Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    மாதவனின், கேசவனின், மாலொழிய(மயக்க இருள் தீர்க்க) வந்தவனின்,
    ஆதவனின், ஆயர் அணிவிளக்கின், -யாதவனின்,
    வாத்சல்ய யோகம்செய் வ்ரஜ குலத்தவனின்,
    தாத்பர்யம் தாய்ப்பசுகீ தை’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்தவார வல்லமையாளர் விருது! (221)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர்: இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி (மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்கு)

    SS-Raja-mouli

    இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலை இவ்வாரம் கடந்து சாதனை படைத்துள்ளது பாகுபலி: 2 திரைப்படம்.

    இந்திய திரையுலக வரலாற்றின் மைல்கல் ஆன படங்கள் என ஷோலே, மதர் இந்தியா போன்ற பாலிவுட் படங்களே இருந்து வந்த நிலையில் அப்படங்கள் படைத்த வரலாற்றுசாதனையை ஒரே வாரத்தில் தாண்டி அசகாய சாதனை படைத்துள்ளது பாகுபலி.

    ஒரு படைப்பாளி தன் படைப்பின் வணிகரீதியான வெற்றியால் மட்டும் சிறப்படைவதில்லை. தன் பாத்திரப்படைப்பாலும், கலைநேர்த்தியாலுமே சிறப்பை அடைகிறான். அவ்விதத்தில் இத்திரைப்படக் கதாப்பாத்திரமான அமரேந்திர பாகுபலியை உருவாக்கிய இயக்குனர் ராஜமவுலியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    bahu

    ஏன் அமரேந்திர பாகுபலி பாத்திரத்தின் தந்தையான இயக்குனர் ராஜமவுலியை விருதுக்கு தேர்வு செய்தோம்?

    அமரேந்திர பாகுபலி மக்கள் நலனில் அக்கறை கொண்ட மன்னர். அவர் சகோதரன் பல்வாள்தேவன் ஆண்மை நிரம்பிய மாவீரன். ஆனால் ஆண்மையுடன் தயாளகுணமும் அன்பும் சேர்கையில் மனிதன் பேராண்மை கொண்டவன் ஆகிறான். அத்தகைய பேராண்மை கொண்ட மாவீரர் அமரேந்திர பாகுபலி. போர்க்களத்தில் வெற்றியை விட மக்கள் உயிர் மேல் என சாதுர்யமாக மக்களை காத்தவர். அதனால் மகிழ்மதி மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மிகப்பெரும் சாம்ராஜ்யத்தின் மன்னராக ஆனபின், தேவசேனா எனும் இளவரசியை காதலிக்கிறார். காதலியா, மணிமகுடமா என வருகையில் காதலிக்காக மணிமகுடத்தை விட்டுத்தந்து தன் சகோதரனை ஆள அனுமதிக்கிறார்.

    ஆட்சி அதிகாரத்திற்காக கொலைகளை செய்யத் தயங்காத, பலதார மணம் புரியும் மன்னர்களைக் கண்டுள்ளோம். ஆனால் பாகுபலி காதலுக்காக நாட்டை விட்டுத்தருகிறார். தாய் மேல் உயிரையே வைத்திருந்தாலும், தாய் தவறு செய்கையில் ஜால்ரா போடாமல் தட்டிக் கேட்கிறார். மக்களுக்கு பிரச்சனை என வருகையில் அவர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதனால் இறுதியில் கொலை செய்யவும்படுகிறார். “பெண்களை அவமதித்தால் வெட்டப்படவேண்டியது கை அல்ல, தலை” எனவும் உறுதிபடக்கூறுகிறார்,

    அக்காலத்தில் காணப்பட்ட பரம்பரை அடிமைக் கோட்பாட்டின் சின்னம் கட்டப்பா. அவரை பல்வாள்தேவன் “நாய்” போல கருதி அவமதிக்கையில், தன் தாய்மாமனாக கருதி தன் பிள்ளையை அவர் ஆசிர்வதிக்கவேண்டும் எனக் கேட்கிறார் பாகுபலி. தனக்கென பிரத்தியேக அரசவம்ச உணவிருக்க, அதைத் தவிர்த்து படைவீரர்களுக்கு அளிக்கப்படும் உணவையே உண்கிறார்.

    அவரிடம் ஆன்மிக நம்பிக்கை உள்ளது. ஆனால் மூடநம்பிக்கை இல்லை. போர்க்களத்தில் எருமையை பலியிட மறுத்து, தன் இரத்தத்தை தந்து ஒரு எருமையின் உயிரைக் காக்கிறார்.

    பாகுபலி தன் வளர்ப்புத் தாயான ராஜமாதா சிவகாமி தேவியால் வளர்க்கப்படுபவர். ஆனால் வளர்ப்புத்தாயை பெற்ற அன்னையாக கருதுகிறார். இது இராமன் கைகேயி மேல் இறுதிவரை வைத்திருந்த நன்மதிப்பை நினைவூட்டுகிறது. ஒருமனிதன் நன்றாக வாழ்கையில் அவன் பேசும் நியாய, தருமங்களை விட அவன் வீழ்கையில் அவன் கடைபிடிக்கும் கோட்பாடுகளே அவனது நன்மதிப்பை நிர்ணயிப்பவை. அவ்வகையில் தன் மரணத்தருவாயிலும் தன் தாயைக் காப்பாற்றும்படி கட்டப்பாவிடம் கூறி கம்பீரமாக உயிர்விடுகிறார் பாகுபலி. தான் அரசபதவியை இழந்தபின்னரும், கோட்டையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னரும் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்கிறார்.

    மேலும் திரைப்பட நாயகர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞர்கள் கொண்ட நாட்டில் பாகுபலி உடல்வலிமை மிக்கவராகக் காட்டப்பட்டிருப்பது இளைஞர்களிடையே ஆரோக்கியமான உடல்வலு கலாச்சாரத்தை உருவாக்கும் எனவும் நம்புகிறோம்.

