Blog

  • மாயவனே கொட்டாய் சப்பாணி!

    மீனாட்சி பாலகணேஷ்

    யசோதை மிகவும் களைத்துப் போயிருந்தாள். பொழுது புலரும் முன்பே எழுந்து, இரவு தோய்த்து வைத்திருந்த தயிர்ப்பானைகளைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, அவற்றினைக் கடைந்து வெண்ணையெடுத்து, சிலவற்றைத் தயிராகவே வைத்து, சட்டிகளில் மோரை ஊற்றி, உறிகளில் கட்டி, கள்ளச்சிறார்களின் கைக்கெட்டாதபடி உறிகளை உயரே ஏற்றிக்கட்டி……. பொழுது போனதே தெரியவில்லை.

    ame
    குழந்தை கிருஷ்ணன் இவள் தயிர் கடையும்போது பக்கத்தில் தான் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். சின்னதாக ஒரு வெண்ணெய் உருண்டையைக்கூட அவனுடைய குட்டிக்கையில் கொடுத்தாளே! அரைநொடியில் அதைத்தின்றும் விட்டான் குழந்தை! இன்னும் கேட்டான். இவளுக்குத்தான் பயம். இத்துணை சிறிய குழந்தை வெண்ணெயாகத் தின்றுகொண்டே இருந்தால் வயிறு என்னாகும் என்று பயந்தாள். அவனும் சிறிது நேரம் அவளுடைய முகத்தையே நோக்கியபடி இருந்துவிட்டு, எங்கோ தவழ்ந்து சென்றுவிட்டான்.

    அன்று இப்படித்தான், எங்கேயாவது போய்விடுகிறான்; சட்டிபானைகளை உருட்டி விஷமம் செய்கிறான் என்று அவனை உரலில் கட்டிப்போட்டிருந்தாள். அவனோ அந்த உரலையும் இழுத்துக்கொண்டுபோய் இரண்டு மருதமரங்களுக்கிடையே புகமுடியாமல் புகுந்து, இழுத்துச் சாய்த்து…….. அந்த நினைப்பில் “கண்ணா!” என்று நெட்டுயிர்த்தாள் அந்த அன்னை.

    அந்தக் குட்டனைத்தான் இப்போது எங்கே எனத் தேடினாள்.

    அதோ! ‘சல், சல்,’ எனக் காற்சதங்கைகளும், அரையில் கட்டியுள்ள மாணிக்கச் சதங்கையும் ஒலிக்க வருகிறான் கிருஷ்ணன். ஆணிப்பொன் சதங்கை ஒன்று இடையில்… நேற்றுதான் தந்தை நந்தகோபன் அதனைப் புதியதாக தனது அருமைக் குழந்தைக்கு செய்து அணிவித்திருக்கிறான்.

    என்னவொரு காட்சி, தாயான யசோதையின் கண்களையும் கருத்தையும் குழந்தையின் அழகுவடிவம் நிறைக்கிறது. குழந்தைக்கும் அம்மாவைப் பார்த்துவிட்ட ஆனந்தம், தலையை நிமிர்த்தி, வாயில் முத்துப்போன்ற பற்கள் பளிச்சிடப் புன்னகை புரிகிறான். அவனை அள்ளியணைக்கக் கைகளை அவன்பால் நீட்டுகிறாள். பிஞ்சுக்கைகளை இணைத்துக் கொட்டுகிறான் கிருஷ்ணன். தலையை மகிழ்ச்சியில் அப்படியும் இப்படியும் அசைக்கும்போது சுருண்ட கரிய குழல்கற்றைகள் புரண்டாடுகின்றன. தாயின் மனம் பாகாய் உருகி வழிகிறது…

    ame2
    நாம் கவிதையில் ரசிக்கும் இந்தக் கண்கொள்ளக் காட்சியை, பெரியாழ்வார் மனக்கண்ணில் கண்டு சிலிர்க்கிறார். “கண்ணா! அன்று (பண்டு) மகாபலியிடமிருந்து மூன்று அடி நிலத்தை தானமாகப் (காணி) பெற்றுக் கொண்ட உன்னுடைய சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுவாய்!” என வேண்டுகிறார். யசோதைக்குத் தன் குட்டன் அந்தப் பரந்தாமனே என்பதை உணர முடியாது. அவன் அவளுடைய கண்மணியான சிறுகுழந்தை. அவள் ரசிப்பதனை ஆழ்வார் தமது நோக்கில் தாமும் இறையனுபவமாகக் கொண்டு ரசிக்கிறார்; போற்றுகிறார்; பாடி மகிழ்கிறார்.

    இதுவே இறைவனைக் குழந்தையாகக் கொண்டாடும் அடியாருள்ளம்!

    வாழ்த்திப்போற்றும் வைபவம்!

    அன்பில் பொங்கிப்பெருகும் பக்திப்பிரவாகம்!

    பிள்ளைத்தமிழுக்கு அடிகோலிட்ட அழகிய பாசுரம்!

    இதுவே பெரியாழ்வார் திருமொழி காட்டும் கிருஷ்ணனின் சப்பாணிப்பருவம். குழந்தை கிருஷ்ணனின் விளையாட்டுகளை எல்லாம் பட்டியலிட்டுப் பாடிய பாசுரங்களே பெரியாழ்வார் திருமொழி!

    பிள்ளைத்தமிழ் எனும் அற்புதமான ஒரு சிற்றிலக்கியத்தின் முன்னோடி!

    மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின்மேல்
    ஆணிப்பொன்னால் செய்த ஆய்ப்பொன் உடைமணி
    பேணிப் பவள்வாய் முத்திலங்கப் பண்டு,
    காணிகொண்ட கைகளால் சப்பாணி,
    கருங்குழல் குட்டனே! சப்பாணி.
    (பெரியாழ்வார் திருமொழி-75- திவ்வியப்பிரபந்தம்)

    *****

    காட்சி மாறுகிறது!

    நிலாமுற்றத்தில் நந்தகோபனும் யசோதையும் அமர்ந்துகொண்டு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வானில் முழுநிலா பளீரிடுகிறது. குழந்தை கிருஷ்ணன் தாயின் மடியிலமர்ந்து கைகளைக் சேர்த்து சப்பாணி கொட்டுகிறான். அவனை மெல்லத் தன் மடியினின்றும் எழுப்பி, எதிரே அமர்ந்துள்ள நந்தகோபனின் மடியில் உட்கார அனுப்புகிறாள் யசோதை. அவன் அணிந்துள்ள மாணிக்கக் கிண்கிணியும் அரைநாணும் அசைந்தாடுகின்றது ஒரு அழகாக உள்ளது; தத்தித் தத்தி நடக்கும்போது நெற்றிச்சுட்டி தாழ்ந்தாடுவது இன்னொரு அழகாக உள்ளது. யசோதையின் தாயுள்ளம் பெருமிதத்தில் விம்முகிறது.

    “உன் தந்தையின் மடிமீது சென்று ஏறி அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டு குழந்தாய்!” என ஆசைபொங்க குழந்தையிடம் வேண்டுகிறாள் அவள்.

    “……………………..உங்கள் ஆயர்தம்
    மன்அரைமேல் கொட்டாய் சப்பாணி!

    மாயவனே கொட்டாய் சப்பாணி,” என்பன பாசுர வரிகள்.

    தன் மடியில் வந்தமர்ந்து மழலைபேசி, சப்பாணி கொட்டி மகிழும் குழந்தையை உச்சிமுகர்ந்து, கட்டியணைத்து மகிழும் நந்தகோபன் குழந்தையை ஆசைபொங்கப் பார்த்து ரசிக்கிறான். காதணிகள் ஒளிவீசிப் பிரகாசிக்கின்றன. அதற்கும் மேலே முல்லையரும்புப் பற்கள் முத்துப்போல ஒளிவீசிப் பளீரிடுகின்றன. இப்போது அவன் கிருஷ்ணனை யசோதையின் மடியிலிருத்தி அழகுபார்க்க ஆசைப்படுகிறான்.

    எப்போதுமே குழந்தையை அணைத்து, உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு மகிழும் தாயோ தந்தையோ, அக்குழந்தையைத் தாய் அல்லது தந்தையின் மடிமீதிருத்தி, அது செய்யும் குறும்புகளை ரசித்து அழகுபார்க்கவும் விரும்புவர். அதனால்தான் இப்போது நந்தகோபன், “உன் அம்மையின் மடிமீதமர்ந்து சப்பாணி கொட்டாய்,” என வேண்டுகிறான் போலுள்ளது.

    ‘நின்மணி வாய்முத்து இலங்க,நின் அம்மைதன்
    அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி
    ஆழியங் கையனே! சப்பாணி.’ என்பன பெரியாழ்வார் திருமொழி வரிகள்.

    வானில் நிலவெழுந்து இப்போது உலா வருகின்றது. பால்போன்ற முழுநிலா. “வானத்து அம்புலியைப்பார் கண்ணா! உனக்குப் பால்சோறு தரும் வெள்ளித்தட்டு போல இல்லையா?” எனக்கூறுகிறாள் யசோதை. குழந்தைக்கு அது அஃறிணைப்பொருளல்ல. தனது விளையாட்டுத் தோழன். “அம்புலி மாமா! என்னோடு விளையாட இங்கே வா,” எனப் பிஞ்சுக்கையை ஆட்டி ஆட்டி அழைக்கிறான் கிருஷ்ணன்.

    “யசோதை நங்காய்! இதனைப்பார்! உன்மகன் செய்யும் குறும்புகளைப்பாராய்!. அவன் தன்னோடு விளையாட அம்புலியை அழைக்கிறான் பார்,” எனக்கூறி, குழந்தையின் சமர்த்தைக் கண்டு அவனை அணைத்துக் கொண்டு கொஞ்சி மகிழ்கிறான் நந்தகோபன். கைகளைக் கொட்டியவண்ணம் ‘கலகல’வெனச் சிரிக்கிறான் கண்ணன்.

    பாசுரத்தைப் பாடும் நாம் புளகம்கொண்டு மகிழ்கிறோம். தம் மனக்கண்ணில் கிருஷ்ணனின் இவ்விளையாட்டுகளைக்காணும் பேரருள் பெற்றவரல்லவோ பெரியாழ்வார்?

    ‘தூநிலா முற்றத்தே போந்து விளையாட
    வான்நிலா அம்புலி சந்திரா! வாஎன்று
    நீநிலா, நின்புகழா நின்ற ஆயர்தம்
    கோநிலாவு, கொட்டாய் சப்பாணி,
    குடந்தைக் கிடந்தானே சப்பாணி,’ என்பன புல்லரிக்கவைக்கும் பாசுர வரிகள்.

    வளரும் சிறுகுழந்தை ஒவ்வொரு விளையாட்டாகப் பயின்று, கை, கால் முதலியவற்றை அசைத்துச் செய்யும் செயல்களால் நம்மை மகிழ்விக்கிறது. இந்தச் செயல்களை வரிசைப்படுத்திப் பாடுவதே பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம். சப்பாணிப்பாருவத்தில் கைகளை மட்டுமே கொட்டவேண்டுமென்பதில்லை. தவழுதல், தளர்நடை நடத்தல் ஆகிய பிற செயல்களையும் செய்யும். தாயும் சப்பாணிகொட்டும் குழந்தைக்கு அம்புலிமாமாவை ஒரு விளையாட்டுத் தோழனாகப் பரிச்சயப்படுத்தி வைப்பாள். ஆகவே அம்புலிப்பருவமும், சப்பாணிப்பருவமும் இணைந்ததொரு பாடலை இங்கு நாம் கண்டு மகிழ இயன்றது.

    பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவ்வாறே பாடல்களைக் காணலாம்.

    சப்பாணிப்பருவத்தைப் பாடும்போது புலவர்களுக்குக் குழந்தையின் கைகள் பாடுபொருளாகின்றன. அச்சிறுகைகள் இறைவன் கைகளாகச் செய்த பெருஞ்செயல்களை எல்லாம் கூறிப் பாடிப் போற்றுவது அடியார் வழக்கம். பெரியாழ்வாரும் ஒரு பாடலில் தன் சிறுகுட்டனின் கைகள் பஞ்சபாண்டவர்களுக்குத் தேரோட்டிய பெருமையைப் பாடிப்பரவுகிறார்.

    ame1
    நூற்றுவரான கௌரவர்கள் இந்த உலகம் முழுவதனையும் தாமே அரசாளப் பேராசை கொண்டனர். உலகிற்கே தந்தையானவர் திருமால்; அவர் சொற்பேச்சினைக் கேட்காமல் பஞ்சபாண்டவர்கள் மீது போர் தொடுத்தனர் நூற்றுவர். அவர்கள் அனைவரும் மாண்டுபோகும்படிச் செய்து தனது கைகளால் குதிரையின் கடிவாளங்களைப் பற்றி அர்ச்சுனனுக்குத் தேரோட்டியவன் கண்ணன். அத்தகைய கைகளால் சப்பாணி கொட்டுவாயாக என வேண்டுகிறார். ‘இந்த உலகத்து நிகழ்வுகள் அனைத்துமே இறைவன் திருவுள்ளப்படி நடக்கும்,’ அல்லவா? அதன்போலவே உலகத்தோருக்கு நீதியையும் அறத்தையும் விளக்க எழுந்ததே மகாபாரதம் எனும் இதிகாசம். அது காட்டும் செயல்களனைத்துமே கிருஷ்ணனால் நிகழ்த்தப்பட்டது என்பது அடியவர் கருத்து.

    ‘தாரித்து நூற்றுவர் தந்தைசொற் கொள்ளாது
    போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
    பாரித்த மன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
    தேருய்த்த கைகளால் சப்பாணி
    தேவகி சிங்கமே! சப்பாணி,’ என்பன பாசுர வரிகள்.

    இதன் கடைசிவரி மிக்க நயமும் பொருளும் வாய்ந்தது. ‘தேவகி சிங்கமே,’ என்கிறார். யசோதையும் நந்தகோபனும் கண்டுகளிக்கச் சப்பாணிகொட்டிய கிருஷ்ணன் உண்மையில் தேவகியின் வயிற்றுப் பிறந்த குழந்தை. சந்தர்ப்பவசத்தால் யசோதையிடம் வளர்கிறான். அவளையும் மறக்காமல், ‘தேவகியின் மகனான சிங்கமே!’ எனப் போற்றிப் பாடுகிறார் பெரியாழ்வார்.

    இதுபோலும் எத்துணையோ நயங்கள்! இன்னும் கண்டு களிப்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 76

    க. பாலசுப்பிரமணியன்

    கேட்டல் ஒரு ஆற்றல் (Listening Skills)

    education

    பல இடங்களில் நாம் மற்றவர் பேச கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றோம். சில நேரங்களில் சொற்பொழிவுகளில் மேடையில் யாராவது பேசும்பொழுது அதில் சற்றும் விருப்பமும் அல்லது ஈடுபாடுமின்றி அமர்ந்தோ அல்லது உறங்கிக்கொண்டோ இருந்திருக்கின்றோம். பல நேரங்களில் வேலைபார்க்கும் இடங்களில் மற்றவர்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுது நமது கவனம் எங்கோ இருந்திருக்கின்றது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு கேள்விகேட்டால் நமது ஈடுபாடும் கவனமும் வேறு எங்கோ இருந்ததினால் பதில் சொல்லமுடியாமல் விழித்ததும் உண்டு. பல நேரங்களில் விவாத மேடைகளில் யாராவது பேசும்பொழுதும் பட்டிமன்ற பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் அவைகளில் நாம் ஒன்றிப்போய் நம்மை மறந்து நேரத்தை மறைந்து அமர்ந்து அங்கே உட்கார்ந்துகொண்டிருந்திருக்கின்றோம்.

    பேசுவது ஒரு கலை என்றால் அதைக்கேட்பதும் ஒரு கலை. பல நேரங்களில் மேடைப்பேச்சாளர்கள் “கூட்டம் கூடாவிட்டாலும் சரி, ஆழ்ந்து கவனிக்கக்கூடியவர்கள் ஐந்து பேராவது இருந்தாலும் போதும். பேசலாம்” என்று சொன்ன சொற்கள் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

    கேட்டல் என்பது நாம் நம்முடன் பேசுபவருக்கு கொடுக்கின்ற மரியாதைக்கு அறிகுறி. நம்மில் பலர் காதுகளில் வாங்கிக்கொள்கிறோமே தவிர “கேட்பதில்லை” .  காற்று பேசுகின்றது.. அலைகள் பேசுகின்றன..பறவைகள் பேசுகின்றன. விலங்குகள் பேசுகின்றன, அத்தனையும் ஒலியின் வடிவங்கள்தானே?

    கேட்டல் என்பது நாம் மனமுவந்து ஒருவருக்கோ பலருக்கோ காட்டுகின்ற ஆக்கப்பூர்வமான செயல்.

    கற்றலில் கேட்டலுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் நாம் கேட்கும் பொழுது இருக்கவேண்டிய முக்கிய நிலைப்பாடுகள்:

    1.  நமது மனம் முழுவதுமாக அந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    2.  அந்தக் கற்றல் நமக்குத் தேவையானது, பயன்படக்கூடியது என்ற மனப்பாங்கு இருக்கவேண்டும்.

    1. பேச்சாளரைப் பற்றிய சொந்த விருப்பு வெறுப்புக்கள் நம்மை பாதிக்கக்கூடாது
    2. சொல்லப்படும் கருத்துக்கே முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
    3. கேட்கும் நேரத்தில் அதை உள்வாங்க வேண்டுமே தவிர, அதன் தரத்தையும் அதன் உண்மையையும் அவசரப்பட்டு ஆராயவோ அல்லது முடிவெடுக்கவோ கூடாது,
    4. சொல்லப்படும் கருத்துக்கள் நமக்கு விருப்பமற்றனவாக இருந்தால் அதற்கு உடன் எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது முரண்படுதலையோ தவிர்க்கவேண்டும்.
    5. சொல்லப்படும் கருத்தை விருப்பத்துடன் உள்வாங்கி பின் உரிய நேரத்தில் அதை அலசி ஆராய்தல் அவசியம்.
    6. கற்கும் நேரத்திலும் கேட்கும் நேரத்திலும் கவனச் சிதறலை தவிர்க்க வேண்டும்.
    7. நல்ல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப் படும்பொழுது நடுவில் தனக்குத் தெரிந்ததையும் கூறவேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் தெரிவித்தல் தவறு.
    8. கேட்கும் நேரத்தில் அமைதி காத்தல் அவசியம்.

    வீட்டிலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  கேட்கும் கலையையும் திறன்களையும் வளர்த்தல் மிக அவசியமாகின்றது. அதனால் மொழிப் பயிற்சியிலும் கற்றலிலும் ‘கேட்டலுக்கு” முதல் இடம் கொடுக்கப்படுகின்றது.

    பல நேரங்களில் சரியாக காது கொடுத்துக் கேட்காமல் நாம் தவறான முடிவுகளுக்கும் வந்து விடுகின்றோம். பல நேரங்களில் நாம் மற்றவர்கள் பேசி கேட்கும் பொழுது அவர்கள் சொல்வதையும் அவர்களைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் நாம் அவர்கள் பேசி முடிக்கும் முன்பே அதற்கான பிரதிபலிப்புக்களைக் கொடுத்துவிடுகின்றோம். இது ஒரு தவறான செயல். பல நாடுகளில் இதை ஒரு தனி மனிதனின் திறனாய்வில் ஒரு பலவீனமாகக் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, பல நேர்காணல்களில் இதை ஒரு பலவீனமாகவே கருதுகின்றனர். எனவே, பள்ளிகளிலும் வீடுகளிலும் “கேட்கும் திறனை” வளர்த்தல் மிக அவசியம். பொதுவாக, குழந்தைகள் பேசும்பொழுதே பெற்றோர்கள் முழு கவனத்துடன் கேட்கும் பொழுது அதே “திறன்” வளரும் குழந்தைகளுக்கு ஓர் ஆற்றலாக வளர்கின்றது.

    கேட்டல் திறனால் குழந்தைகளுக்கு என்னென்ன வளர்ச்சிக்குறிகள் தென்படுகின்றன என்பதை ஆராய்ச்சிகள் விளக்குகின்றன.

    1. கேட்டலின் பொழுது கற்பனை வளம் அதிகமாகின்றது
    2. கேட்கும் கருத்துக்கள் எண்ணங்களை வளப்படுத்துகின்றன.
    3. கேட்கும் கருத்துக்கள் நம்பிக்கையையும் வாழ்க்கைத் திறனையும் உறுதிப்படுத்துகின்றன.கேட்கும் திறன் மொழிவளத்தையும் கருத்தாற்றலையும் ஊக்குவிக்குகின்றன.
    4. கேட்கும் திறன் மற்றவர்களுடன் நல்லுறவையும் கருத்துப்பரிமாற்றங்களுக்கு நல்ல வழிகளையும் வாய்ப்பினையும் ஏற்படுத்துகின்றது                     ஆகவேதான் மழலைப் பருவத்தில் குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் நேரத்தில் கீழ்கண்ட திறன்களின் ஒருமைப்பாடு மற்றும் சமன்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
    1. கேட்டல் – பார்த்தல்
    2. கேட்டல் – செய்தல்
    3. கேட்டல் – திருப்பிச் சொல்லுதல்
    4. கேட்டல் – அறிதல்
    5. கேட்டல் – புரிதல்

    இந்தக் கேட்டல் என்ற செயல் மூளையில் எவ்வாறு மற்ற செயல்களோடு ஒருங்கிணைத்து வடிவெடுக்கின்றது என்பது பற்றிய மூளை-நரம்பியல் ஆராய்ச்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. இதைத் தொடர்ந்து பார்ப்போம்

    (தொடரும் )

    Share
  • தென்னைகளில் கள்ளெடுப்பவள்

     எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    பக்கவாதப் புருஷனுக்கென முதலில்

    வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்

    தோப்பு மரங்கள்

    அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு

    தொடக்கத்தில் ஊர் முழுவதும்

    வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்

    பெண்ணேறும் தென்னைகள்

    அதிகமாகக் காய்க்கிறதென

    விடியலிலும், இரவிலுமென

    எக் காலத்திலும் மரமேறுபவள்

    எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து

    நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்

    ஓரோர் மரத்துக்கும்

    கயிற்றின் வழியே நடந்து சென்று

    மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்

    கள்ளெடுக்கும் செம்பருத்தி

    தென்னை ஓலைகளினூடே தொலைவில்

    கடல் மின்னுவதை

    எப்போதும் பார்த்திருப்பாள்

    தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள்

    அவளைக் காண வரும் பின் மதியங்களில்

    தம் தோப்புக்களைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்ற

    அவர்களது வேண்டுகோள்களோடு பணத்தையும் வாங்கி

    பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்

    ஒரு தொகை பணம் சேர்த்த பின்

    கடலின் அப்புறம் தெரியும் தீவுத் தென்னைக்கு

    கயிறெரிந்து முடிச்சிட்டு

    கணவனோடு தப்பித்துச் செல்லும் வீரியம்

    அவள் கண்களில் மின்னும்

    அப்போதெல்லாம்

     

