Blog

  • பாரியும் கபிலரும்

    வேதா இலங்காதிலகம்

     

     

    பறம்பு நாட்டரசன்  குறுநில மன்னன்

    பாரி  கடையெழு  வள்ளல்களில்  ஒருவன்.

    பற்றிக் கொள்ள முல்லைக்குத் தேரீந்தவன்.

    படைமடமற்றவன் கொடைமடம் உள்ளவன்.

     

    பறம்புமலை  முன்னூறு  கிராமங்களடங்கிய  செழிப்புலகம்.

    கலகலவெனச் சிரிப்பொலிக்கும் வெள்ளியருவி ஓசை

    கனி குலுங்கும் மரங்கள், ஓடைகள்

    மலர்ச்சோலைகள், தேன், இசைப் பறவைகளதிகம்.

     

    அள்ளிக்  கொடுக்க  அத்தனைகள் உண்டு

    பாரி கொடைமனமறிந்து கபிலர் பொருள்கொள்ள வந்தார்.

    புலமையினிணையற்ற திறமையறிந்து கபிலரிடம் நட்பானார்.

    பாரியை மட்டும் பாடும் நல்லிசைவாய்மொழிக் கவிஞரானார்.

     

    கொடை மனத்தான்,  நாட்டுவளமனைத்தும் பாரெங்குமேக

    மடைதிறந்த பாரிபுகழால் அழுக்காறடைந்தனர் அரசர்.

    மூவேந்தர் படையெடுத்து பறம்புமலையைச் சூழ்ந்தனர்.

    திறமையாம்  தற்காப்பு  முறையாற்போர் நீண்டது.

     

    போரால் பாரியை வெல்லல்லரிதென விழிபிதுங்கினர்

    படையடிவாரத்தில் விழுந்த கபிலர் கவியோலையால்

    பாரியைத் தந்திரத்தால் வெல்லப் பெண்கேட்டுத் தூதாகி

    முதுமை வேடத்தில் பாரியை யாழிசைத்துப் புகழ்ந்தனர்.

     

    பரிசாக அவனுயிரைக் கேட்கத் தன்னுயிரிழந்தான்.

    மக்களான அங்கவை  சங்கவை தனியானார்.

    துயரத்துடன் கபிலர் பெண்களையழைத்து  வேறிடமேகினார்.

    பார்ப்பனரிடத்தில் பெண்களையிணைத்துக் கபிலருயிர் நீத்தார்.

     

    மூவேந்தர்  வஞ்சத்திற்குப் பாரி பலியானார்.

    பறம்புமலை தனியானது. நட்பிலக்கணமாகினர்    பாரி – கபிலர்.

    கபிலர் தென்பெண்ணையாறருகில்  வடக்கிருந்துயிர் துறந்தார்.

    கபிலர் குன்றென அந்தவிடம் இன்றுமுள்ளது.

    Share
  • மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்

    ab

    அன்பானவர்களுக்கு

    நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
    மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள்
    சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே
    இன்னுமொரு நூற்றண்டிரும்

    என்றும்

    அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
    சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல்சூழ்ந்த
    மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
    இன்னுமொரு நூற்றாண்டிரும்

    என்றும்

    ஆன்மிகத் தொண்டாற்றிய பெரியோரை “இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று வாழ்த்துவது ஒரு மரபு. உழைப்பின் சுரண்டல் குறித்த தத்துவத்தை உலகுக்கு வழங்கிய மனிதரது சிந்தனைகளுக்கு அழிவில்லை.

    மனிதகுல விடுதலைக்காக சிந்தித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களது இருநூறாவது ஆண்டு மே 5 அன்று தொடங்குகிறது… (மே 5, 1818: அவரது பிறந்த நாள்). அவரது பங்களிப்பை அடுத்தடுத்த தலைமுறையினர்க்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் சில அரிய முயற்சிகளில் பாரதி புத்தகாலயம் ஈடுபட்டு வருகிறது. மெயிலை இணைத்துள்ளேன்…

    சென்னையில் இருப்போர், விருப்பமுள்ளோர் நாளை காலை ஒன்பது மணிக்கு இந்த விழாவில் வந்து பங்கேற்க வேண்டுகிறேன்.

    எஸ் வி வேணுகோபாலன்

    ———- Forwarded message ———-
    From: Thamizh Books <thamizhbooks@gmail.com>
    Date: 2017-05-04 19:22 GMT+05:30
    Subject: மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்
    To:

    அழைப்பிதழ்
    மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு மார்க்ஸ்,எங்கெல்ஸ் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. இதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.சம்பகலஷ்மி, பேரா.வெ.பா.ஆத்ரேயா, ஆய்வாளர் வ.கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தங்கள் வரவை எதிர் நோக்குகிறோம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    061231 Gopala Vimshati -19 verse 12- acrylic mural-lores

    ”இந்த தரிசனம் தந்திடுவாய் ,கோபாலா
    நந்த குமாரா நவனீதா, -அந்தரி(காளி)
    அண்ணா அழையாது அந்திமம்(கடைசி காலம்) ஆகுமோ!
    கண்ணாதா காலன்முன் கால்(திருவடி)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”தேரினிரு பக்கம் திருவடிகள் நின்றிட,
    பாரின் பளுகுறைக்க பாரதப் -போரினைச்
    செய்திட பார்த்தனின் சாரதியாய் வந்தாரே,
    பெய்திடும் வான்மழை போல்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”கடல்படுத்தக் கண்ணா , கருத்தமணி வண்ணா
    கடலை(கடலை போடுதல் பேசி) இடுறாய் (கிளியாள்)கோபி -உடனிருக்க,
    சீஸர்போல் பேசுகின்றாய், சீராயர் WORLD-CUP-நீ,
    நாஸர்பெண்(எகிப்து என்பதால் நாஸர்) ”சாஸரவள்” நைல்(யமுனை நைல் ஆச்சு , கோபிகா கிளியோபாத்ரா)….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170502 - Dialogue with Arjuna -lores

    ”வியப்பென பார்த்து, வியப்பெனக் கூறி
    வியப்பென கேட்டும் விளங்கா -வியப்பாம்
    விவரிக்க ஒண்ணா விசித்திர ஆன்மா
    எவருக்கும் எட்டா எழில்”….கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 86

    அனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு

    முனைவர் சுபாஷிணி

    The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இதில் பிரான்சின் க்ராஸ் நகரத்தில் நிகழும் ஒரு திகில் சம்பவத்தை கதையாக்கிக் காட்டியிருப்பார்கள். இலைகளிலிருந்தும், செடிகளிலிருந்தும், மரப்பட்டைகளிலிருந்தும் வாசனை திரவியங்களை உருவாக்கும் கலையையும் மிஞ்சியதாக அழகிய இளம் பெண்ணின் உடலிலிருந்து வாசனை திரவியம் எடுக்கும், சிந்தனை பேதலித்த ஒரு ஆராய்ச்சியாளனைப் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தத் திரைப்படம். இந்தக்கதையின் மையக்கரு ஒரு கற்பனைதான் என்றாலும், க்ராஸ் நகரின் உலகப்பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பு பற்றிய செய்திகளைப் பிரபலப்படுத்தி பேச வைத்தது இந்தத் திரைப்படம் எனலாம்.

    as1

    வாசனை திரவியங்கள் என்றாலே பலருக்கும் முகத்தில் மலர்ச்சி ஏற்படும். இயற்கையில் மலர்கள் ஏற்படுத்துகின்ற வாசனைகளை விரும்பாதார் யார்?

