சாளிக்கிராமம் அடை நெஞ்சே! (பிரயாணக் கட்டுரை)

-என். ஸ்ரீதரன்

நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் என்னும் சாளிகிராமப் பெருமாளைச் சேவிப்பது அவ்வளவு எளிதல்ல. பன்னிரு ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் ஏராளமான திவ்விய தேச க்கோவில்களைக் குதிரையில் சென்று தரிசித்து மங்களாசாசனம் செய்துள்ளார். சாளிகிராமப் பெருமாளையும் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் நடந்து சாளிக்கிராமம் போவது மிகவும் கடினம் என்பதால் ’சாளிக்கிராமம் அடை நெஞ்சே’ என்று பாடியுள்ளார்.

முக்திநாத் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்னும் என் நெடுநாளைய ஆசை இந்த வருடம் நிறைவேறியது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ஸ்ரீ டிராவல் மூலம் மேற்கொண்ட  எட்டு நாள் பிரயாண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் நாள் திங்கட் கிழமை ( 3-4-2017)

இன்று திங்கட் கிழமை . வெங்கடேசப் பெருமாளை வணங்கிவிட்டு எட்டரை மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் நங்கநல்லூரிலிருந்து கிளம்பி மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தடைந்தோம். தில்லிக்குப் போய் அங்கிருந்து லக்னோ செல்லவேண்டும். எங்களுடன் சாலிக்கிராமத்திலிருந்து பாலசுப்ரமணியம், அவரது மனைவி, மகள், மகன் ஆக நால்வர் வருகிறார்கள். இன்னும் இரண்டு பேர் சித்ரா  அவரது தமக்கை கல்யாணி, ஐந்து மணி விமானத்தில் புறப்பட்டு  லக்னோ வந்து சேருவார்கள். ஆக மொத்தம் எட்டு பேர் சென்னையிலிருந்து முக்திநாத் போகிறோம்.

பாலசுப்ரமணியம் குடும்பம் எங்களுக்கு முன்பே வந்து போர்டிங் பாஸ் வாங்கிவிட்டிருந்தார்கள். நாங்களும் போர்டிங் பாஸ் வாங்கின பிறகு எல்லோரும் விமானத்தில் ஏறினோம். காலை 10.30 மணிக்குக் கிளம்பிய விமானம் சரியாக 1:00 மணிக்குக்குப் புது டில்லியை அடைந்தது. அங்கு மற்றொரு முறை பெட்டிகளை ஸ்கேன் செய்து, செக்யூரிட்டி செக் செய்து இன்னொரு விமானத்தில் ஏறி லக்னோ சென்றடைந்தபோது சுமார் 3.30 மணி.  டூர் மேனேஜர் பார்த்தசாரதி விமானநிலையத்திற்குக் கார் அனுப்பியிருந்தார். லக்னோவின்  அழகைப் பார்த்துக் கொண்டே காரில் சென்றோம் . பெரிய பெரிய கட்டிடங்கள், சாலையில் ஏராளமான வாகனங்களைப் பார்த்தபோது லக்னோ பெரிய ஊர் என்று புரிந்தது. எங்கள் கார் பிரசிடெண்ட் ஓட்டலை அடைய 15 நிமிடம் ஆகிற்று. ரிசப்ஷனில் பார்த்தசாரதி எங்களை வரவேற்றார். அனைவருக்கும் ஒரு ஸ்டீல் தட்டும், ஒரு ஸ்டீல் தம்பளரும் வழங்கப் பட்டது; ஆளுக்கு ஒரு மினரல் பாட்டில் கொடுக்கப்பட்டது.

