெண்டாட்டிதாசன்  என்னும் சொல்லை உருவாக்கிய  தைரியமான ஆண்பிள்ளைகள் பெண்டாட்டிக்கும்  பெண்மணிகளுக்கும் பயந்துகொண்டு அஞ்சி  “புருஷதாசி“ என்னும் சொல்லை  உருவாக்காமலே இருந்த  நம் முன்னோர்கள் முதல் இன்னோர்கள் வரை அனைவருக்கும் ஒரு கேள்வியாகவே இதைக் கேட்கிறேன்.

    பாகம் 2:

    அதே போல் தாசி என்கிற  சொல்லுக்குத் தவறான பொருளைக் கற்பித்த  அனைவரையும்  கண்டிக்கிறேன்.

    ஒரு பெண்ணானவள் கணவனுக்கு நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்,  படுக்கையில் தாசியாய் இருந்தால்தான்  பத்தினி  என்று பெரியவர்கள்  எல்லோரும் சொல்கிறார்கள். இது தவறான  சொல்லாடல் அல்லவா?

    ஏனென்றால்  ஒரு ஆணை கணவனாக  வரித்து அவன் மேல் பக்தியும் ப்ரேமையும் கொண்டு ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்னும் வேதவாக்கைக் கடைப்பிடித்து அவனுக்காவே வாழும் உத்தமப் பெண்மணிக்கும்  தாசி  என்கிற பெயர். அதே போல் ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் த்ரோகம் செய்து பலருடன் வாழும் பெண்மணிக்கும்  தாசி என்கிற பெயர்  என்றால் எங்கோ  இடிக்கிறதே.   ஆகவே களங்கப்படுத்தும் வகையில்    மானத்தைக் காற்றிலே  பறக்கவிட்டுப் பொருள்ஈட்டும்  பரத்தைக்கும் தாசி என்கிற  சொல்லைக் வைக்காதீர்கள்.   தாசி என்றால்  காதலுள்ளவள்  அன்புள்ளவள் பக்தியுள்ளவள் பாசமுள்ளவள் என்றெல்லாம் பொருள் சொல்லாமல்  ஒரு தவறான பொருளை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே  இது நியாயமா?

    கண்ணதாசன் என்று தைரியமாக பெயர் வைத்துக்கொள்ளும் இந்த நாட்டிலே  கண்ண தாசி கிருஷ்ணதாசி என்று பெயர் வைத்துக்கொள்ள ஒரு பெண்மணியால் இப்போது முடியுமா?

    அடியேன் தாசன் என்று ஒரு ஆணால் தைரியமாக சொல்ல முடியும் ஆனால் அடியாள் தாசி என்று ஒரு பெண்ணால் தன்னைச் சொல்லிக் கொள்ள முடியுமா?

    முடியாது  ஏனென்றால் தாசி என்றால் உண்மையான பொருளை மறைத்துக்  கேவலமான பொருளை மக்கள் மனதிலே திணித்துவிட்டார்கள்  அதனால் முடியாது.

    ஏற்கெனவே கிருஷ்ணதாசி என்றுதான்  பக்த  மீராவுக்கும் அவர் போல் கிருஷ்ணன் மேல் காதல் அன்பு பாசம்  பக்தி கொண்டவர்களுக்கும்  பெயர் என்று  சப்பைக் கட்டுக் கட்டவேண்டாம் . இப்போதைய  காலகட்டத்தில்  அதுவும் குறிப்பாக தாசி என்கிற சொல்லுக்கு  தவறான பொருள் கொண்ட  இக்காலத்தில்  யாரேனும் தைரியமாக கிருஷ்ணதாசி என்றோ  ராம தாசி என்றோ  பெயர்  வைத்துக்கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். 

    பாகம் 3 :

    இன்று வரை பெண்ணுக்குப் பெண்ணே  எதிரி என்னும் சொல் வழக்கு இருக்கிறது.   ஒரு பெண்ணுக்கு எதிரியாக இன்னொரு பெண்ணைத்தான் சொல்கிறார்களே தவிர  ஒரு பெண்ணுக்கு  ஆணே எதிரி  என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா?  இல்லை  ஏனென்றால்   ஆண்கள்  பெண்ணுக்கு எதிரி அல்ல;  அடிமைகள் என்பதை  பெண்மணிகள் நன்றாகவே உணர்ந்திருந்த காரணத்தால்தான் அப்படிப் பெண்ணுக்கு ஆணே எதிரி  என்கிற  சொல் வழக்கை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

    நன்றாக யோசித்துப்  பார்த்தால்  அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இராமாயணக் காலம் முதற்கொண்டு  கைகேயி சூர்ப்பனகை போன்றோர்கள்  மஹாபாரதக் காலத்திலே  குந்தி தேவிக்கு  முதலில் குழந்தை பிறந்துவிட்டது என்று பொறாமைப்பட்டு  அம்மிக் குழவியால்  தன் வயிற்றிலே இடித்துக்கொண்டாள் காந்தாரி அப்படி இடிபட்டதால்  101  சதைப் பிண்டங்களாக  சிதைந்த  அந்த  சதைப்பிண்டங்களை உயிர் பிழைக்க வைத்து  நூற்றி ஒரு குழந்தைகளாகப் பிறக்க வைத்தனர் என்பது  மஹாபாரத நிகழ்வு.

    சரி அதை விட்டுவிடலாம்!  கற்புக்கரசி  கண்ணகியின் வாழ்வைக் குலைத்தது   மாதவிதானே தவிர   பாண்டிய  மன்னன் அல்ல; பாண்டிய மன்னன் கோவலனின் உயிரைத்தான் எடுத்தான்.  ஆனால்  மாதவி  கோவலன் என்கிற  ஆணின் மானத்தை உயிரை உடமைகளை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு  கண்ணகியின் வாழ்வைக் குலைத்தாள்.

    ஆக கண்ணகி என்கிற  கற்புக்கரசியின் வாழ்வைக் குலைத்தது  மாதவி  என்கிற இன்னொரு பெண்தான் இது சிலப்பதிகாரம்.

    ஆகமொத்தம் இதிகாச புராணங்கள் இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே பெண்கள்தான் பெண்களுக்கு எதிரிகளே தவிர  ஆண்களல்ல  என்பது  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    ’சினிமாவுக்குப் போன  சித்தாளு’ என்னும் கதையில் திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சாதாரண கீழ்த்தட்டு பெண்மணி  வழக்கத்துக்கு மாறாக  அவள் புருஷன் மேல்  விழுந்து விழுந்து கட்டிக்கொண்டு கொஞ்சுகிறாள்  புருஷனே ஆச்சரியப்படுகிறான்  என்றெல்லாம்  எழுதிவிட்டு, அந்தப் புருஷன் போட்டிருக்கும் பனியனில் ப்ரபல நடிகரின் புகைப்படம் பதிந்திருக்கிறது  என்று எழுதினாரே!