    மலர்கள் இல்லாத வேளையில் ஊதுபத்தியை ஏற்றி வைத்து அது தரும் சுகந்தத்தை ரசிப்பதையும் பலரும் செய்கின்றோம். புறத்திலே வாசனையை விரும்பும் நாம் நம் உடலும் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடலுக்கு வாசனை திரவியங்களை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். வாசனை திரவியங்களில் உலகப்புகழ்பெற்றவை பிரான்சு நாட்டின் வாசனை திரவியங்களின் தயாரிப்பு எனலாம். பிரான்சில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிப்பாளர்கள் இயங்கி வருகின்றார்கள். வாசனை திரவியங்கள் நம் வாழ்வில் பண்டைய காலந்தொட்டே முக்கியத்துவம் வகித்துவருகின்றன. மனித நாகரிகத்தின் ஒரு பகுதியாக வாசனை திரவியங்களின் பயன்பாடு இருந்திருக்கின்றது என்பதை பண்டைய சமுதாயங்களைப் பற்றி ஆராயும்போது அறிந்துகொள்ள முடிகின்றது. உதாரணமாக, எகிப்தில், இறந்தோரின் உடலை மம்மியாக்கி பதப்படுத்தி வைக்கும் வேளையில் வாசனை திரவியங்களை உடலில் பூசுவதும் ஒரு சடங்காகின்றது. எகிப்து மட்டுமல்ல. ஏனைய பண்டைய சமூகங்களிலும் வாசனை திரவியங்கள் நீண்ட நெடுங்காலம்தொட்டே வழக்கில் இருந்து வந்துள்ளன.

    as

    பிரான்சின் க்ராஸ் நகருக்கு நான் 2010ஆம் ஆண்டு சென்றிருந்தபோது அந்த நகரில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான ஒரு இடமாக இந்த அருங்காட்சியகத்தை எனது டைரியில் குறித்து வைத்திருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. முதலில் வேறு விதமான ஒரு எண்ணமே மனதை ஆக்கிரமித்திருந்தது. வாசனை திரவியத்திற்குக்கூட ஒரு அருங்காட்சியகமா? ஒரு வேளை பிரான்சில் தயாராகும் எல்லா வாசனை திரவியங்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் இடமோ என்ற எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கெட் பெற்றுக்கொண்டு நுழைந்த முதல் நிமிடமே ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் நிற்கின்ற உணர்வே எனக்கு மேலிட்டது.

    இன்று நாம் காண்கின்ற இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது 1918ஆம் ஆண்டு. பிரான்சின் பிரபலமான நபர்களில் ஒருவரும் அப்போதைய பிரான்சின் ஜனாதிபதியின் மகனுமாகிய ஃப்ரான்சிஸ் கானோ (Francois Carnot) தனியார் அருங்காட்சியகம் ஒன்றினை ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக இது விரிவடைய ஆரம்பித்தது.

    as2

    க்ராஸ் நகர் வாசனை திரவியங்கள் உற்பத்திக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு நகரம். பிரான்சின் கிராஸ் நகரில் வயல்களில் விளையும் லவெண்டர் பூக்களைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். வயல் முழுதும் ஊதா நிறக்கம்பளம் விரித்தார் போல விளைந்திருக்கும் லவெண்டர் செடிகளை விரிவாக இந்த நகரின் வயல்களில் காணலாம். லவெண்டர் பூக்கள் பெருவாரியாக வாசனை திரவிய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இங்கே விளையும் பல வகையான மலர்களிலிருந்தும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பூக்கள் மட்டுமல்ல. மூலிகைச் செடிகளிலிருந்தும், சில மரங்களின் தோல் பட்டைகளிலிருந்தும் கூட வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

    as3

    இந்த அருங்காட்சியகத்தில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குடுவைகளும், இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்றும் விளக்கக் குறிப்புக்கள் கணினி வழி குறும்படங்களாகக் காட்டப்படுகின்றன. ஒரு தனிப்பகுதியில் பண்டைய காலத்தில் எவ்வாறு வாசனை திரவியங்கள் உருவாக்கப்பட்டன என்ற செய்திகள் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.முந்தைய நூற்றாண்டுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட சில பழைய பாண்டங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    ஒரு தனிப்பகுதியில் பிரான்சில் தயாரிக்கப்படும் பிரபலமான அனைத்து வாசனை திரவியங்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளன. வண்ண வண்ண குடுவைகளில் இவற்றைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. வாசனை திரவியங்கள் மட்டுமன்றி மனிதர்கள் நாம் பயன்படுத்தும் சோப்பு, அலங்கார வாசனைப்பொருட்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி விரிவான தகவல் களஞ்சியமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.

    as4
    இந்த அருங்காட்சியகம் தற்போது இருக்கும் இடத்தின் முகப்புப் பகுதியானது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது இந்த நகரிலுள்ள 14ஆம் நூற்றாண்டு டோமினிக்கன் மடாலயத்தின் பின்புறச்சுவற்றை ஒட்டியதாக அமைந்திருக்கின்றது. வெவ்வேறு தளங்களில் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ஒரு தளத்தில் மூலிகைகள் தனித்தனியாக வகைப்படுத்தி வளர்க்கப்படுவதையும் காணலாம்.

    யாருக்குத்தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் மனதைக் கவரும் நறுமணத்துடனும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது?
    மனிதர்கள் நாம் எல்லோருமே அழகியலை விரும்புபவர்களாகத்தானே இருக்கின்றோம். அந்த மனித உள்ளத்தின் தேவையை படம் பிடித்துச் செயல்வடிவில் காட்டுகின்றது இந்த அருங்காட்சியகம்.

    க்ராஸ் வாசனை திரவியங்கள் அருங்காட்சியகம், அருங்காட்சியகப் பிரியர்கள் அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அருங்காட்சியகமே!
    .

    Share
  • “அனைவரும் உழைப்பாளிகளே”

    சித்ரப்ரியங்கா ராஜா

              FB_IMG_1493606894685

     

     

     

     

     

     

     

     

     

    அகிலம் காத்து அருளும் தெய்வமாய்

    ஆருயிர் தந்து நம்முயிர் காக்கும் பெற்றோராய்

    இறுகிய மனதை இளகச் செய்யும் கலைத்துறையினனாய்

    ஈடற்ற சாகசங்களால் சாதனை படைக்கும் மாணவனாய்

    உழைப்பே உயர்வென நம் சோற்றிற்கு வியர்வை சிந்தும்  உழவனாய்

    ஊழிகள் பல  களைவதில் நல்ல மருத்துவனாய்

    எத்தனை இடர்வரினும் நாட்டு எல்லையில் எதிர்கொள்ளும் இராணுவ வீரனாய்

    ஏற்றங்கள் பல நல்கும் ஆற்றல்மிகு பொறியாளனாய்

    ஐயங்கள்அகற்றி அறிவை விருத்திக்கும் ஆசிரியனாய்

    ஒருவர் இருவரல்ல பலகோடி இவர் போன்றோர்!

    ஓய்விற்குப் பின்னும் சோராது உழைக்கும்

    சீரிய நல்மனிதர் இவர் அனைவரும்   உழைப்பாளிகளே!

    அண்டம் முழுதும் உள்ளோர் இன்று

    என் அன்புக் கவிதையின் உள்ளே அடக்கம் !

    யாதேனும ஒருவரை யான்விட்டு இருப்பின்

    சினமேனும் கொள்ளாது சிறியேன்

    பிழைபொறுத்து அருள்க!

     

     

     

    Share
  • இஸ்ரோவின் புதிய சாதனை!