     

    Share
  • பேருந்துப் பயணம்

    ராஜகவி ராகில்

     

     

    என் சைகை கண்டு நிற்கிறது

    மது குடித்த வண்டிபோல

    விரைவாய் வந்த பேரூந்து

     

    அவசரமாய்

    ஏறிக்கொள்கிறேன் நான்

    என் அருகில் வருகிறான் நடாத்துனர்

    ஐம்பது ரூபாக் கொடுக்கிறேன்

    நான் செல்லுமிடம் சொல்ல

    அனுமதிச் சீட்டில் நாற்பது ரூபா எழுதியவன்

    பத்து ரூபா தராமல் நகரும்போது மீதி நான் கேட்கிறேன்

    பொய்யாகச் சொல்கிறான் இறங்கும் போது தருவதாய்

     

    நான் இறங்குமிடம் வருகிறது

    சில்லறையில்லை என்ற பதில் வாங்கியபடி

    அவசரமாய் இறங்குகிறேன் பின் கதவு வழியாய்

     

    என்னிடம் கை நீட்டுகிறான்

    அந்நேரம் பார்த்து

    அந்த வழி வந்த பிச்சைக்காரன்

    அவன் முகத்தில் தெரிகிறான்

    பேரூந்து நடத்துனர் .

    Share
  • படக்கவிதைப் போட்டி – (110)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18217587_1308733892514140_163952999_n
    97233181@N07_rஜமீல் ரியாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • நாளெலாம் போற்றுவோம் !

      ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    ஊசிமுதல் உணவுவரை

    உழைப்பாலே வருகிறது

    உழைக்கின்றார் வாழ்வெல்லாம்

    உயர்வுபெற மறுக்கிறது

    காசுள்ளார் கைகளிலே

    உழைப்பெல்லாம் போகிறது

    கவலையுறும் உழைப்பாளி

    கண்ணீரில் மிதக்கின்றான் !

     

    சமத்துவங்கள் பேசுகிறார்

    சங்கங்கள் அமைக்கின்றார்

    நினைத்தவுடன் மாநாடு

    நிறையவே வைக்கின்றார்

    அனைத்துமே உழைக்கின்றார்

    அனுசரணை என்கின்றார்

    ஆனாலும் உழைக்கின்றார்

    அல்லலிலே இருக்கின்றார் !

     

    நிலத்தில் வியர்வை சிந்தியே

    நித்தம் உழைக்கும் மக்களின்

    நலத்தை மனதில் எண்ணியே

    நடத்தல் நீதி அல்லவா

    பணத்தை முடக்கி வைத்திடும்

    குணத்தை உடைய மனமெலாம்

    உழைப்பை மதிக்கும் நிலையினை

    உலகில் வந்திடச் செய்குவோம் !

     

    பாடுபடுவார் பலவற்றைப் பெறுதல் வேண்டும்

    பக்குவமாய் அவர்வாழ்வு மலர்தல் வேண்டும்

    நாட்டினிலே அவருழைப்பு போற்றல் வேண்டும்

    நலம்விளைக்கும் நாளாய் மே திகழவேண்டும் !

     

    உழைப்பினை நல்குவார்

    உயர்ந்திடச் செய்குவோம்

    உழைப்பினை நினைவுறும்

    நாளதைப் போற்றுவாம்

    நலத்துடன் உழைப்பவர்

    வாழ்ந்திட வாழ்த்துவோம்

    நாட்டிலே உழைப்பாரை

    நாளெலாம் போற்றுவோம் !

     

    Share
  • மகிழ்ந்து வாழ்வோம் !

       ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    முதியோர் இல்லமதில் தாய்

    முறுவலுடன் விழாவதனில்  சேய்

    தனியாகத் தவிக்கிறாள் தாய்

    தானமெலாம் செய்கிறான் சேய் !

     

    பலலட்சம் வைத்துள்ளான் சேய்

    பரிதவித்து நிற்கிறாள் தாய்

    பட்டம்பல பெற்றுவிட்ட சேய்

    பாருக்குள் இருப்பதுதான் ஏன் !

     

    விரிவுரை பலசெய்து விருதுகள் பலபெற்று

    கருணையை காட்டிநிற்கும் காவியம் பலகாட்டி

    தெருவெலாம் வரவேற்பு தினமுமே பெறுவதற்கு

    பலநூறு செலவுசெய்யும் பாங்கினைநாம் என்னசொல்ல !

     

    ஊட்டி வளர்த்தவளை ஒருகணமும் நினையாமல்

    போட்டி பொறாமையொடு புகழ்தேடும் கனவான்கள்

    சேற்றிலே வீழ்ந்துள்ள சீரழிவைக் காண்கையிலே

    நாட்டிலே இருப்பதனால் நன்மையென்ன இருக்கிறது !

     

    பட்டம் பலபெற்றாலும் பதவிகளில் உயர்ந்தாலும்

    கெட்ட குணமுள்ளவரை அத்தனையும் வீணாகும்

    நட்டம் பலவந்தாலும் தான்நொடிந்து போனாலும்

    இட்டமுடன் எமைக்காத்த எந்தாயை இகழுவதா !

     

    தாயினைத் தெய்வமாகத் தரணியில் போற்றவேண்டும்

    தாயினை தாங்கிநின்றி தாழ்பணிந்திருக்க வேண்டும்

    தாயின் ஆசிபெற்று தரமான வாழ்வுவாழ

    தாயினை வீட்டில்வைத்து தான்நிதம் மகிழ்ந்துவாழ்வோம் !

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (54)

    நிர்மலா ராகவன்

    தலைமைத்துவமும் பணிவும்

    நலம்-1-1-1-1
    ஒரு சிற்றூரிலிருந்து மேற்பயிற்சிக்கு வந்திருந்த ஓர் ஆசிரியை, “பிரபலமாக இருப்பவர்களெல்லாம் கர்விகளாக இருக்கிறார்கள்!” மூக்கைச் சுளித்தபடி கூறினாள்.
    தான் எதிலும் புகழ் பெறும் தகுதியற்றவள் என்று அவள் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டதுதான் அவளைப்போல் இல்லாத பிறரைப் பழிக்கக் காரணமாக இருந்திருக்குமோ?

    ஒரு சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு தாராவிற்குத்தான். அதை வெளிப்படையாகச் சொன்னால், தன்னைக் கர்வி என்று நினைத்துவிடுவார்களோ என்று `அடக்கத்துடன்’ என்னிடம் கூறினாள்: “என் ஃப்ரெண்டுக்குப் பரிசு கிடைச்சிருக்கு. அவங்க சார்பில வாங்கிட்டுப் போக என்னை அனுப்பினாங்க!”

    இப்பெண்களுக்கு தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

    எது பணிவு?

    பிறருக்குமுன் கூனிக்குறுகி நடப்பதும், தன்னைத்தானே மட்டம் தட்டிக்கொள்வதும்தான் பணிவின் அறிகுறியா?

    தனக்குமுன் பிறர் அப்படி நடப்பது தன் பராக்கிரமத்தை உயர்த்திவிடுகிறது என்று தப்புக்கணக்குப் போடுகிறவர்கள்தாம் — தகுதி இல்லாவிட்டாலும் — பதவிக்கு அலைகிறார்கள்.

    செய்வதெல்லாம் சரி!

    பதவி வந்ததும், தாம் தப்பே செய்ய முடியாது என்ற இறுமாப்பு. அவர்கள் சொல்வதையோ, செய்வதையோ, `தவறு’ என்று சுட்டிக் காட்டுகிறவர்கள் பகைவர்களாக ஆகிறார்கள்.

    அண்மையில், இம்மாதிரியான ஒரு தலைவரிடம் நான் அவரது குறைகளை எடுத்துச் சொன்னேன்.

    எவ்வித தடங்கல் எழுந்தாலும் சிறிதும் மனம் தளராது, நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பவர் அவர். இருந்தாலும், அதிகாரம் கைக்கு வந்ததும், தன் கீழ் இருப்பவர்களிடம் அவர்களது வாழ்க்கைப் பின்னணிக்கேற்ப பழகுவது எப்படி, எவ்வித பொறுப்புகளை அவர்களிடம் கொடுக்கலாம் என்பதை அறிந்திருக்கவில்லை.

    வெற்றி கண்டுவிட்டவர்கள் எந்த வினாடியும் கீழே விழலாம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள்.

    பலருடன் பகைமை ஏற்பட்டுவிட, தளர்ந்தவராக என்னுடன் தொடர்பு கொண்டார்.

    நமக்குக் கீழே பலர் இருக்கிறார்கள். அவர்களை நம் தரத்துக்கு உயர்த்த முயன்று, நம்மைவிட மேலேயும் சிலர் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அவர்களை மதித்து நடந்தால்தான் ஒருவர் வெற்றிப்படியின் மேலே, மேலே நடக்க இயலும்.

    “ஆதாயம் கிடைக்குமென்று நம்பி, `ஆமாம் சாமி’ போட்டவர்களை நம்பினீர்கள். ஒருவரைப்பற்றி இன்னொருத்தர் கோள் மூட்டினால், யார் பக்கம் நியாயம் என்று விசாரிக்காமல் ஆத்திரப்பட்டுத் தண்டித்தீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் சிலரைத் தூக்கிவைத்துப் பேசி, பாரபட்சம் காட்டினீர்கள்,” என்று, ஒரு தலைவருக்கு இருக்கக்கூடாத அவருடைய குணங்களை உரையாடலுக்கு ஊடே, ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினேன்.

    நான் எந்த அணியையும் சேராமல் தனித்தே இருந்ததால், என்னை அவருக்கும், அவரை அண்டியவர்களுக்கும் புரியவில்லை. அதனாலேயே அச்சம். எனக்குப் பின்னால் ஏதேதோ பேசினார்கள்.

    நெடுநேரம் மௌனமாக இருந்துவிட்டு, “பத்து வருஷத்துக்கு முந்தி நீங்க என்னைத் தனியாக் கூப்பிட்டு இதையெல்லாம் சொல்லியிருந்தா, நான் எத்தனையோ பேரோட பகைக்கு ஆளாகி இருக்கமாட்டேன்!” என்றார். உண்மையான வருத்தம்போல்தான் தோன்றியது.

    நொந்தவாறு, இதையே பல முறை கூறியபோது, “அப்போது அதைக் கேட்டிருக்க மாட்டீர்கள். `இவ யார் எனக்குப் புத்தி சொல்ல?’ன்னு ஆத்திரம்தான் வந்திருக்கும்!” என்றேன் லேசாகச் சிரித்தபடி.

    எளிமையும் பணிவும் இருந்தால் — தலைமைப் பதவியை விடுங்கள் — வாழ்வில் எவ்வித இடரையும் சமாளிக்கும் நெஞ்சுரம் வந்துவிடும்.