    தொழிலாளர் தினம் மற்றும் அன்னையர் தினம் ஆகியவை வரும் மே மாதத்தில் அனைத்து தொழிலாளர்களும் விரும்பும் ஒரு முதலாளியாக, மக்கள் நலனை மனதில் கொண்ட தலைவனாக, அனைத்து தாய்மார்களும் போற்றும் பண்பு நிரம்பிய இலக்கிய கதாபாத்திரமாக மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை படைத்த முற்போக்குச் சிந்தனையாளரான இயக்குனர் ராஜமவுலியை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். கடந்த 220 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர்,  முனைவர் தேமொழி, உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. செல்வன் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான், பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 220 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு பேரா. செல்வன் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    selvan

    பெயர்: செல்வன்

    தொழில்: கல்லூரி பேராசிரியர்
    கல்வித்தகுதி: முனைவர் (வணிகவியல் மேலாண்மை)

    எழுத்துகள் பிரசுரமான தளங்கள்: வல்லமை, திண்ணை, தமிழோவியம், குமுதம், தினமணி, ஆனந்த விகடன், தினகரன்

    எழுதிய நூல்கள்: பேலியோ டயட் (கிழக்கு பிரசுர வெளியீடு)

    நல்லுணவு நான் சொல்லுவேன் (மல்லிகை மகள் பிரசுரம்)

    நிறுவனர்: ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமம். இது மூன்றரை லட்சம் பேர் கொண்ட தமிழின் முதன்மையான உடல்நலம் சார்ந்த குழுவாகும்

    இவரது பேலியோ டயட் நூல் 2016ஆம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் இரண்டாமிடம் பிடித்தது. தினமணியில் வெளியான பேலியோ டயட் தொடர் தினமணி வலைதளத்தில் ஒவ்வொருவாரமும் தொடர்ந்து அதிகம் படிக்கப்பட்ட பக்கங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்தது.

    தற்போது இவர் குமுதத்தில் “வாழ்க கொழுப்புடன்” எனும் தொடரையும், மல்லிகை மகள் இதழில் “நியாண்டர் செல்வனின் கேள்வி-பதில்கள்” எனும் பகுதியையும் தொடராக எழுதி வருகிறார்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால்,  holyape@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • அழகு

    கவிஞர் ஜவஹர்லால்

     
    எதுஅழகு ? எப்படி? இப்படிப் பார்க்கலாமா?
    எதிலழ கில்லை? ஏனழ கங்கில்லை ?

    அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்
    அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?

    காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?
    சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?

    மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்
    எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?

    வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்
    எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.

    பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?
    காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?

    நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?
    ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?

    மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்
    கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்
    திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?

    எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்
    எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.

    கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;
    முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?

    இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?
    நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?

    ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;
    ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;

    வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?
    எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.

    கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும் துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?

    இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்
    நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?

    பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்
    கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.

    காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?
    மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?

    இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?
    மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?

    இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.
    இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?

    சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்
    அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !

    கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்
    நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நங்கநல்லூர்—20-02-2000

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  87

    செயிண்ட் தோமஸ் கல்லறை அருங்காட்சியகம், சென்னை, தமிழகம், இந்தியா

    -முனைவர் சுபாஷிணி

    ஏசு நாதருடன் துணையாக இருந்த 12 இறை தூதர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செயிண்ட் தோமஸ் அவர்கள். செயிண்ட் தோமஸ் அன்றைய ஜெருசலத்தின்  ரோமானியப் பேரரசிலிருந்து வெளியேறி ஆசிய நாடுகள் பக்கம் வந்ததாகவும், அவர் தமிழகத்தில் வந்திறங்கி வாழ்ந்து பின் மறைந்ததாகக் கிறித்துவ மதத்தினரால் நம்பப்படுகின்றது.   இன்று நமக்குக் கிடைக்கின்ற பாரம்பரியச் செய்திகளின் தொடர்பில் பார்க்கும்போது, செயிண்ட் தோமஸ் அவர்கள், அன்று தென் இந்தியாவின் மிக முக்கிய மேற்குக் கடற்கரை துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த முசிறிக்கு கி.பி.52ம் ஆண்டில் வந்ததாகவும், அங்கே ஏசு கிறித்துவின் பொன்மொழிகளைக் கூறி அங்கு வாழ்ந்த உள்ளூர் மக்களுக்கு ஞானஸ்நானம் அளித்ததாகவும் நம்பப்படுகின்றது. அப்படி அவரால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டவர்கள் செயிண்ட் தோமஸ் கிறித்துவர்கள், அல்லது நஸ்ரானியர்கள் என அறியப்படுகின்றார்கள்.

    ‰
    ‰

    இன்று நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி அன்றைய தமிழகத்தில் வாழ்ந்து வந்த செயிண்ட் தோமஸ் சிலரால் கொலை செய்யப்பட்டதாக அறிகின்றோம். மக்களால் பரங்கிமலை என அழைக்கப்படும் செயிண்ட் தோமஸ் குன்றில் இன்று மிக அழகான தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருப்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி எல்லோரும் சென்று பார்த்து வழிபட்டு வரும் தலமாக இந்தத் தேவாலயம் அமைந்திருக்கின்றது.  தேவாலய அமைப்பு  மட்டுமன்றி இந்தத் தேவாலயம் அமைந்திருக்கும் மலைப்பாங்கான சூழலும் இயற்கைக் காட்சிகளும் இந்த இடத்தின் சிறப்பினைக்கூட்டும் வகையில் உள்ளன.