    பவள சங்கரி

    isro-solar-hybrid-electric-car_827x510_81493696956

    நமது இஸ்ரோவின் மற்றுமொரு சாதனை பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக சூரிய ஒளியை பயன்படுத்தி கார்களை இயக்கும் முறையை உருவாக்கியுள்ளனர். நேற்று மாருதி ஆம்னி வண்டியில் இதை பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். இந்த காரின் மேற்கூரையில் சோலார் பேனல்களை வடிவமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அவர்களின் மற்றொரு கண்டுபிடிப்பான, புதுவகையான லிட்டானியம் பேட்டரியில் சேமித்து அதற்குரிய தனி மோட்டாரில் இயந்திரச் சக்தியாக மாற்றி கார் ஓட்டும் முறையை உருவாக்கிவிட்டனர். இதில் சில மாற்றங்களைச் செய்து வணிகரீதியில் கொண்டுவர உள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. நேற்று இவர்கள் பச்சைக்கொடி காட்டி வெள்ளோட்டம் விட்டது சூரிய சக்தி பயன்பாட்டின் வெற்றிக்கான பச்சைக்கொடி என்பதும் மிக மகிழ்ச்சியான செய்தி!

    http://auto.ndtv.com/news/isro-demonstrates-solar-hybrid-electric-car-1688371

    Share
  • சாளிக்கிராமம் அடை நெஞ்சே! (பிரயாணக் கட்டுரை)

    -என். ஸ்ரீதரன்

    நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் என்னும் சாளிகிராமப் பெருமாளைச் சேவிப்பது அவ்வளவு எளிதல்ல. பன்னிரு ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் ஏராளமான திவ்விய தேச க்கோவில்களைக் குதிரையில் சென்று தரிசித்து மங்களாசாசனம் செய்துள்ளார். சாளிகிராமப் பெருமாளையும் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் நடந்து சாளிக்கிராமம் போவது மிகவும் கடினம் என்பதால் ’சாளிக்கிராமம் அடை நெஞ்சே’ என்று பாடியுள்ளார்.

    முக்திநாத் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்னும் என் நெடுநாளைய ஆசை இந்த வருடம் நிறைவேறியது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ஸ்ரீ டிராவல் மூலம் மேற்கொண்ட  எட்டு நாள் பிரயாண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    முதல் நாள் திங்கட் கிழமை ( 3-4-2017)

    இன்று திங்கட் கிழமை . வெங்கடேசப் பெருமாளை வணங்கிவிட்டு எட்டரை மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் நங்கநல்லூரிலிருந்து கிளம்பி மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தடைந்தோம். தில்லிக்குப் போய் அங்கிருந்து லக்னோ செல்லவேண்டும். எங்களுடன் சாலிக்கிராமத்திலிருந்து பாலசுப்ரமணியம், அவரது மனைவி, மகள், மகன் ஆக நால்வர் வருகிறார்கள். இன்னும் இரண்டு பேர் சித்ரா  அவரது தமக்கை கல்யாணி, ஐந்து மணி விமானத்தில் புறப்பட்டு  லக்னோ வந்து சேருவார்கள். ஆக மொத்தம் எட்டு பேர் சென்னையிலிருந்து முக்திநாத் போகிறோம்.

    பாலசுப்ரமணியம் குடும்பம் எங்களுக்கு முன்பே வந்து போர்டிங் பாஸ் வாங்கிவிட்டிருந்தார்கள். நாங்களும் போர்டிங் பாஸ் வாங்கின பிறகு எல்லோரும் விமானத்தில் ஏறினோம். காலை 10.30 மணிக்குக் கிளம்பிய விமானம் சரியாக 1:00 மணிக்குக்குப் புது டில்லியை அடைந்தது. அங்கு மற்றொரு முறை பெட்டிகளை ஸ்கேன் செய்து, செக்யூரிட்டி செக் செய்து இன்னொரு விமானத்தில் ஏறி லக்னோ சென்றடைந்தபோது சுமார் 3.30 மணி.  டூர் மேனேஜர் பார்த்தசாரதி விமானநிலையத்திற்குக் கார் அனுப்பியிருந்தார். லக்னோவின்  அழகைப் பார்த்துக் கொண்டே காரில் சென்றோம் . பெரிய பெரிய கட்டிடங்கள், சாலையில் ஏராளமான வாகனங்களைப் பார்த்தபோது லக்னோ பெரிய ஊர் என்று புரிந்தது. எங்கள் கார் பிரசிடெண்ட் ஓட்டலை அடைய 15 நிமிடம் ஆகிற்று. ரிசப்ஷனில் பார்த்தசாரதி எங்களை வரவேற்றார். அனைவருக்கும் ஒரு ஸ்டீல் தட்டும், ஒரு ஸ்டீல் தம்பளரும் வழங்கப் பட்டது; ஆளுக்கு ஒரு மினரல் பாட்டில் கொடுக்கப்பட்டது.

    சென்னையிலிருந்து பரிமளா என்பவரும் பெங்களூருவிலிருந்து அவருக்குத் தெரிந்த ஏழு பேரும் நம்முடன் வருவார்கள் என்று சொன்னார். அன்று ஓய்வு.  வேறு எங்கும்  போக வேண்டியதில்லை என்று கூறினார். எனவே கடைவீதிக்குச் சென்று நைவேதியத்துக்குத் தேவையான திராட்சை, முந்திரி, பாதாம் எல்லாம் வாங்கி வந்தோம். அதற்குள் வெளியே போயிருந்த பரிமளா மாமியும் அவருடைய தோழிகளும் வந்து விட்டிருந்தார்கள். பரிமளா மாமி சென்னையில் மையிலாப்பூரில் வசிப்பதாகவும், முக்திநாத் பார்த்துவிட்டுக் காசி, கயா போய்விட்டுச் சென்னை போகப் போவதாகவும் கூறினார். அவருடைய உயிர்த்தோழி லக்ஷ்மியை அறிமுகம் செய்து வைத்தார்.

    இரண்டாம் நாள் புதன் கிழமை ( 04-04-2017)

    காலை ஆறு மணிக்கு லக்னோவிலிருந்து நாங்கள் பதினாறு பேரும் நைமிசரண்யம் கிளம்பினோம். ஒன்பது மணி சுமாருக்கு நைமிசரண்யத்திற்கு பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சீதாபூர் என்னும் இடத்தை அடைந்தோம். அங்குள்ள பெருமாளைத் தரிசனம் பண்ணிவிட்டு நைமிசரண்யத்தில் உள்ள கோமுகி நதிக்கரைக்கு வந்தோம். நைமிசரண்யம் திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.

    sali1

    நதியில் குளித்துவிட்டுத்  திவ்யதேசப் பெருமாளான தேவராஜப் பெருமாளை நின்ற கோலத்தில் தரிசனம் செய்தோம்.

    sali2

    போகும் வழியில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து காடு போல் தோற்றமளித்தது. பக்தர்கள் வழியெல்லாம் சேவித்துக் கொண்டே சென்றனர். பெருமாள் வனரூபத்தில் இருப்பதால் அப்படிச் சேவிக்கின்றனர் என்று பரிமளா மாமி சொன்னார். அவர் ஏற்கனவே இந்த இடத்தைப் பார்த்து விட்டார். இப்போது இரண்டாம் முறையாகத் தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.

    ”ஓரறிவும் இல்லாத என்போல்வார்க்கு உய்யலாம்
    பேரறிவு உண்டேனும் பிறர்க்கரிது – பார் அறிய
    நைமிசரண்யத்து நாதர் அடியாரொடும்
    இம்மிசார் உண்டாயி னால்.”