    இப்போதைய செய்திதாள்களிலே பார்த்தால்  கள்ளக் காதலனுக்காகக் கணவனைக் கொன்ற  காரிகை என்றுதான் தலைப்புச் செய்தியே  போடுகிறார்கள். அன்னிய நாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டு  தங்களின் அழகால் மயக்கும் தன்மையால் ரகசியங்களைக் கவர்ந்து ஆண்களைப் புத்தி பேதலிக்க வைத்து மன்னாதி மன்னர்களையும் மண்ணைக் கவ்வ வைப்பது பெண்களா  அல்லது ஆண்களா என்று யோசித்தால் ஆதாரங்களே சொல்கின்றன பெண்கள்தானென்று.

    ஒவ்வொரு ஆணும் பயப்படும் ஒரு நிகழ்வு இது! ஒரு பெண் ஒரு ஆணை அடையவேண்டும் என்று நினைத்து விட்டாலோ  அல்லது அவனிடம் உள்ள பொருட்களை கவர்வதற்காகவோ  அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்துக்காகவோ அந்த ஆணை அணுகும்போது அந்த  ஆண் சம்மதிக்காவிடில்   கூசாமல்  இந்த ஆளு என் கையைப் பிடித்து  இழுத்துவிட்டான்  என்றோ  என்னிடம் தவறாக நடந்துகொள்ள  முயற்சித்தான் என்றோ அந்தப் பெண்மணி சொல்லிவிட்டால் உடனே  எல்லா ஆண்களும்  சற்றும் யோசிக்காமல் நடந்த  உண்மையென்ன என்பதை ஆராயாமல்  ஒற்றுமையாக சேர்ந்து  ஒரு பொண்ணுகிட்டே இப்பிடியா நடந்துக்கறது. (மனதுக்குள்  எனக்கு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே  என்று முணுமுணுத்துக் கொண்டே) அந்த வாய்ப்பு கிடைக்காத  ஏமாற்றத்தையும் ஆத்திரமாக மாற்றிக்  குற்றம் சொல்லப்பட்ட  ஆண்மகனுக்கு  தர்ம அடி கொடுக்கும் ஆண்களே அதிகம் என்கிற ஒரே காரணத்தால் பயப்படும் ஆண்களே!  இப்போதாவது தைரியமாக  உண்மையை சொல்ல  முன் வாருங்கள். இந்த அரிய  சந்தர்ப்பத்தையும்  இழ்ந்துவிட்டால் ஆணினத்துக்கு  விமோசனமே கிடையாது. நன்றாக யோசித்துப் பாருங்கள்!

    பாகம் 4 

    ஒருபெண் நினைத்தால் அவள்  சாதுர்யமாகவோ அல்லது தன் அழகாலோ தன் கவர்ச்சியாலோ அல்லது அன்பாலோ பாசத்தாலோ காதலாலோ  ஒரு ஆணை வீழ்த்த  முடிகிறது, ஆனால் ஆண்கள் தாம் விரும்பும் பெண்ணை அடைய எத்தனையோ முயற்சிகள் செய்தும் தோற்றுப் போகிறார்கள். 

    இல்லையேல் அவள் கிடைக்காத ஆத்திரத்தால் அவளைத் துரத்தி  அவளுக்கு கேடு விளைவித்து  மாட்டிக்கொண்டு கம்பி எண்ணுகிறார்கள். சாதுர்யம் என்னும் கலை ஆண்களுக்கு வரவே வராதோ? வருவதில்லை  என்பதே  உண்மை. ஐயோ பாவம் ஆண்கள்!

    ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கத் தொடங்கினால் ஒரு சிறு கண்ணசைவிலேயே உணர்த்தி விடுகிறாள். ஆனால் ஆண் காதலிக்க ஆரம்பித்தால் ஒன்று வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான் அல்லது அசடு வழிகிறான், அல்லது காதலைச் சொல்ல தடுமாறுகிறான், அப்படியே தைரியம் கொண்டு அந்தக் காதலைச் சொல்ல முடிவெடுத்தாலும் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் அந்தப் பெண்ணைக் கவர நீ இல்லேன்னா நான் உயிரை விட்ருவேன்  என்றோ, அல்லது தன்  மேல் இரக்கம் வருவதற்காக தன்னையே அழித்துக்கொள்ள முயன்று அதன் மூலமாக அவளுக்கு உணர்த்த  முனைகிறான். ஆனால் அந்தப் பெண் அவன் உணர்ச்சிகளை புரிந்துகொண்டாலும் அவளுக்குத் தன்மேல் தன் அழகின்மேல் இருக்கும்  அபார நம்பிக்கையால்  அவனை விலக்குகிறாள், அவளுக்குப் பிடித்தவனையே காதலிக்கிறாள். 

    அதனால் ஆண் உணர்ச்சிவசப்படுகிறான். கதாநாயகன் என்னும் அந்தஸ்திலிருந்து  வில்லனாக  மாறுகிறான். சமூகத்திலே  கெட்டபெயர் வாங்குகிறான். ஒரு பெண்ணின்  சம்மதமே அவனை கதாநாயகனாகவோ வில்லனாகவோ மாற்றுகிறது. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பர்  சொன்னதிலிருந்து தெரிகிறது. அந்தச் சீதையான  அவள்  மட்டும் அண்ணலை நோக்காதிருந்தால் அண்ணல் ராமன் வில்லனாகவும்  ராவணன் கதாநாயகனாகவும்  மாறி இருப்பான் என்பதே உண்மை.

    பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்கிறார்  அது  உண்மையே.    அப்படிக் கண்ணால் காதலை ஒரு பெண் சொல்லாத போது ஒரு கடுகும் சிறு கடுகும் மா மலையாகிறது ஆணுக்கு. 

    ஆனால் லோக மாதாவான சீதை பரப்பிரும்மத்தை ஏற்கெனவே அறிவாள் அதனால் அவளும் நோக்கினாள் பிரிந்த  தம்பதிகள் மீண்டும் ஒன்று கூடினர் அவ்வளவே. அவர்களைப் பிரிக்கமுடியாது என்பதை அறியாத ராவணன்   வீண் முயற்சியால் கெட்ட  பெயர் எடுத்தான். 

    பாகம் 5

    பெண்பார்க்கும் படலத்திலே  அந்த  நாள் முதல்  இந்த  நாள் வரைப்  பெண்கள் மிகச்சரியான தேர்வு முறையையே கையாண்டனர். உண்மையில் பெண் பார்க்க வந்த  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் அதையும் பெற்றோர்களுக்கு உணர்த்தியும்  பிடிவாதப் பெற்றோர்களால் பிடிக்காத மாப்பிள்ளைக்கு மணமுடிக்கப்பட்டால்  முழு மனதோடு வாழாமல்  துன்பத்துக்கு ஆளாகினரே ஒழிய பிடித்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பது உண்மை. அதையும் மீறிச் சில பெண்கள்  விதியை நினைத்து வருத்தப்பட்டாலும்  வேறு வழியில்லாத  காரணத்தால்   அனுசரித்து வாழ்ந்த பல பெண்களும் உண்டு  என்றாலும், பார்த்த  பார்வையிலேயே ஆணை எடைபோடும் சாமர்த்தியம் பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்குக் கிடையாது  என்பதே உண்மை.