    `நான்தான் பெரியவன்!’ என்ற ஆணவத்துடன் ஒவ்வொருவரும் சுயலாபத்தையே நாடினால், எந்த நற்காரியமும் நிலைத்து இருக்க முடியாது.

    எனக்கு எல்லாம் தெரியும்

    பணிவு என்பது தன்னம்பிக்கையின் மறுபக்கம். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிச்சல்.

    ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது, எங்கள் விரிவுரையாளர் ஒரு கேள்வியைத் தொடுத்தார்: “ஒரு மாணவன் கேட்கும் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்?”

    பலரும், “ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவோம்,” என்றார்.

    என் முறை வந்தபோது, “எனக்குத் தெரியாது என்று உண்மையை ஒப்புக்கொள்வேன்,” என்றேன், உறுதியாக.

    “அப்போது உங்களை `முட்டாள்’ என்று அவர்கள் நினைக்க இடம்கொடுத்து விடுகிறீர்களே?” என்று கேலியாகக் கேட்டார்.

    “எப்போதும் அப்படிச் சொல்லப் போவதில்லையே! அத்துடன், அதற்கான பதிலை அறிந்துகொண்டு வந்து சொல்வேன்!” என்றேன்.

    விரிவுரையாளர், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்று வியந்து பாராட்டினார்.

    சிலருக்கு செய்த தவற்றைப் பணிவுடன் ஒத்துக்கொண்டால், கௌரவக்குறைவு.

    `நீங்கள் கூறுவது சரி,’ என்றால், மற்றவர் தன்னைவிட உயர்வு என்றாகிவிடுமோ என்ற பயம். ஏதேதோ சொல்லி, தம் தவற்றைச் சரியென்று சாதிப்பார்கள். குறை கூறியவர்களைப் பழிக்கவும், பழிவாங்கவும் தயங்கமாட்டார்கள்.

    இவர்களைப் போன்றவர்கள் மேல் நிலையை அடைந்தாலும், அது நீடிக்காது.

    சில சந்தர்ப்பங்களில், `எனக்குத் தெரியாது!’ என்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் பிறர் நமக்களிக்கும் மரியாதை நிலைக்கும்.

    கதை

    என்னுடன் வேலை பார்த்த ஆசிரியை மிஸஸ். டானுக்கு விஞ்ஞானம் பிடிக்காது. வரவும் வராது. ஆனால், அதுதான் மதிப்பு என்று அவளுடைய தந்தை அப்பாடத்தை அவள் எடுத்துக்கொள்ளச் சொன்னாராம். (மனக்குறையுடன், என்னிடம் அவள் சொன்ன தகவல்).

    பௌதிகம், உயிரியல், வேதியியல் மூன்றும் மிஸஸ். டான் கற்பிக்க ஏற்பாடாகி இருந்தது. அவள் மாணவிகளுக்கு ஒரு பௌதிகக் கணக்கைச் சொல்லிக்கொடுக்க முயன்று, விடை சரியாக வராததால், `கேள்வியே தப்பு!’என்று கூறிவிட்டாள்.

    பல மாணவிகள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து கேட்டார்கள். (நான் அப்பாடத்தின் மூத்த ஆசிரியை என்று பெயர்).

    முதல் ஆண்டே பதினோரு வகுப்புகளுக்கு அதையே கற்பிக்க வேண்டிய நிலையில், `எப்படியோ அடிச்சு விடலாம்!’ என்று என்னால் இருக்க முடியவில்லை. ஒரே பாடத்தைக் கற்பிக்க பல புத்தகங்களைப் படித்தேன். லேசாகப் புரிந்தது. மாணவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்க, இன்னும் அதிகமாகப் புரிந்தது.

    இப்போது அக்கணக்கை எப்படிப் போடுவது என்று விளக்கினேன். “மிஸஸ்.டான்..,” என்று அவர்கள் ஆரம்பித்தார்கள்.

    அவர்களைத் தடுத்து, “நான் இப்படித்தான் போடுவேன்!” என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டேன்.

    `பணிவு’ என்பது நாம் முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறி இருக்கிறோம், இன்னும் முன்னேற முடியும் என்பதை அறிவது.  நம்முடன் நாமே போட்டியிடுவது.

    தொடருவோம்

    Share
  • அம்மாவும் மகனும்

        ரா.பார்த்தசாரதி

     

     

    வாசலில் காகம் கரைந்தால் உன் வரவை

    என் கண்கள் வாசலை எட்டிப் பார்கின்றதே,

    நான் கண்ணாடியை பார்க்கும்போது உன் முகம்தான்

    எனக்கு தெரிகின்றது, ஏன் எனில் நீ என் சாயல்தான்

    என் பழைய சேலையில் உன் வாசம்தான் வாழ்கிறது

    அருமை மகனே அதனுடனே  என் பொழுதும் போகிறது !

    உன்னை விழிமேல் வழி வைத்து உன் வரவுக்காக  ஏங்குகிறேன்

    காலம் தாமதித்து வந்தாலும் மனதால்  பேதலிக்கின்றேன்!

     

     

    அழைப்பு மணி அடித்ததும் என் கால் வாசல் நோக்கி விரையுமே

    உன்முகம்  கண்டதும்  தாயின் கண்கள் மலர்ந்து வரவேற்குமே !

    பணம் பக்கத்தில் நிற்கும், பாசம் உயிரோடு கொல்லும்

    உனக்காக சேர்த்து சாப்பிட்டாலும், என் மனப்பசி அடங்கா

    நீ உப்பில்லாமல் சாப்பிட்டதால் நாக்கு செத்துப்போய்விட்டதா

    உன் அம்மாவின் ஞாபகம் வராமல் போனதா!

    உனக்கு பிடித்ததை நான் சாப்பிடும்போது மனம் ஒப்பவில்லை

    என்  மனப்பசி  சாப்பிடாமல் என்னை தடுப்பதை உணராமலில்லை!

     

     

    வேர், இலைகள், கிளைகள் இருந்தால்தான் விழுது  விழும்

    தாய் ஆணிவேராக இருந்தாலும் பாசம் மிகுந்து  வரும்!

    தொப்புள் கொடி  உறவு  என்றும்  நிரந்தர உறவாகும்

    பாசமும், பந்தமும் என்றும்  நிலை பெற்றதாகும் !

    வீட்டினில்  விளக்கு எரிந்தாலும் இருளில் மூழ்கிறது மனசு

    பெத்த மனம் பித்து , பிள்ளை மனம் கல் என்பது பழமொழி !

    வாரம் ஒரு முறை ஸ்கைப்பில் காட்சி தருவாயா

    அது காணும் பேற்றை மகனே எனக்கு  அளிப்பாயா!

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(166)

    செண்பக ஜெகதீசன்

     

    இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண                                    

    நன்னயஞ் செய்து விடல்.

           -திருக்குறள் -314(இன்னா செய்யாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    துன்பம் நமக்குச் செய்தவரைத்

    தண்டிப்பது,

    தலைகுனிந்து அவர் நாணும்படி

    அவருக்கு

    நன்மையே செய்திடலாகும்…!

     

    குறும்பாவில்…

     

    துன்பம் செய்தவரைத் தண்டித்தல்,

    துணிந்து அவர் வெட்கமுற

    நன்மை செய்திடலே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கெட்ட யெண்ணம் கொண்டேதான்

         கேடு நமக்குச் செய்தவரைத்

    தட்டித் தண்டனை வழங்கிடவே

       துன்ப மவர்க்குத் தரவேண்டாம்,

    திட்ட மிட்டே அரவர்நாண

      தீங்கு யேதும் செய்யாமல்,

    கிட்டும் நன்மை செய்திடல்தான்

      கொடுமை மிக்க தண்டனையே…!

     

    லிமரைக்கூ..

     

    செய்வோர் சிலர்நமக்குக் கேடு, 

    நாணமுறத் தண்டனையாயத் தீங்கின்றி

    நிறைவேற்ற நன்மையையே நாடு…!

     

    கிராமிய பாணியில்…

     

    கெடுதல் செய்யாத  கெடுதல் செய்யாத

    கேடுநமக்குச் செஞ்சவனுக்கும்

    கெடுதல் ஏதுஞ் செய்யாத..

     

    கெடுதல் நமக்குச் செஞ்சவனும்

    கண்டு வெக்கப்படுமளவு

    அவுனுக்குக்

    கூடுதல் நன்ம செய்யிறதுதான்

    குடுக்கிற பெரிய தண்டனயே..

     

    அதால,

    கெடுதல் செய்யாத  கெடுதல் செய்யாத

    கேடுநமக்குச் செஞ்சவனுக்கும்

    கெடுதல் ஏதுஞ் செய்யாத…!

     

    –செண்பக ஜெகதீசன்…

    Share
  • பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன

    aj

    செவ்வாய்க் கோளின் பெரிய துணைக்கோள் ஃபோபாஸ்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++

    நிலவினில் தடம் வைத்து
    நீத்தார் விண்வெளித் தீரர்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தள உளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றின்
    தூசிகளை ஆழ்ந்து ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரியை
    வையத்திற்குக் கொண்டுவரும்,
    ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி.
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    அடுத்து முதன்முதலாய் ஜப்பான்
    பிரென்ச் விண்ணுளவி
    செவ்வாய்த் துணைக்கோள் ஃபோபாஸ்
    மண்ணெடுத்து புவிக்கு மீளும்.
    2025 ஆண்டில்
    அமெரிக்க விண்வெளித்  தீரர்
    வக்கிரக் கோள் ஒன்றில்
    வைப்பர் தம் கொடி !

    ++++++++++++++++

    செவ்வாய் துணைக்கோள் ஃபோபாஸ்

    2017 ஏப்ரல் 10 இல் பாரிஸ் & டோகியோ ஓர் முன்னேற்பாடு ஒப்பந்தம் செய்து கையொப்பம் இட்டன. முடிவான ஒப்பந்தம் இவ்வாண்டு முடிவில் நிகழும்.  2024 ஆண்டில் செந்நிறக்கோள் செவ்வாயைச் சுற்றிவரும் இரண்டு துணைக்கோள்களில் நெருங்கிச் சுற்றும் பெரிய  ஃபோபாஸ் [Pobos] ஆராயப்படும்.  இது ஓர் முக்கிய குறிப்பணி.  துணைக்கோள் ஃபோபாஸ் உளவு தவிர, மற்றும் முதல்முறையாக அந்த துணைக்கோள் மண்தூசி மாதிரியை எடுத்து, பூமிக்கு விண்ணுளவி கொண்டுவரும்.  இப்பயணம் இரட்டிப்பு முறையில் எளிதானது.  இம்முறை விண்ணுளவி சவாலான செவ்வாய்க் கோள் சூழ்வெளி நுழைவில் தவறிச் செல்லாது.

    ஜான் -ஈவஸ் லி கால் [Jean-Yves Le Gall, President France National Centre for Space Studies (CNES)]

    Image result for Mars and its moons

    செவ்வாயின் துணைகோள்கள் :  ஃபோபாஸ் & டெய்மாஸ்

    செவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸ் ஆய்வு செய்ய பிரான்ஸ், ஜப்பான் கூட்டு முயற்சி.