சென்னையிலிருந்து பரிமளா என்பவரும் பெங்களூருவிலிருந்து அவருக்குத் தெரிந்த ஏழு பேரும் நம்முடன் வருவார்கள் என்று சொன்னார். அன்று ஓய்வு.  வேறு எங்கும்  போக வேண்டியதில்லை என்று கூறினார். எனவே கடைவீதிக்குச் சென்று நைவேதியத்துக்குத் தேவையான திராட்சை, முந்திரி, பாதாம் எல்லாம் வாங்கி வந்தோம். அதற்குள் வெளியே போயிருந்த பரிமளா மாமியும் அவருடைய தோழிகளும் வந்து விட்டிருந்தார்கள். பரிமளா மாமி சென்னையில் மையிலாப்பூரில் வசிப்பதாகவும், முக்திநாத் பார்த்துவிட்டுக் காசி, கயா போய்விட்டுச் சென்னை போகப் போவதாகவும் கூறினார். அவருடைய உயிர்த்தோழி லக்ஷ்மியை அறிமுகம் செய்து வைத்தார்.

இரண்டாம் நாள் புதன் கிழமை ( 04-04-2017)

காலை ஆறு மணிக்கு லக்னோவிலிருந்து நாங்கள் பதினாறு பேரும் நைமிசரண்யம் கிளம்பினோம். ஒன்பது மணி சுமாருக்கு நைமிசரண்யத்திற்கு பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சீதாபூர் என்னும் இடத்தை அடைந்தோம். அங்குள்ள பெருமாளைத் தரிசனம் பண்ணிவிட்டு நைமிசரண்யத்தில் உள்ள கோமுகி நதிக்கரைக்கு வந்தோம். நைமிசரண்யம் திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.

sali1

நதியில் குளித்துவிட்டுத்  திவ்யதேசப் பெருமாளான தேவராஜப் பெருமாளை நின்ற கோலத்தில் தரிசனம் செய்தோம்.

sali2

போகும் வழியில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து காடு போல் தோற்றமளித்தது. பக்தர்கள் வழியெல்லாம் சேவித்துக் கொண்டே சென்றனர். பெருமாள் வனரூபத்தில் இருப்பதால் அப்படிச் சேவிக்கின்றனர் என்று பரிமளா மாமி சொன்னார். அவர் ஏற்கனவே இந்த இடத்தைப் பார்த்து விட்டார். இப்போது இரண்டாம் முறையாகத் தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.

”ஓரறிவும் இல்லாத என்போல்வார்க்கு உய்யலாம்
பேரறிவு உண்டேனும் பிறர்க்கரிது – பார் அறிய
நைமிசரண்யத்து நாதர் அடியாரொடும்
இம்மிசார் உண்டாயி னால்.”

என்று திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் போற்றப்பட்ட தலம் நைமிசரண்யம். அங்கு  திருப்பதி தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படும் பாலாஜி கோவிலில் வெங்கடேசப் பெருமாளைத் தரிசனம் செய்தோம். பின்பு சக்தி பீடம் லலிதாதேவி, சக்ர தீர்த்தம், வியாசர் கோவில் எல்லம் கண் குளிரத் தரிசனம் செய்துவிட்டு  ஓட்டலுக்கு வந்தோம். எங்களுடன் சமையல்காரர் சாந்தகுமார், அவருக்கு உதவி செய்ய இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் செய்து வைத்திருந்த மதிய உணவை உண்டு விட்டு அயோத்திக்கு புறப்பட்டோம்.

அயோத்திக்குப் பதினைந்து கிலோமீட்டர் முன்னால் உள்ள பைசாபாத் என்னும் ஊரிலுள்ள “திருப்தி”  ஓட்டலுக்கு  இரவு 8.15 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு நிம்மதியாக உறங்கினோம்.

மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை ( 05-04-2017 )