    அதனால்தான் தன் தகுதிக்கும் அழகுக்கும்  மீறிய  பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பயந்து பயந்து எங்கே  நம்மை விட்டு விட்டுப் போய்விடுவாளோ  என்று அஞ்சி  அவளுக்கு தாசானு தாசனாகி  அதற்காகவே  பெற்றோரையும் உற்றார் உறவுகளையும்  கூடப் பகைத்துக்கொண்டு  பெண்டாட்டி தாசனாக ஆகிறார்கள் என்பதே உண்மையான அவல நிலை.

    எனக்கு ஒரு ஆச்சரியம்!  அம்மாவைக் கொடுமைப்படுத்தும் அப்பாவை வெறுக்கும் ஆண்கள் கூட  அம்மா என்னும் பெண்மணி அந்த அப்பாவின் உழைப்பையும்  வாங்கிக்கொண்டு  அவருடைய சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு மொத்தமாய் அவரை அன்பாலோ பண்பாலோ அழகாலோ அதிகாரத் தோரணையாலோ ஆள் பலத்தாலோ ஆட்கொண்டு குளவி கொட்டிக் கொட்டி தன் நிறம் ஆக்குதல் போல் நாளடைவில் அவரைக் குழந்தையாக்கித் தன் முந்தானைக்குள்ளே அவரைப் பூட்டி வைத்து  செயலிழக்க வைத்து  அவருக்கு  அவர் ஒரு ஆண்பிள்ளை  என்பதையே மறக்கடித்து  ஆமாம் சாமி போட்டுத் தலையாட்டும் ஒரு தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையை உருவாக்கி  வைத்திருக்கிறாள் என்பது எப்போது புரியும்.   இப்படிப்பட்ட அப்பாவியான அப்பாவை வில்லனாக நினைக்கும் பிள்ளைகளாவது  தன்மானத்தையே பெரிதாக  நினைத்து ஆண்பிள்ளைத் தனத்தைக் காட்டி அவர்கள் மனைவியை அடக்கி ஆள்கிறார்களா?

    இல்லையே  அவளிடம் அடிமைப்பட்டு  பெற்றவர்களையே  முதியோர் இல்லத்திலோ  அல்லது அனாதை விடுதியிலோ  சேர்க்காமல் இருக்கிறார்களா அல்லது  வீட்டில் வைத்திருந்தாலும்  மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு  அம்மாவையும் அப்பாவையும் துன்புறுத்தாமல் மரியாதையாக நடத்துகிறார்களா  என்றால் அதுவும் இல்லை.

    பாகம் 6

    அதைப் பார்க்கும்  பேரன் மனம் வெதும்புகிறான்  தாத்தாவையும் பாட்டியையும் அப்பா ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்  நம்மோட  அம்மாவுக்கு பயந்து என்று  அவனும் தன்னுடைய  அப்பனை வெறுக்கத் தொடங்குகிறான்.  இப்படி  வம்ச பரம்பரையாக  வந்தீரே  சித்தப்பா என்னும் சொல் வழக்குக்கேற்ப  எந்தப் பிள்ளைக்கும்  தகப்பனைப் பிடிப்பதில்லை.

    இப்படிக்  காலம் காலமாக அப்பா பிள்ளை உறவு கசந்தே இருக்கிறது. தன் மேன்மையை  நினைத்தே அப்பா கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்பதை உணராமல் இருக்கும் பல பிள்ளைகள்  அவர்கள் பிள்ளையிடம்  கண்டிப்பாக  நடந்து கொள்கிறார்களே அது எப்படி அந்தப் பிள்ளை மட்டும் அவரைப் புரிந்து கொள்ளும்  என்று நம்புகிறார்கள் என்பதே ஒரு பெரிய  கேள்விக்குறி.

    ஆக மொத்தம் எந்தப் பிள்ளையாவது பெற்ற தகப்பனை அன்போடு நடத்துகிறார்களா  பாசத்தோடு கவனிக்கிறார்களா என்றால் இல்லை என்கிற வருந்தத்தக்க விடையே வருகிறது. இதிலும் தாய்க்குலம் தப்பித்துவிடும்  அதென்னவோ  தாய்க்குலம் காட்டும் ஆசை பரிவு பாசம் நேசம்  எல்லாம் மட்டும் புரிகிறது பிள்ளைகளுக்கு.  ஆனால் ஜுரம் வந்தால் கசப்பு மருந்து கொடுக்கும் வைத்தியரைப் பிடிக்காமல் போவது போல தந்தை காட்டும் கண்டிப்பான  நேர்வழி  உயரும் வழி என்று தெரிந்தாலும் அதைக் கசப்பு மருந்தாகவே எண்ணித் தந்தையை வெறுக்கும் பிள்ளைகளே அதிகம். இதுதான் ஆண்களின் தலைவிதி போலும். இதையெல்லாம் தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் பிள்ளையின் முன்னேற்றமே குறிக்கோளாய் தியாகியாய் வாழ்பவரே அப்பா.   ஐய்யோ பாவம் இந்த அப்பாக்கள்,  இந்த ஆண்கள்.

    ஆகமொத்தம் மாமியார் கொடுமை கேள்விப்பட்டிருக்கிறோம்;  மாமனார் கொடுமை என்னும் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?  ஆகவே  சிந்தியுங்கள் ஆண்களே!  இது பெண்ணடிமைக் காலமல்ல; ஆணடிமைக் காலம் என்பதை உணருங்கள்!

    ஆனாலும் ஆண்களின் மழுங்கிப்போன புத்தியை எந்தக் காலத்திலும் விழித்துக்கொள்ளாத அளவுக்கு ஆக்கவே  பெண்கள்.  பெண்களை ஆண்களுக்கு  நிகராக நடத்த வேண்டும் என்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும்  என்றும் மாதர் சங்கங்களும் பெண்களும்  ஒரு திறமையான  அரசியல்வாதி போல் செயல்பட்டு ஆண்களையும் அவர்கள் தன்மானத்தையும் பிரித்தேஆளும் சூழ்ச்சி கொண்டு  அடக்கி ஆளுகிறார்கள்.

    விழித்துக் கொள்ளுங்கள் ஆண்களே!

    இவ்வளவு சொல்லியும் விழித்துக்கொள்ளாவிட்டால் நான் என்ன செய்ய?

    அது சரி,  தலைவிதி என்று ஒன்று இருக்கிறதே! அதை யாரால் மாற்ற முடியும்? ’விதி வலியது’ அதற்கு முன்னால் நாம் எல்லோரும் வெறும் தூசுகள்.  தாய்க்குலம் வாழ்க வாழ்க வாழ்க!  (நமக்கேன் வம்பு)

    Share
  • படக்கவிதைப் போட்டி 111-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    woman with toe rings

    திருமிகு. வெண்ணிலா பாலாஜி தன் படப்பெட்டியில் பதுக்கிவந்திருக்கும் பாவையொருத்தியின் பாதங்களை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்களும் என் நன்றிக்கு உரியவர்கள்.

