அம்மாவும் மகனும்
ரா.பார்த்தசாரதி
வாசலில் காகம் கரைந்தால் உன் வரவை
என் கண்கள் வாசலை எட்டிப் பார்கின்றதே,
நான் கண்ணாடியை பார்க்கும்போது உன் முகம்தான்
எனக்கு தெரிகின்றது, ஏன் எனில் நீ என் சாயல்தான்
என் பழைய சேலையில் உன் வாசம்தான் வாழ்கிறது
அருமை மகனே அதனுடனே என் பொழுதும் போகிறது !
உன்னை விழிமேல் வழி வைத்து உன் வரவுக்காக ஏங்குகிறேன்
காலம் தாமதித்து வந்தாலும் மனதால் பேதலிக்கின்றேன்!
அழைப்பு மணி அடித்ததும் என் கால் வாசல் நோக்கி விரையுமே
உன்முகம் கண்டதும் தாயின் கண்கள் மலர்ந்து வரவேற்குமே !
பணம் பக்கத்தில் நிற்கும், பாசம் உயிரோடு கொல்லும்
உனக்காக சேர்த்து சாப்பிட்டாலும், என் மனப்பசி அடங்கா
நீ உப்பில்லாமல் சாப்பிட்டதால் நாக்கு செத்துப்போய்விட்டதா
உன் அம்மாவின் ஞாபகம் வராமல் போனதா!
உனக்கு பிடித்ததை நான் சாப்பிடும்போது மனம் ஒப்பவில்லை
என் மனப்பசி சாப்பிடாமல் என்னை தடுப்பதை உணராமலில்லை!
வேர், இலைகள், கிளைகள் இருந்தால்தான் விழுது விழும்
தாய் ஆணிவேராக இருந்தாலும் பாசம் மிகுந்து வரும்!
தொப்புள் கொடி உறவு என்றும் நிரந்தர உறவாகும்
பாசமும், பந்தமும் என்றும் நிலை பெற்றதாகும் !
வீட்டினில் விளக்கு எரிந்தாலும் இருளில் மூழ்கிறது மனசு
பெத்த மனம் பித்து , பிள்ளை மனம் கல் என்பது பழமொழி !
வாரம் ஒரு முறை ஸ்கைப்பில் காட்சி தருவாயா
அது காணும் பேற்றை மகனே எனக்கு அளிப்பாயா!