    என்று திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் போற்றப்பட்ட தலம் நைமிசரண்யம். அங்கு  திருப்பதி தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படும் பாலாஜி கோவிலில் வெங்கடேசப் பெருமாளைத் தரிசனம் செய்தோம். பின்பு சக்தி பீடம் லலிதாதேவி, சக்ர தீர்த்தம், வியாசர் கோவில் எல்லம் கண் குளிரத் தரிசனம் செய்துவிட்டு  ஓட்டலுக்கு வந்தோம். எங்களுடன் சமையல்காரர் சாந்தகுமார், அவருக்கு உதவி செய்ய இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் செய்து வைத்திருந்த மதிய உணவை உண்டு விட்டு அயோத்திக்கு புறப்பட்டோம்.

    அயோத்திக்குப் பதினைந்து கிலோமீட்டர் முன்னால் உள்ள பைசாபாத் என்னும் ஊரிலுள்ள “திருப்தி”  ஓட்டலுக்கு  இரவு 8.15 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு நிம்மதியாக உறங்கினோம்.

    மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை ( 05-04-2017 )

    இன்று ஸ்ரீராமநவமி. இந்நாளில் அயோத்தியில் இருப்பது மனத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. எங்குப் பார்க்கிலும் கூட்டம்; வட இந்தியாவே  அப்படிதான். குறிப்பாக நதி, கடல் இருக்கும் ஊரில் ஏதாவது திருவிழா அல்லது மேளா என்றால் கூட்டம் அலைமோதும்.  ஏராளமான வாகனங்கள், மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் போக அனுமதிக்கப் படவில்லை.சாலையின் ஓரத்தில் பேருந்தை  நிறுத்திவிட்டு எல்லோரும் கீழே இறங்கினோம். அங்கிருந்து ஒரு மணல் மிகுந்த ஒரு சரிவான பாதையைக் கடந்து கீழே உள்ள மற்றொரு சாலையை அடைய வேண்டும். எல்லோரும் கீழே இறங்கி விட்டோம். ஆனால் பரிமளா மாமி கீழே இறங்கும்போது கால் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார். ஒருவர் கை கொடுக்கக் கஷ்டப்பட்டு எழுந்தார். கால் வலியினால் துடித்தார். நடக்க முடியவில்லை என்று சொன்னதால் அவரைப் பேருந்திலே விட்டு விட்டு நாங்கள் ஷேர் ஆட்டோவைப் பிடித்துச் சரயு நதியை அடைந்தோம். புனிதமான நதி சரயு. ஆரவாரமின்றி அழகாய், அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தாள்.  நதியில் நீராடிவிட்டுத் திவ்ய தேச கோவிலான அம்மாஜி பெருமாள் (ராமர்) கோவிலுக்குச் சென்றோம். அயோத்தியாவின்  ராமபிரானை, பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்கள் 13 பாசுரப்பாக்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நம்மாழ்வார்

    “கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பாரோ?
    புற்பா முதலாம் புல்லெறும் பாதி ஒன்று இன்றியே
    நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
    நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே” எனப் போற்றுகிறார்.

    ராமர், சீதையை நன்கு சேவித்தோம். கர்ப்பகிரஹம் எப்போதும் இருட்டாக இருக்கும். இன்று ஸ்ரீராம நவமி என்பதால் நல்ல வெளிச்சத்தில் பகவானைச் சேவிக்க முடிந்தது  என்றார் பார்த்தசாரதி. அவர் கூறியதுபோல் நல்ல பிரகாசமான வெளிச்சத்தில்  பெருமாளைச் சேவிக்க முடிந்தது.

    பிறகு ராம ஜென்ம ராமர் தரிசனத்திற்கு வரிசையில் நின்றோம். ராம ஜென்ம பூமியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமரை ”ராம்லாலா” என்கிறார்கள். காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் திறந்திருக்கும். மீண்டும் இரண்டு மணிக்குத் திறக்கிறார்கள். வளைந்து வளைந்து செல்லும் மிகவும் நீளமான வரிசை. ராணுவப் பாதுகாப்பு அதிகம் உள்ள இடம். நாலு முறை செக்கியூரிடி செக்கிங். பெல்ட், மொபைல், பேனா , வாட்ச் எதுவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தூக்கி வீசி விடுகிறார்கள். எல்லாம் வட இந்தியச் சிப்பாய்கள். நாம் பேசும் பாஷை அவர்களுக்குப் புரியவில்லை. ஏராளமான கூட்டமிருந்தாலும் ஒரு மணி நேரத்தில் ராமரைத் தரிசிக்க முடிந்தது.

    ”அயோத்தியில் குரங்கு அதிகம் . மூக்குக் கண்ணாடியைக் குரங்கு பிடுங்கிண்டு போய்விடும். ஜாக்கிரதையாய் இருங்க.  நான் போன தடவை வந்தபோது குரங்கு என் கண்ணாடியைப் பிடுங்கிண்டுப் போயிடுத்து “ என்று உஷார் படுத்தினார்  கல்யாணி மாமி.

    பிறகு அனுமான் கோவில், சீதா கோவில், சீதையின் சமையல் அறை, கனகபவன், தசரத பவன் எல்லாவற்றையும் கண்டு களித்துவிட்டு ஓட்டல் வந்தோம். உணவுக்குப் பிறகு சுமார் நாலு மணிக்கு கிளம்பினோம். நேபாள் பார்டரை 9.30 மணிக்குள்  அடைந்துவிட வேண்டும் என்று பார்த்தசாரதி சொல்லிக் கொண்டிருந்தார். கோரக்பூர் வழியாகச் சென்று பைரவா என்னும் இடத்தை. நாங்கள் அடையும்போது இரவு சுமார் 10.45. பைரவா கோவில் அல்ல.  அங்குதான் நேபாளத்தின் பார்டர் இருக்கிறது.

    பார்டர் மூடி விட்டதால் அதற்குமேல் போக அனுமதி கிடையாது. மேலும் நேபாள் எல்லைக்குள் பேருந்து போக பர்மிட் வேண்டும், அது காலையில்தான் கிடைக்கும். எங்களுக்குப் பார்டரிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மம்தா ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பார்டர் மூடிவிட்டதால் பேருந்தால் போக முடியாதே தவிர அதற்கு மாற்றாக ரிக்‌ஷாவில்  போக அனுமதி உண்டு. டிக்கியில் உள்ள சாமான்கள் ( பெட்டிகள், பைகள் ) எல்லாம் ரிக்‌ஷாவில் ஏற்றப் பட்டன. நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டே நடந்தோம். பரிமளா மாமிக்கு  ஒருவர் பைக்கில் லிப்ட் கொடுத்தார். அன்று இரவு உணவுக்குப் பிறகுச் சுகமாய் தூங்கினோம்.

    நான்காம் நாள் சனிக்கிழமை (06-04-2017)

    காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுக் கிளம்ப தயாரானோம். அப்போது மணி எட்டு . பர்மிட் வராததால் பேருந்து தயாரக இல்லை. பக்கத்திலிருந்த கடையில் பிஸ்கட் வாங்கினோம். இந்திய ரூபாய்க்கு நேபாள ரூபாயை மாற்றிக் கொண்டோம். இந்திய நூறு ரூபாய் நேபாள நூற்று அறுபது ரூபாய்க்குச் சமம். அது போலவே நேபாள நேரம் இந்திய நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்னதாக  இருக்கும்.