    விண்ணும் பெண்ணும் கவிகளுக்கு என்றுமே சலியாத பாடுபொருள்கள். அதனால்தான் மிஞ்சியணிந்த பெண்ணிவளை மித’மிஞ்சி’ப் பாடியிருக்கின்றனர் கவிஞர்கள் என எண்ணுகிறேன்.

    இப்பெண்ணரசியின் பாத அணிகள் குறித்துக் கவிவாணர்கள் நமக்குச் சொல்லியிருக்கும் சேதியென்ன என்பதை அறிந்துவருவோம் வாருங்கள்!

    ****

    ”கொலுசே மெதுவாய் ஒலி! இல்லையேல் என் காதலியின் பாதங்களுக்கு வந்திடும் வலி” என்கிறார் திரு. கோகுல கிருஷ்ணன் போஜன்.

    ஒ(வ)லி

    கொலுசே…
    மெதுவாய் சப்தமிடு.

    என்னவளின்
    மென் பாதங்களுக்கு
    வலித்துவிடப்போகிறது!!!

    *****

    ”மச்சான் கொடுத்த ஒத்த மிஞ்சி மூணானது அவன் மேல கொண்ட பிரியத்தின் பெருக்கத்தாலே” என்கிறாள் திருமிகு. தேனம்மை லக்ஷ்மணனின் கவிதையில் வரும் மிஞ்சியணிந்த வஞ்சி. 

    ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
    தங்கமே தங்கம்

    அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
    தங்கமே தங்கம்

    ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
    மச்சானே மச்சான்
    அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
    மச்சானே மச்சான்
     

    ******

    ”மிஞ்சி அளவுக்கு மிஞ்சியதை”க் குறும்பாய்க் குறும்பாவாக்கியிருக்கிறார் திரு. த. மோகனசுந்தரம்.

    அழகுதான்
    அவளுக்கு மிஞ்சி!
    ஆயினும்
    அளவுக்கு மிஞ்சி!

    *****

    ”பாறைவிளிம்பில் பாதம் பதித்து, நர்த்தனமாட எத்தனிக்கும் இந்நங்கையின் கால்களும் கவிபாடுதே!” என்று சிலிர்க்கிறார் திரு. பா. சங்கரகுமார்.

    அழகுக் கால்கள் நோகலாகுமோ?

    ஒய்யார சாயலில் ஒரு கால்
    நர்த்தனைமாட எத்தனிக்க
    சலங்கைக் கால் பளபளக்க
    பாறை விளிம்பு பயமுறுத்த
    ஆடவா வேண்டாமா என தவிக்க…
    தங்க தாரகையே !
    நீ சிலிர்க்க
    உன் கால்களும் கவி பாடுதே!

    *****

    ”முள்ளோ? கல்லோ? ஆடித் துகளோ? உன் பாதத்திற்கு வலியூட்டிய வழி யாதோ?” என்று பாவையைப் பார்த்துப் பரிவோடு கேட்கிறார் ஈரோடு திரு. சாம்ஸ் (பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுக!)

    வலியின் ஒளி
    பிறர் பாதணி விட்டுசென்ற
    முனையிலா முள்ளோ
    கல்லோ கற்கண்டோ
    போதை வடிந்த
    கோப்பை உடைந்த
    ஆடித்துகளோ
    வைத்த அடி வைக்காமல்
    உன் பாதம் தொக்கிடவே
    வலியூட்டிய
    வழியது யாதோ….!!!

    *****

    ”பொன்னில் மனம் மயங்கும் பெண்ணே! பொன்னும் உடலில் பூட்டிய மென்விலங்குதான் என என்று உணர்வாய்? என்று வேதனையோடு வினவுகிறார் திருமிகு. சுகமதி.

    பொன்னென்று
    மகிழ்ந்து
    அதன் அழகின் நீட்சியில்
    தன்னை தொலைத்து
    இசையின் துளிகளில்
    இன்பமுற்று
    சந்ததிகளை வார்த்தெடுத்தவள்
    தனக்குள் தானே
    புதையுண்டு போனதை
    என்றேனும் உணர்ந்திடுவளா
    பொன்னெல்லாம்
    பூவிலங்குதான் என்று

    *****

    சிரசில் சூடும் கிரீடம் மெல்லியலாள் மென்பாதத்திற்கு மெட்டியாய் இடம் மாறியதைச் சுட்டிக்காட்டுகிறார் திரு. இரத்தனசாமி. 

    மெல்லியலாள் கிரீடம்தனை மகிழ்வாக
    மென்பாதம் சூடியதோ மெட்டியென
    வெண்கொலுசும் சிணுங்கியதோ வெட்கமுடன்
    தன்நா மணியோசைத் தாளத்துடன்!

    *****

    ”தாலிக்கயிற்றுடன் நான் மணம் முடிக்கக் காத்திருக்க, மெட்டியுடன் வந்து எந்தன் மனம் முறித்துப் போனவளே…! பாழும் மனசடக்கி நான்வாழ வழியொன்று சொல்லிப்போ! எனப் புலம்பும் காதலனைக் காண்கிறோம் திருமிகு. சத்யா அசோகனின் கவிதையில். 

    வெள்ளி கொலுசொலிக்க
    வீதியுலா வருகையிலே
    பார்த்திருந்த நான்
    பைத்தியமாகி போனேன்
    தாலிக்கயிறுடன் தவமிருக்கும் வேளையிலே
    மெட்டியுடன் வந்து
    எட்டி உதைத்தவளே!!

    கோடை வெயிலிது
    கொடுமையாய் சுடுகையிலே
    பாறையிலே நடக்கிறியே
    பாத அணி இல்லாம
    பாதகத்தி நீ எனக்கு
    இல்லையின்னு போனபின்னும்
    பாழும் மனசடக்க வழி ஒன்னு சொல்லிப்போ!!

    *****

    ”பெண்ணே! கணவனுக்காக அணிந்தாயோ… கள்வனைக் களைய அணிந்தாயோ நானறியேன்! உன் அடிமை வாழ்வின் அடையாளமாகவே நான் இதனைக் காண்கிறேன்” என்று தீர்க்கமாய் உரைக்கிறார் திரு. பெருமாள் அச்சி(?) 

    கால் ஆபரணங்களென்பார்..
    கலியுக மங்கைகள்..
    கால் விலங்குகளென்பார்
    புரட்டி பேசுவோர்..
    கணவனுக்காய் அணிந்தாயோ..
    கள்வனைக் களைய அணிந்தாயோ.!
    பாதம் நோகாமல் நடக்கப்பழகிய கால்களும் பரிதவிக்கின்றன
    பதம் பார்க்கும் மெட்டிகளால்.
    உச்சி முதல் பாதம் வரை
    பூட்டிப் பார்ப்பதிலேயே
    பழைமை காண்கின்றனர்
    கருப்பை வளர்ச்சிக்கு நல்லதென்பார்
    அறிவியலையும் இணை சேர்ப்பர் இச்செயலுக்கு
    கரை சேர்ந்த கடைசி நிலையிலும் கழட்டிட அனுமதியார்..
    மண அடையாளமாய்
    மாட்டப்படும் இவ்வளையம் விலக்கப்படுவதோ
    மணவாளனின் மரணத்திற்குப் பின்பு..
    அதுவரை பூட்டியே இரு
    அழுத்தம் விரல்களின் நோவுகளாவது
    அடையாளமாகட்டும்
    உன் அடிமை வாழ்விற்கு.!