    2017 ஏபரல் 10 ஆம் தேதி முதன்முதல் பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் இணைந்து செந்நிறக்கோள் செவ்வாயின் பெரிய துணைக்கோள் ஃபோபாஸை [Phobos] சேர்ந்து ஆராயத் திட்டமிட்டு முன்னேற்பாடு ஒப்பந்தம் செய்துள்ளன. முடிவான ஒப்பந்தம் 2017 ஆண்டு முடிவில் உறுதியாகி கையொப்பம் இடப்படும்.  ஃபோபாஸ் துணைக்கோள் ஆய்வுத் திட்டம் 2024 ஆண்டில் துவங்கும்.  செவ்வாய்க் கோளுக்கு இரண்டு துணைக் கோள்கள், ஃபோபாஸ் & டெய்மாஸ் [Phomos & Deimos]. இரண்டிலும் பெரியது ஃபோபாஸ்.  செவ்வாய்க் கோளை 6000 கி.மீ. [3700 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்றுவது.  சற்று முட்டை வடிவான ஃபோபாஸ் 27 கி.மீ. [17 மைல்] விட்டம் உடையது.  ஃபோபாஸ் துணைக் கோளை ஆராய்வது அது எப்படி உருவானது, செவ்வாய்க் கோளை எப்படி நெருங்கியது போன்ற புதிர்களை விடுவிக்கும்.  ஃபோபாஸ் ஒரு முரண்கோள் [Asteroid] என்பது ஒரு கருத்து.  இல்லை அது செவ்வாய்க் கோள் சிதறிய துணுக்கு என்பது இரண்டாவது கருத்து.

    Image result for Mars and its moons

    ஃபோபாஸ், செவ்வாய், டெய்மாஸ்

    செவ்வாய்க் கோளின் ஈர்ப்பியல் சூழ்மண்டலம் ஒரு மயான அரங்கம் [Graveyard].  அதை நோக்கிச் சென்ற பல விண்கப்பல்கள் பாதை தவறிப் போயுள்ளன.  ஆனால் ஃபோபாஸ் துணைக்கோளுக்குப் பயணம் செய்வது இரட்டிப்பு வழியில் எளியது.  பிரான்ஸ் தேசீய விண்ணாய்வு மையம் & ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் [France National Centre for Space Studies(CNES)] & [Japan Aerospace Exploration Agency (JAXA)] இரண்டும் சேர்ந்து முதன்முதலாய் இப்புதிய குறிப்பணியைச் செய்கின்றன.

    Image result for Mars Has Moons

    சூரிய மண்டலத்திலே ஃபோபாஸ் துணைக்கோள் ஒன்று மட்டும்தான், தனது தாய்க்கோள்  செவ்வாயை மிக நெருங்கிச் சுற்றுகிறது.  ஒவ்வொரு 100 ஆண்டுக்குச் சுமார் 2 மீடர் [6.5 அடி] வீதம் செவ்வாய்க் கோளை நெருங்குகிறது.  இன்னும் 30 அல்லது 50 மில்லியன் ஆண்டுகளில் ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளால் ஈர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.  2011 ஆம் ஆண்டில் முதன்முதல் ஃபோபாஸ் நோக்கி ரஷ்யா ஏவிய விண்ணுளவி குறிக்கோளை அடையாது சிதறிப் போனதாய் அறியப்படுகிறது. 2020 இல் ரஷ்ய – ஈரோப்பிய கூட்டு விண்ணுளவு முயற்சியில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் திட்டம் உள்ளது.  அமெரிக்காவின் நாசா விண்தேடல் ஆணையகம் 10 அல்லது 15 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்பும் மாபெரும் திட்டம்  வகுத்துப் பயிற்சி அளித்து வருகிறது.

    ஜப்பான் முந்தைய விண்வெளித் தேடல் குறிப்பணிகள்

    ஹயபுஸா -2 தளவுளவி  500 மீடர் அகலமுள்ள முரண்கோளில் 30 செ.மீ. அகலக் குண்டைப் போட்டு, அது வெடித்து ஏற்படும் ஒரு மீடர் குழியில் மண் மாதிரி எடுக்கும்.    அக்குழி மண் மாதிரி சூரியக் கதிரடிப் பெருமளவு  தாக்காமல்  புதைந்து கிடப்பது.   அந்த மாதிரி மண் முரண் கோளின் இரசாயனப் பூர்வ நிலையைக் காட்டும்.   உயிரனப் பூர்வ மூலவிகளை அறிய முரண்கோள் மாதிரியில் அமினோ அமிலம் [Amino Acids]  இருப்பது நிரூபிக்கப் பட வேண்டும்.

    மகடோ  யோஸிகாவா  [ஹயபூஸா -2  ஜப்பான் விண்வெளித் தேடல் குழு]


    “ஜப்பான் முதல் தளவுளவி ஹயபுஸா, புத்தகத்தில் சொல்லி வைத்தபடித் துல்லியமாகத் தென் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் வந்திறங்கிப் பயணத்தை முடித்தது. மேலும் தவிர்க்க வேண்டிய தளங்களில் விழாமல் தப்பிக் கொண்டது.  ஜப்பானிய நிபுணர் எங்கு வந்து விண்சிமிழ் விழத் திட்ட மிட்டாரோ அங்கு பாதுகாப்பாய் வந்து இறங்கியது.”

    டக்லஸ் ஜெர்ரி ஊமெரா சோதனை ஆளுநர் (JAXA)

    “முதல் தளவுளவி மீண்டு வருமா என்று விஞ்ஞானிகள் கவலையோடு அச்சத்தில் இருந்த சமயத்தில், விண்சிமிழ் எதிர்பார்த்ததை விட மென்மையாக இறங்கியதைப் பார்த்து நாங்கள் பேருவகை அடைந்தோம்.  நாலாண்டுகள் நீடிக்க அமைக்கப் பட்ட விண்கப்பல் ஏழாண்டுகள் தொடர்ந்து பணிசெய்ய அதன் மின்கலன்கள் (Batteries) சாகாமல் இயங்கியதைக் கண்டு பூரிப்படைந்தோம்.”

    யோஷியூக்கி ஹசேகா (JAXA Associate Executive Director)

    “மீண்ட விண்சிமிழ் பாலை மணலில் இரவு பூராவும் கிடந்தது.  பகலில் விஞ்ஞானிகள் அதைக் கண்டதும் எடுத்துக் கொண்டார்கள்.  அப்பகுதியில் வசித்த பூர்வீகக் குடிவாசிகள் தமது சொந்தமான புனிதத் தெய்வீகத் தளங்களில் விழவில்லை என்று மகிழ்ந்தனர்.  நல்ல வேளை விண்சிமிழ் நொறுங்காது முழுமையாகப் பாலை மணலில் கிடந்தது.

    ஜப்பான் விண்வெளி ஆய்வக (JAXA) அறிவிப்பு

    ஜப்பான் 2014 இல் அனுப்பும் இரண்டாம் விண்கப்பல் ஹயபுஸா -2 முரண்கோளில் உயிரின மூல இரசாயனத்தைத் தேடும்

    முதல் விண்கப்பல் ஹயபுஸாவைச் செம்மைப் படுத்தி ஜப்பான் 2014 ஆண்டில் வக்கிரக் கோள் [Asteroid : 1999 JU3] ஒன்றை நோக்கி அனுப்பி அதன் மண் மாதிரியை எடுத்துப் பூமிக்கு மீளும் அடுத்தோர் அரிய விண்வெளிச் சாதனை புரியத் திட்டமிட்டுள்ளது.   இந்த தளவுளவி 2018 இல் குறிப்பிட்ட வக்கிரக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  தளவுளவி அதன் மண் மாதிரியை எடுத்து பூமிக்கு 2020 ஆண்டில் மீளும் என்று திட்ட மிடப் பட்டுள்ளது.   விண்கப்பல் முரண் கோளை நெருங்க 4 ஆண்டுகளும், திரும்பி வர 2 ஆண் டுகளும் நீடிக்கப் பல பில்லியன் தூரப் பயணமும், மெதுவாக இயங்கும் அயான் எஞ்சின்களும் பிரதான காரணங்கள்.   மனிதரற்ற இந்த விண்வெளித் தேடலுக்கு ஆகும் நிதித்தொகை 2 பில்லியன் டாலர்.   ஹயபுஸா -2 மண் மாதிரி எடுக்கப் போகும் முரண்கோள் பெயர் 1999 JU -3.  அதன் அகலம் ஒரு கிலோமீடர் [சுமார் அரை மைல் ]. முரண் கோளில் உயினங்களுக்கு விதையிட்ட ஆர்கானிக் மூலக்கூறுகள் [Organic Molecules] உள்ளனவா என்று மண் மாதிரியில் தேடப்படும்.

    ஹயபுஸா -2 தளவுளவி  500 மீடர் அகலமுள்ள முரண்கோளில் 30 செ.மீ. அகலக் குண்டடைப் போட்டு, அது வெடித்து ஏற்படும் ஒரு மீடர் குழியில் மண் மாதிரி எடுக்கும்.    அக்குழி மண் மாதிரி சூரியக் கதிரடிப் பெருமளவு  தாக்காமல்  தரைக் கடியில் புதைந்து கிடப்பது.

    அந்த மாதிரி மண் முரண் கோளில் உயிரின மூலவி தோன்றக் காரணமான இரசாயனப் பூர்வ நிலையைக் காட்டும்.   உயிரனப் பூர்வ மூலவிகளை அறிய முரண்கோளில் அமினோ அமிலம் [Amino Acids]  இருப்பது நிரூபிக்கப் பட வேண்டும்.

    நாசா ஸ்டார்டஸ்ட் வால்மீன் குறிப்பணி [Stardust Comet Mission] மூலம் வால்மீன் வாலில் [Comet : Wild 2]  அமினோ அமிலங்கள் இருப்பதை மெய்ப்பித்தது.    ஆனால் வெப்பப் படக்காட்சியில் [Thermal Imaging]  கரிக் கலவைகள் [Carbon Compounds] இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் முன்பே அறிந்தனர்.

    ஹயபுஸா -2  விண்கப்பலில் உள்ள வேறுபாடுகள்

    முதல் ஹயபுஸா விண்கப்பலில் ஒரு தளவுளவி இறங்கியது.  ஆனால் அது நிரம்ப அளவு மாதிரி மண் ஏனோ எடுக்க முடியாமல் போய் திட்டமிட்டவருக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.  இரண்டாவது விண்கப்பலில் இரட்டைத் தளவுளவிகள் முரண்கோளில் இறங்குவதற்குச் சேர்க்கப் பட்டுள்ளன.  மேலும் முக்கியக் கருவிகள் யாவும் செம்மையாக்கப் பட்டு இரட்டிக்கப் பட்டுள்ளன.    முதல் தளவுளவியை விட மிகையான மண் மாதிரி எடுக்க இரண்டாவது விண்கப்பல் தயார் செய்யப் படுகிறது.  இரண்டாம் விண்கப்பலும் முதல் ஹயபுஸா போல் அயான் எஞ்சினால் இயங்குவது.

    . 