    இந்தத் தேவாலயத்தின் ஒரு பகுதியில் செயிண்ட் தோமஸ் அவர்கள் கொல்லப்பட்டதாக அறியப்படும் இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. செயிண்ட் தோமஸ் அவர்கள் அக்குறிப்பிட்ட இடத்தில் கொல்லப்பட்டார் என்றபோதிலும், அவரது உடல் புதைக்கப்பட்ட கல்லறை சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் செயிண்ட் தோமஸ் தேவாலயத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் இருக்கின்றது. பொது மக்களால் பேச்சு வழக்கில் ‘சாந்தோம் சர்ச்’ என அழைக்கப்படும் இந்தத் தேவாலயத்தின் சரியான பெயர் செயிண்ட் தோமஸ் பசிலிக்கா என்பதாகும். செயிண்ட் தோமஸ் என்பதே பேச்சு வழக்கில் மருவி சாந்தோம் என மாற்றம் பெற்றுவிட்டது.

    கி.பி.16ம் நூற்றாண்டு முதல் எல்லா மதத்தைச் சார்ந்தோரும் வந்து வழிபட்டுச் செல்லும் வழிபாட்டுத்தலமாக பரங்கிமலை செயிண்ட் தோமஸ் குன்று இருந்து வருகின்றது. இன்று செயிண்ட் தோமஸ் கல்லறை இருக்கும் இடத்தில்  அமைக்கப்பட்ட தேவாலம் கி.பி 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும். இதனை போர்த்துக்கீசியர்கள் கட்டி அமைத்தார்கள். இந்த தேவாலயத்தின் பின்பகுதியில்  ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

    ®

    இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், இலத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பல சின்னங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.

    இன்று நாம் காண்கின்ற செயிண்ட் தோமஸ் தேவாலயம் 19ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். இதன் முந்தைய, அதாவது அது முதன் முதலில் போர்த்துக்கிசியர்களால் கட்டப்பட்டபோது இருந்த தோற்றத்தைக் காட்டும் ஓவியம் ஒன்றும் இங்குள்ளது.

    d

    முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின்ட் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கு இருபக்கமும் இந்தக் கல்லறைக்கு வந்து வழிபட்டு மரியாதைச் செலுத்திச் சென்ற முக்கியமானவர்களது புகைப்படங்கள்  சுவரில் மாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். மரியாதைக்குரிய போப்  2ம் ஜோன் பவுல்  அவர்கள் இங்குவந்து வழிபட்டுச் சென்றமையைக் குறிக்கும் புகைப்படங்களும் அவற்றில் அடங்கும். அதனைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கே செயிண்ட் தோமஸ் சமாதியைக் காணலாம்.

    bty

    செயிண்ட் தோமஸ் தேவாலயம் 1956ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சிறிய பசிலிக்கா என்ற நிலைக்கு மரியாதைக்குரிய போப்  2ம் ஜோன் பவுல்  அவர்களால் உயர்த்தப்பட்டது. இந்த பசிலிக்காவின் கருவரையில் அன்னை மேரியின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.  Our Lady of Mylapore  என இந்த பசிலிக்காவின்  புனித மேரியார் அழைக்கப்படுகின்றார்.

    à

    பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வரலாற்று ஆர்வலர்கள் வந்து சென்று காண ஒரு சிறந்த அருங்காட்சியகம் எனக் கூறலாம். சென்னையின் மத்தியிலேயே தேவாலயத்தின் பின் இப்படி ஓர் அருங்காட்சியகமா என என்னை வியக்கவைத்த அருங்காட்சியகம் இது. சென்னையிலே வசித்தாலும், மயிலாப்பூரின் வீதிகளில் தினம் தினம் சுற்றி வந்தாலும் கூட இத்தகைய ஓர் அருங்காட்சியகம் இருக்கின்றது எனப் பலர் அறியாமல் இருக்கலாம். உள்ளேசென்று பார்க்க இங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  (8)

    க. பாலசுப்பிரமணியன்

    பொருளின் நிலையாமை

    திருமூலர்-1

    ஆசை இல்லாத மனிதனே இல்லை. சில நேரங்களில் ஆசை மனிதனுக்கு வாழும் சக்தியை கொடுக்கிறது. வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.. சில நேரங்களில் மனிதனுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை வடிப்பதற்குத் துணையாக இருக்கிறது. ஆனால் அதே ஆசை பேராசையாக மாறும் பொழுதில் அவனுடைய அழிவுக்கு முன்னுரையாகவும் விளங்குகிறது.

    தனக்கு எவ்வளவு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் கபீர்தாசர் “இறைவா நானும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தில் உன்னுடைய அடியார்களும் பசியோடு இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு நீ தந்தால்  போதும்.“ என்கிறார்.

    நாம் எவ்வளவு சேர்த்தாலும், அத்தனை சொத்துக்களையும் இங்கேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். பட்டினத்தார் சொல்லியது போல் “காதறுந்த ஊசியும் கடை வழி வாராதே ‘ என்பதை உணர வேண்டும். நிரந்தரம் நிரந்தரமாக இருக்கும்போது, வழிப்போக்கர்களாக வந்து போகும் நாம் ஏனோ இதை உணர்வதில்லை. இறக்கும் தருவாயிலும் இன்னும் எவ்வளவு நமக்கு கிடைக்கும் என்றே யோசித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த மாயையிலிருந்து விடுபட திருமூலர் சொல்வது என்ன?

    அருளும் அரசனும்  ஆனையும் தேறும்

    பொருளும் பிறர் கொள்ளப்போவதன் முன்

    தெருளும் உயிரோடுஞ் செல்வனைச்  சேரின்

    மருளும் பினையவன்  மாதவ மன்றே. 

    மற்றவர்கள் நம் பதவியையும் பொருள்களையும், யானையும் தேரையும் பரித்துக்கொள்ளும் முன்னரே நாம் இறைவனிடம் சரணடைந்து விட்டால் எதற்கும் கவலை கொள்ளத்தேவையில்லை. ஆகவே ஒரு பற்றற்ற வாழ்வை வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என அழகாக எடுத்துரைக்கின்றார்.

    இந்த உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னும் இந்தப் பொருளால் என்ன நிலை ஏற்படுகின்றது?

    “வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்

    தாரு மளவே  தெமக்கென்பர் “

    என்று எடுத்துரைக்கும் திருமூலர் நம் மனைவி மக்களும் மற்றவரும் உற்றவரும் “இவர் நமக்கு இவ்வளவுதான் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்பர்  -எனக்கூறி வாழ்வின் உண்மை நிலையை  நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றார்.