    *****

    ”படிதாண்டிய பாவையின் பாதங்கள் வெம்மை தாளாது சிறு திட்டில் ஊன்றி நிற்கக் கொள்கின்றன ஆசை” என்பது திருமிகு. ரதி ராஜேஷின் யூகம்.

    படிதாண்டிய அவள்,
    பாதைகள் இல்லா
    நடை பயணங்களில்
    தேடியலைகின்றாள்…

    மெட்டியிட்ட மெல்லடியை
    சுடு மணல் தகிக்க,
    முன்னோடும் அவள்,
    தன் நிழல் மிதித்து
    சூடாற்றும் வகையறியாது…

    காலடியில் நழுவிய
    சாலைகளில்…..
    ஏதோ ஒரு கணத்தில் ,
    ஒரு சிறு திட்டில் ,
    கால் ஊன்றி நிற்கும் ஆசை
    அவளுக்கு பேரோசையாகிறது!!

    *****

    இதுவரைக் கொலுசு மட்டுமே அணிந்திருந்த மென்பாதங்களில் மணவாழ்க்கை தந்த புதுச்சுமையாய் (!) மெட்டியும் சேர்ந்துகொள்ள, பால்யம் நின்றுவிட்ட காலத்தின் படிகளில் சற்றே இளைப்பாறுகிறாள் இந்த வனிதை என்பது திருமிகு. மஞ்சு விஸ்வநாதனின் அனுமானம்.

    இளைப்பாறல்

    பிறந்ததிலிருந்து
    கொலுசணிந்த பாதங்களில்
    இன்றிலிருந்து புதிதாய்
    விரல்களில் மெட்டியும்..
    இனி, மணவாழ்க்கையெனும்
    புதிய திசையில்
    நெடிய பயணம்
    தொடங்கும்முன்
    சற்றே இளைப்பாறுகிறேன்
    என் பால்யம் நின்றுவிட்ட
    காலத்தின் படிகளில்…

    *****

    ”விரல்வழியே உன் விழிகளில் நுழைய நான் இட்டவையே இம் மெட்டிகள்” என ஆடவன் ஒருவனின் ஆசையைப் பேசுகின்றது திருமிகு. கீதா ஷங்கரின் கவிதை.

    வந்த பொழுதிலிருந்தே
    பெயர்ந்து செல்லப்பார்க்கின்றாய்
    வேரறுத்து ஓடி வந்தும்
    துயர்நினைவில் தொலைகின்றாய்
    ஒன்றிற்கு மூன்றாய்
    விரல்களில் இட்டது…
    விரல் வழியே உன்
    விழியகளில் நுழையத்தானடி?
    சுமை இறக்கி காலாறு…
    மெட்டிப் பாதமொரு வரலாறு

    *****

    ”கல்லில் பட்ட பெண்ணின் பாதம் கல்லை மலராய் மாற்றியது; ஆணின் கர்வம் அடக்கிப் பெண்ணின் பெருமை சாற்றியது” எனப் பெண்ணின் பெருமை போற்றுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    அவளும் நானும்
    அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
    என்னைச் சேர்ந்த கண்மணியே !
    என்னில் படர்ந்த வஞ்சிக் கொடியே! நம் திருமணச் செய்தியைச்
    சொல்வதற்கு !
    காலில் மிஞ்சி அணிந்தாயோ!
    சிலம்பால் தொல்லை வந்ததினால்
    கொலுசை நீயும் அணிந்தாயோ !
    கொலுசை நீயும் அணிந்தாலும்!
    கற்புக்கரசி கண்ணகி தான்!
    கற்பு என்று வந்துவிட்டால்!
    ஆணுக்கும் பொதுவென்று
    நான் அறிவேன்!
    கோவலனாய் நான் வாழாமல்!
    ராமனாய் என்றும் வாழ்ந்திருப்பேன் !
    ராமனாய் நானும் வாழ்ந்தாலும்!
    அக்கினி பரிட்சை தர மாட்டேன்!
    உன் மெல்லிய பாதம் கல்லில் பட்டவுடன்!
    கல்லும் மலராய் மாறுதம்மா!
    கல்லும் மலராய் மாறியதாலே!
    எந்தன் நிலையை என்ன சொல்ல!
    ஆண் என்ற கர்வம் மறைந்ததம்மா
    அனைத்தும் பெண் என்று தெரிந்ததம்மா

    *****

    பாவையின் மெட்டி விரல்கள் தன் நினைவுகளைக் கட்டிப்போடுவதைச் சுட்டுகிறான் திரு. இளா(?) (பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுக!) படைத்த கவிக் காதலன்.

    உன் நினைவுகளைச் சுமக்கும்
    மெட்டி விரல்களில்,
    நித்தம் நிறைகின்றன,
    மறக்க நினைக்கும்,
    உன் நினைவுகள்…!!!

    *****

    ”விரலுக்கு விலங்கிட்டு அவளோடு என்னையும் அடைத்துக்கொண்டேன் சிறகுகள்கொண்ட இல்லறச் சிறையில்” என்கிறார் ஈரோடு திரு. மூர்த்தி.

    விரலுக்கு விலங்கிட்டு
    அவளோடு சேர்த்து
    என்னையும்
    அடைத்துக்கொண்டேன்,
    இல்லறம்
    எனும்
    சிறகுகள் கொண்ட
    சிறையில்

    *****

    ”வஞ்சியே! கொண்டவனை மண்டியிட வைக்கும் உன் மிஞ்சி, கண்டவனை விலகிடச் செய்யும்  அஞ்சி!” என்று கருத்துரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன். 

    அத்தனையும்…

    உன்
    மௌனத்தை மொழிபெயர்த்து
    மெல்லப் பேசிடும்
    கால் கொலுசு..

    கொண்டவனை மண்டியிடவைத்து,
    கண்டவனை விலகிடச்செய்யும்
    மிஞ்சி-
    கொஞ்சம் கூடுதலாய்..

    பஞ்சின் மெல்லடி காட்டும்
    பாத அழகு..

    அழகுக் குலமகளே,
    அசையாதே
    அப்படியே நில்,
    அத்தனை அழகும்
    அடங்கின உன் காலடியில்…!