இன்று ஸ்ரீராமநவமி. இந்நாளில் அயோத்தியில் இருப்பது மனத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. எங்குப் பார்க்கிலும் கூட்டம்; வட இந்தியாவே  அப்படிதான். குறிப்பாக நதி, கடல் இருக்கும் ஊரில் ஏதாவது திருவிழா அல்லது மேளா என்றால் கூட்டம் அலைமோதும்.  ஏராளமான வாகனங்கள், மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் போக அனுமதிக்கப் படவில்லை.சாலையின் ஓரத்தில் பேருந்தை  நிறுத்திவிட்டு எல்லோரும் கீழே இறங்கினோம். அங்கிருந்து ஒரு மணல் மிகுந்த ஒரு சரிவான பாதையைக் கடந்து கீழே உள்ள மற்றொரு சாலையை அடைய வேண்டும். எல்லோரும் கீழே இறங்கி விட்டோம். ஆனால் பரிமளா மாமி கீழே இறங்கும்போது கால் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார். ஒருவர் கை கொடுக்கக் கஷ்டப்பட்டு எழுந்தார். கால் வலியினால் துடித்தார். நடக்க முடியவில்லை என்று சொன்னதால் அவரைப் பேருந்திலே விட்டு விட்டு நாங்கள் ஷேர் ஆட்டோவைப் பிடித்துச் சரயு நதியை அடைந்தோம். புனிதமான நதி சரயு. ஆரவாரமின்றி அழகாய், அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தாள்.  நதியில் நீராடிவிட்டுத் திவ்ய தேச கோவிலான அம்மாஜி பெருமாள் (ராமர்) கோவிலுக்குச் சென்றோம். அயோத்தியாவின்  ராமபிரானை, பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்கள் 13 பாசுரப்பாக்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நம்மாழ்வார்

“கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பாரோ?
புற்பா முதலாம் புல்லெறும் பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே” எனப் போற்றுகிறார்.

ராமர், சீதையை நன்கு சேவித்தோம். கர்ப்பகிரஹம் எப்போதும் இருட்டாக இருக்கும். இன்று ஸ்ரீராம நவமி என்பதால் நல்ல வெளிச்சத்தில் பகவானைச் சேவிக்க முடிந்தது  என்றார் பார்த்தசாரதி. அவர் கூறியதுபோல் நல்ல பிரகாசமான வெளிச்சத்தில்  பெருமாளைச் சேவிக்க முடிந்தது.

பிறகு ராம ஜென்ம ராமர் தரிசனத்திற்கு வரிசையில் நின்றோம். ராம ஜென்ம பூமியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமரை ”ராம்லாலா” என்கிறார்கள். காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் திறந்திருக்கும். மீண்டும் இரண்டு மணிக்குத் திறக்கிறார்கள். வளைந்து வளைந்து செல்லும் மிகவும் நீளமான வரிசை. ராணுவப் பாதுகாப்பு அதிகம் உள்ள இடம். நாலு முறை செக்கியூரிடி செக்கிங். பெல்ட், மொபைல், பேனா , வாட்ச் எதுவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தூக்கி வீசி விடுகிறார்கள். எல்லாம் வட இந்தியச் சிப்பாய்கள். நாம் பேசும் பாஷை அவர்களுக்குப் புரியவில்லை. ஏராளமான கூட்டமிருந்தாலும் ஒரு மணி நேரத்தில் ராமரைத் தரிசிக்க முடிந்தது.

”அயோத்தியில் குரங்கு அதிகம் . மூக்குக் கண்ணாடியைக் குரங்கு பிடுங்கிண்டு போய்விடும். ஜாக்கிரதையாய் இருங்க.  நான் போன தடவை வந்தபோது குரங்கு என் கண்ணாடியைப் பிடுங்கிண்டுப் போயிடுத்து “ என்று உஷார் படுத்தினார்  கல்யாணி மாமி.

பிறகு அனுமான் கோவில், சீதா கோவில், சீதையின் சமையல் அறை, கனகபவன், தசரத பவன் எல்லாவற்றையும் கண்டு களித்துவிட்டு ஓட்டல் வந்தோம். உணவுக்குப் பிறகு சுமார் நாலு மணிக்கு கிளம்பினோம். நேபாள் பார்டரை 9.30 மணிக்குள்  அடைந்துவிட வேண்டும் என்று பார்த்தசாரதி சொல்லிக் கொண்டிருந்தார். கோரக்பூர் வழியாகச் சென்று பைரவா என்னும் இடத்தை. நாங்கள் அடையும்போது இரவு சுமார் 10.45. பைரவா கோவில் அல்ல.  அங்குதான் நேபாளத்தின் பார்டர் இருக்கிறது.

