திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (7)
க. பாலசுப்பிரமணியன்
பொருளும் அருளும்
வாழ்க்கையில் அனைவருக்கும் பொருள் சேர்ப்பதில் அளவற்ற ஈடுபாடு இருக்கின்றது. ஓலைக்குடிசையில் ஒட்டகம் ஒதுங்குவதற்குத் தலையை மட்டும் நீட்டிக்கொள்ள வேண்டி, பின்பு எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடிசை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறதோ அது போல் ஆசையும் நம் மனதிற்குள்ளே கொஞ்சம் தலை நீட்டுகின்றது. பின் கொஞ்சம் கொஞ்சமாக நம் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.
இந்த மனம் அந்த ஆசைக்கு அடிமையாகப் போய் விடுகின்றது. அப்படியென்றால் வாழ்க்கை வலமாக இருக்க பொருள் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி நம் முன்னே எழுகின்றது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் கீழ்கண்ட திருக்குறள்
“அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை,பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லை. “
என்று வள்ளுவர் பெருமானே சொல்லியிருக்கின்றாரே என மனத்தில் சந்தேகம் தோன்றுகின்றது. ஆனால் அதே வள்ளுவப் பெருந்தகை பொருளைப் பற்றி எப்படி வருணிக்கின்றார்?
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
அவர் பொருளை ஒரு செவிலித்தாயிக்கு ஒப்பிடுகின்றார்.. பெற்ற தாய்க்கும் செவிலித்தாய்க்கும் எவ்வளவு வித்தியாசம்? உண்மையும் நகலும் ஒன்றாகுமா?
இந்த மாயையிலிருந்தும் குழப்பங்களிலிருந்தும் விடுபட திருமூலர் கூறும் அறிவுரை என்ன?
“தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலங்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே. (172)
“வாழ்கையின் எல்லாப் பக்கங்களையும் அலசி ஆராய்ந்து தெளிந்து விடுங்கள். செல்வம் என்னும் ஆற்றுச் சுழலில் மாட்டிக்கொள்ளாமல் தெளிந்து நில்லுங்கள். பொருளாலும் செல்வத்தாலும் ஈர்க்கப்படாமல் அந்த ஆசைகளை மறுத்து விடுங்கள். நாளை கூற்றுவன் அழைப்பு வரும்பொழுதில் துள்ளிச்செல்லத் தயாராக இருங்கள். ” என்று அறிவுரை வழங்குகின்றார்.
“எப்படி பாடுபட்டு தேனீக்கள் பூப்பூவாகச் சென்று உள்ளேயிருக்கும் தேனைப் பருகிவந்து சேர்த்த பின்னே யாரோ ஒருவன் அந்தத் தேன் கூட்டில் உள்ள தேனீக்களையெல்லாம் விரட்டிவிட்டுத் தேனை எடுத்துச் செல்கிறானோ அதுபோல் நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வமெல்லாம் வேறுயாரோ எடுத்தச் சென்றிடுவார். இதை நன்கு உணர்ந்து உன் வாழ்க்கையை நடத்துங்கள்..” என்று விளக்கமளிக்கிறார் திருமூலர்.
இதே கருத்தை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தும் பட்டினத்தாரோ இறைவனின் அருளை எங்கே நாடுகின்றார்?
மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண் டெனும்படி கேட்டுவிட் டோமினிக் கேண்மனமே
ஓடுண்டு கந்தையுண் டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு
தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையுமுண்டே
பட்டினத்தாரின் இந்தப் பாடல் உலகப் பற்றிலிருந்து விடுபட்ட அவர் மனநிலையையும் இறைவன்பால் அவர் வைத்துள்ள அசையாத நம்பிக்கைக்கும் ஓர் முன்னுதாரணமாக விளங்குகின்றது.
இந்தத் தெளிவு நிலைக்கு வந்ததால் தானோ மாணிக்க வாசகர் அனைத்தையும் ஒதுக்கி “இறைவா, நின் திருப்பாதம் ஒன்றே துணை. அதைப்பெற உதவிடுவாய். ” என்று இறைவனை நோக்கி விளிக்கின்றார்
யானே பொய் என் நெஞ்சம்
பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உருமாறே.
மாணிக்கவாசகரின் உள்ளத்தின் ஒப்புதலைப் பார்க்கும் பொழுது அவருடைய தெளிவான சிந்தனைக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது
இந்தத் தூய அறிவின் மூலமாகவும் ஒளிப்பிழம்பாகவும் இருக்கின்ற இறைவனை நாம் எங்கே நாட வேண்டும்? எந்த நாட்டில் யாருடைய வீட்டில் அவன் குடி கொண்டுள்ளான்? எத்தனை காலம் இதற்காகக் காத்திருக்கவேண்டும்? இதற்கெல்லாம் மிக அழகான தெளிவான பதிலை திருமூலர் தந்து விடுகின்றார்.
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரெ.!
இதைவிடத் தெளிவாக யார் நமக்கு இறைவனின் அருளுக்கு வழிகாட்ட முடியும்?
தொடரும்….