    நாம்  சேர்த்த செல்வம் மற்றவருக்கு திருப்தி அளிக்காவிட்டால் நம்முடன் கூடவாவது வருகின்றதோ? இதே கேள்வியை பட்டினத்தார் எப்படி எழுப்புகின்றார்?

    மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு

    ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும்

    காணித்  துடலை நமன் காட்டியே கைபிடித்தால்

    காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே .

    இந்தத்  துன்பங்களிலிருந்தெல்லாம் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒரே வழி தாயுள்ளம் கொண்ட இறைவனின் திருப்பாதமே என்றுணர்ந்த மாணிக்கவாசகர் வண்டின் மூலமாக என்ன செய்தி தருகின்றார் தெரியுமா?

    நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து

    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்

    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்

    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ . 

    ஆசைகளையெல்லாம் விட்டுவிடுகின்ற மனநிலை நமக்கு கிடைக்குமா ? இந்தப் பிறவியில் அது நடக்கக்கூடியதா? அப்படியானால் நமக்கு உண்மையான ஆனந்தம் எங்கே கிடைக்கிறது?  இதற்கு சரியான பதிலை திருமூலரே கொடுக்கின்றார் :

    “முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

    அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்.” 

    இவ்வாறு அகத்தில் உள்ள இறைவனை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், பாராட்டாமல், போற்றாமல், நாம் ஊர் உலகெல்லாம் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றோம். அது மட்டுமல்ல, அந்த இறையால் நமக்கு அளிக்கப்பட ஐம்புலன்களையும் அறிவுக்கண்களோடு இணைக்காமல் புறநோக்கில் செலுத்தி அவற்றின் உயரிய பண்புகளை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். இறைவன் நமக்கு இந்தப் புலன்களையெல்லாம் எதற்குக் கொடுத்திருக்கின்றான்? இவை அவன் புகழ் பாடவும், புகழ் கேட்கவும், அவன் தாள் வணங்கவும் தங்களை அர்ப்பணித்த்துக்கொள்ள வேண்டாமோ? அப்பர் பெருமான் அழகாகச் சொல்லுகின்றார் :

    “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்

    தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்”

    இதை மறந்து நாம் கொண்ட அவல நிலையை நமக்கு எடுத்துக்காட்டும் பட்டினத்தாரோ வாழ்க்கையில் இறைவனை நினைக்காத மானிடரைக் கண்டு எவ்வாறு வியக்கின்றார் :

    “கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்

    பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலையால்

    எண்ணுண்டு சாத்த வெதிர்நிற்க வீச னிருக்கையிலே

    மண்ணுண்டு போகுதே யோகெடு வீரிந்த மானுடமே”

    சிந்தனைக்கு இது ஒரு நல் விருந்தன்றோ ?

    (தொடரும்)

    Share
  • தூரிகை உதறியதில் விழுந்த வர்ணம்!

    -ராஜகவி ராகில்

    மழை
    இலைகள் பிரார்த்தனை கேட்டு
    நனைந்த கார்முகிற்செடி
    குளிர்ந்து
    குனிந்து தூவுகின்ற
    துளித் துளி ஈர மல்லிகை!

    கடல்
    அலைக் குதிரைப் படை
    வந்தும்
    சென்றும் காவல் காக்க
    தண்ணீர் தேச மன்னன் வாழ்கிறான்
    மீன் மக்களோடு! 

    அருவி
    மலைப் பொந்துக்குள்ளிருந்து புறப்படுகின்ற
    ஊற்று அரவம்
    இறங்கி
    விழுந்து சீறுகிறது
    வெண் நாகமாய்! 

    குயில் 
    துளை ஒன்று
    சிறகுகள் இரண்டு கொண்டு பறக்கின்ற
    புல்லாங்குழல் இசையழகி!

    பெளர்ணமி
    வேர்
    நீர் இல்லாமல் எப்படி வளர்ந்தாள் என
    இரவு கேட்கும் கேள்விக்கு
    ஒளிப் பதில் சொல்லும் தேவதை!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    நரஸிம்ஹ மந்த்ரராஜம்
    —————————–

    kesav
    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

    ”வீரியன், வீரன், வியாபகன், சைதன்ய
    சூரியன், சூக்கும காரியன், -கூரிய
    சிங்கன், எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்,
    மங்களம் சேர்த்திடும் மால்”….கிரேசி மோகன்….!

    Share
  • கல்வித்துறை – நீட் தேர்வில் சீர்கேடுகள்

    நீட் தேர்வு பற்றி பலவேறான கருத்துகள் இருக்கும் சூழலில் , இத்தேர்வை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியதில் நாகரிகமற்ற முறையில், அநாகரிகத்தின் உச்சத்திற்கேச் சென்று அந்தத் தேர்வுச்சமயத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்வு நிர்வாகிகள் செய்துள்ள செயல்கள் கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கான டிரஸ் கோட் தேர்வு விண்ணப்பத் தாளிலேயே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டனர். பெண்களின் உள்ளாடைகளைக் களையச்செய்வதும், துப்பட்டாவை அகற்றியதையும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணிவதை தடை செய்ததும் எந்த சட்டத்தில் உள்ளது? இதைவிடுத்து தேர்வு மையங்களின் பெயர்களிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் நீட் தேர்வு மையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? தேர்வு எழுதச்செய்யும் மாணவர்களுக்கு தேவையற்ற இந்த கெடுபிடிகளால் மன அமைதியிழந்து தேர்வு சரிவர எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறு தேர்வு நடத்தவேண்டும். இந்த தவறுகள் செய்தவர்களை, மாணவர்களின் ஒரு வருட வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

    Share
  • பஞ்சாயத்து ராச்சியம்!