பார்டர் மூடி விட்டதால் அதற்குமேல் போக அனுமதி கிடையாது. மேலும் நேபாள் எல்லைக்குள் பேருந்து போக பர்மிட் வேண்டும், அது காலையில்தான் கிடைக்கும். எங்களுக்குப் பார்டரிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மம்தா ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பார்டர் மூடிவிட்டதால் பேருந்தால் போக முடியாதே தவிர அதற்கு மாற்றாக ரிக்‌ஷாவில்  போக அனுமதி உண்டு. டிக்கியில் உள்ள சாமான்கள் ( பெட்டிகள், பைகள் ) எல்லாம் ரிக்‌ஷாவில் ஏற்றப் பட்டன. நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டே நடந்தோம். பரிமளா மாமிக்கு  ஒருவர் பைக்கில் லிப்ட் கொடுத்தார். அன்று இரவு உணவுக்குப் பிறகுச் சுகமாய் தூங்கினோம்.

நான்காம் நாள் சனிக்கிழமை (06-04-2017)

காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுக் கிளம்ப தயாரானோம். அப்போது மணி எட்டு . பர்மிட் வராததால் பேருந்து தயாரக இல்லை. பக்கத்திலிருந்த கடையில் பிஸ்கட் வாங்கினோம். இந்திய ரூபாய்க்கு நேபாள ரூபாயை மாற்றிக் கொண்டோம். இந்திய நூறு ரூபாய் நேபாள நூற்று அறுபது ரூபாய்க்குச் சமம். அது போலவே நேபாள நேரம் இந்திய நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்னதாக  இருக்கும்.

எட்டரை மணிக்குப் பர்மிட் வந்துவிட்டதால் நாங்கள் கிளம்பினோம்.   நாங்கள் போக வேண்டிய இடம்  போக்ரா. பேருந்து  எந்தவிதத் தடங்கலும் இல்லாமல்  சென்று கொண்டிருந்தது. பன்னிரண்டு  மணிக்கு வண்டி ஒரு இடத்தில் நின்றது. டிரைவர் டீ, காபி சாப்பிடுவதற்கு வண்டியை நிறுத்தினார் என்று நினைத்தோம். கீழே இறங்கி விசாரித்துவிட்டு வந்த டிரைவர், . ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருப்பதால் ரோடின்    ஒரு பக்கம்தான் வண்டியை அனுமதிக்கிறார்கள், இப்போது எதிர்ப் பக்கத்திலிருந்துதான் வண்டி வந்து கொண்டிருக்கிறது.  வண்டியை எடுக்க  பிற்பகல் நாலு மணி ஆகிவிடும் என்றார். இது சற்றும் எதிர்பாராதது. என்ன செய்வது ? வெளியூரில் பிரயாணம் செய்யும்போது இப்படி ஏதாவது தடங்கல் வருவதை யாரால் தடுக்க முடியும்? காற்றோட்டமான இடத்தில் நின்று, நடந்து, பேசிக் காலத்தைக் கடத்தினோம். பேருந்திலேயே சாப்பிட்டு விட்டோம். நாலு மணிக்கு எங்கள் பேருந்து கிளம்பியது. மோசமான சாலை . இரண்டு மணி நேரம் கழித்து டிரைவர் காபி குடிக்க வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினார். அங்கு காபி , டீ குடித்தோம் . இரவு 9.30 மணி சுமாருக்கு போக்ராவை அடைந்தோம். ஓட்டல் ஸ்போர்ட்ஸில் எங்களுக்கு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அன்று இரவு சாந்தாராம் அரிசி உப்புமா பண்ணி எங்களுக்குச் சாப்பிட அளித்தார்.  இரவு அங்கு தங்கினோம்.

ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ( 07-04-2017)

காலை எழுந்து காபி , சிற்றுண்டி எல்லாம் முடித்துத் தயாராகி விட்டோம். இன்று சிறிய விமானம் மூலம் ஜான்சம் என்னும் இடத்திற்குப் போக வேண்டும். ஜான்சம் ஏர்போர்டை அடைந்தோம்.  பரிமளா மாமியை டாக்டரிடம் அழைத்துப் போக வேண்டியிருந்ததால் பார்த்தசாரதி எங்களுடன் வரவில்லை. கபில் என்பவர் எங்களுடன் வந்தார். சிறிய விமானத்தில் (20 பேர் அமரக்கூடியது ) ஜான்சன் என்னும் இடத்தை அடைந்தோம். அங்கிருநது நடந்தே நாங்கள் தங்கும் ஓட்டலை அடைந்தோம். அங்கிருந்து ஜீப்பில் கிள்ம்பி ஒரு மணி நேரம் பிரயாணம் செய்து மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அப்படிப் போகும்போது கண்டகீ நதியில் ஏராளமான சாளக்கிராமங்களைக் கண்டோம். மலையடிவாரத்திலிருந்து முக்திநாத் கோவிலைக் குதிரை மூலமாகவோ அல்லது நடந்தோ அடையலாம். ஒன்றரை கிலோ மிட்டர் தூரம். சிலர் நடந்தும் சிலர் குதிரையிம் மூலமும் பிரயாணம் செய்தார்கள்.

வடநாடு திவ்ய தேசங்களில் மிக முக்யமானதாகக் கருதப் படுவது சாளிக்கிராமம் என்னும் திவ்ய தேசம் . நேபாளம் அன்னபூர்ணா மலைத்தொடர்களுக்கு அப்பால் சுமார் 13800 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இது ஸ்வயாம்வ்யத்த ஷேத்திரம். சாளகிராமத் திருக்கோயில் நேபாளிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் தரையோடு தரையாக இருக்கும். இரண்டு சிறிய குளங்களும் ஆலயத்தின் உள்பிரகாரத்தில் 108 கோமுகிகள் வழியாகத் தீர்த்தம் கொட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம். பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் . பெரிய திருமொழி முதல் பத்து ஐந்தாம் திருமொழி முதல் பாசுரத்தில்

“கலையும் கரியும் பரிமாவும் திரியுன் கானம் கடந்து போய்
சிலையுன் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலைகொண்டு அலை நீரணைகட்டி மதிள் நீர் இளங்கை வாளரக்கர்‘
தலைவன் தலைகறுத்துகந்தான் சாளகிராமம் அடை நெஞ்சே” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்கிறார். சாளிக்கிராமம் அடைநெஞ்சே என்று ஒரு முறைக்கு  ஒன்பது முறை பாசுரங்களில் ஆற்றப்படுத்துகிறார்.

கோமுகிகள் வழியாக வரும்  தீர்த்தம் புனித தீர்த்தம். அதிக சில்லென்று இருக்கும். முதலில்  அதைச் சிறிது குடித்து விட்டு பிறகு அதில் குளித்து விட்டு அங்கிருந்த இரண்டு குளங்களிலிருந்த நீரைச் சிறிது தலையில் ப்ரோஷணம் செய்துகொண்டு வரிசையில் நின்று  சாளிக்கிராமப் பெருமாளைச் சேவித்தோம்.

பெண்களுக்கு ஆடைகள் மாற்றுவதற்குத் தனி அறை இருக்கிறது. மாயவனைகூட்டம் அதிகமாக இல்லாத காரணத்தினால் மூன்று முறை வரிசையில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மாலவனை, மாதவனை நாமம் பல சொல்லி நாராயணாவென்று தொழு நன்னெஞ்சே என்று பாடத் தோன்றியது.

அங்கிருந்த பெண் அர்ச்சகர் நாம் எடுத்துச் சென்ற முந்திரி, திராட்சை முதலியவற்றை பெருமாளுக்கு நிவேத்யம் செய்து கொடுக்கிறார். அவ்விடத்தில்  கடை எதுவும் கிடையாது. அதனால் நாம் போகும்போதே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப் போய்விட வேண்டும்.

