மகிழ்ந்து வாழ்வோம் !
( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
முதியோர் இல்லமதில் தாய்
முறுவலுடன் விழாவதனில் சேய்
தனியாகத் தவிக்கிறாள் தாய்
தானமெலாம் செய்கிறான் சேய் !
பலலட்சம் வைத்துள்ளான் சேய்
பரிதவித்து நிற்கிறாள் தாய்
பட்டம்பல பெற்றுவிட்ட சேய்
பாருக்குள் இருப்பதுதான் ஏன் !
விரிவுரை பலசெய்து விருதுகள் பலபெற்று
கருணையை காட்டிநிற்கும் காவியம் பலகாட்டி
தெருவெலாம் வரவேற்பு தினமுமே பெறுவதற்கு
பலநூறு செலவுசெய்யும் பாங்கினைநாம் என்னசொல்ல !
ஊட்டி வளர்த்தவளை ஒருகணமும் நினையாமல்
போட்டி பொறாமையொடு புகழ்தேடும் கனவான்கள்
சேற்றிலே வீழ்ந்துள்ள சீரழிவைக் காண்கையிலே
நாட்டிலே இருப்பதனால் நன்மையென்ன இருக்கிறது !
பட்டம் பலபெற்றாலும் பதவிகளில் உயர்ந்தாலும்
கெட்ட குணமுள்ளவரை அத்தனையும் வீணாகும்
நட்டம் பலவந்தாலும் தான்நொடிந்து போனாலும்
இட்டமுடன் எமைக்காத்த எந்தாயை இகழுவதா !
தாயினைத் தெய்வமாகத் தரணியில் போற்றவேண்டும்
தாயினை தாங்கிநின்றி தாழ்பணிந்திருக்க வேண்டும்
தாயின் ஆசிபெற்று தரமான வாழ்வுவாழ
தாயினை வீட்டில்வைத்து தான்நிதம் மகிழ்ந்துவாழ்வோம் !