    எட்டரை மணிக்குப் பர்மிட் வந்துவிட்டதால் நாங்கள் கிளம்பினோம்.   நாங்கள் போக வேண்டிய இடம்  போக்ரா. பேருந்து  எந்தவிதத் தடங்கலும் இல்லாமல்  சென்று கொண்டிருந்தது. பன்னிரண்டு  மணிக்கு வண்டி ஒரு இடத்தில் நின்றது. டிரைவர் டீ, காபி சாப்பிடுவதற்கு வண்டியை நிறுத்தினார் என்று நினைத்தோம். கீழே இறங்கி விசாரித்துவிட்டு வந்த டிரைவர், . ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருப்பதால் ரோடின்    ஒரு பக்கம்தான் வண்டியை அனுமதிக்கிறார்கள், இப்போது எதிர்ப் பக்கத்திலிருந்துதான் வண்டி வந்து கொண்டிருக்கிறது.  வண்டியை எடுக்க  பிற்பகல் நாலு மணி ஆகிவிடும் என்றார். இது சற்றும் எதிர்பாராதது. என்ன செய்வது ? வெளியூரில் பிரயாணம் செய்யும்போது இப்படி ஏதாவது தடங்கல் வருவதை யாரால் தடுக்க முடியும்? காற்றோட்டமான இடத்தில் நின்று, நடந்து, பேசிக் காலத்தைக் கடத்தினோம். பேருந்திலேயே சாப்பிட்டு விட்டோம். நாலு மணிக்கு எங்கள் பேருந்து கிளம்பியது. மோசமான சாலை . இரண்டு மணி நேரம் கழித்து டிரைவர் காபி குடிக்க வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினார். அங்கு காபி , டீ குடித்தோம் . இரவு 9.30 மணி சுமாருக்கு போக்ராவை அடைந்தோம். ஓட்டல் ஸ்போர்ட்ஸில் எங்களுக்கு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அன்று இரவு சாந்தாராம் அரிசி உப்புமா பண்ணி எங்களுக்குச் சாப்பிட அளித்தார்.  இரவு அங்கு தங்கினோம்.

    ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ( 07-04-2017)

    காலை எழுந்து காபி , சிற்றுண்டி எல்லாம் முடித்துத் தயாராகி விட்டோம். இன்று சிறிய விமானம் மூலம் ஜான்சம் என்னும் இடத்திற்குப் போக வேண்டும். ஜான்சம் ஏர்போர்டை அடைந்தோம்.  பரிமளா மாமியை டாக்டரிடம் அழைத்துப் போக வேண்டியிருந்ததால் பார்த்தசாரதி எங்களுடன் வரவில்லை. கபில் என்பவர் எங்களுடன் வந்தார். சிறிய விமானத்தில் (20 பேர் அமரக்கூடியது ) ஜான்சன் என்னும் இடத்தை அடைந்தோம். அங்கிருநது நடந்தே நாங்கள் தங்கும் ஓட்டலை அடைந்தோம். அங்கிருந்து ஜீப்பில் கிள்ம்பி ஒரு மணி நேரம் பிரயாணம் செய்து மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அப்படிப் போகும்போது கண்டகீ நதியில் ஏராளமான சாளக்கிராமங்களைக் கண்டோம். மலையடிவாரத்திலிருந்து முக்திநாத் கோவிலைக் குதிரை மூலமாகவோ அல்லது நடந்தோ அடையலாம். ஒன்றரை கிலோ மிட்டர் தூரம். சிலர் நடந்தும் சிலர் குதிரையிம் மூலமும் பிரயாணம் செய்தார்கள்.

    வடநாடு திவ்ய தேசங்களில் மிக முக்யமானதாகக் கருதப் படுவது சாளிக்கிராமம் என்னும் திவ்ய தேசம் . நேபாளம் அன்னபூர்ணா மலைத்தொடர்களுக்கு அப்பால் சுமார் 13800 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இது ஸ்வயாம்வ்யத்த ஷேத்திரம். சாளகிராமத் திருக்கோயில் நேபாளிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் தரையோடு தரையாக இருக்கும். இரண்டு சிறிய குளங்களும் ஆலயத்தின் உள்பிரகாரத்தில் 108 கோமுகிகள் வழியாகத் தீர்த்தம் கொட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம். பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் . பெரிய திருமொழி முதல் பத்து ஐந்தாம் திருமொழி முதல் பாசுரத்தில்

    “கலையும் கரியும் பரிமாவும் திரியுன் கானம் கடந்து போய்
    சிலையுன் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
    மலைகொண்டு அலை நீரணைகட்டி மதிள் நீர் இளங்கை வாளரக்கர்‘
    தலைவன் தலைகறுத்துகந்தான் சாளகிராமம் அடை நெஞ்சே” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்கிறார். சாளிக்கிராமம் அடைநெஞ்சே என்று ஒரு முறைக்கு  ஒன்பது முறை பாசுரங்களில் ஆற்றப்படுத்துகிறார்.

    கோமுகிகள் வழியாக வரும்  தீர்த்தம் புனித தீர்த்தம். அதிக சில்லென்று இருக்கும். முதலில்  அதைச் சிறிது குடித்து விட்டு பிறகு அதில் குளித்து விட்டு அங்கிருந்த இரண்டு குளங்களிலிருந்த நீரைச் சிறிது தலையில் ப்ரோஷணம் செய்துகொண்டு வரிசையில் நின்று  சாளிக்கிராமப் பெருமாளைச் சேவித்தோம்.

    பெண்களுக்கு ஆடைகள் மாற்றுவதற்குத் தனி அறை இருக்கிறது. மாயவனைகூட்டம் அதிகமாக இல்லாத காரணத்தினால் மூன்று முறை வரிசையில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மாலவனை, மாதவனை நாமம் பல சொல்லி நாராயணாவென்று தொழு நன்னெஞ்சே என்று பாடத் தோன்றியது.

    அங்கிருந்த பெண் அர்ச்சகர் நாம் எடுத்துச் சென்ற முந்திரி, திராட்சை முதலியவற்றை பெருமாளுக்கு நிவேத்யம் செய்து கொடுக்கிறார். அவ்விடத்தில்  கடை எதுவும் கிடையாது. அதனால் நாம் போகும்போதே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப் போய்விட வேண்டும்.

    திரும்பி வரும்போது குதிரை எதுவும் கிடைக்கவில்லை. எல்லோரும் . நடந்துதான் ஓட்டலுக்குத் திரும்பினோம். குளிர் என்றால் அவ்வளவு குளிர் . தலையில் தொப்பி, கைகளில் கிளவுஸ், காலில் சாக்ஸ், ஸ்வெட்டார் அதுக்கு மேலே ஒரு சாலவை என்று இருந்தாலும் குளிரின் சிலுசிலுப்பை உணர முடிந்தது. அன்று ஜான்சம்மில் தங்கினோம். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லை. ரஜாய் என்னும் கம்பளி இருந்ததால் குளிரைச் சமாளிக்க முடிந்தது.