திரும்பி வரும்போது குதிரை எதுவும் கிடைக்கவில்லை. எல்லோரும் . நடந்துதான் ஓட்டலுக்குத் திரும்பினோம். குளிர் என்றால் அவ்வளவு குளிர் . தலையில் தொப்பி, கைகளில் கிளவுஸ், காலில் சாக்ஸ், ஸ்வெட்டார் அதுக்கு மேலே ஒரு சாலவை என்று இருந்தாலும் குளிரின் சிலுசிலுப்பை உணர முடிந்தது. அன்று ஜான்சம்மில் தங்கினோம். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லை. ரஜாய் என்னும் கம்பளி இருந்ததால் குளிரைச் சமாளிக்க முடிந்தது.

ஆறாம் நாள் (8-4-2017)

இன்று காலை தேனீர் அருந்திவிட்டு எட்டு மணி சுமாருக்கு ஜாம்சம் ஏர்போர்ட்டுக்கு வந்தோம். பனி  அதிகமாயிருந்தது. பேசும்போது  வாயிலிருந்து பனிப் புகை வந்தது.  அப்போது மலையில் பனி படர்ந்து வெள்ளைச் சால்வையை அணிந்துள்ளது போல தோன்றியது. சூரியனும் பிரகாசத்துடன் பனியை நீராக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.  சிறிய விமானத்தில் கிளம்பி போக்ரா வந்து சேர்ந்தோம். சில சமயங்களில் சீதோஷ்ணம் காரணமாக விமானத்தை ரத்து செய்து விடுவார்கள். அதிர்ஷ்டவசமாக அன்று விமானம் எதுவும் ரத்து செய்யப் படவில்லை. நாங்கள் விமானம் மூலம் போக்ரா வந்தடைந்தோம். சில சமயம் சீதோஷ்ணம் காரணமாக எப்போதாவது யாராவது ஒருவர்  முக்திநாத் தலத்திலேயே முக்தி அடைந்து விடுவதுண்டு. அந்த மாதிரி அனுபவம் நேர்ந்திருக்கிறதென்று பார்த்தசாரதி பேருந்தில் வரும்போது கூறியது ஞாபகம் வந்தது.  ஓட்டலில் நுழையும் போது எங்கள் எல்லாருடைய மனதிலும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. எங்களை எதிர்கொண்ட பார்த்தசாரதி அதற்குப் பதில் அளித்தார். ”நேற்று மாமியை டாக்டரிடம் காட்டினேன். அவர் பரிசோதனைச் செய்து விட்டு காலில் இரண்டு எலும்பு முறிவு இருக்கிறது என்று மாவு கட்டு போட்டிருக்கிறார். ஒரு வாரம் கழித்து எலும்பு ஒன்று சேரவில்லையானால் மைனர் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்றார்.” இன்று மாமி விமானம் மூலம் சென்னை செல்ல டிக்கட் வாங்கியாகிவிட்டது என்றார். மாமியைப் போய்ப் பார்த்தோம் . எல்லாம் பெருமாளின் திருவுள்ளம் .நாம் விரும்பினாலும் அவன்  விரும்பாவிட்டால் பெருமாளைத்  தரிசிக்க  முடியாது என்றார் மாமி புன்முறுவலுடன்.

மதியம் போக்ராவில் சைட் சீயிங் . முதலில் பெவா லேக்.. படகில் பிரயாணம் செய்து கோவிலுக்குப் போக வேண்டும். வராஹி கோவில், பிந்து வர்ஷினி கோவில், மகேஷ்வர் குகை, டேவிஸ் பால்ஸ் எல்லாம் சுற்றிப் பார்த்தோம். டேவிஸ் பால்ஸ் என்பது சிறிய நீர்வீழ்ச்சி.  மகேஷ்வர் குகை என்பது 5000 வருடம் ஆன பழமையான குகை. இங்குத் தானக உருவான சிவன் உள்ளது. கீழே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஓட்டல் திரும்பினோம்.