    ***** 

    மெட்டி அணிவிக்கும் திருமண வைபத்தைச் சுவையோடு தன் கவிதையில் படம் பிடித்துக் காட்டுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    மணமகள் கொலுசின் ஓசையே இனிமை
    மெட்டி ஒலியே அவள் வருவதன் அடையாளம்
    கொலுசின் இன்னிசையே கணவனுக்கு இனிமையூட்டும்,
    மெட்டி ஒலியே அவன் நெஞ்சத்திற்கு மகிழ்வூட்டும்!
    ஏழு முறை வலம் வந்து மெட்டி அணிவித்தேன்
    அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்தேன்
    சதாப்தி என்பது திருமண வைபவத்தில் ஒன்று
    மணமக்களுக்கு மெட்டி அணிவிப்பது வழக்கத்தில் ஒன்று!
    கொலுசு அணிந்து உன் வரவைத் தெரிவித்தாய்
    சதங்கை அணிந்து பரத நாட்டியம் ஆடினாய்
    மணமானவள் என்பதை தெரிவிப்பது கொலுசு, மெட்டியே
    திருமணச் சடங்கில் இவை எல்லாம் ஒரு பகுதியே!
    ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி என் மனதைப் பந்தாடுதே
    மெட்டி ஒலியுடன் என்னருகில் வரும்போது நெகிழுதே
    இவ்விரு ஓசையும் என் நெஞ்சத்தைக் கிள்ளுதே!
    நான் நோக்கும்போது உன் கால்கள் கோலமிடுதே!

    *****

    ”ஆடவரை ஆடவைக்கும் நட்டுவாங்கமாய் மெட்டி மிளிர்ந்தாலும் விரலுக்கு ஒன்றாய் மாட்டிக்கொண்டிருப்பது எழிலைத் தரவில்லையே! அளவான அழகே அளவில்லா அழகு” என்று நகையணியும் முறைபற்றி நயம்பட உரைக்கிறார் திருமிகு. ஷக்திப்ரபா.

    அளவோடு மிஞ்சினால் அம்ருதம்

    பெண்மையின் அடையாளம்
    நளினத்தின் நகை வடிவம்
    நடனத்தின் நாடி
    மங்கலச் சின்னம்
    ஆடவரை ஆட்டுவிக்கும் நட்டுவாங்கம்…

    ஆயிரம் காரணம் இருப்பினும்
    இவர் சொன்னார்
    அவர் தந்தாரென
    விரலுக்கு ஒன்றாய்
    மாட்டிக்கொண்டு விழிக்காதே.
    இதுவே பெண்ணின்
    எல்லையென அடங்காதே.

    சிக்கென அழகாய்
    ஒற்றை விரலில்
    பாங்காய் அணிந்து
    டக்கென தாவிக் குதிக்கும்
    சுதந்திரமும் ஒப்பிலா அழகு.
    அளவான அழகும் அளவிலா அழகே.

    *****

    ”காதுக்கு இசைமுடிச்சிட்டது உன் கொலுசு” எனக் குதூகலிக்கிறார் திரு. சே தண்டபாணி தென்றல். 

    காதுக்கு இசை
    முடிச்சு போட்டது
    உன் கொலுசு

    *****

    கொலுசும் மெட்டியும் தரும் அழகையும் ஆரோக்கியத்தையும் பட்டியலிடும் பெருவை திரு. பார்த்தசாரதி, இன்றைய நவநாகரிகம் இவற்றையெல்லாம் அநாகரிகம் என்று அப்புறப்படுத்தும் அவலத்தையும் சுட்டத் தயங்கவில்லை. 

    கொலுசும் மெட்டியும்

    கொலுசு

    ஒருத்தி வருகையை
    —ஒலியெழுப்பி அறிவிக்கும்
    நரம்பைமுறுக்கி நங்கையிளரத்த
    —நாளத்தைச் சீர்செய்யும்..!

    கொஞ்சுதற்கும் காதலர்கள்
    —கூடுதற்கும் இடையே
    எச்சரிக்கும்…சைகையாகச்
    —சிறுமணியின் இசைகேட்கும்..!

    பகலில் பாவையோடு
    —பழகிவந்தால். . “நீகொலுசு”..!
    இரவில்பய ஒலியெழுப்பி
    —இன்னல்செய்யின்… “நீபிசாசு”..!

    மெட்டி
    ஆயரின் கால்விரல்
    —அனைத்துமணி செய்யும்..!
    கயவரின் கண்படுமுன்
    —காட்டிக் கொடுக்கும்..!

    தாலியுடன் மெட்டியும்
    —வேலிபோல கற்பைக்
    கட்டிக்காக்கு மதுவுன்
    —கருப்பைவளம் பெருக்கும்..!

    அழகுக்கு அழகுசேர்க்கும்
    —அணிகலனே மெட்டியாகுமது
    மரபினால் மங்கையர்க்கோர்
    —முக்கியதொரு சடங்காகும்..!

    மெட்டியும் கொலுசும்
    கட்டிய கணவனுக்குக்
    —கிட்டாத தொடுவுறவை
    மெட்டியும் கொலுசும்
    —தட்டிப்பறித்து கேலிசெய்யும்..!

    பொன்னும் மணியும் கழுத்தில்
    —மின்னும் பெண்ணிற்குக்
    கணுக்காலும் கால்விரலும்
    —உன்னழகால் மெருகேறும்..!

    சிலம்பை ஒடித்த
    —கண்ணகியின் சாபமோ..?
    சிலர் கால்களிலின்று
    —சிலம்பைக் காணோம்..?

    மெட்டி அணிவதெல்லாம்
    —மட்டமென ஆனதோ..?
    மாதர்தம் விரலினின்று
    —மெட்டியைக் காணோம்..?

    கலாசாரமோகத்தில் கன்னியர்கள்
    —கழட்டியெறியும் அணிகலனில்
    கணுக்காலும் கால்விரலும்
    —இன்னுமனுமதி தரவில்லையோ…?

    வஞ்சியின் ’மிஞ்சி’யெழிலை நெஞ்சினிக்கும் சொற்களால் வருணித்திருக்கும் கவிவலவர்கட்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

    *****

    ஆடை அணிகள்மீது அரிவையர்க்கு அளவுக்கு மிஞ்சிய மோகத்தை ஏற்படுத்தி இச்சமூகம் அவர்களை அவைகளுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. அதனால் தம் உடலழகைக் கூட்டுவதிலும், தம்மை அழகியராய்க் காட்டுவதிலுமே ஆர்வம் கொண்டுவிட்ட பெண்டிர், இப்பொன்விலங்குகளைக் களைந்தெறிய மற(று)க்கின்றனர்.

    ”கல்லானாலும் கணவன் எனும் பழமொழியைச் சிரமேற்கொண்டு கல்லிலும் முள்ளிலும் கணவனொடு கால்நோக நடந்து எண்ணிலாத் துயரடைந்த பெண்ணரசிகளுக்கும் நம் மண்ணில் பஞ்சமில்லை!

    அதைவிடுத்து, தம் நல்வாழ்வுக்கேற்ற புதிய பாதையை மதியின் துணைகொண்டு மங்கையர் தெரிவுசெய்யவேண்டிய காலமிது!

    அணிகளில் இல்லை அரிவையரின் அழகு! நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டு திமிர்ந்த ஞானச்செருக்கோடு பாரதியின் புதுமைப் பெண்ணாய்த் திகழ்வதிலேயே ஒளிர்கின்றது அவர்தம் உண்மை அழகு!” எனும் உயர்ந்த கருத்துக்களை உரக்கச்சொல்லி மாதரார்க்கு அறிவொளி ஏற்றும் அருங்கவிதை ஒன்றைக் கண்டேன்!