    ஆறாம் நாள் (8-4-2017)

    இன்று காலை தேனீர் அருந்திவிட்டு எட்டு மணி சுமாருக்கு ஜாம்சம் ஏர்போர்ட்டுக்கு வந்தோம். பனி  அதிகமாயிருந்தது. பேசும்போது  வாயிலிருந்து பனிப் புகை வந்தது.  அப்போது மலையில் பனி படர்ந்து வெள்ளைச் சால்வையை அணிந்துள்ளது போல தோன்றியது. சூரியனும் பிரகாசத்துடன் பனியை நீராக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.  சிறிய விமானத்தில் கிளம்பி போக்ரா வந்து சேர்ந்தோம். சில சமயங்களில் சீதோஷ்ணம் காரணமாக விமானத்தை ரத்து செய்து விடுவார்கள். அதிர்ஷ்டவசமாக அன்று விமானம் எதுவும் ரத்து செய்யப் படவில்லை. நாங்கள் விமானம் மூலம் போக்ரா வந்தடைந்தோம். சில சமயம் சீதோஷ்ணம் காரணமாக எப்போதாவது யாராவது ஒருவர்  முக்திநாத் தலத்திலேயே முக்தி அடைந்து விடுவதுண்டு. அந்த மாதிரி அனுபவம் நேர்ந்திருக்கிறதென்று பார்த்தசாரதி பேருந்தில் வரும்போது கூறியது ஞாபகம் வந்தது.  ஓட்டலில் நுழையும் போது எங்கள் எல்லாருடைய மனதிலும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. எங்களை எதிர்கொண்ட பார்த்தசாரதி அதற்குப் பதில் அளித்தார். ”நேற்று மாமியை டாக்டரிடம் காட்டினேன். அவர் பரிசோதனைச் செய்து விட்டு காலில் இரண்டு எலும்பு முறிவு இருக்கிறது என்று மாவு கட்டு போட்டிருக்கிறார். ஒரு வாரம் கழித்து எலும்பு ஒன்று சேரவில்லையானால் மைனர் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்றார்.” இன்று மாமி விமானம் மூலம் சென்னை செல்ல டிக்கட் வாங்கியாகிவிட்டது என்றார். மாமியைப் போய்ப் பார்த்தோம் . எல்லாம் பெருமாளின் திருவுள்ளம் .நாம் விரும்பினாலும் அவன்  விரும்பாவிட்டால் பெருமாளைத்  தரிசிக்க  முடியாது என்றார் மாமி புன்முறுவலுடன்.

    மதியம் போக்ராவில் சைட் சீயிங் . முதலில் பெவா லேக்.. படகில் பிரயாணம் செய்து கோவிலுக்குப் போக வேண்டும். வராஹி கோவில், பிந்து வர்ஷினி கோவில், மகேஷ்வர் குகை, டேவிஸ் பால்ஸ் எல்லாம் சுற்றிப் பார்த்தோம். டேவிஸ் பால்ஸ் என்பது சிறிய நீர்வீழ்ச்சி.  மகேஷ்வர் குகை என்பது 5000 வருடம் ஆன பழமையான குகை. இங்குத் தானக உருவான சிவன் உள்ளது. கீழே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஓட்டல் திரும்பினோம்.

    ஏழாவது நாள் ( 09-4-2017)

    இன்று காட்மண்டுவுக்கு ரோட் மூலம் பயணம் செய்தோம். . இருபக்கமும் மலை . சாலையை ஒட்டி நதி ஓடிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாய் இருந்தது.

    போகும் வழியில் மானக்கம்னா தேவியைத் தரிசித்தோம். ரோப் காரில் ஏறி மலை உச்சிக்குப் போக வேண்டும். டிக்கட் உண்டு . ஒரு டிக்கட்டின் விலை ஐநூறு ரூபாய். நேபாளி கரன்சியில் எண்ணுறு ரூபாய் . நேபாளைப் பொறுத்தவரை இந்தியர்கள் வெளிநாட்டவர். ஆனால் விசா, பாஸ் போர்ட் இல்லாமல் இங்குப் பயணம் செய்யலாம் . இந்தியப் பிரஜை என்று நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது வோட்டர்ஸ் ஐடியை கையில் வைத்திருக்க வேண்டும்.

    போகும் வழியில் எங்கள் பஸ் பங்க்சர் ஆகி விட்டது. பங்க்சர் போட ஒரு மணி நேரம் ஆனது. காட்மண்டில் ரோடு மிகவும் சிறியது. மோசமாகவும் இருக்கும்.  அதனால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிவிடும். நாம் ஓட்டல் போய்ச்சேர எப்படியும் பதினோரு மணி ஆகி விடும் என்று வண்டி டிரைவர் சொன்னார். காட்மண்டு போய் சேரும்போது இரவு 9.30 ஆகியிருந்தது. எங்களுக்கு    மகாதேவ என்னும் ஓட்டலில் அறை ரிசர்வ் ஆகியிருந்தது. பெரிய ஓட்டல் . 24 மணி நேரமும் சூடான தண்ணீர் குழாயில் வரும். குளித்து விட்டுக் கீழே இறங்கி வந்தால் அதற்குள் சமையல்காரர் சாந்த குமார் இட்லி தயார் செய்து  வைத்திருந்தார். அன்று இரவு நன்கு உறங்கினோம்.

    எட்டாவது நாள் ( 10-4-2017)

    இன்று காலை 7.30 மணிக்குக் கிளம்பி முதலில் ஜல நாராயணனைத் தரிசிக்கச் சென்றோம். அரை மணி நேரத்தில் கோவிலை அடைந்துவிட்டோம். அப்போது ஆர்த்தி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. பாம்பின் மேல் பெருமாள் சயனம் செய்து  கொண்டிருக்கிறார். மிகவும் அழகான கண்கள். வைத்தக் கண்ணை எடுக்க முடியவில்லை.

    sali3

    கண் குளிர ஜல நாரயணனைத் தரிசித்து விட்டுப் பசுபதி நாத் கோவிலுக்கு வந்தோம். நல்ல கூட்டம். மைசூரைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்கிறார்கள்.

    sali4

    ஈஸ்வரனைத் தரிசித்துவிட்டு ஷாப்பிங் செய்தோம். காட்மண்டில் பவளம், பல வண்ண நிற  மணிகள் எல்லாம் விலை மலிவாக கிடைப்பதால் பெண்கள் ஆசைக்கு ஒண்ணு, மத்தவங்களுக்கு கொடுக்க ஒண்ணு என்று வாங்கினார்கள். ஒருவாறாக ஷாப்பிங் முடிந்ததும்  ஓட்டலுக்குத் திரும்பினோம்.

    பிற்பகல் 3.25க்கு ஏர் இண்டியா விமானத்தில் கிளம்பிப் புதுடில்லி வந்து அங்கிருந்து இன்னொரு விமானத்தில் ஏறிச் சென்னை வந்து சேரும்போது மணி சுமார் 11.50. சாளிக்கிராமம் அடை நெஞ்சே என்று திருமங்கை ஆழ்வார் பாடியதைப் போல் முக்திநாத் பெருமானை நெஞ்சில் வைத்துக் கொண்டு அவரவர் வீட்டை அடைந்தோம்.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (7)

    க. பாலசுப்பிரமணியன்

    பொருளும் அருளும்

    திருமூலர்-1-2

    வாழ்க்கையில் அனைவருக்கும் பொருள் சேர்ப்பதில் அளவற்ற ஈடுபாடு இருக்கின்றது. ஓலைக்குடிசையில் ஒட்டகம் ஒதுங்குவதற்குத் தலையை மட்டும் நீட்டிக்கொள்ள வேண்டி, பின்பு எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடிசை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறதோ அது போல் ஆசையும் நம் மனதிற்குள்ளே கொஞ்சம் தலை நீட்டுகின்றது.  பின் கொஞ்சம் கொஞ்சமாக நம் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

    இந்த மனம் அந்த ஆசைக்கு அடிமையாகப் போய் விடுகின்றது. அப்படியென்றால் வாழ்க்கை வலமாக இருக்க பொருள் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி நம் முன்னே எழுகின்றது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் கீழ்கண்ட திருக்குறள்

    “அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை,பொருளில்லார்க்கு

    இவ்வுலகம் இல்லை. “

    என்று வள்ளுவர் பெருமானே சொல்லியிருக்கின்றாரே என மனத்தில் சந்தேகம் தோன்றுகின்றது. ஆனால் அதே வள்ளுவப் பெருந்தகை பொருளைப் பற்றி எப்படி வருணிக்கின்றார்?

    அருள் என்னும்  அன்பு ஈன் குழவி பொருள் என்னும்

    செல்வச் செவிலியால் உண்டு.