    பவள சங்கரி

    ஊர் பஞ்சாயத்துகளுக்கு உயர்நீதி மன்றம் அளித்த அதிகாரத்தின்படி இனி அந்தந்த ஊர் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்றுகூடி எங்கள் பகுதியில் இனி மதுபானங்கள் விற்பனை தேவையில்லை என்று தடைவிதித்தால் அந்தப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடைவிதித்து உயர்நீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. இனிமேல் அரசுகளையோ, கட்சிகளையோ குறைகூறுவதை விட்டுவிட்டு அவரவர் பகுதிகளை சரியாக நிர்வகிக்க பொது மக்களும் முன்வரலாம். பஞ்சாயத்து ராச்சியம் முறையில் இது ஒரு மைல்கல்!

    மத்திய மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மக்கள் வாழும் பகுதிகளுக்குக் கொண்டுவரவும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் மக்களை கைது செய்வதற்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”அழகவன் கோலம் அழகவன் ஜாலம்
    அழகவன் லீலா அபங்கம் -பழக
    அழகனவன் நட்போ அலுக்காத கற்பு
    பொழுதுமவன் பொற்பைப் புணர்….கிரேசி மோகன்….!

    Share
  • உழவும் தொழிலே!

    பவள சங்கரி

    ஒவ்வொரு முறையும் இயற்கையின் சீற்றத்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் நம் விவாசாயப் பெருமக்களே. விவசாயத்தை ஒரு தலையாயத் தொழிலாக எடுத்துக்கொண்டு, ஏனைய மற்ற தொழில்களைப்போலவே இதனையும் கருதி அதற்கேற்ப நம்முடைய தொழில்சார்ந்த திட்டமிடல்களை செயல்படுத்தவேண்டியது அவசியமாகிறது. முதலாவதாக பருவகால மாற்றங்கள் குறித்த வானிலை ஆய்வாளர்களின் நவீன தொழில்நுட்பம் மூலம் வெளியிடப்படும் கருத்துகளை உள்வாங்கி அதற்கேற்ப நம் திட்டமிடல்களை ஆரம்பிக்கவேண்டும். பல நேரங்களில் புறக்கணிக்கப்படும் முக்கியமான கருத்துகளே பல நட்டங்களுக்கு காரணமாகிவிடுகிறது. புதிய பாசனத் திட்டங்களைக் கையாண்டால் வறட்சியிலும் 60% மகசூலை எடுக்கமுடியும். செயற்கை உரங்களை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற சரிவிகிதத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்துதலும் அவசியம். முதலில் பயிர் பாதுகாப்பு காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம். அதில் ஒரு பகுதி மான்யமாக அரசு வழங்கிவிடுகிறது. இதற்கு நாம் செய்யவேண்டியது விதை நெல், உரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை கொள்முதல் செய்யும்போது அந்த இரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். அப்படிச் செய்யும்போது இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது நாம் எவரிடமும் கையேந்த வேண்டியதில்லை. உரிமையோடு நமது இழப்பீட்டைப் பெறமுடியும். இத்தனைப் பிரச்சனைகளையும் தாண்டி விவசாய விளைபொருட்கள் விற்பனைக்குச் செல்லும்போது இடைத்தரகர்களால் விவசாயிகளின் உழைப்பு உரிஞ்சப்படுகிறது. உதாரணமாக முட்டைகோசு, முள்ளங்கி போன்றவை கிலோ ஒன்று மூன்று ரூபாய்க்கு வாங்கி பொதுமக்களை சென்றடையும்போது பத்து மடங்கு விலையேற்றத்துடன் சென்றடைகிறது. நடுவில் உள்ள ஒன்பது மடங்கு இலாபம் இடைத்தரகர்களால் அனுபவிக்கப்படுகிறது. பரிட்சார்த்த முறையில் ஒரு பெண் விவசாயி ஆந்திர மாநிலத்தில் அனைத்து விவசாயப் பொருட்களையும் மொத்த விற்பனைக்கு தாங்களே கொண்டுசென்று விற்பனை செய்ததில் பன்மடங்கு இலாபம் சம்பாதித்துள்ளனர். அனைவருக்கும் இலட்சக்கணக்கில் இலாபத்தைப் பிரித்துகொடுத்து நல்ல வழியும் காட்டியுள்ளார். குளிர்ப்பதப்படுத்தும் கிடங்குகள் அதிகளவில் தேவை என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அரசு உதவியை கோரிப்பெறலாம். தமிழ் நாட்டிலேயே மேட்டுப்பளையத்தில் மட்டுமே இதுபோன்று குளிப்பதனப்படுத்தும் கிடங்கு இருப்பதாகத் தெரிகிறது. ஒசூர், மதுரை, திண்டுக்கல், பெருந்துறை, சேலம், கிருட்டிணகிரி, ஈரோடு போன்ற விவசாயப் பெருநகரங்களில் குளிர்சாதனக் கிடங்குகள் அதிகளவில் உருவாக்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பன்மடங்கு உயரும் என்பது உறுதி. இதோடு கிருட்டிணகிரியில் உள்ளதுபோன்று விவசாய உபப்பொருட்கள் தயாரிக்கும் நிலையங்கள், உதாரணமாக மாம்பழம் அதிகமாக விளைச்சல் காணும் சேலம், கிருட்டிணகிரி போன்ற இடங்களில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலைகளைக் கூட்டு முயற்சியில் விவசாயிகளே செய்ய முனைந்தால் பன்மடங்கு இலாபங்களைப் பெறலாம். பருத்தி விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை சிறிது காலம் வைத்திருந்து விற்றாலே மூட்டைக்கு பல ஆயிரம் ரூபாய் அதிக இலாபம் கிடைக்கும்.இந்த விளைப்பொருட்கள் மீதே வங்கியில் பணம் பெற்று அந்த இடைக்காலத்தை சமாளிக்கலாம். அதுபோன்றே கரும்புச்சக்கை வைக்கோல் போன்றவைகளிலிருந்து தயாரிக்கக்கூடிய, காகித அட்டை, சணல், நூல் போன்ற பலவகைப் பொருட்களைத் தயாரித்து பல இலட்சங்கள் வருமானங்களைப் பெறலாம். இப்படி பல வகையில் நம் தன்மானம் கெடாத வகையில் உரிமையோடு, நம் சொந்த உழைப்போடு சுதந்திரமாக பெருமிதத்தோடு வாழ வழிகள் நிறையவே உள்ளன என்பதே யதார்த்தம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – (111)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18197440_1308734599180736_1596496701_n

    71516183@N03_rவெண்ணிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 110-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    sky

    திரு. ஜமீல் ரியாஸ் எடுத்திருக்கும் இந்த வித்தியாசமான புகைப்படத்தை இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.