    பாதம் கூறும் பாடம்

    பெண்ணவளின் பாதத்திற்கு
    புது நகைகள் தான் கொடுத்தார்
    வெள்ளியில் மிஞ்சியென்றார்
    தங்கத்தில் சதங்கை தந்தார்

    பிஞ்சு விரல் சொடுக்கெடுத்து
    ஆலிவ் எண்ணெய்ப் பூசி வந்தார்
    நகக்கீறுத் தனைத்தீட்டி
    நளினம் நீயென்றுரைத்தார்.

    இத்தனையும் பழக்கி அவளை
    இத்தரணி மீதினிலே
    போகப்பொருள் ஆக்கிவைத்து
    சுயந்தொலைத்து நிற்கவைத்தார்

    பெண்ணவளின் பாதமலர்
    எண்ணிலாத கதைகள் சொல்லும்
    விண்ணவரும் பெற்றிடாத
    திண்ணமதைத் தானியம்பும்

    சீதையவள் பாதங்களோ
    ஸ்ரீராமன் பின்சென்றும்
    பெருந்துன்பம் அடைந்ததொரு
    பெருங்காதை நினைவுறுத்தும்

    கடவுளையே பின்தொடர்ந்தும்
    காரிகையாய்ப் பிறந்தோர்க்கு
    கட்டமது நீங்காதென்று
    திட்டமாகச் சொல்லிவிடும்!

    பாஞ்சாலி பாதங்களோ
    பார்த்திபனின் கரம்பிடித்தும்
    பலதாரப் பெண்ணென்ற
    பரிகாசம் தனையேற்கும்

    பலதாரந்தனை மணந்த
    பலராமன் உடன்பிறப்பை
    பரந்தாமன் எனப்போற்றுவதைப்
    பாரோர்க்குப் பறைந்து நிற்கும்!

    கண்ணகியின் காற்சிலம்போ
    கற்புநிலைக் கற்பித்துக்
    கல்மனதுக் கணவனையும்
    காத்து நிற்கப் போதிக்கும்

    தாழ்வுற்று, வாழ்வதனைத் தானிழந்து
    பாழ்பட்டு நின்றதற்கு
    ஆடவனை விடுத்து அவள்
    ஊழ்வினையைச் சாடி நிற்கும்…!

    அகலிகையின் நிலைகூறும்
    அருந்ததியைப் பார்க்கச் சொல்லும்
    நளாயினியின் கதைச் சொல்லி
    வேசியிடம் தூதனுப்பும்!

    வேண்டா இந்நிலை விடுத்துத்
    தீண்டாமைத் தனைத் துறந்து
    முண்டாசு கவிஞனவன்
    கண்ட பெண்ணாய் நீ வருவாய்

    தடுமாற்றந்தனை விடுத்து
    சுயமாற்றந்தனைச் செய்து
    புதுப்பாதைத்தனைக் கண்டு
    முழுவுறுவம் காட்டி நிற்பாய்!!!

    சிந்தனைக்கு வளஞ்சேர்க்கும் இக்கவிதையை இயற்றிய திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன். 

    ***** 

    காலணி மறுக்கப்பட்ட பாட்டிமார்களின் கால் நோவைப் பாதம் பழுக்க வெயிலில் நின்றிருக்கும் நிலையில்தான் உணரமுடியும் எனும் உண்மையைப் பரிவோடு பதிவுசெய்திருக்கும் மற்றொரு கவிதையும் மனங்கவர்ந்தது.

    காலணிகள் அணியவும்
    மருதாணி பூசவும்
    அனுமதி மறுக்கப்பட்ட
    என் பாட்டிகளின் காலத்தில்
    தூக்கி எறிகிறேன் என் ஒப்பனைகளை

    நகச்சாயம் பூசியபடி
    கொலுசுகளும் மெட்டிகளும்
    ஒலிக்குமிந்த கால்களின் பின்னணியில்
    மறைந்து கிடக்கின்றன
    என் மூதாதையர்களின்
    ஏக்கங்களும் ஆசைகளும்

    என் மென் பாதங்களின்
    ரேகைகளில் இன்னும் ஊறுகின்றன
    வெடிப்புகளில் மண்துகள்கள் குடைய
    அவர்கள் வீடடைந்த உச்சிவெயிலின் வலி

    அந்தச் சூட்டின்
    கதகதப்பையும் வலியையும்
    ஒரு கணமேனும் உணரும் தருணமொன்றில்
    நான் படுத்துக்கிடப்பேன்
    என் நான்காம் தலைமுறை
    கொள்ளுப்பாட்டியின் மடியில்

    திரு. தனபால் பவானியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிடவிரும்புகிறேன்.

    தொடரட்டும் கவிஞர்கள்தம் நன்முயற்சி!

     

     

    Share
  • சுமைகளும், சுகங்களும்

     

     

    மனிதா, வாழ்க்கையை சுமையானதாய் எண்ணிவிடாதே

    சுகங்களும் தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே

    குடும்பத்தலைவனுக்கோ என்றும் வாழ்வில் சுமைதான்

    சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் !

    நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை தாங்கிடுவாய்

    சுகமான சுமைகளும் உண்டு என்பதை அறிந்திடுவாய்

    மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு முறியும் ,

    மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் !

    வீட்டிற்கு முதல்வனே என்றும் ஓர் சுமைதாங்கி

    எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி,

    எல்லாவற்றையும், பொறுமையோடு எதிர் கொள்ளவேண்டும்

    எத்துயர் வரினும் எதிர்த்து திறம்பட செயலாற்ற வேண்டும் !

    மனித வாழ்க்கையில் காதலும் சுகமாய் பூக்குதே

    அதுவே சிற்சில சமயத்தில் சுமையாய் தாக்குதே

    சுமைகளும், சுகமும் கலந்ததே மானிட வாழ்க்கை

    இதனை அறியாமல் ஏன் மாற்றுகிறாய் உன் போக்கை !

    ரா.பார்த்தசாரதி

     

    Share
  • இந்தவார வல்லமையாளர் விருது! (222)

    செல்வன்

    அன்னையர் தினமான இன்று, நாடெங்கும் உள்ள பிள்ளைகளின் கல்வித்தரம் உயரப்பாடுபடும் அமெரிக்க கல்வித்துறை செக்ரட்டரி (அமைச்சர்) பெட்ஸி டிவோஸ் (Betsy Devos) அவர்களை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அமெரிக்க பெருநகரங்கள் சிலவற்றில் உள்ள பள்ளிகளில் குற்றச்செயல்களும் மாணவர்களிடையே போதைபொருட்கள் பயன்பாடும் அதிகம். இத்தகைய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கும் மாற்ற முடியாது பெற்றோர் அவதிப்பட்டு வந்தார்கள். இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படைந்தது. இந்த சூழலில் மாணவர்கள் விரும்பும் பள்ளிக்கு அவர்களை அனுப்பும் “பள்ளித்தேர்வு” (School choice) மற்றும் “சார்ட்டர் பள்ளிமுறை” (Charter schools) சமூக நலனில் அக்கறை கொண்ட கல்வியாளர்களால் முன்மொழியப்பட்டது.

     

    சார்ட்டர் பள்ளிகள் அமைப்பதன் மூலம் பிள்ளைகள் குற்றங்களும், வன்முறையும், போதைமருந்து பயன்பாடும் அதிகம் உள்ள பள்ளிகளில் இருந்து விடுபட்டு சார்ட்டர் பள்ளிகளில் இலவச கல்வி பெறமுடியும். இதனால் இத்தகைய பள்ளிகள் தம் தரத்தை உயர்த்தி மாணவர் நலனை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும். பள்ளித்தேர்வு முறையின் மூலம் பெற்றோர் தரம் அதிகமுள்ள தனியார் பள்ளிகள், கான்வென்டுகளில் இலவசமாக தம் பிள்ளைகளை சேர்க்க முடியும். இதனால் மிகப்பெரிய பணக்காரகுழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மக்களும் படிக்கமுடியும் என்பது மிக முற்போக்கான, மானுடம் போற்றும் திட்டமாகும்.

    இத்தகைய முற்போக்கு கல்விமுறைகளை ஆதரிக்கும்  கல்வியாளர்களில் முக்கியமானவர் பெட்ஸி டிவோஸ். இவர் ஆம்வே எனும் பன்னாட்டு கம்பனியை துவக்கிய ரிச்சர்ட் டிவோஸ் அவர்களின் மருமகள் ஆவார். இத்தகைய பெரும்பணக்கார குடும்பத்தில் பிறந்து, தன் கம்பனி நலனுக்கு உழைக்காமல் மக்கள் நலனை பற்றி சிந்திக்கும் தன்மை கொண்டவர் பெட்ஸி டிவோஸ்.  பள்ளிகளை முன்னேற்றும் பள்ளித்தேர்வு மற்றும் சார்ட்டர் பள்ளி முறைகளை பரவலாக்க Foundation for Excellence in Education  எனும் அமைப்பை துவக்கினார் பெட்ஸி டிவோஸ்.

    அமெரிக்க கல்விமுறையின் மிகப்பெரும் பின்னடைவுகளில் ஒன்றாக பள்ளித்தேர்வு உரிமையின்மையை குறிப்பிடலாம். தான் மளிகை சாமான் வாங்கும் கடையை மக்களால் தேர்ந்தெடுக்க முடிகிறது. தான் உணவு உண்ணும் உணவகங்களை ஒருவரால் தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் தன் பிள்ளை படிக்கவேண்டிய பள்ளியை பெற்றோரால் தேர்ந்தெடுக்கபட முடியாத சூழல் நிலவுவது எத்தனை துயரமானது? இதனால் தன் வீட்டின் அருகே உள்ள பள்ளியின் தரம் எத்தனை மோசமாக இருந்தாலும் அதிலேயே தன் பிள்ளையை சேர்க்கும் நிர்ப்பந்ததிற்கு பெற்றோர் ஆளானார்கள். இதிலிருந்து இவர்களை விடுவித்து பிள்ளைகள் படிக்கும் பள்ளியை பெற்றோரே தேர்ந்தெடுக்கலாம் எனும் புரட்சிகரமான பள்ளித்தேர்வு முறையை (school choice) 1நாடெங்கும் பரவலாக்க பெட்ஸி டிவோஸ் பாடுபட்டார்.

    பிளாரிடா மாநிலத்தில் இவரது  சேவைகளின் பலனாக 50,000 குழந்தைகளுக்கு தாம் படிக்கும் பள்ளியை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைத்தது.

       பிளாரிடாவுடன் நில்லாது இண்டியானா, லூசியானா,  மிச்சிகன் மற்றும் டெட்ராய்ட் பள்ளிகளை மேம்படுத்த இவர் உழைத்ததன் பலனாக கடந்த ஜனவரி மாதம் இவர் அமெரிக்க கல்வித்துறை அமைச்சராக அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களால் நியமிக்கபட்டார்.

    இவரது பதவி ஏற்புக்கு பின் உடனடியாக அமெரிக்க பள்ளிகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து மாணவர்கள் நலனை எப்படி மேம்படுத்துவது என ஆராய்ந்தார். ராணுவ வீரர்களின் குழந்தைகள் நலனை எப்படி மேம்படுத்துவது, கருப்பின குழந்தைகள் நலனை எப்படி மேம்படுத்துவது, மாணவர்களின் மதிய உணவை மேம்படுத்தி அவர்களின் உடல்நலனை மேம்பாடடைய செய்வது எப்படி என்பதை இந்த சுற்றுப்பயணங்கள் மூலம் அறிந்து கொண்டார்.

    இவ்வாரம் “ஆசிரியரை போற்றும் வாரமாக” (Teachers appreciation week) அறிவிக்கபட்டு பெட்ஸி டிவோஸ் தானே நேரடியாக பல ஆசிரியர்களை தொலைபேசியில் அழைத்து ஆசிரியர் வார வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்வி அமைச்சர் தமக்கு போன் செய்து வாழ்த்தியது ஆசிரியர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை உருவாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாரம் இவருக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்ந்தது. கருப்பின மாணவர்கள் பெரும்பான்மையாக படிக்கும் பிளாரிடாவின் புகழ்பெற்ற பெதூன் – குக்மன் பல்கலைக்கழகம் (Bethune–Cookman University) இவரை தன் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்து சிறப்புரையாற்ற அழைத்ததுடன் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தது. அங்கே அப்போது போராட்டக்காரர்கள் சிலர் குரல் எழுப்பியதன் காரணமாக இந்த நிகழ்வு நாடுமுழுக்க பேசபட்ட நிகழ்வாகவும் ,அதே சமயம் நாடுமுழுக்க ஊடகங்கள் இவரது உரையை ஒளிபரப்பவும் காரணமாக அமைந்தது

    விழாவில் சிறப்புரை ஆற்றிய பெட்ஸி டிவோஸ் மாணவர்கள் தேசநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், சேவைநோக்குடனும் பணியாற்றவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    கருப்பின குழந்தைகள், ஏழைகுழந்தைகள், பள்ளிகுழந்தைகள் நலனை முதன்மையாக கொன்டு செயல்படும் பெட்ஸிடிவோஸ் அவர்களை இந்த அன்னையர் தினத்தன்று வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. தன் பிள்ளைகள் நலனை மனதில் கொண்டவர் தானே சிறந்த அன்னை? ஆக நாடெங்கும் உள்ள பிள்ளைகளின் கல்வித்தரம், எதிர்காலம் ஆகியவற்றின் மேல் அக்கறை கொண்டுள்ள பெட்ஸி டிவோஸ் அவர்களுக்கு அன்னையர் தினத்தன்று இந்த விருது வழங்கப்படுவது மிகப்பொருத்தமானது.

    வல்லமையாளர் பெட்ஸிடிவோஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share