ஏழாவது நாள் ( 09-4-2017)

இன்று காட்மண்டுவுக்கு ரோட் மூலம் பயணம் செய்தோம். . இருபக்கமும் மலை . சாலையை ஒட்டி நதி ஓடிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாய் இருந்தது.

போகும் வழியில் மானக்கம்னா தேவியைத் தரிசித்தோம். ரோப் காரில் ஏறி மலை உச்சிக்குப் போக வேண்டும். டிக்கட் உண்டு . ஒரு டிக்கட்டின் விலை ஐநூறு ரூபாய். நேபாளி கரன்சியில் எண்ணுறு ரூபாய் . நேபாளைப் பொறுத்தவரை இந்தியர்கள் வெளிநாட்டவர். ஆனால் விசா, பாஸ் போர்ட் இல்லாமல் இங்குப் பயணம் செய்யலாம் . இந்தியப் பிரஜை என்று நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது வோட்டர்ஸ் ஐடியை கையில் வைத்திருக்க வேண்டும்.

போகும் வழியில் எங்கள் பஸ் பங்க்சர் ஆகி விட்டது. பங்க்சர் போட ஒரு மணி நேரம் ஆனது. காட்மண்டில் ரோடு மிகவும் சிறியது. மோசமாகவும் இருக்கும்.  அதனால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிவிடும். நாம் ஓட்டல் போய்ச்சேர எப்படியும் பதினோரு மணி ஆகி விடும் என்று வண்டி டிரைவர் சொன்னார். காட்மண்டு போய் சேரும்போது இரவு 9.30 ஆகியிருந்தது. எங்களுக்கு    மகாதேவ என்னும் ஓட்டலில் அறை ரிசர்வ் ஆகியிருந்தது. பெரிய ஓட்டல் . 24 மணி நேரமும் சூடான தண்ணீர் குழாயில் வரும். குளித்து விட்டுக் கீழே இறங்கி வந்தால் அதற்குள் சமையல்காரர் சாந்த குமார் இட்லி தயார் செய்து  வைத்திருந்தார். அன்று இரவு நன்கு உறங்கினோம்.

எட்டாவது நாள் ( 10-4-2017)

இன்று காலை 7.30 மணிக்குக் கிளம்பி முதலில் ஜல நாராயணனைத் தரிசிக்கச் சென்றோம். அரை மணி நேரத்தில் கோவிலை அடைந்துவிட்டோம். அப்போது ஆர்த்தி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. பாம்பின் மேல் பெருமாள் சயனம் செய்து  கொண்டிருக்கிறார். மிகவும் அழகான கண்கள். வைத்தக் கண்ணை எடுக்க முடியவில்லை.

sali3

கண் குளிர ஜல நாரயணனைத் தரிசித்து விட்டுப் பசுபதி நாத் கோவிலுக்கு வந்தோம். நல்ல கூட்டம். மைசூரைச் சேர்ந்த அர்ச்சகர்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்கிறார்கள்.

sali4

ஈஸ்வரனைத் தரிசித்துவிட்டு ஷாப்பிங் செய்தோம். காட்மண்டில் பவளம், பல வண்ண நிற  மணிகள் எல்லாம் விலை மலிவாக கிடைப்பதால் பெண்கள் ஆசைக்கு ஒண்ணு, மத்தவங்களுக்கு கொடுக்க ஒண்ணு என்று வாங்கினார்கள். ஒருவாறாக ஷாப்பிங் முடிந்ததும்  ஓட்டலுக்குத் திரும்பினோம்.

பிற்பகல் 3.25க்கு ஏர் இண்டியா விமானத்தில் கிளம்பிப் புதுடில்லி வந்து அங்கிருந்து இன்னொரு விமானத்தில் ஏறிச் சென்னை வந்து சேரும்போது மணி சுமார் 11.50. சாளிக்கிராமம் அடை நெஞ்சே என்று திருமங்கை ஆழ்வார் பாடியதைப் போல் முக்திநாத் பெருமானை நெஞ்சில் வைத்துக் கொண்டு அவரவர் வீட்டை அடைந்தோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *