நலம் .. நலமறிய ஆவல் (54)
நிர்மலா ராகவன்
தலைமைத்துவமும் பணிவும்
ஒரு சிற்றூரிலிருந்து மேற்பயிற்சிக்கு வந்திருந்த ஓர் ஆசிரியை, “பிரபலமாக இருப்பவர்களெல்லாம் கர்விகளாக இருக்கிறார்கள்!” மூக்கைச் சுளித்தபடி கூறினாள்.
தான் எதிலும் புகழ் பெறும் தகுதியற்றவள் என்று அவள் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டதுதான் அவளைப்போல் இல்லாத பிறரைப் பழிக்கக் காரணமாக இருந்திருக்குமோ?
ஒரு சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு தாராவிற்குத்தான். அதை வெளிப்படையாகச் சொன்னால், தன்னைக் கர்வி என்று நினைத்துவிடுவார்களோ என்று `அடக்கத்துடன்’ என்னிடம் கூறினாள்: “என் ஃப்ரெண்டுக்குப் பரிசு கிடைச்சிருக்கு. அவங்க சார்பில வாங்கிட்டுப் போக என்னை அனுப்பினாங்க!”
இப்பெண்களுக்கு தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.
எது பணிவு?
பிறருக்குமுன் கூனிக்குறுகி நடப்பதும், தன்னைத்தானே மட்டம் தட்டிக்கொள்வதும்தான் பணிவின் அறிகுறியா?
தனக்குமுன் பிறர் அப்படி நடப்பது தன் பராக்கிரமத்தை உயர்த்திவிடுகிறது என்று தப்புக்கணக்குப் போடுகிறவர்கள்தாம் — தகுதி இல்லாவிட்டாலும் — பதவிக்கு அலைகிறார்கள்.
செய்வதெல்லாம் சரி!
பதவி வந்ததும், தாம் தப்பே செய்ய முடியாது என்ற இறுமாப்பு. அவர்கள் சொல்வதையோ, செய்வதையோ, `தவறு’ என்று சுட்டிக் காட்டுகிறவர்கள் பகைவர்களாக ஆகிறார்கள்.
அண்மையில், இம்மாதிரியான ஒரு தலைவரிடம் நான் அவரது குறைகளை எடுத்துச் சொன்னேன்.
எவ்வித தடங்கல் எழுந்தாலும் சிறிதும் மனம் தளராது, நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பவர் அவர். இருந்தாலும், அதிகாரம் கைக்கு வந்ததும், தன் கீழ் இருப்பவர்களிடம் அவர்களது வாழ்க்கைப் பின்னணிக்கேற்ப பழகுவது எப்படி, எவ்வித பொறுப்புகளை அவர்களிடம் கொடுக்கலாம் என்பதை அறிந்திருக்கவில்லை.
வெற்றி கண்டுவிட்டவர்கள் எந்த வினாடியும் கீழே விழலாம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள்.
பலருடன் பகைமை ஏற்பட்டுவிட, தளர்ந்தவராக என்னுடன் தொடர்பு கொண்டார்.
நமக்குக் கீழே பலர் இருக்கிறார்கள். அவர்களை நம் தரத்துக்கு உயர்த்த முயன்று, நம்மைவிட மேலேயும் சிலர் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அவர்களை மதித்து நடந்தால்தான் ஒருவர் வெற்றிப்படியின் மேலே, மேலே நடக்க இயலும்.
“ஆதாயம் கிடைக்குமென்று நம்பி, `ஆமாம் சாமி’ போட்டவர்களை நம்பினீர்கள். ஒருவரைப்பற்றி இன்னொருத்தர் கோள் மூட்டினால், யார் பக்கம் நியாயம் என்று விசாரிக்காமல் ஆத்திரப்பட்டுத் தண்டித்தீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் சிலரைத் தூக்கிவைத்துப் பேசி, பாரபட்சம் காட்டினீர்கள்,” என்று, ஒரு தலைவருக்கு இருக்கக்கூடாத அவருடைய குணங்களை உரையாடலுக்கு ஊடே, ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினேன்.
நான் எந்த அணியையும் சேராமல் தனித்தே இருந்ததால், என்னை அவருக்கும், அவரை அண்டியவர்களுக்கும் புரியவில்லை. அதனாலேயே அச்சம். எனக்குப் பின்னால் ஏதேதோ பேசினார்கள்.
நெடுநேரம் மௌனமாக இருந்துவிட்டு, “பத்து வருஷத்துக்கு முந்தி நீங்க என்னைத் தனியாக் கூப்பிட்டு இதையெல்லாம் சொல்லியிருந்தா, நான் எத்தனையோ பேரோட பகைக்கு ஆளாகி இருக்கமாட்டேன்!” என்றார். உண்மையான வருத்தம்போல்தான் தோன்றியது.