    வானத்தின் அடர்நீல வண்ணமும், வெண்ணிலவைக் கம்பளியாய்ப் போர்த்தியிருக்கும் கருமேகக் கூட்டங்களும், கீழே தெரியும் மணற்குவியலும், பாறைகளும் ஏதோ கனவுலக் காட்சிபோல் கவினோடு தெரிகின்றன.

    இந்தக் காட்சியைத் தம் கவித்திறனால் மிளிரச் செய்ய நம் கவிஞர்களும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கவிதையையும் படித்துச் சுவைத்து வருவோம்.

    *****

    ”நீலவான், வெண்ணிலவைப் பொட்டாய் வைத்துக்கொண்டதைச் சற்றும் விரும்பாத காளமேகம் அதனைப் பட்டென மறைத்து, வான வயலில் விண்மீன்களை விதைக்க, அவை தாரகையாய்ச் சுடர்விடுகின்றன” என்ற சுவையான கற்பனையைத் தன் கவிதையில்  விதைத்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முளைத்தது…

    நீல வானம்
    நிலவை வைத்துக்கொண்டது-
    பொட்டாய்..

    மேகத்துக்குப் பிடிக்கவில்லை,
    மறைத்தது நிலவை..

    வான வயலில்
    விதைத்தது,
    விண்மீன் விதைகளை..

    விதை முளைத்து
    வெளிச்சமாய்-
    கண்சிமிட்டும் தாரகைகள்…!

    *****

    ”நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்த நிலவே! ஈசனின் சிரமேறிய உனக்கு அச்சமெதற்கு? காதலர்க்குத் தூதானாய்; மழலையர்க்கு மாதாவானாய்! இதயத்தில் கொலுவிருக்கும் எழில்நிலவே! உதயம்வரை ஒளிதருவாய் நீ எமக்கு!” என்று அம்புலியோடு அன்பாய் உரையாடுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    நிலாப்பாடம்!

    மேகத்தின் பின்னால் உன் முகத்தை
    ஏன் மறைத்தாய் வெண்ணிலாவே!
    நட்சத்திரத் தோழிகள் உடனிருக்க
    என்ன பயம் உனக்கு வெண்ணிலாவே!
    ஈசன் சூடியதால் வெண்ணிலாவே!
    உனக்கு ஈடு இணை எதுவுமில்லை
    வெண்ணிலாவே!
    காதலர்க்கு தூது செல்லும் வெண்ணிலாவே! அவர்
    உன்னைக் காணாமல் கலங்கிடுவார் வெண்ணிலாவே!
    கவிஞர்களின் கற்பனைக்கு அடித்தளம் நீ
    வெண்ணிலாவே!
    உன்னைக் காணாமல் மொழி மறப்பார்
    வெண்ணிலாவே!
    மழலைக்கெல்லாம் மாதா நீ வெண்ணிலாவே!
    உன்னைக் காணாமல் தவித்திடுவார்
    வெண்ணிலாவே!
    மேகத்திரை விலக்கி வெண்ணிலாவே!
    உன் எழில் முகத்தை காட்டிடுவாய் வெண்ணிலாவே !
    இருளின் துயர் நீக்கி வெண்ணிலாவே!
    ஒளியைத் தந்திடுவாய் வெண்ணிலாவே!
    நீ சிந்தும் சிறு துளி ஒளியில் வெண்ணிலாவே !
    மலை அரசி மிளிரும் எழிலைப் பார் வெண்ணிலாவே!
    உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் வெண்ணிலாவே!
    பூமித்தாயின் புன்னகையைப் பார் வெண்ணிலாவே!
    இதமாய் ஒளி வீசும் வெண்ணிலாவே!
    உடனே வெளியில் வா வெண்ணிலாவே!
    இதயத்தில் கொலுவிருக்கும் வெண்ணிலாவே!
    உதயம் வரும் வரை ஒளி தருவாய்
    வெண்ணிலாவே!
    சாதி, மதம் பார்க்காத வெண்ணிலாவே!
    சடுதியில் வந்திடுவாய் வெண்ணிலாவே!
    வளர்வதும், தேய்வதும் , மறைவதும்
    வெண்ணிலாவே!
    மரபென்று வாழ்ந்து காட்டுகிறாய்
    வெண்ணிலாவே!
    இதை மறக்காமல் மனதில் கொள்வோம்
    வெண்ணிலாவே!

    *****

    ”ஆகாயமே! நிலவுக்கு அதன் அழகைக் காட்டும் நிலைக்கண்ணாடி நீ. கன்னியரின் கார்குழலென அசைந்தாடும் கருமேகம்; அம் மேகத்துக்கு உன் நெருக்கம் தரும் மோகம். ஆகா! ஆகாயமொரு தமிழ்த்தோட்டம்; அதில் விண்மீன்களென மின்னுவதோ புலவர்களின் பாக்கூட்டம்” என்று தன் எண்ணத்தேரை அழகாய் ஓட்டி விண்ணைப் புகழ்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ”ஆகாயம் ஓர் ஆல்பம்!”

    மண்ணிலிருந்து ஆகாயத்தைப் பார்…நம்
    எண்ணமும் விண்ணைத் தொடுமப்பா..!

    வான வெளியை வியந்து நோக்கின்..
    மனதுக்குள் சிந்தனைபல கிளர்த்தெழும்..!