    முதன்முதல் பூமிக்கு ஹயபுஸா -1  கொண்டுவந்த  வக்கிரக்கோள் மாதிரி மண்

    2010 ஜூன் 14 ஆம் தேதி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பூமியில் விழுந்த ஒரு விண்சிமிழை (Space Capsule) தேடிக் கண்டுபிடித்து எடுத்தார்கள். அந்தச் சிமிழ் முரண் கோள் (Asteroid) ஒன்றின் மாதிரி மண்ணை எடுத்து வந்திருக்கலாம் என்பது அறிவிக்கப் பட்டிருக்கிறது.  அந்த முரண் கோளின் பெயர் : இடோகாவா (Asteroid # 25143- Itokawa).  அதைப் பாலவனத் தளத்தில் பாதுகாப்பாய் இறங்கிடத் திட்டமிட்ட ‘ஊமெரா இராணுவத் தளத்தில் (Woomera Military Zone) விழ வைத்தது ஜப்பான் அனுப்பிய விண்ணுளவி  ‘ஹயபுஸா” (Hayabusa).  ஜப்பன் மொழியில் ஹயபுஷா என்றால் ‘கழுகு’ என்று அர்த்தம்.  வெப்பக் கவசம் பூண்ட விண்சிமிழ் (Heat-Resistant Capsule) பாராசூட் குடையால் தூக்கி வரப்பட்டு சிதையாமல் இறங்கி விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அதே சமயத்தில் சிமிழைச் சற்று முன் இறக்கிய ஹயபுஸா விண்ணுளவி கவசமில்லாமல் சூழ்வெளி வாயு மண்டலத்தில் வரும்போது உராய்வுச் சூட்டில் எரிந்து வானத்தில் சுடர் ஒளி வீசி மறைந்தது !

    “ஜப்பான் விண்ணுளவி, புத்தகத்தில் சொல்லி வைத்தபடித் துல்லியமாகத் தென் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் வந்திறங்கிப் பயணத்தை முடித்தது. மேலும் தவிர்க்க வேண்டிய தளங்களில் விழாமல் தப்பிக் கொண்டது.  ஜப்பானிய நிபுணர் எங்கு வந்து விண்சிமிழ் விழத் திட்ட மிட்டாரோ அங்கு பாதுகாப்பாய் வந்து இறங்கியது.” என்று டக்லஸ் ஜெர்ரி ஊமெரா சோதனை ஆளுநர் (JAXA) கூறினார்.

    “விண்ணுளவி மீண்டு வருமா என்று விஞ்ஞானிகள் கவலையோடு அச்சத்தில் இருந்த சமயத்தில், விண்சிமிழ் எதிர்பார்த்ததை விட மென்மையாக இறங்கியதைப் பார்த்து நாங்கள் பேருவகை அடைந்தோம்.  நாலாண்டுகள் நீடிக்க அமைக்கப் பட்ட விண்கப்பல் ஏழாண்டுகள் தொடர்ந்து பணிசெய்ய அதன் மின்கலன்கள் (Batteries) சாகாமல் இயங்கியதைக் கண்டு பூரிப்படைந்தோம்.” என்று யோஷியூக்கி ஹசேகா (JAXA Associate Executive Director) கூறினார்.

    ஜப்பான் ஹயபூஸா விண்ணுளவியை ஏவியதின் நோக்கம்

    ஆறு பில்லியன் மைல்கள் (5 பில்லியன் கி.மீ) சுற்றுப் பயணம் செய்து முதன்முறை ஒரு முரண்கோளைத் தள ஆய்வு செய்து பூமிக்குத் திரும்பி வரலாற்றுப் புகழ் பெற்ற ஜப்பானின் ஹயபுஸா விண்ணுளவி 2003 மே மாதம் 9 இல் எம். வி ராக்கெட் மூலம் (M.V. Rocket) ஜப்பானின் காகோஷிமா (Kagoshima) ஏவுகணை விண்வெளித் தளத்திலிருந்து ஏவப் பட்டது.  உளவிய முரண் கோளின் பெயர் இடோகாவா என்று ஜப்பான் மொழியில் பெயரிடப் பட்டது.  வக்கிரக் கோளின் அளவு : (540 மீடர்X270 மீடர்X210 மீடர்.) (1800′X900′X700′). விண்ணுளவி முரண் கோளை நெருங்கிய நாள் : 2005 செப்டம்பர் மாத நடுவில்.  ஹயபுஸா முரண் கோளின் வடிவம், சுழற்சி, தள அமைப்பு, நிறம், உட்பொருள் கலப்பு, திணிவு (Composition & Density), வரலாறு போன்றவை 2005 நவம்பரில் இறங்கிய போது ஆய்வு செய்யப் பட்டன.  ஆனால் தளத்தில் மண் மாதிரியை உறிஞ்ச முயன்ற போது ஏற்பட்ட ஒரு கருவியின் பிழையால் திட்டமிட்டபடிப் போதிய அளவு மண் மாதிரி சிமிழில் சேமிப்பாக வில்லை என்று அஞ்சப் படுகிறது.  ஓரளவு தூசி மட்டும் உள்ளே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சோதனைக்குச் சிமிழைத் திறக்கும் போதுதான் தூசியின் இருப்பு உறுதி செய்யப்படும்.  விண்சிமிழ் ஆஸ்திரேலியப் பாலையில் வந்திறங்கிய தேதி ஜூன் 13, 2010.

    விண்ணுளவி ‘மினர்னா’ வென்னும் (Mini-Lander MINERVA -Micro Nano Experimental Robot Vehicle for Asteroid) ஒரு சிறு தளவுளவியைத் தூக்கிச் சென்றது.  ஆனால் அது முரண் கோளின் தளத்தில் சரியான தருணத்தில் இறங்காமல் போனது அடுத்த தவறு.  இதற்கு முன்பு விண்கப்பல்கள் கலிலியோ, நியர் சூமேக்கர் போன்றவை (Spaceships : Galileo & NEAR Shoemaker) முரண் கோள்களை அண்டினாலும், எவையும் இதுவரை ஹயபுஸா போல் மாதிரி மண்ணை உருவிக் கொண்டு சோதிக்கப் பூமிக்கு மீண்டதில்லை.  2000 இல் நியர் சூமேக்கர் விண்கப்பல் முரண் கோள் 433 ஈராஸில் (Astroid : 433 Eros) கட்டுப்பாடுடன் இறங்கித் தடம் வைத்தது.  ஆனால் தளவுளவியாக அது இயங்கத் தயாரிக்கப் படாததால், அதன் நகர்ச்சி நிறுத்தம் ஆனது.  ஹயபுஸா முரண் கோள் தளத்தைத் தொட்டு மீண்ட முதன்மை விண்வெளிக் கப்பலென்று “கின்னஸ் உலகப் பதிவுகளில்” (Guinness World Record) பெயர் அடைய ஜப்பான் விண்வெளி ஆய்வகம் (JAXA) தீவிரமாய் முனைந்து வருகிறது.


    ஹயபுஸா -1 விண்ணுளவியின் தனிச் சிறப்புக்கள் என்ன ?

    விண்ணுளவி இரண்டு ஆண்டுகளுக்குப் பரிதியின் ஒளியால் இயங்கும் சீனான் வாயு பயன்படும் அயான் எஞ்சின்கள் (Xenon Ion Engine, Powered By Sun) நான்கைப் பயன்படுத்தி நீண்ட தூரம் (சுமார் 6 பில்லியன் மைல்) பயணம் செய்தது.  விண்கப்பல் மெதுவாகச் சென்றாலும் நீண்ட தூரம் உந்திச் செல்ல முடிந்தது.  மிகக் குன்றிய ஈர்ப்பு விசை கொண்ட முரண் கோளை அண்டியதும் ஹயபுஸா அதனைச் சுற்றாமல் பரிதி மையப் பாதையிலே (Heliocentric Orbit) கோள் அருகில் சென்றது.

    மினர்வா என்னும் மிகச் சிறு ‘சுய இயக்கு வாகனத்தைத்’ (Robotic Vehicle) தூக்கிச் சென்றது விண்ணுளவி.  ஆனால் கடைசி நேரத்தில் அது இயங்காமல் போனது விஞ்ஞானிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.  அந்தச் சாதனத்தின் எடை 590 கிராம் (10 செ.மீ. உயரம், 12 செ.மீ. விட்டம்).  சூரிய சக்தியைப் பயன்படுத்திய விண்ணுளவி ஒரு ‘சுழற்சி கன ஆழியின்’ (A Rotating Flywheel) மூலம் முரண் கோளின் மிகச் சிறிய ஈர்ப்பு ஆற்றல் முற்போக்கை ஆதரவாக்கிக் கொண்டு முரண் கோள் மீது குதித்து மிதந்தது.

    2005 நவம்பர் 12 இல் மினர்வா முரண் கோளில் இறங்க பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப் பட்டு இயக்கப் பட்டது.  ஆனால் அந்த சமிக்கை ஆணை வருவதற்குள் ஹயபுஸா விண்ணுளவியின் ‘உயரமானி’ (Altimeter) முரண் கோளிலிருந்து உயரம் 44 மீடர் (150 அடி) என்று அறிந்து ‘சுய உயரச் சீரமைப்பு’ (Auto Alitude Keeping Sequence) ஏற்பாடு இயங்க ஆரம்பித்தது.  அதாவது மினர்வா வாகனம் சரியான உயரத்தில் இறங்காமல் விண்ணுளவி மேலேறும் தருணத்தில் கீழிறங்கத் துவங்கியது.  ஆதலால் முரண் கோளில் மினி வாகனம் இறங்காமல் விண்வெளியில் தடுமாறி நழுவிப் போனது ! மினர்வா இறக்கம் திட்டப்படி நிகழ்ந்திருந்தால் அதுவே விண்வெளி வரலாற்றின் முரண் கோளில் தாவிய முதல் விண்வெளி விட்டிலாகப் (Space Hopper) பெயர் எடுத்திருக்கும்.

    இதுவரை முரண் கோள் மண் மாதிரிக்கு விஞ்ஞானிகள் எரி விண்பாறை மாதிரியையே (Meteorite Samples) விளக்கத்துக்கு எடுத்துக் கொண்டார்கள்.  அது நியாயமற்ற ஒப்பீடாகும்.  ஹயபுஸா முரண் கோளின் தனிப்பட்ட மாதிரியைச் சோதித்து அந்தப் பழைய பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்.  முரண் கோள்களும் எரி விண்பாறைகளும் ஒன்றா அல்லது வேறானவையா என்பதைத் தெளிவாக நிர்ணயம் செய்யப் போகிறது என்று ஹயபுஸா திட்ட விஞ்ஞானி ஹஜிமி யானோ (Hajime Yano) சொல்கிறார்.

    ஜப்பான் விண்வெளி ஆய்வகத்துக்கு (JAXA) ஹயபுஸா திட்டம் நுணுக்கப் பொறியியல் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகப் பெருமை கொள்கிறது.  ஸெனான் வாயுவைப் பயன்படுத்தி ஆறு பில்லியன் மைல் நீண்ட பயணத்துக்கு நான்கு அயான் ராக்கெட் எஞ்சின்களை வெற்றிகரமாக இயக்கியது ஒரு தனிச் சிறப்பே.  சுயத் தூண்டு நகர்ச்சி, ஒளித் தூண்டு நகர்ச்சி, ஆழ்வெளித் தகவல் தொடர்பு, ஈர்ப்பாற்றல் சிறுத்த கோள்களுடன் நெருக்க மிதப்பு (Autonomus & Optical Navigation, Deep Space Cumminication & Command, Close Movements on Space Objects with Low Gravity) போன்றவை விருத்திக்கு ஜப்பானின் ஹயபூஸா வெற்றி வழி வகுத்து முன்னோடியாய் நிற்கிறது.