நொந்தவாறு, இதையே பல முறை கூறியபோது, “அப்போது அதைக் கேட்டிருக்க மாட்டீர்கள். `இவ யார் எனக்குப் புத்தி சொல்ல?’ன்னு ஆத்திரம்தான் வந்திருக்கும்!” என்றேன் லேசாகச் சிரித்தபடி.
எளிமையும் பணிவும் இருந்தால் — தலைமைப் பதவியை விடுங்கள் — வாழ்வில் எவ்வித இடரையும் சமாளிக்கும் நெஞ்சுரம் வந்துவிடும்.
`நான்தான் பெரியவன்!’ என்ற ஆணவத்துடன் ஒவ்வொருவரும் சுயலாபத்தையே நாடினால், எந்த நற்காரியமும் நிலைத்து இருக்க முடியாது.
எனக்கு எல்லாம் தெரியும்
பணிவு என்பது தன்னம்பிக்கையின் மறுபக்கம். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிச்சல்.
ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது, எங்கள் விரிவுரையாளர் ஒரு கேள்வியைத் தொடுத்தார்: “ஒரு மாணவன் கேட்கும் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்?”
பலரும், “ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவோம்,” என்றார்.
என் முறை வந்தபோது, “எனக்குத் தெரியாது என்று உண்மையை ஒப்புக்கொள்வேன்,” என்றேன், உறுதியாக.
“அப்போது உங்களை `முட்டாள்’ என்று அவர்கள் நினைக்க இடம்கொடுத்து விடுகிறீர்களே?” என்று கேலியாகக் கேட்டார்.
“எப்போதும் அப்படிச் சொல்லப் போவதில்லையே! அத்துடன், அதற்கான பதிலை அறிந்துகொண்டு வந்து சொல்வேன்!” என்றேன்.
விரிவுரையாளர், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்று வியந்து பாராட்டினார்.
சிலருக்கு செய்த தவற்றைப் பணிவுடன் ஒத்துக்கொண்டால், கௌரவக்குறைவு.
`நீங்கள் கூறுவது சரி,’ என்றால், மற்றவர் தன்னைவிட உயர்வு என்றாகிவிடுமோ என்ற பயம். ஏதேதோ சொல்லி, தம் தவற்றைச் சரியென்று சாதிப்பார்கள். குறை கூறியவர்களைப் பழிக்கவும், பழிவாங்கவும் தயங்கமாட்டார்கள்.
இவர்களைப் போன்றவர்கள் மேல் நிலையை அடைந்தாலும், அது நீடிக்காது.
சில சந்தர்ப்பங்களில், `எனக்குத் தெரியாது!’ என்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் பிறர் நமக்களிக்கும் மரியாதை நிலைக்கும்.
கதை
என்னுடன் வேலை பார்த்த ஆசிரியை மிஸஸ். டானுக்கு விஞ்ஞானம் பிடிக்காது. வரவும் வராது. ஆனால், அதுதான் மதிப்பு என்று அவளுடைய தந்தை அப்பாடத்தை அவள் எடுத்துக்கொள்ளச் சொன்னாராம். (மனக்குறையுடன், என்னிடம் அவள் சொன்ன தகவல்).
பௌதிகம், உயிரியல், வேதியியல் மூன்றும் மிஸஸ். டான் கற்பிக்க ஏற்பாடாகி இருந்தது. அவள் மாணவிகளுக்கு ஒரு பௌதிகக் கணக்கைச் சொல்லிக்கொடுக்க முயன்று, விடை சரியாக வராததால், `கேள்வியே தப்பு!’என்று கூறிவிட்டாள்.
பல மாணவிகள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து கேட்டார்கள். (நான் அப்பாடத்தின் மூத்த ஆசிரியை என்று பெயர்).
முதல் ஆண்டே பதினோரு வகுப்புகளுக்கு அதையே கற்பிக்க வேண்டிய நிலையில், `எப்படியோ அடிச்சு விடலாம்!’ என்று என்னால் இருக்க முடியவில்லை. ஒரே பாடத்தைக் கற்பிக்க பல புத்தகங்களைப் படித்தேன். லேசாகப் புரிந்தது. மாணவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்க, இன்னும் அதிகமாகப் புரிந்தது.
இப்போது அக்கணக்கை எப்படிப் போடுவது என்று விளக்கினேன். “மிஸஸ்.டான்..,” என்று அவர்கள் ஆரம்பித்தார்கள்.
அவர்களைத் தடுத்து, “நான் இப்படித்தான் போடுவேன்!” என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டேன்.
`பணிவு’ என்பது நாம் முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறி இருக்கிறோம், இன்னும் முன்னேற முடியும் என்பதை அறிவது. நம்முடன் நாமே போட்டியிடுவது.
தொடருவோம்