பாகிஸ்தான் இராணுவத்தின் அநாகரிகம்

0

பவள சங்கரி

தலையங்கம்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லைக்கோட்டைத் தாண்டி சுமார் 250 மீட்டர் நமது இந்தியப் பகுதியில் ஊடுறுவி நமது இரண்டு இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதோடு, அநாகரீகமான முறையில் அவர்களின் உடல்களை சிதைத்துச் சென்றனர். இதற்கு நம் இராணுவ அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பாகிஸ்தானுக்கு பதில் அளிக்கும் வகையில், நமது இராணுவத்திற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கு பதில் அளிக்கும் வகையில் 7 பாகிஸ்தானிய வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதே நாளில் வங்கிக் கருவூலத்திலிருந்து பணத்தை மாற்றுவதற்காக எடுத்துச் சென்றபோது தீவிரவாதிகள் அந்தப் பணத்திற்கு பாதுகாப்பிற்காகச் சென்ற நமது இராணுவ வீரர்கள் மூவரையும், வங்கி அலுவலர்கள் இருவரையும் சுட்டுக்கொன்று பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்ததும் முறியடிக்கப்பட்டது.

சமீபத்தில் காஷ்மீர் பொது மக்களில் ஒருவரை இராணுவ வண்டியில் முன்னே கட்டி தற்காப்பிற்காகக் கொண்டுசென்றதை அனைவரும் வன்மையாகக் கண்டித்தனர். ஆனால் இந்த பொது மக்களுக்கு யார் இந்த தீவிரவாதி என்பது தெரியாமலா இருக்கும். அதைக்கண்டித்தவர்கள் இதற்கும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா. எல்லைக்கோட்டைத் தாண்டி நமது எல்லைக்குள் வந்து நமது இராணுவ வீரர்களை கொன்றுவிட்டு உடலையும் சிதைத்தவர்களையும் கண்டிக்க வேண்டுமல்லவா? முன்பு சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ததுபோல மீண்டும் ஒருமுறை இனி அவர்கள் இதுபோல் நடக்காதவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் பொறுப்பிலுள்ள காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியும் இணைத்து ஒரு புதிய மாகாணத்தை உருவாக்கி பாகிஸ்தான் பகுதியாக அறிவித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் மக்கள் இந்தியாவோடு இருப்பதையே விரும்புகின்றனர். அந்தப்பகுதியை இந்தியாவோடு இணைத்தாலே இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் அமைதி உடன்படிக்கையை மீறி நமது எல்லையில் ஊடுறுவிய தீவிரவாதிகளும், நமது இராணுவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும்!

2014இல் 153 முறை அமைதி உடன்படிக்கையை மீறி ஊடுறுவியவர்களில் 104 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நமது இராணுவ வீரர்கள் 31 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். 2015இல் 150 முறையும் இதில் 101 பேர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நம்முடைய 33 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 2016இல் 223 முறை அத்துமீறி அதிகபட்சமாக இந்தியாவிற்குள் நுழைந்து 150 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். அதில் நமது இராணுவ வீரர்களில் 63 பேர் வீரமரணம் அடைந்தனர். 2017இல் இந்த 4 மாதங்களில் மட்டும் 65 முறை நமது எல்லையைத் தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர். இதில் 42 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் நமது இராணுவ வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டில் முதன்முறையாக நமது இரண்டு இராணுவ வீரர்களைக்கொன்று அவர்தம் இன்னுடல்களையும் சிதைத்துள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.