    ஹயபுஸாவில் இயங்கிய நான்கு அயான் ராக்கெட் எஞ்சின்கள்

    தற்போது அயான் ராக்கெட் எஞ்சின்கள் துணைக்கோள் சுற்று வீதிச் சீராக்கத்துக்கும், முரண் கோள்களை நெருங்குவதற்கும் பயன்படுகின்றன !  இன்னும் 30 ஆண்டுகளில் செவ்வாயிக்கு மனிதர் விண்கப்பலில் சென்று வரவும், தங்கும் விடுதிகளை அங்கே அமைக்கவும் தொடர்ந்து உபயோகிக்கப்படும்.  100 ஆண்டுகளில் நாமிருக்கும் இந்த சூரிய மண்டலத்தை விட்டு அடுத்த பரிதி மண்டலத்தின் பூமியைச் சுற்றி வரலாம்.  அங்கே தடம் வைத்திடலாம்.  அதாவது நீடித்த விண்வெளிப் பயணங்களுக்குப் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின்கள்தான் இனிப் பயன்படுத்தப்படும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

    Rocket Engines Type Thrust (Pound Force) Specific Impulse (Seconds) Lifetime Fuel Usage
    Saturn V F-1 (1x) (1960 years) Chemical 1,700,000 298 minutes
    Space Shuttle Main Engine (1x) (1980 years) Chemical 500,000 440 minutes
    NSTAR Ion Engine   (1) Electric 0.02 3300 years
    NEXT  Ion Engine     (2) Electric 0.07 4300 years
    VASIMR® VX-200(New Plasma Rocket)(2005) Electric 1 5000 >years

    ஆயினும் முதலில் பூமியை விட்டுப் பளுக் கப்பல் கிளம்ப பழைய இரசாயன ராக்கெட்டுகள்தான் தேவைப்படும்.  அயான் ராக்கெட் எஞ்சின்களுக்கு ஆரம்பத்தில் புவியீர்ப்பை எதிர்த்து விண்கப்பலைத் தூக்கிச் செல்ல போதிய உந்தாற்றல் இருப்பதில்லை.  கனமான சாதனங்களை, விண்வெளிக் கப்பலை எடுத்துச் செல்லத் தேவையான பேரளவு உந்தாற்றலை இரசாயன ராக்கெட்டுகள் முதல் ஒரு சில நிமிடங்கள் தருவதற்குத் தக்க தகுதி பெற்றவை.  சிறிது நேரம் ராக்கெட்டுக்கு விரைவாக்கம் மிகுதியாக அளிக்க இரசாயன எரிசக்தியே அயான் ராக்கெட்டை ஆற்றலை விடத் தகுதி பெற்றது.  அதற்கு ஏராளமான திரவ எரிசக்தி தேவைப்படுகிறது.  சுற்றுப் பாதையில் ஏவிய விண்கப்பலை நுணுக்கமாகத் திசை திருப்பவும், சீராக செலுத்தவும், நீண்ட காலப் பயணத்துக்கு உந்து சக்தி அளிக்கவும் அயான் எஞ்சின்கள் உபயோகமாகின்றன.

    அயான் ராக்கெட் எஞ்சினில் ஏன் ஸீனான் வாயு பயன்படுகிறது ?

    பேரளவு விரைவாக்கம், நுணுக்கப் பாதைச் சீரமைப்பு, உந்து சக்தி நீடிப்பு அல்லது குறைப்பு போன்ற விண்கப்பல் நகர்ச்சிக்கு தேவையான திறனியக்கம் “தனித்துவ உந்தாற்றல்” (Specific Impulse) என்னும் கால அளவியலில் குறிப்பிடப் படுகிறது.  உதாரணமாக அப்பொல்லோ விண்கப்பலை நிலவுக்குத் தூக்கிச் சென்ற சனி -5 ராக்கெட்டின் தனித்துவ உந்தாற்றல் சுமார் 300 விநாடிகள்.  அது திரவ ஹைடிரஜனை எரி பொருளாகப் பயன்படுத்தி 1,700,000 பவுண்டு உந்து சக்தியை அளித்தது.  விண்வெளி மீள்கப்பல் ராக்கெட்டுகள் (Space Shuttle Rockets) 500,000 பவுண்டு உந்து சக்தியை விண்கப்பலுக்கு அளிக்கின்றன.  அவற்றின் தனித்துவ உந்தாற்றல் : 440 விநாடிகள்.  புதிய அயான் எஞ்சின் ஒன்றின் தனித்துவ உந்தாற்றல் 4300 விநாடிகள்.  அது தரும் உந்து சக்தி 0.07 பவுண்டு.  பிளாஸ்மா ராக்கெட்டின் தனித்துவ உந்தாற்றல் : 5000 விநாடிகள். உந்து சக்தி : 1 பவுண்டு.

    அதிகமான விரைவாக்கம் அளிக்கும் இரசாயன ராக்கெட்டுகள் குன்றிய தனித்துவ உந்தாற்றல் உடையவை.  எதிர்மாறாக பிளாஸ்மா அயான் எஞ்சின்கள் குன்றிய விரைவாக்கம் கொடுத்தும் நீண்ட தனித்துவ உந்தாற்றலும் தருபவை.  ஸீனான் (Xenon Gas) வாயுவைப் பயன்படுத்தி ஓர் அயான் ராக்கெட் எஞ்சினைப் பல்லாண்டு காலம் விண்கப்பலை நுணுக்கமாகச் செலுத்தி வரலாம்.  ஸீனான் வாயுவில் உள்ள நடுநிலை அணுக்களை வெப்ப சக்தியால் நேர்முனை அயனிகளாக மாற்றி (Positive Ions) மின் காந்த சக்தி மூலம் விரைவாக்கம் தரலாம்.  விரைவாக்கம் பெற்ற அயனிகள் ஏவுகணைக்கு எதிர்த் திசையில் உந்துவிசை (Equal but Opposite Reaction) அளிக்கும்.  அதனால்தான் கனமான அணுக்கள் கொண்ட ஸீனான் வாயு பயன்படுத்தப் படுகிறது.  அது ஆர்கான் வாயு போல் எளிதாக அயனிகளாகும் ‘முடத்துவ வாயு’ (Inert Gas & Easily Ionized).

    முரண் கோள் மாதிரி பாதுகாப்பாய் பூமிக்கு மீட்சி !

    ஹயபுஸா விண்ணுளவி பூமிக்கு மாதிரியுடன் மீளுமா என்று ஐயுற்ற போது ஆஸ்திரேலியா வானத்தில் ஒளி விளக்குபோல் மின்னிக் கொண்டு விண்சிமிழ் குடை பிடித்துப் பிரிந்து கீழே இறங்கி பாலை வனத்து மணலில் விழுந்தது.  சுமந்து வந்த விண்ணுளவி வாயு மண்டலத்து உராய்வில் வானிலே சுடர் விட்டு எரிந்து சாம்பலானது.  அகில நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் ஒன்று விநாடிக்கு 12 கி.மீ. வீதம் (7 mps) வேகத்தில் இறங்கும் விண்சிமிழ் 39,000 அடி உயரத்திலிருந்து விழுவதை நாசாவின் ஆகாய ஆய்வகத்திலிருந்து (DC-8 Airborne Laboratory) பார்த்தனர்.  விஞ்ஞானிகள் எதிர்பார்த்தவாறு 510 கி.கி. (1120 பவுண்டு) ஹயபுஸாவின் பெரும்பான்மை விண்ணுளவி எரிந்து போனது.  விண்சிமிழ் வந்து இறங்கிய தளம் தென் ஆஸ்திரேலியாவின் ஒதுக்கமான ஊமெரா பகுதி (Woomera Prohibited Area).  விண்சிமிழ் விழுந்த இடத்தைப் புவியிணைப்புச் சுற்றுத் துணைக்கோள் (Geocentric Positioning System -GPS) கண்டுபிடித்ததும் ஹெலிகாப்டரில் ஒரு குழுவினர் அதை எடுத்து வர அனுப்பப்பட்டார்.  முரண் கோளின் மாதிரி சில வாரங்களில் சோதிக்கப் பட்டு விபரங்களை ஜப்பான் விண்வெளி ஆய்வகம் (JAXA) வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ((தொடரும்)

    ************************

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html(Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now :  Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19 http://en.wikipedia.org/wiki/Asteroid  [August 29, 2012]
    20  National Geographic Magazine :http://science.nationalgeographic.com/science/space/solar-system/asteroids-comets-article/ (Asteroids and Comets)
    21  http://en.wikipedia.org/wiki/(162173)_1999_JU3  [Asteroid : 1999 JU 3]  (August 17, 2012)
    22 http://www.jspec.jaxa.jp/e/activity/hayabusa2.html  [Japan Aerospace Exploration Agency] (Asteroid Explorer Hayabusa -2)
    23 NBC News :  Japan eyes new mission to sample an asteroid  [August 2012]
    24.  Hayabusa -2 Will Seek the Origins of Life in Space [Asteroids] By Wendy Zukerman ( August 18, 2012)

    25. http://www.msn.com/en-ph/news/technology/france-japan-aim-to-land-probe-on-mars-moon/ar-BBzO5tY?pfr=1   [April 13, 2017]

    26.  http://en.rfi.fr/france/20170413-france-japan-aim-land-probe-mars-moon  [April 13, 2017]

    27.  http://www.gulf-times.com/story/544273/France-Japan-aim-to-land-probe-on-Mars-moon  [April 29, 2017]

    28.  https://www.nasaspaceflight.com/2014/08/earths-deep-space-explorers-fleet-milestones/  [April 25, 2017]

    29.  https://en.wikipedia.org/wiki/Moons_of_Mars [April 11, 2017]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  April  29, 2017 [R-1]

    Share
  • 4வது பணக்கார நாடு!

    பவள சங்கரி

    இன்னும் 5 ஆண்டுகளில் நம் இந்தியா உலகின் 4வது பணக்கார நாடாக முன்னேறப்போகிறது என்று IMF (International Monitory Fund) நிறுவனர் தெரிவித்துள்ளார். தற்போது 4வது இடத்திலுள்ள ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் இந்தியா அந்த நான்காம் இடத்தைப் பிடிக்கும். ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதத்தை தாண்டிவிடும். ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு 1 டிரில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது.