    அவர் பொருளை ஒரு செவிலித்தாயிக்கு ஒப்பிடுகின்றார்.. பெற்ற தாய்க்கும் செவிலித்தாய்க்கும் எவ்வளவு வித்தியாசம்? உண்மையும் நகலும் ஒன்றாகுமா?

    இந்த மாயையிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் விடுபட திருமூலர் கூறும் அறிவுரை என்ன?

    “தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

    ஆற்றுப் பெருக்கிற் கலங்கி மலக்காதே

    மாற்றிக்  களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

    கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே.  (172)

    “வாழ்கையின் எல்லாப் பக்கங்களையும் அலசி ஆராய்ந்து தெளிந்து விடுங்கள். செல்வம் என்னும் ஆற்றுச் சுழலில் மாட்டிக்கொள்ளாமல் தெளிந்து நில்லுங்கள். பொருளாலும் செல்வத்தாலும் ஈர்க்கப்படாமல் அந்த ஆசைகளை மறுத்து விடுங்கள். நாளை கூற்றுவன் அழைப்பு வரும்பொழுதில்  துள்ளிச்செல்லத்  தயாராக இருங்கள். ” என்று அறிவுரை வழங்குகின்றார்.

    “எப்படி பாடுபட்டு தேனீக்கள் பூப்பூவாகச் சென்று உள்ளேயிருக்கும் தேனைப்   பருகிவந்து சேர்த்த பின்னே யாரோ ஒருவன் அந்தத் தேன் கூட்டில் உள்ள தேனீக்களையெல்லாம் விரட்டிவிட்டுத் தேனை எடுத்துச் செல்கிறானோ அதுபோல் நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வமெல்லாம் வேறுயாரோ எடுத்தச் சென்றிடுவார். இதை நன்கு உணர்ந்து உன் வாழ்க்கையை நடத்துங்கள்..” என்று விளக்கமளிக்கிறார் திருமூலர்.

    இதே கருத்தை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தும் பட்டினத்தாரோ இறைவனின் அருளை எங்கே நாடுகின்றார்?

    மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெல்லாம்

    கேடுண் டெனும்படி கேட்டுவிட் டோமினிக் கேண்மனமே

    ஓடுண்டு கந்தையுண் டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு

    தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையுமுண்டே

    பட்டினத்தாரின் இந்தப் பாடல் உலகப் பற்றிலிருந்து விடுபட்ட அவர் மனநிலையையும் இறைவன்பால் அவர் வைத்துள்ள அசையாத நம்பிக்கைக்கும் ஓர் முன்னுதாரணமாக விளங்குகின்றது.

    இந்தத் தெளிவு நிலைக்கு வந்ததால் தானோ மாணிக்க வாசகர் அனைத்தையும் ஒதுக்கி “இறைவா, நின் திருப்பாதம் ஒன்றே துணை. அதைப்பெற உதவிடுவாய். ” என்று இறைவனை நோக்கி விளிக்கின்றார்

    யானே பொய் என் நெஞ்சம்

    பொய் என் அன்பும் பொய்

    ஆனால் வினையேன் அழுதால்

    உன்னைப் பெறலாமே

    தேனே அமுதே கரும்பின்

    தெளிவே தித்திக்கும்

    மானே அருளாய் அடியேன்

    உனைவந்து  உருமாறே.

    மாணிக்கவாசகரின் உள்ளத்தின் ஒப்புதலைப் பார்க்கும் பொழுது அவருடைய தெளிவான சிந்தனைக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது

    இந்தத் தூய அறிவின் மூலமாகவும் ஒளிப்பிழம்பாகவும் இருக்கின்ற இறைவனை நாம் எங்கே நாட வேண்டும்? எந்த நாட்டில் யாருடைய வீட்டில் அவன் குடி கொண்டுள்ளான்? எத்தனை காலம் இதற்காகக் காத்திருக்கவேண்டும்? இதற்கெல்லாம் மிக அழகான தெளிவான பதிலை திருமூலர் தந்து விடுகின்றார்.

    உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

    மெள்ளக் குடைந்துநின் றாடார் வினை கெடப்

    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

    கள்ள மனமுடைக் கல்வியி லோரெ.!

    இதைவிடத் தெளிவாக யார் நமக்கு இறைவனின் அருளுக்கு வழிகாட்ட முடியும்?

    தொடரும்….

    Share
  • பாகிஸ்தான் இராணுவத்தின் அநாகரிகம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லைக்கோட்டைத் தாண்டி சுமார் 250 மீட்டர் நமது இந்தியப் பகுதியில் ஊடுறுவி நமது இரண்டு இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதோடு, அநாகரீகமான முறையில் அவர்களின் உடல்களை சிதைத்துச் சென்றனர். இதற்கு நம் இராணுவ அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பாகிஸ்தானுக்கு பதில் அளிக்கும் வகையில், நமது இராணுவத்திற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கு பதில் அளிக்கும் வகையில் 7 பாகிஸ்தானிய வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதே நாளில் வங்கிக் கருவூலத்திலிருந்து பணத்தை மாற்றுவதற்காக எடுத்துச் சென்றபோது தீவிரவாதிகள் அந்தப் பணத்திற்கு பாதுகாப்பிற்காகச் சென்ற நமது இராணுவ வீரர்கள் மூவரையும், வங்கி அலுவலர்கள் இருவரையும் சுட்டுக்கொன்று பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்ததும் முறியடிக்கப்பட்டது.

    சமீபத்தில் காஷ்மீர் பொது மக்களில் ஒருவரை இராணுவ வண்டியில் முன்னே கட்டி தற்காப்பிற்காகக் கொண்டுசென்றதை அனைவரும் வன்மையாகக் கண்டித்தனர். ஆனால் இந்த பொது மக்களுக்கு யார் இந்த தீவிரவாதி என்பது தெரியாமலா இருக்கும். அதைக்கண்டித்தவர்கள் இதற்கும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா. எல்லைக்கோட்டைத் தாண்டி நமது எல்லைக்குள் வந்து நமது இராணுவ வீரர்களை கொன்றுவிட்டு உடலையும் சிதைத்தவர்களையும் கண்டிக்க வேண்டுமல்லவா? முன்பு சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ததுபோல மீண்டும் ஒருமுறை இனி அவர்கள் இதுபோல் நடக்காதவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் பொறுப்பிலுள்ள காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியும் இணைத்து ஒரு புதிய மாகாணத்தை உருவாக்கி பாகிஸ்தான் பகுதியாக அறிவித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் மக்கள் இந்தியாவோடு இருப்பதையே விரும்புகின்றனர். அந்தப்பகுதியை இந்தியாவோடு இணைத்தாலே இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளில் அமைதி உடன்படிக்கையை மீறி நமது எல்லையில் ஊடுறுவிய தீவிரவாதிகளும், நமது இராணுவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும்!

    2014இல் 153 முறை அமைதி உடன்படிக்கையை மீறி ஊடுறுவியவர்களில் 104 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நமது இராணுவ வீரர்கள் 31 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். 2015இல் 150 முறையும் இதில் 101 பேர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நம்முடைய 33 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 2016இல் 223 முறை அத்துமீறி அதிகபட்சமாக இந்தியாவிற்குள் நுழைந்து 150 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். அதில் நமது இராணுவ வீரர்களில் 63 பேர் வீரமரணம் அடைந்தனர். 2017இல் இந்த 4 மாதங்களில் மட்டும் 65 முறை நமது எல்லையைத் தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர். இதில் 42 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் நமது இராணுவ வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டில் முதன்முறையாக நமது இரண்டு இராணுவ வீரர்களைக்கொன்று அவர்தம் இன்னுடல்களையும் சிதைத்துள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தி.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தியை விழா

    ad1

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி,தொழிலாளர் தினம்,மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

    ad1
    ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜென்ம தினத்தை முன்னிட்டும், உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டி தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், வளர் பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டும், குருஅருள் கிடைக்கவும் குடும்பம் தழைக்கவும் நோயின்றி மக்கள் நலமுடன் வாழவும் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற்றது. அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க சிறப்பு கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது. மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு பூஜைகளை ஸ்ரீ ராமானுஜரின் 1000 வதுஜெயந்தி விழாவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது..பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்

    Share
  • Sathyanarayana Pooja Invitation

     

    Namasthe,
    You are invited with your family.
    ad
    ad2
    ad2
    ad3
    Share
  • படக்கவிதைப் போட்டி 109-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பறக்கும் புறவினைப் படப்பெட்டிக்குள் மடக்கிவந்திருப்பவர் திரு. சத்யா. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    flying pegion

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

    ’காடுகொன்று கட்டடப் பயிர் வளர்த்த மனிதனால் பறவையினங்கள் உயிர்வாழ்வதே கேள்விக்குரியாகிவிட்டதே!’ என வேதனைப்படுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனால்…

    காடு கொன்று
    கட்டிடப் பயிர் வளர்த்ததில்,
    கண்டுமுதல் அமோகம்..

    கூடுகட்டி
    மாடிகளில் வாழும்
    பறவை வாழ்க்கைக்கு
    மாறிவிட்டான் மனிதன்..

    கூடுகட்டி
    குடும்பமாய் வாழ்ந்த
    பறவையெல்லாம்
    கூண்டோடு காலி..

    இருக்கும் ஒன்றிரண்டும்
    இருப்பிடம் தேடுகின்றன-
    இலக்கில்லாமல் பறந்து…!

    *****

    ’மனிதனிடம் உயிர்நேயம் பேச்சில் மட்டுமே; மூச்சில் இல்லை. ஆனால் பாரை அளந்துவரும் பறவையின் சிறகுகளுக்கு அத்தகு பேதம் ஏதுமில்லை!’ என்கிறார் மா. பத்ம பிரியா.

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

    மானுட தர்மத்தில்,
    எல்லை தாண்டிய நேயம் பேச்சில் தான்
    எள்ளளவும் இல்லை மூச்சில் தான்
    பாரளவை சிறையெடுக்கும் பறவைகளின்
    சிறகுகளுக்குத் தெரிவதில்லை பேதங்கள்
    வெண்புறாவின் விலாசம் தேடினால்
    பிரபஞ்சம் முழுவதுமே பறத்தலின் சுதந்திரம்
    வாழ்தலின் போது வானமே எல்லை
    சிதறிய கண்டங்களில்
    சிதறுண்ட நெஞ்சங்கள்
    மானிட வம்சாவளியின் வகுக்கப்பட்டச் சட்டங்கள்
    சமாதானப் புறவிடம் தூது சொல்லி
    சம்மட்டியால் அடிக்கும் ராஜ தந்திரம்
    மனிதநேயம் காட்டி மாயை செய்வதும்
    மானுட தர்மம் ஆதலால்
    வெண்சிறகசைவில்,
    உலக உருண்டையின் மொத்தமும்
    உயிரின நேயத்தைச் சொல்லிடும்
    சின்னஞ்சிறு மழலையின் மொழிகளில் செப்பிடும் கீதங்கள்
    யாதும் ஊரே யாவரும் கேளீர்!

    *****

    ’சுற்றுச்சூழல் சீர்கேடும், பொழில்களின் அழிவும் எழிலார் பறவையினங்களின் வாழ்வை அழித்துவிட்டன. இதோ… மீளா உலகை நோக்கிப் புறப்பட்டுவிட்ட ஒரு பறவையின் இறுதிப்பயணத்தைப் பாருங்கள்!’ என்று  வருத்தத்தோடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் திரு. சி. ஜெயபாரதன்.   

    இறுதிப் பயணம்

    கரிவாயு நிரம்பி
    நகரெங்கும் புகைமூடிப்
    போச்சு!
    மூச்சுவிடத் தூய
    காற்றில்லை!
    நரகமாய்ப் போச்சு நானிருந்த
    நகரமெல்லாம்!
    குடிநீரில்லை !
    குடியிருக்க மரமில்லை!
    மரமிருந்தால்
    பச்சை இலையில்லை!
    தின்னக்
    காய் கனிகள் இல்லை!
    தரையில் கிடக்கும்
    காய்ந்த இலைகளை
    எலும்பான மாடுகள் தின்னும்!
    துப்பாக்கி ஏந்தி வருகிறான்
    சுட்டுத் தின்ன
    என்னை!
    நகர் விட்டுப் போகிறேன்
    மனிதன் தின்பதற்கு
    இரையாவேனா?
    இல்லை,
    கரிவாயுச் சூட்டில் வெந்து
    எரிந்து போவேனா?
    தவிப்பெனக்கு இந்தப்
    புவி வாழ்வில்!
    வாழ்வில்லை! போகிறேன் !
    பட்டினியில்
    மீளா உலகுக்கு!

    *****

    பறவையின் விண்வெளிப் பயணத்தைக் கவிஞர்கள் தமக்கே உரிய கவிக்கண்கொண்டு இரசனையோடு விளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டு!

    ***

    மனிதவாழ்க்கையின் வெற்றி இரகசியம் உழைப்பிலும் முயற்சியிலுந்தான் ஒளிந்துகிடக்கின்றது. அதனைக் கண்டுணர்ந்த வள்ளுவர்,

    ”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்” என்று ஊழை வெல்லும் உழைப்பின் உயர்வை உலகுக்கு உணர்த்தினார். அதை நினைவுறுத்தும் வகையில் வானில் சிறகுவிரித்துச் செல்லும் புறவின் சிறகுகள் இரண்டையும் உழைப்பு மற்றும் முயற்சியின் குறியீடுகளாக உருவகித்த கவிதை ஒன்று கருத்துக்கு விருந்தாய் அமைந்தது.

    அக்கவிதை…

    உயர்வு விண்ணைத் தொடும் கட்டிடங்கள்!
    மனித வெற்றியின் பட்டயங்கள்!
    உழைப்பு என்பது ஒரு சிறகு!
    முயற்சி என்பது மறு சிறகு!
    இவ்விரண்டு சிறகாலே
    உச்சம் தொடலாம் மறக்காதே!
    பிள்ளையின் உயர்வு தாயின் மகிழ்ச்சி!
    கவிதையின் உயர்வு மொழியின் மகிழ்ச்சி!
    நீரின் உயர்வு நிலத்தின் மகிழ்ச்சி!
    மழையின் உயர்வு மரத்தின் மகிழ்ச்சி!
    மரத்தின் உயர்வு பறவையின் மகிழ்ச்சி!
    நிறைவின் உயர்வு வாழ்க்கையின் மகிழ்ச்சி!
    செல்வத்தின் உயர்வு கொடையின் மகிழ்ச்சி!
    வெளிச்சத்தின் பின்னே இருள் இருக்கும்!
    உயர்வின் பின்னே தாழ்வு இருக்கும்!
    இரண்டையும் ஒன்றாய் நினைப்பவர்க்கு
    வாழ்க்கையில் என்றும் மகிழ்விருக்கும்!

    ’உயர்வும் தாழ்வும் வாழ்வெனும் நாணயத்தின் இருபக்கங்கள். தாழ்விலே துவளாது,  மனிதனும் பறவையைப் போல் அயர்வின்றி உழைத்தால் வாழ்விலே வெல்லலாம்!’ என்று நம்பிக்கையூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share