    விண்ணும் முகிலும் காதல்கொண்டு விளையாட..
    மண்ணும்மலையும் மறைந்திருந்து பார்க்கும்..!

    மேகம் நாணமுடன் விண்ணை நெருங்கி..
    மோகம் கொள்ளு மப்போது..!

    மண்ணில் வாழும் மனிதரை நோக்கி..
    கண் சிமிட்டும் விண்மீன்கள்..!

    கவர்ச்சிமிகு கன்னியரின் கார்குழல்போல்
    அசைந்தாடும் மேகக் கருங்கூட்டம்..!

    மதிமயக்கும் விண்ணை மனதார வாழ்த்த
    மலையேறிச் செல்லும் வெண்முகிலழகு..!

    எதிரொலி கொடுக்கும் இடியின் வாழ்த்தால்
    மறுஒலிகேட்டு மகிழு மனைத்தும்..!

    சின்னக் குழந்தைகள் கிறுக்கிய ஓவியமாய்
    மின்னல் கோடுகளின் மாலைதெரியும்..!

    மலை முகட்டை மழைத் துளியால்
    தலை நனைக்கும் வானமாவாய்நீ..!

    நிலவுக்கு அதன் அழகைக் காட்டும்
    நிலைக் கண்ணாடி போல்நீ..!

    வானமுனது ஓங்கார இரைச்சலில் ஆழ்ந்ததில்
    மனமெனது அகங்காரம் மெளனமாகிறது..!

    மலையின் மலைப்பான இயற்கைச் செழிப்பில்
    மலைத்தெழும் கற்பனைகள் ஏராளம்..!

    உவமை தேடும் கவிஞருக்கு..ஆகாயம்
    உன்னை விட்டால் வேறு ஆருமில்லை..!

    உச்சிவானம் பற்றியே உறக்கமிலாச் சிந்தனையுடன்
    மெச்சியுனைப் புகழாத கவிஞரிலர்..!

    ஆகாயமொரு தமிழ்த்தோட்ட மதில்…விண்மீன்கள்
    ஆகும் புலவர்களின் பாக்கூட்டம்..!

    அத்துணைக் கவிஞனின் கற்பனைக்கு விருந்தாகிய
    ஆகாயம்…நீயொரு “ஆல்பம்”

    *****

    விண்ணும் அதில் விளையாடும் நிலவும், அந்நிலவைத் துகிலென மறைக்கும் முகிலும் நம் கவிஞர்களின் கற்பனைக்குத் தீனியாய் அமைந்ததைத் தீஞ்சுவைக் கவிதைகள்வழிக் காணமுடிகின்றது. பாராட்டுக்கள் பாவலர்களே!

    *****

    ”கணினி யுகத்தில் பால்வீதியும் பொரிஉருண்டாய் உருமாறிப்போனது. அடடா! அண்டகோளத்தை இயற்கை அன்னை தன் கைகளில் அம்மானை ஆடுகிறாள். நீர்க் கோளமான புவியில் மட்டும் புல்லினமும், புள்ளினமும் தோன்றிச் சிந்தை மயக்கும் விந்தையை  என்னென்பது?” என்று பிரபஞ்சச் சிற்பியின் கைத்திறனைப் பஞ்சமின்றி அன்பு நெஞ்சமொடு போற்றும் கவிதை ஒன்றைக் கண்ணுற்றேன்! 

    பொரி உருண்டை

    பிரம்மாண்டமான நமது
    பால்வீதிப்
    பிரபஞ்சம் கலியுகத்தில்
    கணினி யுகத்தில்
    ஒரு படமாய்ப்
    பொரி உண்டையாய்ப்
    போனது!
    அண்ட கோளங்களை இயற்கை
    அன்னை கைகளில்
    அம்மானை ஆடுகிறாள்!
    சூரியக் கோள்கள் புரியும்
    சர்க்கஸ் போல்
    கோடான கோடிப்
    பரிதி மண்டலங்கள்
    குடை ராட்டினம் சுற்றும்,
    ஒளிமந்தைகள்
    நளின நடம்புரியும்
    பிரபஞ்சத்தைக் காணக்
    கோடிக் கண்கள்
    வேண்டும்!
    சூரியக் கதிர்ப் பொழிவில்
    நீரியக் கோளாம்
    பூமியில் மட்டும் ஏன்
    புள்ளினம், புல்லினம், பூவினம்
    துள்ளி முளைத்தன?
    இயற்கை அன்னை
    வயிற்றில்
    வாரிசாய்த் தோன்றிய
    ஆறறிவு மாந்தர்
    உன்னதப் படைப்பென்ன?
    தாரகை வானிலே
    இடியும், மழையும், மின்னலும்
    கடல் மடியிலே
    எரிமலை பொங்கி
    வெடிப்பும், துடிப்பும் எழுந்து
    பூகம்பத்தில்
    சுனாமி அலைகள்
    அடிப்ப தென்ன?
    மனிதர் வாழ்வெல்லாம்
    கதையாய்க்
    கனவாகிப் போவதென்ன?
    ஆயினும்
    கற்றதனால் நாம்
    பெற்ற பயன் என்ன? என்ன?
    பிரபஞ்சச் சிற்பியின்
    கைத்திறனை,
    கலைத்திறனை, கவினைக்
    காணாத போது?

    அறிவியலோடு அழகியலையும் சேர்த்துக் குழைத்து, வானில் தெரியும் அற்புதக் காட்சியைப் பொற்புடன் விவரித்திருக்கும் இக்கவிதை சிறப்பு! இதனை இயற்றிய கவிஞர் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் கனிவான பாராட்டு!

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 77

    க. பாலசுப்பிரமணியன்

    கேட்கும் திறனால் கற்றலில் ஏற்படும் பயன்கள்

    education-1

    கேட்கும் திறன் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வளத்திற்கு ஆதாரமாக அமைகின்றது. பல்லாண்டுகள் முயன்று நாம் பாடுபட்டு சேர்க்கக்கூடிய அறிவினை நாம் குறைந்த காலத்தில் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும், இந்த அறிவினை பெறுவதற்கு மற்றவர்கள் எடுத்துக்கொண்ட கால அவகாசங்கள் நமக்கு கிடைப்பது ஒரு ஈடில்லாத வரவு. ஆகவேதான் நாம் நல்ல கற்றவர்களோடு அமர்ந்து அவர்கள் அறிவினை நமக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தும் திருவள்ளுவர் என்ன கூறுகின்றார் ?

    கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், கேட்டறிந்தாலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.”

    “கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

    தோட்கப் படாத செவி.” 

    மற்றவர்கள் பேசி நாம் கேட்கும் பொழுது நமக்கு என்ன பயன்கள் ஏற்படுகின்றன.

    1. கற்றல் என்னும் செயல் மிக இயல்பாக நடைபெறுகின்றது.
    2. மற்றவர்களின் உணர்வுகளோடு கருத்துக்களும் வார்த்தைகளும் சேர்ந்து வருவதால் கற்றல், அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகள் உணர்வுமயமாக நடைபெறுகின்றன.
    3. மற்றவர்களுடைய உணர்வுகளோடு கேட்பவர்களின் உணர்வுகள் சங்கமமாகும் நிலை உருவாகி மனித நேயத்திற்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன.
    4. மற்றவர்களுடைய கருத்துக்களோடு உள்ளடங்கி அவர்கள் அனுபவங்கள் வெளிப்படுவதால் நம்முடைய கற்றல் ‘அனுபவ பூர்வமான கற்றலாக உருவாகின்றது.

    மொழிக்கல்வியில் கேட்கும் திறன் மிகவும் தேவையானதாகக் கருதப்படுகின்றது. மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுடைய தாய்மார்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளனர். இந்தச் செயல் நிகழும்போது

    1. தாய்க்கும் சேய்க்கும் நடக்கும் உறவாடலால் அன்புப் பிணைப்புக்கள் உருவாகின்றன.
    2. தாயின் முகம் மற்றும் உதட்டு அசைவுகள் குழந்தைகளின் பார்வையில் படும் பொழுது மூளையில் உள்ள கண்ணாடி நியூரோன்களால் அறியப்பட்டு பின் மொழி வழக்கங்களை உருவாக்குவதற்குத் துணையாக இருக்கின்றன.
    3. இதனால் மொழி உச்சரிப்புக்கள். மொழி வளம், மொழி வழக்குகள் ஆகியவை எளிதாக அறியப்பட்டு வழக்கத்திற்கு வருகின்றன.
    4. கேட்கும் செயலை தூண்டுவிடும் பொழுது குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள், பதில் கொடுக்கும் திறன்கள் மேம்படுகின்றன.

    பிற்காலத்தில் இந்தப் பழக்கங்கள் முழுமைப்பட்டு மொழித்திறன்களும் மொழிவளமும் வாழ்க்கையில் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.

    வளரும் நேரங்களில், நாம் குழந்தைகளை தொலைக்காட்சி செய்திகளை கேட்காத தூண்டும் பொழுது இந்த கேட்கும் வளம் மேளம் சிறப்படைகின்றது.

    கேட்கும் திறனை வளர்ப்பதில் பள்ளிகளில் “கதை சொல்லும் கலை” ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு கதையை உணர்வுபூர்வமாக, அந்தக் கதையின் இயற்கை சூழ்நிலைகளுக்குத் தகுந்தமாதிரி சொல்லும் பொழுது மூளையின் கறபனைத் திறன், சிந்தனைத் திறன், உருவகிக்கும் திறன் போன்ற பல திறன்கள் வளப்படுகின்றன. அந்தக்கதைகளின் கருத்துக்களைத் தன்னடக்கி குழந்தைகள் அந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றாகி விடும் நிலை ஏற்படுகின்றது. இதனால் பல நேரங்களில் அவர்களுடைய உணர்வு நிலைகள் பதப்பட்டு செம்மையாகி மனித உறவுகளையும் மனித நேயத்தையும் பலப்படுத்துகின்றன.

    கேட்கும் திறன் மனிதர்களுடைய உணர்வுகளோடு எளிதாக உறவாடுவதால்தான் பல சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய உணர்வுபூர்வமான பேச்சுக்கள் மூலம் ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றார்கள். சரித்திரத்தில் இதற்கான பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன.

    சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ பேச்சைக் கேட்ட உலக  மக்களின் நெஞ்சம் மதங்களுக்கு அப்பால் மனித நேயத்தைக் கண்டது.  மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் பேச்சு ஒரு சமுதாயத்தின் விடுதலைக்கு வழிவகுத்தது. இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திரப்போராட்டத்தில் பல மேதைகளின் அறிவாளிகளின் பேச்சுக்களைக் கேட்ட மக்கள் ஒரு போராட்டத்துக்கு தங்களை அற்பணித்தனர்.

    கேட்கும் திறன் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு மாற்றங்களைக் காண்கின்றது.

    உதாரணமாக

    1. ஒருவரின் வெற்றி அல்லது துயரக்கதைகளைக் கெடுக்கும் செயல்
    2. ஒருவரின் முயற்ச்சி, ஈடுபாடு அண்ட் போராட்டங்களை பற்றி அறியும் செயல்
    3. ஒருவரிடம் யதார்த்தமாக உலக நடப்களைப் பற்றி உறைந்த=யாடுதல்
    4. ஒருவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டல்
    5. ஒரு சிலரின் கருத்தாமிக்க உரையாடல் மற்றும் கருத்துப் போராட்டங்களைக் கேட்டல்
    6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் கொடுக்கும் விளக்கங்களைக் கேட்டல்

    இதுபோன்ற மற்ற பல கற்கும் திறன்களில் கேட்டலின்  ஆதிக்கத்தையும் தாக்கத்தையும் நாம் காணும் பொழுது பேசுபவர்களுடைய திறன் எப்படி இருக்கவேண்டும் என்று கேள்வியும் எழுகின்றது. தொடர்ந்து காண்போம்.

    (தொடரும் )

    Share