    Source : IMF World Economics Outlook Database – Apr. 2017 Edition

    Share
  • நீர்நிலை ஆதாரங்களும் மாநில அரசுகளின் செயல்பாடுகளும்

    பவள சங்கரி

    இன்று இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. ஒவ்வொரு முறை பருவகால மாற்றங்கள் ஏற்படும்போதும் நாம் வாயளவில் கூறிக்கொண்டிருக்கும் வரும்முன் காப்போம் என்ற திட்டங்களை உண்மையிலேயே செயல்படுத்தி வந்துள்ள சில மாநிலங்களில் நீர் ஆதார விகிதாச்சாரங்கள் மேம்பட்டிருப்பதை அறிந்து பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. கேரளா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் இதில் அடங்கும். ஆந்திரா மாநிலம் இன்று வறட்சியில் தவித்தாலும் வரும் ஆண்டுகளில் தங்களுடைய வாழ்வாதாரங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் அனைத்து நதிகளையும் இணைக்கும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரள மாநில மக்களோ, அரசை மட்டுமே நம்பி இருக்காமல், அங்குள்ள கிராம நிர்வாகங்களே அந்தந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 200 கிணறுகள் வரை தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவும், தெலுங்கானாவும் ஆழ்துளை கிணறு போடுவதைத் தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசாங்கமோ ஒரு படி மேலேபோய் இஸ்ரோவின் உதவியுடன் சாட்டிலைட் மூலமாக நீர் ஆதாரங்களைக் கண்டுபிடித்து அந்தந்த இடங்களில் மட்டும் ஆழ்துளை கினறுகள் தோண்ட திட்டமிடுகின்றது. 800 மீட்டர் ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, அபரிமித நீராதாரங்களைக் கண்டுபிடித்து தங்களின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் 12.5 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் இத்திட்டம் எந்த அளவிற்கு வெற்றியடையும் என்று கணிக்க முடியாதவகையில் இதனுடைய செலவினங்களும் அதிகம் என்பதோடு, அதிக அளவில் ஆழம் தோண்டுவதால் நில அதிர்வு போன்ற பின் விளைவுகளையும் சந்திக்க நேரலாம் என்று இயற்கைவள மேம்பாட்டு ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளதையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

    நமது தமிழக அரசு இப்பொழுதுதான் தூர் வாரும் பணியை மெல்ல முன்னெடுத்துள்ளது. முதல் கட்டமாக மேட்டூர், பெருஞ்சாணி போன்ற 5 அணைக்கட்டுகளில் தூர் வாரும் பணியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ளார். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தூர் வாரப்படும் இந்த வண்டல் மண் ஏக்கருக்கு 1 டன் என்ற விகிதத்தில் அவர்களுக்கேக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார். இதில் எந்தவித குளறுபடியும் இல்லாமல் அனைத்து விவசாயப்பெருமக்களுக்கும் வளம் நிறைந்த இந்த வண்டல் மண் குறை இல்லாமல் கிடைக்க வழி செய்யவேண்டும். வாழ்வாதாரம் காக்கப்போராடும் விவசாயப் பெருமக்கள் தங்கள் கவனத்தை இதன்பாலும் செலுத்தி பயன்பெற வேண்டியதும் அவசியம்.

    ஒவ்வொரு ஆண்டும் நம் தமிழகம் பருவகால மாற்றங்களை எதிர்கொள்ள ஏதுவாக வரும் முன் காப்போம் என்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறுவதால் ஏற்படும் இழப்புகள் மற்ற மாநிலங்களைவிட அதிகமாகவே உள்ளதை மறுக்க இயலவில்லை. இன்று வறட்சியில் அவதியுறும் மக்கள், மழைக்காலங்களில், மலைப்பிரதேசங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் ஏற்படுத்துவதையும் பற்றி கவலைகொள்வதே இல்லை. மண் பிடிப்பைத் தரக்கூடிய பெரிய மரங்களை வெட்டிவிட்டு தேயிலை பயிரிடுவோர் அந்த இடங்களில் பாதுகாப்புக்காக தடுப்புச்சுவர்கள் கட்டுவதில்லை. அதே மரங்களால்தான் மழைவளம் பெறுகிறோம் என்பதையும் கவனம் கொள்வதில்லை என்பதும் வறட்சிக்குக் காரணமாகிவிடுகிறது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 235 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பு நிறைந்த வணக்கங்கள். இனியதொரு வாரத்திலே இன்புறு வாசக நெஞ்சங்களோடு சங்கமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகத்தின் இயக்கம் நுட்பமானது, நுணுக்கமானது. தானும் சுற்றிக் கொண்டு ஆதவனையும் சுற்றி வருகிறது இப்பூமி. சுழலும் இந்த பூமியின் இயக்கத்தின் நுட்பத்தை உணர்ந்து கொள்ளாமல் இப்பூமியின் மீது ஏதோ சில ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து மடியும் நாம் எமது மனங்களுக்குள் எத்தனையோ ஆழமான ஆசைகளைத் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்கிறோம். எல்லாம் என் செயல் எனும் ஆணவமிக்க மனிதர்களுக்கும்,எல்லாம் அவன் செயல் எனும் ஆதாரமற்ற மனிதர்களுக்கும் மத்தியில் ஏதோ ஒரு தளத்தில் பல்லாயிரக்கணக்கான நாம் எமது வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம்..

    இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்த ஒரு பரிசு அதை மனமகிழ்வோடு வாழ்ந்து முடிப்பதுதான் எமது தார்மீகக் கடமை எனும் அடிப்படை உண்மையை பல சமயங்களில் மறந்து வாழத் தலைப்படுகிறோம். எம் ஒவ்வொருவர் மீதும் வாழ்க்கை தூக்கிப் போடும் சவால்கள் வித்தியாசமானவை, வினோதமானவை. அவை இனம்,மதம், ஜாதி, நிறம் என எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆனால் அதை எதிர்கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் நாம் மட்டும் எமக்குள் இருக்கும் பேதங்களை பூதாகரமாக்கி அவற்றின் பேதமைகளை அடிப்படையாகக் கொண்டு வாழத் தலைப்படுகிறோம். அதற்கு ஏதுவாக நாம் சார்ந்துள்ள எமது மதங்களிலுள்ள விளங்கிக் கொள்ள முடியாத வியாக்கியானங்களுக்கு எமது பாணியில் விளக்கம் கொடுத்து எமது செயல்களை நியாயப்படுத்திக் கொள்கிறோம். அதற்கு கலாச்சாரம் என்று பெயரிட்டு எமது அடுத்த தலைமுறைகளின் கால்களில் விலங்குகளை மாட்டி விடுகிறோம்.

    மனிதாபிமானத்துக்கு மதம் இல்லை, இனம் இல்லை, நிறம் இல்லை. அடுத்தவரை எம்மைப் போல மதித்து , அவர்களுக்குரித்தான கெளரவத்தைக் கொடுத்து வாழவேண்டும் எனும் உண்மை பலசமயங்களில் எமக்குப் புலப்படுவதில்லை. . எமது வாழ்வு இப்புவியினிலே எத்தனை காலம் நிலைக்கப் போகிறது என்பதை அறிந்தவர் எவருமிலர். குணப்படுத்தப்பட முடியாத நோய்கள் பல பலரைக் காவு கொள்கிறது. ஓரிடத்தில் கொடுக்கும் இயற்கை ஓரிடத்தில் பறித்துக் கொள்கிறது. அதுதான் இயற்கையின் சமநிலைத் தத்துவமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியான ஒரு சூழலில் தான் இங்கிலாந்தில் நடைபெற்ற இரு விசித்திரமான வழக்குகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஸ்ரூஸ்பரி எனும் இடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 67 வயதான விரிவுரையாளர் நோயல் கான்வே என்பவர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவர் குணமாக்கப்பட முடியாத “மோட்டர் நியூரோன்“எனும் வியாதியைக் கொண்டிருக்கிறார் என்று கண்டுபிடித்தார்கள். இந்நோயின் குணாம்சம் சிறிது சிறிதாக உடம்பின் தசைகளின் இயக்கத்தை குறைத்துக் கொண்டு இறுதியில் மரணத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று விடுவதேயாகும். வைத்தியர்களின் கணிப்பின் படி இவர் அநேகமாக இன்னும் ஒரு 19 மாதங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார்.

    தனது முடிவின் காலம் நியமிக்கப்பட்டு விட்ட இந்த மனிதர் தான் இறக்கப் போகும் நேரத்தைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதன் பிரகாரம் தனது உயிரை முடித்துக் கொள்ளும் நேரத்தை தாம் எடுக்க வேண்டியதற்கான ஆயத்தங்களைச் செய்தார். ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இங்கிலாந்துச் சட்டத்தின்படி தீரா வியாதி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நோயாளி தனது உயிரை முடித்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கை தற்கொலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய ஒருவரது முடிவுக்குத் துணை போவோர்களும் தற்கொலைக்கு உதவியவர்கள் எனும் குற்றத்தின் பெயரில் சட்டமூலம் தண்டிக்கப்படுவார்கள். தனது முடிவைத் தானே எடுக்க வேண்டும் எனும் இவரது கோரிக்கையை இங்கிலாந்து வழக்குமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் இவரோ இன்னும் தளரவில்லை தான் தனது நோயினால் மிகவும் அவஸ்தைப் படுவதாகவும் ,தனது உடலின் அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நின்று கொண்டு போகிறது. இதனால் தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள உறவினர்கள் தனது அவஸ்தையைப் பார்த்துத் தவிப்பதைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறி வழக்கு மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்வதற்காக தனது வழக்கீல்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது ஒரு புறமிருக்க.

    சார்ளி காட் எனும் ஏழுமாதக் குழந்தையொன்று தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அக்குழந்தையைப் பீடித்திருக்கும் நோய்கூட குணப்படுத்தக்கூடிய தொன்றல்ல என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள். தானே சுவாசிக்க முடியாத அக்குழந்தை செயற்கைக் கருவிகளின் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இக்குழந்தையைத் தொடர்ந்தும் இக்கருவிகளின் மூலம் வைத்திருப்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது என்று தெரிவிக்கும் டாக்டர்கள் இக்கருவிகளை நிறுத்தி குழந்தைக்கு இயற்கையான முடிவைக் கொடுக்க முயற்சித்தார்கள். அமெரிக்காவில் உள்ள டாக்டர்கள் ப்ருபுதுவிதமான் சிகிச்சை மூலம் இக்குழந்ந்தையை குணப்படுத்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தமையால் தமது குழந்தையை இறக்க விடக்கூடாது தாம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்று வழக்குமன்றத்தை நாடினார்கள் பெற்றோர்கள்.

    வழக்கை விசாரித்த நீதிபதி இதுவரை தான் சந்தித்த வழக்குகளில் மிகவும் துன்பகரமான வழக்கு இதுவென்றும் அக்குழந்தையை மேலும் அவஸ்தைக்கு உள்ளாக்கக்க கூடாது என்றும் தான் டாக்டர்கள் எடுத்த முடிவை ஆதரித்து தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மனமுடைந்து போன  பெற்றோர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்துள்ளார்கள்.

    என்னே விந்தை 67 வயதான சாகத் துடிக்கும் ஒரு மனிதனை சாகக் கூடாது என்றும்,ஏழே மாதமான குழந்தையைச் சாக வேண்டும் எனும் சட்டம் அறிஞர் அண்ணா கூறியது போல ஒரு இருட்டறைதானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • வனத்திலும் தண்ணீர் பஞ்சம்!

    பவள சங்கரி

    நீலகிரி மாவட்டத்தின் வனவிலங்கு சரணாலயங்களில் நீரின்றி இந்த ஆண்டில் இதுவரை 36 யானைகள் இறந்துள்ளன. அரசு இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். முன்பெல்லாம் கோடைகாலத்தில் அங்குள்ள தொட்டிகள், நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துச்சென்று நிரப்புவார்கள். தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தண்ணீர் தேடியே விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நுழைகின்றன… இதைக்கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் கோடையின் கொடுமையால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு முதியோர்களையும், குழந்தைகளையும் தவிர்த்து மற்றையோர் ஊரையே காலிசெய்யும் கொடுமை ஏற்பட்டுள்ளது! போர்க்கால நடவடிக்கை உடனடி தேவை.

    வறட்சி அதிகமாகி, தண்ணீர் தேவை அதிகமாகியுள்ள இந்தக்காலகட்டத்தில் கட்டுமானப்பணிகளை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாமே? கட்டுமானப் பணியாளர்களுக்குரிய மாற்று பணிகளும் ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது கட்டுமானப் பணிகளில் தண்ணீர் இன்றி செய்யக்கூடிய பணிகளை மட்டும் தற்போது செய்துகொண்டிருக்கலாம். இது கட்டுமானப்பணி மட்டுமன்றி அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.

    Share